புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' - பிரமிளா பிரதீபன்
இலக்கியத்தை வாசிப்பதும் அவற்றைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தனித்துவமான கலை. எல்லோராலும் வாசிக்க இயல்வதென்பதே சாத்தியமற்றதாக இருக்கும் இக்கால சூழ்நிலையில் வாசித்தவற்றை குறித்ததான கருத்துக்களை முன்வைப்பதும் படைப்பாளர் பற்றிய சகல விடயங்களையும் தேடித் தொகுத்து ஒரே பார்வையில் அவர்தம் மொத்த படைப்புலகம் சார்ந்ததுமான குறிப்புகளை நம்பகத்தன்மையுடன் களஞ்சியப்படுத்துவதும் மிகப்பெறுமதியான இலக்கியப்பணியெனவே சொல்லலாம்.
'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூலினூடாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அப்பணியினை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் போது அப்படைப்பாளி தொடர்பான சகல விடயங்களையும் தொகுத்துத் தருதலென்பது மிகநிதானமாக செய்யப்படவேண்டியதொன்று. தேடலும் பொறுமையும் நிரம்பப் பெற்ற ஒருவருக்கே இது சாத்தியமாகிறது.
படைப்பாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஒரு சிறந்த புனைகதையாளர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து பத்தியெழுத்து தொகுப்புகள் மேலும் சில தேர்ந்தெடுத்த தொகுதி நூல்களுக்கு சொந்தக்காரர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
இவரின் புதிய படைப்பான 'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூல் மொத்தமாக இருபது சுய ஆய்வு கட்டுரைகளுடன் 2023ம் ஆண்டில் கார்த்திகை மாதம் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளமை படைப்பாளரது தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கு ஒரு சான்றாக அமைகிறது.
இந்நூலின் கட்டுரைகளைப் பொருத்தவரை ஏழு வகையான இலக்கிய வகைகளை தெரிந்து தனது உற்றுநோக்கல்களை விரிவாக்கம் செய்ய முனைந்திருக்கிறார். ஒரு நாவல், ஒரு நலவியல் இலக்கியம், மூன்று சிறுவர் இலக்கியங்கள், ஐந்து பத்தியெழுத்து அல்லது ஆய்வுரை தொகுப்புகள், ஒரு காலாண்டிதழ் எட்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாட்குறிப்பு என மொத்தமாக இருபது படைப்புகள் மீதான அல்லது இருபது படைப்பாளர்கள் மீதான பார்வையினை தொகுப்பாக தந்திருக்கிறார்.
தன்னுடைய கட்டுரைகளில் உள்ளடக்கம் பெற்ற பல்வேறு புனைவு அபுனைவு வடிவங்கள் தொடர்பான தனது ஆய்வு தொடர்பாக அவர் குறிப்பிடுவதாவது....
'படைப்பாளர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இங்கு பிரதானமாகிறது. இம்முயற்சியானது மறைமுகமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு மிக்கதொரு பணியினையும் செய்யத் தலைப்படுகிறது என அறிய வரும் போது உண்மையில் மனது குதூகலிக்கவே செய்கிறது'
இவ்வாறு இன்றைய சமகால படைப்பாளர்களின் அவசியமான தேவையை நிறைவு செய்யத்துணிந்த இந்த நூல் தொடர்பாக ஆராயும் போதில் பிரதானமாக 03 நிலைகளுக்கூடாக குறிப்பிட்ட கட்டுரைகளை அணுக முடியுமாயிருக்கிறது.
01) இந்நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள் அல்லது அணுகுமுறைகள்.
02) நூலின் சமகால முக்கியத்துவம்
03) எழுத்தினூடாக வெளிப்படும் நூலாசிரியர்
எனவே முதலாவது விடயமான நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள் அல்லது அணுகுமுறைகளைப் பார்த்தால், நானறிந்த வகையில் திறனாய்வு முறைகள் பண்டையகாலந்தொட்டு இன்றுவரையாக பல்வேறு மாற்றங்களையும் காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாற்றங்களை தேவைக்கேற்ப தன்னைத் தழுவிக்கொள்கிறது எனச்சொல்ல முடியும்.
குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் நவீனத்துவம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கருத்தியலை அடிப்படையாக கொண்டே அநேகமாக திறனாய்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
ஆனால் நான் இந்த நூலை பார்த்த விதமானது இந்நூலாசிரியர் தனது மனப்பதிவுமுறை திறனாய்வினை மேற்கொள்ளுதலினூடாக தனது அனுபவத்தினதும் அறிவினதும் அகலப்படுத்தலை மையமாகக்கொண்டு பயன்படுத்தியிருக்கக்கூடிய அணுகுமுறைகள் தொடர்பான தெளிவினையே தருகிறது.
மனப்பதிவுமுறை என்றால் அதற்குள் உள்ளடங்கக்கூடிய பொதுவான அணுகுமுறைகளாக வகைப்பாட்டு அணுகுமுறை, அழகியல் அணுகுமுறை, மதிப்பீட்டு அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை, விளக்கநிலை அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பாராட்டும் அணுகுமுறை, விதிமுறை அணுகுமுறை என்பவற்றை குறிப்பிட முடியும். இவற்றுள் குறிப்பிட்ட இந்த நூலினூடாக ஒருசில அணுகுமுறைகளை தெளிவாக இனங்காண முடிகிறது.
• வகைப்பாட்டு அணுகுமுறை:
பல்வேறு இலக்கிய வகைகளைப் பற்றிய ஆய்வுமுறை வகைப்பாட்டு அணுகுமுறையாக கருதப்படலாம். ஏலவே நான் குறிப்பிட்டது போல தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' எனும் நாவல், எம்.கே.முருகானந்தனின் 'டாக்குத்தரின் தொணதொணப்பு' எனும் நலவியல் இலக்கியம், கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், எஸ். பேராசிரியரின் 'மாசுறும் பூமி' எனும் பத்தியெழுத்து, 'எங்கட புத்தகங்கள்' எனும் காலாண்டிதழ், ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ், இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், வைத்தியர் தி.ஞானசேகரனின் ;யாவரும் கேளீர்' எனும் பத்தியெழுத்து, இரகுவரனின் 'தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் வம்சம்' எனம் ஆய்வு நூல், வண செபமாலை அன்புராசா அடிகளாரின் 'அண்ணன் ஆமையும் தம்பி முயலும்' சிறுவர் இலக்கியம், தாட்சாயணி, பிரமிளா பிரதீபன், ஆசி கந்தராஜா மண்டூர் அசோகா, சிறீறங்கன், பாலரஞ்சனி ஜெயபால், சிவசோதி ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள், பஞ்சகல்யாணியின் 'கதைமரம்' எனும் சிறுவர்கதைகள், அஜந்தகுமாரின் 'நாட்குறிப்புகள்' என பல வகையான இலக்கியங்கள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றமை இந்நூலின் விசேட அம்சமாகிறது. மேலும் ஒவ்வொரு இலக்கிய வகையும் குறிப்பிட்ட நூலின் படைப்பாளரது ஆளுமையை தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நோக்கிலான வகையில் ஆராயப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.
• அழகியல் அணுகுமுறை:
அதாவது இலக்கண விதிமுறைகளை கருத்திற்கொள்ளாது படைப்பின் அழகியலுக்கூடாக படைப்பினை பிரித்து மதிப்பீடு செய்வது தான் இவ்வணுகுமுறையின் அம்சம். இவ்வணுகுமுறைக்குள் நூலாசிரியர் தன்னுடைய ஆளுமையை அதிகமாகவே காட்டியிருக்கிறார். அவர் ஒரு புனைவெழுத்தாளன் எனும் வகையில் அழகியல் பற்றியதான தேடலையும் பார்வையையும் பயன்படுத்தி ஏராளமான நியாயப்படுத்தல்களை செய்திருக்கிறார்.
பிரதானமாக ஒவ்வொரு கட்டுரையையும் சில அழகியல்சார் அடையாள வார்த்தைக்குள் உள்ளடக்கிய வித் நூலாசிரியரின் அழகியல் உணர்விற்கு சான்றாகிறது எனலாம். உதாரணமாக கட்டுரைகளின் தலைப்பென்பதாய்... 'பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்' தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், வடமராட்சியின் வனப்பான வாழ்வியலிற்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் உறவுகள் சேர்ந்து' போன்றதாய் கட்டுரைத் தலைப்புகளில் தனது கற்பனைத்திறனை புகுத்திப் பார்த்திருக்கிறார்.
மேலும் புனைவு நூல்கள் தொடர்பாக தனது பார்வையினை விரிவு படுத்தும் போது தன்னுடைய பிரமாதமான மொழிநடையைக் கொண்டு தான் பேசும் புனைவெழுத்தின் அழகியல் பற்றி எடுத்துரைத்திருக்கும் முறைமையானது சிறப்பான அவதானத்தை பெறுகிறது.
மா.சிவசோதியின் சிறுகதைத் தொகுதிப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறார். 'போர்காலத்திலும் அல்லது அதன் பின்பும் நிர்க்கதியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் எதிர்காலம் இப்படியாகத்தான் அமையப் போகிறதோ என்ற ஒரு பதகளிப்பினை ஏற்படுத்தும் இச்சிறுகதை, இத்தொகுதிக் கதைகளுள் மிக்க கவனிப்பிற்குரியதொன்றாகிறது....'
மேலும்
'தோட்டத்தில் விளையும் கீரை, அதைக் கொண்டு வருவதற்காக தனது திருக்கல் வண்டியை எடுத்து வார்களுக்கிடையில் காலைவிட்டு கெந்திகெந்தி உழக்கிச் செல்லும் சிறுவன், தோட்டகாரர் கீரையை பிடுங்கி பைக்குள் திணிக்கும் இலாவகம், அந்த துலாப்பட்டையை எடுத்து கட்டையில் போடும் விதம் எல்லாமே.... அந்த வடமராட்சியின் தோட்டச் சூழலிற்கே வாசகனை அழைத்துச் சென்று விடுகிறது'
இவ்வாறான தனது விபரிப்புகளின் துல்லியத்தால் பேசவந்த படைப்பின் அழகியலை சிறப்பித்துக் காட்டும் முறைமை கவனம் பெறுகிறது.
• மதிப்பீட்டு அணுகுமுறை அல்லது ஒப்பீட்டு அணுகுமுறை:
ஒரு குறிப்பிட்டப் படைப்பிலக்கியத்தின் தரத்தையும் தகுதிபாடுகளையும் பலவகை இலக்கியங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஒரு தீர்மானத்தினை படைப்பின் மீது செலுத்தும் வகையிலான அணுமுறையென இதனை கூறலாம். அந்த வகையில் நூலாசிரியர் இம்முறையினை செய்யாமல் செய்திருக்கிறார் அல்லது தவிர்த்திருக்கிறார்.
இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள் எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.
'அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சொல்லும் கதைகள் இன்னும் கனதி பெற வேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டு நிற்பதாக நூலின் முன்னுரையில் நூலாசிரியரின் மற்றுமோர் ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவருமான எழுத்தாளர் இராஜேஸ்கண்ணன் அழுத்தி உரைத்திருப்பதை அஜந்தகுமார் கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அவரின் இத்தகு எழுத்துகள் இலக்கிய உலகில் நிச்சயம் கனதியான சுவட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என மிகத் தாராளமாகவே கூறலாம்'
'சமூகச் செய்திகளை சீரோடு சித்தரித்திருக்கும் சிறீறங்கனின் 'சிவப்புக்கோடு' எனும் கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது:
'ஆனாலும் ஈழத்து நவீன புனைகதை பற்றிய பரிச்சயமும், துறைசார்ந்த வீச்சும் சிறீறங்கனிடம் மேலும் வேண்டப்படுவதையும் தொகுதி உணர்த்த தவறவில்லை. மிகச்சிறந்த சமூக அவதானிப்பினூடும் தேர்ந்தெடுத்த ஒரு மொழிநடையினூடும் சிறீறங்கன் எதிர்காலத்தில் சிறுகதையுலகத்தில் பயணிப்பாராயின் இவரது முன்னைய தலைமுறையில் கோலோச்சி நிற்கும் வதிரி இ.இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி போன்றோருடன் இவர் பொருந்தத்தக்க ஒருவராக வல்லர் என்பதனையே சிவப்புக்கோடு எனும் நூல் உணர்த்தி நிற்கிறது எனலாம்'
அதாவது குறிப்பிட்ட படைப்பாளர் எந்த இடத்தில் தம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் எனும் மதிப்பீட்டை படைப்பாளரை புண்படுத்தா வண்ணம் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் எனத்தோன்றுகிறது. எனினும் நூலாசிரியர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்கள் அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி எனும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வலியுறுத்தி சில விமர்சனங்களை கூற முற்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட படைப்பாளர் அதனை ஏற்றிருப்பார் என தாராளமாக எண்ண முடிகிறது. காரணம் எதிர்மறையான விடயங்களை மிக இலாவகமாக சொல்லத்தெரிந்த மொழிப்பக்குவத்தை கொண்டிருக்கக்கூடியவர்களால் மேலும் பல அசாத்தியங்களை இலகுவாக நிகழ்த்த முடியும். அத்தகைய விமர்சனங்களின் தேவைபாடு அதிகரித்திருக்கிறது என்பதுடன் புதிய படைப்பாளர்களின் ஆளுமையுடனான அடுத்தக்கட்ட நகர்விற்கு மதீப்பீட்டு ரீதியான அணுகுமுறையே பேருதவியாக அமையுமென்பது என்னுடைய கணிப்பு.
அடுத்ததாக இந்த நூலின் சமகால முக்கியத்துவம் பற்றியதான தேடலில் மிக முக்கியமாக விமர்சனத்துறையின் காலத்தேவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. திறனாய்வுத்துறைக்கான பங்களிப்புகளை வழங்குவோர் குறித்து தேடுகையில் மிக சில பெயர்களே நினைவிற்கு வருகின்றன. குறிப்பாக விமர்சகர் S.ரமேஸ், இ.சு முரளிதரன், செல்வ மனோகரன், இ.இராஜேஸ்கண்ணன், புலோலியூர் வேல்நந்தன், குணேஸ்வரன், ஜிப்ரிஹாசன், சப்னாஸ் ஹாசிம் போன்றோரையும் பெண் விமர்சகர்கள் வரிசையில் திருமதி வசந்தி தயாபரன், எம்.தேவகௌரி, திருமதி ரஞ்சனி சுப்ரமணியம் போன்றோரையும் நினைவுபடுத்த முடிகிறது. எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் நூல் விமர்சனத்தைத்தாண்டி வாசிப்பனுபவம் எனும் வகையில் அனேகமானோர் வெறும் அழகியல் திறனாய்வாக மாத்திரம் தமது ஆய்வை வளர்த்து செல்கின்ற போக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளபடியால் இந்நூலின் காலத்தேவைப்பற்றி வெகுவாக உணரக்கூடிய சூழ்நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.
பல்வேறு வகை இலக்கியங்களின் தொகுப்பை ஒரே பார்வைக்குட்படுத்தி குறிப்பிட்ட படைப்பாளரது சகல படைப்பனுபவங்களையும் களஞ்சியப்படுத்தல் முதற்கொண்டு படைப்பாளர்களை ஊக்குவித்தல், புதிய படைப்பாளர்களுக்கு சரியான வழியினை அமைத்து கொடுத்தல், மேலும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் தனது கட்டுரைகளை பிரசுரிப்பதனூடாக புதிய படைப்பாளர்களுக்கு பெறுமதியான களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் காலத்தேவை மிகவும் இன்றியமையாததாகும்.
மேலும் எழுத்தினூடான படைப்பாளரின் வெளிப்பாடு என்ற வகையில், எழுத்தாளர் தனது படைப்பூடாக ஏற்படுத்த துணியும் சமூக விளைவையும் படைப்பின் சமூக பெறுமானத்தையுமே ஆராய விரும்புகிறேன். அதாவது கல்வி புலத்தில் கற்றலில் அதீத மேம்பாட்டை செய்யும் மறைகலைத்திட்டத்தைப் போல வெளித்தெரியாத எத்தனையோ சமூக பெறுமானங்களை கொண்டதாய் இவரது சுய ஆய்வுக்கட்டுரைகள் தொக்கியிருக்கின்றன.
குறிப்பாக அக ஊக்கல் தேவையான படைப்பாளரை இனங்கண்டு அவர்களின் தேவையை தீர்ப்பதாய் சரியான சமயத்தில் வெளிவரும் கட்டுரைப்பிரசுரம், புதிய எழுத்தாளர்களின் சூழ்நிலையறியாமல் ஒரே கட்டுரையில் அவர்களின் தன்னம்பிக்கையை இல்லாதொழிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் முகப்புத்தக எழுத்து கலாசாரத்திற்கு மத்தியில் மிகுந்த பக்குவத்துடன் எதிர்மறைவிடயங்களை கையாளத்தெரிந்த மொழிப்பக்குவம், படைப்பாளர்களின் ஏனைய விபரங்களை தேடித்தொகுத்த நிதானம், நெறிப்படுத்துகை, படைப்பாளர்களை எழுத்தினூடாக தன்னம்பிக்கையூட்டும் திடம் இப்படி ஏராளாமான பண்புகளை சிதறவிட்ட பாங்கிகை உற்று அவதானிக்க முடிகிறது.
ஆகவே தன் கட்டுரைகளில் நூலாசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் அதே வார்த்தைகளில் கூறினால்... இலக்கிய உலகின் கனதியான சுவடாகக்கூடிய ஒரு படைப்பினையே நூலாசிரியர் ஆ.இரத்தினவேலோன் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.