Enter your keyword

Sunday, September 6, 2020

அது புத்தனின் சிசுவல்ல - பிரமிளா பிரதீபன்


தூக்கத்தில் வாயுளறி கொண்டிருப்பவர்களின் கால் பெருவிரலுக்கு அடுத்ததாய் இருக்கும் இரண்டாவது விரலை இழுத்துப் பிடித்துக் கொண்டால் அதிகமாக உளறி வைப்பார்களாமே…!

அந்தக்கதையை நம்பித்தான் மாயாவின் பெருவிரலை இறுக்கமாய் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் நீலமேகம்.

அந்த பின்னிரவு பொழுதின் மெல்லிய நிலா வெளிச்சம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள ஏதுவாக மாறியிருந்தது. பட்டென விழித்துக்கொண்ட அவள் ‘என்ன..?’ என்று அதட்டினாள்.

‘இல்ல நீ வாயுளர்ன்ன’ தடுமாறியபடி இப்போது அவன் உளறினான்.

‘ச்சே’ என்றபடி மீண்டும் திரும்பிப்படுத்து தூங்கிப்போனாள் அவள்.

நீலமேகத்திற்கு பயங்கர பதட்டமாயிருந்தது. தவறியேனும் அவள் சந்தேகித்து ஏனென்று கேட்டிருந்தால் என்ன சொல்லியிருக்க முடியும்..?  அந்த முட்டாள்தனமான யோசனையை நம்பியிருக்க கூடாது. நிச்சயமாய் நம்பியிருக்கவே கூடாது.

நிலைக்கொள்ளாமல் அறையின் இரு புறமும் அங்குமிங்குமாய் அவளை பார்த்தவாறே நடந்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனால் ஒன்றை கவனிக்க முடியுமாயிருந்தது. உறங்கும் பொழுதுகளில் கூட ஏதோ ஒரு ஆசனத்தை செய்வதையொத்தே அவள் தன் உடலை ஆக்கிக் கொள்கிறாள். சற்றுமுன் பாலாசன நிலையில் இருந்தவள் திடீரென சவாசனத்திற்கு திரும்பியிருந்தாள். கைகால்கள் அசைவற்று நேர்கோட்டு வடிவில் தளர்வாக கிடந்தன. முகம் விட்டத்தை பார்த்தபடியும், இமைகள் மூடியபடியுமாய். அவனால் சத்தியம் பண்ணி சொல்ல முடியும் அவள் மூச்சுவிடுதலையும் மிகச்சரியான முறையிலேயே செய்து கொண்டிருப்;பாளாயிருக்கும்.

உன்னிப்பாக அவளின் வயிற்றசைவுகளை அவதானிக்க முயற்சித்தான். இருளுக்குள் அது சாத்தியமாகவில்லை. மெல்ல நகர்ந்து அவளருகில் சென்று சுட்டுவிரலை மூக்குத்துவாரத்திற்கருகில் பிடித்தபடியாய் பார்த்தான். நிதானமான சுவாசமது. வெளிமூச்சின் போது வயிறு உட்புறமாகவும் உள்மூச்சின் போதில் வயிறு வெளிப்புறமாகவும் அசைகிறது. அதிலும் நீண்ட நேரமெடுத்த ஆழ்ந்த சுவாசம். சரியாக நடேசன் ஐயா கற்பிக்கும் மூச்சு பயிற்சிகளின் சுவாசத்தைப் போல…

ஏனென்று தெரியாத ஆத்திர மேலிடல் அவன் சுயத்தை குழப்பியது. ஒளித்து வைத்திருந்த சிகரட் பக்கட்டில் ஒன்றை வெளியே இழுத்து புகைக்க ஆசைப்பட்டான். எனினும் இன்னும் சிறிது நேரத்தில் பிராணாயாமம் செய்ய வேண்டுமென்பதால் அச்சிந்தனையை தவிர்த்தபடியே  மீண்டும் அறைக்குள்ளாகவே  நடந்துக் கொண்டிருந்தான்.

முதலாவது யோகத்தீட்சையின் போதில், மாயாவை பார்த்த அந்த கணத்திலேயே நீலமேகம் முடிவு செய்திருந்தான். இவள் எனக்கானவள் என்று… அதற்கான காய்களையும் தனக்கேற்ற்றாற் போல் நகர்த்தி,  ஒரு வருடத்திற்கு குறையாத இல்லற வாழ்விலும் அநேகமாய் வெற்றியடைந்திருக்கிறான். ஆனால் அதனை முழுதாக கொண்டாடிக் களிக்க முடியாமல் ஏதோ ஒன்று அவனை தடுத்துக் கொண்டேயிருந்தது. எப்போதுமாய் அவனை குழப்பமடையச் செய்யும் அந்த ஒன்று, அவளின் அதிதீவிர யோக ஈடுபாடாகவோ அல்லது தியான நிலையில் அவள் உச்சம் பெற்றவள் என்பதாகவோ அப்படியும் இல்லையென்றால் குருஜியின் உத்தரவின் பெயரால் மாத்திரமே அவள் தன்னை மணந்துக் கொண்டாள் என்பதாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் ஆனால் அதையெல்லாமும் மிஞ்சிய ஒரு இரகசியம் அவளிடம் நிச்சயமாய் இருக்க வேண்டுமென்றும் அது நடேசன் ஐயாவிற்கும் தெரிந்திருக்கிறதென்பதையும் நீலமேகம் ஊகித்து வைத்திருந்தான்.

‘நான் பொறாமை படுகிறேனோ!’ என்றும் தனக்குத்தானே நீலமேகம்  அடிக்கடி கேட்டுக்கொள்கிறான். எனினும் இது பொறாமையை தாண்டிய வேறொரு உணர்வு என்பதே நிஜமாக இருக்க வேண்டும்.

தீட்சை நிலையின் பிரிதொரு கட்டத்தில் கண்களுக்குள் இருக்கும் பிராண சக்தியை எங்ஙனம் பரிசோதிப்பதென்று கற்பிக்க கதிர்காமத்திற்கு அருகிலுள்ள காடொன்றின் ஒற்றையடிபாதை வழியாக  அழைத்துச்சென்றிருந்தார் குருஜீ. அப்போதுதான் மழைப்பெய்து ஓய்ந்திருக்கக்கூடிய  மாலைப்பொழுதாக அது இருந்தது. சுத்தமான காற்றுச்சூழ தனியொரு வெளியாகவும், அவர்கள் இருபது பேர் வரையில் தனித்து நின்று வானத்தை நோக்க தகுந்த ஓரிடமாகவும் தெரிவுசெய்து அங்கே அவர்களை நிற்கச் சொன்னார். அவரின் கட்டளைபடி எல்லோரும் கண்களை மூடி ஒருசில ஆழ் சுவாசங்களை தனித்தனியே உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டார்கள். சிறுநேர இடைவெளிக்குப்பின் இமைகளை மெதுவாக திறந்து அந்த பச்சையம் சார் சூழலை கண்களுக்குள் நிரப்பினார்கள்.

வான் முகில்கள் கூட்டங்கூட்டமாய் சேர்ந்திருப்பதை காட்டி ஒரு கூட்டத்தை தெரிவு செய்யுமாறு குருஜீ கேட்டுக்கொண்டார். சற்றே சாதாரண அளவுடையதான ஒரு முகிற் கூட்டத்தை அவர்கள் தெரிவு செய்ததும் குருஜீயுடன் எல்லோருமாய் சேர்ந்தாற்போல அம்முகில் கூட்டத்தை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சில நொடிகளுக்குள் அம்முகில்கள் முற்றிலுமாய் காணாமல் போய் அவ்விடம் வெறுமையுடையதாய் ஆகிப்போயிருந்தது.

கண்களுக்குள் இருக்கும் ப்ராணா சக்தி பற்றியதான சந்தேகம் அதற்கு பிறகாக யாருக்குமே எழவில்லை. ஆனால் நீலமேகம் அதனை தனியே பரீட்சித்துக் கொள்ள வேண்டுமென அடிக்கடி முயற்சித்தான். முகில்கள் காணாமல் போகும் நிலைகண்டு ஆனந்தமடைந்தான். பெரிய முகிற்கூட்டங்களை தெரிவு செய்து நீண்ட நேர பார்வை ஸ்பரிசத்தால் அதனை கலைத்தான். தன் ப்ராணா சக்தி மீதான இறுமாப்பில் மிதக்கத் தொடங்கியிருந்தான். ஆனால் அத்தகைய அவனது அர்த்தமற்றதான நம்பிக்கைகள் யாவுமே அடுத்தடுத்து நடந்த எதிர்பாரா சில சம்பவங்களுக்குப்  பிறகு சரியத்தொடங்கியிருந்தன.

ஒரு ஏப்ரல் மாத காலைப்பொழுதது. இருவருமாய் மொட்டை மாடியில் சூரிய நமஸ்காரம் செய்து தளர்ந்து படுத்திருந்திருந்தார்கள்.

‘ப்ராணா சக்தி டெஸ்ட் பண்ணுவோமா’ என நீலமேகம் கேட்டான் 

‘அது ஒன்னும் விளையாட்டு இல்ல… நம்ம ப்ராணா சக்திய காண்பிக்க குருஜீ யூஸ் பண்ணிய ஒரு யுக்தி’

‘இருக்கட்டும் ஒரு தடவை பார்க்கலாமே’

அவன் விடுவதாயில்லை.

இருவரும் தங்களதென இரு முகிற்கூட்டங்களை தெரிவு செய்துக் கொண்டார்கள். சொல்லப்போனால் அவளது, அவன் தெரிவு செய்ததை விடவும் விசாலமானதாயிருந்தது.

இடையிலொரு தடவை கண்களை விலத்தி அவளுடைய முகிற் கூட்டத்தை பார்த்த மாத்திரத்தே அவன் மிரண்டுப் போனான். இறுதியாய் ஒரே ஒரு துண்டு முகிலொன்று பார்த்திருக்கும்போதே கரைந்துக்கொண்டிருந்தது. அவனது முகிலில் சிறு அசைவுதானும் அப்போதில் ஏற்பட்டிருக்கவில்லை.

‘குட்… உனக்கு நிறையவே இருக்கிறது’

நீ பார்க்கலயா?’ அவனுடைய முகில் அப்படியே இருப்பதை பார்த்து கேட்டாள்.

இல்ல உன்னத ஒப்சேவ் பண்ணிட்டிருந்தேன்’

எப்படியோ சமாளித்தான். ஆனால் ஏற்கவியலா இயலாமை அவனுக்குள் உருவாகி முடிந்திருந்தது. அதன் பிறகான எல்லா சந்தர்ப்பங்களிலும்  நீலமேகம் அவளை விசித்திரமாய் அவதானிக்கத் தொடங்கியிருந்தான். தியானத்தின் போது விழிவெண்படலங்களை மாத்திரமே காட்டிடும் அவளது கண்களும், பிரம்மறி பிராணாயாமத்தின் போது அவளிடமிருந்து வெளியாகும் வண்டொன்றின் அப்படியேயான இரைச்சலும் கபாலபாத்தி பயிற்சியின் அசாத்தியமான எண்ணிக்கைகளும்… நாளுக்குநாள் அவர்களுக்கிடையேயான விரிசலை மறைமுகமாய் அதிகப்படுத்தியபடியே இருந்தது.

ஆனாலும் ஒவ்வொரு திங்கட்கிழமை அதிகாலை பொழுதுகளையும் அவன் மிக அதிகமாகவே விரும்பினான். பொதுவாக திங்கட்கிழமைகளின் போது மட்டுமே அவர்கள் நீலப்பந்து பிராணாயமா  பயிற்சியில் ஈடுபட்டார்கள். நீலப்பந்து பிராணாயமா மிக முக்கியமான பயிற்சியொன்றாகையால் அது தீட்சையின் போது கற்பிக்கப்பட்ட அதே விதிமுறைகளுக்கமைவாகவே செய்யப்பட வேண்டுமென்பதும் அப்பயிற்சியின் இறுதியில் அடக்கமுடியா புணர்தலின் விருப்பம் உருவாகுமெனினும் அதனை கட்டுப்படுத்த வேண்டுமென்பதும் குருவின் கட்டளையாயிருந்தது. என்றாலும் நீலமேகம்  வேண்டுமென்றே அதனை மீறினான். அவளையும் உடன்பட வைத்தான். அப்போதிலெல்லாம்  இதுவென வகைபடுத்திடவியலா உவகையொன்றை தனதாக்கிக்கொண்டு இயங்கத் தொடங்கும் நீலமேகத்தை அவள் மறுப்பதில்லையே தவிர எதையோ சிந்தித்தபடியே கண்மூடிக் கிடப்பாள்.

அன்றைய தினமும் திங்கட்கிழமையென்பதுவும் இன்னும் சற்று நேரத்தில் இருவரும் பிராணாயாமத்திற்கு தயாராக வேண்டும் என்பதுவும் நீலமேகத்தின் தடுமாற்றத்தை கொஞ்சம் குறைப்பதாயிருந்தது. அவள் எழுந்து கொள்வதற்கு முன்பாகவே தயாராகி அவளுக்காக காத்திருந்தான். மாயா அவனில் சந்தேகப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான எதுவித அறிகுறிகளும் அப்போது வரைக்கும் தென்படவில்லையென்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

நீலப்பந்து பிராணாயாம பயிற்சியும் அதன் பிறகான அவனின் திட்டமிட்ட கூடலும் வழமை போலவே தடங்கலின்றி தொடர்ந்தன. அன்று சற்று அதிகமாகவே நீலமேகம் தன் ஆதிக்கத்தை காட்டத் தொடங்கியிருந்தான். அவளும் வழமையையொத்தே கண்கள் மூடி கிடந்தாள்.

மூடிய அவளின் கண்களின் வழியாய் அதிவேகமாய் கருமை படிந்த வெளியொன்று திறந்துக் கொண்டது. முதலில் விரும்பியே அவள் அதற்குள் பிரவேசிக்க எத்தனித்தாள். தன் நரம்புகளுக்குள் சுர்ரென்று பீறிடும் உணர்ச்சி கொந்தளிப்புகளை அப்படியே மூலாதாரச் சக்கரத்திற்குள் சுருக்கி அடக்கிவிட துடித்தாள். அங்கிருப்பதாய் எண்ணிக்கொண்டிருக்கும் அத்தாமரை மலர்கள் விரிவடைவதை கூர்ந்து அவதானித்தாள். தொடர்ச்சியாய் அவளது சிந்தனைகள் காரணங்களற்று அவ்விடத்தில் தடைப்படத் தொடங்கின.

எப்போதும் போல அத்தருணத்திலேயே எங்கிருந்தோ தோன்றியவனாய் அகிலன் அவளுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து அருவமாய் அவள் மேனி படர்ந்து முழுமையாய் தழுவத் தொடங்கியிருந்தான். ஆழ்ந்த உட்சுவாசத்தை பிடுங்கியெறிந்து அவளை  ரம்மிய உலகொன்றிற்குள் இழுத்துச் சென்றான். மாயா இன்பமாய் மிதக்கத் தொடங்கினாள். இருவருமாய் அந்தரத்தில் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அவளது ஒவ்வொரு சிறு கலத்தையும் தன் ஸ்பரிசத்தால் அகிலன் பூக்கச்செய்தான். அதற்கு பின்னராய்  ஊசலாடும் அந்த இரு உடல்களும் சிலிர்த்து இரு சர்ப்பங்களாய் உருமாற்றமடைந்தன. அவை ஊர்ந்து மேலெழும்பி பிளவுப்பட்ட இரண்டு துண்டங்களாய் தென்பட்டன. அந்த கணத்தில் சட்டென அவள் கண்விழித்து அகிலனை எப்படியேனும் பார்த்துவிட வேண்டுமென ஆர்வத்துடன் முயற்சித்தாள் பின் பயந்து வியர்த்து அந்நினைவிலிருந்து தப்பிக்க எண்ணினாள். ஆனால் நிஜத்தில் நீலமேகத்தின்  திண்ம உடலே அவளுடலுடன் உராய்ந்தாற் போல தட்டுபட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தழுவலின் ஆக்ரோஷம் வழமையை விட அதிகரித்திருந்தது.

அவள் நீலமேகத்தின் இறுக்கமான பிடிக்குள் இருந்து விடுபட முடியாமலும் அவனுக்கு தான் மாபெரும் துரோகம் ஒன்றை செய்து கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள இயலாமலும் தவித்தபடி உணர்வுகளை இறுக்கமாக்கி வைத்திருந்தாள். அழக்கூடாதென்றும் அதிக பிடிவாதமாயிருந்தாள்.

அகிலனின் இந்த யாருமறியா அருவப்பிரவேசம் கட்டாயமாய் தவிர்க்கப்பட வேண்டியதொன்றாயிருந்தாலும் அதனை மாயாவால் செய்யவியலாமலிருந்தது. இதுபற்றி எதுவொரு விடயத்தையும் நீலமேகத்திடம் பேசிக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது.

அவளளவில் அகிலன் கிரியா யோகத்தின் அதிசய புத்திரன். பாபாஜியின் பாதங்களை மட்டுமல்லாமல் தன்னையும் தவமென விடாது பற்றிக்கொண்டிருப்பவன்.

முதலாவது யோக தீட்சையின் போது மாயாவின் எதிர்திசையில்தான் அகிலன் அமர்ந்திருந்தான். நடேசன் குருவின் அறிவுறுத்தல்ககளிற்கிணங்க எல்லோரும் கண்மூடி தியானித்துக் கொண்டும் தேவையேற்படும் போது குருவை அவதானித்துக் கொண்டும் இருந்தனர்.  அப்போது காரணமேயின்றி அகிலனும் மாயாவும் அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். விழிகளின் அசாத்திய பாய்ச்சலால் இருவரது மனங்களையும் சந்திக்கவும் அனுமதித்தார்கள். அத்துடன் வடிவமற்றதொரு சக்தி கடத்தலையும் ஒருமித்து உணர்ந்தார்கள்.

என்றாலும் அதன் பிறகான எந்தவொரு சந்திப்பிலும் தங்களுக்குள்ளால் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் காதலைப் பற்றி அவர்கள் பேசத் துணியவே இல்லை. அப்படி பேச வேண்டுமென்று துணிந்த அந்த ஒரு உரையாடல் தான் அவர்களது இறுதி உரையாடலாகவும் மாறிப்போயிருந்தது.

‘நீ அபூர்வமான பெண்’ என்றான் அகிலன்.

‘ஏன் அப்படி சொல்கிறாய்?’ என்றாள்

‘தியானத்தின் படிகளில் திளைத்த வீரியம் உன் கண்களில் தெரிகிறது மாயா’

அவள் சிரித்தாள்.

‘அதை தாண்டிய சிற்றின்ப உலகிற்கு நீ அழகாகவும் இருக்கிறாய் மாயா’

தொடர்ந்தும் சொன்னான்.

‘என்னுடன் இருக்க சம்மதி உலகை வெல்லலாம்’

‘நானே விரும்பினாலும் அது சாத்தியமில்லை அகிலன்’ என்றாள்.

‘ஏன் சாத்தியமில்லை. இருவருமாய் யோக பாதையின் உச்சம் காணலாம்’

‘என் விருப்பை தாண்டிய வேறொரு கடமை எனக்கு இருக்கிறது’

‘சொல்… என்ன கடமை?’

‘சொன்னாலும் நீ நம்பப் போவதில்லை விடு’

‘உன்னில் முழு நம்பிக்கை உள்ளவன் நான்… என்னவென்று சொல் மாயா’

சற்று தயக்கத்துடனேயே அவள் கூறினாள் ‘அது யோகம் எனக்களித்த வரம்… என் கருவறை பரிசுத்தமானதென்றும் யோகத்திற்கு ஒரு சிசு உருவாக நான் கருவியாய் இருக்க வேண்டுமென்றும் அறிந்திருக்கிறேன்’

‘எப்படி அறிந்தாய்?’

அது இப்போதைக்கு வேண்டாம்’

‘எனக்குத் தெரியாத இரகசியங்களும் உன்னிடம் இருக்கிறதா மாயா?

அவனது பார்வை ஆழமாய் அவளை ஊடுருவியிருந்தது.

அதன் பிறகாயும் அகிலன் சொன்னான்.

‘மாயா நீயே என் சக்தி… நீ அற்புதமானவள்’

‘எப்படி சொல்கிறாய்’

‘என் மோனம் உன் வரவால் புத்துணர்ச்சி அடைகிறது. புதிதாய் பிறந்து கொண்டிருக்கிறேன். என் சக்திகளின் எழுச்சிகளை அதிகமாக உணர்கிறேன்’

சிறிது மௌனம் காத்து அடுத்ததாய் கேட்டான்’ நாம் ஒருமுறை இணையலாம் வா’

மாயா அதற்கு பதில் பேசாமல் நேருக்கு நேர் அவன் விழிகளை ஒருமுறை சந்தித்து மீண்டாள்.

‘தேவையெனின் இவ்வுலகின் பார்வைக்கு நாம் மணந்தும் கொள்ளலாம் மாயா’

‘இல்லை சாத்தியப்படாது அகிலன்’

‘என்ன சொல்கிறாய்?’

‘நிஜம். நான் பரிசுத்தமானவளாய் இருக்க வேண்டுமென சொன்னேனே!’

‘அது என் குழந்தையாக இருந்துவிட்டு போகட்டுமே!’

‘அப்படி இருக்குமென்றால் வேண்டாமென மறுக்கவா போகிறேன் ! என்றாலும் அது எங்ஙனம் நடக்குமென இந்நொடி வரை நான் அறியவில்லை…  அதற்காக செய்ய வேண்டியவை பற்றியும் குருஜியே வழிகாட்டுவதாய் சொல்லியிருக்கிறார்’

‘யார்..? நடேசன் ஐயாவா?

‘ம்ம் … அவர் கட்டளைகளுக்காகவே காத்திருக்கிறேன்’

‘முட்டாளா நீ...!’

‘உளறாதே அகிலன்’

‘மாயா நிதானமாக யோசி… இது சாத்தியமேயில்லை’

‘நீ குருஜீ பற்றி அறிய வாய்ப்பில்லை’

‘சொல் நீ என்ன அறிந்திருக்கிறாய்?’

‘தியானத்தின்வழி பல அற்புத சக்திகளை பெற்றவர் அவர்’

‘வேறு’

‘தூய்மையானவர்’

‘வேறு’

‘வேறென்ன தெரிய வேண்டும் உனக்கு?’

‘நீ பிதற்றுகிறாய் மாயா… பாலுணர்ச்சிக்கும் குண்டலினி சக்திக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நீ அறிவாய் தானே? அவர் உன்னை பயன்படுத்த எண்ணியிருக்கலாம்… அதற்கு தேவையான பெண் நிச்சயம் யோக வழியை பின்பற்ற வேண்டும்… அவள் தியானத்தில் உச்ச நிலை அடைய வேண்டும்… கூடவே அவள் அழகாகவும் இருக்க வேண்டுமென அவர் விரும்பியதால் உன்னை அவர் தெரிவு செய்திருக்கலாம்.’

‘எல்லாமே சரிதான்… நான் அவரை நம்புகிறேன் என்பதை விட இப்படியொரு சந்தர்ப்பத்தை தவறவிட கூடாதென்பதையே அதிகமாய் யோசிக்கிறேன்’

‘நான் சொல்வதே நிஜமாயிருக்கும் மாயா’

‘வேண்டாம் என்னை அதிகம் குழப்புகிறாய்…  இதில் நீ தலையிடாதே’

‘அப்படியே இருக்;கட்டும் விடு… ஆனால் நம் காதல் !’

‘நம் நோக்கம் யோக மோட்சமெனின் காதல் எதற்கு?’

‘மாயா என்னை நம்பு… நீ அவரால் வசியப்பட்டிருக்;கிறாய். உன் வலிமை எதுவென்பதை அறியாமல் சுயம் தொலைத்து திரிகிறாய்’

‘என்னை இப்போது என்ன செய்ய சொல்கிறாய்?’ அவள் கத்திப் பேசினாள்.

‘அந்த சதிகாரனிடமிருந்து வெளியே வா… குரு எனும் பதத்தின் புனிதம் கலைத்த துரோகியாகவே அவரை நான் காண்கிறேன். நன்றாக யோசித்து சொல் எப்போதேனும் அவர் உன்னை ஸ்பரிசித்ததுண்டா?’

‘ஒரு தடவை அவரின் உள்ளங்கை மையத்தில் வெளியாகும் சக்திப் பாய்ச்சலை தொட்டு சிலிர்த்திருக்கிறேன்’

‘நான் உன்னை காப்பாற்ற வேண்டும். நீ மொத்தமாக அவன் வசப்பட்டிருக்கிறாய்’

‘நீ சொல்வது உண்மையாயிருந்தாலும் பரவாயில்லை… இத்தனை காலம் நம்பிய ஒன்றை மாற்றி யோசிக்க நான் விரும்பவில்லை… இங்கிருந்து போய்விடு அகிலன் எனக்கு பைத்தியம் பிடிக்கிறது’

தன்னிலை மறந்து சத்தமிட்டு ஆர்ப்பரித்தாளவள்.

கையிலிருந்த ஓஷோவின் புத்தகத்தை வீசியெறிந்துவிட்டு கோபமாக அங்கிருந்து சென்ற அகிலனை அதற்கு பிறகாய் மாயா சந்திக்கவே இல்லை. ஆனால் அவன் குருவுடன் சண்டை போட்டதுடன் இதனை அம்பலப்படுத்த போவதாயும் மிரட்டியிருக்கிறான் என்பது குருவின் மூலமாகவே பிறகு தெரிய வந்தது.

‘இரகசியம் பேணத் தெரியா முட்டாள் நீ’ என்று குருஜீ ஆதங்கப்பட்டார்.

‘அகிலன் மாபெரும் தவறிழைத்திருக்ககிறான். தேவையின்றி என் வழியில் குறுக்கிட்டதால் அவனது யோக பாதையையே என்னால் தகர்த்தெறிய முடியும்… அவனை தெருவில் அலைய வைக்கப் போகிறேன் பார்’ என்று ஆவேசப்பட்டார்.

‘நானே தண்டிக்கப்பட வேண்டியவள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று கெஞ்சியழுதாள் மாயா.

‘சற்றும் தகுதியற்றவளாய்; போயிருக்கும் நீ என் வேள்விகளுக்குள் வரக்கூடாது… போய்விடு’ என்று குருஜீ மாயாவை முற்றாக மறுத்தார். ஆனால் இதற்கு பரிகாரமாய் ‘நீ சிற்றின்ப வாழ்வில் உழன்று பின் மீள வேண்டும்’ என்றார்.

‘நான் சொல்பவனையே நீ மணம் முடிக்க தயாராயிருந்தால் அகிலனை மன்னித்து விடுகிறேன்’  என ஒத்துக்கொண்டிருந்தார்.

இல்லற வாழ்வை துறந்து யோகத்தில் முழுவதுமாய் பயணிக்கும் தன் ஆழ்மன கனவை அகிலனுக்காக மாற்றிக் கொண்டாள் மாயா. யோசிக்கும் திராணியற்று குருவின் உத்தரவிற்கு  அப்படியே இணங்கினாள். நீலமேகத்துடனான தனது வாழ்க்கையை அனுமதித்தாள். ஆனாலும் முழுதாக நீலமேகத்தை ஏற்க முடியாத தவிப்பை மறைக்க யோக மோட்சத்துக்கான பாதையை தேடி மேலும் அதிகமாய் தியானிக்கத் தொடங்கினாள்.

தியான நிலையின் பேரின்ப நிலையினை அனுபவிக்க ஆரம்பித்து ஆன்மாவிடம் தஞ்சித்துப் பறப்பதாய் உணரும் அக்கணங்களில் அகிலனின் வருகை மிக சாதாரணமாக நடந்து முடிவதை எண்ணி அகம் பூரித்து சிலிர்ப்படைவதையும், வலிந்து பறித்து தூர எறியப்பட்ட மலரொன்றை சூடிக்கொண்ட களிப்பை தான் அனுபவிப்பதையும் எங்கனம் தவிர்ப்பதென்பது அவளுக்கு தெரியாமலிருந்தது.

அகிலனும் இதே பிரம்மமுகூர்த்த பொழுதுகளில் தியானிப்பதற்கான வாய்ப்புகள் உண்டென்றாலும் தியானத்தின் வழியால் இரு ஆன்மாக்கள் சந்திப்பதும் சந்தோஷிப்பதும் மெய்யாகவே சாத்தியப்பாடானது தானா…? இதனை யாரிடம் கேட்டு தெளிவடைவதென மாயா குழம்பினாள். பின் எங்ஙனம் குறிப்பிட்ட நிலை தாண்டிய உணர்வுகளுடன் அவனால் சங்கமிக்க முடிகிறது..? இது யதார்த்;தமானதாய் தோன்றவில்லையே…! அப்படியே இது உண்மையெனில் குருஜீ இதனை அறிந்திருப்பாரா? அகிலனை தண்டித்து விடுவாரா? அல்லது தன்னை புனிதம் கெட்டவள் என்று சபிப்பாரா? எதற்குமே பதில் தெரியாதவளாய், தியானத்தின முன்பின்னான உறக்க நிலைகளில் மாயா அவஸ்த்தையுற்றாள். இறுதியில் குருஜீயிடமே இதுபற்றி பேசுவதெனவும் தீர்மானித்துக் கொண்டாள்.

2

அன்றைய வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாயா வந்து அமர்ந்துக்; கொhண்டிருந்தாள்.

தியானத்திலிருந்து மீண்ட நடேசன் குரு ‘நானே உன்னை அழைக்க நினைச்சேன்’ என்றார்.

‘உங்கட்ட கொஞ்சம் பேசணும் குருஜீ’

‘நீ என்ன பேசப் போறன்னு தெரியும் மாயா… எல்லாமே சரியாதான் நடக்குது..’

‘இல்ல குருஜீ நீங்க நினைக்கிறமாதிரி எதுவுமே சரியா நடக்கல’

‘இந்த மாச பௌர்ணமி தினம்.. பிரம்மமுகூர்த்த பொழுதின் ஒருகணம் அந்த கருவுக்கான நேரமா இருக்கலாம் மாயா’

‘என்னால அத நம்ப முடியல குருஜீ… என்ன மன்னிச்சிடுங்க.... அந்த புனிதம் என்னட்ட இப்போ எப்டி இருக்க முடியும்? நான் இன்னொருத்தரோட மனைவி’

‘அது பற்றிய கவலை உனக்கு வேணாம்’

‘ஆனா அகிலன்…’ அவள் நிறுத்திக் கொண்டாள்.

குருஜியின் முகம் சட்டென மாறியது. ‘அவனுடன் தொடர்பில் இருக்கிறாயா?’ இந்த திடீர் ஆவேசத்தை மாயா எதிர்பார்க்கவில்லை.

மாயா இப்போது பயந்தவளாய் தோன்றினாள். குருஜீ கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார். தன் கோபத்தை தணிக்க முயல்வதை காட்டிக்கொள்வதாய் இருந்ததந்த அசைவுகள். சற்று நேரம் தாமதித்து கண்கள் திறந்த அவர் தன்னிலை மறந்து கோபத்தின் உச்சம் தொட்டிருந்தார். அதற்குள் நாலைந்து பேர் வகுப்பிற்குள் வந்து விட்டிருந்தனர். நீலமேகமும் வந்திருந்தான்.

குருஜீ சாதாரண நிலைக்கு தன்னை மாற்றி எப்பொழுதும் போல முதல் பதினைந்து நிமிட வகுப்பை கலந்துரையாடலுக்குள் மூழ்க வைத்;தார்.

அன்று, கௌதம புத்தர் சித்தார்த்தனாய் இல்லறம் துறந்த உணர்வு பற்றிய வாதங்கள் சூடுபிடித்தன.

‘சித்தார்த்தன் புத்தராக மாறிய பின் அவருக்காகவே பரிசுத்த வாழ்வொன்றை யசோதரா ஏற்றுக் கொண்டிருந்தாள் ஆகவேதான் அவளது அத்தனை எண்ணக் குமுறலையும் போக்கிக் கொள்வதற்காய் தன் பாதத்தை ஸ்;பரிசித்து அழுதிடும் பெரும் வாய்ப்பை புத்தர் அவளுக்கு அளித்தார்’

தொடர்ச்சியாய் யசோதராவின் புனிதம் தொடர்பாக குருஜீ பேசிக்கொண்டேயிருந்தார். இடைக்கிடை மாயாவையும் அவதானித்தார்.

மாயா தன்னையறியாமல் கண்களை  மூடிக்கொண்டு யசோதராவின் உணர்ச்சி கொந்தளிப்புகளை தனதாக மாற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தாள்.

பிறந்த குழந்தையுடன் ஆசையாய் கணவனை எதிர்பார்த்திருந்த அல்லது கணவனின் அருகாமைக்கு தவித்திருந்தவளிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒருவன் வெளியேறி துறவு கொள்கிறான். தனக்காக வாழ்வை இடையில் துறந்த அற்புத பெண்ணென அவளை கொண்டாடுகிறான். அவளது மனக்குமுறல் தீரட்டுமென்பதற்காய் ஒரேயொரு தடவை அவனது பாதங்களை தொடுவதை வாய்ப்பாய் அளித்து பெண்ணுக்கு சரிசம உரிமை கொடுத்தாய் பாராட்டையும் பெறுகிறான்.

யசோதரா விரும்பிதான் கௌதமனை ஏற்றாளா… அல்லது புத்தன் எனும் உத்தமனுக்கு சக்தியாகும் புனிதம் உன்னிடம் மட்டுமே உண்டென்று நம்பவைத்ததால் அவள் அச்சூழ்நிலைக்கு தள்ளப் பட்டாளா…? ஆனால் யசோதராவிற்கு குற்றவுணர்ச்சி என்றொன்று இருந்திருக்க வாய்ப்பில்லையே…! நடுவில் நீலமேகம் என்ன பாவம் செய்தான்? அவனேன் ஏமாற்றபட வேண்டும்? அவனுக்கான பதிலை யார் தந்துவிட முடியும்? அதையும் விதியென்பதாய் கூறி தப்பித்துவிடுதல் நியாயம் தானா? 

அப்போது குருஜீ கூறினார்…

‘யசோதரா என்பவள் சக்தி. சக்தியும் சிவமும் என்றாவதே உலகம். ஆக பிறவிகள் தோறும் யசோதராவே புத்தனின் ஆத்மாவிற்கு துணையாக வேண்டும் என்ற வரத்தையும் பெற்றுக் கொள்கிறாள்’

மாயா கோபம் மேலோங்க சூழல் மறந்து அவரது பேச்சை இடைமறித்தாள்.

‘இல்லை… பிறவிகள் தோறும் சக்தியாக வேண்டுமென்ற வரத்தை யசோதரா விரும்பியேற்றிருக்க மாட்டாள். அவளது அனுமதியின்றி அந்த வரத்தை அளித்த கடவுள் பெரும் துரோகியாகவே இருக்க வேண்டும்’

 ‘புரியாமல் பேசாதே மாயா. கடவுள் எப்படி துரோகியாக முடியும்? அது அப்படிதான் ஆகவேண்டுமென்பது அவளது விதி’

‘அதுதான் விதியாக இருக்குமானால் அவளால் எப்படி காதல் வசப்பட்டிருக்க முடியும்? இல்லையேல் யாரோ கைகாட்டிய ஒருவனை மணந்து எப்படி இல்லறம் என்ற பெயரில் பெருந்துரோகம் ஒன்றை செய்ய முடியும்? நான் எதற்காக சம்பந்தமேயில்லாத நீலமேகத்திற்கு துரோகியாக வேண்டும்?’

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது புரியாமல் எல்லோரும் மாறி மாறி இருவரையும் பார்த்தார்கள். நீலமேகம் அதிர்ச்சியடைந்தவனாய் அமர்ந்திருந்தான்.

‘யசோதரா பயங்கரமாக ஏமாற்றப் பட்டிருக்கிறாள் குருஜீ. உண்மையறிந்து வெளியேற தைரியமற்ற ஒரு பெண்ணாய் அந்த யசோதரா வேண்டுமென்றால் இருந்திருக்கலாம் ஆனால் நான் மாயா’

மாயா இன்னும் சொன்னாள்.

‘என் அனுமதியின்றி எனக்கு விருப்பமற்ற வரத்தை அளிப்பவர் கடவுளாகவே இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்… பல கேள்விகளுக்கு அனைவர் மத்தியிலும் பதில் தர வேண்டியர்.

‘நிதானமிழந்து பேசுகிறாய்…மாயா’

தன் குரலுயர்த்தி பேசி அவளது தொடர்ச்சியான வாதாடலை நிறுத்த முயன்றார் குருஜீ.

‘இல்லை இப்பொழுதுதான் நிதானமாக பேசத் தொடங்கியிருக்கிறேன்… காலமெல்லாம் ஒருவனுக்கு துரோகியாவதை என்னால் ஏற்க முடியவில்லை. நீலமேகத்திற்கான பதிலை நீங்கள் மட்டுமே தரமுடியும். மேலும் ஒவ்வவொரு தியானத்திலும்…. ஓவ்வொரு புணர்ச்சியின் போதும் என் அனுமதி இல்லாமலேயே அகிலன் எனக்குள் வந்து போகிறான் என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளவும் வேண்டும்.’

முற்றிலும் சூழ்நிலை மறந்து கோபம் தெறிக்க சத்தமாக கத்தினார் அவர்.

‘இழிகுலத்து நாயே உன் புத்தியை காட்டி விட்டாய்… உன்னை சரிசமமாக மதித்து என் ஸ்பரிசத்தை பெற தகுதியாக்கினால் கண்ட நாயோடெல்லாம் புணர்கிறேன் என்று என்னிடமே சொல்கிறாயா?

வகுப்பில் இருந்த எல்லோரும் புரிந்தும்  புரியாமலுமாய் பார்;த்துக் கொண்டிருந்தார்கள். குருவின் இந்த புதிய முகம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. மாயாவும் அதியுச்ச கோப நிலையிலேயே பேசினாள்.

‘தகுதி என்பது வெறும் உயர்குல பிறப்பால் மட்டுமே அமைவதாய் எண்ணிக் கொண்டிருக்கும் மகா குருவே  நீங்கள் எதிர்பார்த்ததை போலவே யசோதராவின் கருவறை மிகப்புனிதமானதுதான் அவளுக்கும் ஒரு ராகுலன் பிறக்கத்தான் போகிறான் ஆனால் அவன் நிச்சயமாய் புத்தனது சிசுவாய் இருக்க மாட்டான்’

மாயா வகுப்பிலிருந்து வேகமாக வெளியேறினாள்.

நன்றி - சிறுகதை மஞ்சரி

No comments:

Post a Comment