Enter your keyword

Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

Monday, August 29, 2022

நடத்தை மாற்றம் - பிரமிளா பிரதீபன்

By On August 29, 2022

ஒரு உயிரியின் நடத்தையில் ஏற்படும் சார்பு நிலையிலான நிரந்தர நடத்தை மாற்றத்தைத்தான் கல்வியின் சிறந்த பெறுபேறென எதிர்பார்க்கிறோமா?

கல்வி பற்றியதான நடைமுறை புரிதலும் அறிவுறுத்தல்களும் கூட அதையேதான் வலியுறுத்துகிறதா?

பொதுவாக அறிவைப் பெறுதலையும் புதிய நடத்தைகளை ஆற்றுவதற்கான ஆற்றலை விருத்தி செய்தலையும் கல்வி என்பதாக கூறுகின்றனர். நடத்தை மாற்றப்படும் ஒழுங்குப்படுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் செயன்முறையை கல்வி என்பதாக சிலர் வரையறை செய்கின்றனர்.  ஆற்றலை அல்லது நிபுணத்துவத்தை தேடும் செயன்முறையே கல்வி என்பதாக  (Knows 1998) கூறுகிறார். அவதானிக்கக்கூடிய வெளிவாரியான நடத்தை மாற்றமே கல்வியென்பதாய் ( Keith Rutledge  2003) கூறுகிறார்.

ஆனால் சமகால கல்வி நடைமுறையில், எதிர்பார்க்கப்படும் இவ்வடைவுமட்டங்கள் எய்தப்பெறுகின்றனவா? அல்லது அதற்குரியதான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சாத்தியப்படுகின்றனவா என சிந்தித்தால் அனேகமாக அறிவைப்பெறுதலை நோக்கியதான வேகமான முன்னெடுப்புகளே வரவேற்கப்படுகின்றன எனலாம். அதிகமாக  போட்டி மனப்பான்மையை விஸ்தரிக்கும் எதிர்மறையான நடத்தை விளைவுகளையே மாணவர்கள் தம்மத்தியில் வளர்த்துக் கொள்வதை வெகுவாக அவதானிக்க முடிகிறது.

கோட்பாட்டுப் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் இயங்குவடிவமாக செயற்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டமானது நடத்தை மாற்றத்தினை கருத்திற்கொண்டே தயாரிக்கப் பட்டிருக்கிறது. மேலும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல் அனுபவங்களை ஒழுங்கமைத்தல் முதலியவையும்கூட கலைத்திட்டத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்களின் உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் கருத்திலே கொண்டுதான் கலைத்திட்டமானது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஓரளவில் உளவியல் தழுவிய நிலையிலேயே கல்விக்கலைத்திட்டமானது வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூட எண்ணிக்கொள்ள  முடிகிறது. 

இதன்படி கலைத்திட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எமது சமகால கல்வி முறைமையுள் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சி மட்டங்கள் அடையப்பெற வேண்டும் என்பதே கற்றல் கற்பித்தல் நகர்வுகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கலைத்திட்ட மாற்றங்களும் இவ்வடைவுமட்ட வீழ்ச்சியின் அவதானிப்பின் பேரிலேயே நடைபெற்றவண்ணம் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மிகத்தேர்ச்சிபெற்ற கல்வியியலாளர்களால் கலைத்திட்ட மாற்றங்கள் திட்டமிடப்பட்டும், நடைமுறைப் படுத்தப்பட்டும் அறிவுறுத்தல்களும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றும்கூட எதிர்பார்த்த பிரதிபலன்களை ஏன் பெறமுடியவில்லையென்பது  சிந்திக்க வேண்டிய விடயமாயிருக்கிறது. எதிர்பார்த்த விடயமென இங்கே நான் சுட்டியது சமூகத்திற்கு பொருத்தமான நடத்தை மாற்றத்தை மாணவர்களிடத்தே ஏற்படுத்த முடியாமையையே.

பொதுவாக பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் மாணாக்கரின் மனப்பாங்கானது பின்வருமாறு அமைந்திருப்பதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

  • தெரிவு செய்யப்பட்ட தொழில் வகைகளை மாத்திரம் விரும்புதல் (white color jobs)
  • பிரச்சினை தீர்க்கும் ஆற்றலில் தளம்பல் நிலையிருத்தல்
  • மென்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் பற்றிய ஆர்வமின்மை காணப்படல்
  • போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்
  • நிலையான, உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனின்மை
  • உடனடி வளர்ச்சியையும் மாற்றங்களையும் எதிர்பார்த்து மனச்சோர்வடைதல்
  • தற்கொலை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளல்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோகம் கொண்டிருத்தல்

மேற்கூறியது போன்ற மனப்பாங்குகளுடன் சமூகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களால் தொடர்ச்சியான சமூகச்சவால்களை எதிர்கொள்ள முடியாதென்பதும் ஒரு கட்டத்திற்குமேல் சோர்விற்குள்ளாகி மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவர் என்பதுவும் தெளிவு. எனினும் இதனையொத்த மனப்பாங்குகளையுடைய மாணவர்களையே எமது கல்வி முறைமை அதிகமாக உருவாக்குகிறது எனும் பட்சத்திலேயே இதற்கான சரியான மாற்றுவழி அல்லது செய்தேயாகவேண்டிய திட்டமிடல் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாயிருக்கிறோம்.

பொதுவாக கலைத்திட்டத்தினூடான அடைவுமட்டங்கள் தொடர்பான அறிவு ஒரு படிமுறையினூடாகவே இறுதியில் ஆசிரியர்களை வந்தடைகிற போதிலும் மாணவர்களின் அடைவு மட்டத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் மாத்திரமே. எனவே கற்பித்தலினூடாக மாணவனது நடத்தை மாற்றம் வலியுறுத்தப்பட வேண்டுமெனின் ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடவேளையின் போது மனப்பாங்கு விருத்தி தொடர்பான பங்களிப்பையும் வழங்குகிறோமா என்பதுபற்றி உறுதி செய்துகொள்ளுதல் அவசியமாகும்.

மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் பரீட்சைமைய கல்விமுறையை இறுகப்பற்றியர்களாய் அதற்கான அத்தியாவசியத்தை நிரப்பிவிட வேண்டுனெவே அனேகமாக முனைகின்றனர். அறிவு, திறன் மனப்பாங்கு ஆகிய மூன்று கூறுகளது விருத்தியினூடாக முயற்சித்தாலேயன்றி ஒரு மாணவனது நடத்தை மாற்றத்தை உறுதியாக மாற்றிவிடல் சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் கருத்திற் கொள்ள மறுக்கிறார்கள். (வெறுமனே அறிவை மட்டும் குறிக்கோளாக கொள்ளுமொரு பிள்ளை பாடசாலை கல்வியை நாடவேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் சமவயது குழுவினருடன் இயங்க வேண்டிய தேவையும் இராது.) நடத்தை மாற்றமே கல்வியின் எல்லையென கருதும் போது மாத்திரமே அறிவுடன் திறன்களும் மனப்பாங்கும் விருத்தியடைய வேண்டியதன் அவசியம் பற்றி ஆசிரியர்கள் சிந்தித்து செயலாற்ற தலைப்படுவார்கள்.

கல்வியின் நான்கு தூண்கள்

21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி ஆராய்ந்த சர்வதேச ஆணைகுழுவின் அறிக்கையில் (Delors Report--1996) மனித குலம், தனியாட்கள், நாடுகள் என்பவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான கல்வியின் பங்கு பற்றி விரிவாக கூறப்பட்டது. இவ்வறிக்கையானது மனித வளர்ச்சிக்குத் தேவையானவை அனைத்தும் கல்வியில் பொதிந்து கிடப்பதாக கூறியது. அத்துடன் நான்கு தூண்கள் அடிப்படையில் கல்வி பற்றிய தொலைநோக்கொன்றையும் இவ்வறிக்கை முன்மொழிந்தது. அவையாவன.

1. அறிவை பெறும் வகையில் கற்றல்  (Learning to know)

பரந்த பொது அறிவு, சில பாடங்களில் ஆழமான அறிவு, பிற்கால வாழவில் சுயமாக கற்க உதவும் திறன்கள் பற்றிய அறிவு என்பவற்றை இது உள்ளடக்கும்.

2. செய்வதற்கு கற்றல் (Learning to do)

தொழில்த்திறன்கள், வெவ்வேறு நிலைமைகளில் பணி புரியவும் குழுக்களில் சேர்ந்து வேலை செய்யவும் தேவையான பரந்த தகைமைகள் என்பவற்றை இது கருதும். முறையான பாடநெறியினூடாகவும் சமூக வேலை அனுபவங்களினூடாகவும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

3.வாழக்கற்றல் (Learning to be)

ஒருவர் சில அடிப்படை விழுமியங்களைக்கொண்டு தனது ஆளுமையை விருத்தி செய்யும் ஆற்றல் கூடிய சுயாதீனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுதல் பற்றியது. அதாவது கல்வியானது ஒருவரின் நினைவாற்றல், காரணங்காணுதல், உடல் ஆற்றல் தொடர்பான திறன்கள் என்பவற்றை கருத்திற் கொள்ளல் வேண்டும்.

4. இணைந்துவாழக் கற்றல் (Learning to live together)

மற்றவர்களுடன் சேர்ந்து வாழக்கற்றல் எனும் நான்காவது நோக்கு அமைதியையும் மற்றவர்களையும் மதித்தல், பிறரை புரிந்துக்கொள்ளுதல், தனியாட்களும் சமூகங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு வரவேற்கும் மனப்பாங்கை குறிக்கின்றது.

சர்வதேச ரீதியாக பயன்படுததக்கூடிய ‘கல்வியின் நான்கு தூண்கள்’ பற்றிய இப்பரிந்துரையை அடியொற்றியே இலங்கையில் கல்வியின் இலக்குகள் வகுக்கப்பட்டன. தொடர்பாடல் சமூக உயிரியல், பௌதீக சுற்றாடல், அறவொழுக்கம், சமயம், ஓய்வு நேரத்தை பயன்படுத்தல், கற்பதற்கான திறன்களை கற்றல் என்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பான தேர்ச்சிகளை மேம்படுத்தல் இவ்விலக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பாடசாலை கல்விக்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்ட புதிய கல்வியியல் இலக்குகளில் படைப்பாற்றலுக்கான திறன்கள், துருவி ஆராயும் திறன்கள், அணியாக சேர்ந்து பணியாற்றும் திறன்கள், அறிவை புதுப்பித்துக் கொள்ளவும் அதனை பரிசீலனை செய்யவும் தேவையான திறன்கள் என்பனவும் அடங்குகின்றன. 

இத்தகைய நவீன இலக்குகள் அடையப்படவேண்டி எடுக்கப்படும் முயற்சிகள் ஒருவனது நடத்தைமாற்றத்தை உறுதியாக கணிக்கும் அளவுகளாக இருப்பதுடன் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றினதும் விருத்தி தொடர்பாகவும் தெளிவினை எற்படுத்தும். எனினும் இலங்கையில் உள்ள பாடசாலை நிருவாகங்களும் ஆசிரியர்களின் மனநிலையும் அத்தகைய இலக்குகளை அடைய போதுமானதாக இருக்கிறதா என்றால்… சந்தேகமே.

குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழ்நிலையானது, மாணவர்கள் மத்தியில் மாத்திரமின்றி ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய மனஅழுத்தத்தினையும் எதிர்மறையான நடத்தை மாற்றங்களையும் தோற்றுவித்திருக்கிறது. அத்துடன் சூழ்நிலையால் தடைப்பட்ட கலைத்திட்ட சுமைகளும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைக்கோலங்களும் கூட கற்றல்கற்பித்தல் செயற்பாட்டின் போக்கினை செயற்கைத்தன்மையுடையதாக்கி பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் விதத்தில் மாற்றமடைய வைத்திருக்கிறது. இத்தகைய திடீர் மாற்றங்களானது கல்வியின் குறிக்கோள்களை திசைத்திருப்பி மீண்டும் பரீட்சைமையக் கல்வியின் நடைமுறையினை தோற்றுவிக்கும் ஆபத்தினை நோக்கி நகர்கின்றமையை அவதானிக்க முடிகிறது. 

எவ்வாறெனினும் பிள்ளையின் நடத்தையை சமூகத்திற்கு ஏற்றாற் போல மாற்றவியலாத கற்றல் நடைமுறைகளின் மீது  ஆசிரியர்களோ மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை உருவாக வேண்டும்.

எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு

(குறள் 426)

கல்வியினூடாக மனிதன் சமூக இயல்பினனாக வேண்டும் என்பதையே இக்குறள் வலியுறுத்துகிறது. எனில் அவனது நடத்தை மாற்றமே இங்கு பிரதானமாக கவனிக்கப்படுகிறது.

Sunday, April 3, 2022

குளம்பொலி – பிரமிளா பிரதீபன்

By On April 03, 2022

 பிரார்த்தனைக்கிடையில் வேறேதோவெல்லாம் தோன்றி மறைந்தது.

தான் கன்னியஸ்த்திரியாகிய கடந்த பதினொரு வருட காலப்பகுதியில் இதுவரை செய்யத் துணியாத ஒன்றை செய்யப் போகிறோம் என்பது கூட ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே …… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே…’

அடுத்த வரியை மறந்துவிட்டவள் போல, ஆன்யா ஒரே வரியை மீட்டிக் கொண்டிருந்தாள். திடீரென பாதியில் எழுந்து வெளியேறினாள்.

மெல்லிய சாம்பல் வண்ண பூசலுக்குள் உள்நுழைவதாய் பொழுது மாறத் தொடங்கியிருந்தது.

திரும்பும் திசையெங்கிலும் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்டிருந்த அளவிற்கு மிஞ்சிய தூய்மையும். பெருத்த நிஷப்தமும், புனிதமான அந்த மடத்தை முழுவதுமாய் நிறைத்துக்கொண்டிருந்தன. வேகமாக கடந்து சமயலறைப்பக்கத்தை அண்மித்தாள்.

நீண்ட சாப்பாட்டு மேசையை தாண்டும் போது, காயவிடப்பட்ட கன்னியாஸ்த்திரிகள் சிலரின் ஆடைகள் கொடியில் தொங்கின. அவ்வாடைகளின் இடைக்கிடையே உள்ளாடைகளும் பாதி தெரிந்த நிலையில் மறைக்கப்பட்டிருந்தன.

பதட்டத்துடன் நடையைத் தொடர்ந்த ஆன்யா, சிறுநொடி நிதானித்து திரும்பிப் பார்த்தாள். இளநீல வண்ணத்திலான மார்பக அங்கியினூடாக காற்றின் மெல்லிய அசைவை அனுமானிக்க முடிந்தது.

தன் வலது கையின் பெருவிரல் தவிர்த்த ஏனைய விரல்கள் நான்கையும் உள்ளங்கைப் பொட்டிற்கிடையே அமத்திப்பிடித்தவாறே, வேகமாக எட்டி தன்னறைக்குள் நுழைந்தாள். பட்டென கதவை தாழிட்டுக் கொண்டாள்.

இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துப் பார்த்தாள் போதாதென்று தோன்றியது. மேசையிலிருந்த ஈரடிசுவொன்றால் கண்களையும் கன்னங்களையும் மீண்டுமொருமுறை ஒற்றியெடுத்து, அவசரமான முறையில் கைகளுக்குள் சுருட்டிக் கசக்கி அந்த கடதாசியை குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தாள்.

ஏற்கனவே வீசப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுக்குவியலும் ப்ளாஸ்டர்களும் நிறைந்திருக்கும் குப்பைகூடையை பார்க்கச் சகிக்காமல், தள்ளி அதனை மேசைக்கடியில் ஒளித்தாள்.

நிமிடநேரத்தையும் தாமதிக்க அவள் விரும்பவில்லை. பாதியளவு தன்னுருவம் காட்டும் கண்ணாடிக்கு முன்னே நின்றுக்கொண்டாள். முகத்தில் வழமைக்கு மாறான கருமையும் சோர்வும் மிகுந்து வழிந்திருப்பதாய் ப்பட்டது. எப்போதுமாய் சிவந்து தென்படும் அழகான அந்த இதழ்களில் ஆங்காங்கே வறட்சியான வெடிப்புகள் தோன்றியிருந்தன.

பரபரவென ஆடையை களையத்தொடங்கி இடுப்பளவில் அதனை நிறுத்திப்பிடித்தபடி வெட்டியகற்றப்பட்ட தன் ஒற்றை மார்பைத் தேடினாள். ஒட்டி மூடிய ப்ளாஸ்டரை அகற்றிப் பார்க்குமளவிற்கான தைரியம் நிச்சயமாய் அவளிடத்தில் இருக்கவில்லை.

திடீரென்றேதான் இப்படி ஒரு ஆசையும் கூடத் தோன்றியது. பார்க்க விரும்பாத பாதியளவு உடலை கண்ணாடிபிம்பத்திலிருந்து மறைத்தபடி அடுத்தபாதியின் வனப்பை தானே இரசிக்க விரும்பினாள்.

ஐவிரல்களுக்குள் மூடினாற்போல் தனதந்த மார்பை பொத்திப்பிடித்தாள். மெதுவாக மேடேறியிருக்கும் தசைப்பகுதியை வருடிக்கொடுத்தாள். உடற்தசையை மிஞ்சிய பிரிதொரு மென்மை மார்பகத் தசைக்குள் நிரம்பியிருப்பதாயிருந்தது. பிம்பத்தினின்றும் பார்வையை அகற்றி குனிந்தொருமுறை தடவிக்கொண்டாள்.

‘பிதாவே நான் என்ன செய்கிறேன். ஏன் என் மனவலிமையை குறைத்துக்கொண்டிருக்கிறாய்? எந்த உபயோகமுமேயற்ற ஒரு தசைதுண்டத்திற்காக ஏங்கித்தவிப்பது நான்தானா? எதை நோக்கி சிந்திக்கிக்கிறேன்? நானா என் பிம்பத்தை இரசிக்கத் தவிக்கிறேன். இல்லாமல் போன என் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்?’

இரு கைகளாலும் முகத்தைப் பொத்தி விசும்பியழத் தொடங்கினாள். அதே நிலையில் முழந்தாளிட்டமர்ந்து விசும்பலை நிறுத்தாமல் வேகமாக ஜெபித்தாள்.

‘யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…’

ஒரேயொரு தடவை கதவு தட்டப்பட்ட சப்தத்தால் வேகமான அந்த ஜபம் நிறுத்தப்பபட்டது. அநேகமாக ரோஜினாவின் செய்திகொண்டுவரும் செய்கையது.

சிஸ்டர் ஆன்யா ஆடைகளை சீர்படுத்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.

‘சிஸ்டர் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’

அனுமதி கேட்காமலேயே அறைக்குள் நுழைந்து, அச்சிறிய பொதியை மேசை மீது வைத்தபடி ஆன்யாவை பார்த்தாள் ரோஜினா. அப்பார்வையில் தேவைக்கு மிஞ்சிய பரிதாபம் கசிந்திருந்தது. வேறெதையும் கேட்டு விடாமல் உடனடியாகவே அறையிலிருந்தும் வெளியேறினாள்.

‘என்னவாயிருக்கும்? யார் அனுப்பியிருப்பார்கள்?’

ஊகிக்கும் மனநிலையா இது. வழமை போல பாதர் பரெட்ரிக்கிடம் இருந்து புத்தகங்கள்…? சிஸ்டர் சாயனாவிடமிருந்து பழங்கள்…? அக்காவிடமிருந்து ஏதேனுமா? பிரித்து பார்க்கத் தோன்றாமல் அப்பொதியினை உற்று அவதானித்தவாறு அமர்ந்திருந்தாள்.

கண்களால் துளைத்தப்பொதியினை திறக்க முனைந்தாள். பொதியின் மேற்பகுதி அசைந்து கொடுத்தது.

மடிக்கப்பட்ட அதே நேர்த்தியுடன் பொதிக்கடதாசிகள் ஒவ்வொன்றாக தம்மை விடுவிக்கத் தொடங்கிய மறுகணமே அடைபட்ட சுவாசத்தை வெளியேற்றத்தவிக்கும் சில பட்டாம்பூச்சிகள் பெட்டியை துளைத்துக்கொண்டு வேகமாக வெளியேறின. எதிர்பாரா அந்த திடீர் வெளியேறலால் விசிறப்பட்ட துளி வர்ணங்கள் அவ்வறையின் வெண்சுவற்றில் ஆங்காங்கே படிந்து கொண்டன.

அதுவொரு அதிசயப் பொதியென்பதில் சந்தேகமில்லைதான். ஆன்யா குனிந்து ஒவ்வவொன்றாய் வெளியில் எடுத்தாள்.

மடித்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையொன்று. அதற்கு ஒத்துப்போகுமாப் போல் கற்கள் பதித்த ஒரு சோடி வளையல். சிறிய அட்டிகை. இன்னும் இரு காதணிகள். கூடவே கூர் வடிவ அடியுடைய பாதணிகள்.

கூரடியுடைய பாதணிகள் எழுப்பும் புதுவிதமான நடையோசையில் எப்போதுமாய் ஒரு மயக்கம் இருப்பதுண்டு. குதிரைக் குளம்பின் தாளம் தரும் கம்பீரத்தையொத்த நடையை தனக்குரியதாக்கும் எந்த பெண்ணுமே, மிகுந்த திமிரையும்; மிதப்பான பார்வை விசிறலையும் வலிந்துப் பெற்று தனக்குத்தானே அதனைப் பொத்தி மறைத்துக்கொள்கிறாள்.

ஆன்யா சிரித்துக் கொண்டாள். இன்னும் துழாவிப்பார்த்தாள்.

ராட்சத மௌனத்தெறிப்புடன் அழகான பெண்பொம்மையொன்று வெளிவந்தது.

நடுங்கும் விரல்களால் அதனை தொட்டுப்பார்த்தாள். விபரியக்கவியலா வைராக்கிய ரேகைகளை முகமெங்குமாய் அது படர விட்டிருந்தது. மிக இறுக்கமான உணர்வுடைய பெண்ணாக அது தன்னை வெளிப்படுத்த விரும்புவதாய் தோன்றியது.

ஆன்யா அப்பொம்மையின் வனப்பை அதிகரிக்க விரும்பினாள். அதன் உதடுகளை அசைத்திழுத்து சிரிக்கப் பண்ணினாள். கண்களுக்குள் ஊதி உயிர் கொடுக்க எத்தனித்தாள்.

‘புற்றுநோய்காரியா நீ? அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டிருக்கிறாயே’?’ கன்னங்களை இலேசாக கிள்ளி வைத்தாள்.

அதுவொன்றும் அத்தனை சிரமாக இருக்கவில்லை. அந்த குட்டி பெண்பொம்மையை இயல்பான அழகுடன் மாற்றி வைக்க ஆன்யாவால் முடிந்தது. பொம்மையின் மொத்த உருவத்தையும் பார்வைக்குள் ஏற்றி இரசித்தாள்.

இயல்பை மாற்றிக் கொள்ளுதலை யாரால்தான் ஏற்க முடியும்!

எதிர்பாரா சீற்றத்துடன் யன்னல்வழி நுழைந்த திடீர் காற்று, அப்பொம்மையை அவளுடைய கைகளிலிருந்து தட்டி கீழே வீழ்த்தியது. மேலும் கோரமாக அறையை ஆட்கொண்டு ஆடவும் தொடங்கியது.

ஆன்யா யன்னல் திரைச்சீலைகளை வெறித்துப் பார்த்தாள். பொம்மையை எடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அதன் பொன்நிற முடியை கோதி விட்டாள். பொம்மையின் கைகளை அழுத்திப்பிடித்து ‘பயப்படாதே…. பயப்படாதே….’ என்றாள்.

காரணமின்றி மனது அச்சப்பட்டது.

சட்டென ஏதோ தோன்றிட யன்னலை அகலத்திறந்து எட்டிப் பார்த்தாள். மொத்த கருமையும் உள்ளே வரும் ஆவேசத்துடன் மிதந்து கொண்டிருந்தது. இயலுமளவிற்காய் எக்கிப்பார்த்து யாருமில்லையென உறுதி செய்துக்கொண்டாள். கைகளை மேலே உயர்த்தி பெரும் விசையுடன் உந்தி, மதிலுக்கு அப்பால் போய் விழும்படி கட்டளையிட்டு, அப்பொம்மையை தூரமாய் வீசியெறிந்தாள்.

அத்தனை ஆசுவாசம் அவளுக்கு.

இனியெதுவும் இருக்க போவதில்லையென்று எண்ணிக்கொண்டே பெட்டியை தலைகீழாய் திருப்பித் தட்டினாள். பெட்டியின் இடுக்கில் மறைந்திருந்த மின்மினிப் பூச்சொன்று விரைந்தோடி வெளிவந்தது. அது ஒளிர்வித்த மென்பிரகாசத்தை கைகளுக்குள் ஏந்திக்கொள்ள வேண்டி, அதன் பின்னாலேயே ஆன்யா ஓடத்தொடங்கினாள்.

மீண்டும் ஒரேயொரு தடவை தட்டப்படும் கதவின் சப்தம்.

கதவு திறந்தேயிருந்ததால். ரோஜினா உள்ளே வந்திருந்தாள்.

‘இன்னுமே தெறந்து பாக்கலயா சிஸ்டர்?’

‘பாக்கலயா…? இன்னுமா…?’

ஆன்யா மேசையை பார்த்தாள். வைத்த அதே இடத்தில் அதே நிலையில் அப்பொதியிருந்தது.

சுற்றிலும் ஒருமுறை அறையையும் ரோஜினாவையும் பார்த்துக்கொண்டாள். சுவற்றில் ஒட்டிக்கொண்ட வர்ணத்துளிகளை தேடினாள். மெதுவாக தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை உள்ளங்கைக்குள் அப்பிக்கொண்டாள்.

வெளியேற்றப்படா ஏதோ ஒரு இரகசியம் உடைந்து அறையெங்கும் வியாபித்திருப்பதாக மனது நம்பியது.

‘பாதர் ப்ரெட்ரிக் வந்திருக்கிறார். உங்களுக்கு தொந்தரவில்லன்னா சந்திக்கலாம்னு சொல்ல சொன்னார்’

‘இதோ ரெண்டு நிமிஷத்துல வாறேன்னு சொல்லு’ ஆன்யா பரபரப்புடன் ஆயத்தமானாள்.

தேவையேயில்லாமல் மனது வெறுமையடைந்திருப்பதை மாற்றிட, புன்னகையை வலிந்தேற்றிக் கொண்டவளாய் மெல்ல நடந்து வரவேற்பறையை அடைந்தாள்.

முன்வாசல் வழி பூந்தோட்ட கதிரையொன்றில் பாதர் ப்ரெட்ரிக் அமர்ந்திருந்தார். வராண்டாவின் மஞ்சள் நிற மின்குமிழின் பிரகாசத்தை ஏந்தி குரோட்டன் செடிகள் தத்தளித்துக் கொண்டிருந்தன.

‘குட் ஈவினிங் பாதர்’

பாதர் ப்ரெட்ரிக் முக மலர்ச்சியுடன் ஆன்யாவை நோக்கி ‘சுகமா இருக்கியா ஆன்யா?’ என்றார்.

அவள் தலையாட்டிக்கொண்டாள். வார்த்தைகள் வர மறுத்தன. தன்னில் ஏற்பட்டிருக்கும் ஏதோவெல்லாமான மாற்றங்களை தன் தந்தையை போன்றிருக்கும் பாதர் ப்ரெட்ரிக்கிடம் ஒப்பிக்க வேண்டுமென்பதை மட்டுமே ஆன்யா யோசித்தாள்.

‘ஆன்யா, வலிமை பெறு. துணிவு கொள். அஞ்சாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். உன்னை கைவிடவும் மாட்டார்.’

பாதர் பிரார்த்தனையை போதனையாக சொல்லத் தொடங்கியிருந்தார்.

‘பாதர்… நான் எங்கேயாவது போகணும் பாதர்’

அவரது பதில்பார்வையின் ஆச்சரியம் ஆன்யாவிற்குப் புரிந்தது.

‘நீங்கதான் உதவி செய்யணும் பாதர்?’

‘எங்கையாவதுன்னா?’

‘எந்த அடையாளமும் இல்லாம…. யாரையுமே தெரியாத…. நான் நானா இருக்குற ஒரு இடத்துக்கு’

ஆன்யா…! என்ன பேசுற?’

‘என் மனநிலைய புரிஞ்சிக்க உங்களால மட்டுமே இப்போதைக்கு முடியும்னு தோணுது பாதர்’

‘ஆண்டவர் தன் வார்த்தைகளை அனுப்பி உன்னை குணப்படுத்துவார். நீ பதட்டமாகாமல் அமைதி கொள்’

‘ஒரே ஒரு இழப்பு பல விஷயத்த அடையணுன்னு நினைக்க வைக்குது பாதர்’

‘ஆன்யா’

பாதர் அதட்டலாக சத்தமிட்டார்.

‘ட்ரை டூ அண்டஸ்டேண்ட் மீ பாதர்’

ஆன்யா சிறு குழந்தையாய் தேம்பியழுவதை கண்டதும் பாதர் கண்கள் மூடி அடுத்த பிரார்த்தனையை ஆரம்பித்திருந்தார்.

‘Help me not to fear the future but to boldly trust that you are in control when my emotions plunge me down, and when I am in despair ….….’

ஆன்யா தானும் அப்பிரார்த்தனையில் சேர்ந்துக் கொண்டவளாய் தொடர்ந்தாள்.

‘‘And times when I can’t talk and don’t know what to say, help me to “Be still, and know that you are God” Be my comforter, my healer and bring me peace. In Jesus’ name, Amen..’

பாதர் ப்ரெட்ரிக் ஆன்யாவின் நெற்றியில் சிலுவை இட்டார். இரண்டு தினங்களுக்குப்பின் வருவதாய் கூறி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

தான் எதனை யோசிக்கவிழைகிறோமென ஆன்யாவாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை மீறிய எண்ணங்களாகவும். பல நாட்கள் தேங்கி மேலெழுந்த ஏதோ ஒரு உந்தலாகவும்….

முதலாம் வாக்குத்தத்தத்தின் போதான அந்த உறுதி எங்கே போனது? அல்லது நித்திய வாக்குறுதியின் பின் இறுகப்பற்றியிருந்த ஆண்டவரின் பாதங்களை நான் தளர விட்டு விட்டேனா? வெறுமனே ஒரு நோய் தந்த மாற்றம் தான் இதுவென நம்பிட முடியவில்லை. ஏதோவொன்று… அதையும் தாண்டிய வேறேதோவொன்று… புறவுலகை நோக்கி பயணிக்க எத்தனிக்கும் அளவிற்கு அத்தனை முதிர்ச்சியற்று போய்விட்டேனா என்ன?

இல்லையெனில் ஏன் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்? எங்கே பயணிக்க திட்டமிடுகிறேன்?

ஆன்யா தலையை பிய்த்துக் கொண்டாள். அவளது மூச்சின் சீரான சப்தம் வெளியே கேட்பதாய் இருந்தது. இரவு பிரார்த்தனைக்கான மணியோசையும் ஒலிக்கத் தொடங்கியது.

2

புதிதாய் எடுக்கும் மாத்திரைகளின் வீரியம், தோற்றத்தை புரட்டிப் போட ஆரம்பித்திருந்தது. உலர்ந்த தோலின் வெடிப்பும், செதிலாய் உரியும் வெண்நிறமான கணமற்ற ஏதோ ஒன்றுமாய் அதைப்பற்றி யோசிக்க மாட்டாதவளாய் நாட்களை வேகமாக கடத்த பிரயத்தனித்தாள் ஆன்யா.

முடி உதிர்வின் பங்கு இரட்டிப்பின் அளவைத்தாண்டியிருந்தது. ஞாபக மறதியின் எல்லையும் விஸ்தாரமாகியிருந்தது. முதல்நாள் சம்பவங்களைத்தானும் துல்லியமாக மீட்ட முடியா மயக்க நிலையை அவள் வரவேற்கவே செய்தாள். எப்போதுமாய் படுத்தேயிருக்க விரும்பினாள். விழிப்பு நிலையிலும் கண்கள் மூடி வெறுமனே கிடந்தாள்.

இரத்தம், சலம், மாத்திரைகள், தைலம் என்ற பக்கத்தை மறுத்து மறுபக்கம் பார்க்கையில் உதிர்ந்த கேசம் நெளிந்து பறப்பதாய் இருக்கும்.

அவ்வப்போதான பிரார்த்தனைகள் மட்டுமே ஆறுதலைத் தந்தன.

பார்வையாளர்களை அனுமதிக்காதிருக்க வேண்டினாள். ரோஜினாவிடம் சொல்லி அறையின் முகம்பார்க்கும் கண்ணாடியை அப்புறப் படுத்தினாள்.

ஆன்யாவிற்குத் தெரியும். எல்லாமே மாறக் கூடியதென்று… நான்கோ எட்டோ எண்ணிக்கை முக்கியமில்லை. சில வாரப்பகுதிக்குள் இழந்ததெல்லாம் மீண்டும் பெறப்படுமென்பது வைத்தியரின் கணிப்பு. வெட்டியகற்றப்பட்ட ஒற்றை மார்பகத்தை தவிர… ஆமாம் மார்பகத்தை தவிரதான்.

பார்க்க பிடிக்காத அருவருப்பை கண்கள் மூடி தவிர்த்தாள். புதிய உலகொன்றை சிருஷ்டிக்கவே ஆன்யா விரும்பினாள்.

கற்பனையில் சில பிராணிகளை வளர்த்தாள். அவற்றின் பாஷைகளை கற்றுக்கொண்டாள். மீன்களை கடலுக்கடியில் மட்டுமே தேடினாள். பறவைகளை காட்டுக்குள்ளும் பாம்புகளை புற்றுக்குள்ளுமாய் அதனதன் வாழ்விடத்திலேயே அவை இயல்பு மாறாமல் தம்மை வெளிப்படுத்துவதை கண்டு இரகசியமாய் களிப்புற்றாள்.

‘பிதாவே’ என பெருங்குரலெடுதது அவ்வப்போது விளித்தாள். சமயங்களில் மரணத்தை விட கொடுமையான இழப்பு மனநிலையை தாங்கமாட்டாமல் பிதற்றுவாள். தனிமையை மட்டுமே விரும்புவதாய் காட்டிக்கொண்டாள். தொடர்ச்சியாக ஒளிந்து மறைந்து கிடந்திடும் நாட்களை வெறுத்து பிரார்த்தனைகளை மிகக்கெட்டியாக பிடித்தபடி தன்னை திடப்படுத்துவாள்.

இமைகளை திறவாமல் நீண்ட நேர இடைவெளியெடுத்து சிந்திப்பதில் நிறைந்த ஆசுவாசம் கிடைப்பதாயிருந்தது. இருளும் ஒளியும் மாறி மாறி வந்து போனதையும், இரவுகள் மட்டும் நீண்டு கிடந்து அவஸ்த்திப்பதையும் அவள் யாரிடமும் சொல்லாதிருந்தாள். திடீரென எப்போதாவது ‘ஆன்யா எங்கே?’ என்று தேடுவாள்.

பிறந்து தொலைத்தலால்  மட்டும் என்னவாகிவிடப் போகிறது ?

பெண்ணாய்த் தன்னை உணர்தலில் உள்ள திருப்திக்கு ஈடேயில்லையென்பதை நினைக்கும் போதில் மட்டுமே அவளது புலன்களணைத்தும் புத்துணர்வால் நிரம்புவதாய் இருக்கும். அடிவயிற்றில் சில்லுணர்வை படரவிட்ட இதமும் சிலிர்ப்பும் தோன்றி மறையும். கண்கள் திறவாமலேயே சிரித்துக் கொள்வாள். தன்னை புறத்தோற்றத்தில் பெண்ணென அடையாளப்படுத்தும் மிஞ்சிய மார்பகத்தை வாஞ்சையுடன் பற்றுவாள்.

3

பிரக்ஞையற்ற வெற்றுப் பொழுதுகளாய் பிணியின் மீதேறி நடந்த நாட்களை அருவருப்பான கனவென ஒதுக்கியிருந்தாள் ஆன்யா.

கொஞ்சமாக விருந்தினர்களை அனுமதிக்கவும், சிரித்து பேசவும், அவ்வப்போது உலாவித் திரியவுமாய் தொடங்கியிருந்த ஒரு மாலை பொழுதில் கபில நிற பூனையொன்று தானே தன்னுடலை ஸ்பரிசித்து நெளிப்பதை கண்டதும் பிரிக்கப்படாத தனது பரிசுப்பொதி நினைவிற்கு வந்திருந்தது.

பூனைக்கும் அப்பொதிக்குமான தொடர்பு எதுவுமே இல்லையென்று தெரிந்தாலும் ஏன் அப்படி நினைக்கத் தோன்றியதென யோசித்தவாறே அறைக்குள் சென்று அப்பொதியை தேடியெடுத்தாள்.

சிஸ்டர் சாயனாவிடமிருந்து வந்திருந்தது.

உள்ளிருக்கும் பொருள் பற்றிய எதுவித எதிர்பார்ப்புமற்று பரபரவென 

மேற்கடதாசியை கிழித்துப் பிரித்தாள். பொலித்தீனால் உறையிடப்பட்டதாய், வெண்ணிறத்தில் ஒரு மார்பக அங்கி.

‘இதெல்லாம் இனியெதற்கு …?;’

வெகு சாதாரணமாய் பொலித்தீனை அகற்றி விரித்துப் பார்த்தவள் சிலையாக 

சிறுபொழுது ஸ்தம்பித்தாள். ஒற்றை மார்பகம் செயற்கையாக வைத்து நம்ப முடியாத நேர்த்தியுடன் தைக்கப்பட்டிருந்தது. அடுத்தகணமே தனக்கதனை பொறுத்திப் பார்க்கத் தொடங்கினாள்.

கச்சிதமான அளவு.

அதற்கு மேலால் சட்டையை சரிசெய்தாள். துளியளவிலும் வித்தியாசமில்லாமல் அத்தனை பொருத்தமாயும், மாசற்ற நிஜத்தன்மையை ஒப்புவிப்பதாயும் இருந்தது. சத்தமில்லாமல் சிரித்தாள். மீண்டும் மீண்டுமாய் தன் பிம்பத்தை பார்த்து உறுதி செய்து பூரித்துப் போனாள். யன்னலை திறந்து காற்றுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தாள். அப்படியே வான்வெளி பார்த்து கையசைத்து குதூகலித்தாள்.

மிதப்பது போல் தோன்றியது.

இழப்பின் வலியை மீள்நிரப்பும் சிறு துணிக்கையை வேண்டாமென மறுக்குமா மனது ? சூழற் பூக்களெல்லாம் ஒரே சமயத்தில் பூத்தாற் போல் நறுமணக்கலவை உள்நுழைந்து வெளியேறியது.

ஒருசில நாட்களுக்கேனும் போதுமே!

உடல் ஊனமுற்ற உணர்ச்சியுடன் மறைந்து குறுகி இனி நடக்க வேண்டாம். எப்போதுமான நிமிர்ந்த நடையினை இயல்பாக்கி கொள்ளலாம். கண்கள் பார்த்து தயக்கமின்றி பேசலாம்.

ஆன்யா தன்னை சரிபார்த்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேற ஆயத்தமாகிய அதே நொடி தன்னறிவின்றி கால்கள் பின்னோக்கிச் சென்றன. மனம் தடுமாறியது. இயல்பிற்கு மாறான நடுக்கம் மேனியெங்குமாய் பரவியது. இராட்சத பறவையொன்றின் மிகக் கொடூரமான ஓலம் அறையை சூழ்ந்தொலிப்பதான பதைபதைப்பு உருவாகியது.

மீண்டும் ஒரு பிரமைக்குள்ளான உள்நுழைவா?

‘இத்தனை பதட்டத்துடன் முடிவெடுப்பவளா நான்?’

மாயத்தினூடாக எட்ட எண்ணிடும் ஒரு பொய் மகிழ்வு எப்படி சரியானதாகும்?

கேட்டுக்கொண்டிருந்த இராட்சத ஓலங்களின் எதிரொலியை வெளியேற்றுவதாய் எண்ணிக்கொண்டு யன்னல்களை முழுதுமாய் திறந்து வைத்தாள். கண்களை விரக்தியோடு மூடி சில நொடிகள் நிதானமாக யோசித்தாள்.

அற்புதமான அந்த சில நொடிகள் பல மணித்தியாலங்களை விழுங்கி, பெருத்த நீள்பாம்பாகி அவளை அப்படியே தன்வசப்படுத்த தொடங்கியது.


4

சில மணித்தியாலங்கள் தேவைக்கேற்ப நீள்வதால் என்னவாகிவிடப்போகிறது?

சமயங்களில் எதுவென்றாலும்…!

ஆன்யாவின் முகம் பிரகாசித்தது. சுற்றிலும் புதிதாய் சில நிறங்கள் உயிர்கொண்டெழுந்திருப்பதை அவள் அவதானித்தாள். பலநாட்களாக அவளை சோர்வடைய செய்திருந்த இலக்கற்ற தவிப்பு, இல்லாமல் போயிருப்பதான உணர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள்.

எந்த அவசரமுமின்றி தொடர்ச்சியாக செயற்பட அவளால் முடிந்தது.

ஆடையை அகற்றி, அந்த பொய் மார்பகம் தாங்கிய உள்ளங்கியை பிய்த்தெடுத்தாள். அதனை அலட்சியமான பார்வையுடன் உள்ளங்கைக்குள் சுருட்டி குப்பைக்குள் எறிந்தாள்.

நிரந்தரமான சிரிப்பொன்றை முகத்தில் தக்க வைத்தபடி ஆடையை சரிசெய்துக்கொண்டாள். இப்போது தன் பிம்பத்தை பார்க்க வேண்டுமென அவள் நினைக்கவில்லை. ஆனால் தன் புருவமத்தியில் கர்வம் திமிர்த்திருப்பதாய் தோன்றிக்கொண்டேயிருந்தது.

சிறு தயக்கமுமின்றி ஒற்றை மார்பகத்துடனான உடலை நிமிர்த்தி நடந்து அறையிலிருந்து வெளியேறினாள்.

குதிரையின் குளம்பொலி அவளுக்குள் மாத்திரமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.


நன்றி - வனம், இதழ் - 11

Saturday, April 2, 2022

கமீலே டொன்சியுக்சின் ஜோடித் தோடுகள் - பிரமிளா பிரதீபன்

By On April 02, 2022

அந்த ஒருஜோடித் தோடுகளால் மாத்திரம் பேசமுடிகிறதென்பதையும் அவை சதா தன் காதுகளுக்குள் முணுமுணுத்தபடி எதையோ சொல்ல விழைகிறதென்பதையும் வெளியே சொல்ல முடியாத தடுமாற்றத்துடனேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் மயிலா

இந்தத் தோடுகளைத் தவிர்த்து மேலும் இரண்டு ஜோடித்தோடுகள் அவளிடமிருந்தன. அதிலொன்று செவ்வக வடிவத்திலான பெரிய தோடு. இன்னுமொன்று நட்சத்திர வடிவத்திலான தங்கத்தோடு. அவையிரண்டையும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதையே மயிலா விரும்பினாளென்றாலும் அம்மாவின் திடீர் ஆசையை நிறைவேற்றுவதற்காய் இந்தப் புதிய தோட்டை அணிய வேண்டியதாய் ஆகிப்போயிருந்தது. 

சொல்லப் போனால் எதிர்பாரா நேரத்தில் கிடைத்த பேரதிர்ஷ்டப் பொருளாக வந்தமைந்த தோடிது. 

ஒரு ரயில் பயண அரையிருள் பொழுதில் அம்மாவின் கண்களுக்கு மாத்திரமே தென்பட்ட வெள்ளை கடிதாசி சுருளை என்னவென்று பார்க்காமலேயே தன் கைப்பைக்குள் பதுக்கி வைத்திருந்திருக்கிறாள்.  வீட்டுக்கு வந்ததும் அதனை பிரித்துப் பார்த்தவள் திறந்த வாயை ஓரிரு நொடிகள் மூடவேயில்லை. 

‘யாரோடதுன்னு கேட்டு குடுத்திருக்கலாமேம்மா’

‘முட்டாளா நீ… இது நமக்கு கெடச்ச அதிர்ஷ்டம்டி’

பூ வடிவிலான அந்தத் தோட்டின் சரிமத்தியில் ஒரு கல் விசித்திர ஒளியுடன் மினுங்கி தோடு மொத்தத்தையும் மிகக் கவர்ச்சியானதாக காட்டியது. நிஜத்தில் ஒரு பூ மலர்ந்து விரிந்தது போல பளீரென பிரகாசித்தது.  

‘வைரக்கல்லாயிருக்குமோ!’ இது அம்மாவின் பேராசை. 

‘ச்சே சும்மா கல்லுதாம்மா’

‘இல்லடி இப்புடி மினுங்குதே’

இல்லாமலில்லை. அந்த கல் ஜொலிப்பின் அசாதாரண அழகை மயிலாவும் அவதானித்தாள். 

அம்மாவே அதனை பவ்வியமாய் கையாண்டு மயிலாவின் காது துளைகளுக்குள் பொருத்தினாள். பல தடவைகள் தோட்டுடனான மயிலாவை பார்த்துப் பல்லிளித்தாள். 

‘யார்ட்டயும் சொல்லிடாத என்ன?’

ஏன் எனும் தொனியுடனான மயிலாவின் பார்வைக்கு. 

‘நான் சொல்றத மட்டும் கேளு… கொஞ்ச நாளைக்கு அப்பறமா இது பத்தி விசாரிச்சிக்கலாம்’ என்றாள். 

முதலிரு நாட்களில் அந்தத் தோடுகளால் பேச முடியுமென்பதை மயிலா உணரவில்லை. ஆழ் உறக்கத்தின் பின்னரான ஏதோ சில குழப்பமான நினைவுகளும் நடுசாம விழிப்பில் தன்னை எரிச்சல் படுத்திய அந்த முணுமுணுப்பும் தோட்டுடனானதென்பதை நம்புவதற்கும் அவள் தயாராக இருக்கவில்லை. 

மூன்றாம் நாளில் உச்சிவெயில் ஆற்றுக்குளியலின் போதே அவள் அதனை அவதானிக்கத் தொடங்கியிருந்தாள். 

‘என்னை நனைக்க மாட்டாயா?’

மயிலா சுற்றிலுமாய் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இருக்கவில்லை. பின் யார்தான் பேசியிருக்க முடியும்! காதின் மிக அருகாமையில் மிதந்து செல்லும் காற்று பேசிவிட்டுப் போகிறதா என்ன? அப்படியில்லையென்றால் இத்தனை மென்மையாக வேறு யார் பேசியிருப்பார்கள்?

மயிலா மூச்சடக்கி அந்த மெல்லிய குரலொலியை துல்லியமாய் செவிமடுத்தாள். 

‘நனைக்க மாட்டாயா?’

‘யார் பேசுறது?’ என்றாள் மயிலா. 

ஒரு கையால் ஓசை வந்த வலது காதின் தோட்டை தடவிக் கொடுத்தபடி “நீயா?’ என்றாள். 

‘நீ கெட்டிக்காரிதான்’ என்றதந்த தோடு.

‘எப்டியிது… நெஜமாவே உன்னால பேச முடியுதா?’

‘முதலில் என்னை நனைத்து விடு பிறகு பேசலாம்’

மயிலா நீரினுள் நன்கமிழ்ந்து நீராடினாள். அதிசயத்தின் உச்சத்தில் பிரமிப்படைந்தாள். அந்த தோடுகளின் வசீகரிக்கும் இனிய குரலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டாள். 

‘ஹே தோடே…. உனக்கு ஒரு பேர் வைக்கணுமே…!’

‘சொல் என்ன பெயர் வைக்க போகிறாய்?’ 

மீனு… திவி… மஞ்சு… இப்டி ஏதாவது?’

‘கமீலே என்றழைக்கிறாயா? அந்த பெயரை உச்சரிக்கும் போது தோட்டின் குரலில் சிறு நடுக்கமொன்றிருந்து. 

‘கமீலே…’ மெதுவாக அழைத்தாள் மயிலா. எந்தப் பக்கம் பார்த்து பேசுவதென்று தெரியாமலிருந்தது அவளுக்கு. 

‘ஆமாம் ஆமாம் அதே பெயர் தான்’

‘சரி… அந்த பேர்ல அப்டி என்ன சந்தோசம் ஒனக்கு?’

‘உனக்கு கமீலேவை தெரியாதா…? 

‘யார் அவங்க?’

‘அவளின் முழுப்பெயர் கமீலே டொன்சியுக்ஸ். புகழ்பெற்ற பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனேவின் முதல் மனைவி அவள்.’ 

மயிலா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

‘பச்சை ஆடை உடுத்திய பெண்’ என்ற ஓவியத்தை பற்றி நீ எதுவும் அறிந்ததில்லையா? அந்த ஓவியத்திற்கு மாடலாக நின்றவள் அவள்தான்.    

‘ம்ம்…’

‘அந்த ஓவியத்திற்காக நிற்கும் போது அணிந்து கொள்வதற்காக ஒரு கழுத்தணியையும் அதற்கு பொருந்திப்போகக் கூடிய ஒரு ஜோடி காதணியையும் விரும்பி தெரிவு செய்து வாங்கிக் கொண்டாள்’

‘ம்ம்’

‘ஆனால் பாவம் அந்தப் பெண். அவளால் அதனை அணிந்து அழகுபார்க்க முடியாமலேயே போனது.’

‘ஏன் என்னாச்சு?’ மயிலாவிற்கு இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் இது ஒரு பொய்யான கதையென்றுதான் அவள் ஊகித்தாள். 

‘நீ நம்பாவிட்டாலும் இதெல்லாம் உண்மை மயிலா’

முதலாவது அதிசயம் அந்தத் தோடு அவளை பெயர் சொல்லி அழைத்தது. இரண்டாவது அவள் இந்தக் கதையை நம்பவில்லையென்பதை கண்டு பிடித்திருந்தது. 

‘ஒனக்கு எப்டி இதெல்லாம் தெரியுது…? நான் கனவேதும் காண்றேனா என்ன?’

‘இல்லை. இதுவல்லாத இன்னும் பல அதிசயங்களையும் நீ உணரக்கூடும்.’

‘அப்போ இதெல்லாம் எப்டி நடக்குதுன்னு சொல்ல மாட்டியா?’

‘நான் கனவுகளாலும் அதீத கற்பனைகளாலும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவள் மயிலா. மோனே தன் ஓவியப்பூக்களில் பல்வேறு இரகசியங்களை ஒளித்து வைத்திருப்பதை போலவும்… பூக்களின் திறந்த இதழ் நுட்பங்களை தன் ஓவியத்தினூடாக காட்டிவிட துடித்ததை போலவும் என்னையும் ஒரு அற்புத பூவாக அவர்கள் வடிவமைக்க விரும்பினார்கள். அப்போதுதான் மலர்ந்ததென்ற தோற்றத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு வைரக்கல்லால் என்னை அலங்கரித்தார்கள்.’

‘ம்ம்’

‘யோசித்துப்பார். கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் உருவான நான் இன்னும் இவ்வளவு அழகுடன் எப்படி இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணின் உணர்வுகளை உள்வாங்கி அவளாகி வாழ்ந்தவள். ஒரு கட்டத்தில் அவளுக்காக ஏங்கியவள். ஒரு நிஜப்பூவின் பவித்திரத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதையே கமீலே டொன்சியுக்ஸ் விரும்பினாள். அவள் என்னை மிருதுவாக ஸ்பரிசித்தாள். தொட்டணைத்து முத்தமிட்டாள். என்னுடன் பேசத்தொடங்கினாள். வரையறைக்கடந்த தன் நேசிப்பினால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்தாள்.’

தோடு பேசிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் அம்மாவிடம் சொல்வதா வேண்டாமாவென மயிலா யோசிக்கத் தொடங்கினாள். திடீரென இடைமறித்து ‘அதுசரி நீ எப்டி இங்க வந்து சேர்ந்த?’ என்றுக் கேட்டாள். 

‘அது தெரியவில்லை. என் வாழ்நாளில் அதிக பொழுதுகளை நான் அடகுக்கடை அழுக்கு லாச்சுகளுக்குள் தான் கழித்திருக்கிறேன். சுத்திப் பொதி செய்யப்பட்ட நிலையுடனேயே எங்கெல்லாமோ பயணித்திருக்கிறேன். கமீலே டொன்சியுக்ஸ் கூட, அவள் மிக விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அடகிலிருந்து மீட்டெடுத்து ஒருமுறையாவது ஒன்றாகச் சேர்த்து அணிந்துவிட வேண்டுமென்று போராடினாள். ஆனால் அவளால் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் போனதால் ஏதோ ஒரு கடையில் நீண்ட காலமாக அடைந்து கிடந்திருந்தேன்.’ 

‘இங்கெல்லாம் பாதி பொம்பளைக நகை செய்றதே அடகு வைக்கத்தான் கமீலே. அது ஒனக்கு தெரியாதா?’

‘இல்லை நான் கொஞ்சம் காலமாவது ஒரு பெண்ணின் அழகு பூரிப்புடன் வாழ ஆசைப்படுகிறேன். நீயும் அப்படி செய்து விடாதே’ 

தோடுகள் இடைவிடாமல் வலது காதிலும் இடது காதிலுமாய் எதையெதையோ பேசிக்கொண்டேயிருந்தன.  அவை பேசுகையில் இரண்டு காதுகளிலும் மென்மையான அந்த நுனிப்பகுதி சில்லிட்டு கூசுவது போலவும் அக்கணத்தில் முழு உடலுமே அத்தோடுகளின் தோழமையை நாடி அவ்வுரையாடலுக்காய் ஏங்குவதை போலவுமாய் மயிலா நம்பத் தொடங்கினாள்.    

எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற அத்தோடுகளின் நட்பை மொத்தமாய் விரும்பினாள். தன்னை அடிக்கடி தனிமைப்படுத்திக் கொண்டு மனதிலுள்ளவற்றையெல்லாம் மணிக்கணக்கில் பேசித்தீர்த்தாள். அத்தோடுகளிரண்டையும் தன் உயரிய நேசிப்பிற்குரிய தோழியாய் மாற்றி யாருமறியாததொரு அரூப உறவை விஸ்தரித்துக் களித்தாள். சமயங்களில் தோடுகளின் தொடர்ச்சியான கதைகளில் மையலுற்று தானே அந்த ‘கமீலே டொன்சியுக்ஸ்’ என்பதாகவும் பாவனை செய்தாள். 

ஒரு ஓவியத்தின் மாடலைப் போல அசையாது ஓரிடத்தில் நின்றுக் காட்டி  ‘இப்டி நிக்கணும்னு தானே ஆசப்பட்ட?’ என்பாள். அவை பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வொலி கழுத்துடன் ஊர்ந்து மிதந்து தன்னை மொத்தமாய் கவர்ந்திழுப்பதாய் சொல்லிக் கொள்வாள். மலைக்காடுகள் மீதேறி சத்தமாய் தோடுகளுடன் சேர்ந்து பாடுவாள். ஆற்று நீருக்குள் தோடுகளை அமிழ்த்தியெடுத்து ஆனந்தப்படுத்துவாள்.  அவ்வப்போது கோபித்துக் கொண்டு பேசாதிருக்கவும் செய்தாள். அப்படியே அவளது மென்மையான ஸ்பரிசத்தை வருடலூடாக  வெளிக்காட்டுவதுடன் அத்தோடுகளது சப்தத்துடனான தொடுகையிலும் இன்புற்றுத் திளைத்தாள்.    

****

ஒரு புதன்கிழமை மாலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த பருமனான மனிதன் வந்துக் கொண்டிருந்தான். வழமை போலவே அம்மா, தண்ணீர் டங்கிக்கு பின்னால் இருக்கும் கூடைக்குள் அமர்ந்து தலையிலொரு துணியைப் போர்த்திக் கொண்டபடி மயிலாவை பொய் சொல்லச் சொன்னாள். 

இத்தகைய திடீர் பொய்கள் உடன் உருவாகும் திறன் மிக்கவையென்பதாலும் தொடர்ச்சியாக சொல்லிப் பழக்கப்பட்டமையாலும் கண்களிலோ உடலசைவிலோ எவ்விதக் குற்றவுணர்ச்சியையும் வெளிக்காட்ட விடாமல் வெகு லாவகமாக வந்து விழப்பார்க்கும். 

அவன் கேட்பதற்கு முன்பாகவே ‘அம்மா கடைக்குப் போயிட்டாங்க’ என்றாள். 

அவன் கோபமாக கண்களை சுழற்றித் தேடினான். 

‘எத்தன மணிக்கு வருவாங்க?’ என்று கேட்டான்.

‘தெரியல’ என்றபடி மயிலா கொடிகயிற்றில் கிடந்த உடைகளை சாவகாசமாக எடுத்து கைகளில் சேகரித்தாள். அவளது முகத்தில் ஏளனம் மிகுந்த சிரிப்பொன்று படர்ந்திருந்தது. 

‘ஒனக்கு எத்தன வயசு பாப்பா’

மயிலா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்துக் கொண்டாள். 

‘ஒரு பதினைஞ்சு பதினாறு இருக்குமா? வாங்குன காச குடுக்காட்டி வேற மாதிரி ஆகிடும்னு ஒங்கம்மாகிட்ட சொல்லிரு சரியா?’ 

அவன் பேசிய விதம் ஒருவிதமான சினத்தைக் கொப்பளிக்கும் தொனியாகவிருந்தது. 

மயிலா பயந்து தலையாட்டினாள். சரிந்திருந்த அந்தக் கூடை மெதுவாய் அசைந்தது. அவன் கண்டு விடுவானோவென்று மயிலா பதட்டமானாள்.

‘நாளைக்கும் இதே நேரத்துக்கு வருவேன். வட்டிக் காசாவது இருக்கணும் சொல்லிட்டேன்’

அவன் அதட்டாலாகச் சொல்லியபடி வாசலில் இங்குமங்குமாய் இருமுறை நடந்தான். வீட்டினுள் எட்டிப் பார்த்தான். சுவரோரம் தென்பட்ட குளியலறை யன்னலில் எக்கித்தாவி உள்ளே பார்க்க முயற்சித்தான். பின் கோபமாக வெளியேறினான். 

அம்மா கைகால்களை உதறிக்கொண்டே கூடைக்குள்ளிருந்து வெளியே வந்து ‘போயிட்டானா?’ என்றாள்.

‘என்ன வெளயாடுறியாம்மா? இனி எனக்கு பொய்யெல்லாம் சொல்ல முடியாது சொல்லிட்டேன்.’

‘வட்டிக் காசையாவது நாளைக்கு குடுத்துறணும்டி. என்ன செய்றதுன்னு ஒன்னுமே புரியல’

அம்மா சட்டென்று மயிலாவின் காதிலிருந்த தோடுகளைப் பார்த்தாள். அவளது கண்களில் மின்னலடித்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். பின் எதற்காகவோ பயந்தவளாய் அவ்வெண்ணத்தை மாற்றி தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை வெளியே இழுத்துப் பார்த்தாள். தாலியென்ற பெயரில் ஒரு துண்டு தங்கமும் அதற்கு காவலாய் இரண்டு மணிகளும் ஒன்றுடனொன்று மோதுண்டு சப்தமெழுப்பின. 

ஒரு மஞ்சள் துண்டை கழுவியெடுத்து அந்தக் கயிற்று மத்தியில் கட்டிக் கொண்டவள் மெதுவாகத் தாலியையும் மணிகளையும் அதிலிருந்து அகற்றி ஒரு கடுதாசியில் சுற்றியெடுத்துக் கொண்டாள். 

‘எவ்வளவு கொடுப்பானோ… எப்டி மீட்டெடுக்கப் போறேனோ தெரியலயே..!’

புலம்பிக்கொண்டே அம்மா வெளியே செல்ல ஆயத்தமானாள்.

***  

நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் காத்திருப்போர் வரிசையில் மயிலாவும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மாவின் படபடப்பு அவளது கைநடுக்கத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

தனக்குத் தேவையான பணத்தைப் பெற முடியாதென்ற கட்டத்தில் மிகுந்த கலவரத்துடன் ஒரு பெண் தனது தோடுகளைக் கழற்றி கொடுத்தாள். அவர்கள் சிறிது நேரத்திற்குள் அதுவும் போதாதென்றார்கள். அவள் அடுத்த நொடியிலேயே அழுதுவிடப் போவதைப்போல மனமுடைந்து ஏதோவெல்லாம் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

அம்மா தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை அடிக்கடி துடைத்தபடியே அதனைப் பார்த்தாள். அம்மாவின் காதிலும் இரண்டு கல்தோடுகளிருந்தன. 

மயிலா யோசித்தவாறே மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான அடிக்கடி வந்துபோகும், அறவும் பிடிக்காத இடமாக இது இருந்தது. 

‘உனக்கு பயமாருக்கா?’ 

மயிலா கிசுகிசுத்த குரலில் தோடுகளிடம் பேசினாள். 

‘ஆமாம்… மிகவும்’

‘பயப்புடாத நீ வைரக்கல்லுன்னு எங்கம்மாக்குத் தெரியாது’

‘இது போன்ற கடைகளில் சிறைப்பட்டிருத்தலென்பது தீரா வேதனை மயிலா’

‘நாங்க மட்டும் விரும்பியா இதையெல்லாம் பண்றோம். இந்த எடத்துல உக்காந்திருக்குறப்போ மனசு படுறபாடும் தவிப்பும் பத்தியெல்லாம் உனக்கெப்படி தெரியப்போகுது. ஆசையாசயா வாங்குன நகையெல்லாம் ஒன்னொன்னா பறிபோன இடமிது’

‘எனக்குத் தெரியும். கமீலே டொன்சியுக்ஸ் இறந்த பின்னாலும் அவள் விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அணிவித்துவிட வேண்டுமென்று மோனே எத்தனையோ முயற்சிகளெடுத்திருக்கிறார். யாரிடமோவெல்லாம் கடன் கேட்டு கடிதங்களெல்லாம் எழுதியிருக்கிறார். அப்படியும் அது சாத்தியப்படாமல் போனபோது… அவள் இத்தகைய அணிகலன்களுக்காய் எத்தனை தூரம் தவிப்புடன் இருந்திருப்பாளென்றும் அது எத்தகைய துயரத்தையும் சொல்ல முடியாத மனவலியையும் அவர்களுக்கு அளித்திருக்குமென்பதையும் நான் நன்றாகவே அறிந்திருந்தேன்’

‘எங்கம்மாவும் அப்பிடி அழுதுருக்காங்க கமீலே. சாமிய திட்டிக்கிட்டே அழுவாங;க. ஒருதடவ நீ இப்புடி கைலயும் கழுத்துலயும் மாட்டிக்கிட்டு மினுக்குறியே எங்களுக்கு மட்டும் ஒரு பொட்டுமணி இல்லாம போற அளவுக்கு வாட்டுறியேன்னு சொல்லிகிட்டே அம்மன் படத்த எடுத்து பீரோ உள்ளுக்கு பூட்டி வச்சிட்டாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு’

‘ஆமாம். ஆசையாய் வாங்கிய அணிகலன்களை அணிந்து கொள்ள முடியாத துர்பாக்கியத்தை பல பெண்கள் காலங்காலமாய் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு நானே சாட்சி. என்னை எவருக்குமே தொடர்ச்சியாக அணிய முடிந்ததேயில்லை தெரியுமா?’

அடுத்தது அம்மாவின் முறை. அம்மா பரிதவிப்புடன் தன் கையிலிருந்த சுருளையும் அடையாள அட்டையையும் நீட்டினாள். அவர்கள் அதனைச் சரிபார்த்தபடி சிறிது தாமதித்து எதையோ சொல்லும் போது அவளது முகம் சட்டென மலர்ந்தது. 

மயிலாவிற்கு எங்கிருந்து வந்ததென்று தெரியாத அந்த பயமும் நடுக்கமும் அகன்றது. மெதுவாகக் கையுயர்த்தி தோடுகளை ஒரு தடவை தடவிப்பார்த்துக் கொண்டாள். 

‘இல்லாம போயிருமோன்னு நினைக்குறதால வரும் பயம் அதிகமா ஆசப்பட வைக்குதில்ல…!’

‘என்ன சொன்னாய் புரியவில்லை’ என்றது தோடு.

‘இல்ல ஒன்னுமில்ல… உனக்கு இப்போ நல்ல காலம்னு சொன்னேன்.’ அவள் மீண்டுமொரு முறை இரண்டு தோடுகளையும் மென்மையாகத் தடவிக் கொடுத்தாள். 

‘உன் ஸ்பரிசத்தில் நான் கமீலே டொன்சியுக்சை உணர்கிறேன் மயிலா’

‘நெஜமாவா..?’

‘ம்ம.. அவளைப் விடவும் நீ என்னை நேசிக்கிறாய் என்றே தோன்றுகிறது.’

கமீலேவின் இந்த வார்த்தைகள் ஒரு இசையென மயிலாவின் நெஞ்சத்தை குழைந்தெடுத்தது.    

‘போகலாம்டி’ என்றபடி அம்மா வேகமாக நடந்தாள். மயிலா பின்னாலேயே ஓடிச்சென்றாள்.  

***

தோடு பற்றிய பல்வேறு வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டன. அத்துடன் மயிலா தனியாகப் பேசிக்கொண்டு திரிவது பற்றியும்.

எல்லா கல்லும் எல்லோருக்கும் ஒத்துப்போகாதாம். ஒருசில கற்கள் பதித்த தோடுகளால் பித்துப்பிடித்து அலைய வேண்டி வருமாம். அப்படியே ஆளையே இல்லாமல் ஆக்கிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.  

அம்மா கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள். 

‘அதக் கழட்டி வச்சுருடி’ என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள்.  ஒருசிலர் அதனை வைரக்கல்லாயிருக்குமென சொல்லியிருந்ததால்  ‘கொண்டுபோய் கேட்டு பார்த்தா பெரிய வெலைக்கு வித்துரலாம்’ என்றபடி கனவு காணவும் ஆரம்பித்தாள்.

நாளுக்குநாள் இந்தத் தோடுகள் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கத் தெடங்கின. அதனை நல்ல விலைக்கு வாங்கி தாங்களே விற்றுக் கொள்வதாயும் அம்மாவிடம் சிலர் சொல்லியிருந்தார்கள்.

‘முருகேசு மாமா இருவதாயிரம் ரூவா தாரேங்குறாரு. அவருகிட்ட குடுத்துருவமா? அது பித்தள தோடா இருந்தா கூட நாம காச திருப்பித்தர வேணான்னு சொல்றாரு.’

‘அடகு கடையில கேப்பமாடி?’ 

‘நம்ம சகுந்தலா புருசன் நகை கடையில தான் வேல செய்யுறாராம். அவருகிட்ட குடுத்து கேட்டுப்பார்க்க சொல்லுவமா?’

‘இல்லன்னா பேங்குல கொண்டு போய் வச்சாலும் தெரிஞ்சுரும் இல்லயா?’

அம்மாவின் ஆலோசனைகள் நேரத்திற்கொன்றாய் மாற்றம் அடையத் தொடங்கியது. 

மயிலா பதில்களற்று துயரமடைந்திருந்தாள். 

‘நீ என்ன விட்டுப் போறத யாராலும் தடுக்க முடியாது போல கமீலே’ என்றாள்.’ 

‘என்னைக் காப்பாற்ற எதுவுமே செய்ய மாட்டாயா? என்னை மீண்டும் சிறைப்படுத்தப் போகும் இத்திட்டங்களுக்கு நீயும் உடந்தையாய் இருக்கிறாயா என்ன?’

‘இல்ல கமீலே உன்னோட இருக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா உணர்றேன். ஆனா எங்கம்மாகிட்ட இதயெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல…’ 

‘என்றாலும் இத்தனை பெறுமதியான என்னை விற்பதை விட அணிந்து அழகு பார்த்தல் தான் சிறந்ததென்று உனக்கோ உன் அம்மாவிற்கோ தோன்றவில்லையா….?’

‘இல்லாமலா பின்ன…? உன்னோட கமீலே டொன்சியுக்ஸ் அவ்வளவு ஆழமா உன்ன நேசிச்சிட்டு அப்பறம் எதுக்காக அடகு வச்சாங்க சொல்லு…?’

‘புரிகிறது மயிலா. ஆனால் நான் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறேன். என்னை பற்றிய  எந்த சரியான விபரமும் இன்னும் உங்களுக்கு தெரியாது. அப்படியிருக்கையில்  உங்களது திட்டங்களும் செயல்களும் பேராசையாக தானே இருக்க முடியும். தவிரவும் என்னை விற்று கிடைக்கும் பணத்தில் உங்களது மொத்த வாழ்வும் மாற்றமடையக் கூடுமென்பதற்கு என்ன ஆதாரம்? என்னை பொருத்தவரை யாரிடமோ நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் என்பதுவும் கிடைத்த அதிர்ஷ்டத்தை உங்கள் முட்டாள்தனத்தால் இழக்க போகிறீர்கள் என்பதுவுமே நிஜம்’

எல்லாமே சரியென்பதாவே இருந்தது. ஆனாலும் வேறென்ன தான் செய்துவிட இயலும்? இந்தத் தோட்டை விற்பதால் கிடைக்கும் ஒரு தொகைப் பணமா இல்லையேல் அழகும் கவர்ச்சியும் கூடவே பேசும் திறனையும் கொண்டிருக்கும் மனதிற்கு மிக நெருக்கமான இந்த ஒரு ஜோடித் தோடா? 

எந்த பக்கமாய் யோசித்தாலும் தோடு என்பதே பதிலாய் அமைந்தது. எனினும் எவ்வாறு அதனை தக்கவைத்துக் கொள்வது? 

ஓரிரு நாட்கள் தோடுகளுடன் பேசாமல் தனியாக யோசித்தாள் மயிலா. அந்த கமீலே டொன்சியுக்சை போல அல்லது மோனேவை போல நானும் ஒருநாள் தவித்து அழுது ஏங்க வேண்டுமா என்ன? நானும்தான் இந்தத் தோடுகளை அளவற்று நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்றாலுமே வெறும் நேசிப்பை மாத்திரம் ஆதாரமாக்கிப் பிடித்தவொன்றை தக்கவைத்துக் கொள்ளுதலும் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. 

மயிலா தோடுகளிடம் சொன்னாள். 

‘என்ன மன்னிச்சிடு கமீலே. நானும் ஒனக்காக ரொம்ப ஏங்குவேன்.’ 

நாட்களின் நகர்வில் தோட்டின் உண்மையான பெறுமதி சிறுகச் சிறுக வெளிப்பட்டது. அம்மா அதனை மயிலாவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி மிகப்பத்திரமாய் பாதுகாக்கத் தொடங்கினாள். அவளது அலுமாரிக்குள்ளேயே வைத்து அழகு பார்த்தாள். இரகசியமான முறையில் பெருந்தொகையளவான பணத்திற்கு அதனை விற்பதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொண்டாள். 

இன்னும் ஓரிரு தினங்களில் தோடு கைமாறப் போகிறது எனும் நிலையில், மயிலா தவித்தாள். வேகமாக நடந்தாள். அவ்வப்போது தடாரென அமர்ந்து பெருமூச்சு விட்டாள். வேறொரு தோட்டினை அணிந்துக்கொள்ள மனம் ஒப்பா நிலையில் தன் வெறுமையான காதுகளை அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டாள். கமீலேவுடன் பேச வேண்டுமென ஏங்கினாள். 

இரவுகளைக் கடக்கப் பெரும் சிரமாயிருந்தது. இறுதியாக ஒருதடவை அத்தோடுகளை அணிந்து… ஆசைத்தீர அழகு பார்த்து… கொஞ்சம் அதனுடன் பேசி… மயிலாவை ஏதோ ஒன்று உந்தியது. 

இருளைப் பொருட்படுத்தாமல் பழகிய நிதானத்தில் அந்த அலுமாரியிடத்தே ஓடினாள். கசிந்தொழுகிய மெல்லிய நிலவொளி பரவி அச்சூழலை தெளிவாக்கியது. சத்தம் வராமல் அலுமாரியைத் திறந்து அவசரமாகத் தோட்டைப் பத்திரப்படுத்தியிருந்த இடத்தினைத்  துழாவினாள். கைகள் நடுக்கம் கொண்டன. ஏனென்று தெரியாமல் அழுகை முட்டியது. 

அம்மாவின் கூரைப்புடவைக்கடியில் மிகப் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த அந்த சிவப்பு நிற சிறியப்பெட்டியை ஆவலுடன் திறந்தாள். அங்கே தோடுகள் தென்படவில்லை. ஒருகணம் இதயத்துடிப்பு ஸ்தம்பித்துப் போனதாயும் கண்கள் இருட்டிக்கொண்டு வருவதாயுமான உணர்வுகளுடன் மிகுந்த படபடப்புடன் கண்களை ஒருதடவை துடைத்துவிட்டுக் கொண்டு இன்னும் தெளிவாக பார்வையை சுருக்கிப் பார்த்தாள். பெட்டி ஒன்றுமில்லாமல் வெறுமையாகவேயிருந்தது. 

பெரும் அவஸ்த்தையுடன் அம்மாவை எழுப்ப அருகே சென்றாள். 

அம்மா போர்வையை தலையுடன் போர்த்தியவாறே தனியே பேசிக்கொண்டிருந்தாள்.      

Saturday, September 18, 2021

அல்லிராணி - பிரமிளா பிரதீபன்

By On September 18, 2021
01

நமுனுகுல  மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள். உலகில் வேறெதையுமே அறியாத தனிமையில் அவளும் உரத்தொலிக்கும் அவள் வீட்டு வானொலி பாடல்களுமென குறுகியதொரு வட்டத்திற்குள் அவள் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தாள்.


அல்லிராணிக்கு காதுகள் இரண்டும் அவ்வளவாகக் கேட்பதில்லை. எனினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மொத்த லயமும் அதிரும் அளவிற்கு வானொலியை ஒலிக்க விடுவாள். அதன் பேரிரைச்சலானது இடதுப்புற தொரையான் வீட்டுக்கும் வலப்பக்கத்து ரத்தினம் வீட்டுக்கும் நீண்டகாலப் பெருந்தொந்தரவைத் தந்திருந்தது.


தொரையானின் மனைவி ஆனமட்டும் சத்தமிட்டு அல்லிராணியை அசிங்கப்படுத்தித் திட்டுவாள்.


“செவிடி… செவிடி…. செவிட்டு முண்டம் காலங்காத்தாலேயே உசுர வாங்குது’ என்றவாறே தனது விடியலைத் தொடங்க அவள் பழக்கப்பட்டிருந்தாள்.


‘புள்ளைங்க காலயிலேயே எழும்பிகிதுங்க. ஒரு வேலயும் ஓடுதில்ல. அத கொஞ்சம் கொறச்சி வச்சாதான் என்னவாம்’ என்று தொங்கல் வீட்டு மணியம் அத்தையும் சொல்லிப் பார்த்தாள்.


‘அப்புடியே காது கேட்டு வெளங்கிட்டாலும்… பெரிய தொரசாணி மாதிரில்ல பண்றா’ ரத்தினம் வாசலில் வாய் கொப்பளிக்கும் போதே கத்துவான்.


யார் எதை ஓதினாலும் அன்றாடம் அல்லிராணி வீட்டில் வானொலி ஒலித்தபடியேதான் இருந்தது. என்றாலுமே காதுகள் கேளாத அல்லிராணி ஏன் இப்படிச் செய்கிறாள் என்பதை மட்டும் யாராலும் விளங்கிக் கொள்ளவும் இயலாமலிருந்தது.


அல்லிராணி அந்தத் தோட்டத்திலேயே கொஞ்சம் விசேஷமானவள் என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். அவளுக்கு முன் விவாகரத்து எனுமொரு சம்பவம் அந்தத் தோட்டத்தில் இருந்ததேயில்லை. அதற்கு யாரும் துணிந்தது கூட இல்லை. முதல் தடவையாக ராமமூர்த்தியை கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து வெற்றி கண்டவள் எனும் வகையில் அல்லிராணி மீதான பயம் அனேகருக்குள் இருந்தது.


அல்லிராணி பார்ப்பதற்கு உயரமாகவும் அளவான உடற்கட்டுடனும் இருப்பாள். ராமமூர்த்தியை விவாகரத்து செய்திருந்தாலும் அவனது சேட்டுகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சேட்டும் பாவாடையும் பாவாடைக்கு மேல் இடுப்பைச்சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் ஒரு குட்டை படங்கும் என்று வேகமாக நடப்பாள். தனக்கு முன்பின் நடப்பவர்களைப் பற்றி அவள் எப்பொழுதும் யோசிப்பதில்லை. மட்டக்கம்பை ஒரு கையில் கிடையாகப் பிடித்து அசைத்தபடி தன்னிடம் எதிர்படுவோரிடத்து ஒரு மெல்லிய சிரிப்பையும் அலட்சியப் பார்வையையும் உதிர்த்துவிட்டு யாரையென்றாலும் வெகு இயல்பாய் கடந்து செல்லக் கூடியவளாக அவள் இருந்தாள்.


அன்று சரியாக ஏழு மணிக்கெல்லாம் வானொலியை அமத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள் அல்லிராணி.


அதற்காகவே காத்திருந்தாற்போல் சரியாக அவள் தன் வாசலைக் கடக்கும் நேரத்தில் அரிசி கழுவிய தண்ணீரை விசிறியெறிந்தாள் ரத்தினத்தின் மனைவி. சிலதுளிகள் தன்மீது படிந்ததையும் கணக்கில் கொள்ளாமல் அல்லிராணி வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.


அடுத்ததாய் மணியம் அத்தை வீடு. அவள் தன் வாசற்கதவை வேண்டுமென்றேத் திறந்து மிக வேகமாக அறைந்து சாத்திக் கொண்டாள்.


அல்லிராணிக்கு இவையெல்லாமும் சுவாரசியத்தைக் கூட்டும் சம்பவங்களாகத்தான் தோன்றினவேயன்றி கோபத்தை ஏற்படுத்தவில்லை. சிரித்தவாறே திரும்பிப் பார்க்காமல் நடந்து அந்த லயத்தைத் தாண்டினாள்.

02

வேலை முடிந்து வரும் கையோடே கிணற்றடியில் கைகால் அலம்பிவிட்டு அல்லது ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாமென்று சிலர் துவாயையோ துண்டொன்றையோ தமது கொழுந்து பைக்குள் செருகி பத்திரப்படுத்துவதுண்டு.


தனது பையிலிருந்த கபிலநிறத் துவாயை வெளியிலெடுத்தவாறே அல்லிராணி கிணற்றடியை நெருங்கினாள்.


வழமைக்கு மாறாக கிணற்றடி வெறுமையாய் இருந்தது. குளிக்க வந்தவர்களும் தண்ணீர் எடுக்க வந்தவர்களும் ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள்.


பொதுவாக அல்லிராணி காரணங்கள் தேட முயற்சிப்பதில்லை. தன் கொழுந்துப் பையை ஒருபுறமாய் வைத்துவிட்டு பரபரவென தன் குட்டிப்படங்கை அவிழ்த்து மடித்து வைத்தாள். உடுத்தியிருந்த பாவாடையை மாரளவிற்கு உயர்த்தி கட்டியவாறே சேர்ட்டையும உள்ளாடைகளையும் கழற்றி துவைக்கும் கல்லில் போட்டாள்.


‘யாருமே  குளிக்காம  ஏன்  இருக்கணும்?’


அவளைக் குடைந்த வேள்வியை பார்வையால் கேட்டாள்.


‘குளிக்க முடியாது அல்லி… தண்ணில எவனோ கசிப்ப கலந்து விட்டுடாய்ங்க’


அல்லிராணியின் முகத்தைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசலாம். உதட்டசைவில் சிறு தடங்களுமின்றி அனைத்திற்கும் பட்பட்டென்று பதிலளிப்பாள்.


‘கசிப்பா..? எங்க தள்ளு கசிப்பா இல்லையான்னு நாம்பாக்குறேன்’


வாளியால் அள்ளியெடுத்த நீரை முகர்ந்து தலையை படாரென பின்னிழுத்தாள். வாளியையும் கயிரையும் தனித்தனியேயும் முகர்ந்து பரீட்சித்துப் பார்த்தாள்.


பழகிப்போன அந்த கசிப்பின் மணம் முகத்திலறைந்து விலகியது.


‘தண்ணியில தாண்டி கலந்திருக்கு’


‘இப்ப எப்புடி குளிக்கிறதாம்?’


காலையில் கதவை அறைந்து சாத்தியதை மறந்துவிட்டு மணியம் அத்தையும் பேசிக்கொண்டிருந்தாள்.


‘பைப் தண்ணில வருதோ தெரியலயே’


காட்டுப்பீலியிலிருந்து குழாய்வழியாகக் கிணற்றுக்குள் விழும் நீரில் ஏதேனும் கலந்து விட்டிருக்க வாய்ப்புண்டென்பதையறிந்து மணியம் அத்தை அவ்வாறு சொல்லிக்கொண்டு நின்றாள்.


‘காட்டுப்பீலிக்கு ஒரு எட்டு போயிட்டு பாத்துருவமா?’


துவாயை தோளுடன் போர்த்திக்கொண்டு ஆயத்தமானவளாய் அல்லிராணி கேட்டாள்.


குளிக்க வழியற்று வியர்வையோடும் பிசுபிசுப்போடும் களைத்து காத்துக்கொண்டிருந்த ஓரிருவர் அல்லிராணியுடன் சேர்ந்து காட்டுப்பீலியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவர்கள் நடந்து போகும்போதே இடையில் அகப்பட்ட சிறுசுகள் சிலதும் சேர்ந்து கொண்டனர்.


எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். முகத்தைப் பார்த்து அவர்கள் பேசுவதைக் கணித்து பதிலளிக்க அல்லிராணிக்கு சங்கடமாயிருந்தது. அவர்களைக் கடந்து முதலாமாளாய் நடந்து கொண்டிருந்தாள். நீரில் முகர்ந்த அந்தக் கசிப்பு மணம் நாசியின் மொத்தக் கலங்களிலும் தொற்றிக் கொண்டதாய் தோன்றியதோடு அது ராமமூர்த்தியின் வேண்டாத ஞாபகங்களையும் கொண்டுவந்திருந்தது.


துர்மணம் மிதமிஞ்சிய இப்படியொரு குடிவகை உண்டென்பதே ஆரம்பத்தில் அல்லிராணிக்கு தெரியாது. ராமமூர்த்தி அந்தக் கருமத்தைக் குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பத்தில் வயிறு குமட்டி குடற்தசைகள் பிய்ந்து அத்தனையும் வாய்வழியாய் வருமென்றே கக்கிக்கக்கித் துப்பினாள்.


ஆனால் அவனிடத்தே அவ்வுணர்வைப் பற்றி விபரித்து பேசித்தீர்க்குமொரு பொழுதாக அது அமைந்திருக்கவில்லை. அத்தோடு அவன் கண்டுப்பிடித்த அந்தப் புதுவகை வெறியை அவளுடலில் ஊர்ந்து மிதந்தவாறேதான் கொண்டாடிக் களிக்கவும் அவன் விரும்பியிருந்தான்.


எப்போதாவது நடுசாமப் பொழுதுகளில் இருளுடன் சேர்ந்து பதுங்கலாய் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கசிப்பின் வாடை நாட்பட நாட்பட வீட்டின் அத்தனை மூலையிலும் அப்பி அப்படியே அவனது அதிரும் சிரிப்பில்… ஆடைகளில் கூடவே அவன் புழங்கும் பண்டபாத்திரங்களிலுமாக ஒட்டிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.


மழைக்கு கசியும் கூரைவழித் திவலைகளிலும் சுவற்றின் ஈரப்பதத்திலும் இன்னும் பின்வாசல் காணிற்குள் தேங்கிக்கிடக்கும் சிலதுளி முத்திரத்திலும் கூட கசிப்பினது அழுகி அவிந்துப்போன மணமொன்று கவிழ்ந்திருந்தது. அது அவ்வீட்டைத் தாண்டி லயத்தையே கவ்விப்பிடித்து திரும்பிய திசையிலெல்லாம் முகத்தில் மோதியடித்தது.


எத்தனைதான் பொறுத்துக் கொள்ள முடியும்?


அடுத்தமுறை குடித்துவிட்டு வரும்போது அவனை ஊதாங்கட்டையால் அடிக்கவே அல்லிராணி திட்டமிட்டிருந்தாள். முடியாமல் போனபோது எண்ணெய்க் கரண்டியை சூடுபண்ணி வைக்க எண்ணினாள். இறுதியில் கையில் கிடைப்பதை விட்டெறிந்து அவனைத் தாக்குவதுதான் புத்திசாலித்தனமென்று முடிவெடுத்தாள்.


சரியாக அவன் வரும் சமயத்தில் தூக்கியடிக்கக் கூடியதான பூச்சாடியையும் மூன்று சிரட்டைகளையும் ஒரு விறகுக்கட்டையையும் எடுத்து தாயார் நிலையில் வைத்துக் காத்திருந்தாள்.


பூச்சாடி திசைமாறி எங்கோ விழுந்தது. சிரட்டையொன்று அவனது முட்டியில் பட்டு உருண்டது. அடுத்ததாகத் தூக்கியடித்த விறகுக்கட்டையின் சிலாம்புகள் அவனது தொடைப்பகுதியில் குத்தி நின்று பின் விழுந்தது.


அடுத்த நொடியே மடித்துக் கட்டப்பட்டிருந்த சாரத்தைத் தாண்டி இரத்தம் வழியத்தொடங்கியதைக் கண்டு அவள் தன் தாக்குதலை நிறுத்திக் கொண்டாள்.


குடிவெறி அவனை வேகமாக இயக்கியது.


‘சிறுக்கி முண்ட’ என்று அலறினான். வேகமாக எதிர்கொண்டு அல்லிராணியின் முடியைக் கொத்தாகப் பிடித்து அவளை சுவரோடு மோதியடித்தான். அப்படியே தன் பலத்தையெல்லாம் திரட்டி மூன்று அறைகள் விட்டான்.


சுழன்று தடுமாறி ஒருபக்கமாய் விழுந்துக் கிடந்தாள் அல்லிராணி. அவன் தொடர்ச்சியாகவும் ஏதோ பேசுவது போலவேயிருந்தது. ‘ஏன் இவன் சத்தமேயில்லாமல் பேசுகிறான்’ என்று தோன்றியதே தவிர அவளது காதுகள் இரண்டும் அடைத்து போயிருப்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.


சில நொடிகள் கடக்க தாங்கொணா வலியும் சகிக்க முடியா மெல்லிய இரைச்சலும் காதுகளை நிரப்பிக்கொள்ளத் தொடங்கின. விண்விண்ணென இழுத்து கண்ணுக்குத் தெரியா தசைகளிளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன.


அன்றைய தினம் தான் அவசரப்பட்டிருக்கக் கூடாதென இப்போதும் அல்லிராணி எண்ணிக் கொண்டாள். ஒரு ஆணின் மொத்த பலத்தையும் அடியாய், உதையாய், அறைகளாய் வாங்கிச் சகிக்கத் தெரிந்த பெண்மனதிற்கு ஊராரின் கேலிப்பேச்சைத் தாங்கும் திடத்தை ஏன் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையென்பது பற்றி அவள் யோசித்தாள்.


தனக்குக் காதுகள் கேளாமை பற்றி அப்போதும் கூட ஊரில் யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தன்னை யாரோ சத்தமாக அழைப்பதை கவனியாமல் தான் நடப்பது போலவோ தோன்றிக் கொண்டேயிருந்தது.


நின்று நிதானித்துத் திரும்பிப் பார்த்தாள். யாரும் அழைத்தது போலாய் இருக்கவில்லை.


காட்டுப்பீலி நெருங்குமிடத்தில் பழம்பாசி செடிகளும் ஒட்டுப்புல்லும் பரந்து வளர்ந்திருந்தன. ஆளுயர பாம்புப் புற்றொன்று தன் உயரத்தை அதிகப்படுத்தியிருந்தது. அவர்கள் அதனைத் தாண்டி நகர்ந்தனர். அவ்விடத்தை நெருங்க நெருங்க உயரத்திலிருந்து பீலிநீர் விழுமோசையும் ஏதோவிதமான மருந்து மணமும் காற்றுடன் கலந்துவரத் தொடங்கியதையும் அவதானிக்க முடிந்தது.


அல்லிராணியின் ஆழ்மனது காரணமேயின்றி பதட்டங்கொள்ள ஆரம்பித்தது. காலில் மிதிப்படும் மிலாறு குச்சிகளை கவனியாமல் தேயிலைச் செடிகளின் பொட்டல்களை குறுக்குப் பாதையாக்கி அதனூடு வேகமாக நடந்தாள்.


தனக்குப் பின்னால் வருபவர்கள் இன்னும் தன்னை தொடர்கிறார்களாவென இன்னுமொருமுறை திரும்பிப் பார்த்தாள். ஓரிருவர் குறைந்திருந்தனர். ஒரு எல்லைவரை வந்து பீலி தெரியும் தூரத்தே நின்று உற்று அவதானிக்க முயற்சித்தாள். வெற்று இருளும் அடர்பச்சை நிற பாக்குமர இலைகளின் அசைவுகளுமே தென்பட்டன.


அவ்விடத்துப் பள்ளத்தில் தொடங்கும் கற்படிகளில் பரபரவென இறங்கினாள். அங்குமிங்குமாய் வளர்ந்து நின்ற பாக்கு மரங்களின் உடற்பகுதிகள் நிமிர்ந்து நில்லாமல் சாய்ந்து சரிந்து அவளது பாதையை வளைவு நெளிவுடையதாய் ஆக்கியிருந்தன. வேகமாக இறங்கியோடியவள் அதிலொரு பாக்கு மரத்தின் சாம்பல் வண்ணம் கலந்த தண்டுப்பகுதியை கெட்டியாக பிடித்துத் தன்னை நிறுத்திக் கொண்டாள். கண்கள் மூடி அவ்விடத்தை ஆழமாக நுகர்ந்தாள். கசிப்பைத் தாண்டிய மருந்து நெடியொன்று பரவியிருப்பதை உணர்ந்தாள்.


பின்னால் வந்தவர்கள் படியினின்றும் இறங்கிக் கொள்ளாமல் அல்லிராணியை அவதானித்தவாறே நின்றுகொண்டார்கள்.


அவ்விடத்தே விழுந்துக் கிடந்த பாக்குப்பட்டையொன்றின் பிடிப்பகுதியை முறித்தெடுத்துக் கொண்டாள். அத்தடியினால் கால்களுக்குள் இடைப்பட்ட இலைகுழைகளை பலமாக அடித்தொதுக்கி எதையோ தேடத்தொடங்கியிருந்தாள். சற்று தூரத்தே சாய்ந்து கிடக்கும் பெரிய நீலநிற கசிப்பு பெரல் ஒன்றைக்கண்டு செடிகளை அடித்து விலக்கியபடி அவ்விடத்திற்கருகே சென்றாள்.


முன்னேற முன்னேற மருந்துவாடை பிணவாடையைப் போலாகியது. ஆரம்பத்திலிருந்தே அல்லிராணியிடமிருந்த பதட்டம் பெருக அவள் தீவிரமாய் தேடினாள். அவளது காலடிச் சப்தம் கேட்டு குவியலாய் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கள் விலகியோடத் தொடங்கின. அருகில் சென்று பார்த்தவள் அப்படியே உடல் நடுங்க சிறிதுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

03

ராமமூர்த்தியின் மரணம் கொலையென்பதாய் சந்தேகிக்கப்பட்டது.


ராமமூர்த்தியின் உடலின் மீது க்ரமொஸ்ஸொன் வாசனை வந்ததாலும் அப்பகுதியெங்குமாய் அந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டோ அவனது மேனியெங்கும் ஊற்றப்பட்டோ இருந்தமையாலும் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலைக்கு பொறுப்பாகவிருந்த வாப்பலம் சந்தேக நபராய் மாட்டிக் கொண்டிருந்தான்.


ராமமூர்த்தியைக் கட்டாயப்படுத்தி யாரோ க்ரமொஸ்ஸொன் மருந்தைப் பருக்கியிருப்பதாகவும் அதன் விஷத்தன்மையாலேயே அவன் இறந்ததாயும் ஊரார் பேசிக்கொண்டார்கள். உடல் முமுதும் அப்படியே கறுத்து எரிந்துபோனாற் போல அவன் கிடந்ததாய் கூறி கவலை கொண்டார்கள்.


அல்லிராணியிடமும் விசாரணை நடந்தது.


கிட்டத்தட்ட அவளை ஒரு கொலைகாரியாகவே தீர்மானித்து போலிஸ் அதிகாரியொருவன் அவளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க திமிறிக் கொண்டிருந்தான்.


சிங்கள மொழியின் கெட்ட வார்த்தைகளையும் அவன் விசாரணையின் போது பயன்படுத்தினான்.


மிகச்சிறு அளவில் தனக்கிருப்பதான கேட்டல் திறனையும் அவ்வதிகாரியின் உதட்டசைவையும் வைத்து அல்லிராணி பதிலளித்தாள்.


‘தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’


கரத்திற்கான உண்மையான காரணத்தை வெளியே சொல்ல முடிந்திருந்தால் எப்போதோ சொல்லியிருக்கலாமே. வழமை போலவே அவன் குடித்துவிட்டு அடித்ததாய் கூறினாள். அது மட்டுமே காரணமென்றாள்.


‘தோட்டத்தில் உள்ள முக்கால்வாசிப் பெண்களது பிரச்சினையிது. நீ மட்டும் எதற்கடி விவாகரத்து செய்தாய்?’


அல்லிராணி எவ்வளவு சொல்லியும் அவன் ஒத்துக்கொள்வதாய் இல்லை.


‘உனக்கும் வாப்பலத்திற்கும் என்ன தொடர்பு? அவனை எங்கே சந்திக்கிறாய்? வீட்டில் சத்தமாக ரேடியோ ஒலிக்கவைத்துவிட்டு உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


அவன் ஏதோவெல்லாம் கேட்கத் தொடங்கியிருந்தான்.


‘இருவருமாய் சேர்ந்துதான் ராமமூர்த்தியை கொல்ல திட்டமிட்டீர்களோ?’


‘கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ என்று குரலை உயர்த்தி கையை சுவரில் பலமாகத் தட்டினான்.


அவளிடமிருந்த தைரியத்தை சூழ்நிலை கொஞ்சங்கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருந்தது.


விசாரணையில் அல்லிராணியிடமிருந்து உண்மை வரவில்லை எனத் தீர்மானித்தார்கள். அவளை போலிஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிக்க வேண்டுமென்பதாய் முடிவெடுத்து இரண்டு பெண்ணதிகாரிகள் வந்து அல்லிராணியை அழைத்துப் போனார்கள்.


இத்தனை காலமாய் ஊரில் திமிருடன் வலம் வந்த பெண்ணா இப்படி உடைந்து பதறுகிறாள் என்பதில் ஊராருக்கு பெரும் வியப்பு.


அவளை போலிஸ்காரர்கள் அடிப்பார்கள் என்றுதான் தோன்றியது. பாடலொலி இல்லாத அவளது வீடு வெறுமையடைந்து லயத்தையே சோர்வாக்கியிருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவுகளையே வெறித்தபடி அவளைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டார்கள்.

04

ஒரு பெண் போலிஸ் அல்லிராணியை தனியாக விசாரிக்கத் தொடங்கியிருந்தாள். தனது விவாகரத்திற்கான காரணத்தை முன்னுக்குப்பின் முரணாக சற்றே மாற்றி சொல்லியமையால் அல்லிராணி மீதான சந்தேகம் வலுவாகியது.


அல்லிராணி அழுதும் பார்த்தாள். தன் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுவதை அவள் விரும்பவில்லை. வாப்பலத்துடன் தனக்கு எதுவிதமான உறவுமில்லையென எல்லா வகையிலும் சொல்லி இறுதியில் இன்னுமே ராமமூர்த்தி கட்டிய தாலியை தான் பாதுகாப்பதாய் வெளியே இழுத்துக் காட்டினாள்.


‘தாலியை பாதுகாக்கும் நீ புருசனை வேண்டாமென சொல்லியிருக்கிறாயென்றால் அதற்கு நிச்சயமாய் வேறேதும் காரணங்கள் இருக்கும். சொல்லு அதை சொல்லு’


அப்போது வேறிரு போலிஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ‘என்ன கேஸ்?’ என்றார்கள்.


‘புருசனை கொன்றுவிட்டு நடிக்கிறாள்’ என்று அந்தப் பெண் போலிஸ் சொல்லிக்கொண்டே அல்லிராணியை முறைத்துப் பார்த்தாள்.


‘காரணம்?’


‘வேறென்ன…?’


அவர்கள் சத்தமாகச் சேர்ந்து சிரித்தார்கள். அல்லிராணிக்கு வார்த்தைகளே வரவில்லை. தொண்டையடைத்துப்போய் வறண்டிருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போலவும். ஆனால் அவர்களிடம் கேட்கும் துணிச்சல் இருக்கவில்லை. அவர்கள் அல்லிராணியை கொலைகாரியாய் கருதியே பேசிக்கொண்டிருந்தார்கள்.


வாப்பலமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தான். அவனுடன் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலை செய்யக்கூடிய இன்னும் சிலரும் வந்திருந்தார்கள்.


முதன்முதலில் விசாரித்த அந்தப் போலிஸ் எல்லா ஆண்களுடனும் அல்லிராணியை இணைத்துப் பார்த்து ஒரு விபச்சாரியாகவே அவளை மாற்றிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்திற்கு இவர்களுக்கு பதிலளித்தால் தன் நடத்தையில் தனக்கே சந்தேகம் வந்துவிடுமாப் போலிருந்தது.


அல்லிராணி நொந்து போயிருந்தாள். அவளுடைய திமிர், வீராப்பு, நம்பிக்கை எல்லாமே காணாமல் போய்க்கொண்டிருந்தது. யாருமேயற்ற அநாதையைப் போலுணர்ந்தாள்.


திடீரென ‘உண்மையை சொல்லி விடுகிறேன்’ என்றாள். அவளது முகம் பயத்தாலும் பதட்டத்தாலும் விகாரமடைந்தாற் போலிருந்தது.


அவசரமாக அந்த அதிகாரி ‘ஏன் உனக்கு விவாகரத்து தேவைப்பட்டது?’ என்றார்.


அல்லிராணி எச்சில் விழுங்கியபடி தயங்கித் தயங்கிச் சொல்லத் தொடங்கினாள்.

‘ராமமூர்த்தி ஒரு குடிகாரனாய் இருந்தான். ஆரம்பத்தில் குடித்த அளவை விட நாளுக்கு நாள் அவன் குடித்த அளவும் அவனது மூர்க்கத்தனமும் அதிகரித்தவாறே சென்றது. சாதாரணமாக குடித்து சண்டையிட்டு சமாதானமாகும் ஒருவனாக அவன் இருக்கவில்லை. மிகவும் விசித்திரமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தான்.’


அல்லிராணி சொல்வதை ஒரு போலிஸ் எழுதிக் கொண்டாள்.


‘ம்ம்… சொல்லு என்ன விசித்திரமாக நடந்து கொண்டான்.?’


‘எனக்கு ஆரம்பத்திலிருந்தே கசிப்பின் மணம் பிடிக்கவேயில்லை. கசிப்புடன் வரும் அவனையும் வெறுக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் குடித்த பின்னர்தான் அவனுக்கு நான் அதிகமாக தேவையுடையவளாகியிருந்தேன். என்னுடன் பலவந்தமாக உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். மறுக்கும் போதெல்லாம் அடித்தான்.’


‘பிறகு’


அல்லிராணியின் குரல் இப்போது மெல்லிய நடுக்கம் கொண்டதாய் மாறியிருந்தது.


‘தொடர்ச்சியாக சிலதினங்களில் கசிப்பை வீட்டுக்கு கொண்டுவர ஆரம்பித்து உறவின் போது இடைக்கிடையே குடித்துக்கொண்டான். அவ்வாறு குடிக்கும்போது என்மீது சிதறிய துளிகளை வெறிகொண்டு நாவினால் வழித்தெடுத்துக் குடித்தான். அது அவனுக்கு புதுவித போதையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ஒரு பைத்தியத்தை போல் என்னவெல்லாமோ செய்து என்னை வதைக்கத் தொடங்கினான்.’


அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.


‘அவன் புதுவிதமான உறவுமுறைகளையும் கசிப்பின் சுவையினையும் கலந்து அனுபவிக்க பழகினான். அடுத்தகட்டமாக எனது ஆடைகளை பலவந்தமாக பிய்த்தெறிந்து வேண்டுமென்றே முகம் கழுத்து வயிறு என்றெல்லாம் ஒவ்வொரு அங்கமாக கசிப்பால் நனைத்து அதனை உறிஞ்சிக் குடித்தான்.’



எழுதிக்கொண்டிருந்தவள் அதிர்ச்சியுடன் எழுதுவதை நிறுத்திவிட்டு அல்லிராணியைப் பார்த்தாள்.


‘நான் அருவருப்பில் வெந்து தடுமாறுவேன். ஏற்கவும் முடியாமல் தடுக்கவும் திராணியில்லாமல் அவனாக போதை முற்றி என்னை விடுவிக்கும் வரை அசையாமல் மூர்ச்சித்துக் கிடப்பேன். அப்போதெல்லாம் அந்த மணத்தின் குமட்டலையும் அவன் மீதான வெறுப்யையும் அனுசரிப்பதைவிட இறப்பது மேல் என்று மட்டுமே எண்ணிக்கொள்வேன்’


அவர்கள் எதுவுமே பேசவில்லை. அல்லிராணியை மேலே பேசவிட்டார்கள்.


‘ஒருநாள் … அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கசிப்பை எனது வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி என்னிலும் போதையிருக்க வேண்டுமென விரும்பியவனாய் இயங்கிக் கொண்டிருந்தான். அடுத்ததாய் எனது பிறப்புறுப்பில் கசிப்பை ஊற்றி அதனை குடிக்க எத்தனித்தான். நான் கத்தியலறினேன். என்னைமீறி அவனை எத்தித்தள்ள முயற்சித்தேன்’


சற்று இடைவெளிவிட்டு கண்களை தனது கையிலிருந்த துவாயால் துடைத்துக் கொண்டாள். அவ்விடம் நிசப்தமாகியிருந்து.


‘பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து கதவைத்தட்டி விசாரித்தபோது நான் அவனை உறவு வைத்துக்கொள்ள அழைத்துக் கத்திக் கொண்டிருப்பதாய் அவர்களிடம் பொய் சொன்னான். அவர்கள் காறி உழிழ்ந்துவிட்டு என்னை கெட்ட வார்த்தையால் ஏசியபடியே சென்றார்கள்.’


‘பிறகு’


‘இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் யாரிடம் உதவி கேட்பதென தடுமாறி… எப்படியோ யோசித்து இறுதியில் ராதிகா டீச்சரின் உதவியுடன்தான் விவாகரத்து பெறவும் முயற்சித்தேன்.’


‘ராதிகா டீச்சர் யார்?’


‘எங்கள் தோட்டப் பாடசாலையின் அதிபர்’


அவர்கள் ராதிகா டீச்சரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள்.


‘விவாகரத்து பெற்ற பின்னரும் அதிகாலையில், இரவுகளில் என்று அவன் உனது வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’


அவன் வரும்போதெல்லாம் அல்லது கதவை தட்டுவது பற்றி அறியும்போதெல்லாம் கோபமும் பயமும் சேர்ந்ததான உணர்வும் தனது தனிமையும் இறப்பின் நுனிவரை இழுத்து தன்னை அலைகழித்த அந்த உணர்வை அவளால் சொல்லிக்கொள்ள முடியாமலிருந்தது.


அதனை நினைக்கும் போதே உடல் நடுங்குவது போலவும் சிலிர்த்தடங்குவது போலவும் அல்லிராணி பதட்டமடைந்திருந்தாள். முகம் வியர்த்திருந்தது.


அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.


‘அதிகாலையிலும் இரவுகளிலும் உன் வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’


அவள் ஆமாமென்பதாய் தலையாட்டினாள். அதனைத் தவிர்க்கவே தான் சத்தமாக ரேடியோவை ஒலிக்கவிட்டதாய் கூறினாள்.


அத்தனை நேரமும் அல்லிராணியை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு மேலதிகாரி சட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்து அவ்விடத்திற்கு வந்தார்.


‘நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ என்று கட்டளையிடுவதைப் போல சத்தமாகக் கூறி அவள் பேசிக்கொண்டிருப்பதை இடைநிறுத்தினார்.


‘ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ என்று மிகுந்த ஆத்திரத்துடன் அவர் சொல்லிக்கொள்வதை அல்லிராணியால் ஊகிக்க முடிந்தது.


அதுவரை எழுதிய வாக்குமூலத்தின் இறுதிப்பகுதியை காட்டி அல்லிராணியை கையொப்பமிடச் சொன்னார்கள். வாப்பலத்திடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அல்லிராணியை அனுப்பலாம் எனப் பேசிக்கொண்டார்கள்.


அல்லிராணி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். போலிஸ் ஸ்டேசனுக்கு வெளியே ஓரமாய் தெரிந்த குழாயைக் காட்டினார்கள். அவள் குழாயைத் திறந்து கைகளால் ஏந்தியபடி நீரருந்தினாள். முகத்தை தேய்த்துக் கழுவி துவாயால் துடைத்துக்கொண்டு மீண்டும் வந்து அதே இடத்திலேயே அமர்ந்தாள்.


வாப்பலத்திடம் விசாரணை தொடங்கியிருந்தது. அவன் சோர்ந்து போயிருந்தான்.


‘அன்றைய தினம் நீதான் க்ரமொஸ்ஸொன் கிருமிநாசினியை தோட்டத்திலிருந்து பெற்று மற்றைய தொழிலாளர்களுக்கு விநியோகித்திருக்கிறாய். மிகுதியை நீ ஒப்படைக்கவில்லையென தோட்ட நிர்வாகிகள் கூறுவதிலிருந்து உன்மீதான சந்தேகமே அதிகமாக இருக்கிறது. சொல். ஏன் அவனை கொலை செய்தாய்?’


வாப்பலத்திற்கு சிங்களம் தெரியவில்லை. அவன் தமிழிலேயே பதிலளித்தான். கேள்விகளையும் பதில்களையும் தமிழிலிலும் சிங்களத்திலுமாய் மொழிபெயர்க்க இருமொழிகளிலும் தனக்குப் பரிச்சயம் உண்டென காட்டிக்கொண்ட ஒரு போலீஸ் ஓரளவு அர்த்தம்பட மொழிப்பெயர்த்துக் கொண்டிருந்தான்.


‘அன்னிக்கு மிச்சப்பட்ட மருந்து கேன் காணாம போயிருச்சுங்க. அத அன்னைக்கே கங்காணிகிட்ட சொல்லிட்டேனுங்க’ என்றான்.


‘உன்னுடன் அன்று வேறு யார் யாரெல்லாம் வேலை செய்தார்கள்?’


வாப்பலம் நன்கு யோசித்து அனறைய தினத்தை நினைவிற்கு கொண்டு வந்தான்.


அன்றைய தினம் பக்கத்து மலையில் வேலை செய்த அல்லிராணி சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாதையில் நடந்து சென்றதை ஞாபகப்படுத்த முடிந்தது. ஆனால் அதனைச் சொல்ல அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. அவள் வேறு காரணத்திற்காகவும் வந்திருக்க முடியுமெனத் தோன்றியதுடன் அவளைப் பார்க்கவும் மிகப் பரிதாபமாகத் தெரிந்தாள்.


அதனைத் தவிர்த்துவிட்டு அவன் யோசித்தான்.


குறிப்பிட்ட அத்தினத்தன்று வேலையிலிருந்த ஆண்களின் பெயர்களையெல்லாம் வரிசையாகச் சொன்னான்.


தொடர்ச்சியாக வந்திருந்த வேறு சிலரிடமும் விசாரணைகள் நடந்தன. சிறிது நேரத்திற்குள் அவர்கள் அனைவரையும் போகும்படி சொன்னார்கள்.


அல்லிராணி மௌனமாக அவ்விடத்திலிருந்து எழுந்தாள். தன்னை விடுவித்து அனுப்பிவிடும்படி சொன்ன அதிகாரியை ஒரு தடவை நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டாள்.


எப்போதோ இறந்து போயிருந்த தன் தந்தையின் சாயல் அவரது முகத்தில் தென்படுகிறதாவென யோசித்தவாறே அங்கிருந்து வெளியேறினாள்.

………………………


‘தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’ – நீ ஏன் உன் கணவனை விவாகரத்துச் செய்தாய்?


‘கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ – சொல்லு நாயே … உண்மையை சொல்லு


‘நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ – நிறுத்துங்கள். இவளை அனுப்பிவிட்டு நான் சொல்வதை செய்யுங்கள்


‘ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ – அவனை கொன்றல்ல… எரித்துப் போட்டிருக்க வேண்டும்.

***

நன்றி - யாவரும்

Tuesday, July 13, 2021

நீலி - பிரமிளா பிரதீபன்

By On July 13, 2021

துங்ஹிந்த நீர்வீழ்ச்சி தெறித்து விழுமோசை அவ்வனத்து எல்லை வரை துல்லியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கிளைக்குக் கிளை தாவிக் குதித்துக்கொண்டிருந்த இரண்டு குரங்குகள் அவ்வோசையின் தாளத்திற்கேற்பவே பாய்ந்தபடி சென்றன. 


அக்காட்டின் ஒற்றை தேவதையான நீலி அக்குரங்குகளை பின்தொடர்ந்தபடி நடந்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தனவாய் அக்குரங்குகள் திசைமாறி போய்க் கொண்டிருந்தன. 


காட்டிற்குள் படர்ந்திருந்த இருள் குரங்குகளை இன்னும் கருமையாகக் காட்டியதால் நீலி அடிக்கடி அவற்றை உற்று அவதானித்துக் கொண்டாள். இலைகள் மூடியிருக்கும் புதர்களை நீலி நன்கறிவாள். அவ்விடங்களை தவிர்த்தொதுக்கியவாறு பாதைகளற்ற அடர்தாவரப்பகுதிகளுக்கிடையே வழியொன்றை உருவாக்கியவளாய் அவள் நடந்தாள். 


திருப்பங்களில் திடீரெனத் தட்டுப்படும் மரக்கிளையிடத்து குனியத் தோன்றாமல் அவற்றை வலிந்துப் பிடித்துத் தள்ளினாள். சில காய்ந்த வாதுகளை உடைத்து முறித்துப் போட்டாள். முட்செடிகளை தாண்டும் போது ஏற்படும் சிராய்ப்புகளை கணக்கில் கொள்ளாது சிரித்தபடியே நடந்தாள். முட்கீறலின் நீள்கோட்டு வடிவ அச்சுகள் அவளது கைகளிலும் கால்களிலுமாய் படிந்திருந்தன. 


களைந்திருந்த கேசத்தை கைகளால் நீவி அழுத்தி விட்டுக்கொண்டாள். முகத்தை கைகளால் துடைத்துக் கொண்டாள். குளிர்காற்றின் ஊறல் மேனியை சில்லிட செய்தது. கைகளில் தட்டுப்பட்ட ஏதோவொரு இலையை பிய்த்துக் கசக்கி மணந்து பார்த்தாள். வாசனையில் கசப்பேறியிருந்தது. கைகளில் படிந்திருந்த பச்சையத்தை இன்னுமொரு மரத்தின் தண்டுப்பகுதியில் தேய்த்து விட்டபடி குரங்குகளைத் தேடினாள்.   

  

தனக்கு அதிர்ச்சி தருவதான இரண்டு செய்திகளை அந்தக் குரங்குகள் அவளிடம் கூறியிருந்தன. 


ஓன்று துங்ஹிந்த நீர் வீழ்ச்சியைப் பார்க்க வரும் மனிதர்களுடன் நீலியை விடவும் அழகான பெண்கள் வருகிறார்களாம்.


இரண்டு அக்காட்டு நடைவழிப்பாதையின் ஓரிடத்தில் முல்லை நிலத் தேவனெனும் ஒரு கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளதாம்.  குறிப்பாக அச்சிலை நீலம் படிந்த கருமை நிறத்துடன் அப்படியே நீலியை ஒத்ததாய் தோற்றம் தருகிறதாம்.   


இரண்டாவதாக குரங்கு சொன்ன அவ்விடயமானது நீலியின் நாளாந்த நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றுவதாயிருந்தது. குதூகலிப்பின்  அதிர்வுகள் பன்மடங்காகி அவளை பெரிதும் அவஸ்த்தைப்படுத்தத் தொடங்கியிருந்தன. 


மனித நடமாட்டமுள்ள  பகுதிகளுக்குள் செல்வதை விடுத்து அவர்கள் கடக்கும் பாதைவழிச் சென்று அழகுத்ததும்புமந்த நீர்வீழ்ச்சியைத்தானும் அருகிருந்து இரசிக்கத்துணியாத அவள் குரங்குகள் கூறியிருந்த இரண்டையுமே பார்த்து விடுவதென முடிவெடுத்தவளாகவே அவைகளைப் பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.  


குரங்குகள் கண்ணில் தென்படவில்லை. ஆனால் அவை இலைகளுடன் உரசியபடி மரங்களில் தாவிச் செல்லுமோசை மட்டும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 


நீண்ட தூரம் நடந்து விட்டதாய் தோன்றியதவளுக்கு. கைகள் கோர்த்துயர்த்தி உடல் நெளித்தாள். கழுத்தைச் சுழற்றி நெட்டி முறித்துக்கொண்டாள். ஆழ்ந்து சுவாசித்து மென் காற்றின் வசீகரத்தை அப்படியே உள்ளிழுத்தாள். 


வெகு நாட்களாய் வெளியேறாமலிருந்த அடர் காட்டுப்பகுதிக்குளிருந்து வெளியேறியதால் சிவந்த தன் விழிகளால் சுற்றிலும் பார்த்தவாறாய் ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாகவே எடுத்து வைத்தாள்.


அழுத்தமான அவளது காலடிகள் பட்டு ஆங்காங்கே சிறுதாவரங்கள் சிலிர்த்துக் கெண்டன. அவளுக்கு பரிச்சயமற்ற பகற்பொழதுப் பறவைகள் மறைந்துக் கொண்டன. தன் நிமிர்ந்த நேரான திமிர் நடைக்கு தடைகளாக எதிர்பட்ட சிலந்திவலைகளை கைகளால் விலத்தி வீசியெறிந்துவிட்டு நீலி நடந்துக் கொண்டிருந்தாள். 


தேவையேற்படும் போதிலெல்லாம் தன்னை ஒரு யட்சியாக மாற்றிக்கொள்ளும் நீலியால் அந்த மொத்த காட்டையும் ஆளக்கூடிய தோரணை இருப்பதாய் எண்ணிக்கொள்ள முடிந்தது. யட்சியாக உலவும் அவளின் கோரம் கண்டு அவ்வனத்தின் விலங்குகளை விடுத்து தாவரங்களும் கூட அஞ்சிக்கிடப்பதையும் அவ்வப்போது அவதானிக்க முடியுமாயிருந்தது. 


ஆனால் அந்தக் காட்டினை நேசிப்பதை போலவே அங்கிருந்த தாவரங்களையும் விலங்குளையும் கூட நீலி நேசிப்பவளாகவே இருந்தாள். 


காற்றுடன் மிதக்கும் சில ஆண் பிசாசுகள் எப்போதாவது அவளை நெருங்க நினைக்கும் பொழுதுகளில் மாத்திரம் நீலி மூர்க்கம் கொள்வாள். காட்டையே ஸ்தம்பிக்க செய்யுமளவில் சினம் கொப்பளிக்க நடனமாடவும் தொடங்குவாள். 


தன் கோர நடனத்தின் இசையென துங்ஹிந்த நீர்;வீச்சியின் இடையறாத ஓசையை செவிமடுத்து மணிக்கணக்கில் ஆடிக்கொண்டேயிருப்பாள். தன் நாட்டியத்தின் அங்கங்களாய் எதிர்பட்டதெல்லாம் சினந்தெறிக்க துவம்சம் செய்வாள். வெறித்தனமாய் கானம் இசைத்து தன்னை ஆசுவாசப்படுத்தவும் துணிவாள். எல்லாம் தாண்டிய நடனத்தின்  எல்லையென அதிமோகம் கொண்டவளாய் முழுக்காட்டையுமே புணர்ந்தும் கிடப்பாள். 


அவள் பிரமாண்டமானதொரு சக்தியாகவும்… தாமரை முகம் கொண்ட மூலாதார சாகினியாகவும்… அரக்கியாகவும்…  அவ்வப்போது அகோரியாகவும்… இனியில்லையெனுமாறான அழகியாயும் கூட… துங்ஹிந்த காட்டின்  மகாராணி தானெனும் அடங்கா போதையுடன் அவள்  நீலியாகவே அக்காட்டினை ஆக்கிரமித்திருந்தாள். அக்காடும் அவளை அரவணைத்துக் கொண்டிருந்தது. 


திடீரென ஒருநாள் தான் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தேவனை சந்திக்கப்போகிறோம் என்பது ஒரு கனவு போலவே இருந்தது. அது அவளது இயல்புகளை முற்றிலும் மாற்றம் காணச்செய்திருந்தது. 


நீலி தன் நடையை கொஞ்சம் மிருதுவாக்கினாள். தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு பேரெழிலை தனக்குள் ஏற்றிக் கொள்ள பிரயத்தனித்தாள்.  


வழிநெடுகிலும் கண்களுக்கு இதம் தந்த காட்டுப்பூக்களின் செந்நிற இதழ்கள் சொரிக்கும் விஞ்சிய அழகை காணுற்று அதன் சில மொட்டுக்களை தன் அடர்கூந்தலுக்குள் பரவலாக சூடிக்கொண்டாள். மயில்கள் சிந்திவிட்டுப்போயிருந்த வர்ண ஜொலிப்புடனான தோகைகளை சேகரித்து பிரகாசமானதொரு ஆடைநெய்தாள். ததும்பி வழிந்த அழகுடனான அவ்வாடையை கச்சிதமாக தன்மேனியில் பொருத்திய அக்கணத்தில்தான் தன் பிம்பத்தை ஒருமுறை காண வேண்டுமெனும் அவாவும் சேர்ந்தே அவளிடம் உச்சம் பெற்றது.


நடைபாதையை மாற்றி துங்கிந்த நீர்வீழ்ச்சியின் கிளையாறாய் சலனமற்று கிடக்கும் ஓர் அருவியனருகே நின்றுக்கொண்டாள். பகற்;பொழுதின் மினுமினுப்பு நீரின் மேற்பரப்பில் மிதக்கத்தொடங்கியிருந்தது. நிறைந்து கிடந்த கூழாங்கற்கள் சிறு அதிர்வும் கொள்ளாமல் அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்தன.  


தன் கால் விரல்களினால் ஒரு தொங்கல் நீரை அலம்பி நீர் மேற்பரப்பில் ஊடாடும் மெல்லிய அதிர்வையும் நீரினுள் சிறு முனகல் ஓசையினையும் ஏற்படுத்தி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். இதே இடத்தில் தன்தேவனுடன் தான் தழுவும் பிம்பத்தை நீர்மேற்பரப்பில் காணவேண்டுமென தோன்றியதவளுக்கு. 


மெல்லக்குனித்து தன் வதனத்தின் எழிலை உறுதி செய்துக்கொண்டாள். பரந்திருந்த கூந்தல் சரிந்து ஒருபக்கமாகத் தொங்கியது. கருவிழிகளின் படபடப்பு மீன்களென காட்சி தந்தன. மயிலிறகாலான அவ்வாடை பளபளத்து அவளை பேரெழிலுடன் மயக்கம் கொள்ளச்செய்தது. அவள் தன் நிமிர்வான உடலையும் இடையின் வளைவையும் கண்டு மகிழ்ந்துக் கொண்டாள். 


இருபிறவி காத்திருப்பின் பினனர்; தன் தேவனை அடையப்போவதாய் நினைத்து நீலி சிலிர்ப்புற்றாள். மீண்டும் அவ்வடர்வனத்தின் மென்காற்றை எதிர்கொண்டபடியே தேவனின் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.   


இப்போது ஒரு மானிடப்பெண்ணாக நீலியால் அவளை உணரமுடிகிறதெனும்போது வந்துக் குவிந்த முற்பிறவியின் கொடிய நினைவுகளை வீசியெறிய முடியாமல் தவித்தாள். 


ஒரு வணிகனும் அபலை பெண்ணொருத்தியும் பேசிக்கொண்ட வார்த்தைகள் காற்றினூடாக அவளைத்தொடர்ந்துப் பரவிக்கொண்டிருந்தன. 


‘நிஜமாகவே இதுதான் வழியா? பெரும் காட்டுப்பகுதியாக தெரிகிறதே?’


‘பயம் வேண்டாமடி. மாலையிட்ட கணவன் கூடவே இருக்கிறேனே உனக்கென்ன பயம்?’


‘நாங்கள் வழிமாறி போவதாய் தோன்றுகிறது. இவ்வழியில் மனிதர் வாழும் ஊரொன்று இருக்க சாத்தயமில்லை அத்தான்.’


‘சிறுதூரம் பொறுத்துக்கொள் இதோ அருவியோடும் ஓசையும் ஏதோ ஆரவாரங்களும் கூட கேட்கிறதே. நாம் அபூர்வமானதொரு திருவிழாவை காணவே அடுத்த கிராமத்திற்கு செல்கிறோம்’


மனமெங்கும் கௌவிய பயத்தை அவள் மறைத்துக்கொண்டாள். ஒருசிலநாட்களாய் பிற மாது ஒருத்தியின் மாய வலைக்குள் சிக்கியிருந்த தனது கணவனை மீட்டெடுத்த பெருமிதத்தில் அவனது கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள். 


நடைபாதை குறுகியது. விசாலமான வேர்கள் கால்களுக்குள் இடர்பட்டன. சில்லென குளிர்விக்;கும் அடர்த்தியான காற்று திடீரென உடலை அப்பிக்கொண்டது. பெரிய பெரிய மரங்களும்,  கருமையும், விசித்திர செடிகளின் பரிச்சயமேயற்ற மணமுமாய் அவ்விடம் காட்டின் நடுப்பகுதி போலவே இருந்தது. பெயர் தெரியா பறவைகளும் நடுங்க வைக்கும் அவற்றின் ஓசைகளும் பெருகின. 


‘அத்தான் எனக்கு பயமாக இருக்கிறது’ என்றாள். 


நிமிர்ந்து அவளை பார்க்கும் அதே நொடியில் தயாராக வைத்திருந்த கத்தியால் அவளது வயிற்றை பலமுறை கிழித்துப்போட்டான்.  


‘என் வாழ்க்கையில் குறுக்கிட தகுதியிள்ளாதவள் நீ…. மணந்த பாவத்திற்காக ஒரு மூலையில் கிடந்திருப்பாயானால் தொலையட்டும் என்று விட்டிருப்பேன். நீயோ என்னை சதா இம்சித்து உனக்குரியவனாக மட்டுமெனை வாழவைக்க முயற்சிக்கிறாயே. செத்து தொலையடி.’ 


கொஞ்சமும் எதிர்பாரா ஏமாற்றத்துடனான வலியிது. கதறியழவும் திராணியற்று உறைந்துப்போயிருந்தாள். கத்தி கிழித்த காயமோ, திடீரென அந்நியமாகிப்போன சூழலோ அன்றி அவனது பச்சையான துரோகம் கண்முன் நிழலாடியது. 


பெருகும் குருதி பாய்ச்சலை கைகளில் அமத்திப் பிடித்தபடி அவ்விடத்திலேயே சரிந்து விழுந்தாள். பழிவாங்கும் ஆதங்கம் அவளுக்குள் உதித்திருந்த அடுத்த நொடியிலேயே மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தாள். இருட்டிக்கொண்டுவரும் பார்வைக்குள் கடைசியாக அவனது வெற்றிச்சிரிப்பை கண்டபடியே வயிற்றுத்தசைப்பகுதிக்குள் குத்துப்பட்டு இறுகியிருந்த கத்தியை தீராத்துயருடன் உருவியிழுத்தபடி மெல்ல அடங்கினாள்.  


உயிர்நீத்த அவ்வலியின் துளியெச்சம் இன்னுமே ஒட்டியிருப்பதாயிருந்தது நீலிக்கு.  வயிற்றைப்பற்றிப்பிடித்து தடவிப்பார்த்தாள். நடுங்கியோய்ந்த உடலதிர்வை நிதானித்து உணர்ந்தாள். ஏக்கம் நிரம்பிய பூங்காற்றை சுவாசித்துக் கொண்டாள். 


தனது பிறவி இரகசியங்களை தேவன் அறிந்திருப்பானென்றே நீலிக்குத் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் தன்னால் தேவனை தரிசிக்க முடியுமெனும் உணர்வானது அவளை பலமடங்கு சக்தி கொண்டவளாக்கிக் கொண்டிருந்தது. உள்ளம் பூரிக்க தேவனது ஆலயத்தை நெருங்கினாள். ஆளுயர சிலையாய் தேவன் சாந்தமாய்  வீற்றிருப்பதை வெளியே நின்று கண்கொட்டாமல் பார்த்தாள். தான் தேவனின் பாதம் தொட அவர் அனுமதியாவிடின் திரும்பிப்போகலாம் எனும் நோக்கில் நடுக்கத்துடன் உள்ளே ஓரடி எடுத்து வைத்தாள்.


தானொரு யட்சியல்லவென்பதை நீலியுணர்ந்தாள். பாய்ந்தோடி தேவனின் பாதம் பற்றிக்கொண்டாள். பதைபதைப்பு மேலிட நிமிர்ந்து தேவனின் முகம் நோக்கினாள். “நீயே என் தேவன்… நீயே என் தேவன்… உனக்காகவே இருபிறவிகளெடுத்து காத்திருக்கிறேன்;. என்னை ஏற்றுக்கொள் தேவா…’


நீலி ஆனந்தத்தில் அழுதாள். 

‘தனக்கேற்ற துணையினை தெரிவு செய்யும் ஒரு ஜீவனாலதான் உண்மையான வாழ்வின் சுவையை அனுபவித்திட இயலும். வணிகன் தன்னை வலிந்து மணந்தான். பெண்ணொருத்தியின் அபார சக்தி கண்டு பயந்தான். அவளை அடிமையாக்க திட்டமிட்டு பிற மாதுக்களை நாடி கட்டிய மனைவியை  உள்ளத்தால் வதைத்தான். நம்பிக்கையிழக்க வைத்தான். ஆதிக்கம் மேலோங்கி ஒரு கட்;டத்தில் பரிதாபமாய் அவளைக் கொன்றான். 


பழிதீர்க்க வேண்டி நான் பேயாய் பிறப்பெடுத்திட காரணமானான்.   எனதிந்த கைகளாலேயே இறந்தும் போனான். போதா குறைக்கு அவனுக்கு கொடுத்த வாக்கிற்காக  எழுபது வேளாளர்கள் தீயில் விழுந்திறந்த அதிபாவத்தையும் என்னுடையதென்றாக்கினான். நான் வேறென்ன செய்ய முடியும்? பாவங்கள் கரைத்திட யட்சியாகவே அலைந்து திரியவா அல்லது என் தேவனே நான் உனக்கான தவத்தை தொடரவா? எத்தனை காலம் மழையிலும் வெயிலிலும் இக்காட்டில் தனித்திருந்து யாசித்தேன் இரங்கி என் கரம் பற்றிட மாட்டாயா?’ 


நீலி அழுதபடி கண்ணிரால் தன் தேவனுடன் உரையாடினாள். இடைக்கிடையே தேம்பியபடி அவரது உருவச்சிலையின் பரிபூரணத்தை உணர்ந்தாள். 


காற்று விசிறியடிக்கத் தொடங்கியது. காய்ந்த இலைச் சறுகுகள் அந்தரத்தில் மிதந்தன. ஊதாநிற பூக்களின் சுகந்தம் அவ்விடத்தை நிரப்பியது. அகண்ட அவ்வெளியில் பரவியிருந்த இருள் மெல்ல விலகி சுற்;றிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. இதுவரை கண்டிராத சிறு பறவைகள் தம் செந்நிற சிறகை விரித்தபடி  வானெங்கும் ஆர்பரித்தன. 


நினைவுக்கெட்டாத சம்பவங்களை காட்சியாக்கிப் பார்க்கத் தெரிந்த பாக்கியசாலியாக தன்னை மாற்றிக்கொண்டு அழிவற்றவைகளையும் சிலிர்ப்பூட்டக்; கூடியவைகளையும் தோற்றம் கொள்ளச் செய்ய நீலி முயற்சித்தாள். தேவனின் உரையாடலூடாக பரமரகசியத்தின் உச்சம் கண்டு மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவதற்கு அவளுக்கு முடியுமாயிருந்தது. 


‘எழுபது வேளாளர்ககள் தீயில் விழுந்து மடிய காரணமான பாவத்தை சுமப்பவள் நீ’ 


‘வணிகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிட அவ்வேளாளர் தம் உயிரை மாய்த்துக்கொண்டனரே தவிர்த்து நானெங்கனம் அதற்கு காரணமாகுவேன்? 

‘வணிகனை பழி தீர்க்க அலைந்த நீ அவனுக்கு உதவ முன்வந்த வேளாளர்கள் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். கூடவே தன்னலமற்று வணிகனுக்காக தம் உயிரை பணயம் வைத்து உன்னிடம் வணிகனை அனுப்பிய அவர்களுக்காக நீ இரங்கியிருக்க வேண்டும்.’


‘அதற்காகத்தானே தனித்திருந்து இக்காட்டில் சபிக்கப்பட்டவளாய் அலைக்கழிகிறேன். இனியுமா என்னை தண்டிக்க வேண்டும்?’ 


‘நீலி நான் ஒன்றை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்’

‘கேளுங்கள் தேவனே’


‘உனது கர்மாவின் பாவங்களை போக்க நீ தவமிருப்பதில் தவறில்லை. எதற்காக என்னை துணையாக அடைய நினைக்கிறாய்?’ 


‘சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சாதாரணமாகவே பெண்பிறப்பென்பது அளவற்ற சக்திகளையும் ஆற்றல்களையும் தம்மகத்தே கொண்ட பிறப்பென்பது நீங்கள் அறிந்ததுதானே. அதிலும் எனையொத்த ஒரு பெண் ஆடவனினொருவனின் அதிகாரத்திற்குள் அடங்க வேண்டுமென்பதற்காக வரிசையாக இழப்புக்களைக் காண நேரிட்டால்…? நாளாந்தம் அனுபவித்த சித்திரவதைகளுக்கு  தனது ஆற்றல்களை அடக்க வேண்டுமென்ற ஒரு ஆணின் எண்ணமே தலையாய காரணம் என்பது தெரிந்து விட்டால்…? அவள் தன்னிலும் சக்தி மிக்க ஒரு ஆடவனை துணையாய் கொண்டிருக்கலாம் என எண்ணுவது இயல்பு தானே?’ 


‘இது சூழ்நிலையினாலான முடிவு அல்லது ஆசை. ஆனால் என்னை ஏன் எப்போதுமாய்  உச்சரித்து வேண்டிக்கொண்டிருந்தாய்?’ 


‘தேவனே… ஒரு பெண் தனது வாழ்வில் துணையாக கொள்ளுமொருவர் பற்றிய கனவுகளை பல வருடகாலங்கள் தமக்குள் சுமக்கிறாள். அது பொய்யாய் போனதா இல்லை சரிதானாவென்பதை வாழ்க்கையின் பாதி தூரத்தை கடந்த பின்னரேயே உணர்கிறாள். உணர்ந்தென்ன பயன் அத்தருணம் அவள் வாழ்வின் பிடிக்குள் இறுக்கமாய் பின்னப்பட்ட சந்தர்ப்பமாய்…. வெளியேற முடியா  துடிப்புடனானதாய்த்தான் அனேகமாய் அமைந்து விட்டிருக்கிறது. என்ன…! அவள் அதனை வெளிக்காட்டத் துணிவதில்லை.’ 


இறைவனின் மௌனம் கண்டு நீலி தானே மீண்டும் தொடர்ந்தாள். 


‘உங்களுக்கு தெரியாதது இல்லை தேவனே. தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?  அப்படியான ஒரு துணையுடன் ஒருசில மணிநேரம் வாழ்ந்து மடிதல் கூட எல்லையற்ற இன்பமாகத்தானே அமையும்.  அண்டத்தை காக்கும் உங்களின் இந்த அருகாமை சிலபொழுதேயாயினும் என் தவத்தின் உச்சப்பயனே இதுதானென இதோ நான் பேருவகைக் கொண்டு பேசுகிறேனே இதனைப்போலவே.’ 


‘ஆக ஒரு பெண்ணுடன் வாழத்தலைப்படும் ஒவ்வொரு ஆணும் பெரும் ஆளுமையுடையவனாகத்தான் இருந்திட வேண்டும் என்கிறாயா?’


‘நிச்சயமாக இல்லை தேவனே.  தன்னை பற்றி அறிந்து கொண்டிருக்கிற ஒருவன் தனக்கு மிஞ்சிய துணையை வலிந்து சொந்தமாக்கிக் கொள்ளல் தவறு என்கிறேன். அவள் தன்னை மீறி செயற்படுவாளோ எனுமச்சத்தில் அவளை நாளாந்தம் வார்த்தைகளால் பலவீனப்படுத்துதலை தவறென்கிறேன்.’ 

‘நீலி இது ஒரு வகையில் அவரவர்களுக்கான கர்மாவின் பயனென்பது தானே உண்மை.’

‘உண்மையாக இருக்கலாம் தேவனே. ஆனால் பெண்களுக்கான ஆண்டவனின் பாரபட்சம் என்றுதான் நான் இதனைக் கொள்கிறேன். தனக்குரிய துணை தக்கதுதானா என ஒரு பெண் பரீட்சித்துக் கொள்ளும் மனநிலை பொதுவாக ஏற்றுக்கொள்ளபடின் பொருந்தா துணையுடன் வாழும் பெண்களின் எண்ணிக்கை குறைவடையும் என நான் கருதுவது தவறாகுமா தேவா?’


‘உனது கருத்துக்கள் சரியென்றே கொள்வோமே… இப்போது உனதான விருப்பம் தான் என்ன?’


‘தேவனே வேறென்ன வேண்டும்? இந்நொடியில் சர்வமும் மறந்து மனதிலுள்ள குறைகளெல்லாம் இதுதானென சொல்லி முடித்தேனே… துணையொன்று தனக்குத்தரும் அதிகூடிய பாதுகாப்புணர்;வை அனுபவித்தேனே… மேனி சிலிர்ப்புற்று உள்ளம் நடுநடுங்க உன் திருவுருவம் கண்டு பூரித்தேனே… இதுதானே தேவா நான் வேண்டியது. என்னை மீண்டும் ஒரு பிறவிகாணா வரம் தந்து காத்தருள வேண்டும் ஐயனே.’


நீலி நிலத்தில் விழுந்து வணங்கினாள்.


காற்று சுழன்றடித்தது. ஒரு இலவம் மரத்து  காய்கள் வெடிப்புற்று பஞ்சு மொத்தமும் துகள்களாகி பறக்கத்தொடங்கியிருந்தன. சிறிது தூரம் பறந்துச்சென்ற அவை ஒரு கட்டத்திற்குப்பின் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறிக்கொண்டன. தேவன் ஒரு அழகான வண்ணத்துபூச்சியை கைகளில் ஏந்திக் கொண்டார். அதனை மிருதுவாக ஸ்பரிசித்து மோட்சம் தந்தார்.


அந்த வண்ணத்துப்பூச்சி படபடத்து துள்ளியாடியது. தேவனைச் சுற்றிச் சுற்றி பறந்தது. அதியுச்சியில் ஒருதடவை பறந்து பின் சாடாரென தாழ்ந்தது. சிறுநேரம் நிலத்தில் வீழ்ந்து இறந்தாற் போலவே கிடந்தது. பின் மேலெழுந்து பறந்த வண்ணம்  மோகம் தீர துங்ஹிந்த காட்டின் வனப்பினை இரசித்தபடி காட்டை நீங்கி மேகக்கூட்டத்துள் உற்சாகமாக மறையத் தொடங்கியது.


மாறுகொடு பழையனூர் நீலிசெய்த

வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத்தாங்கள்

கூறியசொற் பிழையாது துணிந்துசெந்தீக்

குழியிலெழு பதுபேரு முழுகிக்கங்கை

யாறணிசெஞ் சடைத்திருவா லங்காட்டப்ப

ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின்கீழ்மெய்ப்

பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற்

பிறித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ

(சேக்கிழார் நாயனர் புராணம்)