Enter your keyword

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, April 1, 2025

திகட்டல் - பிரமிளா பிரதீபன்

By On April 01, 2025

அடர்ந்த எனது புருவத்தை வலதுகையின் சுட்டுவிரலால் நீவி நீவி ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஒற்றை முடியை பற்றிக்கொள்வேன். பின் அதனை பட்டென்று பிய்த்தெடுத்து நாவால் சிறிதுரேம் வருடியுணர்ந்து,  சிறுசிறு துண்டுகளாக கடித்துத் துப்புவேன். அப்படியே, நாகலிங்கத்தைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம் இன்னும் எதையெல்லாமோ கூட இப்படி விசித்திரமாகச் செய்ய ஆரம்பித்திருந்தேன்.


பச்சை இலைகளுக்குள் அரிசி மணிகளை சுருட்டித் தின்பது, நடுசாமத்தில் எழும்பி மகளின் தலையில் பேனெடுத்து கொல்வது, கண்களைத் திறந்தபடி மணிக்கணக்கில் குளிப்பது என்று யாருக்கும் தெரியாமல் நான் செய்த அத்தனையும் ஏதோ ஒருவகையில் எனக்கு ஆறுதல் தருபவையாக இருந்த போதிலும் அதற்கிடையிலான நாகலிங்கத்தின் குறுக்கீட்டில் ஒருவிதமான ஒவ்வாமையும் வளர்ந்தது. 


குறிப்பாக அவனோடு சேர்ந்து மதுவருந்தும் போது நான் இனிப்பாக ஏதாவது கடித்துக்கொள்ளவே விரும்புகிறேன் என்பதும் பலாச்சுளைகளை சுவைத்துக்கொண்டே என்னால் மதுவருந்த முடிகிறதென்பதும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. பிறகு சூரியகுமாரை சூரி என்று நான் அழைத்ததுபோல நாகலிங்கத்தை நாகுவென கூப்பிடவில்லையென அவ்வளவு கோபம் அவனுக்கு. அந்தக் கோபத்தை காட்டுவதற்காகவே மதுவோடு நான் கேக் சாப்பிடுவதையும் பலாச்சுளைகளை கடித்துக்கொள்வதையும்  சொல்லிச் சொல்லி சிரிக்க ஆரம்பித்திருந்தான். 


எனது முதல் திருமணம் அல்லது சூரியின் துர்மரணம் பற்றிய எந்த ஞாபத்தையும் மீளெழுப்ப கூடாதென்ற சத்தியத்துடனேயே நான் நாகலிங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தேன். போலவே அவனது மனைவி மாதினி ஓடிப்போனதை பற்றியும் நானொன்றுமே கேட்பதில்லை. போதை மிகுந்து இருவருமாக உளறிக்கொட்டுகையில் கூட தவறியும்; முந்தைய வாழ்க்கையைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. 


சூரியுடனான அந்த நாட்களையும் தொடர்ந்து இந்த நாகலிங்கத்தினதும்…. என்று மீட்டுகையில்  எனக்குத்தான் வாழத் தெரியவில்லையோவெனும் சந்தேகமும் சமயங்களில் வலுக்கத்தான் செய்கிறது. ஏனோ அவனை நாகுவென அழைப்பதில் அவ்வளவாக எனக்கு நாட்டமில்லையென அவன் அறிந்திருக்கிறான். அதுமட்டுமல்லாத எல்லாவற்றிலுமாய் நான் அந்நியப்பட்டுதான் இருக்கிறேனென்பதையும் அவனால் உணரமுடிந்திருக்கும். நான் செய்வதைப் போலவே மாதினியோடு சேர்த்தென்னை ஒப்பீடு செய்யவும்தான். 


துளி பிடிப்புமில்லாது நான் போர்த்திக்கொண்ட இந்த கருமையான போர்வையோடு என் தூய்மையான காதலை பகிர்வதென்பதை நகைச்சுவையெனவே  எண்ணிக்கொள்ள முடிந்தாலும் காமத்தை அப்படி இலகுவாக எங்களால் கடக்க முடியவில்லை. அவன் பெரும் பிசாசென என்னை தின்பதில் குறியாயிருந்தான். நானும் வெறும் மாமிசமென உணர்ந்தே அவனை புசித்தேன். மாதினி மீதான பழியுணர்வை அவனும் சூரி மீதான தீரா ஏக்கத்தை நானும் பரஸ்பரம் உடல்கள் மீது காட்டிக் கொண்டோம். அதற்குகந்த பொழுதுகளாய் போதை நிரம்பிய சில இரவுகளையும் தெரிந்தெடுத்தோம். 


போதையென்பது சுதந்திரம். போதையென்பது அப்போதைக்கான விடுதலை. சொல்லப்போனால் உணர்வுகள் கடந்து நான் சுயமிழக்க உதவும் இரகசியமான மூலிகை அல்லது நாகலிங்கத்தைத் திட்டித்தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.


‘ஒரு பொண்டாட்டிக்கு இவ்ளோ குடிக்க வாங்கித் தாறியே! முட்டாளாடா நீ?’  


அவன் நக்கலாகச் சிரித்தான். என்னை தன்மீது சாய்த்துக்கொண்டு விரல்களால் அளைந்தான். ஆயிரம் அட்டைகளை ஆடைக்குள் விட்டதாய் அவ்வளவு அருவருப்பிருந்தது எனக்கு. 


‘சனியனே ஏதாச்சும் கதைக்க விடுறியா?’ அவனை தள்ளினேன். என் வார்த்தைகள் அத்துமீறி போய்க்கொண்டிருந்தன. 


‘என்னடி இருக்கு கதைக்கிறத்துக்கு?’


‘இருக்கு நெறயவே இருக்கு… கொஞ்சத்துக்கு என்னய விட்டுத்தொலயிறியா?  


‘இப்ப என்னா? ஒன்னய கட்டிப்போட்டா வச்சிருக்காங்க?’ 


‘கட்டிப்போட்டாதானா? எப்பவாச்சும் நிம்மதியா தூங்க விட்ருக்கியா? அப்படி என்னடா மயிரு ஒனக்கு எப்பபாத்தாலும் தேவப்படுது? 


‘ஏய்… பாத்து பேசு அப்றம் வேறமாதிரியாகிரும்’


‘என்னடா மயிரு வேறமாதிரி … சொல்லு என்ன வேறமாதிரி” 


நான் வேண்டுமென்றே சண்டைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அவனுக்கு கோபம் வந்திருக்கவில்லை. மாறாக என்னோடு பின்னிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்திருந்தான். அவனுக்கானதை பறித்துண்ணும் பாங்கில் கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறினான். 


காதலோடு குழைத்தெடுத்த காமம் பற்றிய பிரக்ஞை துளியேனும் அவனுக்கிருக்கவில்லை. எனக்குள் நிரம்பிய மெல்லுணர்வையும் அடங்கா காதலையும் கொட்டித்தீர்க்கும் பாத்திரத்தை அவன் ஏந்தியிருக்கவில்லை. பெண்ணுடலின் வசீகரத்தை மதுவோடு சேர்த்து வெறித்தனமாக பருக மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது. எவ்வளவு பருகினாலும் தணியாத அவன் தாகத்தை தீர்க்கும் திரவத்தின் அளவை கூட்டிக்கொள்வதை பற்றியே எப்போதுமாய் யோசித்துக் கொண்டிருந்தான். 


ஒருநாளுமில்லாமல் திடீரென நான் மாதினியை நினைத்து அழ ஆரம்பித்தேன். அவள் ஏன் ஓடிப்போனாள் என்று மேசையில் கையை தட்டிக்கொண்டே அழுதேன். 


‘ஏன்’ என்றான். பதிலை எதிர்பாராமல் என்னை மேலும் இறுக்கமாக தழுவ ஆரம்பித்தான். மறுக்கத் துணிவற்ற  மயக்க நிலையில் வேறொரு நபராக தள்ளியிருந்து அவனை அவதானித்தேன். 


ஆத்திரமும் அவசரமும் நடுக்கமும் மிஞ்சிய ஒரு பதட்டமான வேடடைக்காரனாய்… சிறு தடங்கல்களையும் ஏற்கமறுப்பவனாய் அவன் மாறியிருந்தான் அப்படியே என்னை தனதாக்கி இடைவெளியற்று மொத்தமாய் விழுங்கிவிடும் ஆவலுடன்… கர்ஜ்ஜிக்கும் பாவனையில் என்மீது படரத் தொடங்கியபோதுதான் எனக்குள் நுழைந்து நான் சுயம்பெற ஆரம்பித்தேன். 


முழுப்பலத்தையும் தந்து அவனை மறுபுறம் கிடத்த முயன்றேன். அவனோ ஒரு காட்டுயானையின் பலத்தோடு மூர்க்கமாக இயங்கினான். கழுத்தில் தோளில் காதுமடலிலென பற்கள் பதிய கடித்தான். வலிமிகுதியால் கத்திக்கொண்டே அவனது தோள்களை  நெம்பித்தள்ளினேன். என் கைகளிரண்டையும் அவனது ஒருகையால் அழுத்தியவாறே காதிற்குள் ஏதோ கெட்டவார்த்தையை கிசுகிசுத்தான். உடலை எச்சில்படுத்திக்கொண்டே சப்தமாக சிரித்தான். அவனது பலத்திற்கு முன்னே சிறு பூவென கசங்கிபோயிருந்தேன். சுவாசிக்கத் திணறினேன். அவனாக என்னில் அகன்று விடுவிக்கும்வரை அப்படியே மயங்கிக் கிடந்தேன். 


மூர்ச்சையாகி பின் விழிப்பது போல சற்றுநேரத்தில் அசைந்துப்பார்த்தேன். சீரான மூச்சு வெளிவர முதலையொன்றின் மெல்லசைவுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். அழுகையாக வந்தது. பிள்ளைகள் இருவரும் நல்ல நித்திரையிலிருந்தார்கள். மூத்தவள் சூரியின் சாயலுடன் அப்படியே கிடந்தாள். ‘சூரி…’ எனச் சத்தமின்றி உச்சரித்தபடி ஒரு மூச்சு அழுதோய்ந்தேன். சின்னவனின் முகத்தில் நாகலிங்கத்தின் சாயல் தென்படுகிறதாவெனத் தேடினேன். இருக்கககூடாதெனும் அவாவுடனேயே பிள்ளையை அணைத்து முத்தமிட்டேன்.  


ஓர் ஆணுடனான அனுபவத்தை பொதுமையாக்க முடியாமல் இருக்கலாம் இரண்டு ஆண்களை அந்தரங்கமாக்கிய பிறகுமா? ஆண்டவன் படைப்பில் ஆண்கள் ஒரு விசித்திரமான ஜந்துவென்பதை சந்தேகிக்கத் தேவையேயில்லை.  அவன் மல்லாந்து படுத்து குறட்டைவிடத் தொடங்கினான். அவனது அசைவுகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டுமாய் அவன் பொல்லாத காட்டுமிருகங்களையே நினைவுப்படுத்தினான். 


எப்போதும் போலவே அடர்மழைத்துளிகள் நீர்நிறைந்த குழிக்குள் விழுந்து தளும்புவதாய் ஆர்ப்பரித்த உள்ளத்தை அமைதிப்படுத்த போராடினேன். ஓர் ஆணின் உடல் பலத்துடன் போராடித் தோற்றத் அவமானத்தை மறைக்க உறக்கத்தை வலிந்திழுத்து போர்த்திக்கொண்டேன். 


……………….


தீராக்காதலின் அந்தத்தில் காமத்தை அவிழ்க்கும் பெண்ணுடலின் ஜ்வாலிப்பை… வசீகரத்தை அல்லது நீளும் அவளது கருணையை எதிர்கொள்ள தகுதியற்ற ஒருவனாலேயே அவள் யட்சியாகி மூர்க்கம் கொண்டவளாய் மாறுகிறாள். தான் கொடுப்பவளெனும் பெரும் உண்மையை மறைத்து பெறுபவள் எனும் நிலையைத்தானும் தக்கவைக்கத் தயங்குகிறாள். 


இரகசியமாகக் கசியும் அவளது உடல் நளினங்களைக் காண வாய்க்காத ஆண்கள் மிகுந்த அபாக்கியசாலிகள். காதல் முற்றிய அவளைச் சுற்றி எரியும் அனலில் தானும் கலந்தெரிந்து காமத்தின் கண்கொண்டு அவளது காதலை ஏற்கத் தெரியாத அவர்கள் தங்களை அறியாத மகா முட்டாள்கள். 


சூரியாவது பரவாயில்லை. நாகலிங்கம் ஓர் அடிமுட்டாள். என்னை ஆக்கிரமித்து தனக்குரியவளாக்கும் உக்திகளை தவறவிட்டவன். எனதன்பின் தேவையிழந்தவன். நாசூக்கற்ற முரட்டுத்தனத்தால் தன் ஆண்மையை நிரூபிக்கும் அவனது பிரயத்தனம் அர்த்தமற்றதென அறியாதவன். தினந்தோறும் ஒரு பெண்ணுடலை அள்ளிவிழுங்க முடிவதென்பதே பெரும் ஆண்மையெனும் மிதப்பில் திரியும் பைத்தியக்காரன்.  


வேறெப்படி கோபத்தை தணிப்பது? என் அலுவலக நண்பியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழமைபோலவே அவளும் ஆரம்பித்திருந்தாள். 


‘ரெண்டு வீட்ட வாடகைக்கு விட்டும், இன்சூரன்சும் என்று வெட்டியா உழைக்கிறவன் உன் புருசன். வேறென்னதான் செய்வான் சொல்லு?’


‘அதுக்காக ஒருநாளைக்கு ரெண்டு தடவைன்னா?


‘வேறென்ன செய்ய முடியும்? மாதினி மாதிரியே நீயும் ஓடிப்போறியா?


அவள் விளையாட்டாகத்தான் கேட்டாளென்றாலும். முடியாமல்தான் மாதினியும் ஓடியிருப்பாளென்று தோன்றியது.  


‘பீரியட்ஸ் டைம்ல கூட விடறானில்லடி’ 


‘இவனுக்கு ஏதும் நோயா இருக்குமோ!’ 


இதைப் பற்றி கதைப்பதே இருவருக்கும் களைப்பாய் இருந்தது. 


‘அதான் சொல்றேனே பேசாம போலிசில சொல்லிறலாம்’ என்றாள். 


‘முதல் புருசன கொன்னுட்டா இவனையும் தெருவுக்கு இழுத்துட்டான்னு ஊரே பேசுறத்துக்கா? என் குடும்பம் கூட நம்பப் போறதில்ல பாத்துக்க’ 


‘இதுக்கு பயந்து எவ்ளோதான் தாங்கிப்ப சொல்லு? 


‘புள்ளைங்க கொஞ்சம் பெருசாகட்டும் விடு. ஏதோ புலம்புறேன் நீ வேலையப்பாரு’ என்றேன். ‘இவனையும் விட்டுட்டு புள்ளைங்ளோட என்னத்ததாண்டி செய்ய முடியும்? நடுரோட்டுல நிக்கவா?’


அவள் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள். 


‘அவன என் கையிலயே கொன்னுப் போடத் தோணுது. இப்டிதான் சாம்பிராணியா இருப்பியன்னா எங்கிட்ட இதுபத்தி ஏன் பேசுற?’  கோபமாக கத்தினாள். 


நான் எனது புருவ முடியொன்றை பிடுங்கியெடுத்து நாவில் உருட்டிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு துண்டாக அதனைக் கடித்துத் துப்பத் தொடங்கினேன். 


அவன் புவியிலும் நான் புதனிலுமாய் நாங்கள் இருவேறு கிரகங்களில் அடைப்பட்டு கிடக்கிறோம்.  பொருந்திப்போகா இரு முரண்களை பிணைத்ததன் அசிங்கமான விளைவாகவே எங்களது பொழுதுகள் நீட்சி காண்கின்றன.


என்னை முழுதாய் விழுங்கிடத் தவிக்கும் மலைப்பாம்பாய் அன்றாடம் அவன் புரண்டெழுகிறான். அச்சத்தின் பிடிக்குள் மருண்ட ஊனென நான் அசையாது கிடக்கிறேன். இரவுகளில் என் தசையை அரித்துத் தின்னும் அவனை புறக்கணிப்பெனும் ஆயுதத்தால் நான் பகற்பொழுதுகளில் தண்டிக்க முயற்சிக்கிறேன். இருவரும் படுமோசமாக ஒருவரையொருவர் காயப்படுத்தி விடவே துடிக்கிறோம். இந்தத் துடிப்பு இரகசிய நாளத்தின் பிளவுகளாய் உடலெங்கிலும் ஓடி பரவிக் கிடப்பதை இருவராலும் தடுக்க முடியாதிருக்கிறது. 


இங்கே நினைக்கும் போதே அவனுக்கு மூக்கில் வியர்த்திருக்கிறது.! தொலைப்பேசி மின்னி மின்னி மறைகிறது.  அவனது குறுஞ்செய்தியும். தொடர்ச்சியாக சில அழைப்புகளும்.


ஒருமுறையாவது அவனைத் தோற்கடிக்க வேண்டுமே.! நிதானமாக அவனது அழைப்பைத் தவிர்க்கிறேன். இப்போது அவனுக்கு கோபம் கொப்பளிக்க வேண்டும். இருக்கட்டும் இன்னும் கொஞ்சம் கோபிக்கட்டும். 


மீண்டும் அழைக்கிறான். தவிர்க்கிறேன்.  மீண்டும் மீண்டுமாய். நானும் தொடர்ச்சியாகத் தவிர்க்கிறேன். சளைக்காமல் அழைக்கிறான். இப்போது துண்டித்துவிட்டு சிரித்துக்கொள்கிறேன். இன்னுமிரு அழைப்புகளையும் சேர்த்து தாமதிக்காமல் துண்டிக்கிறேன்.  சிறுநேர இடைவெளி.  படப்படப்பாகவிருக்கிறது. அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இதுவரையில் அவனது அழைப்பை நான் துண்டித்ததில்லை. இப்போது மாதினியை கட்டாயம் எண்ணியிருப்பான். கொஞ்சம் பயப்படுவான். சிலவேளை அதிகமாகவே பயந்திருப்பான். வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் குருதிவாசனை நாசிக்குள் கசிவது  போலிருந்தது. நான் குதூகலித்தேன். கைகள் நீட்டி சோம்பல் முறித்தேன். புருவங்களை நீவி ஒழுங்குப்படுத்திக் கொண்டேன். அகோர பசிகொண்ட சிங்கத்தை ஏமாற்றி கிணற்றுக்குள் தள்ளிய முயல்குட்டியின் சிறுநேர உவகையிது. 


என்னை நான் கொண்டாட வேண்டுமென்று தோன்றியது.  


‘ஒரு டீ?’ 


நண்பியை அழைத்தேன். பார்வையாலேயே மறுத்தாள். அதே பரபரப்புடன் கெண்டீனில் ஒரு டீ சொன்னேன். டீயோடு இனிப்பாக ஹெலப்பவை சுவைத்தேன். எண்ணிக்கையற்ற குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் நிறைந்துக் கொண்டிருந்தன. 


‘அண்ணா ஒரு ஐஸ்கறீம்’


சந்தேகமாகப் பார்த்தான். ‘டீயோட ஐஸ்கிறீமா?


‘கொண்டுவாங்க சாப்டலாம்’ உற்சாகமாக கத்தினேன். 


நேரம் நான்கைத் தாண்ட இன்னும் பத்தே நிமிடங்கள். அடுத்ததாய் சந்திக்கப்போகும் வார்த்தை யுத்தத்திற்கான கேள்விகளை ஓரளவாய் ஊகித்தேன். ஐஸ்கிறீமால் என்னை குளிர்வித்தபடி பொருத்தமான பதில்களைத் தெரிந்து ஒவ்வொன்றாய் சரிபார்த்துக் கொண்டேன். 


…………………………………


ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிக்க முன்னிருப்பதான பயம் போட்டியிடும் போது ஏற்படுவதில்லை. என் ஓட்டம் பாதியில் நிற்குமென்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும்  ஓடத் துணிந்தேனே!  முகத்தில் பரவியிருந்த ஏளனத்தின் எச்சம் அப்படியே ஒட்டியிருந்தது. எதற்கும் தயாரானவளாய் உள்நுழைந்தேன். 


மின்விளக்குகளைப் போடாமல் அமர்ந்திருந்தான். குழந்தைகளையும் அம்மா வீட்டிலிருந்து எடுத்திருக்கவில்லை. வேறேதோ ஆயத்தத்துடன் புதியதொரு போர்வாளை தயார்நிலையில் வைத்திருப்பவனாய் தோன்றினான். இத்தனை நேரம் உள்ளிருந்த திமிர் மெல்ல வடியத்தொடங்கியது. அவனை தனியே எதிர்கொள்வதற்கான சின்னஞ்சிறு திட்டங்களைக் கூட பிரமாண்டமான சூழ்ச்சியின் வடிவங்களாய் உணர ஆரம்பித்தேன். 


வழமைமைக்கு மாறான அவனது அமைதி என்னை உலுக்கியது. கடக்கப்போகும் இரவை அஞ்சினேன். எப்படி பேசுவது … எங்கிருந்து தொடங்குவது? இந்த மௌனம் மிகக்கனமாயிருந்தது. இங்குமங்குமாக நடந்து அவனது முகக்குறிப்புகளை அடையாளங்காணவிழைந்தேன். ஒருமுறை நிமிர்ந்தான். அவன் பாவனையில் தொனித்த உணர்வை சத்தியமாக கணிக்க முடியவில்லை. மீண்டும் பதட்டமானேன். எனது முடிவுகள் இவ்வளவு பலவீனமாக இருப்பதையெண்ணி மோசமான தாழ்வுணர்வுடன் அலைக்கழிந்தேன்.. உடைப்பட்ட கண்ணாடித்துண்டொன்று வளைத்து வளைத்து குத்திக்கழிப்பது போல அவனது பார்வை இரகசியமாய் என்னை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தது.  


‘அவ்வளவு திமிரா போச்சாடி…?’ 


குரலில் தீப்பற்றி தகித்தது. தயாரித்து வைத்திருந்த பதில்களெல்லாம் ஆவியாகி கண்முன்னே மறைய, இறுக்கிப் பிடித்திருந்த தைரியத்தை கண்களுக்குள் பாய்ச்சி கண்ணீரைத் தடுத்தேன். பீதியடைந்திருந்த உள்ளம் அவனை நழுவி விலகிச்செல்ல சொன்னது. பதிலின்றி கடந்தேன். பிறகு சில நிமிட இடைவெளிக்குப்பின் என்னைப் பார்த்தான். 


‘ஒனக்கு அவ்ளோ ஆகிறிச்சாடி வேச..? தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் பாத்துக்க… பொம்பளன்னு பாக்குறேன். இல்லாட்டி இதே எடத்துலயே கொன்னு பொதச்சுருவேன்.’   


சுட்டுவிரலை நீட்டி நீட்டி பேசினான். பற்களை கடித்துக் கொண்டான். குனிந்து கால்களிரண்டையும் நீவித் தடவியவாறே இன்னும்கூட ஏதோவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். ‘இடைக்கிடையே ‘வேச.. வேச…’ என்று உச்சரித்தான். எழுந்து சென்று தண்ணீர் குடித்தான். சிறிது நேரம் தாமதிக்கவிட்டு அமைதியாக ‘ஏன் போன் எடுக்கல?’ என்றுக் கேட்டான். அவனது குரலின் தொனி சற்றே தணிந்திருந்தது.


‘மீட்டிங்’ என்றேன். 


‘மெசேஜ் போட்டிருக்கலாமே?’  யோசித்து வைத்திருந்த பதில்களை மறந்திருந்தேன். வெகு இயல்பாக கதையை திசைத்திருப்ப முயன்றேன்.


‘புள்ளைங்கள எடுக்கலயா?’ 


‘அம்மாட்ட இருக்கட்டும். ஒன்னோட கொஞ்சம் தனியா இருக்கணும்’ 


என்ன செய்ய உத்தேசிக்கிறான்? எதுவென்றாலும் ஆகட்டும். தளராதே…தளராதே… சுயமாயிரு. அதிகம் போனால் ‘அவளைப்போல ஓடிப்போவேன்’ என்றாவது சொல். புதிதாய் தீட்டப்பட்ட கூர்வாளின் முனையென அது அவனை குத்திக்கிழிக்கட்டும்.


பின்னால் வந்தென்னை இறுக்கும்வரை தெரியவேயில்லை. திருப்பிப்பார்க்கும் அவகாசத்தையேனும் தராமல் சுவரோடுசாய்த்து உடலோடு ஒட்டியுரசி நுனிப்புல்மேயும் காளையின் அவசரத்தில் என்னை முகர்ந்தான். 


தள்ளிவிடுவதா? அடங்குவதா? மாதினியைப்போல ஓடிப்போவேனென்பதா? ‘வெட்கங்கெட்ட நாயே’ என கத்துவதா?


‘விடுங்க… குளிக்கனும்’ திமிறி பிடியிலிருந்து வெளியேறப்பார்த்தேன். 


‘இல்ல…இப்பவே…இப்டியே…’ 


பேசும் வாய்ப்பை தராது.  முகத்தை ஒரு கையால் அழுத்திப்பிடித்து அடிவயிற்றில் இன்னொரு கையால் குழைந்தபடி சேலையை இழுத்து பிய்த்தெறிந்தான். நிலத்தில் சரித்து அவனது மொத்த கனத்தாலும் என்னை ஆக்கிரமித்தான். புணர்ச்சி வேகத்திலான உடற் கீறல்களையும் கடி காயங்களையும் நான் இலகுவாக ஏற்பேனென நம்புவதாய் காட்டிக்கொண்டான். 


அவசரமான ஒரு கூடல். என் தவறுக்கான தண்டனையாகவும்… 


கைகளை மல்லாந்து விரித்து தரையிலேயே கிடந்தான். கண்களில் வெற்றியின் மிதப்பு ததும்பியது. வாகனத்தில் அடிப்பட்டுக் கிடக்கும்  தெருநாயைப்போல அசையாதிருந்த நான் சட்டென ஒருகணத்தில் ஆடைகளை திரட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து தாழிட்டேன். ஷவரைத்திருகி உச்சந்தலை குளிர கண்கள் திறந்தபடி நின்றேன். நீர்மோதும் உடற்காயங்களை மிருதுவாக தடவிக்கொண்டே நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கும் என் அறியாமையின் மீதும் காமத்தின் மீதும் காறித்துப்பினேன். அவன் மீதான ஆத்திரத்தை எந்த புள்ளிக்கூடாக திசைப்திருப்பலாமெனும் யோசனை அறவுமாய்  இல்லாமலிருந்தது.  ஆவென அலறியபடி என் நகங்களால் கழுத்துத் தசையை கீறியிழுத்தேன்.  


‘வேச.. வேச… என்று அடிக்கடி உச்சரிக்கும் அவனது வாயை கிழிக்க வேண்டும்போல் இருந்தது. அந்தச்   சொல்லுக்கான எதிர்பாற்சொல் என்னவாக இருக்குமென்று யோசித்தேன். வேசியோடு கூடுபவர்கள் காகமாகவும் செந்நாயாகவும் பன்றியாகவும் இல்லையேல் இலவம்பஞ்சு மரமாகவும் மறுபிறவியெடுப்பர்களாமே!   


நாகலிங்கம் காகமாக அல்லது செந்நாயாக பிறப்பதாய் கற்பனை செய்தேன். அக்கற்பனை நிஜமாக வேண்டுமெனில்   மூன்றாவதாக ஓர் உருவம் தேவையென்றுணர்ந்தேன். அவ்வுருவத்துடனான என் ஒருமித்த கூடலையும் நிர்ணயித்தேன். சட்டென அவ்வுருவமாகவும் நானேயாகி… எனதுடல் வனப்பை பார்த்து இரசித்தேன். அக்கணத்திலேயே நான் தொலைத்த என்னை கண்டடையும் அவா பீறிட்டது. 


அப்படியே எனக்கெதிர்ப் பக்கமாக அவ்வுருவத்தை நிறுத்தி வைத்து போதம் தெளியா என் கண்கள் மூடி ஆசையோடு அதனை… இல்லை அவனை… அணுகினேன். நீறுபூத்த நெருப்பைத் தூண்டிச் சுவாலையாக்கி அந்த பெருநெருப்பு தரும் வெம்மையால் நான் சிலிர்ப்படைவதாய் இருந்தது. கண்கள் திறக்கப் பயந்தேன். இந்நொடியின் நீட்சியும் இன்னும் கொஞ்சம் இருளும் தேவையென்பதாய் நம்பினேன்.. தொடர்ச்சியாக எனைத்தீண்டும் நீர்த்திவலைகள் மொத்தமும் ஆயிரம் விரல்களாய் நீண்டு ஸ்பரிசம் செய்யச்செய்ய, குவிந்த தொட்டாச்சிணுங்கி இலைகள் மெல்ல மெல்ல விரிவது பேலாய் என் காதலின் எல்லா பாகங்களும் ஒவ்வொன்றாய் உயிர்த்தெழ ஆரம்பித்தன. 

Wednesday, December 18, 2024

கொலைச்சொல் - பிரமிளா பிரதீபன்

By On December 18, 2024

சூரி சடலமாக கிடத்தப்பட்டிருந்த திசை பார்த்து முக்குச்சுவரில் தலையழுத்தி சாய்ந்திருந்தேன். முழங்காலுக்குள் முகத்தை புதைத்துக்கொள்ள விரும்பினாலும் கூட நான் அப்படிச் செய்யவில்லை. கட்டவிழ்ந்த எண்ணங்கள் உடலை நடுங்கப் பண்ணியது. அடிநெஞ்சில் எழும்பிய தேம்பல் தலைக்குள் மோதித் தாக்கி உஷ்ண அலைகளாக வெளிறேத் தொடங்கியிருந்தது.  

என்னை பலவந்தமாக யாரோ கொன்று விட்டதாக முடிந்த வரை நம்பினேன். அப்படி நம்புவது மட்டுமே அப்போதைக்கு அதிக ஆறுதல் தருவதாயிருந்தது. என் மகளை சிலர் பெயர் சொல்லி கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். முழுவதுமாக கண்திறக்காமல் அவள் யாரிடம் இருக்கிறாளெனப் பார்க்க விரும்பினேன்.    

சேது மாமா வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

 ‘ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல இனிதான் நீ சந்தோசமா இருக்கனும். எல்லா சனியனும் தொலஞ்சிருக்கு.. இங்கப்பாரு… மாமாவ பாரு எதுக்கும் பயப்புட கூடாது. மாமா இருக்கேன்ல…’ 

மாமாவின் கைகளை விடாமல் பற்றியிருந்தேன். என்னிடமிருந்த பெரும் வெறுமையுணர்வை பார்வையால் கடத்தி இறுக்கமாக கண்களை மூடித்திறக்கையில் ஓரிரு கண்ணீர் துளிகள் வெளியேறின. அவை சூரிக்கான கண்ணீர்த்துளிகள் அல்ல எனக்கு மட்டுமேயானவை.  

இனியென்னை எப்படி நம்பப் போகிறார்கள்?  

 ‘இப்பிடி செஞ்சிட்டு போயிட்டானே மாமா…? நான் என்ன செய்யனும் இப்ப?’ 

வெடிக்க ஆரம்பித்துவிட்ட தலையை சிதறவிடாமல் இறுக்கிப் பிடித்து, தலையை நிமிர்த்தி சூரியைப் பார்த்தேன். வழமையாக இரவுகளில் அவன் என்னிடம் சொல்லிக்காட்டுகின்ற மரண அறிவித்தல் செவிகளுக்குள் கேட்டுக்கொண்டேயிருந்தது.   

‘இரத்தினப்புரி கஹவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி சிவராசா தம்பதிகளின் தவப்புதல்வனும் காவ்யதர்ஷனியின் அன்புக் கணவரும் விஷாலினியின் அன்புத்தந்தையுமான திரு சூரியக்குமார் அவர்கள் 01.03.2024 அன்று அகால மரணமடைந்தார். அன்னாரின் பூதவுடல் இரத்தினபுரி பொது மயானத்தில் பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.’  

திகதியை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொள்வானே தவிர இதே அறிவித்தலை ஒவ்வொரு நாளும் அவனது வாயாலேயே சொல்லிச்சொல்லி என்னைக் கேட்க வைத்திருக்கிறான். தவறி தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பியமர்த்தி சொல்லிக்கொண்டிருப்பான்.  தொடர்ச்சியாகக் காரணமேயின்றி சிரிப்பான்.  மறுநிமிடமே ‘கோவிச்சுக்காத காவ்யாம்மா… நீன்னா எனக்கு உசுரு. ஓம்மேல தூசி பட்டாக்கூட தாங்க முடியாதுடி. வா..வா எங்கிட்ட… கட்டிப்பிடிச்சிட்டே தூங்கு. தனியா தூங்கிப்போனா இப்டிதான் செய்வேன்’ என்பான். 

தப்பிக்கவே முடியாத ஒரு கட்டத்தில் என்னை நிறுத்திவிட்டு இப்படி கிடக்கிறானே! கடுமையான குழப்பத்துடன் அவ்வளவு தத்தளித்தேன். அடுத்த நொடியை சந்திக்கும் திராணி அறவும் இல்லாதிருந்தது. இப்போதைக்கு என் மனநிலையறிந்த ஒரேயொருவர் சேது மாமா மட்டுமேதான். சூரியின் இறப்பு என் குடும்பத்தினருக்கே கூட சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கும். அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து தள்ளியே நின்றிருந்தார்கள். வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

மாமா என்னை கையோடு இழுத்து ஓர் அறைக்குள் தள்ளி அறையை மூடினார். ‘இதுக்குள்ளயே இரு. யாருக்கும் நீ பதில் சொல்ல வேணாம். நாம்பாத்துக்குறேன். இந்தா இத குடி’ உள்ளிருக்கும் திரவம் வெளித்தெரியாமல் துணியால் சுத்தப்பட்டிருந்த போத்தலை நீட்டினார். அதற்குள் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். வழமையாக மாமா விளையாட்டாகத் தரும் போதெல்லாம் மறுத்துப்பேசி ஓடிவிடும் நான் அப்போது பட்டென்று அதனைப் பறித்து வாயில் கவிழ்த்துக் கொண்டேன்.  

‘மெதுவாக் குடி’ என்றார்.  

ஓரிரு முறைகள் இடைவெளிவிட்டு அவ்வளவையும் குடித்து முடித்து போத்தலை நீட்டினேன்.  

‘படுத்து நல்லாத் தூங்கு’

 அவர் கதவை தாழிட்டுவிட்டு வெளியேறினார்.  

திடீரென வீடு கலவரமடைந்தது. மாரிக்கிழவி சத்தமாக ஒப்பாரி வைத்துக்கொண்டே உள் நுழைந்திருந்தாள்.  

ஒப்பாரிச் சத்தத்தில் பல குரல்கள் கலப்புற்றன. மாரிக்கிழவியின் சப்தம் மட்டும் தனித்து ஒலித்தது.   

‘களனி மல உச்சியில

கலசனத்த கையமத்தி

கைலாசம் போனியளோ…. 

பழனி மல வாசலில…..’

இடைக்கிடை சூரியப்பா சூரி என்று அலறிக்கொண்டாள். மூக்கை சத்தமாக சீறித்துடைத்தாள். 

‘பரதேசம் போனியோ என்ராசா - நீ

பரதேசம் போனியோ

என்னத்த பாத்தியோ 

என்னத்த நெனச்சியோ  

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

யார நா வைவேன்

தொங்கும் போது துடிச்சியோ

இல்ல நெனைக்கும் போது துடிச்சியோடா சாமி…’

அழுகை சப்தம் பலமாக ஒலித்தது. 

‘செத்துப்போன்னு சொன்னா சாவியோ 

எஞ்சாமி- 

செத்துப்போன்னு யாரும் சொன்னா நீ சாவியோ…’ 

அடுத்த கணம் மிக நிசப்தமாகிப் போனது. யாரேனும் கிழவியின் வாiயைப்பொத்தி இழுத்துப் போயிருக்க வேண்டும்.

 கண்கள் சுழன்று ஏதோ தலைக்குள் பாரமாக அழுத்தியது. களைப்பு மறைந்து மெல்லியதொரு மயக்கநிலை விரவி நான் ஆசுவாசமாக உணர்ந்தேன். அடிவயிற்றில் பனித்துளிகள் அப்பிய சுகம். வெகுநேரமாக சிந்தனையற்று வெறுமனே கிடந்தேன். தூங்கிவிழித்தேனா இல்லை அதே மயக்க நிலையில் இப்படியே கிடக்கிறேனா?  முகத்தின் மீதும் வயிற்றின் மீதும் ஏதோ வேகமாக ஊர்ந்துசெல்லும் உணர்வு. என் கைகளைத் தேடினேன். இடதுகையை இழுத்து தூக்கிப் பார்த்தேன். கனமாக இருந்தது. நேராக நிமிர்த்த முயற்சித்தேன். அப்படியே ஒரு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சூரி கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருந்தான். ‘சூரி…’ பல்லைக்கடித்துக்கொண்டு கத்தினேன். 

‘பாசம் பாசம்னு சிதைச்சிட்டியேடா பாவி. மொத்தமா வேசி பட்டம் கட்டி முடிச்சிட்டியே. அபாண்டமா ஒரு பொய்ய பரப்பி…. இதுக்கு என்னய கொன்னு போட்டிருக்கலாமே!’  

பூனையொன்றின் மெல்லிய ஊளையொலியோடு அழுதேன். வலியோடு தெறித்த அவ்வழுகை எனது அயர்ச்சியை சற்றே இலகுபடுத்துமென்று தோன்றியது. மல்லாந்து கைகள் விரித்துக் கிடந்தேன். உடல் கனமற்று பறக்க தாயாராகிக்கொண்டிருந்தது. மின்விசிறி விசித்திரமான சப்தத்துடன் சுழன்றது. அவ்வப்போது விட்டத்தில் ஒன்றுமே இல்லாதது போலானது. கண்களைக் கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தேன். விசிறி கழன்று விழுந்து அப்படியே என் தலையை நசுக்கி விடுமோவென அஞ்சினேன். பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தேன். உடல் சற்று வியர்த்துக் குளிர்ந்திருந்தது. மீண்டும் படுக்க பயம் வேறு. வெளியே போய்வர இயலாத தடுமாற்றம். இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் அவசரத்தை அடக்கச் சிரமப்பட்டேன். இப்போது நேரம் என்ன? நடுசாமமோ… என்னவோ? ஏன் சத்தமேயில்லாமல் இப்படி வெறுமை பரவியிருக்கிறது? தொடைகளை இறுக்கி அடிவயிற்றை எக்கி சிறுநீர் உந்தலை அடக்கிக்கொண்டு எழுந்தேன். காதை உன்னிப்பாக வைத்து வெளியே பேசிக்கொள்ளும் சப்தத்தை கேட்டேன்.  

வீட்டுக்கு பொலிஸார் வந்திருந்தனர்.  

சூரியின் அம்மா தெய்வமாகத் தெரிந்தாள். அவள் தந்த வாக்குமூலம் மொத்த சந்தேகத்தையும் தீர்த்திருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு விம்மினேன்.

 ‘இனியாவது கொஞ்சம் நிம்மதியா இரும்மா.’  

மகனை இழந்த எந்தவொரு தாயும் சொல்லாத அந்த வார்த்தையை அவள் என்னிடத்தே இரகசியமாகக் கூறியபடி அழுதாள். வாஞ்சையோடு எனது இடதுதோளில் கை வைத்து பற்றியழுத்தினாள்.  மனப்படபடப்பு பல மடங்காகவுயர்ந்து அடங்கியது. அதனெச்சம் பேரிரைச்சலுடனான சுவாசமாக மாறுவது கண்டு, முகத்தசைகளை இறுக்கி எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.  

இறுதி விசாரணை என்னிடமாம்.  

ஒரு பெண் போலீஸ் என்னை அறையொன்றிற்குள் அழைத்துச் சென்றாள்.  கதிரையொன்றில் அமரச்செய்து சிங்களம் தெரியுமாவெனக் கேட்டாள்.  தெரியுமென்றேன். தொடர்ச்சியாக அழுதபடியிருந்தேன். நான் சூரியை நினைத்து அழுவதாக அவள் எண்ணியிருக்க வேண்டும். 

‘அப்போ ஏன் அவனை செத்துப்போ என்று ஏசினாய்?’ என்று கேட்டாள். மிருதுவாக என் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளுக்கு ஓரளவுக்கு விடயங்கள் தெரிந்திருந்தன.  

‘நீ அப்படி சொன்னதால்தான் அவன் தூக்குப்போட்டான் என்று நம்புகிறாயா? உனக்கு ஒன்று தெரியுமா? உன் மாமி என்ன சொன்னாள் தெரியுமா காவ்யதர்சனி? 

நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். 

 ‘அதுதானே உன் பெயர்?   

சூரியின் அம்மா என்ன சொல்லியிருக்கக்கூடுமென யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை சரியாக அறிந்தவள் போல் அவள் அதே கதையை மீண்டும் ஆரம்பித்தாள்.  

‘உன் மாமி அப்படியொரு  வாக்குமூலத்தை தராதிருந்தால் இந்நேரத்தில் உன்னை வேறுவிதமாகத்தான் விசாரித்திருப்போம். ஒரு தாய் தன் மகனை அவ்வளவு சொல்கிறாளென்றால்…. அவனைப் பற்றி தெரியாமலா நீ கல்யாணம் செய்தாய்?’  

‘என்ன சொன்னாங்க ?’  

‘அவன் சகோதரர்கள் கூட ஒரேவிதமாக தான் சொன்னார்கள். ஒரு நாளில் குறைந்தது மூன்று தடவைகளாவது தற்கொலை பண்ணப்போவதாக மிரட்டுவானாமே! கையில் கழுத்திலென்று கிழித்து கொள்வானாம். தண்ணியில் குதிப்பானாம். ஒரு தடவை நஞ்சும் குடித்திருக்கிறானாம்.’  

நான் என் வலதுகால் பெருவிரலை நிலத்தில் குத்தித் தேய்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.  

‘விடு… அவன் சாக வேண்டியவன். உன் நேரம் நீ ‘செத்துப்போ’ என்று ஒரு வார்த்தையை சொல்லியிருக்கிறாய்.’  

அவளுக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது. என்னை காத்திருக்கும்படி கையால் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தாள். வேறு சில பொலிஸாரும் அந்த அறைக்குள் வந்துபோனார்கள். 

உடைந்து தேம்பும் அநாதையாய்  நான் அவ்விடத்தில் அமர்த்தப்பட்டிருந்தேன்.  அனிச்சையாய் உடல் நடுக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. என் தொலைபேசிப் பதிவிலிருந்த அத்தனை இலக்கத்திற்கும் அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை மீண்டும் ஒருதடவை நினைத்துக்கொண்டேன். சிலர் அதற்கு பதில் அனுப்பியிருப்பார்கள். ஒருத்தர் விடாமல் அந்த செய்தியை நம்பியுமிருப்பார்களோ! 

  

சகிக்கவே முடியவில்லை. ஒருவன் தற்கொலை செய்யுமளவிற்கு நான் என்ன செய்தேன்? 

மெல்லிய கனைப்புடன் மீண்டும் அவள் என்னிடத்தே வந்தமர்ந்தாள்.  

‘சொல்லு உன் தொலைபேசியை ஏன் அவனுக்கு கொடுத்தாய்? அவன் ஏதோ செய்தி அனுப்பியதாக உன் மாமி சொன்னாள்.  என்ன அனுப்பினான்?’  

‘நான் சாகப்போகிறேன் என் பொண்டாட்டி காவ்யா கட்டையன் சிவக்குமாருடன் ஓடிபோய்விட்டாள். என்னையும் என் குழந்தையையும் அநாதையாக்கி விட்டாள்.’ என்று அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கூறும்போது தொண்டை அடைத்திருந்தது.  

அவள் தண்ணீர் போத்தலை என் பக்கமாக தள்ளி வைத்தாள்.  

‘யார் சிவக்குமார்? உன்னோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவனா.?’  

‘இல்லை. இதற்கு முதல் நான் வேலை செய்த அலுவலகம்.’   

‘யாருக்கெல்லாம் அனுப்பியிருக்கிறான்?’ 

‘என் பதிவிலுள்ள அத்தனை பேருக்கும்.’  

அவள் எனது தொலைபேசியை காட்டச் சொன்னாள். உடைந்து விட்டதென்றேன். நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தாள். தொடர்ந்தும் நானாகவே பேசத் தொடங்கினேன்.    

‘சூரியை முடித்த பிறகு நான் என் எல்லா நண்பர்களிடமிருந்தும் விலகினேன். பெண்களிடம் கூட நான் அதிகம் பேசுவதை சூரி விரும்பவில்லை. ஒரு தடவை ஒரு கோயில் திருவிழாவிற்கு போயிருந்தோம். கூட்டத்தில் ஒரு நண்பன் காவ்யா என்று கத்தியழைத்தான். எனக்கு கேட்டிருக்கவில்லை. அருகே வந்து என் தலையில் தட்டினான். அவ்வளவேதான். சூரிக்கு நெருப்புக் கோபம். அவனையும் என்னையும் பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு அங்கிருந்து போய்விட்டான். பின்னிரவுப் பொழுதில் வந்து சட்டென கதவைத் திறந்து வீட்டுக்குள் எதையோ தேடினான்.  

‘யார்டி அது? என்றபடி என் முடியை பிடித்து இழுத்து கத்தியெடுத்து அறுக்க முயற்சித்தான். நான் திமிறி அவனிடமிருந்து விடுபட்டு ‘யார்னு தெரியலப்பா… கூட படிச்சவனா இருக்கும். வௌயாட்டுக்குஅப்பிடி செஞ்சுட்டான் எதுக்கு இவ்ளோ கோவப்படுறீங்க? என்றேன்.  

‘அடியே வேச… நீ கண்டவன்ட படுப்ப நான் கேட்டா கோவப்படுறீங்களாவா?’  

சூரிக்கு எதையும் சொல்லி தெளிவுபடுத்தலில் நம்பிக்கையிழந்தவள் நான். பதிலேதும் சொல்லாமல் அவனைப் புறக்கணித்தேன். முகம் இறுகி ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினான்.  பதிலுக்கு நான் சண்டை போடவேண்டுமென விரும்பினான். மேலதிக விளக்கம் தந்து அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். சம்பந்தமே இல்லாமல் எத்தனை தடவைகள்தான் மன்னிப்பு கேட்பது? நான் பேசாதிருந்தேன்.  

அப்போதுதான்… கையிலிருந்த கத்தியை அவனது கழுத்திற்கு திருப்பிப் பிடித்து அழுத்திக்கொண்டே கேட்டான். ‘சொல்லுடி இல்லன்னா அறுத்துக்குவேன்… சொல்லிரு… சொல்லிரு...’ பெருங்குரலெழுப்பி என்னை எச்சரித்தான். கத்தி ஆழமாகப் பதிந்திருந்தது. கைகள் நடுக்கம் கொண்டிருந்தன.  கொஞ்சம் இழுத்தால் கூட அறுபட்டு விடலாம்.  ஸ்தம்பித்துப் போனேன்.. அந்த நள்ளிரவில் யாரையென்று அழைக்க முடியும். ‘வேணாம் சூரி… கத்திய எடு… ஒன்ன கும்புட்றேன் கத்திய எடு’ பதறினேன். குரல் நடுங்கி அலறலாக மாறியது.  அவன் பின்னால் தள்ளிப் போய்கொண்டே கத்தியை மேலும் அழுத்தினான். இரத்தம் இலேசாக கசிந்து பரவுவதை என்னால் காண முடிந்தது. நான் மயங்கவில்லை ஆனால் கடுமையான அயர்ச்சியுடன் மிரண்டு போயிருந்தேன்.  

‘சொல்லுடி வேச… அவன வச்சிருக்கியா? தொட்டுப் பேசுறானே?’ இரத்தம் மேலும் அதிகமாக கசிந்திருந்தது. நடுங்கும் கரங்களுடன் அவனருகே சென்றேன். பேச்சற்றவளானேன்.  

‘யார்னு சொல்லு… யார்னு சொல்லு…’

  

‘அவன்தான் என்ன விரும்புறான்… அவன்தான் என்ன விரும்புறான்.. அவன்தான் விரும்புறான்’ பித்தேறியவளாய் உளறிக்கொட்டினேன். தலையில் அடித்துக்கொண்டேன். 

சட்டென கத்தியை அகற்றி நிதானித்து சிரித்தான். தடாலென விழுவது போலமர்ந்து கதிரைக் கைப்பிடியை குத்திக்கொண்டே கேட்டான்.  

‘நீ விரும்புறியா குட்டி? சொல்லும்மா நீயும் அவன விரும்புறியா?’ 

மறுத்து பலமாக தலையாட்டினேன். அவன் பெயர்கூட எனக்கு தெரியவில்லையென்பதை நம்பவா போகிறான். சுவரோடு சரிந்து நிலத்தைப் பற்றிக்கொண்டு தளர்ந்திருந்தேன். 

அவனது இரத்தக்கசிவை துடைத்து மருந்திட்டேன். திடீரென என்னை அணைத்துக்கொண்டு கொஞ்சத் துவங்கினான். என்னை நம்புவதாக சத்தியம் செய்தான். ‘எனக்குத் தெரியும்டா செல்லம்.’ என் கால்களை நீவி விட்டான். தடவித் தடவி முத்தங்களாய் கொடுத்தான். அப்படியே என்னைப் புணர்ந்தான்.   

 

வெட்டியகற்றிய மரக்குற்றியாய் அசையாமல் கிடந்தேன். தெற்குச்சுவரின் மேல்மூலையில் தூசி படிந்து கிடந்ததை பார்த்து தேம்பினேன்.    

   

மேலதிகமாக ஏதும் கேட்க விரும்பவில்லையோ என்னவோ! அந்த போலீஸ்காரி சட்டென எழுந்து நின்றாள். தலைமுடியை சரிசெய்து கொண்டாள். 

 

நிஜத்தில் அபூர்வமான பெண்ணவள். நானாக ஏதோவெல்லாம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். தெரிந்த நண்பர்களைக் கண்டால் தலைகுனிந்து மறைவதையும் ஓடி ஒளிவதையும் சொன்னேன். முடிந்தவரை சூரிக்கு பிடித்தாற் போல வாழ முயற்சித்ததாய் சொன்னேன். இறுதியில் ‘சூரி பாவம் அவன் என்னை அதிகமா நேசிச்சான். ரொம்ப நேசிச்சிட்டான்’ என்றேன்.  

அவள் சிரித்தாள்.  

‘பைத்தியக்காரி ஒரு பைத்தியத்தோடு வாழ்ந்திருக்கிறாயே அறிவற்றவளா நீ? அழாதே. பெண்கள் அழக்கூடாது.’ என்றாள். 

தொடர்ச்சியாக ‘ஏன் அவனை செத்துப்போகச் சொன்னாய்?’ என்று கேட்டவாறே மேசையிலிருந்த புத்தகத்தை விரித்து  எழுத ஆரம்பித்தாள். 

  

விபரமாகச் சொல்லிவிட வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. நிதானமான குரலில் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.   

‘எனது அலுவலகத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் சிவக்குமாரின் விபரத்தை கொடுத்து பேச சொன்னேன். பேசியிருப்பார்கள் போல. அந்த மடையன் எனக்கு அழைப்பெடுத்து நன்றி சொன்னான். நான் பெண் பார்த்து கொடுத்ததை சொல்லி நெகிழ்ந்தவனாய் பேசினான். திருமணம் நிச்சயமானதும் என்னையும் சூரியையும் வரச்சொல்லி  சூரியிடமும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.  

 அன்று ஆரம்பித்த சண்டையிது. தொடர்ச்சியாக விடிய விடிய  சண்டை போட்டு வீட்டை இரண்டாக்கினான். எவ்வளவோ விளக்கினேன். ஒரு கட்டத்தில் நான் கோபப்பட ஆரம்பித்தேன். ‘அப்படித்தான் செய்வேன் உன் வேலையைப் பார்’ என்றேன்’ அதை சூரியால் ஏற்கவே முடியவில்லை. என்னை அடித்தான். தன் பலம் முழுவதையும் திரட்டி சுவரில் குத்தினான். என் கைப்பேசியை பறித்தெடுத்து என்னவோ செய்துவிட்டு கர்வத்துடன் சிரித்தான்.  

எனக்கு பயமாக இருந்தது. அந்தப் பொழுதுகளை நான் முற்றாக வெறுத்திருந்தேன். சிறு நிமிடத்தையும் தாமதிக்க விரும்பாமல் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். அக்கா வீடு பாதுகாப்பானது எனத் தோன்றினாலும் மச்சானோடு என்னை இணைத்து அடிக்கடி பேசும் சூரியின் இயல்பு என்னைத் தடுத்தது. அண்ணா வீட்டிற்கு போனேன். குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்து தனித்திருந்தேன். சூரி தேடி வருவானென்று எனக்கு தெரிந்திருந்தது.  

சிறிது நேரத்திற்குள் ஏராளமானோர் அழைப்பெடுத்திருந்தனர். என் நண்பி குறுஞ்செய்தியை பார்க்கச் சொன்னாள். ‘சிவக்குமார் வீட்டிலும் பிரச்சனை’ என்றாள். நான் வைத்திருந்த எல்லா வட்ஸ்எப் குழுக்களிலும் கூட அது பகிரப்பட்டதாய் சொல்லி அவளே அழுதாள். எனக்கு தலை வெடித்தது. கைபேசியை ஓங்கித் தரையில் அடித்தேன். சரியாக அந்த நேரத்தில் சூரி வாசலில் நின்று அழைத்துக்கொண்டிருந்தான். பாதி மிருகமாயிருந்த நான் அதே வேகத்தில் உடைந்து கிடந்த கைப்பேசியை பொறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தேன். அவனது முகத்திற்கே அவற்றை வீசி வெறிபிடித்தாற் போல கத்தத் தொடங்கினேன்.  

‘காவ்யா வீட்டுக்கு வா... இல்லன்னா செத்துருவேன்’ என்றான்.  

‘நெஜமாவே செத்துருவேண்டி’  

கோபம் தலைக்கேறிக்கொண்டிருந்தது. அப்படியே அடங்கி மெதுவாக கேட்டேன்.  

‘என்ன சொன்ன?... செத்துருவியா? சொல்லு…. சாகப்போறியா? எத்தன தடவதான்டா செத்துபோவ?’ அவனுக்கு மிக அருகே சென்று அடித்தொண்டையில் அழுத்திச் சொன்னேன்.  ‘செத்து தொலடா பரதேசி... செத்துப்போ… செத்துப்போ….’ என் சத்தம் அக்கம் பக்கம் வரை நீண்டிருக்கும்.  

அண்ணா என்னை கட்டிப்பிடித்து வாயை பொத்தினான்.

 

பதில் பேசாது சூரி வெளியேறினான். நான் அமைதியற்றிருந்தேன். சூரியை எனக்குத் தெரியும். முதற்தடவையாக இப்படி நடந்திருக்கிறேன். சற்று நேரத்திற்குள்ளேயே என் இதயத்துடிப்பு பன்மடங்காகியது. படபடப்பில் மயக்கமே வருவது போல… 

‘அண்ணா வா வீட்டுக்கு போலாம்’ என்றேன்.  

‘லூசா நீ. கொஞ்சம் அடங்கட்டும் விடு.’ 

‘ஏதோ பண்ணுது. பயமா இருக்கு’ 

 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அதிபயங்கரமாக நகர்ந்தது. ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. எல்லோருக்குமான பயம் அது. சூரியை எல்லோருமே அறிந்துதானிருந்தோம்.  

அண்ணா பைக்கை எடுத்ததும் ஏறிக்கொண்டேன். நான் பறந்து சூரியிடம் செல்ல அலைந்தேன். ஏதும் நடந்துவிடக் கூடாதென தவித்தேன்.  

வண்டியை நிறுத்தும் முன்னமே பாய்ந்து ஓடினேன். வீடு திறந்தே கிடந்தது.  வாசலுக்குள் நுழையும் போதே சூரி தொங்கிக் கொண்டிருப்பதைத்தான் நாங்கள் கண்டோம்.’  

நான் உடல் குலுங்க விம்மினேன். அவள் எனது கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.  

‘சூரி பாவம்... நான் அவன கொன்னுட்டேன்’  சீவனேயற்ற குரலில் பிதற்றினேன்.  

‘வாய மூடு. இனியாவது உன் வாழ்க்கையை வாழப்பார். முட்டாள் போல யோசிக்காதே.’  

அவளது மனவோட்டத்தை என்னால் அனுமானிக்க இயலாமல் இருந்தது. அவசரமாக இயங்கினாள். சில பதிவுகளில் கையெழுத்திடச் சொன்னாள். பதட்டமாகப் பேசினாள். என்னை வெளியே அழைத்து வந்து ‘இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.    

வெளியே நின்ற சூரியின் தம்பி ‘வாங்கண்ணி’என்றான்.  

3

         

குழப்பங்களின் ஆக்கிரமிப்பு விட்டகல்வதாகத் தெரியவில்லை. ஒவ்வாரு பகலும் மிக நீண்டதாய் ஊர்ந்தது. யன்னல்வழி வெளிச்ச ரேகைகளின் மாறுதலன்றி வேறேதுமில்லை. இரவும் பகலுமென ஒரேயறைக்குள்ளேயே கிடந்தேன்.  என் மகள் பற்றிய சிந்தனையைத் தவிர்த்தேன். என் உயிரைப் பிடித்து நிறுத்துகிற துரோகியவள்.   

அனேகமாக மாமாதான் உதவினார். ஆனாலும் அவர் பயந்து போயிருந்தார். எனது குடிப்பழக்கம் அதிகமாகியிருந்தது. சிறுநேர அந்த விடுதலையை மிக விரும்பினேன். போதையில் கொஞ்சமாவது வாழ முடிந்தது. எதைக் கொண்டும் நிரப்ப முடியாத என் வெறுமையை நான் தேர்ந்தெடுக்கும் போதைப் பொழுதுகள் அலங்கரித்தன. என்றாலுமே இறுதியில் சகலமும் அனர்த்தமாகி திணறடித்தன.  

‘தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று…’ 

சிவபுராணம், வேதப்புத்தகம், சலவாத்து எதையும் விட்டுவைக்கவில்லை.  விடாமல் துரத்தி சிறுபுள்ளியளவு கிடைத்தாலும் பெறுவதற்கு ஏதேனும் கிட்டுமாவென தேடித் துரத்தினேன்.  

தலை முழுவதுமாய் சூரி தொங்கிய அதே காட்சி. தீப்பற்றிய கோபத்தில் அவனை நான் கத்திய இறுதித் தொனி. 

பசியில்லாமல் சாப்பிட்டேன். தண்ணீரை கடித்து மென்றேன். கிழிந்த வாழையிலைகளைப் கண்களால் தைத்தேன். அறையை சுற்றிச்சுற்றி நடந்தேன். பின்வாசல் திட்டில் அமர்ந்து எறும்புகளை விரட்டினேன். புதிதாய் நடப்பதுபோல் கிணற்றடிவரை நடந்து கண்கள் அகலத் திறந்தபடி குளித்தேன். கற்பூரத்தை உள்ளங்கைகளுக்குள் பொடித்து ஆழ்ந்து நுகர்ந்தேன். தொண்டைக்குள் இறங்கிய அதன் வாசனையை அனுபவித்துக் குடித்தேன்.  

எப்படிப் பார்த்தாலும் சூரி தொங்கிக்கொண்டிருப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. 

‘புருசன் செத்ததும் ஓடிப்போனவள் வந்துட்டாள்’ என்ற கதை ஒளிந்து கிடந்த என் காதிற்கும் வந்தது. சிவக்குமாரது திருமணமும் நின்றுபோனதாம். என்னவோவெல்லாம் நடந்துகொண்டிருக்க நான் அடர்ந்த இருளையும் அதை மீறிய சாம்பல் வண்ண சிறுபொழுதுகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருந்தேன். 

அப்போதைக்கப்பான குழந்தையின் அழுகையொலி மட்டுமே என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.  

எத்தனை நாட்களாய் இப்படிக் கிடக்கிறேன்?  அறையில் ஈரவாடை நிரம்பியிருக்கிறது. கை வைக்குமிடமெல்லாம் ஏதோ பிசுபிசுக்கிறது. அருகிருந்த கண்ணாடியைப் பார்க்கிறேன். ஒரே தூசியும் கரும்புள்ளிகளுமாய்… ச்சே! அவற்றை கைகளால் வழித்துத் துடைத்தெடுத்து சட்டையில் அப்பிக்கொண்டே நீண்ட நாட்களுக்குப்பின்  என் பிம்பத்தை உற்றுப் பார்க்கிறேன். 

வேறு யாரோ ஒருத்தியைப் போல, கண்கள் சோர்ந்து முகம் விகாரமாகித் தெரிகிறது. அப்படியே பின்னால் இருந்து கழுத்தை இறுக்கி என்னை விடாது பற்றியிருக்கும் சூரியின் கைகளையும் கூட என்னால் இப்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது.


Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

Sunday, April 3, 2022

குளம்பொலி – பிரமிளா பிரதீபன்

By On April 03, 2022

 பிரார்த்தனைக்கிடையில் வேறேதோவெல்லாம் தோன்றி மறைந்தது.

தான் கன்னியஸ்த்திரியாகிய கடந்த பதினொரு வருட காலப்பகுதியில் இதுவரை செய்யத் துணியாத ஒன்றை செய்யப் போகிறோம் என்பது கூட ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே …… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே…’

அடுத்த வரியை மறந்துவிட்டவள் போல, ஆன்யா ஒரே வரியை மீட்டிக் கொண்டிருந்தாள். திடீரென பாதியில் எழுந்து வெளியேறினாள்.

மெல்லிய சாம்பல் வண்ண பூசலுக்குள் உள்நுழைவதாய் பொழுது மாறத் தொடங்கியிருந்தது.

திரும்பும் திசையெங்கிலும் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்டிருந்த அளவிற்கு மிஞ்சிய தூய்மையும். பெருத்த நிஷப்தமும், புனிதமான அந்த மடத்தை முழுவதுமாய் நிறைத்துக்கொண்டிருந்தன. வேகமாக கடந்து சமயலறைப்பக்கத்தை அண்மித்தாள்.

நீண்ட சாப்பாட்டு மேசையை தாண்டும் போது, காயவிடப்பட்ட கன்னியாஸ்த்திரிகள் சிலரின் ஆடைகள் கொடியில் தொங்கின. அவ்வாடைகளின் இடைக்கிடையே உள்ளாடைகளும் பாதி தெரிந்த நிலையில் மறைக்கப்பட்டிருந்தன.

பதட்டத்துடன் நடையைத் தொடர்ந்த ஆன்யா, சிறுநொடி நிதானித்து திரும்பிப் பார்த்தாள். இளநீல வண்ணத்திலான மார்பக அங்கியினூடாக காற்றின் மெல்லிய அசைவை அனுமானிக்க முடிந்தது.

தன் வலது கையின் பெருவிரல் தவிர்த்த ஏனைய விரல்கள் நான்கையும் உள்ளங்கைப் பொட்டிற்கிடையே அமத்திப்பிடித்தவாறே, வேகமாக எட்டி தன்னறைக்குள் நுழைந்தாள். பட்டென கதவை தாழிட்டுக் கொண்டாள்.

இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துப் பார்த்தாள் போதாதென்று தோன்றியது. மேசையிலிருந்த ஈரடிசுவொன்றால் கண்களையும் கன்னங்களையும் மீண்டுமொருமுறை ஒற்றியெடுத்து, அவசரமான முறையில் கைகளுக்குள் சுருட்டிக் கசக்கி அந்த கடதாசியை குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தாள்.

ஏற்கனவே வீசப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுக்குவியலும் ப்ளாஸ்டர்களும் நிறைந்திருக்கும் குப்பைகூடையை பார்க்கச் சகிக்காமல், தள்ளி அதனை மேசைக்கடியில் ஒளித்தாள்.

நிமிடநேரத்தையும் தாமதிக்க அவள் விரும்பவில்லை. பாதியளவு தன்னுருவம் காட்டும் கண்ணாடிக்கு முன்னே நின்றுக்கொண்டாள். முகத்தில் வழமைக்கு மாறான கருமையும் சோர்வும் மிகுந்து வழிந்திருப்பதாய் ப்பட்டது. எப்போதுமாய் சிவந்து தென்படும் அழகான அந்த இதழ்களில் ஆங்காங்கே வறட்சியான வெடிப்புகள் தோன்றியிருந்தன.

பரபரவென ஆடையை களையத்தொடங்கி இடுப்பளவில் அதனை நிறுத்திப்பிடித்தபடி வெட்டியகற்றப்பட்ட தன் ஒற்றை மார்பைத் தேடினாள். ஒட்டி மூடிய ப்ளாஸ்டரை அகற்றிப் பார்க்குமளவிற்கான தைரியம் நிச்சயமாய் அவளிடத்தில் இருக்கவில்லை.

திடீரென்றேதான் இப்படி ஒரு ஆசையும் கூடத் தோன்றியது. பார்க்க விரும்பாத பாதியளவு உடலை கண்ணாடிபிம்பத்திலிருந்து மறைத்தபடி அடுத்தபாதியின் வனப்பை தானே இரசிக்க விரும்பினாள்.

ஐவிரல்களுக்குள் மூடினாற்போல் தனதந்த மார்பை பொத்திப்பிடித்தாள். மெதுவாக மேடேறியிருக்கும் தசைப்பகுதியை வருடிக்கொடுத்தாள். உடற்தசையை மிஞ்சிய பிரிதொரு மென்மை மார்பகத் தசைக்குள் நிரம்பியிருப்பதாயிருந்தது. பிம்பத்தினின்றும் பார்வையை அகற்றி குனிந்தொருமுறை தடவிக்கொண்டாள்.

‘பிதாவே நான் என்ன செய்கிறேன். ஏன் என் மனவலிமையை குறைத்துக்கொண்டிருக்கிறாய்? எந்த உபயோகமுமேயற்ற ஒரு தசைதுண்டத்திற்காக ஏங்கித்தவிப்பது நான்தானா? எதை நோக்கி சிந்திக்கிக்கிறேன்? நானா என் பிம்பத்தை இரசிக்கத் தவிக்கிறேன். இல்லாமல் போன என் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்?’

இரு கைகளாலும் முகத்தைப் பொத்தி விசும்பியழத் தொடங்கினாள். அதே நிலையில் முழந்தாளிட்டமர்ந்து விசும்பலை நிறுத்தாமல் வேகமாக ஜெபித்தாள்.

‘யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…’

ஒரேயொரு தடவை கதவு தட்டப்பட்ட சப்தத்தால் வேகமான அந்த ஜபம் நிறுத்தப்பபட்டது. அநேகமாக ரோஜினாவின் செய்திகொண்டுவரும் செய்கையது.

சிஸ்டர் ஆன்யா ஆடைகளை சீர்படுத்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.

‘சிஸ்டர் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’

அனுமதி கேட்காமலேயே அறைக்குள் நுழைந்து, அச்சிறிய பொதியை மேசை மீது வைத்தபடி ஆன்யாவை பார்த்தாள் ரோஜினா. அப்பார்வையில் தேவைக்கு மிஞ்சிய பரிதாபம் கசிந்திருந்தது. வேறெதையும் கேட்டு விடாமல் உடனடியாகவே அறையிலிருந்தும் வெளியேறினாள்.

‘என்னவாயிருக்கும்? யார் அனுப்பியிருப்பார்கள்?’

ஊகிக்கும் மனநிலையா இது. வழமை போல பாதர் பரெட்ரிக்கிடம் இருந்து புத்தகங்கள்…? சிஸ்டர் சாயனாவிடமிருந்து பழங்கள்…? அக்காவிடமிருந்து ஏதேனுமா? பிரித்து பார்க்கத் தோன்றாமல் அப்பொதியினை உற்று அவதானித்தவாறு அமர்ந்திருந்தாள்.

கண்களால் துளைத்தப்பொதியினை திறக்க முனைந்தாள். பொதியின் மேற்பகுதி அசைந்து கொடுத்தது.

மடிக்கப்பட்ட அதே நேர்த்தியுடன் பொதிக்கடதாசிகள் ஒவ்வொன்றாக தம்மை விடுவிக்கத் தொடங்கிய மறுகணமே அடைபட்ட சுவாசத்தை வெளியேற்றத்தவிக்கும் சில பட்டாம்பூச்சிகள் பெட்டியை துளைத்துக்கொண்டு வேகமாக வெளியேறின. எதிர்பாரா அந்த திடீர் வெளியேறலால் விசிறப்பட்ட துளி வர்ணங்கள் அவ்வறையின் வெண்சுவற்றில் ஆங்காங்கே படிந்து கொண்டன.

அதுவொரு அதிசயப் பொதியென்பதில் சந்தேகமில்லைதான். ஆன்யா குனிந்து ஒவ்வவொன்றாய் வெளியில் எடுத்தாள்.

மடித்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையொன்று. அதற்கு ஒத்துப்போகுமாப் போல் கற்கள் பதித்த ஒரு சோடி வளையல். சிறிய அட்டிகை. இன்னும் இரு காதணிகள். கூடவே கூர் வடிவ அடியுடைய பாதணிகள்.

கூரடியுடைய பாதணிகள் எழுப்பும் புதுவிதமான நடையோசையில் எப்போதுமாய் ஒரு மயக்கம் இருப்பதுண்டு. குதிரைக் குளம்பின் தாளம் தரும் கம்பீரத்தையொத்த நடையை தனக்குரியதாக்கும் எந்த பெண்ணுமே, மிகுந்த திமிரையும்; மிதப்பான பார்வை விசிறலையும் வலிந்துப் பெற்று தனக்குத்தானே அதனைப் பொத்தி மறைத்துக்கொள்கிறாள்.

ஆன்யா சிரித்துக் கொண்டாள். இன்னும் துழாவிப்பார்த்தாள்.

ராட்சத மௌனத்தெறிப்புடன் அழகான பெண்பொம்மையொன்று வெளிவந்தது.

நடுங்கும் விரல்களால் அதனை தொட்டுப்பார்த்தாள். விபரியக்கவியலா வைராக்கிய ரேகைகளை முகமெங்குமாய் அது படர விட்டிருந்தது. மிக இறுக்கமான உணர்வுடைய பெண்ணாக அது தன்னை வெளிப்படுத்த விரும்புவதாய் தோன்றியது.

ஆன்யா அப்பொம்மையின் வனப்பை அதிகரிக்க விரும்பினாள். அதன் உதடுகளை அசைத்திழுத்து சிரிக்கப் பண்ணினாள். கண்களுக்குள் ஊதி உயிர் கொடுக்க எத்தனித்தாள்.

‘புற்றுநோய்காரியா நீ? அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டிருக்கிறாயே’?’ கன்னங்களை இலேசாக கிள்ளி வைத்தாள்.

அதுவொன்றும் அத்தனை சிரமாக இருக்கவில்லை. அந்த குட்டி பெண்பொம்மையை இயல்பான அழகுடன் மாற்றி வைக்க ஆன்யாவால் முடிந்தது. பொம்மையின் மொத்த உருவத்தையும் பார்வைக்குள் ஏற்றி இரசித்தாள்.

இயல்பை மாற்றிக் கொள்ளுதலை யாரால்தான் ஏற்க முடியும்!

எதிர்பாரா சீற்றத்துடன் யன்னல்வழி நுழைந்த திடீர் காற்று, அப்பொம்மையை அவளுடைய கைகளிலிருந்து தட்டி கீழே வீழ்த்தியது. மேலும் கோரமாக அறையை ஆட்கொண்டு ஆடவும் தொடங்கியது.

ஆன்யா யன்னல் திரைச்சீலைகளை வெறித்துப் பார்த்தாள். பொம்மையை எடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அதன் பொன்நிற முடியை கோதி விட்டாள். பொம்மையின் கைகளை அழுத்திப்பிடித்து ‘பயப்படாதே…. பயப்படாதே….’ என்றாள்.

காரணமின்றி மனது அச்சப்பட்டது.

சட்டென ஏதோ தோன்றிட யன்னலை அகலத்திறந்து எட்டிப் பார்த்தாள். மொத்த கருமையும் உள்ளே வரும் ஆவேசத்துடன் மிதந்து கொண்டிருந்தது. இயலுமளவிற்காய் எக்கிப்பார்த்து யாருமில்லையென உறுதி செய்துக்கொண்டாள். கைகளை மேலே உயர்த்தி பெரும் விசையுடன் உந்தி, மதிலுக்கு அப்பால் போய் விழும்படி கட்டளையிட்டு, அப்பொம்மையை தூரமாய் வீசியெறிந்தாள்.

அத்தனை ஆசுவாசம் அவளுக்கு.

இனியெதுவும் இருக்க போவதில்லையென்று எண்ணிக்கொண்டே பெட்டியை தலைகீழாய் திருப்பித் தட்டினாள். பெட்டியின் இடுக்கில் மறைந்திருந்த மின்மினிப் பூச்சொன்று விரைந்தோடி வெளிவந்தது. அது ஒளிர்வித்த மென்பிரகாசத்தை கைகளுக்குள் ஏந்திக்கொள்ள வேண்டி, அதன் பின்னாலேயே ஆன்யா ஓடத்தொடங்கினாள்.

மீண்டும் ஒரேயொரு தடவை தட்டப்படும் கதவின் சப்தம்.

கதவு திறந்தேயிருந்ததால். ரோஜினா உள்ளே வந்திருந்தாள்.

‘இன்னுமே தெறந்து பாக்கலயா சிஸ்டர்?’

‘பாக்கலயா…? இன்னுமா…?’

ஆன்யா மேசையை பார்த்தாள். வைத்த அதே இடத்தில் அதே நிலையில் அப்பொதியிருந்தது.

சுற்றிலும் ஒருமுறை அறையையும் ரோஜினாவையும் பார்த்துக்கொண்டாள். சுவற்றில் ஒட்டிக்கொண்ட வர்ணத்துளிகளை தேடினாள். மெதுவாக தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை உள்ளங்கைக்குள் அப்பிக்கொண்டாள்.

வெளியேற்றப்படா ஏதோ ஒரு இரகசியம் உடைந்து அறையெங்கும் வியாபித்திருப்பதாக மனது நம்பியது.

‘பாதர் ப்ரெட்ரிக் வந்திருக்கிறார். உங்களுக்கு தொந்தரவில்லன்னா சந்திக்கலாம்னு சொல்ல சொன்னார்’

‘இதோ ரெண்டு நிமிஷத்துல வாறேன்னு சொல்லு’ ஆன்யா பரபரப்புடன் ஆயத்தமானாள்.

தேவையேயில்லாமல் மனது வெறுமையடைந்திருப்பதை மாற்றிட, புன்னகையை வலிந்தேற்றிக் கொண்டவளாய் மெல்ல நடந்து வரவேற்பறையை அடைந்தாள்.

முன்வாசல் வழி பூந்தோட்ட கதிரையொன்றில் பாதர் ப்ரெட்ரிக் அமர்ந்திருந்தார். வராண்டாவின் மஞ்சள் நிற மின்குமிழின் பிரகாசத்தை ஏந்தி குரோட்டன் செடிகள் தத்தளித்துக் கொண்டிருந்தன.

‘குட் ஈவினிங் பாதர்’

பாதர் ப்ரெட்ரிக் முக மலர்ச்சியுடன் ஆன்யாவை நோக்கி ‘சுகமா இருக்கியா ஆன்யா?’ என்றார்.

அவள் தலையாட்டிக்கொண்டாள். வார்த்தைகள் வர மறுத்தன. தன்னில் ஏற்பட்டிருக்கும் ஏதோவெல்லாமான மாற்றங்களை தன் தந்தையை போன்றிருக்கும் பாதர் ப்ரெட்ரிக்கிடம் ஒப்பிக்க வேண்டுமென்பதை மட்டுமே ஆன்யா யோசித்தாள்.

‘ஆன்யா, வலிமை பெறு. துணிவு கொள். அஞ்சாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். உன்னை கைவிடவும் மாட்டார்.’

பாதர் பிரார்த்தனையை போதனையாக சொல்லத் தொடங்கியிருந்தார்.

‘பாதர்… நான் எங்கேயாவது போகணும் பாதர்’

அவரது பதில்பார்வையின் ஆச்சரியம் ஆன்யாவிற்குப் புரிந்தது.

‘நீங்கதான் உதவி செய்யணும் பாதர்?’

‘எங்கையாவதுன்னா?’

‘எந்த அடையாளமும் இல்லாம…. யாரையுமே தெரியாத…. நான் நானா இருக்குற ஒரு இடத்துக்கு’

ஆன்யா…! என்ன பேசுற?’

‘என் மனநிலைய புரிஞ்சிக்க உங்களால மட்டுமே இப்போதைக்கு முடியும்னு தோணுது பாதர்’

‘ஆண்டவர் தன் வார்த்தைகளை அனுப்பி உன்னை குணப்படுத்துவார். நீ பதட்டமாகாமல் அமைதி கொள்’

‘ஒரே ஒரு இழப்பு பல விஷயத்த அடையணுன்னு நினைக்க வைக்குது பாதர்’

‘ஆன்யா’

பாதர் அதட்டலாக சத்தமிட்டார்.

‘ட்ரை டூ அண்டஸ்டேண்ட் மீ பாதர்’

ஆன்யா சிறு குழந்தையாய் தேம்பியழுவதை கண்டதும் பாதர் கண்கள் மூடி அடுத்த பிரார்த்தனையை ஆரம்பித்திருந்தார்.

‘Help me not to fear the future but to boldly trust that you are in control when my emotions plunge me down, and when I am in despair ….….’

ஆன்யா தானும் அப்பிரார்த்தனையில் சேர்ந்துக் கொண்டவளாய் தொடர்ந்தாள்.

‘‘And times when I can’t talk and don’t know what to say, help me to “Be still, and know that you are God” Be my comforter, my healer and bring me peace. In Jesus’ name, Amen..’

பாதர் ப்ரெட்ரிக் ஆன்யாவின் நெற்றியில் சிலுவை இட்டார். இரண்டு தினங்களுக்குப்பின் வருவதாய் கூறி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

தான் எதனை யோசிக்கவிழைகிறோமென ஆன்யாவாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை மீறிய எண்ணங்களாகவும். பல நாட்கள் தேங்கி மேலெழுந்த ஏதோ ஒரு உந்தலாகவும்….

முதலாம் வாக்குத்தத்தத்தின் போதான அந்த உறுதி எங்கே போனது? அல்லது நித்திய வாக்குறுதியின் பின் இறுகப்பற்றியிருந்த ஆண்டவரின் பாதங்களை நான் தளர விட்டு விட்டேனா? வெறுமனே ஒரு நோய் தந்த மாற்றம் தான் இதுவென நம்பிட முடியவில்லை. ஏதோவொன்று… அதையும் தாண்டிய வேறேதோவொன்று… புறவுலகை நோக்கி பயணிக்க எத்தனிக்கும் அளவிற்கு அத்தனை முதிர்ச்சியற்று போய்விட்டேனா என்ன?

இல்லையெனில் ஏன் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்? எங்கே பயணிக்க திட்டமிடுகிறேன்?

ஆன்யா தலையை பிய்த்துக் கொண்டாள். அவளது மூச்சின் சீரான சப்தம் வெளியே கேட்பதாய் இருந்தது. இரவு பிரார்த்தனைக்கான மணியோசையும் ஒலிக்கத் தொடங்கியது.

2

புதிதாய் எடுக்கும் மாத்திரைகளின் வீரியம், தோற்றத்தை புரட்டிப் போட ஆரம்பித்திருந்தது. உலர்ந்த தோலின் வெடிப்பும், செதிலாய் உரியும் வெண்நிறமான கணமற்ற ஏதோ ஒன்றுமாய் அதைப்பற்றி யோசிக்க மாட்டாதவளாய் நாட்களை வேகமாக கடத்த பிரயத்தனித்தாள் ஆன்யா.

முடி உதிர்வின் பங்கு இரட்டிப்பின் அளவைத்தாண்டியிருந்தது. ஞாபக மறதியின் எல்லையும் விஸ்தாரமாகியிருந்தது. முதல்நாள் சம்பவங்களைத்தானும் துல்லியமாக மீட்ட முடியா மயக்க நிலையை அவள் வரவேற்கவே செய்தாள். எப்போதுமாய் படுத்தேயிருக்க விரும்பினாள். விழிப்பு நிலையிலும் கண்கள் மூடி வெறுமனே கிடந்தாள்.

இரத்தம், சலம், மாத்திரைகள், தைலம் என்ற பக்கத்தை மறுத்து மறுபக்கம் பார்க்கையில் உதிர்ந்த கேசம் நெளிந்து பறப்பதாய் இருக்கும்.

அவ்வப்போதான பிரார்த்தனைகள் மட்டுமே ஆறுதலைத் தந்தன.

பார்வையாளர்களை அனுமதிக்காதிருக்க வேண்டினாள். ரோஜினாவிடம் சொல்லி அறையின் முகம்பார்க்கும் கண்ணாடியை அப்புறப் படுத்தினாள்.

ஆன்யாவிற்குத் தெரியும். எல்லாமே மாறக் கூடியதென்று… நான்கோ எட்டோ எண்ணிக்கை முக்கியமில்லை. சில வாரப்பகுதிக்குள் இழந்ததெல்லாம் மீண்டும் பெறப்படுமென்பது வைத்தியரின் கணிப்பு. வெட்டியகற்றப்பட்ட ஒற்றை மார்பகத்தை தவிர… ஆமாம் மார்பகத்தை தவிரதான்.

பார்க்க பிடிக்காத அருவருப்பை கண்கள் மூடி தவிர்த்தாள். புதிய உலகொன்றை சிருஷ்டிக்கவே ஆன்யா விரும்பினாள்.

கற்பனையில் சில பிராணிகளை வளர்த்தாள். அவற்றின் பாஷைகளை கற்றுக்கொண்டாள். மீன்களை கடலுக்கடியில் மட்டுமே தேடினாள். பறவைகளை காட்டுக்குள்ளும் பாம்புகளை புற்றுக்குள்ளுமாய் அதனதன் வாழ்விடத்திலேயே அவை இயல்பு மாறாமல் தம்மை வெளிப்படுத்துவதை கண்டு இரகசியமாய் களிப்புற்றாள்.

‘பிதாவே’ என பெருங்குரலெடுதது அவ்வப்போது விளித்தாள். சமயங்களில் மரணத்தை விட கொடுமையான இழப்பு மனநிலையை தாங்கமாட்டாமல் பிதற்றுவாள். தனிமையை மட்டுமே விரும்புவதாய் காட்டிக்கொண்டாள். தொடர்ச்சியாக ஒளிந்து மறைந்து கிடந்திடும் நாட்களை வெறுத்து பிரார்த்தனைகளை மிகக்கெட்டியாக பிடித்தபடி தன்னை திடப்படுத்துவாள்.

இமைகளை திறவாமல் நீண்ட நேர இடைவெளியெடுத்து சிந்திப்பதில் நிறைந்த ஆசுவாசம் கிடைப்பதாயிருந்தது. இருளும் ஒளியும் மாறி மாறி வந்து போனதையும், இரவுகள் மட்டும் நீண்டு கிடந்து அவஸ்த்திப்பதையும் அவள் யாரிடமும் சொல்லாதிருந்தாள். திடீரென எப்போதாவது ‘ஆன்யா எங்கே?’ என்று தேடுவாள்.

பிறந்து தொலைத்தலால்  மட்டும் என்னவாகிவிடப் போகிறது ?

பெண்ணாய்த் தன்னை உணர்தலில் உள்ள திருப்திக்கு ஈடேயில்லையென்பதை நினைக்கும் போதில் மட்டுமே அவளது புலன்களணைத்தும் புத்துணர்வால் நிரம்புவதாய் இருக்கும். அடிவயிற்றில் சில்லுணர்வை படரவிட்ட இதமும் சிலிர்ப்பும் தோன்றி மறையும். கண்கள் திறவாமலேயே சிரித்துக் கொள்வாள். தன்னை புறத்தோற்றத்தில் பெண்ணென அடையாளப்படுத்தும் மிஞ்சிய மார்பகத்தை வாஞ்சையுடன் பற்றுவாள்.

3

பிரக்ஞையற்ற வெற்றுப் பொழுதுகளாய் பிணியின் மீதேறி நடந்த நாட்களை அருவருப்பான கனவென ஒதுக்கியிருந்தாள் ஆன்யா.

கொஞ்சமாக விருந்தினர்களை அனுமதிக்கவும், சிரித்து பேசவும், அவ்வப்போது உலாவித் திரியவுமாய் தொடங்கியிருந்த ஒரு மாலை பொழுதில் கபில நிற பூனையொன்று தானே தன்னுடலை ஸ்பரிசித்து நெளிப்பதை கண்டதும் பிரிக்கப்படாத தனது பரிசுப்பொதி நினைவிற்கு வந்திருந்தது.

பூனைக்கும் அப்பொதிக்குமான தொடர்பு எதுவுமே இல்லையென்று தெரிந்தாலும் ஏன் அப்படி நினைக்கத் தோன்றியதென யோசித்தவாறே அறைக்குள் சென்று அப்பொதியை தேடியெடுத்தாள்.

சிஸ்டர் சாயனாவிடமிருந்து வந்திருந்தது.

உள்ளிருக்கும் பொருள் பற்றிய எதுவித எதிர்பார்ப்புமற்று பரபரவென 

மேற்கடதாசியை கிழித்துப் பிரித்தாள். பொலித்தீனால் உறையிடப்பட்டதாய், வெண்ணிறத்தில் ஒரு மார்பக அங்கி.

‘இதெல்லாம் இனியெதற்கு …?;’

வெகு சாதாரணமாய் பொலித்தீனை அகற்றி விரித்துப் பார்த்தவள் சிலையாக 

சிறுபொழுது ஸ்தம்பித்தாள். ஒற்றை மார்பகம் செயற்கையாக வைத்து நம்ப முடியாத நேர்த்தியுடன் தைக்கப்பட்டிருந்தது. அடுத்தகணமே தனக்கதனை பொறுத்திப் பார்க்கத் தொடங்கினாள்.

கச்சிதமான அளவு.

அதற்கு மேலால் சட்டையை சரிசெய்தாள். துளியளவிலும் வித்தியாசமில்லாமல் அத்தனை பொருத்தமாயும், மாசற்ற நிஜத்தன்மையை ஒப்புவிப்பதாயும் இருந்தது. சத்தமில்லாமல் சிரித்தாள். மீண்டும் மீண்டுமாய் தன் பிம்பத்தை பார்த்து உறுதி செய்து பூரித்துப் போனாள். யன்னலை திறந்து காற்றுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தாள். அப்படியே வான்வெளி பார்த்து கையசைத்து குதூகலித்தாள்.

மிதப்பது போல் தோன்றியது.

இழப்பின் வலியை மீள்நிரப்பும் சிறு துணிக்கையை வேண்டாமென மறுக்குமா மனது ? சூழற் பூக்களெல்லாம் ஒரே சமயத்தில் பூத்தாற் போல் நறுமணக்கலவை உள்நுழைந்து வெளியேறியது.

ஒருசில நாட்களுக்கேனும் போதுமே!

உடல் ஊனமுற்ற உணர்ச்சியுடன் மறைந்து குறுகி இனி நடக்க வேண்டாம். எப்போதுமான நிமிர்ந்த நடையினை இயல்பாக்கி கொள்ளலாம். கண்கள் பார்த்து தயக்கமின்றி பேசலாம்.

ஆன்யா தன்னை சரிபார்த்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேற ஆயத்தமாகிய அதே நொடி தன்னறிவின்றி கால்கள் பின்னோக்கிச் சென்றன. மனம் தடுமாறியது. இயல்பிற்கு மாறான நடுக்கம் மேனியெங்குமாய் பரவியது. இராட்சத பறவையொன்றின் மிகக் கொடூரமான ஓலம் அறையை சூழ்ந்தொலிப்பதான பதைபதைப்பு உருவாகியது.

மீண்டும் ஒரு பிரமைக்குள்ளான உள்நுழைவா?

‘இத்தனை பதட்டத்துடன் முடிவெடுப்பவளா நான்?’

மாயத்தினூடாக எட்ட எண்ணிடும் ஒரு பொய் மகிழ்வு எப்படி சரியானதாகும்?

கேட்டுக்கொண்டிருந்த இராட்சத ஓலங்களின் எதிரொலியை வெளியேற்றுவதாய் எண்ணிக்கொண்டு யன்னல்களை முழுதுமாய் திறந்து வைத்தாள். கண்களை விரக்தியோடு மூடி சில நொடிகள் நிதானமாக யோசித்தாள்.

அற்புதமான அந்த சில நொடிகள் பல மணித்தியாலங்களை விழுங்கி, பெருத்த நீள்பாம்பாகி அவளை அப்படியே தன்வசப்படுத்த தொடங்கியது.


4

சில மணித்தியாலங்கள் தேவைக்கேற்ப நீள்வதால் என்னவாகிவிடப்போகிறது?

சமயங்களில் எதுவென்றாலும்…!

ஆன்யாவின் முகம் பிரகாசித்தது. சுற்றிலும் புதிதாய் சில நிறங்கள் உயிர்கொண்டெழுந்திருப்பதை அவள் அவதானித்தாள். பலநாட்களாக அவளை சோர்வடைய செய்திருந்த இலக்கற்ற தவிப்பு, இல்லாமல் போயிருப்பதான உணர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள்.

எந்த அவசரமுமின்றி தொடர்ச்சியாக செயற்பட அவளால் முடிந்தது.

ஆடையை அகற்றி, அந்த பொய் மார்பகம் தாங்கிய உள்ளங்கியை பிய்த்தெடுத்தாள். அதனை அலட்சியமான பார்வையுடன் உள்ளங்கைக்குள் சுருட்டி குப்பைக்குள் எறிந்தாள்.

நிரந்தரமான சிரிப்பொன்றை முகத்தில் தக்க வைத்தபடி ஆடையை சரிசெய்துக்கொண்டாள். இப்போது தன் பிம்பத்தை பார்க்க வேண்டுமென அவள் நினைக்கவில்லை. ஆனால் தன் புருவமத்தியில் கர்வம் திமிர்த்திருப்பதாய் தோன்றிக்கொண்டேயிருந்தது.

சிறு தயக்கமுமின்றி ஒற்றை மார்பகத்துடனான உடலை நிமிர்த்தி நடந்து அறையிலிருந்து வெளியேறினாள்.

குதிரையின் குளம்பொலி அவளுக்குள் மாத்திரமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.


நன்றி - வனம், இதழ் - 11

Saturday, April 2, 2022

கமீலே டொன்சியுக்சின் ஜோடித் தோடுகள் - பிரமிளா பிரதீபன்

By On April 02, 2022

அந்த ஒருஜோடித் தோடுகளால் மாத்திரம் பேசமுடிகிறதென்பதையும் அவை சதா தன் காதுகளுக்குள் முணுமுணுத்தபடி எதையோ சொல்ல விழைகிறதென்பதையும் வெளியே சொல்ல முடியாத தடுமாற்றத்துடனேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் மயிலா

இந்தத் தோடுகளைத் தவிர்த்து மேலும் இரண்டு ஜோடித்தோடுகள் அவளிடமிருந்தன. அதிலொன்று செவ்வக வடிவத்திலான பெரிய தோடு. இன்னுமொன்று நட்சத்திர வடிவத்திலான தங்கத்தோடு. அவையிரண்டையும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதையே மயிலா விரும்பினாளென்றாலும் அம்மாவின் திடீர் ஆசையை நிறைவேற்றுவதற்காய் இந்தப் புதிய தோட்டை அணிய வேண்டியதாய் ஆகிப்போயிருந்தது. 

சொல்லப் போனால் எதிர்பாரா நேரத்தில் கிடைத்த பேரதிர்ஷ்டப் பொருளாக வந்தமைந்த தோடிது. 

ஒரு ரயில் பயண அரையிருள் பொழுதில் அம்மாவின் கண்களுக்கு மாத்திரமே தென்பட்ட வெள்ளை கடிதாசி சுருளை என்னவென்று பார்க்காமலேயே தன் கைப்பைக்குள் பதுக்கி வைத்திருந்திருக்கிறாள்.  வீட்டுக்கு வந்ததும் அதனை பிரித்துப் பார்த்தவள் திறந்த வாயை ஓரிரு நொடிகள் மூடவேயில்லை. 

‘யாரோடதுன்னு கேட்டு குடுத்திருக்கலாமேம்மா’

‘முட்டாளா நீ… இது நமக்கு கெடச்ச அதிர்ஷ்டம்டி’

பூ வடிவிலான அந்தத் தோட்டின் சரிமத்தியில் ஒரு கல் விசித்திர ஒளியுடன் மினுங்கி தோடு மொத்தத்தையும் மிகக் கவர்ச்சியானதாக காட்டியது. நிஜத்தில் ஒரு பூ மலர்ந்து விரிந்தது போல பளீரென பிரகாசித்தது.  

‘வைரக்கல்லாயிருக்குமோ!’ இது அம்மாவின் பேராசை. 

‘ச்சே சும்மா கல்லுதாம்மா’

‘இல்லடி இப்புடி மினுங்குதே’

இல்லாமலில்லை. அந்த கல் ஜொலிப்பின் அசாதாரண அழகை மயிலாவும் அவதானித்தாள். 

அம்மாவே அதனை பவ்வியமாய் கையாண்டு மயிலாவின் காது துளைகளுக்குள் பொருத்தினாள். பல தடவைகள் தோட்டுடனான மயிலாவை பார்த்துப் பல்லிளித்தாள். 

‘யார்ட்டயும் சொல்லிடாத என்ன?’

ஏன் எனும் தொனியுடனான மயிலாவின் பார்வைக்கு. 

‘நான் சொல்றத மட்டும் கேளு… கொஞ்ச நாளைக்கு அப்பறமா இது பத்தி விசாரிச்சிக்கலாம்’ என்றாள். 

முதலிரு நாட்களில் அந்தத் தோடுகளால் பேச முடியுமென்பதை மயிலா உணரவில்லை. ஆழ் உறக்கத்தின் பின்னரான ஏதோ சில குழப்பமான நினைவுகளும் நடுசாம விழிப்பில் தன்னை எரிச்சல் படுத்திய அந்த முணுமுணுப்பும் தோட்டுடனானதென்பதை நம்புவதற்கும் அவள் தயாராக இருக்கவில்லை. 

மூன்றாம் நாளில் உச்சிவெயில் ஆற்றுக்குளியலின் போதே அவள் அதனை அவதானிக்கத் தொடங்கியிருந்தாள். 

‘என்னை நனைக்க மாட்டாயா?’

மயிலா சுற்றிலுமாய் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இருக்கவில்லை. பின் யார்தான் பேசியிருக்க முடியும்! காதின் மிக அருகாமையில் மிதந்து செல்லும் காற்று பேசிவிட்டுப் போகிறதா என்ன? அப்படியில்லையென்றால் இத்தனை மென்மையாக வேறு யார் பேசியிருப்பார்கள்?

மயிலா மூச்சடக்கி அந்த மெல்லிய குரலொலியை துல்லியமாய் செவிமடுத்தாள். 

‘நனைக்க மாட்டாயா?’

‘யார் பேசுறது?’ என்றாள் மயிலா. 

ஒரு கையால் ஓசை வந்த வலது காதின் தோட்டை தடவிக் கொடுத்தபடி “நீயா?’ என்றாள். 

‘நீ கெட்டிக்காரிதான்’ என்றதந்த தோடு.

‘எப்டியிது… நெஜமாவே உன்னால பேச முடியுதா?’

‘முதலில் என்னை நனைத்து விடு பிறகு பேசலாம்’

மயிலா நீரினுள் நன்கமிழ்ந்து நீராடினாள். அதிசயத்தின் உச்சத்தில் பிரமிப்படைந்தாள். அந்த தோடுகளின் வசீகரிக்கும் இனிய குரலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டாள். 

‘ஹே தோடே…. உனக்கு ஒரு பேர் வைக்கணுமே…!’

‘சொல் என்ன பெயர் வைக்க போகிறாய்?’ 

மீனு… திவி… மஞ்சு… இப்டி ஏதாவது?’

‘கமீலே என்றழைக்கிறாயா? அந்த பெயரை உச்சரிக்கும் போது தோட்டின் குரலில் சிறு நடுக்கமொன்றிருந்து. 

‘கமீலே…’ மெதுவாக அழைத்தாள் மயிலா. எந்தப் பக்கம் பார்த்து பேசுவதென்று தெரியாமலிருந்தது அவளுக்கு. 

‘ஆமாம் ஆமாம் அதே பெயர் தான்’

‘சரி… அந்த பேர்ல அப்டி என்ன சந்தோசம் ஒனக்கு?’

‘உனக்கு கமீலேவை தெரியாதா…? 

‘யார் அவங்க?’

‘அவளின் முழுப்பெயர் கமீலே டொன்சியுக்ஸ். புகழ்பெற்ற பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனேவின் முதல் மனைவி அவள்.’ 

மயிலா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

‘பச்சை ஆடை உடுத்திய பெண்’ என்ற ஓவியத்தை பற்றி நீ எதுவும் அறிந்ததில்லையா? அந்த ஓவியத்திற்கு மாடலாக நின்றவள் அவள்தான்.    

‘ம்ம்…’

‘அந்த ஓவியத்திற்காக நிற்கும் போது அணிந்து கொள்வதற்காக ஒரு கழுத்தணியையும் அதற்கு பொருந்திப்போகக் கூடிய ஒரு ஜோடி காதணியையும் விரும்பி தெரிவு செய்து வாங்கிக் கொண்டாள்’

‘ம்ம்’

‘ஆனால் பாவம் அந்தப் பெண். அவளால் அதனை அணிந்து அழகுபார்க்க முடியாமலேயே போனது.’

‘ஏன் என்னாச்சு?’ மயிலாவிற்கு இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் இது ஒரு பொய்யான கதையென்றுதான் அவள் ஊகித்தாள். 

‘நீ நம்பாவிட்டாலும் இதெல்லாம் உண்மை மயிலா’

முதலாவது அதிசயம் அந்தத் தோடு அவளை பெயர் சொல்லி அழைத்தது. இரண்டாவது அவள் இந்தக் கதையை நம்பவில்லையென்பதை கண்டு பிடித்திருந்தது. 

‘ஒனக்கு எப்டி இதெல்லாம் தெரியுது…? நான் கனவேதும் காண்றேனா என்ன?’

‘இல்லை. இதுவல்லாத இன்னும் பல அதிசயங்களையும் நீ உணரக்கூடும்.’

‘அப்போ இதெல்லாம் எப்டி நடக்குதுன்னு சொல்ல மாட்டியா?’

‘நான் கனவுகளாலும் அதீத கற்பனைகளாலும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவள் மயிலா. மோனே தன் ஓவியப்பூக்களில் பல்வேறு இரகசியங்களை ஒளித்து வைத்திருப்பதை போலவும்… பூக்களின் திறந்த இதழ் நுட்பங்களை தன் ஓவியத்தினூடாக காட்டிவிட துடித்ததை போலவும் என்னையும் ஒரு அற்புத பூவாக அவர்கள் வடிவமைக்க விரும்பினார்கள். அப்போதுதான் மலர்ந்ததென்ற தோற்றத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு வைரக்கல்லால் என்னை அலங்கரித்தார்கள்.’

‘ம்ம்’

‘யோசித்துப்பார். கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் உருவான நான் இன்னும் இவ்வளவு அழகுடன் எப்படி இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணின் உணர்வுகளை உள்வாங்கி அவளாகி வாழ்ந்தவள். ஒரு கட்டத்தில் அவளுக்காக ஏங்கியவள். ஒரு நிஜப்பூவின் பவித்திரத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதையே கமீலே டொன்சியுக்ஸ் விரும்பினாள். அவள் என்னை மிருதுவாக ஸ்பரிசித்தாள். தொட்டணைத்து முத்தமிட்டாள். என்னுடன் பேசத்தொடங்கினாள். வரையறைக்கடந்த தன் நேசிப்பினால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்தாள்.’

தோடு பேசிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் அம்மாவிடம் சொல்வதா வேண்டாமாவென மயிலா யோசிக்கத் தொடங்கினாள். திடீரென இடைமறித்து ‘அதுசரி நீ எப்டி இங்க வந்து சேர்ந்த?’ என்றுக் கேட்டாள். 

‘அது தெரியவில்லை. என் வாழ்நாளில் அதிக பொழுதுகளை நான் அடகுக்கடை அழுக்கு லாச்சுகளுக்குள் தான் கழித்திருக்கிறேன். சுத்திப் பொதி செய்யப்பட்ட நிலையுடனேயே எங்கெல்லாமோ பயணித்திருக்கிறேன். கமீலே டொன்சியுக்ஸ் கூட, அவள் மிக விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அடகிலிருந்து மீட்டெடுத்து ஒருமுறையாவது ஒன்றாகச் சேர்த்து அணிந்துவிட வேண்டுமென்று போராடினாள். ஆனால் அவளால் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் போனதால் ஏதோ ஒரு கடையில் நீண்ட காலமாக அடைந்து கிடந்திருந்தேன்.’ 

‘இங்கெல்லாம் பாதி பொம்பளைக நகை செய்றதே அடகு வைக்கத்தான் கமீலே. அது ஒனக்கு தெரியாதா?’

‘இல்லை நான் கொஞ்சம் காலமாவது ஒரு பெண்ணின் அழகு பூரிப்புடன் வாழ ஆசைப்படுகிறேன். நீயும் அப்படி செய்து விடாதே’ 

தோடுகள் இடைவிடாமல் வலது காதிலும் இடது காதிலுமாய் எதையெதையோ பேசிக்கொண்டேயிருந்தன.  அவை பேசுகையில் இரண்டு காதுகளிலும் மென்மையான அந்த நுனிப்பகுதி சில்லிட்டு கூசுவது போலவும் அக்கணத்தில் முழு உடலுமே அத்தோடுகளின் தோழமையை நாடி அவ்வுரையாடலுக்காய் ஏங்குவதை போலவுமாய் மயிலா நம்பத் தொடங்கினாள்.    

எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற அத்தோடுகளின் நட்பை மொத்தமாய் விரும்பினாள். தன்னை அடிக்கடி தனிமைப்படுத்திக் கொண்டு மனதிலுள்ளவற்றையெல்லாம் மணிக்கணக்கில் பேசித்தீர்த்தாள். அத்தோடுகளிரண்டையும் தன் உயரிய நேசிப்பிற்குரிய தோழியாய் மாற்றி யாருமறியாததொரு அரூப உறவை விஸ்தரித்துக் களித்தாள். சமயங்களில் தோடுகளின் தொடர்ச்சியான கதைகளில் மையலுற்று தானே அந்த ‘கமீலே டொன்சியுக்ஸ்’ என்பதாகவும் பாவனை செய்தாள். 

ஒரு ஓவியத்தின் மாடலைப் போல அசையாது ஓரிடத்தில் நின்றுக் காட்டி  ‘இப்டி நிக்கணும்னு தானே ஆசப்பட்ட?’ என்பாள். அவை பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வொலி கழுத்துடன் ஊர்ந்து மிதந்து தன்னை மொத்தமாய் கவர்ந்திழுப்பதாய் சொல்லிக் கொள்வாள். மலைக்காடுகள் மீதேறி சத்தமாய் தோடுகளுடன் சேர்ந்து பாடுவாள். ஆற்று நீருக்குள் தோடுகளை அமிழ்த்தியெடுத்து ஆனந்தப்படுத்துவாள்.  அவ்வப்போது கோபித்துக் கொண்டு பேசாதிருக்கவும் செய்தாள். அப்படியே அவளது மென்மையான ஸ்பரிசத்தை வருடலூடாக  வெளிக்காட்டுவதுடன் அத்தோடுகளது சப்தத்துடனான தொடுகையிலும் இன்புற்றுத் திளைத்தாள்.    

****

ஒரு புதன்கிழமை மாலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த பருமனான மனிதன் வந்துக் கொண்டிருந்தான். வழமை போலவே அம்மா, தண்ணீர் டங்கிக்கு பின்னால் இருக்கும் கூடைக்குள் அமர்ந்து தலையிலொரு துணியைப் போர்த்திக் கொண்டபடி மயிலாவை பொய் சொல்லச் சொன்னாள். 

இத்தகைய திடீர் பொய்கள் உடன் உருவாகும் திறன் மிக்கவையென்பதாலும் தொடர்ச்சியாக சொல்லிப் பழக்கப்பட்டமையாலும் கண்களிலோ உடலசைவிலோ எவ்விதக் குற்றவுணர்ச்சியையும் வெளிக்காட்ட விடாமல் வெகு லாவகமாக வந்து விழப்பார்க்கும். 

அவன் கேட்பதற்கு முன்பாகவே ‘அம்மா கடைக்குப் போயிட்டாங்க’ என்றாள். 

அவன் கோபமாக கண்களை சுழற்றித் தேடினான். 

‘எத்தன மணிக்கு வருவாங்க?’ என்று கேட்டான்.

‘தெரியல’ என்றபடி மயிலா கொடிகயிற்றில் கிடந்த உடைகளை சாவகாசமாக எடுத்து கைகளில் சேகரித்தாள். அவளது முகத்தில் ஏளனம் மிகுந்த சிரிப்பொன்று படர்ந்திருந்தது. 

‘ஒனக்கு எத்தன வயசு பாப்பா’

மயிலா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்துக் கொண்டாள். 

‘ஒரு பதினைஞ்சு பதினாறு இருக்குமா? வாங்குன காச குடுக்காட்டி வேற மாதிரி ஆகிடும்னு ஒங்கம்மாகிட்ட சொல்லிரு சரியா?’ 

அவன் பேசிய விதம் ஒருவிதமான சினத்தைக் கொப்பளிக்கும் தொனியாகவிருந்தது. 

மயிலா பயந்து தலையாட்டினாள். சரிந்திருந்த அந்தக் கூடை மெதுவாய் அசைந்தது. அவன் கண்டு விடுவானோவென்று மயிலா பதட்டமானாள்.

‘நாளைக்கும் இதே நேரத்துக்கு வருவேன். வட்டிக் காசாவது இருக்கணும் சொல்லிட்டேன்’

அவன் அதட்டாலாகச் சொல்லியபடி வாசலில் இங்குமங்குமாய் இருமுறை நடந்தான். வீட்டினுள் எட்டிப் பார்த்தான். சுவரோரம் தென்பட்ட குளியலறை யன்னலில் எக்கித்தாவி உள்ளே பார்க்க முயற்சித்தான். பின் கோபமாக வெளியேறினான். 

அம்மா கைகால்களை உதறிக்கொண்டே கூடைக்குள்ளிருந்து வெளியே வந்து ‘போயிட்டானா?’ என்றாள்.

‘என்ன வெளயாடுறியாம்மா? இனி எனக்கு பொய்யெல்லாம் சொல்ல முடியாது சொல்லிட்டேன்.’

‘வட்டிக் காசையாவது நாளைக்கு குடுத்துறணும்டி. என்ன செய்றதுன்னு ஒன்னுமே புரியல’

அம்மா சட்டென்று மயிலாவின் காதிலிருந்த தோடுகளைப் பார்த்தாள். அவளது கண்களில் மின்னலடித்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். பின் எதற்காகவோ பயந்தவளாய் அவ்வெண்ணத்தை மாற்றி தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை வெளியே இழுத்துப் பார்த்தாள். தாலியென்ற பெயரில் ஒரு துண்டு தங்கமும் அதற்கு காவலாய் இரண்டு மணிகளும் ஒன்றுடனொன்று மோதுண்டு சப்தமெழுப்பின. 

ஒரு மஞ்சள் துண்டை கழுவியெடுத்து அந்தக் கயிற்று மத்தியில் கட்டிக் கொண்டவள் மெதுவாகத் தாலியையும் மணிகளையும் அதிலிருந்து அகற்றி ஒரு கடுதாசியில் சுற்றியெடுத்துக் கொண்டாள். 

‘எவ்வளவு கொடுப்பானோ… எப்டி மீட்டெடுக்கப் போறேனோ தெரியலயே..!’

புலம்பிக்கொண்டே அம்மா வெளியே செல்ல ஆயத்தமானாள்.

***  

நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் காத்திருப்போர் வரிசையில் மயிலாவும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மாவின் படபடப்பு அவளது கைநடுக்கத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

தனக்குத் தேவையான பணத்தைப் பெற முடியாதென்ற கட்டத்தில் மிகுந்த கலவரத்துடன் ஒரு பெண் தனது தோடுகளைக் கழற்றி கொடுத்தாள். அவர்கள் சிறிது நேரத்திற்குள் அதுவும் போதாதென்றார்கள். அவள் அடுத்த நொடியிலேயே அழுதுவிடப் போவதைப்போல மனமுடைந்து ஏதோவெல்லாம் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

அம்மா தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை அடிக்கடி துடைத்தபடியே அதனைப் பார்த்தாள். அம்மாவின் காதிலும் இரண்டு கல்தோடுகளிருந்தன. 

மயிலா யோசித்தவாறே மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான அடிக்கடி வந்துபோகும், அறவும் பிடிக்காத இடமாக இது இருந்தது. 

‘உனக்கு பயமாருக்கா?’ 

மயிலா கிசுகிசுத்த குரலில் தோடுகளிடம் பேசினாள். 

‘ஆமாம்… மிகவும்’

‘பயப்புடாத நீ வைரக்கல்லுன்னு எங்கம்மாக்குத் தெரியாது’

‘இது போன்ற கடைகளில் சிறைப்பட்டிருத்தலென்பது தீரா வேதனை மயிலா’

‘நாங்க மட்டும் விரும்பியா இதையெல்லாம் பண்றோம். இந்த எடத்துல உக்காந்திருக்குறப்போ மனசு படுறபாடும் தவிப்பும் பத்தியெல்லாம் உனக்கெப்படி தெரியப்போகுது. ஆசையாசயா வாங்குன நகையெல்லாம் ஒன்னொன்னா பறிபோன இடமிது’

‘எனக்குத் தெரியும். கமீலே டொன்சியுக்ஸ் இறந்த பின்னாலும் அவள் விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அணிவித்துவிட வேண்டுமென்று மோனே எத்தனையோ முயற்சிகளெடுத்திருக்கிறார். யாரிடமோவெல்லாம் கடன் கேட்டு கடிதங்களெல்லாம் எழுதியிருக்கிறார். அப்படியும் அது சாத்தியப்படாமல் போனபோது… அவள் இத்தகைய அணிகலன்களுக்காய் எத்தனை தூரம் தவிப்புடன் இருந்திருப்பாளென்றும் அது எத்தகைய துயரத்தையும் சொல்ல முடியாத மனவலியையும் அவர்களுக்கு அளித்திருக்குமென்பதையும் நான் நன்றாகவே அறிந்திருந்தேன்’

‘எங்கம்மாவும் அப்பிடி அழுதுருக்காங்க கமீலே. சாமிய திட்டிக்கிட்டே அழுவாங;க. ஒருதடவ நீ இப்புடி கைலயும் கழுத்துலயும் மாட்டிக்கிட்டு மினுக்குறியே எங்களுக்கு மட்டும் ஒரு பொட்டுமணி இல்லாம போற அளவுக்கு வாட்டுறியேன்னு சொல்லிகிட்டே அம்மன் படத்த எடுத்து பீரோ உள்ளுக்கு பூட்டி வச்சிட்டாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு’

‘ஆமாம். ஆசையாய் வாங்கிய அணிகலன்களை அணிந்து கொள்ள முடியாத துர்பாக்கியத்தை பல பெண்கள் காலங்காலமாய் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு நானே சாட்சி. என்னை எவருக்குமே தொடர்ச்சியாக அணிய முடிந்ததேயில்லை தெரியுமா?’

அடுத்தது அம்மாவின் முறை. அம்மா பரிதவிப்புடன் தன் கையிலிருந்த சுருளையும் அடையாள அட்டையையும் நீட்டினாள். அவர்கள் அதனைச் சரிபார்த்தபடி சிறிது தாமதித்து எதையோ சொல்லும் போது அவளது முகம் சட்டென மலர்ந்தது. 

மயிலாவிற்கு எங்கிருந்து வந்ததென்று தெரியாத அந்த பயமும் நடுக்கமும் அகன்றது. மெதுவாகக் கையுயர்த்தி தோடுகளை ஒரு தடவை தடவிப்பார்த்துக் கொண்டாள். 

‘இல்லாம போயிருமோன்னு நினைக்குறதால வரும் பயம் அதிகமா ஆசப்பட வைக்குதில்ல…!’

‘என்ன சொன்னாய் புரியவில்லை’ என்றது தோடு.

‘இல்ல ஒன்னுமில்ல… உனக்கு இப்போ நல்ல காலம்னு சொன்னேன்.’ அவள் மீண்டுமொரு முறை இரண்டு தோடுகளையும் மென்மையாகத் தடவிக் கொடுத்தாள். 

‘உன் ஸ்பரிசத்தில் நான் கமீலே டொன்சியுக்சை உணர்கிறேன் மயிலா’

‘நெஜமாவா..?’

‘ம்ம.. அவளைப் விடவும் நீ என்னை நேசிக்கிறாய் என்றே தோன்றுகிறது.’

கமீலேவின் இந்த வார்த்தைகள் ஒரு இசையென மயிலாவின் நெஞ்சத்தை குழைந்தெடுத்தது.    

‘போகலாம்டி’ என்றபடி அம்மா வேகமாக நடந்தாள். மயிலா பின்னாலேயே ஓடிச்சென்றாள்.  

***

தோடு பற்றிய பல்வேறு வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டன. அத்துடன் மயிலா தனியாகப் பேசிக்கொண்டு திரிவது பற்றியும்.

எல்லா கல்லும் எல்லோருக்கும் ஒத்துப்போகாதாம். ஒருசில கற்கள் பதித்த தோடுகளால் பித்துப்பிடித்து அலைய வேண்டி வருமாம். அப்படியே ஆளையே இல்லாமல் ஆக்கிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.  

அம்மா கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள். 

‘அதக் கழட்டி வச்சுருடி’ என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள்.  ஒருசிலர் அதனை வைரக்கல்லாயிருக்குமென சொல்லியிருந்ததால்  ‘கொண்டுபோய் கேட்டு பார்த்தா பெரிய வெலைக்கு வித்துரலாம்’ என்றபடி கனவு காணவும் ஆரம்பித்தாள்.

நாளுக்குநாள் இந்தத் தோடுகள் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கத் தெடங்கின. அதனை நல்ல விலைக்கு வாங்கி தாங்களே விற்றுக் கொள்வதாயும் அம்மாவிடம் சிலர் சொல்லியிருந்தார்கள்.

‘முருகேசு மாமா இருவதாயிரம் ரூவா தாரேங்குறாரு. அவருகிட்ட குடுத்துருவமா? அது பித்தள தோடா இருந்தா கூட நாம காச திருப்பித்தர வேணான்னு சொல்றாரு.’

‘அடகு கடையில கேப்பமாடி?’ 

‘நம்ம சகுந்தலா புருசன் நகை கடையில தான் வேல செய்யுறாராம். அவருகிட்ட குடுத்து கேட்டுப்பார்க்க சொல்லுவமா?’

‘இல்லன்னா பேங்குல கொண்டு போய் வச்சாலும் தெரிஞ்சுரும் இல்லயா?’

அம்மாவின் ஆலோசனைகள் நேரத்திற்கொன்றாய் மாற்றம் அடையத் தொடங்கியது. 

மயிலா பதில்களற்று துயரமடைந்திருந்தாள். 

‘நீ என்ன விட்டுப் போறத யாராலும் தடுக்க முடியாது போல கமீலே’ என்றாள்.’ 

‘என்னைக் காப்பாற்ற எதுவுமே செய்ய மாட்டாயா? என்னை மீண்டும் சிறைப்படுத்தப் போகும் இத்திட்டங்களுக்கு நீயும் உடந்தையாய் இருக்கிறாயா என்ன?’

‘இல்ல கமீலே உன்னோட இருக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா உணர்றேன். ஆனா எங்கம்மாகிட்ட இதயெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல…’ 

‘என்றாலும் இத்தனை பெறுமதியான என்னை விற்பதை விட அணிந்து அழகு பார்த்தல் தான் சிறந்ததென்று உனக்கோ உன் அம்மாவிற்கோ தோன்றவில்லையா….?’

‘இல்லாமலா பின்ன…? உன்னோட கமீலே டொன்சியுக்ஸ் அவ்வளவு ஆழமா உன்ன நேசிச்சிட்டு அப்பறம் எதுக்காக அடகு வச்சாங்க சொல்லு…?’

‘புரிகிறது மயிலா. ஆனால் நான் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறேன். என்னை பற்றிய  எந்த சரியான விபரமும் இன்னும் உங்களுக்கு தெரியாது. அப்படியிருக்கையில்  உங்களது திட்டங்களும் செயல்களும் பேராசையாக தானே இருக்க முடியும். தவிரவும் என்னை விற்று கிடைக்கும் பணத்தில் உங்களது மொத்த வாழ்வும் மாற்றமடையக் கூடுமென்பதற்கு என்ன ஆதாரம்? என்னை பொருத்தவரை யாரிடமோ நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் என்பதுவும் கிடைத்த அதிர்ஷ்டத்தை உங்கள் முட்டாள்தனத்தால் இழக்க போகிறீர்கள் என்பதுவுமே நிஜம்’

எல்லாமே சரியென்பதாவே இருந்தது. ஆனாலும் வேறென்ன தான் செய்துவிட இயலும்? இந்தத் தோட்டை விற்பதால் கிடைக்கும் ஒரு தொகைப் பணமா இல்லையேல் அழகும் கவர்ச்சியும் கூடவே பேசும் திறனையும் கொண்டிருக்கும் மனதிற்கு மிக நெருக்கமான இந்த ஒரு ஜோடித் தோடா? 

எந்த பக்கமாய் யோசித்தாலும் தோடு என்பதே பதிலாய் அமைந்தது. எனினும் எவ்வாறு அதனை தக்கவைத்துக் கொள்வது? 

ஓரிரு நாட்கள் தோடுகளுடன் பேசாமல் தனியாக யோசித்தாள் மயிலா. அந்த கமீலே டொன்சியுக்சை போல அல்லது மோனேவை போல நானும் ஒருநாள் தவித்து அழுது ஏங்க வேண்டுமா என்ன? நானும்தான் இந்தத் தோடுகளை அளவற்று நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்றாலுமே வெறும் நேசிப்பை மாத்திரம் ஆதாரமாக்கிப் பிடித்தவொன்றை தக்கவைத்துக் கொள்ளுதலும் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. 

மயிலா தோடுகளிடம் சொன்னாள். 

‘என்ன மன்னிச்சிடு கமீலே. நானும் ஒனக்காக ரொம்ப ஏங்குவேன்.’ 

நாட்களின் நகர்வில் தோட்டின் உண்மையான பெறுமதி சிறுகச் சிறுக வெளிப்பட்டது. அம்மா அதனை மயிலாவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி மிகப்பத்திரமாய் பாதுகாக்கத் தொடங்கினாள். அவளது அலுமாரிக்குள்ளேயே வைத்து அழகு பார்த்தாள். இரகசியமான முறையில் பெருந்தொகையளவான பணத்திற்கு அதனை விற்பதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொண்டாள். 

இன்னும் ஓரிரு தினங்களில் தோடு கைமாறப் போகிறது எனும் நிலையில், மயிலா தவித்தாள். வேகமாக நடந்தாள். அவ்வப்போது தடாரென அமர்ந்து பெருமூச்சு விட்டாள். வேறொரு தோட்டினை அணிந்துக்கொள்ள மனம் ஒப்பா நிலையில் தன் வெறுமையான காதுகளை அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டாள். கமீலேவுடன் பேச வேண்டுமென ஏங்கினாள். 

இரவுகளைக் கடக்கப் பெரும் சிரமாயிருந்தது. இறுதியாக ஒருதடவை அத்தோடுகளை அணிந்து… ஆசைத்தீர அழகு பார்த்து… கொஞ்சம் அதனுடன் பேசி… மயிலாவை ஏதோ ஒன்று உந்தியது. 

இருளைப் பொருட்படுத்தாமல் பழகிய நிதானத்தில் அந்த அலுமாரியிடத்தே ஓடினாள். கசிந்தொழுகிய மெல்லிய நிலவொளி பரவி அச்சூழலை தெளிவாக்கியது. சத்தம் வராமல் அலுமாரியைத் திறந்து அவசரமாகத் தோட்டைப் பத்திரப்படுத்தியிருந்த இடத்தினைத்  துழாவினாள். கைகள் நடுக்கம் கொண்டன. ஏனென்று தெரியாமல் அழுகை முட்டியது. 

அம்மாவின் கூரைப்புடவைக்கடியில் மிகப் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த அந்த சிவப்பு நிற சிறியப்பெட்டியை ஆவலுடன் திறந்தாள். அங்கே தோடுகள் தென்படவில்லை. ஒருகணம் இதயத்துடிப்பு ஸ்தம்பித்துப் போனதாயும் கண்கள் இருட்டிக்கொண்டு வருவதாயுமான உணர்வுகளுடன் மிகுந்த படபடப்புடன் கண்களை ஒருதடவை துடைத்துவிட்டுக் கொண்டு இன்னும் தெளிவாக பார்வையை சுருக்கிப் பார்த்தாள். பெட்டி ஒன்றுமில்லாமல் வெறுமையாகவேயிருந்தது. 

பெரும் அவஸ்த்தையுடன் அம்மாவை எழுப்ப அருகே சென்றாள். 

அம்மா போர்வையை தலையுடன் போர்த்தியவாறே தனியே பேசிக்கொண்டிருந்தாள்.      

Saturday, September 18, 2021

அல்லிராணி - பிரமிளா பிரதீபன்

By On September 18, 2021
01

நமுனுகுல  மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள். உலகில் வேறெதையுமே அறியாத தனிமையில் அவளும் உரத்தொலிக்கும் அவள் வீட்டு வானொலி பாடல்களுமென குறுகியதொரு வட்டத்திற்குள் அவள் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தாள்.


அல்லிராணிக்கு காதுகள் இரண்டும் அவ்வளவாகக் கேட்பதில்லை. எனினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மொத்த லயமும் அதிரும் அளவிற்கு வானொலியை ஒலிக்க விடுவாள். அதன் பேரிரைச்சலானது இடதுப்புற தொரையான் வீட்டுக்கும் வலப்பக்கத்து ரத்தினம் வீட்டுக்கும் நீண்டகாலப் பெருந்தொந்தரவைத் தந்திருந்தது.


தொரையானின் மனைவி ஆனமட்டும் சத்தமிட்டு அல்லிராணியை அசிங்கப்படுத்தித் திட்டுவாள்.


“செவிடி… செவிடி…. செவிட்டு முண்டம் காலங்காத்தாலேயே உசுர வாங்குது’ என்றவாறே தனது விடியலைத் தொடங்க அவள் பழக்கப்பட்டிருந்தாள்.


‘புள்ளைங்க காலயிலேயே எழும்பிகிதுங்க. ஒரு வேலயும் ஓடுதில்ல. அத கொஞ்சம் கொறச்சி வச்சாதான் என்னவாம்’ என்று தொங்கல் வீட்டு மணியம் அத்தையும் சொல்லிப் பார்த்தாள்.


‘அப்புடியே காது கேட்டு வெளங்கிட்டாலும்… பெரிய தொரசாணி மாதிரில்ல பண்றா’ ரத்தினம் வாசலில் வாய் கொப்பளிக்கும் போதே கத்துவான்.


யார் எதை ஓதினாலும் அன்றாடம் அல்லிராணி வீட்டில் வானொலி ஒலித்தபடியேதான் இருந்தது. என்றாலுமே காதுகள் கேளாத அல்லிராணி ஏன் இப்படிச் செய்கிறாள் என்பதை மட்டும் யாராலும் விளங்கிக் கொள்ளவும் இயலாமலிருந்தது.


அல்லிராணி அந்தத் தோட்டத்திலேயே கொஞ்சம் விசேஷமானவள் என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். அவளுக்கு முன் விவாகரத்து எனுமொரு சம்பவம் அந்தத் தோட்டத்தில் இருந்ததேயில்லை. அதற்கு யாரும் துணிந்தது கூட இல்லை. முதல் தடவையாக ராமமூர்த்தியை கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து வெற்றி கண்டவள் எனும் வகையில் அல்லிராணி மீதான பயம் அனேகருக்குள் இருந்தது.


அல்லிராணி பார்ப்பதற்கு உயரமாகவும் அளவான உடற்கட்டுடனும் இருப்பாள். ராமமூர்த்தியை விவாகரத்து செய்திருந்தாலும் அவனது சேட்டுகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சேட்டும் பாவாடையும் பாவாடைக்கு மேல் இடுப்பைச்சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் ஒரு குட்டை படங்கும் என்று வேகமாக நடப்பாள். தனக்கு முன்பின் நடப்பவர்களைப் பற்றி அவள் எப்பொழுதும் யோசிப்பதில்லை. மட்டக்கம்பை ஒரு கையில் கிடையாகப் பிடித்து அசைத்தபடி தன்னிடம் எதிர்படுவோரிடத்து ஒரு மெல்லிய சிரிப்பையும் அலட்சியப் பார்வையையும் உதிர்த்துவிட்டு யாரையென்றாலும் வெகு இயல்பாய் கடந்து செல்லக் கூடியவளாக அவள் இருந்தாள்.


அன்று சரியாக ஏழு மணிக்கெல்லாம் வானொலியை அமத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள் அல்லிராணி.


அதற்காகவே காத்திருந்தாற்போல் சரியாக அவள் தன் வாசலைக் கடக்கும் நேரத்தில் அரிசி கழுவிய தண்ணீரை விசிறியெறிந்தாள் ரத்தினத்தின் மனைவி. சிலதுளிகள் தன்மீது படிந்ததையும் கணக்கில் கொள்ளாமல் அல்லிராணி வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.


அடுத்ததாய் மணியம் அத்தை வீடு. அவள் தன் வாசற்கதவை வேண்டுமென்றேத் திறந்து மிக வேகமாக அறைந்து சாத்திக் கொண்டாள்.


அல்லிராணிக்கு இவையெல்லாமும் சுவாரசியத்தைக் கூட்டும் சம்பவங்களாகத்தான் தோன்றினவேயன்றி கோபத்தை ஏற்படுத்தவில்லை. சிரித்தவாறே திரும்பிப் பார்க்காமல் நடந்து அந்த லயத்தைத் தாண்டினாள்.

02

வேலை முடிந்து வரும் கையோடே கிணற்றடியில் கைகால் அலம்பிவிட்டு அல்லது ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாமென்று சிலர் துவாயையோ துண்டொன்றையோ தமது கொழுந்து பைக்குள் செருகி பத்திரப்படுத்துவதுண்டு.


தனது பையிலிருந்த கபிலநிறத் துவாயை வெளியிலெடுத்தவாறே அல்லிராணி கிணற்றடியை நெருங்கினாள்.


வழமைக்கு மாறாக கிணற்றடி வெறுமையாய் இருந்தது. குளிக்க வந்தவர்களும் தண்ணீர் எடுக்க வந்தவர்களும் ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள்.


பொதுவாக அல்லிராணி காரணங்கள் தேட முயற்சிப்பதில்லை. தன் கொழுந்துப் பையை ஒருபுறமாய் வைத்துவிட்டு பரபரவென தன் குட்டிப்படங்கை அவிழ்த்து மடித்து வைத்தாள். உடுத்தியிருந்த பாவாடையை மாரளவிற்கு உயர்த்தி கட்டியவாறே சேர்ட்டையும உள்ளாடைகளையும் கழற்றி துவைக்கும் கல்லில் போட்டாள்.


‘யாருமே  குளிக்காம  ஏன்  இருக்கணும்?’


அவளைக் குடைந்த வேள்வியை பார்வையால் கேட்டாள்.


‘குளிக்க முடியாது அல்லி… தண்ணில எவனோ கசிப்ப கலந்து விட்டுடாய்ங்க’


அல்லிராணியின் முகத்தைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசலாம். உதட்டசைவில் சிறு தடங்களுமின்றி அனைத்திற்கும் பட்பட்டென்று பதிலளிப்பாள்.


‘கசிப்பா..? எங்க தள்ளு கசிப்பா இல்லையான்னு நாம்பாக்குறேன்’


வாளியால் அள்ளியெடுத்த நீரை முகர்ந்து தலையை படாரென பின்னிழுத்தாள். வாளியையும் கயிரையும் தனித்தனியேயும் முகர்ந்து பரீட்சித்துப் பார்த்தாள்.


பழகிப்போன அந்த கசிப்பின் மணம் முகத்திலறைந்து விலகியது.


‘தண்ணியில தாண்டி கலந்திருக்கு’


‘இப்ப எப்புடி குளிக்கிறதாம்?’


காலையில் கதவை அறைந்து சாத்தியதை மறந்துவிட்டு மணியம் அத்தையும் பேசிக்கொண்டிருந்தாள்.


‘பைப் தண்ணில வருதோ தெரியலயே’


காட்டுப்பீலியிலிருந்து குழாய்வழியாகக் கிணற்றுக்குள் விழும் நீரில் ஏதேனும் கலந்து விட்டிருக்க வாய்ப்புண்டென்பதையறிந்து மணியம் அத்தை அவ்வாறு சொல்லிக்கொண்டு நின்றாள்.


‘காட்டுப்பீலிக்கு ஒரு எட்டு போயிட்டு பாத்துருவமா?’


துவாயை தோளுடன் போர்த்திக்கொண்டு ஆயத்தமானவளாய் அல்லிராணி கேட்டாள்.


குளிக்க வழியற்று வியர்வையோடும் பிசுபிசுப்போடும் களைத்து காத்துக்கொண்டிருந்த ஓரிருவர் அல்லிராணியுடன் சேர்ந்து காட்டுப்பீலியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவர்கள் நடந்து போகும்போதே இடையில் அகப்பட்ட சிறுசுகள் சிலதும் சேர்ந்து கொண்டனர்.


எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். முகத்தைப் பார்த்து அவர்கள் பேசுவதைக் கணித்து பதிலளிக்க அல்லிராணிக்கு சங்கடமாயிருந்தது. அவர்களைக் கடந்து முதலாமாளாய் நடந்து கொண்டிருந்தாள். நீரில் முகர்ந்த அந்தக் கசிப்பு மணம் நாசியின் மொத்தக் கலங்களிலும் தொற்றிக் கொண்டதாய் தோன்றியதோடு அது ராமமூர்த்தியின் வேண்டாத ஞாபகங்களையும் கொண்டுவந்திருந்தது.


துர்மணம் மிதமிஞ்சிய இப்படியொரு குடிவகை உண்டென்பதே ஆரம்பத்தில் அல்லிராணிக்கு தெரியாது. ராமமூர்த்தி அந்தக் கருமத்தைக் குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பத்தில் வயிறு குமட்டி குடற்தசைகள் பிய்ந்து அத்தனையும் வாய்வழியாய் வருமென்றே கக்கிக்கக்கித் துப்பினாள்.


ஆனால் அவனிடத்தே அவ்வுணர்வைப் பற்றி விபரித்து பேசித்தீர்க்குமொரு பொழுதாக அது அமைந்திருக்கவில்லை. அத்தோடு அவன் கண்டுப்பிடித்த அந்தப் புதுவகை வெறியை அவளுடலில் ஊர்ந்து மிதந்தவாறேதான் கொண்டாடிக் களிக்கவும் அவன் விரும்பியிருந்தான்.


எப்போதாவது நடுசாமப் பொழுதுகளில் இருளுடன் சேர்ந்து பதுங்கலாய் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கசிப்பின் வாடை நாட்பட நாட்பட வீட்டின் அத்தனை மூலையிலும் அப்பி அப்படியே அவனது அதிரும் சிரிப்பில்… ஆடைகளில் கூடவே அவன் புழங்கும் பண்டபாத்திரங்களிலுமாக ஒட்டிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.


மழைக்கு கசியும் கூரைவழித் திவலைகளிலும் சுவற்றின் ஈரப்பதத்திலும் இன்னும் பின்வாசல் காணிற்குள் தேங்கிக்கிடக்கும் சிலதுளி முத்திரத்திலும் கூட கசிப்பினது அழுகி அவிந்துப்போன மணமொன்று கவிழ்ந்திருந்தது. அது அவ்வீட்டைத் தாண்டி லயத்தையே கவ்விப்பிடித்து திரும்பிய திசையிலெல்லாம் முகத்தில் மோதியடித்தது.


எத்தனைதான் பொறுத்துக் கொள்ள முடியும்?


அடுத்தமுறை குடித்துவிட்டு வரும்போது அவனை ஊதாங்கட்டையால் அடிக்கவே அல்லிராணி திட்டமிட்டிருந்தாள். முடியாமல் போனபோது எண்ணெய்க் கரண்டியை சூடுபண்ணி வைக்க எண்ணினாள். இறுதியில் கையில் கிடைப்பதை விட்டெறிந்து அவனைத் தாக்குவதுதான் புத்திசாலித்தனமென்று முடிவெடுத்தாள்.


சரியாக அவன் வரும் சமயத்தில் தூக்கியடிக்கக் கூடியதான பூச்சாடியையும் மூன்று சிரட்டைகளையும் ஒரு விறகுக்கட்டையையும் எடுத்து தாயார் நிலையில் வைத்துக் காத்திருந்தாள்.


பூச்சாடி திசைமாறி எங்கோ விழுந்தது. சிரட்டையொன்று அவனது முட்டியில் பட்டு உருண்டது. அடுத்ததாகத் தூக்கியடித்த விறகுக்கட்டையின் சிலாம்புகள் அவனது தொடைப்பகுதியில் குத்தி நின்று பின் விழுந்தது.


அடுத்த நொடியே மடித்துக் கட்டப்பட்டிருந்த சாரத்தைத் தாண்டி இரத்தம் வழியத்தொடங்கியதைக் கண்டு அவள் தன் தாக்குதலை நிறுத்திக் கொண்டாள்.


குடிவெறி அவனை வேகமாக இயக்கியது.


‘சிறுக்கி முண்ட’ என்று அலறினான். வேகமாக எதிர்கொண்டு அல்லிராணியின் முடியைக் கொத்தாகப் பிடித்து அவளை சுவரோடு மோதியடித்தான். அப்படியே தன் பலத்தையெல்லாம் திரட்டி மூன்று அறைகள் விட்டான்.


சுழன்று தடுமாறி ஒருபக்கமாய் விழுந்துக் கிடந்தாள் அல்லிராணி. அவன் தொடர்ச்சியாகவும் ஏதோ பேசுவது போலவேயிருந்தது. ‘ஏன் இவன் சத்தமேயில்லாமல் பேசுகிறான்’ என்று தோன்றியதே தவிர அவளது காதுகள் இரண்டும் அடைத்து போயிருப்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.


சில நொடிகள் கடக்க தாங்கொணா வலியும் சகிக்க முடியா மெல்லிய இரைச்சலும் காதுகளை நிரப்பிக்கொள்ளத் தொடங்கின. விண்விண்ணென இழுத்து கண்ணுக்குத் தெரியா தசைகளிளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன.


அன்றைய தினம் தான் அவசரப்பட்டிருக்கக் கூடாதென இப்போதும் அல்லிராணி எண்ணிக் கொண்டாள். ஒரு ஆணின் மொத்த பலத்தையும் அடியாய், உதையாய், அறைகளாய் வாங்கிச் சகிக்கத் தெரிந்த பெண்மனதிற்கு ஊராரின் கேலிப்பேச்சைத் தாங்கும் திடத்தை ஏன் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையென்பது பற்றி அவள் யோசித்தாள்.


தனக்குக் காதுகள் கேளாமை பற்றி அப்போதும் கூட ஊரில் யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தன்னை யாரோ சத்தமாக அழைப்பதை கவனியாமல் தான் நடப்பது போலவோ தோன்றிக் கொண்டேயிருந்தது.


நின்று நிதானித்துத் திரும்பிப் பார்த்தாள். யாரும் அழைத்தது போலாய் இருக்கவில்லை.


காட்டுப்பீலி நெருங்குமிடத்தில் பழம்பாசி செடிகளும் ஒட்டுப்புல்லும் பரந்து வளர்ந்திருந்தன. ஆளுயர பாம்புப் புற்றொன்று தன் உயரத்தை அதிகப்படுத்தியிருந்தது. அவர்கள் அதனைத் தாண்டி நகர்ந்தனர். அவ்விடத்தை நெருங்க நெருங்க உயரத்திலிருந்து பீலிநீர் விழுமோசையும் ஏதோவிதமான மருந்து மணமும் காற்றுடன் கலந்துவரத் தொடங்கியதையும் அவதானிக்க முடிந்தது.


அல்லிராணியின் ஆழ்மனது காரணமேயின்றி பதட்டங்கொள்ள ஆரம்பித்தது. காலில் மிதிப்படும் மிலாறு குச்சிகளை கவனியாமல் தேயிலைச் செடிகளின் பொட்டல்களை குறுக்குப் பாதையாக்கி அதனூடு வேகமாக நடந்தாள்.


தனக்குப் பின்னால் வருபவர்கள் இன்னும் தன்னை தொடர்கிறார்களாவென இன்னுமொருமுறை திரும்பிப் பார்த்தாள். ஓரிருவர் குறைந்திருந்தனர். ஒரு எல்லைவரை வந்து பீலி தெரியும் தூரத்தே நின்று உற்று அவதானிக்க முயற்சித்தாள். வெற்று இருளும் அடர்பச்சை நிற பாக்குமர இலைகளின் அசைவுகளுமே தென்பட்டன.


அவ்விடத்துப் பள்ளத்தில் தொடங்கும் கற்படிகளில் பரபரவென இறங்கினாள். அங்குமிங்குமாய் வளர்ந்து நின்ற பாக்கு மரங்களின் உடற்பகுதிகள் நிமிர்ந்து நில்லாமல் சாய்ந்து சரிந்து அவளது பாதையை வளைவு நெளிவுடையதாய் ஆக்கியிருந்தன. வேகமாக இறங்கியோடியவள் அதிலொரு பாக்கு மரத்தின் சாம்பல் வண்ணம் கலந்த தண்டுப்பகுதியை கெட்டியாக பிடித்துத் தன்னை நிறுத்திக் கொண்டாள். கண்கள் மூடி அவ்விடத்தை ஆழமாக நுகர்ந்தாள். கசிப்பைத் தாண்டிய மருந்து நெடியொன்று பரவியிருப்பதை உணர்ந்தாள்.


பின்னால் வந்தவர்கள் படியினின்றும் இறங்கிக் கொள்ளாமல் அல்லிராணியை அவதானித்தவாறே நின்றுகொண்டார்கள்.


அவ்விடத்தே விழுந்துக் கிடந்த பாக்குப்பட்டையொன்றின் பிடிப்பகுதியை முறித்தெடுத்துக் கொண்டாள். அத்தடியினால் கால்களுக்குள் இடைப்பட்ட இலைகுழைகளை பலமாக அடித்தொதுக்கி எதையோ தேடத்தொடங்கியிருந்தாள். சற்று தூரத்தே சாய்ந்து கிடக்கும் பெரிய நீலநிற கசிப்பு பெரல் ஒன்றைக்கண்டு செடிகளை அடித்து விலக்கியபடி அவ்விடத்திற்கருகே சென்றாள்.


முன்னேற முன்னேற மருந்துவாடை பிணவாடையைப் போலாகியது. ஆரம்பத்திலிருந்தே அல்லிராணியிடமிருந்த பதட்டம் பெருக அவள் தீவிரமாய் தேடினாள். அவளது காலடிச் சப்தம் கேட்டு குவியலாய் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கள் விலகியோடத் தொடங்கின. அருகில் சென்று பார்த்தவள் அப்படியே உடல் நடுங்க சிறிதுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

03

ராமமூர்த்தியின் மரணம் கொலையென்பதாய் சந்தேகிக்கப்பட்டது.


ராமமூர்த்தியின் உடலின் மீது க்ரமொஸ்ஸொன் வாசனை வந்ததாலும் அப்பகுதியெங்குமாய் அந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டோ அவனது மேனியெங்கும் ஊற்றப்பட்டோ இருந்தமையாலும் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலைக்கு பொறுப்பாகவிருந்த வாப்பலம் சந்தேக நபராய் மாட்டிக் கொண்டிருந்தான்.


ராமமூர்த்தியைக் கட்டாயப்படுத்தி யாரோ க்ரமொஸ்ஸொன் மருந்தைப் பருக்கியிருப்பதாகவும் அதன் விஷத்தன்மையாலேயே அவன் இறந்ததாயும் ஊரார் பேசிக்கொண்டார்கள். உடல் முமுதும் அப்படியே கறுத்து எரிந்துபோனாற் போல அவன் கிடந்ததாய் கூறி கவலை கொண்டார்கள்.


அல்லிராணியிடமும் விசாரணை நடந்தது.


கிட்டத்தட்ட அவளை ஒரு கொலைகாரியாகவே தீர்மானித்து போலிஸ் அதிகாரியொருவன் அவளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க திமிறிக் கொண்டிருந்தான்.


சிங்கள மொழியின் கெட்ட வார்த்தைகளையும் அவன் விசாரணையின் போது பயன்படுத்தினான்.


மிகச்சிறு அளவில் தனக்கிருப்பதான கேட்டல் திறனையும் அவ்வதிகாரியின் உதட்டசைவையும் வைத்து அல்லிராணி பதிலளித்தாள்.


‘தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’


கரத்திற்கான உண்மையான காரணத்தை வெளியே சொல்ல முடிந்திருந்தால் எப்போதோ சொல்லியிருக்கலாமே. வழமை போலவே அவன் குடித்துவிட்டு அடித்ததாய் கூறினாள். அது மட்டுமே காரணமென்றாள்.


‘தோட்டத்தில் உள்ள முக்கால்வாசிப் பெண்களது பிரச்சினையிது. நீ மட்டும் எதற்கடி விவாகரத்து செய்தாய்?’


அல்லிராணி எவ்வளவு சொல்லியும் அவன் ஒத்துக்கொள்வதாய் இல்லை.


‘உனக்கும் வாப்பலத்திற்கும் என்ன தொடர்பு? அவனை எங்கே சந்திக்கிறாய்? வீட்டில் சத்தமாக ரேடியோ ஒலிக்கவைத்துவிட்டு உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


அவன் ஏதோவெல்லாம் கேட்கத் தொடங்கியிருந்தான்.


‘இருவருமாய் சேர்ந்துதான் ராமமூர்த்தியை கொல்ல திட்டமிட்டீர்களோ?’


‘கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ என்று குரலை உயர்த்தி கையை சுவரில் பலமாகத் தட்டினான்.


அவளிடமிருந்த தைரியத்தை சூழ்நிலை கொஞ்சங்கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருந்தது.


விசாரணையில் அல்லிராணியிடமிருந்து உண்மை வரவில்லை எனத் தீர்மானித்தார்கள். அவளை போலிஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிக்க வேண்டுமென்பதாய் முடிவெடுத்து இரண்டு பெண்ணதிகாரிகள் வந்து அல்லிராணியை அழைத்துப் போனார்கள்.


இத்தனை காலமாய் ஊரில் திமிருடன் வலம் வந்த பெண்ணா இப்படி உடைந்து பதறுகிறாள் என்பதில் ஊராருக்கு பெரும் வியப்பு.


அவளை போலிஸ்காரர்கள் அடிப்பார்கள் என்றுதான் தோன்றியது. பாடலொலி இல்லாத அவளது வீடு வெறுமையடைந்து லயத்தையே சோர்வாக்கியிருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவுகளையே வெறித்தபடி அவளைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டார்கள்.

04

ஒரு பெண் போலிஸ் அல்லிராணியை தனியாக விசாரிக்கத் தொடங்கியிருந்தாள். தனது விவாகரத்திற்கான காரணத்தை முன்னுக்குப்பின் முரணாக சற்றே மாற்றி சொல்லியமையால் அல்லிராணி மீதான சந்தேகம் வலுவாகியது.


அல்லிராணி அழுதும் பார்த்தாள். தன் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுவதை அவள் விரும்பவில்லை. வாப்பலத்துடன் தனக்கு எதுவிதமான உறவுமில்லையென எல்லா வகையிலும் சொல்லி இறுதியில் இன்னுமே ராமமூர்த்தி கட்டிய தாலியை தான் பாதுகாப்பதாய் வெளியே இழுத்துக் காட்டினாள்.


‘தாலியை பாதுகாக்கும் நீ புருசனை வேண்டாமென சொல்லியிருக்கிறாயென்றால் அதற்கு நிச்சயமாய் வேறேதும் காரணங்கள் இருக்கும். சொல்லு அதை சொல்லு’


அப்போது வேறிரு போலிஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ‘என்ன கேஸ்?’ என்றார்கள்.


‘புருசனை கொன்றுவிட்டு நடிக்கிறாள்’ என்று அந்தப் பெண் போலிஸ் சொல்லிக்கொண்டே அல்லிராணியை முறைத்துப் பார்த்தாள்.


‘காரணம்?’


‘வேறென்ன…?’


அவர்கள் சத்தமாகச் சேர்ந்து சிரித்தார்கள். அல்லிராணிக்கு வார்த்தைகளே வரவில்லை. தொண்டையடைத்துப்போய் வறண்டிருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போலவும். ஆனால் அவர்களிடம் கேட்கும் துணிச்சல் இருக்கவில்லை. அவர்கள் அல்லிராணியை கொலைகாரியாய் கருதியே பேசிக்கொண்டிருந்தார்கள்.


வாப்பலமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தான். அவனுடன் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலை செய்யக்கூடிய இன்னும் சிலரும் வந்திருந்தார்கள்.


முதன்முதலில் விசாரித்த அந்தப் போலிஸ் எல்லா ஆண்களுடனும் அல்லிராணியை இணைத்துப் பார்த்து ஒரு விபச்சாரியாகவே அவளை மாற்றிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்திற்கு இவர்களுக்கு பதிலளித்தால் தன் நடத்தையில் தனக்கே சந்தேகம் வந்துவிடுமாப் போலிருந்தது.


அல்லிராணி நொந்து போயிருந்தாள். அவளுடைய திமிர், வீராப்பு, நம்பிக்கை எல்லாமே காணாமல் போய்க்கொண்டிருந்தது. யாருமேயற்ற அநாதையைப் போலுணர்ந்தாள்.


திடீரென ‘உண்மையை சொல்லி விடுகிறேன்’ என்றாள். அவளது முகம் பயத்தாலும் பதட்டத்தாலும் விகாரமடைந்தாற் போலிருந்தது.


அவசரமாக அந்த அதிகாரி ‘ஏன் உனக்கு விவாகரத்து தேவைப்பட்டது?’ என்றார்.


அல்லிராணி எச்சில் விழுங்கியபடி தயங்கித் தயங்கிச் சொல்லத் தொடங்கினாள்.

‘ராமமூர்த்தி ஒரு குடிகாரனாய் இருந்தான். ஆரம்பத்தில் குடித்த அளவை விட நாளுக்கு நாள் அவன் குடித்த அளவும் அவனது மூர்க்கத்தனமும் அதிகரித்தவாறே சென்றது. சாதாரணமாக குடித்து சண்டையிட்டு சமாதானமாகும் ஒருவனாக அவன் இருக்கவில்லை. மிகவும் விசித்திரமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தான்.’


அல்லிராணி சொல்வதை ஒரு போலிஸ் எழுதிக் கொண்டாள்.


‘ம்ம்… சொல்லு என்ன விசித்திரமாக நடந்து கொண்டான்.?’


‘எனக்கு ஆரம்பத்திலிருந்தே கசிப்பின் மணம் பிடிக்கவேயில்லை. கசிப்புடன் வரும் அவனையும் வெறுக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் குடித்த பின்னர்தான் அவனுக்கு நான் அதிகமாக தேவையுடையவளாகியிருந்தேன். என்னுடன் பலவந்தமாக உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். மறுக்கும் போதெல்லாம் அடித்தான்.’


‘பிறகு’


அல்லிராணியின் குரல் இப்போது மெல்லிய நடுக்கம் கொண்டதாய் மாறியிருந்தது.


‘தொடர்ச்சியாக சிலதினங்களில் கசிப்பை வீட்டுக்கு கொண்டுவர ஆரம்பித்து உறவின் போது இடைக்கிடையே குடித்துக்கொண்டான். அவ்வாறு குடிக்கும்போது என்மீது சிதறிய துளிகளை வெறிகொண்டு நாவினால் வழித்தெடுத்துக் குடித்தான். அது அவனுக்கு புதுவித போதையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ஒரு பைத்தியத்தை போல் என்னவெல்லாமோ செய்து என்னை வதைக்கத் தொடங்கினான்.’


அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.


‘அவன் புதுவிதமான உறவுமுறைகளையும் கசிப்பின் சுவையினையும் கலந்து அனுபவிக்க பழகினான். அடுத்தகட்டமாக எனது ஆடைகளை பலவந்தமாக பிய்த்தெறிந்து வேண்டுமென்றே முகம் கழுத்து வயிறு என்றெல்லாம் ஒவ்வொரு அங்கமாக கசிப்பால் நனைத்து அதனை உறிஞ்சிக் குடித்தான்.’



எழுதிக்கொண்டிருந்தவள் அதிர்ச்சியுடன் எழுதுவதை நிறுத்திவிட்டு அல்லிராணியைப் பார்த்தாள்.


‘நான் அருவருப்பில் வெந்து தடுமாறுவேன். ஏற்கவும் முடியாமல் தடுக்கவும் திராணியில்லாமல் அவனாக போதை முற்றி என்னை விடுவிக்கும் வரை அசையாமல் மூர்ச்சித்துக் கிடப்பேன். அப்போதெல்லாம் அந்த மணத்தின் குமட்டலையும் அவன் மீதான வெறுப்யையும் அனுசரிப்பதைவிட இறப்பது மேல் என்று மட்டுமே எண்ணிக்கொள்வேன்’


அவர்கள் எதுவுமே பேசவில்லை. அல்லிராணியை மேலே பேசவிட்டார்கள்.


‘ஒருநாள் … அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கசிப்பை எனது வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி என்னிலும் போதையிருக்க வேண்டுமென விரும்பியவனாய் இயங்கிக் கொண்டிருந்தான். அடுத்ததாய் எனது பிறப்புறுப்பில் கசிப்பை ஊற்றி அதனை குடிக்க எத்தனித்தான். நான் கத்தியலறினேன். என்னைமீறி அவனை எத்தித்தள்ள முயற்சித்தேன்’


சற்று இடைவெளிவிட்டு கண்களை தனது கையிலிருந்த துவாயால் துடைத்துக் கொண்டாள். அவ்விடம் நிசப்தமாகியிருந்து.


‘பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து கதவைத்தட்டி விசாரித்தபோது நான் அவனை உறவு வைத்துக்கொள்ள அழைத்துக் கத்திக் கொண்டிருப்பதாய் அவர்களிடம் பொய் சொன்னான். அவர்கள் காறி உழிழ்ந்துவிட்டு என்னை கெட்ட வார்த்தையால் ஏசியபடியே சென்றார்கள்.’


‘பிறகு’


‘இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் யாரிடம் உதவி கேட்பதென தடுமாறி… எப்படியோ யோசித்து இறுதியில் ராதிகா டீச்சரின் உதவியுடன்தான் விவாகரத்து பெறவும் முயற்சித்தேன்.’


‘ராதிகா டீச்சர் யார்?’


‘எங்கள் தோட்டப் பாடசாலையின் அதிபர்’


அவர்கள் ராதிகா டீச்சரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள்.


‘விவாகரத்து பெற்ற பின்னரும் அதிகாலையில், இரவுகளில் என்று அவன் உனது வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’


அவன் வரும்போதெல்லாம் அல்லது கதவை தட்டுவது பற்றி அறியும்போதெல்லாம் கோபமும் பயமும் சேர்ந்ததான உணர்வும் தனது தனிமையும் இறப்பின் நுனிவரை இழுத்து தன்னை அலைகழித்த அந்த உணர்வை அவளால் சொல்லிக்கொள்ள முடியாமலிருந்தது.


அதனை நினைக்கும் போதே உடல் நடுங்குவது போலவும் சிலிர்த்தடங்குவது போலவும் அல்லிராணி பதட்டமடைந்திருந்தாள். முகம் வியர்த்திருந்தது.


அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.


‘அதிகாலையிலும் இரவுகளிலும் உன் வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’


அவள் ஆமாமென்பதாய் தலையாட்டினாள். அதனைத் தவிர்க்கவே தான் சத்தமாக ரேடியோவை ஒலிக்கவிட்டதாய் கூறினாள்.


அத்தனை நேரமும் அல்லிராணியை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு மேலதிகாரி சட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்து அவ்விடத்திற்கு வந்தார்.


‘நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ என்று கட்டளையிடுவதைப் போல சத்தமாகக் கூறி அவள் பேசிக்கொண்டிருப்பதை இடைநிறுத்தினார்.


‘ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ என்று மிகுந்த ஆத்திரத்துடன் அவர் சொல்லிக்கொள்வதை அல்லிராணியால் ஊகிக்க முடிந்தது.


அதுவரை எழுதிய வாக்குமூலத்தின் இறுதிப்பகுதியை காட்டி அல்லிராணியை கையொப்பமிடச் சொன்னார்கள். வாப்பலத்திடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அல்லிராணியை அனுப்பலாம் எனப் பேசிக்கொண்டார்கள்.


அல்லிராணி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். போலிஸ் ஸ்டேசனுக்கு வெளியே ஓரமாய் தெரிந்த குழாயைக் காட்டினார்கள். அவள் குழாயைத் திறந்து கைகளால் ஏந்தியபடி நீரருந்தினாள். முகத்தை தேய்த்துக் கழுவி துவாயால் துடைத்துக்கொண்டு மீண்டும் வந்து அதே இடத்திலேயே அமர்ந்தாள்.


வாப்பலத்திடம் விசாரணை தொடங்கியிருந்தது. அவன் சோர்ந்து போயிருந்தான்.


‘அன்றைய தினம் நீதான் க்ரமொஸ்ஸொன் கிருமிநாசினியை தோட்டத்திலிருந்து பெற்று மற்றைய தொழிலாளர்களுக்கு விநியோகித்திருக்கிறாய். மிகுதியை நீ ஒப்படைக்கவில்லையென தோட்ட நிர்வாகிகள் கூறுவதிலிருந்து உன்மீதான சந்தேகமே அதிகமாக இருக்கிறது. சொல். ஏன் அவனை கொலை செய்தாய்?’


வாப்பலத்திற்கு சிங்களம் தெரியவில்லை. அவன் தமிழிலேயே பதிலளித்தான். கேள்விகளையும் பதில்களையும் தமிழிலிலும் சிங்களத்திலுமாய் மொழிபெயர்க்க இருமொழிகளிலும் தனக்குப் பரிச்சயம் உண்டென காட்டிக்கொண்ட ஒரு போலீஸ் ஓரளவு அர்த்தம்பட மொழிப்பெயர்த்துக் கொண்டிருந்தான்.


‘அன்னிக்கு மிச்சப்பட்ட மருந்து கேன் காணாம போயிருச்சுங்க. அத அன்னைக்கே கங்காணிகிட்ட சொல்லிட்டேனுங்க’ என்றான்.


‘உன்னுடன் அன்று வேறு யார் யாரெல்லாம் வேலை செய்தார்கள்?’


வாப்பலம் நன்கு யோசித்து அனறைய தினத்தை நினைவிற்கு கொண்டு வந்தான்.


அன்றைய தினம் பக்கத்து மலையில் வேலை செய்த அல்லிராணி சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாதையில் நடந்து சென்றதை ஞாபகப்படுத்த முடிந்தது. ஆனால் அதனைச் சொல்ல அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. அவள் வேறு காரணத்திற்காகவும் வந்திருக்க முடியுமெனத் தோன்றியதுடன் அவளைப் பார்க்கவும் மிகப் பரிதாபமாகத் தெரிந்தாள்.


அதனைத் தவிர்த்துவிட்டு அவன் யோசித்தான்.


குறிப்பிட்ட அத்தினத்தன்று வேலையிலிருந்த ஆண்களின் பெயர்களையெல்லாம் வரிசையாகச் சொன்னான்.


தொடர்ச்சியாக வந்திருந்த வேறு சிலரிடமும் விசாரணைகள் நடந்தன. சிறிது நேரத்திற்குள் அவர்கள் அனைவரையும் போகும்படி சொன்னார்கள்.


அல்லிராணி மௌனமாக அவ்விடத்திலிருந்து எழுந்தாள். தன்னை விடுவித்து அனுப்பிவிடும்படி சொன்ன அதிகாரியை ஒரு தடவை நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டாள்.


எப்போதோ இறந்து போயிருந்த தன் தந்தையின் சாயல் அவரது முகத்தில் தென்படுகிறதாவென யோசித்தவாறே அங்கிருந்து வெளியேறினாள்.

………………………


‘தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’ – நீ ஏன் உன் கணவனை விவாகரத்துச் செய்தாய்?


‘கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ – சொல்லு நாயே … உண்மையை சொல்லு


‘நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ – நிறுத்துங்கள். இவளை அனுப்பிவிட்டு நான் சொல்வதை செய்யுங்கள்


‘ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ – அவனை கொன்றல்ல… எரித்துப் போட்டிருக்க வேண்டும்.

***

நன்றி - யாவரும்