Enter your keyword

Tuesday, June 16, 2020

ஜில் பிராட்லி | பிரமிளா பிரதீபன்


‘என் பெயர் ஜில் ப்ராட்லி என்பதை நீ நம்புவதற்கு என்னுடைய கபிலநிற கண்களும் பளீர் வெள்ளை நிறமுமே காரணமாய் இருப்பதை நீ ஒத்துக்கொள்கிறாயா?’

சிவநேசனை வீடியோ தொடர்பில் அவளாகவே அழைத்த முதலாவது முறை இது. ஏறக்குறைய அவளை படங்களிலேயல்லாமல் நேரில் பார்க்கும் முதற் சந்தர்ப்பமும் இதுதான்.

ஜில் ப்ராட்லி இளஞ்சிவப்பு நிறத்தினாலான சட்டையொன்றை அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலியொன்று கிடந்தது. தலைமுடி விரித்து விடப்பட்டிருந்தது. மெலிதாய் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். முகப்புத்தக படங்களில் பார்ப்பதை விடவும் அழகாய் தெரிந்தாள். தன் வயதை அவள் ஒருபோதும் சொல்லியதில்லையென்றாலும் முப்பத்தைந்தை தாண்டியிருக்க முடியாத தோற்றமாயிருந்தது.

தொடர்ந்தும் அவள் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தாள்.

‘உன்னை என் நெருங்கிய நண்பனாக்கி கொண்டதற்கான காரணம் எதுவென்று தெரியுமா?’

அவன் இல்லையென்பதாய் தலையாட்டினான். 

‘நீ இப்போது விபாகரன் இருக்கும் அதே கண்டத்தில் வசித்துக்கொண்டிருக்கிறாய். தவிர அவன் பேசும் அதே மொழியை அதே தொனியில் பேசுகிறாய்’

சிறிது மௌனத்திற்குப்பின் அவளே தொடர்ந்தாள்.

‘இப்போது விபாகரன் யார் என்பதை நீ யோசிப்பாய். அல்லது ஊகித்திருப்பாய். அப்படி ஊகித்திருந்தாயானால் அது சரிதான். அவன் என் முன்நாள் காதலன்.’

அவளது நா குலறியது.

‘நீ குடித்திருக்கிறாயா ?’ என்றான்.

அவள் சிரித்தாள்

‘ஆமாம் இது இரண்டாவது முறை’

‘முதலாவதாக எப்போது குடித்தாய்?’

‘என் விபாகரனை பிரிந்தபோது. ஆனால் அப்போது குடிப்பதற்கு விஸ்கியோ பியரோ எதுவும் கிடைக்கவில்லை. பண்டார மாமாவிடம் கசிப்பு வாங்கி குடித்தேன்.’

சிவநேசனுக்கு அந்த விபாகரனை பிடிக்கவில்லை. அவன் ஏன் பிரிந்தான் எனும் கதையை கேட்கும் விருப்பம் துளிதானும் இருக்கவில்லை.

‘நீ ஓய்வெடு. நாளை பேசிக்கொள்ளலாம்’ என்றான்.

‘இல்லை இன்னும் பேசவேண்டி இருக்கிறது. நீயும் அடிக்கடி என்னை பற்றி சொல்ல கேட்டிருக்கிறாய் இப்போதுதான் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.’

சிவநேசனுக்கு ஜில் ப்ராட்லி மீது அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவள் மிகச்சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவளாக இருந்தாள். அவளது எண்ணிக்கையற்ற இரசிகர்களில் சிவநேசனும் ஒருவனாக இருந்தானெனினும் அதைத்தாண்டி அவள் அவனிடம் நட்பை பேணுமளவிற்கு சில அதிகபட்ச தகுதிகளும் அவனுக்கு இருந்தன.

சிவநேசன் ஒரு கவிஞனாயிருந்தானென்பதை விட ஆங்கிலம் தெரிந்த தமிழ் கவிஞனாக இருந்தானென்பதையே அவள் அதிகமாய் விரும்பினாள்.

இருவருமாய் பரஸ்பரம் தங்களது படைப்புகளை விமர்சித்துக் கொள்வார்கள். நீண்ட நேரமாய் கலை, இலக்கியம், ஓவியம் பற்றியெல்லாம் குறுஞ்செய்தியூடாக விவாதிப்பாரர்கள். என்றாலும் இலக்கியம் தாண்டியதொரு வெளியை ஒருபோதும் அவர்கள் தொட முயற்சித்ததில்லை.

‘நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என ஒரே ஒரு தடவை ஜில் ப்ராட்லி அவனிடம் கேட்டிருக்கிறாள்.

திருமண வாழ்வு எனக்கு உடன்பாடான ஒன்றல்ல என்பதுடன் உச்சளவிலான ஒரு சுதந்திர வாழ்வையே நான் விரும்புகிறேன் என்று சிவநேசன் கூறியிருந்தான்.

அவன் யாழ்பாணத்தை சேர்ந்தவன் என்பதை அவ்வப்போது அவன் தமிழில் பேசும் போது அறிந்துக்கொண்டாளேவொழிய அவனது சொந்த விபரங்களை தேடியறிய வேண்டுமென அவள் நினைத்ததேயில்லை.

ஆனால் சிவநேசனுக்கு அவளை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் அதிக ஆர்வமிருந்தது.

‘நீ ஒரு சிங்களத்தியாய் இருந்துகொண்டு இப்படி வடிவாய் தமிழ் கதைக்கிறாயே’ என்று ஆச்சரியப்பட்டான். ‘எனக்கும் சிங்களம் சொல்லித்தருகிறாயா’ எனக் கேட்டான்.

ஓவ்வொரு முறை பேசும் போதும் சிங்களவர்கள் மீதான தனது அதீத வெறுப்பை கொஞ்சம் அதிகமாகவே கக்கிவிட்டு பின் அது பிழையோ என யோசிப்பான்.

சிங்களம் என்ற ஒற்றைச்சொல்லே மிகக்கசப்பானதாய் இருந்த போதிலும் ஜில் ப்ராட்லியை அவனுக்கு அதிகமாய் பிடித்திருந்தது. அவள் தனது பரம்பரைப் பெயரான அனோமா முணவீர என்பதை ஜில் ப்ராட்லி என மாற்றி கொண்டதற்கான காரணம் எதுவென சரியாக தெரிந்திருக்காத போதிலும், அது அவனை மிக மகிழ்ச்சிப் படுத்துவதாயிருந்தது.

ஜில் ப்ராட்லி பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அவளது தெளிவான ஆங்கில உச்சரிப்பும், அரைக்குறையான தமிழ் உச்சரிப்பும் அவளை அதிகபட்ச அழகியாக காட்டும். 

அவள் ஓவியங்கள் பற்றியும் பல்வேறு ஓவியர்கள் பற்றியும் அதிகம் அறிந்தவளாய் இருந்தாள். சல்வடோர் டாலியின் ஓவியங்களைப் பற்றி அடிக்கடி பேசத் தொடங்கியிருந்தாள்.

அவரது ஓவியங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையிலுமாயும் தான் அதிசயித்து போவதாய் கூறுவாள். டாலியின் ஓவியங்கள் கனவு நிலைப்பட்ட உலகை உருவாக்குவதாயும் யதார்த்த உலகில் கண்டறியாத மிகைப்படுத்தப்பட்ட உருவங்கள் போன்று தோற்றமளிப்பதாகவும் எண்ணிக் கொண்டிருந்தாள். அவை கனவில் தோன்றுவதையொத்த மாயத்தன்மை உடையதென்றாள்.

மேலும் சர்ரியலிச வகையான ஓவியங்களே அவளை அதிகம் கவர்ந்திருப்பதாகவும் அத்தகையதொரு யுக்தியையே தானும் பின்பற்ற விரும்பவதாகவும் சொல்வாள். கனவு வசப்பட்ட நிலையை வெளிப்படுத்தும்  அத்தகைய கவிதைகளை எழுதும்படி சிவநேசனையும் கேட்பாள்.

அவனும் மறுக்காமல் சரியென்பதாய் அப்போதிலெல்லாம் தலையாட்டி வைப்பான்.

அவளது எல்லா விளக்கங்களுக்கும் பின்னுமாய் வெளித்தெரியாமல் தொக்கு நிற்குமொரு ஏக்கம் நிரம்பி வழிவதாகவே அவனுக்குத் தோன்றும். ஆனாலும் ‘நீ என்னை விரும்புகிறாயா?’ என்று சிவநேசன் அவளிடம் இதுவரையிலும் கேட்டதில்லை.

வெறுமனே விரும்பி பின் விலகுதலில் அவளுக்கு பிடிப்பில்லாமல் இருக்கலாம். அதையும் மீறி கேட்டுவிடலாமென்று எண்ணிக்கொண்டாலும், திருமணம் செய்து கொள்கிறாயா என அவள் பதிலுக்கு கேட்டுத் தொலைத்தால்…! அந்த பயமும்தான்.

அவள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவளாக இருந்ததுடன் அதனை சிவநேசனிடம் மட்டுமே வெளிப்படுத்த விரும்பினாளென்பதையும் சில பொழுதுகளில் அவன் புரிந்திருந்தான்.

தான் ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநலவிடுதியில் தீவிர நோயாளியாக சேர்க்கப்பபட்டிருப்பேன் என்று பிரைடா காலோ தன்னுடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறாளாம். சொல்லப்போனால் நானும் அவளையொத்தவள்தான் என்று ஜில் ப்ராட்லி பெருமை வழிய பலதடவைகள் அந்த ஓவியருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வாள்.

வேறொரு சந்தர்ப்பத்தில்,

‘அநேகமான ஓவியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாகவே இருப்பதை போல நானும் என்றாவது ஒருநாளில் அப்படியொரு முடிவை எடுப்பேனோ தெரியவில்iலை’ என்றாள்.

இதையெல்லாமும் தாண்டி தமிழ்மொழி மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த  வாஞ்சையுடன் இருக்கிறாளென்பதையும், அளவு கடந்ததொரு விதத்தில் சிவநேசனை அவள் நேசிப்பதையும் தன் செயல்களினூடாக வெளிப்படுத்த விரும்புபவளாகவே அவள் தெரிந்தாள்.

இப்போதும் ஜில் ப்ராட்லி அதே போன்றதான ஒரு குழப்ப நிலையிலேயே தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொள்ள முடியுமாயிருந்தாலும் குடித்துவிட்டு பேசுமளவிற்கான தற்போதைய தேவையென்ன என்பதனை அவனால் யோசிக்க முடியாமலிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதலளிக்க, அவள் பேசிக்கொண்டிருப்பதை கேட்பதொன்றே போதுமானதென நினைத்தான்.

‘சரி நீ விரும்பிய எதுவானாலும் என்னிடம் பேசலாம்’ என்றான்.

எதை குடித்திருக்கிறாள்  என கேட்க வேண்டும் போலவும் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஊர்ந்து பரவும் அந்த போதை அவளது கண்களை தொட்டு சொருக வைக்குமொரு தோற்றத்தை அளித்தது.

அவள் இடைக்கிடை சத்தமாக சிரித்துக்கொண்டாள். அப்படி சிரிக்கும் போது கையில் வைத்திருந்த அவளது ஐபேட் அதிர்ந்து, அறையில் கொழுவப்பட்டிருந்த விசித்திரமான ஓவியங்கள் சிலவும் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியும் தென்பட்டன. அந்த ஓவியங்களில் சில வரைந்து  முடிக்கப்படாமல் அரைக்குறையாக மாட்டி வைத்திருப்பதாய் இருந்தது.

‘நான் அழகாய் இருப்பதால்தான் என்னை உனக்கு பிடித்திருக்கிறதா சிவநேசன்?’

‘முழுதாய் அப்படியென்று சொல்லிவிட முடியாது. உன் ஓவியங்களையும் நான் இரசிக்கிறேன்’

‘என்னுடைய படங்களை நீ இரசித்ததே இல்லையா?’

அவன் சிறிது தயங்கி பின் மெதுவாக கூறினான். ‘உன் கண்களையும் உதடுகளையும் இரசித்திருக்கிறேன்’

அப்படி அவன் கூறும்போது அவளை பார்க்கத் துணிவற்று தலையை திருப்பிக் கொண்டான்.

அவள் இப்போது, தான் கனவிலும் நினைக்காத ஒரு அடியை எடுத்து வைப்பதில் தனக்கு திறமை உள்ளதென நம்பியவளாய் அதீத பீடிகையற்று சடாரென்று கேட்டாள்.

‘என்னை முழு நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’

சிவநேசன் ஒருகணம் அதிர்ந்து மீண்டான். அளந்து… நிதானித்து… ஒவ்வொரு சொல்லாய் உதிர்த்து பேசும் இவளிடமிருந்தா இக்கேள்வி வந்தது..!

‘ஜில் நீ நிதானமாக இல்லை. நாளைக்கு…’

அவன் முடிக்க முன்பேயே ‘சரியாக யோசித்து சொல் வேண்டுமா…? வேண்டாமா…?’ என்றாள்.

சிறுநேர தாமதத்தையும் விரும்பாதவனாய் உடனே ‘வேண்டாம்’ என்றான்.

‘காரணம் கேட்க நான் விரும்பவில்லை ஆனால் நீ என்னை காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன்’

‘சரி விபாகரனை ஏன் பிரிந்தாய்?’ சிவநேசன் அந்த கதையை மாற்றிட முயற்சித்தான்.

ஒரு தடவை ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டுக்கொண்டாள்.

‘அவன் தமிழன் என்பதால்… அப்படியில்லையென்றால் அவன் யாழ்பாணத்தான் என்பதால்’

‘என்றாலும் நீ ஓடி போயிருக்கலாமே?’

‘என் தந்தை தேடிப்பிடித்து எங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பார். இல்லையேல் என் குடும்பத்துடன் சேர்த்து வீட்டையே எரித்திருப்பார்.’

‘தொடர்ந்தும் அவனை காதலித்தபடியே இருந்தாயா?’

‘அவன் அப்போது உயிரோடு இல்லையென்று நினைக்கிறேன்’

‘நினைக்கிறேனென்றால்…!’ சிவநேசனுக்கு புரியவில்லை.

‘என் திருமணத்திற்கு பின் அவன் புலிகளின் இயக்கத்திற்கு போகப் போவதாய் தகவல் அனுப்பியிருந்தான்’

ஓரளவிற்காய் அவள் சொல்லவிழைவதை சிவநேசனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘அப்போது இறுதி யுத்த காலமென நம்பப்பட்டது. அநேகமாக மொத்த ஈழமும் தம்வசப்பட்டுவிட்டதென எங்கள் இனமே கொண்டாடி மகிழ்ந்து ஊர் மக்களுக்கெல்லலாம் பாற்சோறு விநியோகிக்கத் தொடங்கியிருந்தோம்’

சிவநேசனால் அச்சூழ்நிலையை அப்படியே உணர முடிந்தது. அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என் தந்தை அந்நிகழ்வுகளுக்கெல்லாம் தீவிரமாக தலைமை தாங்கியவர். உங்கள் தலைவனின் உருவத்தை பொம்மையாக செய்து எங்கள் வீட்டு முற்றத்ததில்தான் எல்லோருமாய் ஒருமித்து எரித்து பஸ்மமாக்கினார்கள். அந்த உருபொம்மை எரிந்து முடியும் வரை சுற்றி சுற்றி ஆடி களித்திருந்தார்கள்.’

‘நீயும் சந்தோஷப்பட்டாயா?’

‘அதுபற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் விபாகரன் அந்த யுத்தகளத்தில் இருந்திருப்பான் என்பதை தெரிந்து வைத்திருந்தேன்… வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் வெம்பித் தவித்தேன்’.

ஏறக்குறைய அவள் பேசிக்கொண்டே அழத் தொடங்கியிருந்தாள். கண்களை ஒரு துவாயால் மென்மையாய் ஒற்றியெடுத்தபடி மீண்டும் தொடர்ந்தாள். அவளது கண் மை இலேசாக கலைந்திருந்தது. 

‘எங்கள் கிராமமே பட்டாசு சத்தம் அதிர கும்மாளமிட்டது. தெமலு பராதாய்… தெமலு பராதாய்… என்று கோஷமிட்டபடி கொண்டாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயங்கிய ஒருசில அயலவர்களை நீ புலியா? என்று கேட்டுக் கேட்டு அடித்து நொறுக்கினார்கள்.’

‘உன் சூழ்நிலை தெரிந்திருந்தும் நீ ஏன் விபாகரனை தெரிவு செய்தாய்?’

சிவநேசன் அவளது பதிலை ஆர்வமாய் எதிர்பார்த்தான். அவள் அதற்கான பதிலை தவிர்த்தவளாய் தன்பாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.

‘அப்போது முழு நாட்டையும் தாமே உரிமையாக்கி கொண்டுவிட்டதாக அறிவித்திருந்தார்கள். என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. என் கொந்தளிப்புகள் துளியேனும் வெளியே தெரிந்துவிடக் கூடதென அத்தனை கவனமாய் நடந்துக்கொண்டேன். அன்றைய தின கொண்டாட்டம் எங்கள் வீட்டில் என் கணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. என் கைகளாலேயே இறைச்சி துண்டுகளை மசாலா தடவி பொறித்தெடுத்து மகிழ்ச்சியாய் பறிமாறுவதை போல் பாவனை செய்தேன். வீதியெங்குமாய் தெருவுக்குத் தெரு கொடிகள் பறக்கவிடப்பட்டு உற்சாக உத்வேகம் மக்களது உறக்கத்தை மறக்கச் செய்திருந்தது.’

திடீரென யாரோ சத்தமாய் கூப்பிடுவது போலாய் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் எடுப்பதாய் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

சிவநேசன் கட்டிலில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டான். விபாகரனின் உருவை நினைவிற்குள் கொண்டுவர முயற்சித்தான். கிட்டத்தட்ட அவன் தன்னை போலவேதான் இருந்திருக்க வேண்டுமென தோன்றியது. ஒரு கட்டத்தில் தனது உருவே நிழலாய் தெரியத் தொடங்கியதாய் உணர்ந்தான். தான் ஒரு தேர்ந்த காதலனாக மாறி அவளை அப்படியே ஏந்திக்கொண்டாலென்ன என்பதாய் நினைத்தான்.

பாரமான உணர்வொன்று அழுந்த உறுத்திக் கொண்டிருப்பதாய் பட்டது. பின் ஏதேதோ யோசித்தவனாய், குவளையிலிருந்த சிறிதளவு தண்ணீரை ஒரே மடக்கில் பருகினான். கழுத்தை சாய்த்து நீவி விட்டுக் கொண்டான். ஒரே குழப்பமாய் இருந்தது. கொஞ்சம் தலை வலிப்பது போலவுமாய். அவள் மறுபடியும் அழைக்கும் வரை தொலைபேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக ஒரு பத்து நிமிட நேரத்தில் அவள் மறுபடியும் தொடர்பிற்கு வந்தாள்.

‘மன்னித்துவிடு’ என்றாள்.

அவள் ஆங்கிலேயர்களுடன் அதிகம் பழகுவதால் அவர்களது பழக்கவழக்கங்கள் அதிகமாய் அவளுக்குள் தொற்றியிருந்தன.

சிவநேசன் மிகுதி கதையை கேட்க அவசரப்படுவதை காட்டிக் கொண்டான்.

‘நீ ஓவியர் வான்கோ பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா? என்றாள்.

வேண்டுமென்றே அவள் கதையை மாற்றி பேச முனைவதாய் தெரிந்தது.

‘உன் கணவனை ஏன் பிரிந்தாய் என்று சொல்’

‘அவனுக்கு என் காதல் பற்றி ஒரு கட்டத்தில் தெரியவந்தது. ஒரு தமிழனையா காதலித்தாயென மிக அநாகரீகமாக வார்த்தைகளால் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டே இருந்தான். தமிழர்களுக்கு எதிரான எல்லா சதி வேலைகளையும் ஆர்வமாக செயயத் தொடங்கினான். கிழமை தவறாமல் அது பற்றி கதைப்பதற்கென்றே நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்தான். மேலும் ஒரு தமிழனை காதலித்தலென்பது மகா முட்டாள்தனமென்றும் அடிக்கடி கேலிசெய்து சிரித்தான்’ 

சிவநேசன் அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தான். 

‘எல்லா சிங்களவர்களும் கெட்டவர்களென்று நீ நினைக்கிறாயா?’

‘இல்லை… நீ கூட சிங்களத்தி தானே!’

‘நிஜமாகவே அதனை நீ நம்ப வேண்டும். தமிழர்களை புரிந்து கொண்ட ஏராளமான சிங்கள மக்கள் இல்லாமலில்லை. அவர்களை நீங்கள் பார்க்கத் தவறியிருக்கிறீர்கள். கூடவே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறீர்கள்.’

‘ம்ம்… சிலவேளைகளில் நீ சொல்வது சரியாகலாம்’ என்றான்.

‘ஆனால் என் தந்தையை போலவே என் கணவனும் மிகக் கெட்டவன். தமிழர்களை மொத்தமாக துவேசித்தான். என்னால் அவனது கருத்துக்களுக்கு உடன்பட முடியா ஒரு தருணத்தில் விலகிவிட்டேன். நான் எற்கனவே சொன்னது போல ஒரு பிரைடா காலோ  வாக மாறி வாழ்தலையே விரும்பத் தொடங்கினேன்.

‘மறுமணம் பற்றி நீ யோசிக்கவில்லையா?’

‘இல்லை நான் விபாகரனுடன் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு இயல்பாக சாத்தியப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக… அவனால் என்னுடன் பேச முடிகிறது. எனக்குத் துணையாயிருந்து ஓவியம் வரைய முடிகிறது… சமயங்களில்; என்னை புணர்ந்தும் மகிழ்விக்க முடிகிறது’

சிவநேசன் எதுவுமே பேசாமல் இருந்தான்.

‘நீ பயப்படுகிறாயா?’

‘இல்லை…  ஆனால்  ஏன் உன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்வில்லையே?’

‘விபாகரன் செல்லமாய் என்னை ஜில் என்றுதான் அழைத்து பழகியிருந்தான். அதுவுமில்லாமல் யதார்த்த உலகிற்கு அப்பால் உள்ளவற்றை காண்;பதே சர்ரியலிசம் என்று கூறியிருக்கிறேன் அல்லவா. அந்த கோட்பாட்டின் சான்றாக டாலியின் ஓவியங்கள் மட்டுமே இருப்பதாக நம்பத்தொடங்கியிருந்தேன். தொடர்ந்தும் டாலியின் வழியையே பின்பற்றி எனக்கான ஒரு அக உலகையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன். இவையிரண்டுமே என் வாழ்வுடன் இரண்டறக்கலந்து போயிருந்தமையால்  அவரது பெயரின் ஒரு பகுதியையும் என் பெயருடன் பொருத்திக் கொள்ள வேண்டுமென்பதை விரும்பினேன். அதனை கொஞ்சம் மாற்றியோசித்து ஜில் ப்ராட்லி என ஆக்கிக் கொண்டேன்.’

மறுபடியும் அவள் ‘பயமாக இருக்கிறதா’ என கேட்டால் ‘ஆம்’ என்று சொல்;ல வேண்டும் போல் இருந்ததவனுக்கு. ஆனால் அவள் அப்படி கேட்காமல் தனது இயல்பு நிலையை தாண்டி பேசிக்கொண்டேயிருந்தாள். இடைக்கிடை அவளது கண்கள் அனிச்சையாய் மூடித்திறப்பதாய் தெரிந்தது. விசித்திரமாய் மூச்சுவிட்டபடியும், கொஞ்சம் வேகமாயும் பேசத் தொடங்கியிருந்தாள். 

திடீரென சற்று குனிந்து கண்களை அகல விரித்தபடி ‘விபாகரன் நேற்று என்னுடன் நிஜமாகவே பேசினான் தெரியுமா…!’ என்றாள்.

அவன் இப்போதும் மௌனித்தான். கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.

‘அவன் உயிரோடு இருக்கிறானென்பது ஏற்கனவே உனக்கு தெரிந்திருந்ததா?’

இல்லையென்பதாய் தலையசைத்தாள்.

‘அவனும் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறான். இன்னும் இரு தினங்களில் இலங்கை வருகிறானாம்.’

‘ஹ்ஹ்ஹா… பிறகென்ன…? உன் விருப்பமான வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறதென்று சொல்’

‘அதுதானில்லை’

‘ஏனில்லை’ சிவநேசனுக்கு கொஞ்சம் எரிச்சலாகவுமிருந்தது. 

‘அதைவிடு நீ வான்கோ எனும் ஒரு ஓவியன் அற்புதமான இரசணையுடன் தற்கொலை செய்து கொண்ட கதையை அறிவாயா?’

சிவநேசன் ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அதிகளவில் முயற்சித்தான். இவள் ஏன் இடையில் தேவையற்று வான்கோவை இழுத்துக் கொள்கிறாள்?’

வான்கோவை பற்றி ஏதேதோவெல்லாம் பேசத் தொடங்கினாள். அவனுக்கு அதில் கொஞ்சமும் பிடிப்பில்லாமல் இருந்தது. கேட்டும் கேளாதவன் போல ‘விபாகரன் வந்தால் ஏன் அவனோடு வாழ முடியாது?’ என்று கேட்டான்.

‘மிக நீண்ட நாட்களாக என் ஓவியங்களுடனும் விபாகரனின் மாய பிம்பத்துடனும் வாழ்ந்து பழகி விட்டேன். அடுத்து வரபோகிறதென தோன்றும் ஒரு திடீர் மாற்றத்தை… அல்லது ஒரு நிஜத்தை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிவநேசன். அது உனக்கு புரியாது விடு’ என்றாள்.

அவன் மீண்டும் மீண்டுமாய் அதையே விவாதித்தான்.

‘நீ விரும்பிய அவனை மனதார ஏற்பது தானே நியாயம்…!’

‘இல்லை. கற்பனையை எல்லா தடைகளிலிருந்தும் விடுவித்து தன் இஷ்டம் போலான வெளிப்பாட்டினை அனுபவித்து… தமது அடையாளங்களை அழித்து… மனதின் கட்டுபாடற்ற எண்ண வெளிப்பாட்டிற்கு உகந்ததான  ஒரு மாய வாழ்க்கை வாழ்ந்து பழகிய ஒருவனுக்கு அதிலிருந்து மீளுதல் சுலபமில்லை. மேலும் எனக்கு இப்போது மயக்கமாக இருப்பதாய் உணர்கிறேன்.’

‘நீ இப்போது ஓய்வெடுக்க வேண்டும். படுத்துக் கொள்’ என்றான்.

‘இன்னும் கொஞ்சம் பேச இருக்கிறது பொறு.’

அவள் தன் இரு கைகளாலும் முகத்தை வழித்துத் துடைத்துக் கொண்டாள். மிகவும் களைப்படைந்தவளாய் தெரிந்தாள்.

‘எனக்கு மிகப்பிடித்தமான ஓவியம் வரைதலை தாண்டிய அடுத்த விடயம், அதிகம் விரும்பும் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதுதான். எண்ணிய நொடியிலெல்லாம் விபாகரனுடன் என்னால் பேச முடிந்திருந்தாலும் அவனது பொய்விம்பம் எனக்கான பதில்களை ஒருபோதும் தரவில்லை. அத்துடன் அது உன்னால் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக உனக்கு நன்றியுடையவளாக என்னை நினைத்துக் கொள்கிறேன்.’

‘சாப்பிட்டாயா’ என்றான்.

‘இல்லை எனக்கு பசிக்கவில்லை. உனக்கு ஒன்று காட்ட விரும்புகிறேன் பார்…’

அருகில் வைத்திருந்த பாதியளவு வரையப்பட்ட ஒரு ஓவியத்தை காட்டினாள். அது வெறுமனே ஒரு கறுப்பு வெள்ளை படமாக இருந்தது. அந்தரத்திலிருந்து நீர் சிதறிக்கொண்டிருந்தது. ஒரு கதிரை ஆகாயத்தில் பறப்பது போலவும்… சந்திரன் துகள்களாகி பறந்து ஒருசிறு தூரத்திற்குப்பின் அவை பறவைகளாய் மாறிவிடுவதாயும் இருந்தது.. மிகுதி பாதி வரையப்படாமல் விடப்பட்டிருந்தது.

‘இப்போது இவ்வோவியத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்’

‘வேண்டாம் ஜில் நீ ஒய்வெடுக்க வேண்டும்’ என்றான்.

அவள் சத்தமாக உடல் குலுங்க ஒருமுறை சிரித்தாள். மறுபடியும் ஜில் என அழைக்கும்படி கேட்டாள்.

‘ஜில்….’

‘இன்னுமொருமுறை’

அவன் உணர்ச்சிவசப்பட்டவனாய் ‘ஜில்….’ என்றான்.

அவள் கண்கள் மூடி அதனை அனுபவித்துக் கேட்டாள்.

‘கடைசியாக ஒருமுறை சொல்’

‘ஜில்….’

அவள் அழுதுக்கொண்டிருந்தாள்.  ‘நன்றி’ என மீண்டுமொருமுறை கூறி தொடர்பை துண்டித்துக் கொண்டாள். 

தான் இப்போது  என்னவிதமான மனநிலையில் இருக்கிறோம் என்பதே சிவநேசனுக்கு புரியாமலிருந்தது. தொலைபேசியை ஒருபக்கம் வீசியவனாய் தொப்பென கட்டிலில் விழுந்தான். விரித்து கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தஸ்த்தயேவ்ஸ்க்கியின் நாவலை மேசையில் தூக்கிப் போட்டான்.  அறையை மொத்தமாய் நிரப்பிக்  கொண்டிருந்த ஜில் ப்ராட்லியின் உருவை காண முடிகிறதா என சூழவும் ஒருமுறை தேட முயற்சித்து பின் அவளை அணைத்துக்கொண்டு உற்ங்குவதாய் எண்ணியபடியே தூங்கிப் போனான்.

மூன்று மணித்தியாலங்களுக்கு பிறகொரு நொடியில் வியர்வை மற்றும் பசி மயக்கத்துடன் மோசமான ஒரு மனநிலையுடன் விழித்துக் கொண்டிருந்தான். உடலெங்கிலுமாய் வியர்வை அரும்பியிருந்தது. ஜில் ப்ராட்லி பேசிய வார்த்தைகளெல்லாம் மறுபடியும் நினைவிற்கு வரத் தொடங்கின. அவள் வான்கோவின் தற்கொலை பற்றி ஏதோ பேசினாளே…! தலையை பிடித்து கசக்கிக்கொண்டு யோசித்தான். 

‘வான்கோ பேராசையுடன் ஓவியம் வரையத் தொடங்கிய சற்று நேரத்தில் தன்னை அறியாமலேயே சாவின் நிழல்கள் தன்மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்தாராம். அப்போது அங்கே தன்னைத்தவிர யாருமில்லை என அறிந்த மறுநிமிஷம் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு பெருமூச்சிட்டபடியே சில அடிகள் நடந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாராம். வான்கோவின் வடியும் இரத்தம் நிற்காத போதும்  அவர் மிகுந்த ஆசையுடன் தள்ளாடியபடியே மீண்டும் ஓவியம் வரையும் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்தாராம்… இப்படி வான்கோவை போல மரணத்தை இரசணையுடன் அனுபவித்து பெறுவது கடினமில்லையா’  எனக்கேட்டாள்.

அதற்கு அவன் ‘ஏன்’ என கேட்டதாய் ஞாபகம்.

‘யாருமில்லாத ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளுதல் என்பதும் தன்னை தனக்கே தெரியாமல் ஒருவன் சுட்டுக் கொள்ளுதல் என்பதுவும் ஆச்சரியம் தானே தவிர அவ்வாறானதொரு அனுபவத்தை பெற்றிட என்னிடமும் துப்பாக்கி இல்லையே’ என்றாள். மேலும் ‘துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தை தர முடியுமா என்ன’ எனச்சொல்லி சத்தமாய் சிரித்தாள்.

சிவநேசனுக்கு மனது படபடத்தது. இதயம் பலமடங்கு வேகமாய் துடிப்பது போலிருந்தது. பதறியெழும்பி தொலைபேசியை தேடியெடுத்தான். அவளது இலக்கத்தை வேகமாய் அழுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவனது கைகள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தன.

நன்றி - http://www.yaavarum.com/

1 comment: