"விரும்பித்தொலையுமொரு காடு" (விமர்சனம்) - கருணாகரமூர்த்தி
ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக முகநூல் நண்பரொருவர் தான் வாங்கிய நூல்கள் என்று ஒரு 10 நூல்களைப் அருகருகே வைத்துப் படமெடுத்துப்போட்டிருந்தார். அதில்த்தான் முதன்முதலாக ‘விரும்பித்தொலையுமொரு காடு’ நூலினைப்பார்த்தேன். தலைப்பின் கவித்துவத்தையும், அட்டை ஓவியத்தின் காந்தியையும் பார்த்து அந் நூலையும் ஒரு கவிதை நூலென்றே நினைத்தேன். அப்போது ‘நடு’ ஆசிரியர் கோமகன் இலங்கையில் இருந்ததால் அவரை ‘விரும்பித்தொலையுமொரு காடு’ பிரதியொன்றை வாங்கிவரும்படி கேட்டிருந்தேன். அவருக்கும் அங்கு அதன் பிரதி கிடைக்கவுமில்லை, அவர் திரும்ப பாரிஸ் வந்து சேராததும் தனிக்கதை. பிறகும் ஒரு மாதங்கழித்து ‘விரும்பித்தொலையுமொரு காட்டை” கிழக்குப்பதிப்பகம் மூலமாக எடுப்பித்தேன்.
என் வழக்கப்படி தலைப்புக்குரிய கதையைத்தான் முதலில் வாசித்தேன். அக்கதையே இவர் ஒரு வித்தியாசமான கதைசொல்லியென எனக்குப் பிரமீளா பிரதீபனை அடையாளங்காட்டியது.
நடு, ஜீவநதிகளில் வாசிக்கக்கிடைத்த பிரமீளாவின் இரண்டொரு கதைகளைத்தவிர நினைவில் இருத்திக்கொள்ளும்படியாக எனக்கு வேறொரு படைப்பையும் படிக்க நேர்ந்ததில்லை.
இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றைப்படைப்பவர்களின் பௌதீக அடையாளங்களைவைத்து ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று வகைபிரிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் தமிலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பைவைத்து அதை எழுதியவர் ஆணோ பெண்ணோவென வாசகன் ஊகித்துக் கண்டுபிடிக்கும்படியாகவே இன்னமும் அவை இருக்கின்றன. காரணம் பெண்கள் சித்தரிக்க எடுத்துக்கொள்ளும் கருக்கள், அவர்களது மொழி, சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு. இதை மறுப்பவர்களுடன் கம்புசுற்றும் எண்ணம் எனக்கில்லை, பிரமிளா இந்த வகைமையிலிருந்து விலகியிருப்பது ஒரு இனியஆச்சரியம்.
அவர் நிறையவே உள்மனயாத்திரை செய்பவராக இருக்கிறார். அவர் சித்தரிக்கும் உலகங்கள் நடப்பிலிருந்து வித்தியாசமானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் செவ்வீதமும் அகவுலகச் சித்தரிப்புகளாக உள்ளன. இன்னும் மயாயதார்த்தம், மிகுயதார்த்த வகைகளிலும் அவர் தன் படைப்புகளைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
என் பதின்மவயதுகளில் ஒரு நண்பர்மூலம் தியானம்பற்றி அறியவிழைந்தேன். எனக்கு அப்போது பத்மாசனத்தில் அமர்ந்திப்ருப்பதே வல்லையாக இருந்தது. பின் மூச்சுப்பயிற்சி. ஆழமான உள்மூச்சு அதை நெஞ்சுக்குள் உள்ளடக்கி நிதானமான வெளியேற்றுதல் என்று பலவிதமான பயிற்சிகள் தந்தார். ” உனக்கு ஓரளவுக்கு தியானம் கைகூடிச் சிந்தையை ஒடுக்கிக் குவிக்கமுடிந்தால் LED மாதிரி நெற்றிப்பொட்டில் சின்னதாக ஒரு ஒளிப்பொட்டுத்தெரியும். அந்த ஒளிப்பொட்டை உன்னால் நினைத்தவிடத்துக்கெல்லாம் நகர்த்திச்செல்லமுடியும், அதை அப்படியே முள்ளந்தண்டினூடாக இடுப்பின் கீழாக இறக்கி ’குண்டலினி’ எழுப்பலாம்” என்றெல்லாம் சொன்னார். மாதக்கணக்கில் முயன்றும் எனக்கொரு ஒளிப்பொட்டும் தோன்றவே இல்லை, தியானம் எனக்கான விஷயமல்ல என்று புரிந்ததும் அதை அத்துடன் விட்டுவிட்டேன்.
இத்தொகுதியிலுள்ள ’அது புத்தனின் சிசுவல்ல’கதையிலிருந்து பிரமிளா நிறைய வாசித்திருக்கிறார் என்பதுவும் , தியானம், யோகம், குண்டலினி. என்றும் பயிற்சிகள்செய்யவோ குறைந்தது அவைபற்றி அறிந்துகொள்ள நிறையவே வினைக்கெட்டிருப்பாரென்றும் தெரிகிறது.
ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ என்றொரு கதையை எழுதியிருப்பார். அதில் வரும் இளம் சித்தாளு ஒருத்திக்கு வாத்தியாரென்றால் உயிர். அவளூர் டாக்கீஸுக்கு வாத்தியார் படம் வந்தால் பையன்களைப்போலப் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தது பத்துத்தடவைகளாவது பார்த்துத் தீர்த்துவிடுவாள். விளைவு நாளாகவாக அவளுக்குத் தன் கணவனுடனான உறவுவின்போதும் வாத்தியாரே வந்து தன்கூட முயங்குவதைப்போலக் கற்பிதஞ்செய்துகொண்டு மகிழ்கிறாள். இவ்வேளையில் எதிர்வீட்டுக்கு சென்னையில் ரிக்ஷா வலிக்கும் இளைஞனொருவன் வாத்தியார் படம்போட்ட டி- ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகிறான். சித்தாளுக்கு அவனது சுருள்சுருளான கிராப்புத்தலையும் தூக்கிக்கட்டிய லுங்கியினூடாக பாதி டிராயர் தெரிவதும், அவன் ஸ்டைலாக பீடி வலிப்பது எல்லாமே அவனையுமொரு நவீனதோரணையுடனான வாத்தியாராக தோற்றங்காட்டவும் மனசை அடக்கமுடியாமல் அவன்மீதும் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறாள். சித்தாளின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அவ்விளைஞனும் ‘ நீ என்னோடு சென்னைக்கு வந்திடு, உன்னை நான் வாத்தியார்கிட்டயே கூட்டிப்போறேன்’ என்று பசப்பி அவளை மெல்ல சென்னைக்கு நகர்த்திப்போய் சீரழிக்க முயல்வதாக அக்கதை நகரும்.
’அது புத்தனின் சிசுவல்ல’ கதையில் வரும் மாயாவுக்கும் கிட்டமுட்ட இப்படியான சிக்கலொன்று வருகிறது. மாயாவுக்கு அகிலன்மீது ஆசை.
மாயா தனக்கு வழிகாட்டும் சன்மார்க்ககுருவென நம்பிக்கொண்டிருக்கும் குருஜிஜே நீலமேகத்தை அவள் மணக்கவேண்டுமென்று நிர்பந்திக்கிறார். (அப்படி நிர்ப்பந்திபதற்கான காரணம் கதைக்குள் காணோம், இதைப் புதுமைப்பித்தன் வகையிலான பாய்ச்சலெனக்கொள்ளலாம்.) அவரது விருப்பத்தின்பேரில் மறுவார்த்தையின்றி மாயா நீலமேகத்தைத் திருமணஞ்செய்துகொண்டுவிடுகிறாள்.
சித்தாள் பட்டிக்காட்டுப்பெண் படிப்பில்லாதவள் சமூகம் கற்பிக்கும் வாழ்வியல் நியதிகளென்ற கற்பு, ஒழுக்கக்கோட்பாடுகள், பண்பாட்டுத் தடைகள்., நிஜமங்கள், எதுவும் அவளுக்கில்லை / அல்லது அறியாதவள்.
மாயாவுக்கு அப்படியல்ல. தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் நீலமேகம் இருக்கும்போதே அகிலன்வந்து மாயாவுடன் குலவச்செய்கிறான். அதுவே மாயாவின் வார்த்தைகளில் // ஒவ்வொரு புணர்ச்சியின்போதும் என அனுமதி இல்லாமலே அகிலன் எனக்குள் வந்துபோகின்றான்.// அதுவே அவளுக்கொரு அகச்சிக்கலாகிறது. அவளுக்கான அச்சிக்கலை கிரியாயோகத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் அலச விசாரஞ்செய்ய முயல்கிறார் பிரமிளா.
தியானத்தின் வழியில் இரண்டு ஆன்மாக்கள் சந்தோஷிப்பதுவும் குலவுவதும் சாத்தியந்தானாவெனக் குழம்புகிறாள் மாயா. இதை யாரிடம் கேட்பது?
ஒரு ஆண் ஒரு பெண்ணை மோகிக்கிறான் என்றால் அவனது ஒரு, பார்வை, ஒரு உடலசைவில் பெண்ணானவள் புரிந்துகொண்டுவிடுவாள். ஆதலின் குருஜியின் உள்நோக்கத்தை மாயா புரிந்துகொண்டிவிட்டிருப்பாள், ஆனால் அதை வாசகனும் புரியும் விதமான காட்சிப்படுத்தல் கதைக்குள் எதுவும் வரவில்லை.
புத்தனின் சிசுவல்ல மாயாவுக்கு ஒவ்வொரு . தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் / பேரின்பநிலைகளிலும் அவளது முன்நாட்காதலன் அகிலன் வந்துவந்து குலவுவதை மாயா அவளது கணவன் நீலமேகத்துக்குச்செய்யும் துரோகமாக உணர்கிறாள்.
அகிலன்வந்து குலவுவது நிஜமேயெனில் குருஜியும் அதை அறிந்திருப்பாரே? அவ்வாறு அறிந்தால் அவர் அகிலனையும் தண்டித்து…….. என்னையுமொரு புனிதங்கெட்டவள் எனச் சபித்துவிடுவாரேயென்று மாயா கலங்குகிறாள்.
அவளது அகச்சிக்கலைக் குருவுக்கு விளக்கி அந்த இம்சையிலிருந்து விடுபடலாமென்று அவ் யோகக்குருவிடம் ஆலோசனை கேட்கவந்தால்
”இந்த மாசம் பௌர்ணமிதினம் பிரம்மமூர்த்தப்பொழுதின் தருணம் கருவுக்கான நேரமாயிருக்கலாம் மாயா” என்று மாயாவைக்கூட விழைகிறார்.
குருவின் சந்நிதியில் புத்தனின் துறவு, யசோதாவின் தனிமை புனிதவாழ்வெனும் சம்வாதம் நிகழ்ந்த ஒரு பொழுதில் குருவிடமே அகிலன் விவகாரத்தை மாயா தெரிவித்துவிடவும் கடுஞ்சினமடையும் சன்மார்க்க குருஜி அவளை
”இழிகுலத்து நாயே….. கண்டநாயோடெல்லாம் புணர்கிறேனென்று என்னிடமே சொல்லுகிறாயா” என்று பழித்துரைப்பதுவும், உன்கர்மாவென்று கர்மாவை அழுத்துவதும் முரண்நகைக்குரிய இடங்கள்.
மேற்படி கதையானது ஒரு குறுநாவலுக்கான வெளியைக்கொண்டிருந்தும் அதையொரு சிறுகதையாகவே திடுப்பென பிரமிளா முடித்துவிட்டார்.
‘நீலி’ கதையும் பாத்திரங்களும் உரையாடல்களும் கற்பனையினூடான படிமங்களாகவே நகர்த்தப்பட்டிருப்பதுவும் ஆண்பெண் ஆணவம்/ தன்முனைப்பு (Ego) விளைவாகவரும் உரசல்கள் அவற்றின் விளைவுகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை மிகவும் படித்த ஒரு எழுத்தாளருடன் (பெண்) பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. “ எனக்குத் தலையை ’குறொப்’பண்ணிக்கொண்டு அல்லது விரித்துபோட்டுக்கொண்டு எப்போதும் கருப்பாக உடுத்திக்கொண்டுள்ள பெண்ணியவாதிகள் பேசும் எல்லாக் கருத்துக்களுடன் உடன்பாடில்லை. என்னைச்சரியாகப் புரிந்துகொண்ட என் கணவன் ’ஏன்டி என் ஷேர்ட்டின் பட்டனைத்தைத்துவைக்கல்லை” என்று அதிகாரம் பண்ணுவதைத்தான் நான் விரும்புகின்றேன்.”
ஒருமுறை கிருபானந்தவாரியார் சொன்னதும்கூடவே ஞாபகம் வருகிறது, “ நான் பிம்பிளாஸை ஆலாபனை பண்ணப்போ அதை வயலின்காரர் ஆபேரின்னு புரிஞ்சிட்டு இழுத்திண்டுபோனால் நானும் ஆபேரிக்கே வந்துமேலே பாடறதில்லையா அதே மாதிரி பொம்பளை சொல்றதைக்கேட்கமாட்டேன்னு பிடிவாதமாயிராத,,,,,,,,, அவள் சொல்றது நியாயமாயிருந்தாக்க கேட்டிட்டுப்போ, வாழ்க்கையில உரசல்கள் இராது. மத்தவன் பொண்டாட்டித்தாசன்னு சொல்வானோங்கற சிந்தனை உனக்கு வேண்டாம், வாழ்க்கை நிம்மதியாய்ப்போகணும். அதுதான் முக்கியம்”
நீலி கதையில் பிரமீளா பிரதீபன் காட்டுற கோணம் வேறு மாதிரி.
//தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?//
இன்னும் அகோரிணி யட்சி நீலியென்று அசுரபலம் வாய்ந்த பெண்களையெல்லாம் படிமங்களாகக் காட்சிப்படுத்துகிறார் பிரமிளா.
இக்கதையில் ஒரு இலட்சிய ஆணாக உருவகப்படுத்தப்படும் தேவனின் கூற்றாக // நீலி இது ஒருவகையில் அவரவர்க்கான கர்மாவின் பயன் என்பதுதானே உண்மை// என்றியம்புதல் பிரமீளாவுக்கும் கர்மாமீதான பிரமிப்பென்று கொள்ள இடந்தருகிறது. ஆனால் பின் நவீனத்துவம் நம்பிக்கைகளைப் படைப்புக்குள் அனுமதிப்பதில்லை.
தலைப்புக்குரிய கதை விரும்பித்தொலையுமொரு காடு ஒரு பெண்ணின் பார்வையில் அவர்கள் புகுந்துகொள்ளும் திருமணவாழ்வு எனும் அவத்தை (Phase) எப்படி அவர்கள் விரும்புவதுமாதிரி / எதிர்பார்த்தமாதிரி இல்லாமல்ப்போகிறது என்பதைப் படிமங்களூடாகச் சொல்லிச்செல்கிறது.
திருமணபந்தத்தில் நுழைவதைத் தவிர்க்கமுடியாது, விருப்பத்தையும் மீறி அதற்குட் செலுத்த ஆயத்தங்கள் நடைபெறும்போது மௌனமாயிருப்பதைத்தவிர வேறென்னசெய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நடுவில் அந்த மரமும் அப்படித்தான் இந்தப்பூச்சியும் அப்படித்தான், என்றான பலவகை காட்சி விஸ்தரிப்புகளுக்குப் பின்னாலும் கதையின் இறுதிப்பகுதியில் மீளவும் யாருக்கேனும் இதுவொரு சம்பவமாகவோ அல்லது அடுத்துவரப்போகும் நிகழ்வின் (வாழ்வின்) பகுதியாகவோ இருப்பின் அதற்காக என்னால் என்ன்செய்யமுடியும், மௌனமாக இருப்பது மாத்திரந்தானே? என முடிக்கும்போது சித்திரத்தைப்படிக்கும் அலர் அகவையருக்கு திருமணம்மீதான ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது.
அம்பையின் கதைகளில் வருவதைப்போன்று பெண்களை அடக்குவதால் இன்பந்துய்க்கின்ற ஆணாதிக்கத்தைச் அனுபவிப்பதாக எண்ணும் ஆண்கள் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் விதியேயென்று தம்மையே நொந்து பிலாக்கணம் வைத்துப்புலம்புவதுடன் நின்றுவிடுவதில்லை. அக்கிரமங்களுக்கெதிராகப் போராடவுஞ்செய்கிறார்கள். ஆனாலும் பிரமீளா இப்படியே தொடர்வாராகில் இவர் இந்தப்பிரச்சனைபற்றி இப்படித்தான் எழுதுவாரென்று வாசகர்களால் முத்திரை குத்திவிடப்படும் அபாயமுமிருக்கிறது. எனக்கென்னவோ பிரமிளா புலம்பெயர்ந்து வந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது, அப்படி வந்திருப்பாரானால் அவரது பார்வைகள் இன்னும் விசாலித்திருக்க கதைகளின் பகைப்புலமும் கருக்களும் பாத்திரங்களும் மாறியிருந்திருக்க இன்னும் அசத்தலான படைப்புகள் பலவற்றைத்தந்திருப்பார்.
ஜில் ப்ராட்லி, கமிலே டொன்சியுக்ஸின் தோடுகள் போன்ற கதைகளைப் படிக்கையில் பிரமிளாவுக்கு பன்னாட்டு இலக்கியங்களுடனும் பரிச்சயமிருப்பதை உணரமுடிகிறது. உள்நாடாயிருந்தாலென்ன வெளிநாடாயிருந்தாலென்ன, வசதியானவளாயிருந்தாலென்ன, விளிம்புநிலைவாசியாயிருந்தாலென்ன பெண்களுக்கு காதுத்தோட்டையும் அடகுவைக்கவேண்டிய நிலமைகள் வந்துவிடுகின்றன. அப்படி அடகாகும் தோடே பேசுவதும் அழகான கற்பனை..
உரப்புழுக்கள் கதையின் நாயகி சுரேகாவும், அது புத்தனின் சிசுவல்ல மாயாவுமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இவ்விரண்டு கதைகளிலும் ஒன்றாக இருப்பதைக்காணலாம். முதலாவதில் சுரேகா அவனது கண்காணிப்பாளர் இவளுக்கு உரம் அள்ளும் கிடங்கிலிருந்து பணியை வேற்றிடத்தில் மாற்றிப்போடுவதற்கு இவளிடம் பாலியல் லஞ்சம் கேட்கிறார். அவரைப்பற்றி முறைப்பாடு செய்யப் மேலிடத்துக்குப் பெரியதுரையிடம் போனால் அவரும் கதைவைச்சங்கிலி போட்டுப்பூட்டிவிட்டு அவளைக் ‘கட்டிலுக்கு……. வா’ என்றழைக்கிறார்.
வார்த்தைத் தேர்வுகளில் அங்கங்கே சிறு கவனயீனப்பிழைகள் உண்டு. உரப்புழுக்கள் கதையில் அந்த உரமென்கிற வார்த்தை பொருத்தமாக அமையவில்லை. பொதுவாக விவசாயத்தில் உரம் என்பது அசேதன உரங்களைத்தான். (inorganic fertilizers such as anhydrous ammonia, urea, urea-ammonium nitrate solutions, ammonium phosphates, and muriate of potash). அவற்றுக்குள் எந்தப்பழுக்களும் உயிர்வாழமுடியாது, அவிந்தே இறந்துவிடும். செம்பனைகளின் பகுதிகளோடு அசேதன உரங்களைக்கலந்து பெறப்படுவதைக் கூட்டுப்பசளை (compost : decayed organic material used as a fertilizer for growing plants.) என்றுதான் சொல்லப்படும். அதற்குள் புழுக்கள் வாழச்சாத்தியம்.
இன்னும் சிங்கள உரையாடல்களைத் தமிழில் எழுதும்போது வாக்கியங்கள் சில. எ+காட்டாக: ‘அத்த கியப்பாங்’ என்பது ’எத்த கியப்பாங்’ என்றும், ‘ ஊவ மரலா நெவே’ என்பது ’ ஊவ மரலா நெமே’ என்றும் தட்டப்பட்டுள்ளன.
அதேபோல் சிராம்புகள் > சிலாம்புகள் என்றும், விளாறு > மிலாறு என்றும் தட்டப்பட்டுள்ளன. இச்சிறு தவறுகளால் படைப்புக்களின் தரத்துக்கோ கனதிக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை தவிர்ந்த தட்டுப்பிழைகள் அதிகமில்லாமல் இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.
கதையைக் காட்சிப்படுத்துவதில் புதுமைப்பித்தனையொத்தவொரு வேகமும், புதிய உத்திகளைத்தேர்ந்து சொல்லும் முறையில் புதுமையும், எந்தப் பிரச்சனையானாலும் நேரடியாக எடுத்துப்பரப்பிவைத்து அலசுவதில் துணிச்சலையும் கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் எனக்குத் தமிழிலக்கியவானில் புதிதாகத்தோன்றியுள்ள விடிவெள்ளியாகத் தெரிகின்றார். இவரால் ஈழத்து இலக்கியம் கடுகிப் புதிய உயரங்களை எட்டும்!
(விமர்சனம்: அம்ருதா 183 - பெப்ரவரி 2023)
யாவரும் வெளியீடு, பக்கங்கள்: 124 விலை: 150.00 ₹