Enter your keyword

Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Monday, April 13, 2020

2020' பெண்கள் தினத்தையொட்டி கனலியில் - பிரமிளா பிரதீபன்

By On April 13, 2020

பெண் என எழுதும் போது கூட அந்த எழுத்துக்களில் ஊடுருவியிருக்கும் போதைத் துளிகள் தெறித்து விசிறப்பட்டுவிடுமோ எனத் தோன்றுமளவிற்குப் பெண்ணுடலும் பெண்களின் உணர்வுகளும் விமர்சிக்கப்படுகின்றன. அல்லது அத்தகையதொரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

கால மாற்றங்களுக்கு அமைவாக ஒரு பெண் ஒப்பீடட்டளவில் தன்னை சகல உரிமைகளும் சுதந்திரமும் உடையவளாக எண்ணிக் கொண்டிருந்தாலும் எவருக்கும் தெரியாததொரு நொடியில் தலைதூக்கத் தயாரான நிலையில் அடக்குமுறைகள் தொக்கு நிற்கின்றன என்பதை நிச்சயமாய் மறுப்பதற்கில்லை. அது ஒரு ஆணினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதைத் தாண்டி பெண்களாலும் சமயங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.

நிஜமாகவே என்னளவில் ஒரு பெண்ணிற்குச் சமுதாயத்தினரால் (தமிழ் சமுதாயத்தினரால்)  வழங்கப்படும் சுதந்திரமானது கயிற்றால் கட்டி மேய விடப்பட்ட ஒரு பசு மாட்டிற்கு ஒப்பானதென்றே கருத முடிகிறது. என்ன…! கால மாற்றம் அந்த கயிற்றைச் சூழலுக்கு ஏற்றாற் போலச் சற்றே நீளமாக்கியிருக்கிறது அவ்வளவேதான்.

இலக்கிய உலகைப் பொறுத்தவரைப் பெண்ணினது உணர்வுகளை அப்படியே உணர்ந்து எழுதிவிடத் துணியும் எந்த ஒரு ஆணினாலும் முழுமையான அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ வெளிப்படுத்திவிடவோ முடியுமென்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ஒரு பெண்ணினால் மட்டுமே அவளை அல்லது அவளினத்தை முழுமையாய் வெளிப்படுத்துதல் சாத்தியமாகிறது. இந்த புள்ளியில்தான் பெண் படைப்பாளிகளின் இன்றியமையா தன்மையும் அவள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களும் பேசப்பட வேண்டிய ஒரு எண்ணக்கருவாக உருமாறுகிறது.

குறிப்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தம்மை வெளிப்படுத்தும் பெண்களுக்கான சவால்கள் ஏராளமானவை என்பதுவும் பேசப்படவேண்டிய ஒரு விடயமாகவே கருதப்படுகிறது. தான் எதனை எழுத வேண்டுமென்பதைத் தீர்மானிக்க அல்லது அவளைத் தட்டி வீழ்த்திவிடச் சந்தர்ப்பம் பார்த்து ஒரு ஆண்வர்க்கம் எப்பொழுதுமே அருவமாய் உலா வந்தபடியேதான் இருக்கிறது. இதனை வெளிப்படையாக எவரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையெனினும் அவளை… அவள் நடத்தையை… அவள் எழுதும் கருப்பொருளை… அவளது அந்தரங்க வாழ்க்கையை என்று அலசி ஆராய்ந்து விமர்சிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு அந்த ஆதிக்க இனம் காத்துக்கொண்டேயிருக்கிறது.

இது வெறுமனே ஒரு ஊகமென்றோ என் தனிப்பட்ட அனுபவமென்றோ கருதுவதற்கு நிச்சயமாய் இடமில்லை. ஒரு பெண் தன்னை மீறிச் செயற்படும்போதோ தன்னிலும் அதிகமான திறமையைக் கொண்டிருக்கிறாள் என உணரும் போதுதான் அந்த ஆதிக்க இனம் தமக்கே தெரியாமல் தமது செயற்பாடுகளினூடாக தம் சுயத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த அனுபவத்தை ஒவ்வொரு பெண்ணுமே வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் உணரப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமென்பதை அறிய முடிகிறது.

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டயறி’ எனும் சிறுகதையைப் படிக்கக் கிடைத்தது அந்த கதையின் சம்பவங்கள், கதையை வாசித்து சில நாட்களுக்கு பிறகுமாய் கூட என்னைச் சூழ்ந்து சுழன்றபடியே இருந்ததை என்னால் தவிர்த்துக்கொள்ளவே இயலவில்லை. தனது எண்ணத்தை ஒரு டயறியில் யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துக்கொள்ள முடியாத அந்த தேவகி சித்தியின் நிலை வெறும் கற்பனையாய் மட்டுமே இருந்துவிடுமென்று எனக்குத் தோன்றவில்லை.. எத்தனையோ தேவகிகளின் கைப்பேசி உரையாடல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் ஆராயப்படுகின்றன. அச்செய்திகளின் நன்மை தீமைகள் ஆங்காங்கே விவாதிக்கப்பட்டபடியேதான் இருக்கின்றன.

தன் கணவனால் உளவு கண்காணிப்பில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறிந்த பின் எழுத்தாளர் நரன் அவர்களால் படைக்கப்பட்ட கவிதையொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் தகுமென எண்ணுகிறேன்.

“வாழ்வெங்கிலும் துணையும் பாதுகாப்பாகவுமிருப்பேன்

என்றவன்தானே நீ

வெறுமனே யோனியினருகிலேயே அமர்ந்திருக்கிறாயே”

…………………….
“யோனிக்கொரு பூட்டு
அதன் சாவி
வளைந்த உன் ஆண்குறியில் முடிச்சிட்டு
தொங்குவது தெரியும்
சக ஹிருதயனே…”
……………………………………

“உன்னை நடுநடுங்க வைக்கும் ஒரேயொரு
பொய்யுரையுரைக்கவா…?
தற்போது மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக
இருக்கிறான்.”

இதனை எழுதிவிட உந்தும் இதே இந்த உணர்வினை எழுத்தாளுமையுள்ள எத்தனையோ பெண்கள் கடந்திருக்கக்கூடும். அல்லது கண்டோ கேட்டோ ஆவது இருக்கக்கூடும். எனினும் அப்பெண்ணினால் இலகுவில் அவ்வுணர்விற்கு வடிவம் கொடுத்துவிட முடிவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ பால் ரீதியான வேறுபாடுகள் மட்டுமல்ல அதற்குள் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் ஒரு பெண் தமது படைப்பைத் தீர்மானிக்க முயல்கிறாள். ஏனென்றால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மயமாக்கப்பட்ட சமூகமானது பெண்களின் துணிச்சலான இலக்கிய வெளிப்பாடுகளைப் பண்பாட்டு மீறலாகத்தான் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறது. (எனது படைப்புகளினூடாகவும் இத்தகைய போலி கலாச்சார காவலர்களை எதிர் கொண்டிருக்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.)

இதன்படி பெண் எழுத்தாளர்கள் அனைவருமே பெண்ணிய வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்ற போதிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கு இலக்கியமும் ஒரு பேராயுதமாகவே அமைகிறதென்பதையும்  பெண்ணியத்தைப் பெண்கள் தெரிவு செய்தலென்பது ஒரு பெண்ணினது தனிப்பட்ட தெரிவாக மாத்திரம் அமையாமல் அது ஆணாதிக்கத்தின் விளைவாகவோ அல்லது அத்தகைய சமூகத்தின் ஒரு உந்தலாகவேதான் இருக்கின்றதென்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

‘நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை. என் எதிரியே தீர்மானிக்கிறான்’ என சே.குவாரா கூறியதை போலப்  பெண்ணியம் என்பது ஆணாதிக்க சமூகம் எமக்குத் தந்த தெரிவு. இதற்கமைவாக எமது சமூக அமைப்பானது எப்போது சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றைச் சகல மட்டத்திலும் நிறுவத் தயாராகிறதோ அப்போதே சமூக மேம்பாட்டை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச்செல்லத் தயாராக முடியுமென்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

Saturday, April 14, 2018

பிரமிளா பிரதீபன் அவர்களுடனான நேர்காணல்

By On April 14, 2018
இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.08.26

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களது பூர்வீகம், ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்? 
தாய், மனைவி, ஆசிரியை எனும் மூன்று கதாபாத்திரங்களுடன் எழுத்தாளர் எனும் பாத்திரத்தையும் சேர்த்துக் கொண்டவள் நான். பதுளை ஊவாகட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டு எனது ஆரம்ப கல்வியினை ஊவாகட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் பயின்றேன். தொடர்ந்து இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் பயின்ற நான் அதற்கு பின்னரான மேற்படிப்பிற்கு கொழும்பில் வசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

தொழில் எனும் வகையில் தனியார் றிறுவனமொன்றில் தொழினுட்பப் பிரிவில் வேலை செய்து கொண்டே மேற்படிப்பைத் தொடர்ந்த நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், நான் மிகவும் நேசிக்கும் ஆசிரியத் தொழிலுக்கு விண்ணப்பித்து ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றேன். எனது வாழ்வின் பல்வேறு திருப்பங்களுக்கு எனது தொழிலனுபவங்களின்; பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது? 
கவிதைத் துறையே எனது இலக்கியப் பயணத்தின் ஆரம்பம் எனலாம். 'சலனம்' எனும் கவிதை 2005 ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகையில் வெளியாகி என்னை உற்சாகப்படுத்தியது. ஆனால் 'பீலிக்கரை' எனும் சிறுகதையினூடாகவே ஞானம் சஞ்சிகையில் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி எனது துறையினைத் தீர்மானித்துக் கொண்டு என் இலக்கியப் பயணத்தை இற்றைவரை தொடர்கிறேன்.
எழுத்தாளர்கள் என்போர் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் என்பார்கள். உங்களை எழுதத் தூண்டியது எது?  
நிச்சயமாக சமூகத்தின் மீதான ஒரு பிடிப்புதான். சிறுவயது முதலே மலையக மக்கள் மீதான பற்றுணர்வு என்னை தூண்டியபடியே இருந்ததென்பதை நான் நன்கு அவதானித்திருக்கிறேன். ஆனால் எழுத்துத் துறையை வலிந்து தெரிவு செய்து அதனை வெளிப்படுத்த வேண்டுமென நான் ஒருபோதும் முனைந்ததில்லை. என்னையறியாமல் நான் இனங்காட்டப்பட்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்த பின் என் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கின்றேன். கூடவே சமூகம் மீதான என் அகப்பார்வை எனக்கு பல்வேறு கருப்பொருள்களை தேடித் தருகின்றது.

உங்கள் எழுத்துக்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?
முதலாவதாக நான் குறிப்பிட்டுக் கூற வேண்டியவர் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள். எனக்கான களத்தை அமைத்து தந்து, என் அத்திவாரத்தை பலப்படுத்தியர் அவர். அடுத்ததாக என் பெற்றோர், கணவன் ஆகியோரை கூற முடிவதுடன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் என்னை எழுதத் தூண்டுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தமையை குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.
சமகாலக் எழுத்தாளர்கள் மீதான உங்கள் பார்வை எப்படியுள்ளது?  
சமகால எழுத்தாளர்கள் சிந்திக்கும் எல்லை மிக விரிவடைந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட ஒரு மரபுக்குள் இருந்து கட்டுடைப்பட்டு தற்போதைய இளைஞர்கள் மாற்று விடயங்கள் குறித்து எழுதுவதில் அவதானம் செலுத்துகின்றமையை அவதானிக்க முடிகிறது. (குறிப்பாக கவிதைகள்) புறச்சூழல் குறித்த படைப்புகளின் நிலைமைகள் மாறி தற்போது மனிதர்களின் உறவுகள், மனநிலை போன்ற அகச் சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மேலும் தற்போதைய இளைஞர்கள் உலக இலக்கிய வாசிப்புகளிலும், அதுசார் கலந்துரையாடல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றமையையும் காண முடிகிறது. கூறப்போனால் அவலங்கள் முதலான இருண்ட பக்கங்களது பார்வை விஸ்தாரமாகி வாழ்வின் அழகான பக்கங்களும் உணர்வுகளும் படைப்புகளாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
நீங்கள் சிறுகதைகள் பலவற்றை எழுதியிருக்கிறீர்கள். அதுபற்றிக் கூறுங்கள்? 
சிறுகதை எனும் துறையினையே எனக்குரிய துறையாக நான் தீர்மானித்து வைத்திருந்தமையால் சிறுகதைகளை எழுதுவதில் என்னால் அதிகளவு கவனம் செலுத்த முடியுமாகவிருந்தது. 2007 ஆம் ஆண்டு ஷபீலிக்கரை| எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தக பூங்காவின் ஊடாகவும், 2010 ஆம் ஆண்டு 'பாக்குபட்டை' எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாகவும் வெளீயீடு செய்துள்ளளேன். 'பாக்குபட்டை' சிறுகதைத் தொகுப்பானது திரு. உபாலி லீலாரத்ன அவர்களால் சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு கொடகே வெளியீடாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் சிறுகதைகளின் பேசுபொருள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 
என்னால் என் மண்ணை வேறு கண் கொண்டு பார்க்கும் திடமிருந்தது. அதன் அழகியலை விஸ்தரிக்கும் உணர்விருந்தது. எங்களுக்குள் மறைந்து கிடந்த அழகு, எளிமை, என்பவற்றை எனது அனுபவ பகிர்வினூடாக வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். அநேகமாக என்னுடைய சிறுகதைகளிலெல்லாம் ஓரமாய் ஒரு சிறு வலி ஒட்டிக் கிடந்தாலும் கதையெங்கும் மலையகத்தின் அழகும் சந்தோஷச் சாரல்களும் அப்பிக்கிடக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகவிருந்தது. இப்படியும் பார்க்கலாம் என்று எண்ணினேன். எழுதினேன். இதற்குள் என்னால் இயலுமான அளவு யதார்த்தங்களை உள்ளடக்கினேன்.

அநேகமாக நான் கூறவிரும்பும் கருப்பொருளை வெளித்தெரியாமல் தொக்கு வைத்த நிலையில், நேர்மறையான உத்தியைப் பயன்படுத்தி சிறுகதையின் உள்ளிருக்கும் கருத்தை வாசகனை சிந்திக்கத் தூண்ட வேண்டுமென்பதே என்னுடைய நோக்கு. இவற்றின் பேசுபொருளாக மலையக வாழ்வியல் பிரச்சனைகள், பெண்களின் வெளித்தெரியா அகவுணர்வு, சிறுவர்களின் ஏக்கம், மாணவர்களின் பிச்சனைகள் போன்றவையே பேசப்பட்டன.
''கட்டுபொல்'' நாவல் குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்ததற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?
தேயிலை, தென்னை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திகளினூடாக மாத்திரமே பரவலாகப் பேசப்படும் மலையக மக்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதென காட்டுவதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. கட்டுபொல் (செம்பனை) எனும் மரச்செய்கை இலங்கையின் தென் பகுதியில் பல தோட்டப் பகுதிகளில் நடைமுறையில் காணப்பட்டாலும், அவை பேசப்படுவது மிகவும் குறைவென்றே எனக்குத் தோன்றியது. எம்மவர்கள் இங்கே தம் உயிர்ப்பயம் மறந்து தமது உழைப்பை உச்சளவில் அர்ப்பணிக்கின்றனர் என்பதுவும், அது யோசிக்கப்படாத ஒன்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றமையும் என்னை உறுத்தத் தொடங்கியதன் விளைவே இந்நாவல்.

இந்நாவலானது இலங்கையின் தென் பகுதியில் உள்ள 'கல்கந்த' எனும் தோட்டப் பகுதி மக்களின் வாழ்வியல் அனுபவங்களினூடாகவே நகர்த்தப்படுகின்றது. 'கட்டுபொல்' எனும் சிங்கள மொழிச் சொல்லை நாவலின் பெயராக நான் தெரிவு செய்தமைக்கு இரண்டு காரணங்களை என்னால் குறிப்பிட்டுக் கூற முடியும்.

ஓன்று, மக்களிடத்தே நாளாந்த பேச்சு வழக்கில் இருந்த ஷகட்டுபொல்| எனும் சொல்லை வலிந்து தமிழ் மொழிக்கு மாற்றி எழுதுதலானது படைப்பின் உயிர்த்தன்மையை சிதைத்துவிடக் கூடுமென்பது என்னுடைய நிலைப்பாடாகவிருந்தது. இரண்டாவது காரணம், இப்பெயரானது இன நல்லிணத்திற்கு வழிவகுக்கக் கூடுமென்றும் நான் கருதியிருந்தமை.

சிங்களப் பெயருடனான தமிழ் நாவலொன்று இதுவரை இருக்கவில்லையென்றே அறிந்திருந்தேன். எனவே, வைத்துத்தான் பார்க்கலாமே எனும் உந்துதலில் பலரது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டியே இப்பெயரைத் தெரிவு செய்தேன்.
சமகால நாவல் இலக்கியங்களின் வரவு கனிசமாகக் குறைந்து வருகின்றதே. அந்த  வகையில் உங்களது நாவலின் தனித்துவம் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்?
கவிதை இலக்கியத்துடனும் சிறுகதை இலக்கியத்துடனும் ஒப்பீட்டு நோக்கின் நாவல் இலக்கியத்தின் வருகையானது மிகக்குறைவென்பது கண்கூடு. இதற்கான காரணங்களாக படைப்பாளிகளின் காலம், மனநிலை என்பவை பங்களிப்புச் செய்திடினும் கூட, இலக்கியத்தின் செழிப்பிற்கு நாவலின் பங்களிப்பும் மிக அவசியமென்பேன்.
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று கூறுவீர்கள்?
நாகரீகம் எனும் பெயரிலான மனநிலை மாற்றமும் மிகத் தீவிரமான இணையப் பாவனையும் இதற்குரிய பிரதான காரணங்களாக இருக்கக்கூடுமென எண்ண முடிகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப கட்டம் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நினைத்த மாத்திரத்தில் எல்லா வன்முறைகளையும் குறைத்து இல்லாதொழித்தல் சாத்தியமில்லை. சில குறிப்பிட்ட செயற்பாடுகளினூடாக எதிர்கால நேர்விளைவை உறுதிப்படுத்திக்கொள்ள இயலும். உதாரணம் கல்வி கலைத் திட்டத்திற்குள் சில விடய பரப்புகள் கட்டாயப்படுத்தப்படலாம். பாலியல் தொடர்பான தெளிவான அறிவு புகட்டப்படல், கற்பித்தல் செயற்பாடுகளில் மனப்பாங்கு விருத்திக்கு அதிக முக்கியத்துவமளிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தப்படல், ஆண் - பெண் கலப்பு பாடசாலை முறைமை அதிகரிக்கப்படல்  போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
கல்வித் துறையில் குறிப்பாக ஆசிரியப் பணியில் தாங்கள் ஈடுபடுவதற்கு ஏதேனும் முக்கிய காரணங்கள் இருக்கின்றனவா?
நிச்சயமாக ஆம் என்பதே பதில். நான் மிகவும் நேசிக்கும் தொழில் இது. இதைவிடுத்து உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டிய போதிலும் கூட, ஏதேதோ காரணங்களை முன்வைத்து இத்தொழிலை தக்கவைத்துக் கொண்டேன். இதற்கான காரணங்கள் பல:- தொழிலை அனுபவித்து உணரல், நாளாந்தம் பல உயிர்களுடனான உறவாடல், சதா இளமையான மனது, விசித்திரமான அனுபவங்கள் ஆகியனவாகும்.

ஒரு ஆசிரியர் என்பவர் எத்தனை தூரம் முக்கியத்துவமானவர் என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறேன். ஆராய்ந்து பார்த்தால் வகுப்பறையின் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி உலகமாய்த் தோன்றும். நாற்பது விதமான தனி நபர்களுக்கு நாற்பது நிமிடத்தில் ஒரே பாடத்தை நாற்பது கண்கள் கொண்டு கற்பிக்கும் சவால் நிறைந்த ஆசிரியத் தொழிலைவிட உயர்வாய் வேறேதும் இருக்க முடியுமா என்ன?
சிறுகதை, நாவல் தவிர்த்து வேறு எத்துறைகளில் உங்களுக்கு ஆர்வமுள்ளது?
கவிதை, கட்டுரைகள். 2008 ஆம் ஆண்டு கம்பன் கழகத்தினூடான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் 'மகரந்தச் சிறகு' விருது எனக்கு கிடைக்கப் பெற்றமையைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
படைப்பிலக்கியத் துறைக்குள் வந்ததை இப்பொழுது எவ்வாறு கருதுகின்றீர்கள்?
என்னவென்று சொல்வேன். மிகச் சரியான பாதைக்குள் நடந்துக்கொண்டிருக்கிறேன். ஆத்ம திருப்தியை அனுபவிக்கிறேன். சமுதாயத்திற்கு என்னூடான எதையாவதொன்றைச் செய்யும் வாய்ப்பைத் தந்த எழுத்துலகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். எழுத்து என்னை பல இடங்களில் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. அளவற்ற தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றது. சவால்களுக்கு முகம் கொடுக்கும் உயரிய பண்பைக் கூட எழுத்துதுறைதான் எனக்கு மிகச்சரியாக கற்பித்தது என்பேன். இத்துறைக்குள் வந்ததை பெரும் பேறென கருதுகின்றேன்.
உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்? 
மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் ஒரு தடவை (2011) தன் அநேக சொந்த அனுபவங்களை மனம் விட்டு என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் பால்நிலை மறந்து, வயது மறந்து நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் சிறுவர்களாய் மாறி, நீண்ட நேரம் பேசினோம். சத்தமாகச் சிரித்தோம். அந்த சில மணி நேர பேச்சு என் மனதில் இன்னுமே ஆழப்பதிந்து போயிருக்கிறது. 
இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்களுக்கு, இலக்கியப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எவை?
கொடகே கையெழுத்து போட்டி 2017 சிறந்த நாவலுக்கான விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைக்கான மகரந்தச் சிறகு விருது 2008, உழைககும் மக்கள் கலை விழா - சிறந்த சிறுகதைக்கான விருது 2007 ஆகியனவாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நன்றி - பூங்காவனம் http://poongavanam100.blogspot.com/2018/10/35.html