Enter your keyword

Tuesday, July 13, 2021

நீலி - பிரமிளா பிரதீபன்

By On July 13, 2021

துங்ஹிந்த நீர்வீழ்ச்சி தெறித்து விழுமோசை அவ்வனத்து எல்லை வரை துல்லியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. கிளைக்குக் கிளை தாவிக் குதித்துக்கொண்டிருந்த இரண்டு குரங்குகள் அவ்வோசையின் தாளத்திற்கேற்பவே பாய்ந்தபடி சென்றன. 


அக்காட்டின் ஒற்றை தேவதையான நீலி அக்குரங்குகளை பின்தொடர்ந்தபடி நடந்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தனவாய் அக்குரங்குகள் திசைமாறி போய்க் கொண்டிருந்தன. 


காட்டிற்குள் படர்ந்திருந்த இருள் குரங்குகளை இன்னும் கருமையாகக் காட்டியதால் நீலி அடிக்கடி அவற்றை உற்று அவதானித்துக் கொண்டாள். இலைகள் மூடியிருக்கும் புதர்களை நீலி நன்கறிவாள். அவ்விடங்களை தவிர்த்தொதுக்கியவாறு பாதைகளற்ற அடர்தாவரப்பகுதிகளுக்கிடையே வழியொன்றை உருவாக்கியவளாய் அவள் நடந்தாள். 


திருப்பங்களில் திடீரெனத் தட்டுப்படும் மரக்கிளையிடத்து குனியத் தோன்றாமல் அவற்றை வலிந்துப் பிடித்துத் தள்ளினாள். சில காய்ந்த வாதுகளை உடைத்து முறித்துப் போட்டாள். முட்செடிகளை தாண்டும் போது ஏற்படும் சிராய்ப்புகளை கணக்கில் கொள்ளாது சிரித்தபடியே நடந்தாள். முட்கீறலின் நீள்கோட்டு வடிவ அச்சுகள் அவளது கைகளிலும் கால்களிலுமாய் படிந்திருந்தன. 


களைந்திருந்த கேசத்தை கைகளால் நீவி அழுத்தி விட்டுக்கொண்டாள். முகத்தை கைகளால் துடைத்துக் கொண்டாள். குளிர்காற்றின் ஊறல் மேனியை சில்லிட செய்தது. கைகளில் தட்டுப்பட்ட ஏதோவொரு இலையை பிய்த்துக் கசக்கி மணந்து பார்த்தாள். வாசனையில் கசப்பேறியிருந்தது. கைகளில் படிந்திருந்த பச்சையத்தை இன்னுமொரு மரத்தின் தண்டுப்பகுதியில் தேய்த்து விட்டபடி குரங்குகளைத் தேடினாள்.   

  

தனக்கு அதிர்ச்சி தருவதான இரண்டு செய்திகளை அந்தக் குரங்குகள் அவளிடம் கூறியிருந்தன. 


ஓன்று துங்ஹிந்த நீர் வீழ்ச்சியைப் பார்க்க வரும் மனிதர்களுடன் நீலியை விடவும் அழகான பெண்கள் வருகிறார்களாம்.


இரண்டு அக்காட்டு நடைவழிப்பாதையின் ஓரிடத்தில் முல்லை நிலத் தேவனெனும் ஒரு கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளதாம்.  குறிப்பாக அச்சிலை நீலம் படிந்த கருமை நிறத்துடன் அப்படியே நீலியை ஒத்ததாய் தோற்றம் தருகிறதாம்.   


இரண்டாவதாக குரங்கு சொன்ன அவ்விடயமானது நீலியின் நாளாந்த நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றுவதாயிருந்தது. குதூகலிப்பின்  அதிர்வுகள் பன்மடங்காகி அவளை பெரிதும் அவஸ்த்தைப்படுத்தத் தொடங்கியிருந்தன. 


மனித நடமாட்டமுள்ள  பகுதிகளுக்குள் செல்வதை விடுத்து அவர்கள் கடக்கும் பாதைவழிச் சென்று அழகுத்ததும்புமந்த நீர்வீழ்ச்சியைத்தானும் அருகிருந்து இரசிக்கத்துணியாத அவள் குரங்குகள் கூறியிருந்த இரண்டையுமே பார்த்து விடுவதென முடிவெடுத்தவளாகவே அவைகளைப் பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.  


குரங்குகள் கண்ணில் தென்படவில்லை. ஆனால் அவை இலைகளுடன் உரசியபடி மரங்களில் தாவிச் செல்லுமோசை மட்டும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 


நீண்ட தூரம் நடந்து விட்டதாய் தோன்றியதவளுக்கு. கைகள் கோர்த்துயர்த்தி உடல் நெளித்தாள். கழுத்தைச் சுழற்றி நெட்டி முறித்துக்கொண்டாள். ஆழ்ந்து சுவாசித்து மென் காற்றின் வசீகரத்தை அப்படியே உள்ளிழுத்தாள். 


வெகு நாட்களாய் வெளியேறாமலிருந்த அடர் காட்டுப்பகுதிக்குளிருந்து வெளியேறியதால் சிவந்த தன் விழிகளால் சுற்றிலும் பார்த்தவாறாய் ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாகவே எடுத்து வைத்தாள்.


அழுத்தமான அவளது காலடிகள் பட்டு ஆங்காங்கே சிறுதாவரங்கள் சிலிர்த்துக் கெண்டன. அவளுக்கு பரிச்சயமற்ற பகற்பொழதுப் பறவைகள் மறைந்துக் கொண்டன. தன் நிமிர்ந்த நேரான திமிர் நடைக்கு தடைகளாக எதிர்பட்ட சிலந்திவலைகளை கைகளால் விலத்தி வீசியெறிந்துவிட்டு நீலி நடந்துக் கொண்டிருந்தாள். 


தேவையேற்படும் போதிலெல்லாம் தன்னை ஒரு யட்சியாக மாற்றிக்கொள்ளும் நீலியால் அந்த மொத்த காட்டையும் ஆளக்கூடிய தோரணை இருப்பதாய் எண்ணிக்கொள்ள முடிந்தது. யட்சியாக உலவும் அவளின் கோரம் கண்டு அவ்வனத்தின் விலங்குகளை விடுத்து தாவரங்களும் கூட அஞ்சிக்கிடப்பதையும் அவ்வப்போது அவதானிக்க முடியுமாயிருந்தது. 


ஆனால் அந்தக் காட்டினை நேசிப்பதை போலவே அங்கிருந்த தாவரங்களையும் விலங்குளையும் கூட நீலி நேசிப்பவளாகவே இருந்தாள். 


காற்றுடன் மிதக்கும் சில ஆண் பிசாசுகள் எப்போதாவது அவளை நெருங்க நினைக்கும் பொழுதுகளில் மாத்திரம் நீலி மூர்க்கம் கொள்வாள். காட்டையே ஸ்தம்பிக்க செய்யுமளவில் சினம் கொப்பளிக்க நடனமாடவும் தொடங்குவாள். 


தன் கோர நடனத்தின் இசையென துங்ஹிந்த நீர்;வீச்சியின் இடையறாத ஓசையை செவிமடுத்து மணிக்கணக்கில் ஆடிக்கொண்டேயிருப்பாள். தன் நாட்டியத்தின் அங்கங்களாய் எதிர்பட்டதெல்லாம் சினந்தெறிக்க துவம்சம் செய்வாள். வெறித்தனமாய் கானம் இசைத்து தன்னை ஆசுவாசப்படுத்தவும் துணிவாள். எல்லாம் தாண்டிய நடனத்தின்  எல்லையென அதிமோகம் கொண்டவளாய் முழுக்காட்டையுமே புணர்ந்தும் கிடப்பாள். 


அவள் பிரமாண்டமானதொரு சக்தியாகவும்… தாமரை முகம் கொண்ட மூலாதார சாகினியாகவும்… அரக்கியாகவும்…  அவ்வப்போது அகோரியாகவும்… இனியில்லையெனுமாறான அழகியாயும் கூட… துங்ஹிந்த காட்டின்  மகாராணி தானெனும் அடங்கா போதையுடன் அவள்  நீலியாகவே அக்காட்டினை ஆக்கிரமித்திருந்தாள். அக்காடும் அவளை அரவணைத்துக் கொண்டிருந்தது. 


திடீரென ஒருநாள் தான் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தேவனை சந்திக்கப்போகிறோம் என்பது ஒரு கனவு போலவே இருந்தது. அது அவளது இயல்புகளை முற்றிலும் மாற்றம் காணச்செய்திருந்தது. 


நீலி தன் நடையை கொஞ்சம் மிருதுவாக்கினாள். தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு பேரெழிலை தனக்குள் ஏற்றிக் கொள்ள பிரயத்தனித்தாள்.  


வழிநெடுகிலும் கண்களுக்கு இதம் தந்த காட்டுப்பூக்களின் செந்நிற இதழ்கள் சொரிக்கும் விஞ்சிய அழகை காணுற்று அதன் சில மொட்டுக்களை தன் அடர்கூந்தலுக்குள் பரவலாக சூடிக்கொண்டாள். மயில்கள் சிந்திவிட்டுப்போயிருந்த வர்ண ஜொலிப்புடனான தோகைகளை சேகரித்து பிரகாசமானதொரு ஆடைநெய்தாள். ததும்பி வழிந்த அழகுடனான அவ்வாடையை கச்சிதமாக தன்மேனியில் பொருத்திய அக்கணத்தில்தான் தன் பிம்பத்தை ஒருமுறை காண வேண்டுமெனும் அவாவும் சேர்ந்தே அவளிடம் உச்சம் பெற்றது.


நடைபாதையை மாற்றி துங்கிந்த நீர்வீழ்ச்சியின் கிளையாறாய் சலனமற்று கிடக்கும் ஓர் அருவியனருகே நின்றுக்கொண்டாள். பகற்;பொழுதின் மினுமினுப்பு நீரின் மேற்பரப்பில் மிதக்கத்தொடங்கியிருந்தது. நிறைந்து கிடந்த கூழாங்கற்கள் சிறு அதிர்வும் கொள்ளாமல் அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்தன.  


தன் கால் விரல்களினால் ஒரு தொங்கல் நீரை அலம்பி நீர் மேற்பரப்பில் ஊடாடும் மெல்லிய அதிர்வையும் நீரினுள் சிறு முனகல் ஓசையினையும் ஏற்படுத்தி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். இதே இடத்தில் தன்தேவனுடன் தான் தழுவும் பிம்பத்தை நீர்மேற்பரப்பில் காணவேண்டுமென தோன்றியதவளுக்கு. 


மெல்லக்குனித்து தன் வதனத்தின் எழிலை உறுதி செய்துக்கொண்டாள். பரந்திருந்த கூந்தல் சரிந்து ஒருபக்கமாகத் தொங்கியது. கருவிழிகளின் படபடப்பு மீன்களென காட்சி தந்தன. மயிலிறகாலான அவ்வாடை பளபளத்து அவளை பேரெழிலுடன் மயக்கம் கொள்ளச்செய்தது. அவள் தன் நிமிர்வான உடலையும் இடையின் வளைவையும் கண்டு மகிழ்ந்துக் கொண்டாள். 


இருபிறவி காத்திருப்பின் பினனர்; தன் தேவனை அடையப்போவதாய் நினைத்து நீலி சிலிர்ப்புற்றாள். மீண்டும் அவ்வடர்வனத்தின் மென்காற்றை எதிர்கொண்டபடியே தேவனின் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.   


இப்போது ஒரு மானிடப்பெண்ணாக நீலியால் அவளை உணரமுடிகிறதெனும்போது வந்துக் குவிந்த முற்பிறவியின் கொடிய நினைவுகளை வீசியெறிய முடியாமல் தவித்தாள். 


ஒரு வணிகனும் அபலை பெண்ணொருத்தியும் பேசிக்கொண்ட வார்த்தைகள் காற்றினூடாக அவளைத்தொடர்ந்துப் பரவிக்கொண்டிருந்தன. 


‘நிஜமாகவே இதுதான் வழியா? பெரும் காட்டுப்பகுதியாக தெரிகிறதே?’


‘பயம் வேண்டாமடி. மாலையிட்ட கணவன் கூடவே இருக்கிறேனே உனக்கென்ன பயம்?’


‘நாங்கள் வழிமாறி போவதாய் தோன்றுகிறது. இவ்வழியில் மனிதர் வாழும் ஊரொன்று இருக்க சாத்தயமில்லை அத்தான்.’


‘சிறுதூரம் பொறுத்துக்கொள் இதோ அருவியோடும் ஓசையும் ஏதோ ஆரவாரங்களும் கூட கேட்கிறதே. நாம் அபூர்வமானதொரு திருவிழாவை காணவே அடுத்த கிராமத்திற்கு செல்கிறோம்’


மனமெங்கும் கௌவிய பயத்தை அவள் மறைத்துக்கொண்டாள். ஒருசிலநாட்களாய் பிற மாது ஒருத்தியின் மாய வலைக்குள் சிக்கியிருந்த தனது கணவனை மீட்டெடுத்த பெருமிதத்தில் அவனது கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள். 


நடைபாதை குறுகியது. விசாலமான வேர்கள் கால்களுக்குள் இடர்பட்டன. சில்லென குளிர்விக்;கும் அடர்த்தியான காற்று திடீரென உடலை அப்பிக்கொண்டது. பெரிய பெரிய மரங்களும்,  கருமையும், விசித்திர செடிகளின் பரிச்சயமேயற்ற மணமுமாய் அவ்விடம் காட்டின் நடுப்பகுதி போலவே இருந்தது. பெயர் தெரியா பறவைகளும் நடுங்க வைக்கும் அவற்றின் ஓசைகளும் பெருகின. 


‘அத்தான் எனக்கு பயமாக இருக்கிறது’ என்றாள். 


நிமிர்ந்து அவளை பார்க்கும் அதே நொடியில் தயாராக வைத்திருந்த கத்தியால் அவளது வயிற்றை பலமுறை கிழித்துப்போட்டான்.  


‘என் வாழ்க்கையில் குறுக்கிட தகுதியிள்ளாதவள் நீ…. மணந்த பாவத்திற்காக ஒரு மூலையில் கிடந்திருப்பாயானால் தொலையட்டும் என்று விட்டிருப்பேன். நீயோ என்னை சதா இம்சித்து உனக்குரியவனாக மட்டுமெனை வாழவைக்க முயற்சிக்கிறாயே. செத்து தொலையடி.’ 


கொஞ்சமும் எதிர்பாரா ஏமாற்றத்துடனான வலியிது. கதறியழவும் திராணியற்று உறைந்துப்போயிருந்தாள். கத்தி கிழித்த காயமோ, திடீரென அந்நியமாகிப்போன சூழலோ அன்றி அவனது பச்சையான துரோகம் கண்முன் நிழலாடியது. 


பெருகும் குருதி பாய்ச்சலை கைகளில் அமத்திப் பிடித்தபடி அவ்விடத்திலேயே சரிந்து விழுந்தாள். பழிவாங்கும் ஆதங்கம் அவளுக்குள் உதித்திருந்த அடுத்த நொடியிலேயே மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தாள். இருட்டிக்கொண்டுவரும் பார்வைக்குள் கடைசியாக அவனது வெற்றிச்சிரிப்பை கண்டபடியே வயிற்றுத்தசைப்பகுதிக்குள் குத்துப்பட்டு இறுகியிருந்த கத்தியை தீராத்துயருடன் உருவியிழுத்தபடி மெல்ல அடங்கினாள்.  


உயிர்நீத்த அவ்வலியின் துளியெச்சம் இன்னுமே ஒட்டியிருப்பதாயிருந்தது நீலிக்கு.  வயிற்றைப்பற்றிப்பிடித்து தடவிப்பார்த்தாள். நடுங்கியோய்ந்த உடலதிர்வை நிதானித்து உணர்ந்தாள். ஏக்கம் நிரம்பிய பூங்காற்றை சுவாசித்துக் கொண்டாள். 


தனது பிறவி இரகசியங்களை தேவன் அறிந்திருப்பானென்றே நீலிக்குத் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் தன்னால் தேவனை தரிசிக்க முடியுமெனும் உணர்வானது அவளை பலமடங்கு சக்தி கொண்டவளாக்கிக் கொண்டிருந்தது. உள்ளம் பூரிக்க தேவனது ஆலயத்தை நெருங்கினாள். ஆளுயர சிலையாய் தேவன் சாந்தமாய்  வீற்றிருப்பதை வெளியே நின்று கண்கொட்டாமல் பார்த்தாள். தான் தேவனின் பாதம் தொட அவர் அனுமதியாவிடின் திரும்பிப்போகலாம் எனும் நோக்கில் நடுக்கத்துடன் உள்ளே ஓரடி எடுத்து வைத்தாள்.


தானொரு யட்சியல்லவென்பதை நீலியுணர்ந்தாள். பாய்ந்தோடி தேவனின் பாதம் பற்றிக்கொண்டாள். பதைபதைப்பு மேலிட நிமிர்ந்து தேவனின் முகம் நோக்கினாள். “நீயே என் தேவன்… நீயே என் தேவன்… உனக்காகவே இருபிறவிகளெடுத்து காத்திருக்கிறேன்;. என்னை ஏற்றுக்கொள் தேவா…’


நீலி ஆனந்தத்தில் அழுதாள். 

‘தனக்கேற்ற துணையினை தெரிவு செய்யும் ஒரு ஜீவனாலதான் உண்மையான வாழ்வின் சுவையை அனுபவித்திட இயலும். வணிகன் தன்னை வலிந்து மணந்தான். பெண்ணொருத்தியின் அபார சக்தி கண்டு பயந்தான். அவளை அடிமையாக்க திட்டமிட்டு பிற மாதுக்களை நாடி கட்டிய மனைவியை  உள்ளத்தால் வதைத்தான். நம்பிக்கையிழக்க வைத்தான். ஆதிக்கம் மேலோங்கி ஒரு கட்;டத்தில் பரிதாபமாய் அவளைக் கொன்றான். 


பழிதீர்க்க வேண்டி நான் பேயாய் பிறப்பெடுத்திட காரணமானான்.   எனதிந்த கைகளாலேயே இறந்தும் போனான். போதா குறைக்கு அவனுக்கு கொடுத்த வாக்கிற்காக  எழுபது வேளாளர்கள் தீயில் விழுந்திறந்த அதிபாவத்தையும் என்னுடையதென்றாக்கினான். நான் வேறென்ன செய்ய முடியும்? பாவங்கள் கரைத்திட யட்சியாகவே அலைந்து திரியவா அல்லது என் தேவனே நான் உனக்கான தவத்தை தொடரவா? எத்தனை காலம் மழையிலும் வெயிலிலும் இக்காட்டில் தனித்திருந்து யாசித்தேன் இரங்கி என் கரம் பற்றிட மாட்டாயா?’ 


நீலி அழுதபடி கண்ணிரால் தன் தேவனுடன் உரையாடினாள். இடைக்கிடையே தேம்பியபடி அவரது உருவச்சிலையின் பரிபூரணத்தை உணர்ந்தாள். 


காற்று விசிறியடிக்கத் தொடங்கியது. காய்ந்த இலைச் சறுகுகள் அந்தரத்தில் மிதந்தன. ஊதாநிற பூக்களின் சுகந்தம் அவ்விடத்தை நிரப்பியது. அகண்ட அவ்வெளியில் பரவியிருந்த இருள் மெல்ல விலகி சுற்;றிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. இதுவரை கண்டிராத சிறு பறவைகள் தம் செந்நிற சிறகை விரித்தபடி  வானெங்கும் ஆர்பரித்தன. 


நினைவுக்கெட்டாத சம்பவங்களை காட்சியாக்கிப் பார்க்கத் தெரிந்த பாக்கியசாலியாக தன்னை மாற்றிக்கொண்டு அழிவற்றவைகளையும் சிலிர்ப்பூட்டக்; கூடியவைகளையும் தோற்றம் கொள்ளச் செய்ய நீலி முயற்சித்தாள். தேவனின் உரையாடலூடாக பரமரகசியத்தின் உச்சம் கண்டு மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவதற்கு அவளுக்கு முடியுமாயிருந்தது. 


‘எழுபது வேளாளர்ககள் தீயில் விழுந்து மடிய காரணமான பாவத்தை சுமப்பவள் நீ’ 


‘வணிகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிட அவ்வேளாளர் தம் உயிரை மாய்த்துக்கொண்டனரே தவிர்த்து நானெங்கனம் அதற்கு காரணமாகுவேன்? 

‘வணிகனை பழி தீர்க்க அலைந்த நீ அவனுக்கு உதவ முன்வந்த வேளாளர்கள் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். கூடவே தன்னலமற்று வணிகனுக்காக தம் உயிரை பணயம் வைத்து உன்னிடம் வணிகனை அனுப்பிய அவர்களுக்காக நீ இரங்கியிருக்க வேண்டும்.’


‘அதற்காகத்தானே தனித்திருந்து இக்காட்டில் சபிக்கப்பட்டவளாய் அலைக்கழிகிறேன். இனியுமா என்னை தண்டிக்க வேண்டும்?’ 


‘நீலி நான் ஒன்றை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்’

‘கேளுங்கள் தேவனே’


‘உனது கர்மாவின் பாவங்களை போக்க நீ தவமிருப்பதில் தவறில்லை. எதற்காக என்னை துணையாக அடைய நினைக்கிறாய்?’ 


‘சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சாதாரணமாகவே பெண்பிறப்பென்பது அளவற்ற சக்திகளையும் ஆற்றல்களையும் தம்மகத்தே கொண்ட பிறப்பென்பது நீங்கள் அறிந்ததுதானே. அதிலும் எனையொத்த ஒரு பெண் ஆடவனினொருவனின் அதிகாரத்திற்குள் அடங்க வேண்டுமென்பதற்காக வரிசையாக இழப்புக்களைக் காண நேரிட்டால்…? நாளாந்தம் அனுபவித்த சித்திரவதைகளுக்கு  தனது ஆற்றல்களை அடக்க வேண்டுமென்ற ஒரு ஆணின் எண்ணமே தலையாய காரணம் என்பது தெரிந்து விட்டால்…? அவள் தன்னிலும் சக்தி மிக்க ஒரு ஆடவனை துணையாய் கொண்டிருக்கலாம் என எண்ணுவது இயல்பு தானே?’ 


‘இது சூழ்நிலையினாலான முடிவு அல்லது ஆசை. ஆனால் என்னை ஏன் எப்போதுமாய்  உச்சரித்து வேண்டிக்கொண்டிருந்தாய்?’ 


‘தேவனே… ஒரு பெண் தனது வாழ்வில் துணையாக கொள்ளுமொருவர் பற்றிய கனவுகளை பல வருடகாலங்கள் தமக்குள் சுமக்கிறாள். அது பொய்யாய் போனதா இல்லை சரிதானாவென்பதை வாழ்க்கையின் பாதி தூரத்தை கடந்த பின்னரேயே உணர்கிறாள். உணர்ந்தென்ன பயன் அத்தருணம் அவள் வாழ்வின் பிடிக்குள் இறுக்கமாய் பின்னப்பட்ட சந்தர்ப்பமாய்…. வெளியேற முடியா  துடிப்புடனானதாய்த்தான் அனேகமாய் அமைந்து விட்டிருக்கிறது. என்ன…! அவள் அதனை வெளிக்காட்டத் துணிவதில்லை.’ 


இறைவனின் மௌனம் கண்டு நீலி தானே மீண்டும் தொடர்ந்தாள். 


‘உங்களுக்கு தெரியாதது இல்லை தேவனே. தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?  அப்படியான ஒரு துணையுடன் ஒருசில மணிநேரம் வாழ்ந்து மடிதல் கூட எல்லையற்ற இன்பமாகத்தானே அமையும்.  அண்டத்தை காக்கும் உங்களின் இந்த அருகாமை சிலபொழுதேயாயினும் என் தவத்தின் உச்சப்பயனே இதுதானென இதோ நான் பேருவகைக் கொண்டு பேசுகிறேனே இதனைப்போலவே.’ 


‘ஆக ஒரு பெண்ணுடன் வாழத்தலைப்படும் ஒவ்வொரு ஆணும் பெரும் ஆளுமையுடையவனாகத்தான் இருந்திட வேண்டும் என்கிறாயா?’


‘நிச்சயமாக இல்லை தேவனே.  தன்னை பற்றி அறிந்து கொண்டிருக்கிற ஒருவன் தனக்கு மிஞ்சிய துணையை வலிந்து சொந்தமாக்கிக் கொள்ளல் தவறு என்கிறேன். அவள் தன்னை மீறி செயற்படுவாளோ எனுமச்சத்தில் அவளை நாளாந்தம் வார்த்தைகளால் பலவீனப்படுத்துதலை தவறென்கிறேன்.’ 

‘நீலி இது ஒரு வகையில் அவரவர்களுக்கான கர்மாவின் பயனென்பது தானே உண்மை.’

‘உண்மையாக இருக்கலாம் தேவனே. ஆனால் பெண்களுக்கான ஆண்டவனின் பாரபட்சம் என்றுதான் நான் இதனைக் கொள்கிறேன். தனக்குரிய துணை தக்கதுதானா என ஒரு பெண் பரீட்சித்துக் கொள்ளும் மனநிலை பொதுவாக ஏற்றுக்கொள்ளபடின் பொருந்தா துணையுடன் வாழும் பெண்களின் எண்ணிக்கை குறைவடையும் என நான் கருதுவது தவறாகுமா தேவா?’


‘உனது கருத்துக்கள் சரியென்றே கொள்வோமே… இப்போது உனதான விருப்பம் தான் என்ன?’


‘தேவனே வேறென்ன வேண்டும்? இந்நொடியில் சர்வமும் மறந்து மனதிலுள்ள குறைகளெல்லாம் இதுதானென சொல்லி முடித்தேனே… துணையொன்று தனக்குத்தரும் அதிகூடிய பாதுகாப்புணர்;வை அனுபவித்தேனே… மேனி சிலிர்ப்புற்று உள்ளம் நடுநடுங்க உன் திருவுருவம் கண்டு பூரித்தேனே… இதுதானே தேவா நான் வேண்டியது. என்னை மீண்டும் ஒரு பிறவிகாணா வரம் தந்து காத்தருள வேண்டும் ஐயனே.’


நீலி நிலத்தில் விழுந்து வணங்கினாள்.


காற்று சுழன்றடித்தது. ஒரு இலவம் மரத்து  காய்கள் வெடிப்புற்று பஞ்சு மொத்தமும் துகள்களாகி பறக்கத்தொடங்கியிருந்தன. சிறிது தூரம் பறந்துச்சென்ற அவை ஒரு கட்டத்திற்குப்பின் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறிக்கொண்டன. தேவன் ஒரு அழகான வண்ணத்துபூச்சியை கைகளில் ஏந்திக் கொண்டார். அதனை மிருதுவாக ஸ்பரிசித்து மோட்சம் தந்தார்.


அந்த வண்ணத்துப்பூச்சி படபடத்து துள்ளியாடியது. தேவனைச் சுற்றிச் சுற்றி பறந்தது. அதியுச்சியில் ஒருதடவை பறந்து பின் சாடாரென தாழ்ந்தது. சிறுநேரம் நிலத்தில் வீழ்ந்து இறந்தாற் போலவே கிடந்தது. பின் மேலெழுந்து பறந்த வண்ணம்  மோகம் தீர துங்ஹிந்த காட்டின் வனப்பினை இரசித்தபடி காட்டை நீங்கி மேகக்கூட்டத்துள் உற்சாகமாக மறையத் தொடங்கியது.


மாறுகொடு பழையனூர் நீலிசெய்த

வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத்தாங்கள்

கூறியசொற் பிழையாது துணிந்துசெந்தீக்

குழியிலெழு பதுபேரு முழுகிக்கங்கை

யாறணிசெஞ் சடைத்திருவா லங்காட்டப்ப

ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின்கீழ்மெய்ப்

பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற்

பிறித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ

(சேக்கிழார் நாயனர் புராணம்)

Thursday, July 1, 2021

ஒரு சினேகிதனாய் ஜீவா ஐயா… (அனுபவப்பகிர்வு) - பிரமிளா பிரதீபன்

By On July 01, 2021

மிகப்பெரும் ஆளுமைகள் என வியக்கப்படும் ஒருசிலரால் மாத்திரமே தம்முள் மறைந்திருக்கும் சினேக உணர்வையும் குழந்தைத்தனத்தையும் வெகு இயல்பாக வெளிப்படுத்திடல் சாத்தியப்படுகிறது. சொல்லப்போனால் பிரமாண்டமான சக்தி கொண்ட ஒருவரின் முற்றிலும் வேறுபட்ட பக்கமொன்றாகவே இதனை எண்ணிக்கொள்ளவும் முடியும். 

எனது ஆரம்ப அனுபவம் கூட அத்தகையதொரு முரண்பாடான குழப்பத்துடனேயேதான் எனக்குள் பதிவாகியிருந்தது.  நான் ஜீவா ஐயாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாளை அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. நான் இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலமது. மிகச்சரியாக கணித்துச்சொன்னால் 25.06.2006. 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள். 

ஒரே கதையை பிரதியெடுத்து இருவேறு பத்திரிகைகளுக்கும் கூடவே மல்லிகை இதழுக்கும் தபாலிட்ட நம்பிக்கையில் ஜீவா ஐயாவை சந்திக்கவென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது அலுவலகத்தைத் தேடிக்  கண்டுப்பிடித்திருந்தேன். 

புத்தகங்கள் குவிந்த அறையொன்றிற்குள் கொஞ்சமாய் தெரிந்த இடைவெளியில் ஒரு சாய்கதிரையை போட்டு உறங்கினாற் போல சாய்ந்திருந்தார். என் வருகையை காலடி சப்தம் உணர்த்தியிருக்க வேண்டும். மெல்ல அசைந்தெழுந்து கூர்ந்து பார்த்தார். ‘யார் நீ..?’ என்பது போன்றதான அந்தப் பார்வையில் இன்னும் பல வினாக்களையும் வினவியதாய் தோன்றியது. உடனே நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.  

எனது பெயரைக்கேட்ட மறுநொடி அவரது முகம் மிகக்கடுமையாக மாற்றமடைந்தது. முதலில் என்னை அமரச்சொல்லி ஒரு கதிரையை காட்டினார். ‘இலக்கியத் துரோகி’ எனும் முதல் வார்த்தையை என்மீது வீசினார்.

நான் பதறி நிலைகுலைந்து தடுமாற்றத்துடன் அவரை எதிர்கொண்டேன். மொத்த வெறுப்பையும் தன் பார்வைக்குள் வைத்தபடி புத்தகமாக்கப்படாத ஒரு தொகை தாள்கட்டுகளை எடுத்து இருபத்துமூன்றாம் பக்கம் திருப்பினார். அங்கே ‘கண்ணாடிப்பிம்பம்’ எனும் எனது சிறுகதை பிரதியெடுக்கப்பட்டிருந்தது. 

எனது சிறுகதையை அச்சுத்தாளில் கண்ட பிறகான அப்போதைய என் மனநிலையை துல்லியமாக என்னால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவரது கோபத்திற்கான காரணம் கம்பீரமான தொனியுடன் என்னை சுழற்ற ஆரம்பித்தது.    

ஒரே கதையை இருவேறு இடங்களுக்கு அனுப்பியதை தன்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாதென்றும் தான் அதனை தெரிவு செய்து அம்மாதத்திற்கான புத்தக வடிவமைப்பையெல்லாம் செய்தான பின் அதே கதை அதே தலைப்புடன் அன்றைய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதாகவும் சொன்னார். தினக்குரல் பத்திரிகையை எடுத்துக் காட்டினார். இது தனது நம்பிக்கைக்கு செய்த துரோகமென்பதையும் தனது சிரமத்தையும் திரும்பத் திரும்ப கூறி ஆத்திரம் தீர திட்டினார். 

நான் ஸ்தம்பித்து நின்றிருந்தேன். ஏறக்குறைய அழுகையை அடக்கிக் கொண்டிருந்தேன். நம்பிக்கையிழந்து அவரை பார்த்தவளாய் அடிக்கடி எச்சில் விழுங்கிக் கொண்டேன். ஏதோ கதைக்கவும் முயற்சித்தேன். பின் ‘அப்படி அனுப்பக் கூடாதென்பது எனக்குத்தெரியாது’ என தயக்கத்துடன் கூறியபடி அடுத்த வார்த்தை பேச வராமல் தடுமாறினேன். 


சிறிது நேரம் இருவரும் பேசாமல் மௌனித்துக்கொண்டிருந்தோம். வெளிறிய என் முகம் அப்பட்டமாக எனது மனவுணர்வுகளை காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். 

சிறிது நேரத்திற்குப்பின்  ‘சரி போகட்டும் விடு. இனி அப்படி செய்யக்கூடாது’ என்றார். அவரது குரலில் கோபம் தணிந்திருந்தது. மீண்டும் அமரச்சொன்னார். தண்ணீர் போத்தலை எடுத்துத்தந்தார்.  

எனைப்பற்றிய எல்லாம் விசாரித்தறிந்தார். இடைக்கிடை ஒரு குழந்தைச்சிரிப்பை விசிறியபடி நிறைய பேசினார். சிறிது நேரத்திற்குள் இறுக்கம் தளர்ந்த வித்தியாசமான ஒரு சூழலை நாங்கள் உருவாக்கிக் கொண்டதாய் தோன்றியது.  எங்களது ஸ்னேகம் மெல்லமாய் அங்கே அத்திவாரமிட்டுக்கொள்ளவும் ஆரம்பித்திருந்தது. 

தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்தித்தேன். இலக்கியம், உலகம், அரசியல், நட்பு அனுபவம் இன்னபிறவென மனம்விட்டு பரஸ்பரம் தயக்கமேயின்றி பேசிக்கொண்டோம். இனிப்பு வாங்கி சாப்பிட்டோம். பகலுணவை பகிர்ந்து உண்டோம். மொத்தத்தில் ஜீவா ஐயா நம்பிக்கையானதொரு இலக்கிய நண்பனாக மாத்திரமே எனக்குள் பதிவாக தொடங்கியிருந்தார். 

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் இன்றுவரை நான் நினைத்து வியக்கும் ஒரு  அழகான காதல் கதையை என்னிடமவர் பகிர்ந்துக் கொள்ள தொடங்கினார். அதனை எனையொத்த இன்னும் பல நண்பர்களிடமும் அவர் பகிர்ந்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டுதான். ஆனால் என்னை மிகவும் பாதித்த சம்பவமாகவே அது அமைந்துவிட்டிருந்தது. 

அக்கதையை அவர் இரசித்து சொன்ன விதமும் தன் காதலை நிகழ்காலத்திற்குள் புகுத்திய முறையும் அத்தனை அற்புதமாக இருந்தது. 

‘நான் ஒருத்திய காதலிச்சனான்;’ என்றவாறு மிகச்சாதாரணமாகத்தான் அக்கதையை ஆரம்பித்தார். எனினும் கதைக்கூறலினூடே அவர் காட்டிய அந்த உணர்வுக்கொந்தளிப்புகளை அப்போது நான் உணர்ந்து கொண்டதாலேயே இன்றும் என்னால் அதனை நினைவுப்படுத்திட முடிவதாய் தோன்றுகிறது. அவர் காதல் எனும் சொல்லை உச்சரித்த போதில் ‘கா’ எனும் எழுத்திற்கு பின் மெல்லிய அதிர்வொலி காற்றுடன் ஊடுருவி… ஓரிரு மாத்திரைகள் தாமதித்தே ‘தல்’ எனும் எழுத்துக்கள் ஒட்டிக்கொண்டன. 

அத்தனை தீவிரமாய் அனுபவித்து அவர் கதை சொல்லிய அவ்விதமானது அதன் ஆழத்தையும் தீவிரத்தையும் எனக்கு உணர்த்தியிருந்தன. 

அவள் பெயர் லில்லி. தன் பக்கத்து வீட்டுப்பெண். தங்கள் வீடுளுக்கிடையில் ஒரு மதில். அம்மதிலைச் சூழவும் படர்ந்த அழகான மல்லிகைப்பந்தல். 

தாங்கள் அறிமுகமாகியது… பேசிக்கொண்டது… புரிந்துக்கொண்டது எல்லாமே அந்த மல்லிகை பந்தலுக்கு அடியிலான மதிலுக்கு இரு புறங்களிலேயே. 

ஒரு நாள் வழமைபோல அவர் லில்லி என அழைக்க பதிலாய் ‘தம்பி’ என ஒரு குரல் கேட்கிறது. அவளது தாய் அங்கே நிற்கிறாள். தனது நிலையினை புரிய வைத்து தன் மகளை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். இதனை லில்லியிடம் சொல்ல கூடாதெனவும் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

ஒரு பெண்ணைப்பெற்ற தாயின் பரிதவிப்பு இது.  ஒரு எழுத்தாளன். இலக்கியவாதி சக உயிர்களை மதிக்கத்தெரிந்த ஒரு மானிடன் வேறென்ன செய்துவிட முடியும்? அதையேதான் அவரும் செய்திருக்கிறார். அக்கதையை அதற்கு மேல் அவர் தொடர விரும்பவில்லை. ஆனால் என்னால் அவ்விடத்திலேயே அக்கதையை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. 

 ‘அப்போ இந்த மல்லிகைப்பந்தல் என்ற பெயர் அந்த ஞாபகமாகத்தானா?’ என்ற என் வினாவிற்கான பதிலாக பலமாக அவர் தந்த சிரிப்பில் என்னால் ஊகிப்புகள் எதனையும் செய்ய முடியவில்லை. எனினும் அம்மல்லலிகைப் பந்தலை ஜீவிக்க வைக்கவே தொடர்ச்சியாக உரமும் வாசனையும் தந்து மாதமொரு இதழை மலர்விப்பதாக எனக்கு நானே நம்பிக்கொண்டேன். மிகுந்த ஆச்சரியப்பட்டேன். 

பல்லாண்டுகாலமாய் நிறைவேறா ஒரு ஆசையை சுமந்தபடியே வாழ்தல் என்பதுவும் அதன் நினைவாக அந்த மல்லிகை பந்தலையே தனது அடையாளமாக்கிக்கொள்ளல் என்பதுவும் பேசிக்கடந்துப்போகும் ஒரு சாதாரண விடயமா என்ன? ஆனால் அவர் அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. தனது அனுபவங்களுள் ஒன்றென அதனை கருதியதை  போலவே காட்டிக்கொண்டார்.

ஜீவா ஐயா மலையக எழுத்தாளர்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அடுத்த மலையக தலைமுறையினரின் தேவை பற்றியும் அர்களிடத்தே காணப்படக்கூடியதான குறைபாடுகள் பற்றியும் இடையறாமல் பேசிக்கொண்டே இருப்பார். என் மீதான நம்பிக்கையை அதிகமாக கொண்டிருந்ததுடன் எனக்கான அடித்தளத்தை உறுதிபடுத்திட வேண்டுமென வழிநடத்தவும் தொடங்கினார். என் எழுத்துக்கள் மீதான நம்பிக்கையை எனக்குள் விதைக்க வேண்டுமென நிறையவே முயற்சித்தார். எனது சிறுகதை தொகுப்பொன்றை மல்லிகைப்பந்தலினூடாக வெளியிடுவதில் பெரும் பங்களிப்பை செய்திருந்தார். மலையகத்திற்கான ஒரு பெண் எழுத்தாளரின் தேவைப்பற்றி நான் உணர வேண்டுமென விரும்பினார். 

ஏராளமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி அவற்றிறையெல்லாம் வாசிக்கும்படி அள்ளித்தந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். அவருடன் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட அனுபவத்தை சுவைத்துச் சுவைத்து நினைவுப்படுத்துவார். அதனையொத்ததாய் ஐயா தெரிவு செய்து வைத்திருந்த இலக்கிய நண்பர்கள் சிலருடன்  KFC யில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட வேண்டுமென திட்டமிட்டார். அந்த திட்டமிடலில் எனது பங்களிப்பும் வெகுவாக இருந்தது. ஆனால் கடைசிவரை அந்த ஆசையை எங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமலேயே போனது.   

இப்படியே எங்களது நட்பு இலக்கியம் தொடர்பாகவும் சமயங்களில் இலக்கியம் தாண்டிய உள்ளன்புடனுமாய் விரிவடைந்தபடியே இருந்தது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  என் மூத்த இலக்கிய நண்பனை பார்க்கச்செல்வதில் எனக்கும் அலாதி விருப்பமிருந்தது. 

ஐயா ஓய்வுபெற எண்ணி மல்லிகை அலுவலகத்தை விட்டு வெளியேற ஆயத்தமாகிய கடைசி சில நாட்கள் துயர்மிகு நாட்களாக மாறின. அவரது மனநிலையை எனதாக்கி நான் துயருற்றேன். அதன் பிறகாய் எங்கள் சந்திப்பும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. கால ஓட்டத்துடன் ஓடத்தொடங்கிய நான் ஐயாவின் பிறந்ததினத்தன்று மாத்திரமே அவரை சந்திக்கச் செல்வதென்பதாய் சூழ்நிலை மாறத்தொடங்கியது. 

அப்படியான ஒரு பிறந்ததினத்திற்கு அவரை சந்திக்க மகனுடன் சென்றிருந்தேன். இன்னும் சில எழுத்தாளர்களும் அவரது வீட்டில் அமர்ந்திருந்தனர். ஐயாவின் தோற்றத்தில் பெரிய மாற்றம் தெரிந்தது. உள்ளம் குழைய அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன். 

‘நீ யார்’ என கேட்டபடி யோசிக்கத் தடுமாறினார். அவருக்கு என்னை கொஞ்சமும் நினைவில்லையென்பது அதிர்ச்சியாகவிருந்தது. பக்கத்திலிருந்த எழுத்தாளர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த நொடிகளை என்னால் ஏற்கவே முடியவில்லை. அழுகை பீறிட்டு வெடித்துவிடுமாப் போல் இருந்தது. என்னால் அதற்கு மேல் ஒரு நிமிடந்தானும் அங்கே நிற்க இயலவில்லை. ஞாபகத்திற்காக ஐயாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். 

அதுவே எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக அமைந்தது. 

டொமினிக் ஜீவா எனும் பெரும் ஆளுமைக்குள் ஒரு மெல்லிய பூவையொத்த சினேகிதன் மறைந்திருந்தமை பற்றி பெரிதாய் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதனை பகிர்ந்துக்கொள்ள விரும்பினேன்.  அந்த மிடுக்கு, கம்பீரம். திமிர், தூய்மையான நேசம் எல்லாம் கலந்த என் மூத்த நண்பனை நினைவுகளில் எப்போதுமாய் வைத்திருக்க எனையொத்தவர்களால் நிச்சயமாய் முடியுமெனவும் நம்புகிறேன். 

நன்றி. 

நெடுவாழ்வின் எழுதித்தீரா நினைவு: டொமினிக் ஜீவா