Enter your keyword

Sunday, October 5, 2025

தேவதையின் மச்சங்கள், கருநீலம் - கே. ஆர். மீரா - தமிழில் : மோ. செந்தில்குமார் | விமர்சனம் - பிரமிளா பிரதீபன்

தேவதையின் மச்சங்கள், கருநீலம் இரண்டும் இருவேறு புதினங்கள். இருவேறு பெண் மையப்பாத்திரங்கள். ஆனால் இரண்டின் மீதான வாசிப்பின் பின்னரும் ஒன்றில் வாசகர்கள் இரண்டையும் தொடுத்துச் சிந்தித்திருக்க வேண்டும் அல்லது ஸ்தம்பிதமடைந்து நீண்டநேரம் சிந்திக்காதிருந்திருக்க வேண்டும். வேறு வழியேயில்லை. 'கதையின் பாதை, பாறைமேல் பாம்பின் பாதைப் போன்றது. விரும்பிய பாதையில் ஊர்ந்து செல்லும். வழி தப்பினால் வாசகர்கள் வாள் எடுப்பார்கள். போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் உள்ளே புகுந்து விமர்சனம் செய்வார்கள்... தொடர்ந்து வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை' என்று கே.ஆர் மீரா ஒரு முன்னெச்சரிக்கையோடுதான் கதையை ஆரம்பித்திருக்கிறார். ஆகையால்தான் சொல்கிறேன். வேறு வழியேயில்லை. வாசிப்பின் பின்னர் ஒன்றில் வாசகர்கள் சிந்திக்க வேண்டும் அல்லது ஸ்தம்பிதமடைந்து நீண்டநேரம் சிந்திக்காதிருக்க வேண்டும்!

என்னவொரு அசாத்தியமான துணிச்சல்! பெண்ணொருத்தியின் அப்பட்டமான அகவெளிப்பாட்டை உச்சந்தலையில் ஆணியடித்து அதேகணத்தில் பிடித்திழுப்பது போல... அது எப்படியிருந்ததென வேறு வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு ஆழமாக இப்படியொரு படைப்பைத் தந்த அந்தப் பெண்ணுக்கு எனது ஆயிரம் முத்தங்களும் கூடவே அதனைச் சுவை குறையாமல் உணர்த்திய மொழிபெயர்ப்பாளர் மோ.செந்தில்குமார் அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளும். 

தேவதையின் மச்சங்களில் - ஏஞ்சலா. கருநீலத்தில் -கீதா.

இரு பெண்களதும் நேர்மையான ஒப்புவிப்பைச் சேர்த்துப் பார்க்கும் போது, இருவரையும் ஒரே நேர்கோட்டின் வழி காண்பதாகத்தான் தோன்றுகிறது. அதாவது பொதுவான நோக்கில் தேவதையின் மச்சங்களைப் பெருந்துயர் என்றும் கருநீலத்தைப் பெருங்காமம் என்றும் அடையாளப்படுத்துவதைப் போல. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அப்பெண்களின் அகத்தைத் தொட்டு நாம் பார்க்கவேண்டிய இன்னும் பல்லாயிரம் திசைகளை இச்சிறிய கதைகள் நமக்கு அடையாளம் காட்டித்தருகின்றன.

ஒளிக்காமல் தன்னை வெளிப்படுத்திய சுபாவமும் தீர்மானங்களை எடுக்குமந்த தற்துணிவும் அவர்களை ஒருமித்தவர்களாக முதலில் நினைக்க வைத்ததென்னவோ உண்மைதான். மாறாக இரு முரண்களாக அவர்களை எதிர்கொள்ளும்போதில் சமூகத்தின் கன்னத்தில் அறைந்து சொல்ல வேண்டிய எத்தனையோ செய்திகள் அங்கே மிஞ்சி நிற்கின்றன. அப்பெண்கள் இருவரையும் ஒப்பீடு செய்துதான் பார்க்கவேண்டுமென்று எந்தக் கட்டடாயமுமில்லை. ஆனால் அப்படிப் பார்க்கும்போதில் ஏற்படும் தெளிவு மிகமுக்கியமானதெனத் தோன்றுகிறது.

கீதா, தன் சுயத்தின்வழி இரகசியமாய் பயணிக்கும் ஒருத்தி. அவளின் தாபச்சுவாலைகளின் வெப்பம் வாசகரைப் பொசுக்கியெடுத்துத் தீரா புகைச்சலையும் அதிர்ச்சியையும் தரத்தக்கது. நடுங்கும் விரல்களால் அடுத்தபக்கத்தைப் புரட்ட வைக்கக்கூடியது.  நிஜத்தில் கீதாவை அல்லது உலகில் வாழும் ஆயிரம் கீதாக்களை அடையாளப்படுத்திய மீராவின் வெளிப்படுத்தல்களுக்காகத்தான் அத்தனை ஆச்சரியங்களுமே தவிர அவை கீதாவுக்கானவை அல்ல. கீதாக்கள் எங்குமானவர்கள். மீரா வெளிப்படுத்தியிருக்காவிட்டால் இவளும் மரணிக்கும் வரை தன் பெருந்தாபத்தைத் துளியும் கசியவிடாமல் தன்னோடு மண்ணுக்குள் மறைத்திருப்பாள். அல்லது கருநீலத்தின் கீதாவைப் போலவே, 'காதல் விசயத்திலும் இந்தத்துறவி விசயத்திலும் என்னிடத்தில் நேர்மை இல்லை. நான் வஞ்சிப்பேன். எல்லோரையும் வஞ்சிப்பேன். என் குழந்தைகளை, என் கணவனை, என் குடும்பத்தாரை, உங்களை, இந்த மொத்த உலகத்தையும் குரூரமாக வஞ்சிப்பேன்' என்று அத்தனைபேரையும் வஞ்சித்துக் காதலின்... காமத்தின்... தன் அடங்கா தாபத்தின் ஆணிவேரை அடையாளமேயின்றிப் புதைத்திருப்பாள்.

யாரறிவார்? எவருக்கும் தெரியாத ஆணிவேர்களுடனும் இன்னும் பலநூறு பக்க வேர்களுடனும்; பல்லாயிரம் கீதாக்கள் எங்களுக்குள்ளும் இருக்கக்கூடும். 

பெண் மனம் ஆழமானதென்றும் அவள் மனதறிய யாராலும் இயலாதென்றும் காலங்காலமாகக் கூறித்திரிகிறார்களே இதற்காகத்தானோ! கே.ஆர். மீரா அதனை உடைத்து நொருக்கியிருக்கிறார். ஆண்களின் அசையாத நம்பிக்கையைத் தன் கால்விரல்களால் நசித்து எழுத்தின் வழியில் நின்று அட்டகாசமாகச் சிரிக்கிறார். நாங்கள் அதிர்ந்துபோயிருக்கிறோம். அவ்வளவேதான். தவிர கருநீலத்தின் கீதாதான் இந்தப் பெருங்காமத்தின் பெரிய அடையாளமாக இருக்கமுடியாது.

பெண்ணின் காதல் வேறு, காமம் வேறு. வெறுமனே காதலை மட்டுமாய் பகிர்ந்தவர்களும் காமத்தை மட்டுமாய் பகிர்ந்தவர்களும் எங்கெங்குமாய் இருக்கக்கூடும். மாறாக ஒரு பெண்ணிடமிருந்து காதல் சொட்டும் தாபவெப்பத்தை உயிரதிரப் பெறல் என்பது பெருந்தவத்திற்கு சமனானது. அவ்வளவு எளிதில் வாய்க்கப் பெறாதது. அது 'கருநீலத்தில்' கீதா துறவிக்குத் தரத்துணிந்தது. அல்லது துறவியிடமிருந்து பெற நினைத்தது. நாவல்பழத்தின் சுவையையும் தொட்டாச்சிணுங்கியின் நெருடலையும் ஒருங்கே உணர்த்துவது. மானிட சராசரிகளுக்கு அப்பாற்பட்டது. 

கீதா அதனைத் தேடிப்பெறுகிறாள். மிக இரகசியமாக... போலவே ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் தன்னைத் தக்கவைத்தும் கொள்கிறாள். ஆனால் ஏஞ்சலா அப்படியல்ல. கீதாக்களை சமூகம் ஏற்றுக்கொள்வதைப்போல ஏஞ்சலாக்களை சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஏஞ்சலா: தன்மீதான சமூகத்தின் மொத்த அருவருப்பையும் சதா உணர்ந்தவள். ஆண்களின் சபலத்தை மிகத்துணிச்சலாகக் கையாளும் அசாத்திய திமிர் பிடித்தவள். மச்சங்கள் வேண்டுமென ஒருவனோடு கூடிக்களித்துக் கருவைச் சுமந்தவள்.  அக்குழந்தைக்காக அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ஆண்களின் திருட்டு ஆசைகளைத் தணிக்கத்துணிந்தவள்.   இறக்கும் வரை அவளாகவே வாழ்ந்து முடித்தவள்.

ஒரு சராசரிப் பெண்ணால் ஏஞ்சலாவைப்போல 'அலெக்சாண்டருக்கு மட்டும் இல்லையல்லவா குழந்தை கொடுக்குற தெம்பு' என்று மாற்றான் ஒருவனிடம் சொல்ல முடிவதில்லை.

'நாலு வருஷம் காதலிச்சு, ஓடிப்போயி, கலியாணம் கட்டிக்கிட்டவன் கஷ்டகாலம் வந்தப்ப நண்பனுக்குக் கூட்டிக்கொடுத்த பொம்பளை நான். என் முன்னாடி நடிக்காதிங்க' என்று தனக்கு வேலை தருபவனிடம் தன்னைத் தரும் சம்மதத்தைச் சிரித்துக்கொண்டே சொல்ல முடிவதில்லை. பின் ஏஞ்சலாவால் எப்படி முடிந்தது?

வெறுப்பின் உச்சக்கட்ட போதை அது. அவளுக்கானவனாய் வாழத் தகுதியற்ற ஒருவன் தன் தாழ்வுணர்ச்சியை மறைத்து அவளை விபச்சாரியாக்கிய கணவனையொத்த ஆண்கள் மீதான வெறுப்பு. உயர் மட்ட ஆண்களை இரகசியமாய் அவளது காலடியைத் தொடவைத்து எக்களிக்கும் வெறுப்பு. ஆண்களின் வறட்டுத்திமிர் தன்னையொத்தவளிடம் தோற்கும் தருணத்துக் களிப்பை அனுபவிக்கும் வெறுப்பு. 

அத்தகைய அவளுக்குள்தான் வற்றாத ஈரமும் தாயன்பாய், காதலாய் தகித்துத் தகித்து அவளை அர்த்தப்படுத்தியுமிருக்கிறது.

குழந்தைகளதும் தாயிழப்பின் பெருந்துயரையும் பேசுமிந்த நாவலில் ஏஞ்சலா என் கண்களுக்குத் தனித்துத் தெரிகிறாள். இறக்கும்போது இரத்தத்தைச் சுவைத்தவளாய் பயமற்றவளாய் குழந்தைகளுக்காக மட்டுமேயானவளாய். கீதாவைவிடவும் அப்பாவியானவளாய்...

கீதாக்களின் புத்தி சாதூர்யம் இந்த ஏஞ்சலாக்களிடம் இல்லாதிருக்கலாம் ஆனால் ஏஞ்சலாக்களின் வாழ்க்கைப் போராட்டம் கீதாக்களின் அகப்போராட்டத்தைவிட பலமடங்கு பெரியது.

முடிவாக ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிகிறது. மீராவின் எழுத்து வெறும் புனைவாய் இக்கதைகளைக் கடந்து போவதற்காக மட்டுமல்ல.

No comments:

Post a Comment