Enter your keyword

Tuesday, April 14, 2020

ஒரு அரசமரமும் சில வெளவால்களும் - பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020

“இன்னு கொஞ்ச நாள்ல வீட்டுக்குள்ளயும் வேர் வந்து வீடெல்லாம் வெடிக்கப்போகுது பாரு…” அம்மா பேசிக்கொண்டிருப்பது மரத்துடன்; என்பதையறியாமல் நான் பதில் பேசிக்கொண்டிருந்தேன். “அதுக்காக வேர் எங்கெல்லாம் போகுதுன்னு தேடி வெட்ட முடியுமா என்ன…?”

“பின்ன என்னடி, அரச மரமாச்சே வெட்ட கூடாதுன்னு பாதுகாத்துவச்சா முழுசா அபகரிச்சிடும் போலிருக்கே…!”

என்னதான் அடிக்கடி இப்படி திட்டினாலும் இந்த அரசமரத்தின் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்தப்படியேதான் இருந்தது.

பெருத்த தன் உடலுடன் கிளைகளையும் இலைகளையும் இயலுமானவரைக்கும் விஸ்தரித்துக் கொண்டு என் வீட்டு பின்வாசலுக்கு நேராக சற்றே எட்டி நின்றதந்த மரம்.

இளைப்பாற வந்தமரும் பெயர்த்தெரியா பட்சிகள் பகற்பொழுதுகளிலும், எண்ணிக்கொள்ளவியலா வெளவால்கள் இராப் பொழுதுகளிலும் மரத்தை தன்வசப்படுத்திக் கொண்டன. போதாகுறைக்கு

மரத்தின் ஆளுயர தண்டுப்பகுதியில் தென்பட்ட இருளக் வ்;விய சிறு பொந்தொன்றுக்குள் காவிநிறம்

படிந்த உடும்பொன்றும் தன்னை பதுக்கி பாதுகாத்துக்கொண்டிருந்தது.

மரத்தினடியை கடந்து செல்வோர் மாத்திரமின்றி தூரத்தேயிருந்து மரத்தின் குளிர்ச்சியை அவதானிப்போர் வரை எல்லோராலும் மரம் பற்றியதான ஏதோ ஒரு கருத்து அன்றாடம் பரப்பப்பட்டுக்கொண்டேயிருந்தது.

பௌத்த மக்கள் நிரம்பிய என் வீட்டு சூழலில் அந்த அரசமரத்திற்கென்று தனித்ததொரு மரியாதை கிடைத்ததெனினும், அம்மரத்தினடியில் கௌதமபுத்தரின் சிலையொன்று வைக்கப்படாமைக்கு காரணம் எதுவாக இருக்கமுடியுமென்று தெரிந்துக்கொள்ள நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை. என்றாலும், நாங்கள் பிற மதத்தவர்களாய் இருப்பதாலும், எங்கள் வீட்டு வாசலில் அம்மரம் நிற்பதுவும் அதற்கு காரணங்களாக இருக்கக்கூடுமென என்னால் ஊகிக்க முடிந்தது.

என்னதான் நாங்கள் வேறானவர்களாய் இருந்திட்ட பொழுதிலும் அம்மரத்தின் புனிதமும் வரலாற்றுச்சிறப்புகளும் எங்கள் உணர்வுகளிற்குள்ளும் பரவியேதான் இருந்தன.

கூடவே எங்கள் மூத்த பரம்பரையினரது அரசமரத்துடனான தொடர்புகள் பற்றிய அம்மாவின் நினைவு மீட்டல்களையும் தவிர்க்க இயலாமலிருந்தது.

அம்மாவிற்கும் அரச மரத்திற்குமிடையிலான உறவு விசித்திரமானது. மரத்தின்மீது எவரையும் ஏற விடவோ ஒரு கிளையைத்தானும் முறிக்கவோ மறுக்கும் அவள், காலைப்பொழுதுகளில் வாசலை சுத்தம் செய்கையில் மாத்திரம் இடையறாது திட்டிக்கொண்டேயிருப்பாள்.

அவளது வசவுகள் அம்மரத்தின் பருத்த தண்டிலேயே பட்டு மீண்டு வந்து எங்கள் காதுகளுக்குள்ளும் விழும்.

“தூருல நோண்டி பெருங்காயத்த வச்சாலும் பரவால்ல…” “எழவெடுத்த மரம் உசுர வாங்குது…”

தொலஞ்சுபோன வெளவாலுக்கெல்லாம் வேற எடமே இல்லயா…” “கருமம்.. கருமம்…. செத்து தொலையுதுகளா பாரு…!”

இரவுப்பொழுதில் மரத்தை முழுதாய் ஆட்சி செய்யும் வெளவால்களுடன் அம்மா படும் துயரம் அவளை என்னவெல்லாமோ பேச வைத்தது.

தினமொரு விதமான எச்சங்கள். சில பொழுதுகளில் வாசலெங்கும் பச்சையிலைகளை மென்று துப்பினாற் போல சக்கை சக்கையாய் சிதறிக்கிடக்கும். சில நாட்களில் அடர்பச்சை நிற அல்லது

 கபிலநிறம் கலந்த எச்சங்கள். வேறு சில பொழுதுகளில் மரத்தின் காய்ந்த கிளைகள் ஒருமித்து விழுந்து வாசலெங்கும் நிரம்பி வழியும்.

இவற்றை தாண்டிய அடுத்தக்கட்டமாய் மரத்தில் பழங்கள் பழுக்கும் இடைவெளியை கடப்பதுதான் அறவும் முடியாத காலமாகிப்போகும். பழவிதைகள் எச்சங்களாகி பசைத்தன்மையுடன் ஆங்காங்கு குவியலாய்… ஒரு விதமான துர்மணத்துடன்… சுத்தப்படுத்தி முடிப்பதற்குள் கைகள் இரண்டும் நோவெடுத்து குமட்டிக்கொண்டு வருவதாய் அம்மா நொந்துக்கொள்வாள்.

 எப்படியோ, இந்த வெளவால்கள் மீதான அத்தனை கோபமும் மரதத்தின் மீதான கோபமாக மாறத்தொடங்கியிருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அரசமரத்து நிழலில் பிள்ளையார் விரும்பி உறைவார் என்ற நம்பிக்கையையும், அதன் கிளைகளுக்கிடையே தெரியும் வெளிகளுக்கூடான மாலைநேர மஞ்சள் வெயிலை தினமும் ரசிப்பதையும் அம்மா நிறுத்திக்கொள்ளவில்லை.

எனக்கென்றால் அரச மரத்தைவிட அதன் இலைகள் மீதான விருப்பமே அதிகமாக இருக்கிறது.

இவ்விலைகளுக்கு ஒப்பானதொரு அழகான இலை இதுதானென, வேறொரு இலையை காட்டி நிரூபித்துவிட அதிகளவு பிரயத்தனப்பட வேண்டியிருக்குமென்றே தோன்றுகிறது.

தடித்துப் புடைக்காத மென்மையான நரம்புகளைக்கொண்டு இலையின் நுனிப்பகுதியில் சற்றே நீண்டு வளைந்த மெல்லிய வால் போன்றதொரு இணைப்புடன், இதய வடிவினதான சமச்சீர் அச்சுடன், ஒற்றை விரலால் மெதுவாய் அவ்விலையை தடவிப்பார்க்கும் போதுதான் புரிகின்றது அரசிலைகள் பெண்தன்மையினதென்று…

இத்தகையதொரு மிருதுத்தன்மையும், தோற்றத்தின் பளபளப்பும் நிச்சயமாய் ஆண்தன்மையுடனான தாவரங்களுக்கு அரசிலைகளின் பாலொரு ஈர்ப்பை உருவாக்குமென்று…

பல்லாயிரம் இலைகள் மரக்கிளைகளுடன் பிண்ணிப்பிணைந்து கிடந்தாலும், உற்று அவதானித்தால் அவ்விலைகள் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று ஒட்டாமலும், தவறுதலாக ஓரிரண்டு இலைகள் பிரிதொன்றுடன் மோதுண்ட போதும் அவை தனித்து நின்று தனக்கெனவொரு தனித்துவம் பேணியே தம்மை அசைத்துக்கொள்வதையும் காண்கையில் அளவற்றதொரு ஆச்சர்யம் பெருகிக்கொண்டேப் போகிறது.

தேசியக்கொடியில் கம்பீரமாக நிற்கும் சிங்கத்தின் நான்கு புறத்தேயும் நான்கு அரசிலைகள் உள்ளன. அதற்கு காருண்யம், இரக்கம், திருப்தி, பற்றின்மை என்பவைகளே பொருளாக கொள்ளப்படுகிறதென தெரிந்தபின், ஒருபடி அதிகமாய் அதிசயிக்கிறேன்.

ஓரிலையை கையில் எடுத்து பார்த்துக்கொண்டேயிருக்க, ஆதிகால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருப்பதையொத்த எழுத்து வடிவம் இலை முழுவதுமாய் விரவியிருக்கிறது. அவை ஏதோ ஒன்றை புரிய வைக்க முயற்சிக்கும் நவீன ஓவியமாகவும் தோற்றமளிக்கிறது.

அவை எழுத்துக்களாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஒவ்வொரு இலையும் துளியளவேனும் அறக்கருத்துக்களை போதிக்கவே உருவாக்கப்பட்டிருக்கும். அப்படியெனின் எத்தனை ஆயிரம்

இலைகள…; ? எத்தனை விதமான அறச்சிந்தனைகள்…?

மரத்தில் வந்தமரும் பகற்பொழுது பட்சிகளால், அதனை இனங்கண்டிருக்க முடியுமாயிருக்க வேண்டும். பிறரை துன்பிக்காத பக்குவம் அவைகளுக்கு உண்டெனில் அவை இந்த அரசிலைகள்

கூறும் அறநெறிகளை கடைப்பிடிக்கும் ஒரு வர்க்கத்தினராகின்றன. ஆனால் இந்த வெளவால்கள் !

தமக்கு பார்வைத்தெரியும் மொத்த நேரத்திலும் முழுதாய் மரத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன.

இரவு முழுவதும் அவற்றின் ஓலங்களும் கொண்டாட்டங்களுமாய், மரத்தின் மீதான பற்று துளியளவும் இன்றி, இந்த மரம் தாம் சார்ந்ததென்றும் தமக்கு மட்டுமே உரியதென்றும் ஒரு மாயையை உருவாக்கி மிதப்பில் திரிகின்றன.

தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து

இந்த வெளவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து ஒதுக்கக்கூடும்.

 தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயென கொண்டாடும் வெளவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போகக்கூடும்.

மரத்தை அத்தனையளவு நேசித்த அம்மாவே, சதா இந்த வெளவால்களினது எச்சம் அள்ளி துவண்டவளாய் ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிறாள். மரத்தை வெட்டிவிடுவதென முடிவெடுக்கிறாள்.

“எத்தன தடவ சொல்லிட்டேன்…? இந்த மரத்த வெட்டி தொலைங்ளே…” என்று யார்யாரிடமோ சண்டையிடுகிறாள்.

இந்த அரசமரத்தின் தொடர்பற்று தள்ளி வாழவேண்டும். தம்மையும் தம் பிள்ளைகளையும் பாதுகாக்க வெண்டுமென்பதை தனது கொள்கையாக்கிக் கொள்கின்றாள்.

மரத்தை வெட்ட அனுமதியில்லையென்றும். அரசிடம் அனுமதி எடுக்க வேண்டுமென்றும் தெரியவருகின்றது.

அப்படியே போராடி அனுமதி எடுத்தாலும், அம்மரத்தில் ஏறி வெட்டும் துணிவு எவருக்கும் வர முடியாத அளவிற்கு அரசமரத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவது தெளிவாகின்றது.

வீட்டை சூழவும் ஆழ ஊடுருவி பரந்து வேர்விட்ட அரசமரத்தின் பகுதிகளை என்னவென்று எளிதில் அகற்றிவிட இயலும்…? அல்லது மொத்த வெளவால்களையும் ஒரேயடியாய் அழித்து இல்லாமல்

ஆக்குதல் எங்கனம் சாத்தியமாகக்கூடும…; ? அம்மாவிற்கு அது புரியவில்லை.

தொடர்ச்சியான இடைஞ்சல்கள் சலிப்பையே மிதமாக்கின.

காலப்போக்கில் வெளவால்களை விடுத்ததொரு அரசமரம் பற்றியதான எண்ணமே இல்லாமல் போகத் தொடங்கியது. மரத்தின் மீதான இரசணை உணர்வும் மொத்தமாய் மங்கிப் போயிருந்தது.

வழமைப்போல நான் மரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதே தனித்துவத்துடன் அந்தரத்தில் தொங்குவதையொத்து இலைகள் மினுங்கி அசைகின்றன. மெலிதான ஒரு சலசலப்பு காற்றோடு சேர்ந்து பரவுகிறது.

மரப்பொந்துக்குள்; பதுங்கியிருந்த காவிநிறத்தையொத்த அந்த உடும்பு அக்கம் பக்கம் பார்த்தபடி மெதுவாய் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

-----0-----

நட்ட மரம் | பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020

எப்போதும் இல்லையென்றாலும் எப்போதாவது தன் வலக்கையின் நான்கு விரல்கள் கொண்டு மெதுவாய் ஸ்பரிசித்து தலையை வருடி விடுவான். அப்படியே சுவர்க்கத்திற்குள் நுழைந்தாற் போல் உடலெங்கும் மின்சாரம் பரவி அரைமயக்க நிலையில் கண்கள் சொக்கும். 

ஓரிரு நிமிடங்கள்தான். சடாரென வருடலின் வேகம் தணிந்து விரல்கள் சிறிதுசிறிதாய் செயலற்றவைகளாகி ஓய்ந்து போய் தலையில் சரிந்து கிடக்க அவன் தூங்கி போயிருப்பான். 

சுகபோதையாய் திரண்டு தழுவிய தூக்கத்தின் அரைகுறை ஆரம்பம் எட்ட ஓடிப்போகும். மீண்டும் அந்த வருடலுக்காய் ஏங்கி அவன் கைகள் பிடித்து அசைத்துப்பார்ப்பாள். மெல்லமாய் உலுக்கிப்பார்ப்பாள். அவன் முழுவதுமாய் தூங்கி முடித்திருப்பான்.

************* 

முன் வாசலில் செழிப்பமாய் வளர்ந்திருந்த கறிவேப்பிலை செடியை வேருடன் அப்படியே பிடுங்கியெடுத்திருந்தாள் பாட்டி.

'நல்ல நாளும் அதுவுமா முன்னுக்கே கறுவப்பிள்ள செடி ஆகாது'

படபடத்தபடி ஆணிவேருடன் ஒட்டியிருந்த சிறிதளவு மண்ணை கீழே சிந்தி விடாமல் கைகளால் அமத்தி பிடித்துக்கொண்டபடி வீட்டின் தெற்கு மூலையில் வெட்டி வைத்திருந்த குழிக்குள் அந்த கன்றை அப்படியே பொருத்தினாள். புதிய மண் சிறிதளவையும் வாரி குழியை நிரப்பி தட்டித்தட்டி இறுக்கினாள். இறுதியாய் 'உசுறுத்தண்ணி' என்று கூறியபடியே ஒருகைப்பிடி நீரை சூழவும் தெளித்து. கண்மூடி கும்பிட்டுக்கொண்டாள். 

'கன்னுக்கு மண்ணு புடிக்கனும் பொண்ணுக்கு மனசு புடிக்கனும்' 

முணுமுணுத்த படியே கற்கள் சிலதை பொறுக்கி அணையாக வைத்தாள். 

குறித்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெரும் ஆரவாரத்துடன் கூட்டமாக வந்து சேர்ந்திருந்தனர். 

முதன் முதலாய் அவனுடன் தனித்து பேசிய அன்றைய சந்தர்ப்பமொன்றில், நீண்ட நேர தயக்கத்திற்கு பின் ஒரு கட்டளையுடனேயே அவனை மணக்க சம்மதித்திருந்தாள். அவனும் அக்கட்டளைக்கு இணங்கியிருந்தான். ஆனால் அவனுக்கு ஒரே சிரிப்பு. கொஞ்சமும் எதிர்பாரா விண்ணப்பமது. 

'நான் தூங்கும் வரை தலைவருடிவிட முடியுமா...?' என்றாள்.

'என்ன?'

அவனுக்கு சரியாக புரியவில்லை.

'தூங்கும் வரை தலை வருடிவிட முடியும்னா எனக்கு சம்மதம்' 

'என்ன இது?' என்றான்.

'அப்டி பழகிட்டேன். பாட்டி அம்மா சமயத்துல அப்பா கூட... இப்டி யாராவது தலை வருடினாதான் தூக்கம் வருது'

அவன் கண்ணடித்தபடி சிரித்தான். அவளும். வீட்டில் எல்லோருமாய் சந்தோசமாய் பேசி சிரித்துக் கொண்டார்கள். 

வீடெங்கும் அவளது புகைப்படங்கள் வயது வித்தியாசங்களுடன் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன. 

***********************

கொடுத்த வாக்கை மீறவில்லையவன். சில சந்தர்ப்பங்களில் சிரித்துக்கொண்டே சொல்லியும் காட்டுவான். 

'தூங்குற வரைக்கும் தலை வருடுறேன்னு தானே சொன்னேன். நான் தூங்குற வரைக்கும்'

பழக்கமற்ற முடியாததொன்றை செய்ய அவனுக்கும் இயலவில்லை. அவளுக்கும் இயலவில்லை. 

மாற்றங்களால் தானே வாழ்வு நகர்கின்றது! 

தலை வருடலில்லா தூங்கும் முறைகளை பல வழிகளில் தேடினாள். இலக்கங்கள் எண்ணுதல், டீவி பார்த்தல், கண்மூடி அசையாமல் கிடத்தல், ஆழ்ந்து யோசித்தல், தலை மாற்றிப் படுத்தல்... 

தினமொரு புதுமுறையில் எப்படியோ தூங்கிக்கொண்டாள். இதுதான் முறையென்று எதுவொன்றிற்கும் பழகி அடிமையாதல் பெருந்தவறு தானோ !

முழுவதுமாய் விளக்குகள் அணைத்து கடும் இருளின் துணைக்கொண்டு தூங்கிப்போதல் ஒரு வகையில் எளிதாகவிருந்தது. ஆனாலும் நேரம் செல்ல செல்ல இருள் சற்றே பரிச்சயமாகி காட்சிகள் புலப்பட்டு அந்த கருமைக்குள்ளும் விசித்திரமான உலகொன்று விரியத் தொடங்கும். 

எதுவித இடர்களுமற்று விடியும் வரை நித்திரை கொள்ளுதலும் ஒரு வகையான வரம்தான். விடிந்ததும் தாய்வீட்டிற்கு போகும் பதைபதைப்பு தூக்கத்தை அண்மிக்க முடியாமல் தடுத்தது. சில மாதங்களுக்கு பிறகான பிரயாணம் இது.

************************

பலத்த வரவேற்பும், விருந்தும், நிறைவான மகிழ்வும். இதுவென்று சொல்லவியலா வெறுமையொன்று வீடெங்கும் வியாபித்திருந்தது. 

தெற்கு மூலையில் வளர்ந்து நின்ற கறிவேப்பிலைச்செடி சற்றே உயரம் கூடியும், புதிய பல கிளைத்தோன்றல்களுடனுமாய் தளதளத்த புதியதொரு செழிப்பத்துடன் இருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.

'பட்டு போயிரும்னு பயந்துட்டே புடுங்கி வேற எடத்துல நாட்டினேன். பாத்தியாடி... கிடுகிடுன்னு வளந்து செழிப்பமா நிக்கிறத...! ' 

பாட்டி வாஞ்சையுடன் இலைகளை வருடிக்கொடுத்தாள். 
குறிப்பு : இச்சிறுகதை 22.08.2018 திகதி யாழில் இருந்து வெளிவரும் எதிரொலி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. சிகரத்தில் சிறுகதையை வெளியிட அனுமதி தந்த எழுத்தாளருக்கும் சிறுகதையை வெளியிட்ட பத்திரிகைக்கும் நன்றிகள்.  

மாட்டியா - பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020



'ச்சீய்.. போ நாயே' என்று ஒரு நாயை கடுமையாக திட்டி விரட்டிக்கொண்டிருந்தான் மாட்டியா. அவன் கையில் வைத்திருந்த ரொட்டித்துண்டை அவனறியாமலேயே அந்த நாய் கௌவியிருந்தது.
தான் பசிகொண்ட அளவிற்கு ஒரு ரொட்டி போதாதென்றெண்ணி வெகு பிரயத்தனப்பட்டு அந்த ரொட்டியை இரண்டு சரிவட்ட பகுதிகளாக பிரித்து இரு ரொட்டிகளாக்கியிருந்தான்.

அந்த ரொட்டியின் மத்தியில் ஓரிரு இடங்களில் கருகிப்போயிருந்தமையால், எத்தனை பக்குவமாக ரொட்டியை பிரித்தும் கூட ஒரு வட்டத்தில்  சில துளைகள் ஆங்காங்கே தென்பட்டன. அவன் ரொட்டியின் ஒரு பக்கம் முழுவதுமாக மாசிச்சம்பலை பரப்பிப்பூசி அதனை அப்படியே சுருளாக்கி கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பசியாறிக்கொண்டிருந்தான். நன்கு நேரமெடுத்து நேக மென்று விழுங்கினான்.

பிரித்தெடுத்த இரண்டாவது ரொட்டியின் அரைவாசிப்பங்குதான் நாயிடம் பறிபோயிருந்தது. மாட்டியா மீண்டுமொருமுறை கோபமாக திட்டினான்.

'சனியனே... எங்கிட்டயா புடுங்கி திங்கனும்...?'

ஒரு கல்லை எடுத்து நாயின் முதுகை குறிபார்த்து அடித்தான். சாமர்த்தியமாய் நாய் விலகிக்கொண்டதால்  அந்தக்கல் வாலுடன் உரசியபடி தூரமாய் சென்று விழுந்தது.

மாட்டியா தன்னை அடிப்பானென்று அந்த நாய் சிறிதும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவனை அந்த நாய் முறைக்கவும் இல்லை. பலவந்தமாக பறித்துக்கொண்ட ரொட்டியை அவசரமாய் மென்று விழுங்கியது. இன்னும் சிறிது தூரம் சென்று ஒரு காலை பக்கவாட்டில் தூக்கியபடி மூத்திரம் பெய்தபடியே மாட்டியாவை பார்த்துக் கொண்டிருந்தது.

அவன் மேலதிகமாக நாலைந்து கெட்டவார்த்தைகளை சேர்த்து  தனக்குத்தானே  முணுமுணுத்தபடி நாயை பார்த்துக்கொண்டிருந்தான்.
மாட்டியா ஒல்லியாய் கறுப்பாய் இருப்பான். அவனிடம் முழங்கால் அளவிற்கு அணியத்தக்க இரண்டு கால்சட்டைகள் இருந்தன. அவற்றையே மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு திரியும் போது அவனது கால்கள் இரண்டும் குச்சி குச்சியாக நீண்டு சற்றே வளைந்தாற் போல தோற்றமளிக்கும். நடக்கும் போதும் ஒரு பக்கம் சரிந்தவனாய் ஒருகாலை இழுத்துப் பதித்து நடப்பான்.
தனக்கு முப்பத்தியாறு வயது பூர்த்தியாகிய போதும் இன்னுமே தன்னால் ஒரு பெண்ணைத் தேடிக்கொள்ள முடியாதிருந்ததால் அவன் மனதளவில் மிகவும் சோர்ந்தவனாய் தனியே நாட்களை கடத்திக்கொண்டிருந்தான்.

அவனுக்கிருந்த ஒரேயொரு துணை நாய் மட்டுமேதான். அதுவும் அடுத்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானதாய் இருந்தது. அந்த வீட்டுக்காரனென்றால் நாய்க்கு சோறு வைப்பதுமில்லை சொந்தங்கொண்டாட வருவதுமில்லை.
சில நாட்களுக்கு முன்பு வரை  நாயின் மீதான அதீத வெறுப்பும் கொஞ்சம் பொறாமையும் கலந்த உணர்வொன்றே மாட்டியாவிடம் இருந்தது. அந்த ஒரு நாயினூடாக மொத்த நாய் வர்க்கத்தின் மீதே தன் பொறாமையை படரவிட்டபடியிருந்தான்.

பெரும்பாலும் நாய்களின் வாழ்வுமுறை மனித வாழ்வை ஒத்திருக்கக்கூடியது. ஆனால் அவை எதுவித பொறுப்புமற்று முழுச்சுதந்திரமாக திரிந்தன. நாய்கள் தாமாக குளிப்பதில்லை. நகம் வெட்டிக்கொள்வதில்லை. காலையில் எழுந்ததும் கண்ணோரத்தில் தேங்கி நிற்கும் கண்பூளை பற்றிய கவலை துளியளவும் இல்லை. எந்த நாயுமே சமைத்து உண்பதில்லை. அப்படியே சமைத்த உணவு கிடைத்தாலும் அவற்றை பங்கிட வேண்டிய கட்டாயம் அறவும் இல்லை. விரும்பினால் குரைக்கலாம். கோபம் வந்தால் கடிக்கலாம். ஒரு உள்ளாடையைத்தானும் உடுத்தி தன் மானத்தை காக்க அவைகளுக்கு தோன்றுவதேயில்லை. நினைத்த இடத்தில் சொறிந்துக்கொண்டும் உதறிக்கொண்டும் சத்தமிட அவைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் முடிகிறது.

மாட்டியா ஆரம்பத்தில் பொறாமைப்பட்டாலும் நாளடைவில் அந்த நாய் அனுபவிக்கும் சுதந்திர அனுபவத்தை தானே அடைவதாக எண்ணி அகமகிழ்ந்துக் கொண்டான். அடிக்கடி நாயை அவதானிக்கவும் பழகியிருந்தான். அந்த நாய்க்கு மஞ்சு என்றொரு பெயரையும் வைத்து கூப்பிட்டான்.

மஞ்சுவை அவன் அதிகமாக நேசிக்கத்தொடங்கியது அது பெண் நாய்களுடன் புணர்தலை கண்ட பின்புதான். மஞ்சு தனது துணை இதுவென முடிவெடுக்க எத்தகையதொரு அவகாசத்தையும் எடுத்துக் கொள்ளவில்லையென்பதுடன் தன் துணைக்கும் அத்தகையதொரு அவகாசத்தை அது தரவில்லை. கூடவேண்டும் என்றெண்ணிய மறுகணம் பெண்துணையை சம்மதிக்க வைக்கும் மன்மதக்கலை மஞ்சுவிற்கு அத்துபடியாயிருந்தது. இதுவரை மஞ்சுவுடன் புணர்ந்த எந்த நாயுமே மஞ்சுவை மறுக்கவில்லையென்பதையும் மாட்டியா அவதானித்து வைத்திருந்தான்.

மஞ்சு புணர்தலில் ஈடுபடும் போதெல்லாம் மாட்டியா மஞ்சுவாக தன்னை உருவகித்துக் கொண்டு, அது பெறும் கூடலின்பத்தை தானும் பெற முயற்சிப்பான். அப்போதெல்லாம் சட்டென தோன்றி மறையும் மின்னலென சுசீலாவின் நினைவும் உடலெங்கிலும் பரவியோடத்தொடங்கும். அவளிடம் தன்னை வெளிப்படுத்திய விதம் முறையற்றதென தெரிந்திருந்தாலும், தன் திமிர்தனத்தை ஏதோ ஒரு விதத்தில் நிறூபித்துவிட்டதாய் அவனது ஆழ்மனது குதூகலிக்கும். 

மாட்டியாவை வேண்டாமென மறுத்த ஐந்தாவது பெண்ணவள்.
ஆரம்பத்தில் சுசீலாவிற்கு மாட்டியாவை பிடித்துப் போயிருப்பதாய்தான் கூறிக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் கண்பார்வையற்றவள் என்ற ஒரேயொரு காரணத்தாலேயே தன்னை மணக்க சம்மதிருக்கக்கூடுமென்றும் திடீரென ஒருநாள் அவனை பிடிக்கவில்லையென கூறுவதற்கு வாய்ப்பிருகப்பதாகவுமே மாட்டியாவிற்கு தோன்றியது.

அவளை ஒரு தடவை சந்தித்து நெருங்கி பேசினால் கூட அவள் தன்னை மறுக்கத் தொடங்குவாளென அவனது கடந்த கால அனுபவம் மாட்டியாவை எச்சரித்தப்படியே  இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தான் முந்திக்கொள்ளுதலே புத்திசாலித்தனமென எண்ணி சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.

சுசீலா ஒரு கிண்ணத்தில் புளிசாதம் கொண்டு வந்திருந்தாள். வாசலில் நின்றபடியே 'புளிசோறு' என்றாள்.
மாட்டியா தனக்கானதாக அந்த சந்தர்ப்பத்தை எண்ணிக் கொண்டான். விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தியேனும் அவள் தன்னையே நம்பி நிற்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுவதென தீர்மானித்தான்.
அக்கம் பக்க வீகளிலும் ஆள் அரவமற்ற பொழுதது. படாரென அவளது கையை பிடித்து வீட்டினுள்ளே இழுத்தான். அவளது மௌனம் அவனுக்குள் ஒரு உத்வேகத்தை பிறப்பித்திருந்தது. தவறென்று தெரிந்திருந்த போதிலும், ஏதோ ஒரு நப்பாசையிலேயே எல்லை மீறத்துணிந்தான்.

தன் பதட்டத்தை அடக்குவதாய் எண்ணி வேகமான இதயத்துடிப்பை தணிக்க ஒருகையால் நெஞ்சை அமத்தி பிடித்தவாறே மற்றைய கையால் அவளை இழுத்தணைத்தான். அதுவரை பொறுமையாய் வெட்கித்து நின்றவள் திடீரென அவனை விலக்கித் தள்ளியவளாய் ' மொதல்ல போயிட்டு குளிடா' என்றாள்.
'நாத்தம் புடிச்ச மூதேசி... என்னய விடுடா...' என்று சத்தமாக கத்தினாள். அவனிடமிருந்து விடுபட வேகமாகத் திமிறினாள்.

இதுவே உலகின் அதிகபட்ச அவமானமாய் இருக்கவேண்டுமென அக்கணத்தில் தோன்றியதவனுக்கு. அவளை எத்தி மிதிக்க வேண்டும் போலிருந்தது.
கோபம் தலைக்கேறிய வேகத்தில் அவளை பலவந்தமாக இறுக்கிப்பிடித்து அசையவிடாமல் அமத்தி முத்தமிடுவதாய் எண்ணிக்கொண்டு மூர்க்கத்தனமாய் இயங்கினான். சுசீலாவின் அலறல் சத்தத்தை நிறுத்த ஒருகையை பயன்படுத்தியிருந்தால், அவள் திமிறி தன்னிடமிருந்து ஓடி விடக்கூடுமென்பதால் கிடைத்த அந்த நிமிடங்களுள் அவளை ஆனமட்டும் ஸ்பரிசித்துக்கொண்டு கொஞ்சமாய் தன் பிடியை தளர்த்தினான்.   அவள் காறி உமிழ்ந்துவிட்டு கெட்டவார்த்தையில் திட்டியபடியே தன்னை காப்பாற்றிக்கொண்டு பதறியோடத் தொடங்கினாள்.
 
கண்பார்வையற்ற ஒரு பெண்ணிடம் தான் நடந்துகொண்ட இவ்விதம் தப்போவென்று தோன்றினாலும், அவள் தன்னை உதாசீனப்படுத்தியதற்கான தண்டனையை கொடுத்துவிட்டதாய் தனக்குத்தானே ஆறுதல்பட்டுக்கொண்டான் மாட்டியா. அவனது கைகால்கள்களலெல்லாம் உதறலெடுத்திருந்தன. என்னதான் இருந்தாலும் ஒரு குருடிக்கு இத்தனை திமிர்த்தனம் இருக்கக்கூடாதென்றும் அவளை போக விட்டது பெருந்தவறென்றும் இடைக்கிடையே எண்ணி கோபப்பட்டுக்கொண்டான்.   

அவலட்சணமென்றும், அருவருப்பானவனென்றும், பேசும்போது எச்சில் தெறிக்கின்றதென்றெல்லாம் அவன் மறுக்கப்பட்டபோது ஏற்படாத வலி சுசீலா வெறுப்புடன் தள்ளிய போது ஏற்பட்டிருந்தது. கண்தெரியாத சுசீலாவே தன்னை அருவருக்க தன் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் வியர்வையின் விட்டகலாத மணமே காரணமென ஊகிக்க அவனுக்கு அதிகநேரமெடுக்கவில்லை.

அதன் பிறகும் மாட்டியா பெண்களை கவரவென்று சற்றே வித்தியாசமாக  முயற்சி செய்து கொண்டுதானிருந்தான். தினமும் குளித்தான். துவைத்து காயவைத்த ஆடைகளை அணிந்தான். பௌடர் போட்டுக்கொண்டான். பற்பொடி பாவித்து பல் துலக்கினான்.

கண்ணோரத்தில் அடிக்கடி தேங்கிவிடும் கண்பூளையும் தான் விரும்பப் படாமைக்கு காரணமாகி விட்டிருந்த ஞாபகத்தில் கண்களை ஒன்றுக்கு மூன்று தடவைகள் தேய்த்து கழுவினான்.

சுசீலாவை சமாதானப்படுத்த தொடர்ச்சியாக அவளை தேடிச்சென்று ஒவ்வொருமுறையும் அவமானப்பட்டுத் திரும்பினான். தன்னை நேசிக்குமொரு பெண்ணைத் தீவிரமாக தேடியலைந்தான். தான் ஒரு பெண்ணினால் நேசிக்கப்படுகிறோம் என்பதுவே ஒரு ஆணுக்கான அதியுச்ச அங்கீகாரமென்று தோன்றியதவனுக்கு. பெண்களை விலக்கியதானதொரு  வாழ்வின் வெறுமை அர்த்தமற்றதாகவே இருந்தது. தன்னை பூரண மனிதனாக்குவதற்கு ஒரு பெண்ணினது துணை அத்தியாவசியம் என்பதையுணர்ந்தான்.

தொடர்ச்சியான உதாசீனங்களும் அவமானங்களும் அவனை வேறுவிதமாக சிந்திக்கத் தூண்டின. பெண்கள் மீதான அவனது உணர்வு மெல்ல மெல்ல எதிர்பாலின விலங்கினங்கள் மீது தாவியிருந்தது. ஆடுகள், பூனைகள், பறவைகள் என்று எல்லா விலங்கினங்களது காதலையும் அவதானிப்பதில் அலாதி பிரியம் கொண்டிருந்தான்.

ஒரு தடவை பாம்புகளின் உச்சக்கட்ட உணர்வு நொடிகளைக்கூட கண்கொட்டாமல் பார்த்து மெய்சிலிர்த்து போயிருக்கிறான். இரண்டு பாம்புகளுமாய் ஒருமித்த அன்புடன் ஒன்றையொன்று ஆலிங்கனம் செய்து பின்னிப்பிணைந்தபடி ஒரு நடனத்தையொத்த அசைவுகளை  வெளிப்படுத்துவதாகவே தோன்றியது.

உலகின் எல்லா ஜீவராசிகளும் காமத்தில் திளைத்தெழுந்து அதனை அதாரமாக்கியே வாழ்ந்துக் கொண்டிருப்பாதாய் ஒரு சந்தேகம் அவனுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது.

இதையெல்லாம் தாண்டி ஒருபடி அதிகமாய்... அவனது தலையில் அவ்வப்போது வந்து தொலையும் பேன்களைத்தானும் அவன் விட்டுவைப்பதாயில்லை. இரண்டு பேன்களை ஒருசேரப்பிடித்து ஓரிடத்தில் போட்டு அவை என்ன செய்யக்கூடுமென பரிசோதித்து பார்ப்பான்.
சிலநேரம் இரண்டும் இருதிசை நோக்கி புரண்டோடும். அவன் வேண்டுமென்றே இரண்டையும் அருகருகே இழுத்து வைப்பான். அவனது எதிர்பார்ப்பிற்கிணங்க அவை ஒன்றின் மீது ஒன்றேறி கண்ணிமைக்கும் நொடிக்குள் விலகியோடும்.

தான் பிடித்த பேன்களிரண்டுமே ஒரே இனத்தினதாய்  இருப்பதால் அல்லது இரண்டிலொன்று மறுப்பு தெரிவித்ததால் விலகியிருக்க வேண்டுமென எண்ணிக்கொள்வான்.  பேன்களில் ஆண்,  பெண் எதுவென கண்டுபிடிக்கும் வழிமுறையை தெரிந்துக்கொள்ள அவனுக்கு யாதொரு வழியும் தென்படுவதாக தெரியவில்லை. பின் எங்கனம் இவை இணையக்கூடும்...? பெண்மையை அடக்கி பலவந்தப்படுத்தி அணுகும் முறைமையை இந்த பேனினத்து ஆண்கள் கற்றுக்கொள்ளவில்லையோ என்னவோ...!
நாளுக்குநாள் அவன் காணும் ஒவ்வொரு விலங்கினதும் அந்தரங்கம் குறித்ததான தேடல் அவனை முழுவதுமாய் ஆக்கிரமிக்கத்தொடங்கியிருந்தது.

என்னதான் அவனது பார்வை விசாலமாகிக்கொண்டு போயிருந்தாலும், அவன் அவதானித்த ஜீவன்களுள் அவனை மிகக் கவர்ந்த உயிரினமாக நாய்கள் மட்டுமே மாறிப்போயிருந்தன. குறிப்பாக மஞ்சுவை தன் ஆத்மாவென்றும் மஞ்சுவின் வாழ்க்கை தனக்கானதென்றுமான ஒரு மாயையில் சிக்குண்டு கிடந்தான் மாட்டியா.
மஞ்சுவின் ஒவ்வொரு கட்ட வாழ்க்கை முறையினையும் அவதானித்து ஆனந்தம் கொண்டான். கூடவே மஞ்சுவின் காதலையும் எப்படியோ கண்டுபிடித்தறிந்தான்.

அடுத்த தெருவில் உள்ள கபிலநிற பெட்டைநாயை பார்க்கும் போதெல்லாம் மஞ்சு தன்னிலை மறந்து ஓடுவதையும் உரசி உரசி குதூகலிப்பதையும் மாட்டியா அடிக்கடி கண்டிருக்கிறான். அந்த காதலுக்கு தன்னுடைய பங்களிப்பு சிறிதளவேனும் இருக்க வேண்டுமென்ற உந்தலில் மஞ்சுவை அழைத்துக்கொண்டு அந்தத்தெருப்பக்கம் போய்வருவதை மாட்டியா வழக்கமாக்கி கொண்டான்.

அவர்களை கண்ட மாத்திரத்தே அந்த பெட்டைநாய் இங்குமங்குமாய் ஓடியோடி சத்தமாய் குரைக்கத்தொடங்கும். அடுத்த நொடியிலேயே பாய்ந்து கடிக்கக்கூடுமென்ற விதத்தில் வெகுவாய் பாவனை செய்யும். பின், விடாமல் குரைத்த களைப்பில் உர்... உர்... என்று சப்தமிட்டபடியே முறைத்து பார்த்தபடி வாசலில் அமர்ந்துக்கொள்ளும்.

பெண்கள் வெளிப்படுத்தும் கோபங்களும் முறைப்புகளும் அனேக சந்தர்ப்பங்களில் வலிந்து ஏற்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ளுமொரு ஆயுதமாகவோ அல்லது உத்தியாகவோ தான் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய அதே அந்த குணம் இந்த நாய்களை தொற்றிக்கொண்ட அதிசயத்தைதான் மாட்டியாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நீண்ட நாளைக்கு பிறகான சந்திப்பொன்றை அந்நாய்களுக்கிடையில்  ஏற்படுத்தியிருந்தான் மாட்டியா.
இரண்டினதும் பார்வை பரிமாறல்கள் அவை பரஸ்பரம் ஏதோ செய்தி கடத்திக்கொள்வதாகவே பட்டது. அது நாய்களின் புணர்ச்சிக்கான காலப்பகுதியாக இருக்க வேண்டும். அந்த பெண் நாயை குறிவைத்து மேலும் ஆறேழு ஆண் நாய்கள் சூழவும் காத்துக்கிடந்தன. அவை ஏக்கத்துடனும் இயலாமையுடனும் சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருந்தன.
மஞ்சு நல்ல சாமர்த்தியசாலி. சமயம் பார்த்து மிக அருகே போய் தன் நாவினால் அந்த பெட்டை நாயின் முகத்தாடையை ஸ்பரிசம் செய்து, தன் லீலையை மெலிதாய் ஆரம்பித்து முன்னேறிச்சென்றது. அந்த நாய் சடாரென தன்னை விலக்கிக்கொண்டு தனது அதிருப்திக்கான அறிகுறிகளுடன் கழுத்தை திருப்பி தன் முதுகையே வறட்வறட்டென்று சிலமுறை கடித்து பின் முன்னங்கால்களை சற்றே நீட்டி நெளித்தபடி உடலை குவித்து படுத்துக்கொண்டது.

மஞ்சு அந்த நாயின் பின்புறமாக சென்று ஸ்பரிசிக்க எத்தனித்த நொடியில் உர்ர்ர்...... என்ற அதிகூடிய சத்தத்துடன் மஞ்சுவை அந்த நாய் கடிக்கப்பாய்ந்தது. சளைக்காமல் மஞ்சு மீண்டுமொருமுறை அருகே செல்ல அந்த நாய் வெறித்தனமாக பாய்ந்து எதிர்க்கத்தொடங்கியது.
புணர்தலுக்கான விருப்பம் என்பதை வலிந்து உருவாக்கிவிடுதல் அத்தனை சுலபமில்லையென்றே மாட்டியாவிற்கு தோன்றியது. சுசீலா தன்னை விலத்தி தள்ளி தாக்கத் தொடங்கிய விதம் கண்முன் நிழலாய் தெரியத் தொடங்கியது. 

மஞ்சு தான் ஆண் என்ற திமிர்தனத்தை அங்கே பயன்படுத்தியிருக்கவில்லை. வெறிகொண்டு செயற்படவில்லை. பலவந்தப்படுத்த முனையவில்லை. கோபம் தலைக்கேறி தடுமாறவும் இல்லை. மிக நிதானமாக தன்  துணையின் விருப்பமின்மைக்கு மஞ்சு மதிப்பளித்தாகவே மாட்டியா புரிந்துக்கொண்டான்.

மஞ்சு அவ்விடத்தினின்றும் விலகி மாட்டியாவை எதிர்பாராமல் நடக்கத் தொடங்கியிருந்தது.

மஞ்சுவை பின்தொடர்வதா வேண்டாமாவெனும் தயக்கத்துடன் மாட்டியா அசையாமல் நின்று கொண்டிருந்தான். சூழ  நின்ற மற்றைய நாய்கள் மொத்தமாய் ஒருமித்து அந்த பெண்நாயை நோக்கி சத்தமாய் குரைக்கத் தொடங்கியிருந்தன.
............................................................



தொலைக்காட்சித் தொடர்களும் பெண்களும் - பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020

அனேக ஆண்களால் விமர்சிக்கப்படும் அல்லது வெறுத்து ஒதுக்கப்படும் தொலைக்காட்சி தொடர்களை பெண்கள் மட்டும் ஏன் விரும்பி பார்க்க வேண்டும்?  குறிப்பாக இல்லத்தரசிகள் என்ற வரையறையறைக்குட்பட்டவர்கள் மட்டும் ஏன் அதற்கு அடிமைகளாக மாறவேண்டும்…? இது சிந்திக்க வேண்டியதொரு கட்டாயமான கேள்வியொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

தொலைக்காட்சித் தொடர்களை இரசிக்கும் இவ்வுணர்வானது ஆகவும் அடிமட்ட இரசணையென்பதை போலான நகைச்சுவைகளையும் எள்ளல்களையும் உலாவ விடும் ஆண்களாலோ அல்லது அத்தகைய இரசணை உணர்வை வியாபாரமாக கொண்டிருப்பவர்களாலோ புரிந்துக்கொள்ள முடியாத பல்வேறு காரணங்கள் அந்த தொடர் நாடக அடிமைத்தனத்திற்குப் பின் தொக்கு நிற்கின்றதென்பதையே என்னால் ஊகிக்க முடிகிறது. 

பெண்களின் பகல்நேர தனிமையும் வெறுமையும் எத்தகைய கொடூரமிக்கதென்பதை வெறுமனே தூரநின்று பார்ப்பவர்களால் ஒருபோதும் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அந்த அவஸ்த்தையை அனுபவித்தவர்களால் கூட அதனை நினைத்துப் பார்த்துக்கொள்ள முடியுமேயன்றி வார்த்தைகளால் வெளிப்படுத்தி விடுதலென்பது சாத்தியமற்றதே. 

காலங்காலமாக பகல்நேர தனிமையை சாபமாகப் பெற்று வாழும் இல்லத்தரசிகள் தங்களது வெறுமை நிரம்பிய பொழுதுகளை கழிக்கும் உத்தியாக பழக்கப்படுத்திக்கொண்ட திண்ணை விளையாட்டுகள், கும்மி பாடல்கள், தையல் அலங்காரங்கள், வீட்டை மீண்டும் மீண்டுமாய் ஒழுங்குப்படுத்தும் வேலைகள், பழைய பொருட்களை சுத்தம் செய்தல் என்ற இவற்றையெல்லாம் தாண்டி அயல் பெண்களுடன் புறம்பேசும் பழக்கத்தையும் பழகியிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் புறம்பேசுதல் பெண்களுக்குரிய குணமென்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கும் காரணமாய் அமைந்திருக்கக்கூடும். 

எவ்வாறெனினும் இதன் தொடர்ச்சியாகவே தொலைக்காட்சி தொடர்கள் எனும் கலைவடிவத்துடனான ஒரு பொழுதுபோக்கு அம்சம் தங்கள் வீட்டுக்கதவை தட்டும் போது முதலில் தயங்கி… பிறகு அவ்வப்போது என்றாகி… பின் அதுவே வாழ்வென்றாகும் அளவிற்கு பெண்கள் அடிமையாகிப் போயுள்ளார்கள் எனலாம். 

சொல்லப்போனால் வெளித்தெரியா பூதமாய் உருவெடுத்து நின்ற பெண்களின் வெறுமை உணர்வை இந்த வியாபார உலகம் அவர்களுக்குத் தெரியாமலேயே மிகத்தந்திரமாய் தமக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. என்னதான் கற்றிருந்தாலும், தங்களது நேரம் பயனற்று கழிகிறது என்று தெரிந்திருந்தாலும் நாடகங்கள் மீதான ஈர்ப்பை பெண்களால் கைவிட முடியாததற்கு பின்வருவரும் காரணங்களும் ஏதுவாகியிருக்குமென்றே எண்ணிக்கொள்ள முடிகிறது. 

1. வாழ்வின் அடுத்த நொடியை சுவாரசியமாக்;கும் குறைந்தபட்ச எல்லையாக தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை திருமணம், குழந்தை, வீடு, சமையல், கணவனுக்கான கடமைகள்;, குழந்தைகளின் கல்வி என்ற சுழற்சியில் ஏதோ ஒரு நொடியில் தாங்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதாய் ஒவ்வொரு பெண்ணுமே உணரும் ஒரு தருணம் நிச்சயமாய் வந்திருக்க வேண்டும். அப்போதைய மனவெழுச்சிகளை அதாவது கோபத்தை… வெறுப்பை… அவநம்பிக்கையை… அல்லது வெற்றியென கருதிக்கொண்டிருக்கும் அப்பட்டமான சுய தோல்;வியினை மறக்கவோ அத்தகைய சிந்தனையை இல்லாதொழிக்கவோ பெண்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆயுதமாகவே இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன.  

தன்னிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும், வாழ்வின் செயற்பாடுகளுக்கான சுமுகமான மனநிலையை தக்கவைத்துக்கொள்ளவும், சுயத்தை மழுங்கடித்து மறைத்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான போதையை இந்த தொலைக்காட்சித்தொடர்கள் நிரம்பவே பெற்றக்கொடுக்க வசதி செய்கின்றன என்றே கூறலாம்.  

2. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சகித்துக்கொள்ளும் மனநிலையை தக்;கவைக்;க தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை அதிகளவான பெண்களது வாழ்க்கையானது தங்கள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறானதாகவே அமைந்து விடுகிறது. எனினும் தமது எதிர்பார்ப்பு இதுவல்ல என்பதனை மிகத்தாமதமாகியே உணரும் அவர்களது அடுத்தக்கட்ட நகர்வு கட்டாயமாய் புரட்சிகரமானதாக மட்டுமே இருக்கமுடியுமென்பதை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக அத்தகைய சகிப்புத்தன்மைகளுக்கான பக்குவத்துடனனேயே எமது கலாசாரமும் சம்பிரதாய பழக்கவழக்கங்களும் எம்மை கட்டியெழுப்பியுள்ளன. எனவே அத்தகையதான வாழ்வின் எதிர்பாரா வேதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்;ளவும் அத்தகைய எண்ணங்களை நிராகரித்து வாழ்வின் தொடர்ச்சியை கொண்டு செல்லவும் தமக்கிருக்கும் ஒரே ஆதாரமாக இந்த தொலைக்காட்சி நாடகங்கள் மீதான மோகத்தையே பெண்கள் இறுகப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் எனலாம். 

3. வியாபபார நோக்குடனான கதைக்கருவும் கதாபாத்திரங்களும் நிஜத்தில் நடைபெறாமல் போனதான, என்றாலும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானதாய் தோன்றும் பெண்களின் நனவிலி மன ஆசைகளைத் தூண்டும் வகையிலான பாத்திரப்படைப்புகளும், பழிவாங்கல்களும், கணவன் மனைவியின் காதலும்… கூடல் ஊடல்களுக்கிடையேயான தவிப்பையும் வெளிக்காட்டும் விதமான நாடகத் தொடர்களே அதிகளவில் விரும்பப்படுகின்றன. அதாவது கற்பனையிலான வாhழ்வொன்;றினை அனுபவிக்க வைக்கும் முயற்சியொன்றே வெகு சாதூரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கொப்ப நாடக ஈடுபாடுடைய ஒவ்வொரு பெண்ணுமே அதன் நாயகியாக தன்னை உருவகித்துக்கொண்டே தொடர்ச்சியாக அதனை பார்க்க விரும்புகிறாள் என்பதுவும் அவதானங்களினூடாக தெளிவாகின்றது.    

மொத்தத்தில் பெண்கள் தங்களிடமிருந்து தாமே தப்பித்துக் கொள்வதற்காக தெரிந்தே இத்தகையதொரு பழக்கத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள் எனும் வகையில் தப்பித்தல் எனும் எண்ணக்கருவில் இருந்து வெளியேறி அதனை எவ்வாறு நேர்மறையாக்குவது என்பதை சிந்தித்து இவ்வடிமைத்தனத்தின் விளைவாக ஏற்படக்கூடிய எதிர்கால பாதகமான விளைவுகளை தெளிவாக புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் தன்னம்பிக்கையை சிறந்த துணையாகக்கொண்டு வீண்விரயமாக்கப்படும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிட தங்களுக்கேயுரியதான சாதகமான விடயங்களை செய்யத் தொடங்குவதுடன், தொலைக்காட்சித் தொடர்களை வெறுமனே பொழுது போக்காக மட்டுமே பழக்கப்படுத்திக் கொள்ளல் அவரவரின் சுயவெற்றிக்கு வழிவகுக்கும் என்றே கூறலாம்.

இன்றிலிருந்தே ஆரம்பிக்கவும் செய்யலாம். 

நன்றி - தினகரன் - 12.04.2020



Monday, April 13, 2020

அட்டைகள் - பிரமிளா பிரதீபன்

By On April 13, 2020

திடீரென பெய்த மழையால் கட்டுபொல் காடெங்கும் ஈரம் சொட்டத் தொடங்கியது. கட்டுபொல்கொப்பு தூக்கிக் கொண்டிருந்த பெண்கள் எல்லோருமே ஸ்தம்பித்துப் போனவர்களாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

அது நடுப்பகுதி கட்டுபொல் துண்டென்பதால் அட்டைகள் ஆங்காங்கே மொய்த்தெழும்பிக் கொண்டிருந்தன. தரையிலும்..... செடிகளுக்கிடையிலும்... ஏன்...! விழுந்து காய்ந்து கிடக்கும் கட்டுபொல் வாதுகளைதானும் மிச்சம் வையாமல் அவை ஊர்ந்து திரிந்தன

என்னதான் அட்டைகளிடமிருந்து பயந்தொதுங்கி விலகியிருந்தாலும்.... அவை எங்களையே குறிவைத்து தாக்கிக்கொண்டிருந்தன.

அட்டை எனும் சொல்லிலேயே என்னவொரு அருவருப்பு.....? உடலில் ஒருவித ஈரபசையுடன் கறுப்பும் கபிலமும் கலந்தாற் போலொரு நிறத்தில்........ சில அட்டைகளின் முதுகில் நீள்வாக்கான கோடுகள் கூடத்தெரியும்.

அட்டையின் அடிப்பகுதி உடல் பருத்து உருண்டையாய் நிலத்தில் அல்லது யாதேனுமொரு செத்தையில் ஒட்டிக் கொண்டிருக்க, தன் முன்னுடல் பகுதியை நேரே நிமிர்த்தி அல்லாடி.... அடுத்த அடி வைக்க ஒரு நொடி தயங்கி.... பின் உடலின் நுனிப் பகுதியை  நிலம் பதித்து.... பின்னுடலை படக்கென்று இழுத்தபடி.......

ச்சீய்..... பார்க்கும் போதே வாயில் தொகையாய் உமிழ்நீர் சேர்ந்து குமட்டத்தொடங்கும்.

வெயில் காலங்களை விட மழைக்காலங்களில்தான் இந்த அட்டைகளின் அட்டகாசம் அதிகமாகவிருக்கிறது. மழையோ வெயிலோ.... ஆளுக்கு நாற்பது கட்டுபொல் கொப்புகளை சேகரித்தால் மட்டுமே ஒரு நாள் பேர் விழும். ஆண்கள் நாற்பது கொப்புகளை சரக் சரக் கென்று வெட்டி வீழ்த்திவிட்டு போய்கொண்டே இருப்பார்கள்...... அவற்றை தூக்கி சேகரிக்கும் எங்கள் பாடு..........?

மழையையும் பொருட்படுத்தாது இதோ நான்காவது முறையாகவும் கண்டாக்கின் பைசிக்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

 'தூக்குங்கடி வெரசுனா...... நாய்மாதிரி சுத்தி சுத்தி மோப்பம் புடிக்கிறான்'

ஒருத்தி அவசரப்படுத்தினாள்.

'இந்த மழையில கட்டுபொல் தூக்கி சாக சொல்றியா......'

'செத்த பொறுங்கடி மழ ஓஞ்சதும் தூக்குவோம்....'

எல்லோருமாய் ஒரு முடிவிற்கு வந்து ஒவ்வொரு கட்டுபொல் மரத்தடியிலுமாய் ஒதுங்கிக் கொண்டோம்

'ஒனக்கெல்லாம் காத்து வாங்கிட்டு நிக்கிறத்துக்கா சம்பளம் குடுக்குது....?'

கண்டாக்கு கத்திக்கொண்டு அருகிலேயே வந்து நின்றான். நிஜமான மோப்ப நாய் போலவே எல்லோரையும் கண்களால் ஒருதடவை அளந்தான்.

'மூதேசி..... கள்ளத்தனமா வேவு பாக்குது.....'

கோபம் தலைக்கேறி நான் முணுமுணுத்தது அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கினான். வேலைக்கே வர முடியாதபடி செய்துவிடுவதாய் எச்சரித்தான்.

வழமை போலவே கேட்டும் கேளாத பாவனையில் ஆயிரம் குமைச்சல்களுடன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

மழையுடன் ஐம்பது அறுபது கிலோ கணக்கும் கட்டுபொல் கொப்பை தூக்குவதென்பது........ லேசா பின்னே...!  கொஞ்சம் வழுக்கினாலும் போதும் கொப்பில் இடைக்கிடை துருத்திக்கொண்டிருக்கும் முட்கள் குத்திக்கிழித்து தசையை துண்டாக்கி பிய்த்தெடுத்துவிடும்.

இதற்கிடையில் இந்த அட்டைகள் வேறு அங்கும் இங்குமாய் மொய்த்து தாவி விரலிடுக்குகளில் பதுங்கிக் கொண்டு முடிந்த மட்டும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கின்றன.

ஒவ்வொரு கட்டுபொல் மரத்தின் தண்டுப் பகுதியிலும் புல் பூண்டுகள் அடர்ந்து வளர்ந்து மரத்தை நிறைத்திருந்தன. ஏதோ ஒரு வகையான இளம்பச்சை நிற செடிகள் அடர்ந்து மரத்தை சூழ்ந்து கிடந்தன. அச்செடிகளுக்கிடையிலும் அட்டைகள் ஊரலாமெனும் அச்சம் உடலெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

கால்களிலும் கைகளிலும் சன்லைட் துண்டுகளை தேய்த்து கொண்டபடி பாதுகாப்பாய் இருந்தாலும், மரத்தில் ஊர்ந்து செல்லும் அட்டைகள் படக்கென்று உடலுடன் தாவி        பற்றிக்கொள்ள பார்க்கும். உடையுடன் ஊர்ந்தூர்ந்து கழுத்து நெஞ்சு வயிறு இப்படி எங்கேனும் ஓரிடத்தில் இயலுமானளவு இரத்தம் உறிஞ்சி திருப்திகண்ட பின் அதுவே தானாக விழுந்துவிடும்.

சிவந்து தடித்து, இரத்த உறைதலுடன்  இருக்கும் காயங்களை பார்க்கும் வரை சிலருக்கு அட்டை கடித்த உணர்வே இருப்பதில்லை.

சாதாரண அட்டைகளையும் அவற்றின் கடிகாயங்களையும் பெரிதாய் எவரும் அலட்டிக்கொள்வதில்லையெனினும் கட்டுபொல் காட்டின் நடுப்பகுதியில் ஊர்ந்து திரியும் அட்டைகள் விஷத்தன்மையுடயவையென்று எல்லோருக்குமே தெரியும். இந்த அட்டைகளிடம் கடிபடும்போது மட்டும் காயத்தை சுற்றி சிவந்து வீங்கி கருஞ்சிவப்பு அடையாளத்துடன் அரித்தபடியே இருக்கும். குறைந்தது மூன்று நாட்களுக்கேனும் சுர்ர்ரென்ற கடுப்பு விட்டுவிட்டு தெறிக்கும். அந்த காயம் ஆறப்போகும் சமயத்தில் இன்னும் இரண்டு அட்டைகளாவது எங்கேனும் கடித்து தொலைத்திருக்கும். சில காயங்கள் மாதகணக்கில் ஆறாமல் வதைப்பதுமுண்டு.

உடலின் மறைவிடங்களில் அட்டை கடிப்பதும், ஒட்டிக்கொண்டு வரமறுப்பதும்..... யாரும் பார்க்கா வண்ணம் அட்டையை பிடுங்கி எடுப்பதுவும் கட்டுபொல் தூக்கும் பெண்களின் தினசரி நிகழ்வாகிப் போயிருந்தது. அப்படி வலிந்து அட்டையை பிடுங்கியெடுக்கும் போது காயத்தின் வலி இரட்டிப்பாகி நீண்ட நேர அவஸ்த்தையை அனுபவிக்க வேண்டி வரும்.

நினைக்கும் போதே அட்டைகள் மீதான கோபம் அதிகரிக்குமாப்போல் இருந்தது.

அட்டைகளை இல்லாதொழிக்க என்ன செய்ய வேண்டும்...? அட்டைகள் ஏன் இரத்தத்தை விரும்பி உறிஞ்சுகின்றன....?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அட்டையொன்று என் கால் பெருவிரல் மீதேறி விரைவாக தன்னுடலை குவித்து சுருக்கி கனுக்காலுக்கு தாவப் பார்க்கிறது. அதனை பிடுங்கியெடுத்து வீசுகிறேன். அது விழ மறுத்து சுட்டுவிரலில் ஒட்டிக்கொண்டு மீண்டும் தாவி முன்னேறுகிறது. கையை பலமாய் உதறுகிறேன். அட்டை விழுவதாய் இல்லை.

கீழே கிடந்த கட்டுபொல் கொட்டையொன்றால் அட்டையை வழித்தெடுத்து வீசுகிறேன். கைகளில் பட்ட கட்டுபொல் கொட்டையின் எண்ணெய் பிசுபிசுப்பை அட்டை ஊர்ந்த இடத்தில் தேய்த்துக் கொள்கிறேன். 

சளைக்காமல் அவ்வட்டை மீண்டும் என்னிடமே வருகிறது..... என்ன திமிர் இந்த அற்பபூச்சிக்கு.....!

தொக்கு வைத்த ஏதோ ஒரு கோபம் அட்டை மேல் திரும்புகிறது. ஒரு கல்லை எடுத்து தரையில் கிடக்கும் அவ்வட்டையை நசித்து தேய்த்து கொல்லப்பார்க்கிறேன். அந்த அட்டை உடலை சுருக்கி சிறிதாய் தன்னை ஒடுக்கிக் கொண்டு இறந்தாற் போல் கிடக்கின்றது.

மண்தரையில் வைத்து  அட்டையை கல்லால் அடித்து கொல்லுதல் முட்டாள்தனமென்று எனக்கு தெரிந்திருந்தாலும் கோபம் தாளாமல் இன்னொரு முறையும் அட்டையை நசிக்கிறேன். அது குடித்த இரத்தத்தை கக்கியிருக்கிறதா அல்லது நய்ந்து பீச்சப்பட்டிருக்கிறதாவென தெரியவில்லை. தரையில் சிறிதளவு குருதி சிதறிப் பரவியிருக்கிறது. மெதுவாக உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.

சிறிதுநேரத்திற்குள் மிகமெதுவாய் தன் உடலை நகர்த்தி அந்த அட்டை ஊரத்தொடங்குகிறது. ஒரு பிராணியை அநியாயமாய் வதைக்கிறோமோ என்று மனது என்னை சாடுகிறது.

அட்டைகடி சிறந்த மருத்துவமாமே....! சிலர் காசு கொடுத்து அட்டை கடியை அனுபவிப்பதாய் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருதடவை கோயில் பூசையின் போது ஐயர் கதைகதையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்வந்திரி முனிவரது சிலைகளில் அதனை அவதானிக்கலாமாம். அவரது ஒரு கையில் அட்டை வைத்திருப்பாராம். அட்டைகள் மனிதனின் அசுத்த இரத்தத்தையே உறிஞ்சுகிறதென்றும் ஒவ்வொரு மனிதனும் அட்டைக்கடியை கட்;டாயம் அனுபவிக்க வேண்டுமென்றும் அதனைதான் தன்வந்திரி முனிவரது சிலையின் அடையாளம் உணர்த்துகிறதென்றும் ஐயர் சொன்னபோது எல்லோருக்கும் ஒரே சிரிப்பு...... 

எங்கே கடிக்கிறது..... எப்படி விழுகிறதென்று தெரியாமலேயே எங்கள் இரத்தத்தை சதா தானம் கொடுக்கும் எங்களுக்கெல்லாம் மருத்துவமாவது மண்ணாவது.........  போதாகுறைக்கு தன்வந்திரி முனிவரின் சிலைவேறு...!

ஒருவேளை, சுத்த இரத்தமும் சேர்த்தேதான் உறிஞ்சப்படுகிறதென்று தன்வந்திரி முனிவருக்கு தெரியாதிருந்திருக்குமோ............!

ஓரிரவு - பிரமிளா பிரதீபன்

By On April 13, 2020

சாதாரண இரவுகளை விட மழை பெய்யும் இரவுகளில்தான் படுக்கை இதமாக தெரிகிறது. சம அளவான திவலைகளை யாரோ ஆகாயத்தில் நின்று தொடர்ச்சியாக வடிய விடுவதையொத்து, இந்த மழை கூட மிக அற்புதமான… ஊகித்துப்பார்க்க முடியாத அதிசயமாய் தெரிகிறதே!

லயத்து தகரத்தில் வந்து விழும் நீர்த்துளிகளின் சத்தம் மழையை சற்று அடர்த்தியாக காட்டிக்கொடுத்தது. வழமையாக குரைத்தே களைத்துப்போகும் நாய்களும் எங்கேனும் ஒரு மூலையில் ஒண்டியிருக்கக்கூடும். மொத்த லயமும் இருள் கவிழ்ந்து நிசப்தமாய் அடங்கியிருந்தது. 

இடையிடையே வெடித்து சிதறி ஓய்ந்து போகும் இடி முழக்கமும், இலேசாக யன்னல் துவாரத்தில் தெரியும் மின்னல் வெட்டுமாய்… ராசாத்திக்கு தூக்கம் வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டாள்.

கலைந்து கிடந்த போர்வையை இழுத்து கழுத்துவரை போர்த்தினாள்.  போர்வையை இழுத்ததும்லேசாக வெளித்தெரிந்த கால் பாதங்களை குளிர்காற்று சிலுசிலுவென தடவி கூசச் செய்தது.  முழங்கால்களை குவித்து ஒரு பக்கமாக மடித்து கால்களை போர்வைக்குள் உள்ளிழுத்துக் கொண்டாள்.

பக்கத்தில் படுத்திருந்த மணிவேல் தூக்கத்தினூடே பிரண்டு உருண்டு ஒரு பக்கமாய் சரிந்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனது மூச்சுக் காற்றுடன் சாராய நெடியும் கலந்து அறையெங்கும் அலைமோதியது.

அறையென்ன  அறை கல்யாணம் பண்ணிய இந்த ஆறேழு மாசமாய் இருவரும் இஸ்தோப்பில் தான் படுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் நடு வீட்டில் ஆளுக்கொரு பக்கமாய், வீசிப் போட்ட விறகு கட்டைகளாயிருந்தார்கள். 

போதாக்குறைக்கு இடைக்கிடையே யாரோ ஒருவர் வாயுளறும் சத்தமும், மாமனாரின் பெரிய குறட்டையும் கூடவே நடுச்சாமத்தில் வெளியே போய்வரும் பழக்கமும்.    

ராசாத்தி மணிவேலின் தலையை தூக்கி தலையணையில் வைத்தாள். அவன் எதுவித சலனமும் இன்றி தொடர்ந்தும் தூங்கினான். உடலில்  ஏற்பட்ட சிறிய அதிர்வில் அவனது குறட்டை ஒலி குறைந்திருந்தது.

சற்றே தலையை எக்கி யாராவது விழித்தெழும் நிலையிலிருக்கிறார்களாவென  கூர்ந்து நோட்டம் விட்டாள். ஆளுக்கொரு விதமான சப்தமெழுப்பல்களுடன் அயர்ந்து தூங்கிப்போயிருந்தார்கள். மெல்ல நகர்ந்து நகர்ந்து மணிவேலிற்கு அருகே மிக நெருக்கமாய் படுத்துக்கொண்டாள்.

ஏய்…’

அவனிடம் சிறு அசைவுதானும் இல்லை. தோள்களைப்பிடித்து உலுக்கினாள். 

தூங்கிட்டிங்களோ’

அவனது கன்னத்தை தட்டிப் பார்த்தாள்.

இங்கே…. ஏதாவது கொஞ்சம் பேசுங்களே’ அவனது வலது கையை தூக்கியெடுத்து தன்னை அணைத்தாற் போலப் போட்டுக்கொண்டாள்.

குறட்டையொலிச் சத்தம் குறைந்தும் கூடியுமாய்… உடல் வலியும் அதியுச்ச போதையும் கலந்து எதையும் உணரா சடலமாய் மாறி அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு நுளம்பு ‘ங்ஙொய்ய்ங்’ என்று சப்தமிட்டபடி அங்குமிங்குமாய் பறந்தது. அவளது தலைக்கு மேலாக, கையெட்டும் தூரத்தில் அப்படியே படுக்கையை சுற்றிச்சுற்றிப் பறந்து இறுதியில் அவனது கன்னத்தில் வந்தமர்ந்த அடுத்தநொடி தன்னை மீறி படீரென அந்த நுளம்பை அடிக்க எத்தனித்தாள். குறித்தவறி  தடுமாறிப்போனவளாய் அவனது தோள்பட்டையில் சரிந்து விழுந்தாள்.

யாருடி இவ தூங்கவிடாம’ என்று ஒரு கெட்ட வார்த்தையையும் சேர்த்து சத்தமாக ஏசி அவளை முழங்கையை அசைத்துத் தள்ளினான்.  மறுகணமே ஆ…வென்று வாய் பிளந்து மீண்டும் தூங்கிப்போனான்.

நுளம்பு கையில் அகப்படவில்லை. அங்கும் இங்குமாய் பறக்கத்தொடங்கியிருந்தது. 

பொம்புள நுளம்பு தான் இரத்தம் உறிஞ்சுமாமே…!  யாரோ சொல்லிக் கேட்டதாய் ஞாபகம். பாவம் இந்த நுளம்பினது புருஷன் நுளம்பும் தூங்கிக் கொண்டிருக்குமோ என்னவோ ? அந்த வேதனையில்தான் இந்த நுளம்புகள் இரவுகளில் மனித உடலை குத்தி காயப்படுத்துகிறது போல.

தொடர்ச்சியாக பறந்து பின்னொரு நொடியில் தன் கையில் வந்தமர்ந்த அந்த நுளம்பை அவள் அடிக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.  தன்னை கடித்தாவது அது ஆறுதல் அடைந்துவிட்டு போகட்டும். பெண்ணுக்கு பெண்தானே இரங்க வேண்டுமென எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.

மழை விடாமல் பெய்து கொண்டேயிருந்தது.

ஏன் இவன் இப்படி குடித்துவிட்டு தூங்குகிறான்?

காலையில் இருந்து தேயிலை மலையில் ஏறி இறங்கி கஷ்டப்படும் அலுப்புத்தீரத்தான் குடிக்கிறான் என்றால்  அதே மலைகளில் நானும் தானே றி இறங்குகிறேன். நானும் அதே வழியில் தானே நடக்கிறேன். பின் இவனுக்கு மட்டும் ஒருபடி அதிகமான உடல்வலி எங்கிருந்து வரப்போகிறது?

நேரம் செல்லச்செல்ல ராசாத்தியின் கோபம் அழுகையாக மாறியது. சத்தமாக அழுது கூட தொலைக்க முடியாத சூழ்நிலை. யாருக்காவது கேட்டுவிட்டால்? அடிக்கடி மூக்கை உறிஞ்சினாள். அவளது தாபம் கூடிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தாள். அவனது உடல் சூட்டுடன் உரசியபடி படுத்து, கண்களை மூடிக்கொண்டாள்.

அவனது நினைப்பும் அருகாமையும் அழுகையும் ஏக்கமும் என்று உறக்கத்தை தாண்டி வெகுதூரம் போய்க் கண்களை வெறுமனே மூடியபடி அப்படியே கிடந்தாள்.

சட்டென ஒருநொடியில் தன்னைத்தாண்டி யாரோ நடந்து கதவைத்திறந்துவைத்துவிட்டு வெளியே போயிருந்தார்கள். போர்வையை தலையுடன்  இறுக்கியபடி மணிவேலிடமிருந்து தள்ளிப் படுத்துக்கொண்டாள். திறந்த கதவினூடே சில்லிட்டு வந்த காற்று போர்வைக்குள் ஊடுருவி உடலைத்துளைத்தெடுத்தது. 

மாமனார் செருமிக்கொண்டே மீண்டிருந்தார். கதவை அறைந்து மூடிவிட்டு படுத்தவர் இரகசியமாய் பேசும் சத்தம் கேட்டது. பின் சில அசைவுகளெழுப்பும் ஒலியும் மாமியின் வலிந்து ஏற்படுத்திக்கொண்டதான இருமலும்.

மனது ஏனோ கணத்தது.

ராசாத்தி போர்வையை விலக்காதிருந்தாள்.  அவர்கள் இருவரும் எவருமறியாவண்ணம் பேசிக்கொள்ளவும் செய்தார்கள். மழை வலுத்திருந்தது. ஓரிரு நாய்கள் வெளிச்சுவரோரமாய் ஒதுங்கி வறட் வறட்டென்று தன்னைத்தானே சொறிந்துக்கொள்ளுவதான சப்தமும் கேட்கத் தொடங்கியது.       

 ‘குடிக்கார மட்ட’

மணிவேலை ஏச வேண்டும் போல் உந்திய எண்ணத்தை அடக்கிக் கொண்டாள். அவன் மீதான கோபம் பன்மடங்காக பெருகத் தொடங்கியிருந்தது.

கல்யாணமான புதிதில் ஒருசில நாட்கள் மட்டுமேயே குடிக்காமல் தன்னுடன் இரவை கழித்திருக்கிறான்.

அந்த கொஞ்ச நாட்களில் ஒரு மனிதனாய், ஒரு முழுமையான ஆண் மகனாய் தனக்கு அவனை எவ்வளவு பிடித்திருந்தது? பின் வந்த நரக நாட்களின் அனுபவம்.

ச்சீய்…!

அவன் தூங்கியே தொலைக்கட்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

போதை மயக்கத்தில் வெறிக்கொண்டு ஆடை களைந்து முரட்டுத்தனமாய் தன் மீதேறி… பகலெல்லாம் உழைத்து களைத்தவளுக்கு இந்த கூத்தில் துளியேனும் விருப்பமிருக்கவில்லை.

மறுக்கவும் முடியவில்லை.

தான் ஆசைப்படும் விதத்தில் ஏன் இவனால்…

அவள் யோசிக்கக் கூட திராணியற்றவளாய். மூக்கை அடிக்கடி உறிஞ்சி அழுகையை அடக்கிக் கொண்டாள்.

எத்தனை முயன்றும் அவளால் தூங்கவே முடியவில்லை.

வெளிச்சொல்லிவிட இயலாத இந்த உணர்வை காலமெல்லாம் மனதோடு வைத்து பூட்டிக்கொள்ள மட்டுமே தனக்கு முடியுமென்று அவளுக்குத் தோன்றியது.

இதனால்தான் தேயிலை காண் வழியே சில பொம்பிளைகள் மானங்கெட்டு திரியுதுகளோ என்னவோ! 

நேரம் இரண்டை தாண்டிய நிலை. இனியும் தூங்காதிருந்தால் காலையில் வேலைக்கு போக முடியாமல் போய்விடும். ஒருநாள் பேர் வீணாகிவிடும். ஆனாலும் தூங்கிவிட வேண்டுமென அவள் எடுத்த அத்தனை முடிவுகளும் தோற்றுப்போயிருந்தன. கண்களை மிக இறுக்கமாக்கி… ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணி… குப்புறப்படுத்து… மல்லாந்துப்படுத்து எதுவுமே கைக்கொடுக்கவில்லை.

படாரென எழுந்து கொண்டாள். வீடே நிஷப்தித்து உறங்கிப் போயிருந்தது. மீண்டும் அமர்ந்து கண்மூடி  யோசித்தாள்.

என்ன செய்வதென்று ஒன்றும் தெரியாமல் தலையை சொறிந்தாள். முகத்தை தலையணையுடன் பொத்தி வைத்து தூங்கிப் பார்த்தாள். கைவிரல்களை ஒன்றாகக் குவித்து தரையை குத்தினாள். போர்வையை இழுத்து காதுகள் இரண்டையும் அடைத்து மூடினாள்.  ம்ஹீம். ஓன்றுமே வேலைக்கு ஆகவில்லை.

திடீரென ஏதோ எண்ணியவளாய் அவன் குடித்துவிட்டு வைத்திருந்த சாராய போத்தலில் மிகுதி பட்டிருந்த ஒரு பங்கை அவதானித்தாள்.  அவனையும்  சாராயத்தையும் திரும்பத்திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது சீரான மூச்சு பெருமூச்சாக மாற்றடடைந்துக்கொண்டிருந்தது. அவனைப் பார்த்தபடியே அந்த சாராய போத்தலை எடுத்து மடக்கென்று தொண்டைக்குள் சாய்த்துக் கொண்டாள்.

வாயெல்லாம் கசந்து  தொண்டை எரிந்து சுர்...ரென்று  உள்ளிறங்கியது. வயிற்றிற்குள் ஏதோ கபகபவென பற்றி எரிவதாய். சுரக்கும் எச்சில் கூட குமட்டிக்கொண்டு வரும் ஒரு விதமான கசப்பாய்.

தூ… எப்புடி தான் குடிச்சு தொலைக்கிறான்ங்களோ?

நேரம் செல்லச் செல்ல கண்கள் சொருகியது. மயக்கமாக வந்தது. மிதப்பது போலொரு உணர்வு அதிகரித்து ஏதோ புதியதொரு உலகத்திற்குள் பிரவேசிப்பதாய்… அவள் நிம்மதியாக தூங்கிப் போனாள்.    


நன்றி : ஞானம்

இருள் - பிரமிளா பிரதீபன்

By On April 13, 2020

இருளிற்கும் காமத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன...?

இருளுடனான பிரயாணங்கள் இப்பொழுதெல்லாம் சாத்தியப்படுவதேயில்லை. முகத்தில் தொடங்கும் பார்வை படர்ந்து பரவி எங்கெல்லாமோ நிலைக்குத்தி நிற்கின்றது. உடலை மறைக்கத்திமிறும் உடையை ஊடுருவி அதிவேகமாய் பிரயாணிக்கும் விரச பார்வைகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கின்றது.

இந்த ஆண்கள் நிஜமாகவே போதையுடன்தான் பிரயாணிக்கிறார்களோ...! பின் எப்படி இத்தனை அருவருப்பை அவள் பிரதிபலித்த பின்னும் இடைவிடாமல் பார்வைகளால் அவளை ஸ்பரிசிக்க முடிகிறது ?
எத்தனை முறைதான் முறைப்பது... எத்தனை முறைதான் சேலையை சரிசெய்வது ? அவளோடு சேர்த்து இன்னும் இரண்டு பெண்கள் பேருந்திற்குள் இருக்கிறார்கள். அவர்களும் கூட இதே அவஸ்த்தையுடன் தலை குனிந்தபடி நின்றுகொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது.

பெண்கள் மூவருமாய் தனித்து தெரிவதால் அந்த பார்வை மொய்ப்புகளா அல்லது இருளின் அடர்த்தி இவர்களுக்குள் காம உணர்வை அள்ளி அப்பியுள்ளதா...?
பேருந்து விரைந்து கொண்டிருக்கிறது. ஒருவன் அவளது கழுத்துடன் கீழிறங்கி மார்பு பகுதிக்குள் தன் பார்வையை நிறுத்திக்கொண்டான். அவள் நின்றபடி பிரயாணிப்பதால், அருகில் அமர்ந்திருந்த ஒரு கிழவன் இடையில் தெரியும் சிறு இடைவெளியை விடாமல் அவதானிக்கிறான். பக்கம் நிற்கும் தடித்த ஒருவன் காற்றில் பறக்கும் அவளது கேச ஸ்பரிசத்தை கண்மூடி அனுபவிக்கிறான்.

அவள் பார்வைகளால் தொடர்ச்சியாக தீண்டப்படுகிறாள். தனது அனுமதியின்றியே பலரது விரச பார்வைகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாள்.
எத்தனையோ பகற் பொழுதுகளை பேருந்து பிரயாணத்தில் அவள் கழித்திருந்தாலும் இத்தகையதொரு அவஸ்த்தையை வெளிச்சம் அவளுக்கு உணர்த்தியதேயில்லை.
இப்போதைய அவளது சந்தேகமெல்லாம் இந்த இருளின் மீதானது அல்லது இருளுக்குள் கசியும் நிலவினதும், மின்விளக்கினதும் ஒளியின் மீதானது.

பலரின் அந்தரங்கங்கள் இருளுக்குள்தான் வெளிப்படுகிறது. உலகின் பாதி அசிங்கங்கள் இருளுக்குள்தான் அரங்கேறுகின்றன. இருள் ஒரு கறுப்பு அரக்கன். ஆண்களுக்கு சாதகமானவன். காம உணர்ச்சியை அதிகரிக்கத் துடிப்பவன். போதையுடனான மானிடர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு குதூகலிப்பவன். 

இருளுடன் காமம், போதை என்று இந்த மூன்றுமாய் ஒருமித்து சிற்றின்ப உலகின் உச்சத்தை தொட ஒவ்வொருவனையும் உந்துமாப் போலொரு பிம்பத்தையே பிரமாண்டமாக்கி காட்டிக் கொண்டிருக்கிறது.  இதில் பிரதான நுகர்வோன் ஆணாய் இருத்தலும், நுகர்விற்கு மிகத்தகுதியான அதிகூடிய போதைத்தரும் போகப்பொருளாய் பெண் உணரப்படுவதுமே ஆபத்தின் விளிம்பென்று எண்ணிடத்தோன்றுகிறது.

இருளும் போதையும் சந்திக்குமொரு உச்சப் புள்ளியிலேயே பெரும்பாலான ஆண்கள் தங்கள் நிரந்தரமாக அணிந்துக்கொண்டிருக்கும் அல்லது யதார்த்த உலகினால் தமக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடியினை தயக்கமின்றி பிய்த்தெறிந்துவிட்டு சுயத்தை வெளிப்படுத்த துணிகின்றனர்.
அதனை எப்பொழுதாவது மட்டுமல்ல எப்பொழுதுமே... அவனுக்குத் துணையாயிருக்கும் ஒரு பெண்ணினால் மாத்திரமே அவதானிக்க முடிகிறது. அனேக பொழுதுகளில் அந்த பெண் மனைவியாகிப் போகிறாள். இல்லையேல் காதலியாகின்றாள். இந்த இரு பிரிவினருமே தன் துணையென ஏற்றுக்கொண்ட ஆடவனை அனுசரிக்க கற்றுக்கொண்டவர்களாக இருப்பதால் அவனது எதிர்மறை குணவியல்பை வெளியே கொண்டு செல்லவோ, பிய்த்தெறிந்த அவனது முகமூடியை முற்றாக அழித்து அவனை சுயத்துடன் உலகில் அலையவிடவோ துணிச்சலற்றவர்களாகின்றனர்.

தன்னை போகத்திற்கென அழைக்கும் கணவனை தொடர்ச்சியாக மறுக்கும் எந்தவொரு மனைவிக்கும் முகமூடியற்ற ஒரு ஆணை சந்தித்து மீண்ட அனுபவம் நிச்சயமாய் இருக்க வேண்டும். ஆனால் அதனை வெளி உலகுடன் பகிர்ந்து கொள்ளும் திடம்தான் எவருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை.

'(ட்)டீ.'

'வச்சிட்டுப் போ..' என அதட்டுவான்.

'தண்ணி நின்னு போச்சி மோட்டர போடுறிங்களா...?'

'இந்த அயன் பொக்ஸ ஒன் பண்ணி வச்சிட்டேன் போல கொஞ்சம் பாக்குறீங்களா...?'

'தண்ணி வருதில்ல மோட்டர போட்டுதான் விடுங்களே...'

'ஐயோ.... காதுல விழுதா இல்லயா...?

என்னதான்  சத்தமாக அவள் கத்திக்கொண்டிருந்தாலும் எதிர்திசையிலிருந்து எந்த பிரதிபலிப்புமே வராத காலைப் பொழுதுகள் அவனது இறுக்கமான முகத்துடனும் அலட்சியமான பதில்களுடனும் கழிந்த அனுபவம் அவளுக்கு பல தடவைகள் ஏற்பட்டதுண்டு.
அத்தகைய நாட்கள் அடுத்த கூடல் வரையிலுமே நீண்டுக்கொண்டிருக்கக் கூடியன.
'ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்'  என்று வள்ளுவர் கடைசிக் குறளில் எதையோ சொல்லிவைத்துவிட்டு சென்றதாய் ஞாபகம். 
தானொரு ஆண் என்பதால் ஒருவேளை திருவள்ளுவரால் அப்படி சிந்தித்திருக்க முடியும். இதனையே வாசுகியின் ஆலோசனையுடன்  அவர் எழுதியிருப்பாராயின் 'கூடுதல் காதலுக்கின்பம்' என்றவாறாகத்தான் இக்குறள் மாற்றியமைக்கப் பட்டிருக்கக்கூடும்.

பக்கச்சார்புடன், அப்படியாக எழுதிவிட்டு சென்ற திருவள்ளுவர் மீதும் ஒரு கட்டத்தில் அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. 
ஏதோ ஒரு அசதி... தவிர்க்கவியலாமல் முரண்டு பிடித்து உணர்வுகளை முந்திக்கொள்ளும் தூக்கம்... மறுநாளைய அத்தனை சந்தோசங்களையும் கௌவிக்கொள்கிறதே...!
சிந்தனைகளை திரட்டி ஒருமுகப்படுத்தி கூடலுக்கான தயார்நிலையில் தன்னை வெளிப்படுத்தும் திறன் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்திய படாமைக்கு, எண்ணிக்கையற்ற வேலைகளும் சுமைகளும் அடுத்த நாளிற்கான ஆயத்தங்களுமே காரணமாகித் தொலைகின்றன. அன்றேல் அன்றைய முழு நாளிலுமான தொடர்ச்சியான உடலுழைப்பு படுக்கையில் சாய்ந்த மறுநொடியே கைகால்களை நீட்டி உடலை தளர்த்தி ஆசுவாசப்பட மாட்டோமாவென ஏங்கித்தவிக்க வைக்கிறது.

இதனையெல்லாம் விளக்கி விடுபடுதலோ அல்லது தாம்பத்தியத்திற்கென்று குறிப்பிட்ட இரவுகளை தெரிவு செய்து கொள்ளுதலோ யதார்த்தமாகிவிடுமா என்ன...?

இவையெல்லாமே அடிக்கடி என்றில்லையானாலும் இல்லையென்பதற்கில்லை என்றே அவளால் நம்ப முடிந்தது. 
ஆக ஒரு சராசரி நல்ல ஆண்மகனை எதிர்மறையாக திசைத்திருப்பும் துஷ்டச்செயலை வீடு முதற்கொண்டு பொது இடங்கள் வரையான எல்லா இடங்களிலுமே இந்த இருள்தான் செய்துக்கொண்டிருக்கிறது.
அதிகம் ஏன்...! நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணத்தையே இடையில் நிறுத்தும் வல்லமை இந்த இருளுக்கு மட்டுமேதான் இருக்க முடியும்.

தூரத்து உறவில் அம்மாவின் சகோதரி முறையாகும் கனகமணி சித்தியின் மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை, ஏதோ வேலையாய் வந்திருக்கிறான். அன்றைய இரவு பொழுது அங்கேயே தங்கவும் நேர்ந்திருக்கிறது.
மொத்தமாய் இருள் கௌவிய  நடுநிசியில் இளையவளின் படுக்கையில் ஊர்ந்து வந்த கையொன்று அவளை விரல்களால் கோலமிட... அவள் கத்தியலறி, பதறி லைட்டை போட்டிருக்கிறாள்.
'(ச்)சாஜர்..... போன் (ச்)சாஜர தேடினேன்' என்று தட்டுத்தடுமாறி சொன்னானாம்.
அவனது கெட்டநேரம் மூத்தவள் அன்று வீட்டில் இல்லை. இருந்திருந்தால் அறைமாற்றி வந்துவிட்டதாய் புதிதாய் ஒரு முகமூடியை அக்கணமே தயார் செய்து அணிந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அத்தகையதொரு நாளிலும் அவனை தடுக்காது வேகமாய் உந்திய கொடுமைக்கார இருள் அந்த திருமணத்திற்கே யமனாகிப்போயிற்று.

கனகமணி சித்திதான்;, 'நல்லதுன்னு சொல்லுவனா.... கெட்டதுன்னு சொல்லுவனா நாசமத்து போனவன் ராவோடு ராவா இப்புடி புத்திய காட்டிட்டானே....' என்று மாரில் அடித்தடித்து மாதக்கணக்கில் புலம்பிக்கொண்டிருந்தாள்.   அவனோடு சேர்த்து அன்றைய இரவு பொழுதையும் கெட்டவார்த்தைக் கொண்டு அசிங்க அசிங்கமாக திட்டித்தீர்த்தாள்.

அவன் ஏன் தங்கைக்காரியின் அறையை நாட வேண்டும்? அசாத்திய தைரியத்துடன் அவளை ஸ்பரிசிக்கும் அளவிற்கு ஏன்  துணிய வேண்டும்...?
இருளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆண்திமிரின் வெளிபாடுதான் ஒரு பெண்ணின் உணர்வை இருளுடன் இணைத்து மெதுவாய் தன்வசப்படுத்திக்கொள்ள அவனை தூண்டியிருக்குமோ...!

எப்படியோ நாள் பொழுதொன்றின் முற்றிலும் மாறுபட்ட... எதிர்மறையான பக்கத்தை காட்டி நிற்பதான இருள்...  ஒரு மனிதனின் மொத்த இருண்ட பக்கத்தினையும் அறிந்திருக்க கூடியதொரு  அதிசயமாகவே தெரிகின்றது. மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான சதிகளுக்கு உடன்படும்; ஒரு சூத்திரதாரியாகவே இருள் தன்னை அடிக்கடி காட்டிக்கொள்கின்றது. 
 
இன்னும் சிறிது தூரத்தில் அவள் இறங்க வேண்டும். பேருந்தின் சரிமத்தியில் நின்று கொண்டிருப்பதால், ஏதோ ஒரு பக்கம் நடந்தே நகர வேண்டிய கட்டாயம். அது பின் கதவு வழியாகவெனின் இத்தனை நேரம் ஒரு பக்கவாட்டில் அவளை மொய்த்த கண்களுக்கு அவளது மொத்த உருவத்தையும் பார்வையால் அள்ளி விழுங்கும் வாய்ப்பை தந்ததாகிவிடும். முன் கதவெனின் அவளது பின்புற அசைவு வெறித்து நோக்கப்படும். 
இரண்டிலுமே அவளுக்கு உடன்பாடில்லை. யன்னல்வழி தாவிக் குதித்திட இயலுமென்றால் இந்நேரம் குதித்து ஓடியிருக்கலாம்.

அவளுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது. இரண்டு பக்கமுமாக மாற்றி மாற்றி பார்த்தபடி முடிவெடுக்க தயங்குகிறாள். இந்த ஒவ்வொரு பார்வையினதும் உள்ளக கற்பனை எந்த எல்லையைத் தொட்டு மீள்கிறதென்று எங்கனம் அவளால் அறிந்துக்கொள்ள முடியும்...?
சற்றே தள்ளி ஒரு பக்கமாய் சரிந்து பேருந்தின் பின் வாசருக்கருகில் நின்று கொண்டிருந்த அந்த இன்னொரு பெண்ணும் அங்கும் இங்குமாய் அசைந்ததைந்து கம்பியில் கையை வைத்து பிடிப்பதுவும் பின் எடுப்பதுவுமாய் தடுமாறிக்கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதை கடந்திருக்க கூடிய தோற்றம் அவளுக்கு.  நீலமும் கறுப்பும் கலந்ததொரு ஹேண்லூம் புடவையொன்றினை ஒசரி வடிவில் அணிந்திருக்கிறாள். குதியுயர பாதணியுடன் அவள் கால்களை மாற்றி மாற்றி சரித்துக் கொள்வதால் ஒரு பக்கமாய் சாய்ந்து அயர்ச்சியுடன் நிற்பதாய் தெரிகின்றாள்.  தனக்கு நின்றபடி பிரயாணிக்க முடியவில்லையென்பதை பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு எப்படியாவது உணர்த்திவிட நீணட நேரமாய் போராடி போராடி பாதி தூரத்தை கடந்து விட்டிருந்தவளாய், அவ்வப்போது தனது உடல் பாரம் முழுவதையும் இருக்கை கைப்பிடியின் விளிம்பிற்கு சுமத்தி, காற்பாதங்கள் வழியே இறங்கும் அவளது உடல் பாரத்தை தளர்த்திக் கொள்கிறாள்.

இருள் முழுவதுமாய் பேருந்திற்குள் சூழ்ந்து மின்விளக்கின் மங்கிய ஒளியை மறைத்து கொண்டிருக்கிறது. பேருந்திற்குள் இருந்த அந்த பெண்கள் இருவரும் எதனையுமே பெரிதாய் அலட்டிக் கொள்ளாதவர்களாய்... தினசரி இவற்றை அனுபவித்து பழக்கப்பட்டவர்களாய்... இதுவும் கடந்து போகுமெனும் மனநிலையில் நின்று கொண்டிருப்பதாகவே படுகிறது.

மனதால் புழுங்கி சபித்து நொந்துக்கொள்வதை விட, கண்டும் காணாத பாவனையிலான அத்தகைய மனத்திடமும் ஒரு வகையான மோட்ச நிலைதானோ...!
இதோ தான் இறங்கும் தருணமும் வந்தாயிற்று. எந்த சண்டாளன் முகத்திலும் விழிக்கும் திராணி அவளிடத்தில் இல்லை. முன் கதவுவழி இறங்குவதற்காய் மெதுவாய் நடக்கின்றாள்.
சடாரென்ற பஸ்நிறுத்தம் ஒரு தடவை அவளை குலுக்கி எடுக்கிறது. தடுமாறிப் போனவளாய் பதட்டத்துடன் இறங்கிக் கொள்கிறாள். இத்தனை நேரம் பலரது பார்வைகளை சுமந்து கொண்டிருந்த அவளுடல் சற்றே ஆசுவாசிக்கிறது. துணித்துண்டொன்றோ தும்போ கொண்டு தேய்த்துதேய்த்து.... துடைத்து ... அத்தனை பார்வையெச்சங்களையும் கழுவிக்கொள்ள அவள் துடிக்கிறாள்.
என்னதான் கழுவி துடைத்து தூய்மையாக்கிக்கொண்டாலும் ஒவ்வொரு இருள் பொழுதுடனான சங்கமத்துடனும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள திமிற வேண்டும் என்பது நிஜம்தானே...!

நினைக்க நினைக்க கோபத்தின் பரவல் அவளை முழுதாய் ஆட்கொள்கின்றது. கோபத்தின் மொத்த பங்கும் சடாரென இருளின் மீது திரும்புகிறது.
நின்ற நிலையில் இருளையே உற்று நோக்குகின்றாள். பாதையில் கிடந்த ஒரு கல்லை பொறுக்கி ஆவேசத்துடன் முன்னால் தெரியும் இருளின் மீது ஓங்கி வீசுகின்றாள். இருளின் கறுத்த உடலை கிழித்துக்கொண்டு அந்தக்கல் வேகமாக உட்செல்கின்றது.                       
 
............................................................................


கட்டுபொல் கத்தி - பிரமிளா பிரதீபன்

By On April 13, 2020

கட்டுபொல் கத்திக்கும் அத்தோட்ட ஆண்களுக்குமான உறவு விசித்திரமானது.

 புலர்தலுடன் ஆரம்பிக்கும் கட்டுபொல் கத்தியின் ஸ்பரிசம் அவர்களை விட்டகல்வதேயில்லை. விரும்பியோ விரும்பாமலோ மதிய உணவிற்கு வரும் போதும் கூட, கட்டுபொல் கத்தியின் சரி மத்தியை தோளில் வைத்துக்கொண்டபடி வேகமாக நடந்து வருவார்கள். ஓவ்வொருவரதும் நடைத்தாளத்திற்கேற்ப நாற்பது அடிவரை நீளமான குழாயில் பொருத்தப்பட்ட அந்தக்கத்தி முன்னும் பின்னுமாய் அசைந்தாடுவதை தூரத்தேயிருந்து பார்க்க, சித்திரமொன்றில் வரையப்பட்ட உருவங்கள் அசைவதையொத்து மிக வேடிக்கையாகவிருக்கும்.

சாதாரணமாக கட்டுபொல் கத்தியொன்றை தூக்கி, நிமிர்த்தி வைத்தலுக்கே ஏராளமான சக்தி விரயமாகிப் போவதுண்டு. அதனை சதா தோளில் சுமந்தபடி நடத்தல் ஒரு பாடென்றால் அந்தக்கத்தியைக்கொண்டு கட்டுபொல் கொப்புக்களை வெட்டி வீழ்த்துவது அவர்களுககு மட்டுமேயான வீரசாகசம்தான். 

தம்புரானை மிஞ்சி கட்டுபொல் வெட்டிவிட தோட்டத்தில் எவருக்குமே இயல்வதில்லை. உயரமாய் வளர்ந்த கட்டுபொல் மர உச்சியில் காய்த்து, சரியான பருவத்துடன் இருக்கும் கட்டுபொல் கொப்பை முதலில் இனங்காண வேண்டும். பின் வாதுகளுக்கிடையே கத்தியை மிகச்சரியாக நுழைத்து..... அடிப்பகுதியில் சொருகி..... தன் முழு பலத்தையும் கொடுத்து சரியான வேகத்துடன் இழுத்து அறுக்க வேண்டும்.

 அறுபடும் வேகம் கூடினால் படாரென தெறித்து துள்ளி விழும் அந்தக்கொப்பு சரியாக தலையிலேயே விழுந்துவிடும் அபாயமுண்டு. குறைந்த வேகத்துடன் வெட்டுப்பட்டால் ஒரு கொப்பை வெட்டிக்கொள்ள அதிகநேரம் விரயமாகிப் போய்விடும். 

மூன்றே வெட்டில் சரக்கென்று திசைபார்த்து வெட்டி சரியான இடத்தில் கொப்பை விழவைக்கும் கெட்டித்தனம் தம்புரானிடம் சற்று அதிகமாகவே இருந்தது.

 தொடர்ச்சியாக அண்ணாந்து பார்த்து கட்டுபொல் கொப்புகளை வெட்டி வீழ்த்துகையில் கழுத்து வலியெடுத்து வீங்கிப்போயிருந்தாலும் நாளொன்றுக்கு குறிப்பிட்ட நாற்பது கொப்புகளை தாண்டி, அதிக கொப்புகள் வெட்டக்கூடிய ஒரே ஒருவனென தம்புரான் தோட்டத்திற்குள் பேசப்பட்டான். இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக 'கட்டுபொல் வெட்டுதலில் மிகச்சிறந்த தொழிலாளி' எனும் சான்றிதழும் மூவாயிரம் ரூபாய் பணப்பரிசும் தம்புரானுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. அந்த சான்றிதழ்களை தனக்கு கிடைத்த பெரிய வெகுமதியாய் எண்ணி வீட்டிற்குள் நுழையும் போதே தெரியுமாப்போல் ப்ரேம் போட்டு மாட்டிவைத்திருந்தான்.

 சான்றிதழ்களின் நடுவே சிங்களத்தில்; கொட்டை எழுத்தில் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. தம்புரானின் மனைவியும் அடிக்கடி அவற்றை துடைத்து நேர்த்தியாக சுவற்றில் மாட்டி பெருமைப்பட்டுக் கொள்வாள்.

வழமை போலவே அன்றும் அண்ணாந்து கூர்ந்து அவதானித்து வாதுகளுக்கிடையே தன்னை ஒளித்துக்கொண்டிருக்கும் கட்டுபொல் கொப்பின் அடிப்பகுதியை துல்லியமாய் கண்டு... கத்தியை ஒரேசாத்தாய் சொருகி... தன் முழுப் பலம் கொண்டு வெட்டி இழுத்தான். மூன்று முறை அறுபட்டு நான்காவது வெட்டில் சலாரென வாதுகளுடன் உராய்ந்து மரத்தை எட்டி சற்றே தள்ளினாற் போல கொப்பு விழுந்தது. அதிலிருந்து தெறித்த கட்டுபொல் கொட்டையொன்று வீசுப்பட்டு தலைக்கு மேலாக பறந்தது. அடுத்த மரத்திற்கு போக முன் தம்புரான் சற்றே நிதானித்தான். முதல் நாள் இரவின் போதை இன்னுமே தொற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்து மெதுவாக செயற்பட்டான்.

'என்ன தம்பு இன்னமும் தெளியலயோ......!' அருகில் கட்டுபொல் வெட்டிக்கொண்டிருந்த முருகேசு கிண்டலடித்தான்.

 'பின்ன.... இந்த பாரத்த தூக்கி ஓஞ்சா நிம்மதியா தூங்கவா முடியுது...? ஓடம்பு பொரட்டியெடுத்து வலிச்சா என்னதாண்டா செய்யுறது மசுறு'

 'சரி சரி பாத்து வெட்டு மாப்புள...'

 இருவருமாய் ஆளுக்கொரு மரத்தடியில் நின்றபடி அடுத்த கொப்பிற்கு குறிவைத்தனர். தம்புரான் கத்தியை மெதுவாக நிமிர்த்தி உருண்டு பெருத்திருந்த கொப்பொன்றின் அடிப்பகுதிக்குள் திணித்தான். கொப்பின் அடிப்பகுதிக்குள்; சிக்கிக்கொண்ட கத்தி உறுதியிழந்து அசைவதாய் தோன்றியது பிரமையோவென மேலும் ஒருதடவை இழுத்து அசைத்துப்பார்த்தான். கத்தி பொருத்தப்பட்ட குழாயில் இருந்து தளர்ந்து லேசாக ஆடிக்கொண்டிருந்தது. கொப்பின் அடிப்பகுpயை இறுக்கமாய் பிடித்திருந்தது. முதல் நாள் போதையுடன் கத்தியை தீட்டி பொருத்தியது பெருந் தவறென்றே அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது கத்தியை மரத்திலிருந்து எடுத்தாக வேண்டுமே...! முழுவதுமாய் கத்தி கழன்று அகப்பட்டுக்கொண்டால் பின் எடுக்க மிகவும் சிரமமாகிப் போய்விடுமென்று அவனுக்குத் தெரியும். 

மெதுவாக அசைத்தசைத்து கத்தியை இழுக்க முனைந்தான். இயலவில்லை. கடைசியாக ஒரு முயற்சியென்று எண்ணிக்கொண்டு ஒரே தடவையில் கத்தியை முழுவதுமாய் எதிர்புறமாய் இழுத்தான். சற்றும் எதிர்பாராமல் அந்த நீளமான குழாய் சரிந்து கையுடன் வர, கத்தி வீசுப்பட்டு உயரத்தேயிருந்து தோள்பட்டையுடன் உராய்ந்து சதக்கென்று விழுந்தது.

 என்ன நடக்கிறதென்று தம்புரானால் சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை. எல்லாமே ஒருகணம் ஸ்தம்பித்தவனாய் அரண்டு போய் ஓரிரு நொடிகளுக்கு பின்னேயே உணர்வுநிலைக்கு வந்தான். தோள் பட்டையுடன் உராய்ந்து விழுந்த கத்தி சதைத்துண்டு சிறிதளவையும் சேர்த்தே சிறாய்த்து விசிறியிருந்தது. இரத்தம் பரவி உடலின் கீழு;புறமாக வழிந்தோடத் தொடங்க, அதனை கண்ட மாத்திரத்தே மயங்கி விழுந்தான் தம்புரான். 'ஐயய்யோ... ஐயய்யோ....' என்று பதறி தவித்தபடி அக்கம் பக்கம் கட்டுபொல் வெட்டிய ஆண்கள் சிலர் ஓடி வந்தனர். சத்தம் கேட்டு அருகில் கொப்பு தூக்கிக் கொண்டிருந்த பெண்களும் வந்து குவிந்துக்கொண்டனர். பீறிட்டு பரவும் இரத்தம் கண்டு நிதானமிழந்து தவித்தனர். ஆண்கள் தமக்குள் பிரிந்து வேகமாக செயற்பட்டு, இருவர் தம்புரானை தூக்கிக் கொண்டு பாதைக்கு ஓட, இருவர் தோட்ட லொறியை கொண்டுவர விரையவென்று....

நினைத்த வேகத்தில் தம்புரான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனை தூக்கிச் சென்ற பாதை நெடுகிலும் இரத்தம் வழிந்து ஒரு கோடாய் அடையாளம் காட்டியது. 

கூர்மையான அந்த கட்டுபொல் கத்தி இரத்த கறையுடன் ஒரு புறமாயும், நீளமான குழாய் வேறொரு புறமாயும் கிடந்தன. நெஞ்சு பதற... பதற.... அந்த கத்தியை எடுத்து படிந்திருந்த இரத்தக்கறையை சில இலைகள் கொண்டு அழுந்த துடைத்து கட்டுபொல் காட்டிற்க்குள்ளேயே வீசியெறிந்தான் ஒருவன்.

 'இந்தா.... நல்லா குடி.... இன்னும் எத்தன பேர் ரெத்தத்ததான் குடிக்கிறன்னு பாத்துருவோம்;...' 

அவன் நெஞ்சு தேம்பியது. வெளியேறிய இரத்தத்தின் அளவு தம்புரானுக்கு என்ன ஆகப்போகிறதோவெனும் அச்சத்தை சிலருக்குள் உண்டு பண்ணியிருந்தது.

கூட்டம் கூட்டமாக நின்று ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் இந்த வருடம் தம்புரானுக்கு சான்றிதழும் மூவாயிரம் ரூபாய் பணமும் கிடைக்க வாய்ப்பேயில்லையென பேசிக்கொண்டிருந்தனர்.