நடத்தை மாற்றம் - பிரமிளா பிரதீபன்
ஒரு உயிரியின் நடத்தையில் ஏற்படும் சார்பு நிலையிலான நிரந்தர நடத்தை மாற்றத்தைத்தான் கல்வியின் சிறந்த பெறுபேறென எதிர்பார்க்கிறோமா?
கல்வி பற்றியதான நடைமுறை புரிதலும் அறிவுறுத்தல்களும் கூட அதையேதான் வலியுறுத்துகிறதா?
பொதுவாக அறிவைப் பெறுதலையும் புதிய நடத்தைகளை ஆற்றுவதற்கான ஆற்றலை விருத்தி செய்தலையும் கல்வி என்பதாக கூறுகின்றனர். நடத்தை மாற்றப்படும் ஒழுங்குப்படுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் செயன்முறையை கல்வி என்பதாக சிலர் வரையறை செய்கின்றனர். ஆற்றலை அல்லது நிபுணத்துவத்தை தேடும் செயன்முறையே கல்வி என்பதாக (Knows 1998) கூறுகிறார். அவதானிக்கக்கூடிய வெளிவாரியான நடத்தை மாற்றமே கல்வியென்பதாய் ( Keith Rutledge 2003) கூறுகிறார்.
ஆனால் சமகால கல்வி நடைமுறையில், எதிர்பார்க்கப்படும் இவ்வடைவுமட்டங்கள் எய்தப்பெறுகின்றனவா? அல்லது அதற்குரியதான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சாத்தியப்படுகின்றனவா என சிந்தித்தால் அனேகமாக அறிவைப்பெறுதலை நோக்கியதான வேகமான முன்னெடுப்புகளே வரவேற்கப்படுகின்றன எனலாம். அதிகமாக போட்டி மனப்பான்மையை விஸ்தரிக்கும் எதிர்மறையான நடத்தை விளைவுகளையே மாணவர்கள் தம்மத்தியில் வளர்த்துக் கொள்வதை வெகுவாக அவதானிக்க முடிகிறது.
கோட்பாட்டுப் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் இயங்குவடிவமாக செயற்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டமானது நடத்தை மாற்றத்தினை கருத்திற்கொண்டே தயாரிக்கப் பட்டிருக்கிறது. மேலும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல் அனுபவங்களை ஒழுங்கமைத்தல் முதலியவையும்கூட கலைத்திட்டத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்களின் உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் கருத்திலே கொண்டுதான் கலைத்திட்டமானது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஓரளவில் உளவியல் தழுவிய நிலையிலேயே கல்விக்கலைத்திட்டமானது வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூட எண்ணிக்கொள்ள முடிகிறது.
இதன்படி கலைத்திட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எமது சமகால கல்வி முறைமையுள் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சி மட்டங்கள் அடையப்பெற வேண்டும் என்பதே கற்றல் கற்பித்தல் நகர்வுகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கலைத்திட்ட மாற்றங்களும் இவ்வடைவுமட்ட வீழ்ச்சியின் அவதானிப்பின் பேரிலேயே நடைபெற்றவண்ணம் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
மிகத்தேர்ச்சிபெற்ற கல்வியியலாளர்களால் கலைத்திட்ட மாற்றங்கள் திட்டமிடப்பட்டும், நடைமுறைப் படுத்தப்பட்டும் அறிவுறுத்தல்களும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றும்கூட எதிர்பார்த்த பிரதிபலன்களை ஏன் பெறமுடியவில்லையென்பது சிந்திக்க வேண்டிய விடயமாயிருக்கிறது. எதிர்பார்த்த விடயமென இங்கே நான் சுட்டியது சமூகத்திற்கு பொருத்தமான நடத்தை மாற்றத்தை மாணவர்களிடத்தே ஏற்படுத்த முடியாமையையே.
பொதுவாக பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் மாணாக்கரின் மனப்பாங்கானது பின்வருமாறு அமைந்திருப்பதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.
- தெரிவு செய்யப்பட்ட தொழில் வகைகளை மாத்திரம் விரும்புதல் (white color jobs)
- பிரச்சினை தீர்க்கும் ஆற்றலில் தளம்பல் நிலையிருத்தல்
- மென்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் பற்றிய ஆர்வமின்மை காணப்படல்
- போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்
- நிலையான, உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனின்மை
- உடனடி வளர்ச்சியையும் மாற்றங்களையும் எதிர்பார்த்து மனச்சோர்வடைதல்
- தற்கொலை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோகம் கொண்டிருத்தல்
மேற்கூறியது போன்ற மனப்பாங்குகளுடன் சமூகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களால் தொடர்ச்சியான சமூகச்சவால்களை எதிர்கொள்ள முடியாதென்பதும் ஒரு கட்டத்திற்குமேல் சோர்விற்குள்ளாகி மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவர் என்பதுவும் தெளிவு. எனினும் இதனையொத்த மனப்பாங்குகளையுடைய மாணவர்களையே எமது கல்வி முறைமை அதிகமாக உருவாக்குகிறது எனும் பட்சத்திலேயே இதற்கான சரியான மாற்றுவழி அல்லது செய்தேயாகவேண்டிய திட்டமிடல் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாயிருக்கிறோம்.
மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் பரீட்சைமைய கல்விமுறையை இறுகப்பற்றியர்களாய் அதற்கான அத்தியாவசியத்தை நிரப்பிவிட வேண்டுனெவே அனேகமாக முனைகின்றனர். அறிவு, திறன் மனப்பாங்கு ஆகிய மூன்று கூறுகளது விருத்தியினூடாக முயற்சித்தாலேயன்றி ஒரு மாணவனது நடத்தை மாற்றத்தை உறுதியாக மாற்றிவிடல் சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் கருத்திற் கொள்ள மறுக்கிறார்கள். (வெறுமனே அறிவை மட்டும் குறிக்கோளாக கொள்ளுமொரு பிள்ளை பாடசாலை கல்வியை நாடவேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் சமவயது குழுவினருடன் இயங்க வேண்டிய தேவையும் இராது.) நடத்தை மாற்றமே கல்வியின் எல்லையென கருதும் போது மாத்திரமே அறிவுடன் திறன்களும் மனப்பாங்கும் விருத்தியடைய வேண்டியதன் அவசியம் பற்றி ஆசிரியர்கள் சிந்தித்து செயலாற்ற தலைப்படுவார்கள்.
கல்வியின் நான்கு தூண்கள்
21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி ஆராய்ந்த சர்வதேச ஆணைகுழுவின் அறிக்கையில் (Delors Report--1996) மனித குலம், தனியாட்கள், நாடுகள் என்பவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான கல்வியின் பங்கு பற்றி விரிவாக கூறப்பட்டது. இவ்வறிக்கையானது மனித வளர்ச்சிக்குத் தேவையானவை அனைத்தும் கல்வியில் பொதிந்து கிடப்பதாக கூறியது. அத்துடன் நான்கு தூண்கள் அடிப்படையில் கல்வி பற்றிய தொலைநோக்கொன்றையும் இவ்வறிக்கை முன்மொழிந்தது. அவையாவன.
1. அறிவை பெறும் வகையில் கற்றல் (Learning to know)
பரந்த பொது அறிவு, சில பாடங்களில் ஆழமான அறிவு, பிற்கால வாழவில் சுயமாக கற்க உதவும் திறன்கள் பற்றிய அறிவு என்பவற்றை இது உள்ளடக்கும்.
2. செய்வதற்கு கற்றல் (Learning to do)
தொழில்த்திறன்கள், வெவ்வேறு நிலைமைகளில் பணி புரியவும் குழுக்களில் சேர்ந்து வேலை செய்யவும் தேவையான பரந்த தகைமைகள் என்பவற்றை இது கருதும். முறையான பாடநெறியினூடாகவும் சமூக வேலை அனுபவங்களினூடாகவும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
3.வாழக்கற்றல் (Learning to be)
ஒருவர் சில அடிப்படை விழுமியங்களைக்கொண்டு தனது ஆளுமையை விருத்தி செய்யும் ஆற்றல் கூடிய சுயாதீனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுதல் பற்றியது. அதாவது கல்வியானது ஒருவரின் நினைவாற்றல், காரணங்காணுதல், உடல் ஆற்றல் தொடர்பான திறன்கள் என்பவற்றை கருத்திற் கொள்ளல் வேண்டும்.
4. இணைந்துவாழக் கற்றல் (Learning to live together)
மற்றவர்களுடன் சேர்ந்து வாழக்கற்றல் எனும் நான்காவது நோக்கு அமைதியையும் மற்றவர்களையும் மதித்தல், பிறரை புரிந்துக்கொள்ளுதல், தனியாட்களும் சமூகங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு வரவேற்கும் மனப்பாங்கை குறிக்கின்றது.
சர்வதேச ரீதியாக பயன்படுததக்கூடிய ‘கல்வியின் நான்கு தூண்கள்’ பற்றிய இப்பரிந்துரையை அடியொற்றியே இலங்கையில் கல்வியின் இலக்குகள் வகுக்கப்பட்டன. தொடர்பாடல் சமூக உயிரியல், பௌதீக சுற்றாடல், அறவொழுக்கம், சமயம், ஓய்வு நேரத்தை பயன்படுத்தல், கற்பதற்கான திறன்களை கற்றல் என்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பான தேர்ச்சிகளை மேம்படுத்தல் இவ்விலக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
பாடசாலை கல்விக்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்ட புதிய கல்வியியல் இலக்குகளில் படைப்பாற்றலுக்கான திறன்கள், துருவி ஆராயும் திறன்கள், அணியாக சேர்ந்து பணியாற்றும் திறன்கள், அறிவை புதுப்பித்துக் கொள்ளவும் அதனை பரிசீலனை செய்யவும் தேவையான திறன்கள் என்பனவும் அடங்குகின்றன.
இத்தகைய நவீன இலக்குகள் அடையப்படவேண்டி எடுக்கப்படும் முயற்சிகள் ஒருவனது நடத்தைமாற்றத்தை உறுதியாக கணிக்கும் அளவுகளாக இருப்பதுடன் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றினதும் விருத்தி தொடர்பாகவும் தெளிவினை எற்படுத்தும். எனினும் இலங்கையில் உள்ள பாடசாலை நிருவாகங்களும் ஆசிரியர்களின் மனநிலையும் அத்தகைய இலக்குகளை அடைய போதுமானதாக இருக்கிறதா என்றால்… சந்தேகமே.
குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழ்நிலையானது, மாணவர்கள் மத்தியில் மாத்திரமின்றி ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய மனஅழுத்தத்தினையும் எதிர்மறையான நடத்தை மாற்றங்களையும் தோற்றுவித்திருக்கிறது. அத்துடன் சூழ்நிலையால் தடைப்பட்ட கலைத்திட்ட சுமைகளும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைக்கோலங்களும் கூட கற்றல்கற்பித்தல் செயற்பாட்டின் போக்கினை செயற்கைத்தன்மையுடையதாக்கி பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் விதத்தில் மாற்றமடைய வைத்திருக்கிறது. இத்தகைய திடீர் மாற்றங்களானது கல்வியின் குறிக்கோள்களை திசைத்திருப்பி மீண்டும் பரீட்சைமையக் கல்வியின் நடைமுறையினை தோற்றுவிக்கும் ஆபத்தினை நோக்கி நகர்கின்றமையை அவதானிக்க முடிகிறது.
எவ்வாறெனினும் பிள்ளையின் நடத்தையை சமூகத்திற்கு ஏற்றாற் போல மாற்றவியலாத கற்றல் நடைமுறைகளின் மீது ஆசிரியர்களோ மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை உருவாக வேண்டும்.
எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
(குறள் 426)
கல்வியினூடாக மனிதன் சமூக இயல்பினனாக வேண்டும் என்பதையே இக்குறள் வலியுறுத்துகிறது. எனில் அவனது நடத்தை மாற்றமே இங்கு பிரதானமாக கவனிக்கப்படுகிறது.