Enter your keyword

Saturday, April 20, 2019

"கட்டுபொல்" – நாவல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்

By On April 20, 2019

இந்த நாவலின் ஆசிரியர் திருமதி பிரமிளா பிரதீபன், எனக்கு ஞானம் சஞ்சிகையின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர். ஞானம் சஞ்சிகை ‘புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ என அறிமுகம் செய்த முதலாவது படைப்பாளி இவர். அப்போது இவர் பிரமிளா செல்வராஜா என அறியப்பட்டிருந்தார். பதுளை மாவட்டம் - ஊவா, கட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ’அறுபதுகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத்தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவர்’ என ஒரு வாசகனின் குறிப்புகள் பகுதியில் மு.சிவலிங்கம் பதிவுசெய்கின்றார். இவர் ‘பீலிக்கரை’, ‘பாக்குப்பட்டை’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்திருக்கின்றார்.

இதுவரை காலமும் பெருந்தோட்டப் பயிர்களாக தேயிலை கோப்பி ரப்பர் கறுவா போன்றவற்றை அறிந்து வைத்திருந்தோம். ஏறத்தாள இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் மலையகத்திலும், இலங்கையின் தென்கரையோரப் பிரதேசங்களிலும் இந்தப் பெருந்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றார்கள்.  அதனுடன் கடந்த அரைநூற்றாண்டு காலமாக இந்த கட்டுபொல் செய்கையும் சேர்ந்து கொள்கின்றது. ‘கட்டுபொல்’ என்பது ஒரு சிங்களச்சொல். அதன் நேரடி தமிழ் வடிவம் ‘முள் தேங்காய்’.

நான் 2010 ஆம் ஆண்டு மலேசியா சென்றிருந்தேன். மலேசியா விமானநிலையத்திலிருந்து, நான் தங்கவேண்டிய ஹோட்டல் இருக்குமிடமான பெற்ரலிங் ஜயா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஏராளமான இந்தவகை மரங்கள் வரிசை கோர்த்து நின்றதைக் கண்டேன். வாகனச்சாரதி அவற்றை செம்பனைகள் என்றும், ஃபாம் ஒயில் தயாரிப்பில் அவை நாட்டப்பட்டுள்ளனவாகவும் சொன்னார். இந்த நாவலின் தலைப்பும், கதை நெடுகலும் கட்டுபொல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளதால் அதையே நானும் இங்கு பாவிக்கின்றேன். ஒரு தமிழ் நாவலின் தலைப்பை -சிங்களச்சொல் மூலம் நாவல் ஆசிரியர் குறியீடாகப் போட முனைந்திருப்பது வாசகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதாகவே நான் கருதுகின்றேன். இந்தக் கட்டுபொல் இலங்கைக்கு Jeromy Wales  என்பவரால் மலேசியாவில் இருந்து அறிமுகப்படுத்தபட்டதாக ஒரு குறிப்பு புத்தகத்தில் வருகின்றது.

‘கட்டுப்பொல்’ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்நாவலை எஸ்.கொடகே சகோதரகள் பிரைவேட் லிமிடட் இந்த ஆண்டு (2018) வெளியிட்டுள்ளார்கள்.

சின்னச் சின்ன அத்தியாயங்களாக, மூன்று சமூகத்தவரையும் பின்னிக்கொண்டே காலி மாவட்டத்திலுள்ள ’இகல்கந்த’ என்ற பெருந்தோட்டதைச் சுற்றி வலம் வருகின்றது இந்த நாவல். வறுமைப்பட்ட உழைக்கும் வர்க்கத்தைப் பிரிதிபலிக்கும் இந் நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு சிறு செய்தியைச் சொல்லிச் செல்கின்றது.

முள்ளம்பன்றி போன்ற முட்கள் நிறைந்த கட்டுபொல் கொப்புகளில் பாக்குகள் போன்ற 300 – 400 காய்கள் இருக்கும். கொப்புகள் ஒவ்வொன்றும் 30 – 60 கிலோ பாரம் கொண்டவை. ஆண்கள் கட்டுபொல் கொப்புகளை வெட்டி வீழ்த்துவார்கள். இதற்காக மிகவும் பாரமான 30 – 40 அடி நீளமுள்ள தடிகளில் கத்தியை இணைத்திருப்பார்கள். இவர்கள் அறுத்து வீழ்த்தும் கொப்புகளை பெண்தொழிலாளர்கள் தலையில் சுமந்து வாகனப்பாதை வரைக்கும் கொண்டு செல்லவேண்டும். இங்கே வெட்டப்படும் கட்டுபொல் கொப்புகள் அனைத்தும் பதுரெலியா என்ற இடத்தில் இருக்கும் பார்ம் ஒயில் பக்டரிக்கு எடுத்துச் செல்லப்படும். கட்டுபொல் காய்களின் தோல்பகுதியில் இருந்து பார்ம் ஒயிலும், தேங்காய் வடிவ பகுதியில் இருந்து கர்னல் ஒயிலும் எடுக்கப்படுகின்றது. பார்ம் ஒயில் - சமையல் எண்ணெய் மற்றும் மாஜரீன் சொக்ளேற் செய்வதற்கும்; கர்னல் ஒயில் – சவர்க்காரம், கீறீம் செய்யவும் பாவிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் காதல் சோடிகளான அமுதா – மாரியப்பன்,  நஸ்ரினா ரீச்சர் என்பவர்களைச் சுற்றி கதை வந்தாலும், நாயகன் நாயகி எல்லாமே அந்தக் கட்டுப்பொல் காடுதான். கூடவே ஒரு பாடசாலை. எழுத்தாளர் ஒரு ஆசிரியையாக இருப்பதால் நாவலில் பாடசாலையும் முதன்மை பெறுகின்றது. சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

தரம் ஐந்து வரையுள்ள இந்தப்பாடசாலையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டுவதில்லை. மற்றய சிறுவர்கள் வயல்வேலைக்குச் செல்வதிலும் வீட்டில் சிறுபிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஈடுபடுவார்கள். நஸ்ரினா என்ற ஒரு ஆசிரியர் இருந்த இடத்தில் மேலும் மூன்று ஆசிரியர்கள் திடீரென்று வருவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வசந்தன், பத்மபிரியா, திலகா என்ற மூன்று ஆசிரியர்கள் புதிதாக வருகின்றார்கள். மிகைப்படுத்தப்பட்ட காட்சி என்றாலும் அதன்பின்னர் மாணவர்களின் வருகையும் ஐந்து ஆறிலிருந்து இருபத்தைந்தாக உயர்கின்றது. இருபத்தைந்து மாணவர்களுக்கும் நான்கு ஆசிரியர்கள் சற்று அதிகம் தான். பாடசாலை முன்னேறுகின்றது. மாணவர்களும் ஆர்வமாகப் படிக்கின்றார்கள். மிகவும் பொறுப்பு வாய்ந்த ஆசிரியை நஸ்ரினாவிற்கு பக்கபலமாகின்றார்கள்

தோட்டத்தில் வேலை செய்பவர்களாக மாரியப்பன், அமுதா, செல்லத்துரை, ஆறுமுகம், ரவி, ராசதுரை வருகின்றார்கள். மாரியப்பன் கட்டுபொல் வெட்டுவதில் கை தேர்ந்தவன். தோட்டத்தின் முதுகெலும்பே இவர்கள்தான். கண்டாக்கு புஞ்சிபண்டா, தோட்டத்தலைவர் முத்துக்குமார், கங்காணி இராமநாதன் தொழிலாளர்களை அடக்கியாண்டு வேலை வாங்கும் துரைமார்கள். கட்டுபொல் தொழிலாளர்களை, எவர் எவர் எங்கு வேலை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவன் கண்டாக்கு புஞ்சிபண்டா. தருமலிங்கம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குபவன். தோட்டத்து பிள்ளைமடுவத்தை கவனித்து வருபவர் பத்ராமிஸ். இவர்களுக்கிடையே நடைபெறும் போராட்டம் தான் நாவலின் உயிர்நாடி.

வசந்தன் ஆசிரியரின் பிரவேசத்தின் பின்னர் பாடசாலை களைகட்ட ஆரம்பிக்கின்றது. மேலும் திலகா, பத்மபிரியா ஆசிரியர்களும் வந்து சேர்கின்றார்கள். பாடசாலை விடுதி தூசி தட்டப்பட்டு அங்கேயே அவர்கள் இருவரும் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் கலகலப்பானவர்கள். இணைபிரியா நண்பிகளாகின்றனர்.

பாம்புகள் பூச்சிகள் உடும்புகள் - கட்டுபொல் காட்டிற்குள் ஓடித்திரிகின்றன, கதை நெடுகலும் உடும்புகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. உடும்புக்கறி இகல்கந்தை வாசிகளின் பிரிய உணவு. உடும்புகளை கதையில் வரும் சில மாந்தர்களின் குறியீடாகவே பார்க்க முடிகின்றது. தேயிலைத் தோட்டத்திற்குள் அட்டைகளின் அட்டகாசம் பற்றி அறிந்திருக்கின்றேன். கட்டுப்பொல் காட்டிற்குள் அட்டைகள் இருக்கின்றதா என்ற கேள்வி பாதிவரை வாசித்துக் கொண்டிருக்கும்போதுதான் எழுந்தது. அப்புறம் அட்டைக்கடியும் வந்துவிடுகின்றது.

இவைகளின் மத்தியில், அந்தி சாய்ந்துவிட்டால் போதும். அச்சம் தரும் அந்தக் காட்டுக்குள் ஒளித்திருந்து சில்மிஷம் செய்யும் சோடிகள். காமத்திற்கு ஏது பயம்? பணம் கொடுக்க தேவையில்லாத பாதுகாப்பான ஹோட்டல்தான் இந்தக் கட்டுபொல் காடு என்கின்றார் ஆசிரியர்.

கதையில் சாரதா என்றொரு விதவைப் பாத்திரம். தோட்டத்தில் ஆண்கள் விட்டுவைப்பார்களா? தோட்டத்தலைவர் முத்துக்குமாருடன் தொடர்பு வைத்திருந்தால், காமவெறியர்கள் பயப்படுவார்கள் என நினைத்து அவனுடன் பழகுகின்றாள். ஒருநாள் கங்காணிக்குப் பயந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு வர, அவன் வேறொரு பெண்ணைத்தேடிப் போய்விட்டமை தெரிய வருகின்றது. அவள் வசந்தனின் வீட்டிற்குள் அடைக்கலம் புகுகின்றாள். தன் கதை சொல்கின்றாள். வசந்தனுக்கு அவளின்பால் ஈர்ப்பு வருகின்றது. இறுதியில் சாரதாவை வசந்தன் திருமணம் செய்து கொள்கின்றான்.

கங்காணி இராமநாதனிற்கு இளம்பெண்கள் என்றால் போதும். சேஷ்டைகளை ஆரம்பித்துவிடுவான். ஆரம்பம் முதல் அமுதாமீது ஒரு கண். அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி. அமுதாவைப் பின் தொடரும் நிழலான மாரியப்பனிடம் ஒருதடவை வாங்கிக் கட்டிக்கொள்கின்றான் இராமநாதன். சாரதாவிடம் சேஷ்டை செய்து சாக்கடைக்குள் வைத்துப் பெண்களே விளாசித்தள்ளுவது அருமை.

இப்படி கதையின் ஓட்டத்தில் பல சங்கதிகள் வந்து போகின்றன.

கட்டுபொல் தோட்டத்தில் பெயரைப் பதிந்துவிட்டு, இகல்கந்த சந்தியில் கடை வைத்திருக்கும் இனவாதியான பியதாசவின் தோட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் புஞ்சிபண்டா உடந்தையாகின்றான்;

கோயில் கொடியேறினால் எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். இங்கு நடைபெறும் கோயில் திருவிழாவில் ‘குறிப்பெடுத்தல்’ என்றொரு பாரம்பரிய நிகழ்வு நடைபெறுகின்றது. அதைப்பற்றியும் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றது;

இடையே புஸ்பராணி என்கின்ற பெண்ணிற்கு பேயோட்டும் குட்டியான். குளிக்கும் பெண்களை ஒழிந்து நின்று பார்க்கும் கிச்சினன் என்பவன் அவனுக்கு உடுக்கடிப்பவன். குட்டியான் சாட்டையால் புஸ்பராணியை அடித்து ‘காட்டேரித்தாயே வா’ என தமிழில் பலமுறை கத்துகின்றான். பாட்டும் உடுக்குச் சத்தமும் எதிரொலிக்க அவள் ‘மம சஞ்சீவ… மம சஞ்சீவ எவில்லா இன்னே’ என சிங்களத்தில் சொல்கின்றாள். உச்சியில் அடித்தால் போல் இருக்கின்றது இது. எவ்வளவு தூரம் ஒருவரின் பேசும்மொழி மெதுமெதுவாக மாற்றம் அடைந்து வருகின்றது என்பதற்கு இது ஒன்றே போதும்.

விடுதியைச்சுற்றிவரும் மர்மமனிதன், பெண்களின் உள்ளாடை திருடும் கள்ளர்கள் என கதை மர்மக்கதை போல் ஆகிவிடுமோ என த்ரில் வேகமெடுக்கின்றது. மர்மமனிதன் என முதலில் ஒருவனைப் பிடித்துப் பொலிசில் குடுக்கின்றார்கள். அதன்பின்னரும் மர்மமனிதனின் விளையாட்டுத் தொடர்வதில் கிச்சினன் அகப்பட்டுக் கொள்கின்றான். மர்மமனிதர்கள் யார் எனத் தெரிந்தபோதும், அதற்கு ஒரு தீர்வு தரப்படாமை கதையின் போக்கை திசை திருப்புவது போலவே தென்படுகின்றது.

ஆரம்பம் முதல் இனமுறுகல் இருந்தாலும், அடுத்த கிராமத்து சிங்கள இளைஞர்கள் வேண்டுமென்றே பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாட ஆரம்பிப்பதும், கோயில் திருவிழாவில் இளைஞர்களைத் தாக்குவதும் திட்டமிட்டே நடக்கின்றது.

நாவலில் வரும் சிங்களச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அதனால் நாவலின் ஓட்டத்திற்குத் தடையேதும் இல்லை. இந்த நாவலின் மூலம் – தவறணை (கட்டுபொல் கன்றுகள் உற்பத்தி சேய்யுமிடம்), பிரட்டு (வேலை செய்யுமிடம்), கொட்டுவம் (விவசாய நிலப்பகுதி), புட்டுவம் (நாற்காலி / சிங்களச்சொல்), பிதிலி தட்டு (தென்னை ஓலையால் ஒரு தட்டைப்போல் பின்னப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தட்டு), கரட்டான் (ஓணான் வகை), பிள்ளைமடுவம், இன்னல கிழங்கு (வற்றாளங்கிழங்கு), சுங்கா போன்ற - பல புதிய சொற்களை நான் கண்டுகொண்டேன்.

இந்த நாவலானது கட்டுப்பொல் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் துயர வாழ்க்கையையும், ஒரு பாடசாலையின் வளர்ச்சியையும் சொல்வதுடன் விதவையின் மறுவாழ்வையையும் பேசி நிற்கின்றது. காலம் காலமாக ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் வாழ்ந்துவரும் மலையகத்தமிழர்களின் இறைமை காப்பாற்றப்பட்டுக்கொண்டு வரும் அதே வேளை, நாட்டின் தென்பகுதியான காலி, மாத்தறை போன்ற இடங்களில் வாழும் மலையகத்தமிழர்கள் சிங்களமொழிக்கு அடிமையாக மாறுவதைக் காட்டுகின்றது. இறுதியில் தொழிலாள வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாக – கண்டாக்கு, கங்காணி, தோட்டத்தலைவர் எல்லாம் மாற்றப்படுகின்றார்கள். புதிய தோட்டத் தலைவராக மாரியப்பனின் தெரிவு அமைகின்றது. அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் பத்ரா மிஸ் “சாபாவென் அவசரய்…” எனச் சிங்களத்தில் பேச்சை ஆரம்பிக்கின்றாள். அது ‘மம சஞ்சீவ… மம சஞ்சீவ எவில்லா இன்னே’ என்பதற்கு ஈடானதுதான்.

நாவலில் கட்டுப்பொல் பயிர்ச்செய்கையினால் ஏற்படும் நன்மை தீமைகள், சுற்றுப்புறச்சூழல், பாம் ஒயிலின் பாவனை உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பனபற்றி அலசவில்லை. எவ்வளவோ கதைகள் சொல்லப்படவேண்டிய பிள்ளைமடுவம் மொட்டையாக வந்து போகின்றது.

இருப்பினும் ஆசிரியரின் தொடச்சியான அவதானிப்பினூடாக வந்திருக்கும் இந்நாவல் வீண்போகவில்லை. படைப்புக்குள் பிரச்சாரம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தபோதும் அவற்றைத் தவிர்த்து எழுதிய பிரமிளா பாராட்டுக்குரியவர், ஒவ்வொரு பாத்திரங்களையும் நாவலிற்குள் அறிமுகம் செய்யும் விதம், சிறுசிறு சொற்களால் அமைக்கப்பட்ட வாய்க்கிய அமைப்பு, குழப்பமில்லாத நடை என்பவை சிறப்புக்கள். கொடகே நாவல் கையெழுத்துப் போட்டி 2017 இல் பரிசு பெறுவதோடு, நமக்கொரு புதிய விடயத்தைப் பேசும் நாவலும் கிடைத்துவிடுகின்றது.