Enter your keyword

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, January 5, 2024

புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' - பிரமிளா பிரதீபன்

By On January 05, 2024

இலக்கியத்தை வாசிப்பதும் அவற்றைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தனித்துவமான கலை. எல்லோராலும் வாசிக்க இயல்வதென்பதே சாத்தியமற்றதாக இருக்கும் இக்கால சூழ்நிலையில்  வாசித்தவற்றை குறித்ததான கருத்துக்களை முன்வைப்பதும் படைப்பாளர் பற்றிய சகல விடயங்களையும் தேடித் தொகுத்து ஒரே பார்வையில் அவர்தம் மொத்த படைப்புலகம் சார்ந்ததுமான குறிப்புகளை நம்பகத்தன்மையுடன் களஞ்சியப்படுத்துவதும் மிகப்பெறுமதியான இலக்கியப்பணியெனவே சொல்லலாம்.


'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூலினூடாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அப்பணியினை நேர்த்தியாக செய்திருக்கிறார். 


என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் போது அப்படைப்பாளி தொடர்பான சகல விடயங்களையும் தொகுத்துத் தருதலென்பது மிகநிதானமாக செய்யப்படவேண்டியதொன்று. தேடலும் பொறுமையும் நிரம்பப் பெற்ற ஒருவருக்கே இது சாத்தியமாகிறது. 


படைப்பாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஒரு சிறந்த புனைகதையாளர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து பத்தியெழுத்து தொகுப்புகள் மேலும் சில தேர்ந்தெடுத்த தொகுதி நூல்களுக்கு சொந்தக்காரர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்.


இவரின் புதிய படைப்பான 'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூல் மொத்தமாக இருபது சுய ஆய்வு கட்டுரைகளுடன்  2023ம் ஆண்டில் கார்த்திகை மாதம் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளமை படைப்பாளரது தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கு ஒரு சான்றாக அமைகிறது. 

இந்நூலின் கட்டுரைகளைப் பொருத்தவரை  ஏழு வகையான இலக்கிய வகைகளை தெரிந்து தனது உற்றுநோக்கல்களை விரிவாக்கம் செய்ய முனைந்திருக்கிறார். ஒரு நாவல், ஒரு நலவியல் இலக்கியம், மூன்று சிறுவர் இலக்கியங்கள், ஐந்து பத்தியெழுத்து அல்லது ஆய்வுரை தொகுப்புகள், ஒரு காலாண்டிதழ் எட்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாட்குறிப்பு என மொத்தமாக இருபது படைப்புகள் மீதான அல்லது இருபது படைப்பாளர்கள் மீதான பார்வையினை தொகுப்பாக தந்திருக்கிறார். 


தன்னுடைய கட்டுரைகளில் உள்ளடக்கம் பெற்ற பல்வேறு புனைவு அபுனைவு வடிவங்கள் தொடர்பான தனது ஆய்வு தொடர்பாக அவர் குறிப்பிடுவதாவது.... 


'படைப்பாளர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இங்கு பிரதானமாகிறது. இம்முயற்சியானது மறைமுகமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு மிக்கதொரு பணியினையும் செய்யத் தலைப்படுகிறது என அறிய வரும் போது உண்மையில் மனது குதூகலிக்கவே செய்கிறது'


இவ்வாறு இன்றைய சமகால படைப்பாளர்களின் அவசியமான தேவையை நிறைவு செய்யத்துணிந்த இந்த நூல் தொடர்பாக ஆராயும் போதில் பிரதானமாக 03 நிலைகளுக்கூடாக குறிப்பிட்ட கட்டுரைகளை அணுக முடியுமாயிருக்கிறது.


01) இந்நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகள்.

02) நூலின் சமகால முக்கியத்துவம் 

03) எழுத்தினூடாக வெளிப்படும் நூலாசிரியர்


எனவே முதலாவது விடயமான நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகளைப் பார்த்தால், நானறிந்த வகையில் திறனாய்வு முறைகள் பண்டையகாலந்தொட்டு  இன்றுவரையாக பல்வேறு மாற்றங்களையும் காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாற்றங்களை தேவைக்கேற்ப தன்னைத் தழுவிக்கொள்கிறது எனச்சொல்ல முடியும்.  


குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் நவீனத்துவம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கருத்தியலை அடிப்படையாக கொண்டே அநேகமாக திறனாய்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. 


ஆனால் நான் இந்த நூலை பார்த்த விதமானது இந்நூலாசிரியர் தனது மனப்பதிவுமுறை திறனாய்வினை மேற்கொள்ளுதலினூடாக தனது அனுபவத்தினதும் அறிவினதும் அகலப்படுத்தலை மையமாகக்கொண்டு பயன்படுத்தியிருக்கக்கூடிய அணுகுமுறைகள் தொடர்பான தெளிவினையே தருகிறது.   


மனப்பதிவுமுறை என்றால் அதற்குள் உள்ளடங்கக்கூடிய பொதுவான அணுகுமுறைகளாக வகைப்பாட்டு அணுகுமுறை, அழகியல் அணுகுமுறை, மதிப்பீட்டு  அணுகுமுறை, வரலாற்று  அணுகுமுறை, விளக்கநிலை  அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பாராட்டும்  அணுகுமுறை, விதிமுறை  அணுகுமுறை என்பவற்றை குறிப்பிட முடியும். இவற்றுள் குறிப்பிட்ட இந்த நூலினூடாக ஒருசில அணுகுமுறைகளை தெளிவாக இனங்காண முடிகிறது. 


வகைப்பாட்டு அணுகுமுறை:

பல்வேறு இலக்கிய வகைகளைப் பற்றிய ஆய்வுமுறை வகைப்பாட்டு அணுகுமுறையாக கருதப்படலாம். ஏலவே நான் குறிப்பிட்டது போல தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' எனும் நாவல், எம்.கே.முருகானந்தனின் 'டாக்குத்தரின் தொணதொணப்பு' எனும் நலவியல் இலக்கியம், கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், எஸ். பேராசிரியரின் 'மாசுறும் பூமி' எனும் பத்தியெழுத்து, 'எங்கட புத்தகங்கள்' எனும் காலாண்டிதழ், ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ், இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், வைத்தியர் தி.ஞானசேகரனின் ;யாவரும் கேளீர்' எனும் பத்தியெழுத்து, இரகுவரனின் 'தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் வம்சம்' எனம் ஆய்வு நூல், வண செபமாலை அன்புராசா அடிகளாரின் 'அண்ணன் ஆமையும் தம்பி முயலும்' சிறுவர் இலக்கியம், தாட்சாயணி, பிரமிளா பிரதீபன், ஆசி கந்தராஜா மண்டூர் அசோகா, சிறீறங்கன், பாலரஞ்சனி ஜெயபால், சிவசோதி ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள், பஞ்சகல்யாணியின் 'கதைமரம்' எனும் சிறுவர்கதைகள், அஜந்தகுமாரின் 'நாட்குறிப்புகள்' என பல வகையான இலக்கியங்கள்  உள்ளடக்கம் பெற்றிருக்கின்றமை இந்நூலின் விசேட அம்சமாகிறது. மேலும் ஒவ்வொரு இலக்கிய வகையும் குறிப்பிட்ட நூலின் படைப்பாளரது ஆளுமையை தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நோக்கிலான வகையில் ஆராயப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.   


அழகியல் அணுகுமுறை:

அதாவது இலக்கண விதிமுறைகளை கருத்திற்கொள்ளாது படைப்பின் அழகியலுக்கூடாக படைப்பினை பிரித்து மதிப்பீடு செய்வது தான் இவ்வணுகுமுறையின் அம்சம். இவ்வணுகுமுறைக்குள் நூலாசிரியர் தன்னுடைய ஆளுமையை அதிகமாகவே காட்டியிருக்கிறார். அவர் ஒரு புனைவெழுத்தாளன் எனும் வகையில் அழகியல் பற்றியதான தேடலையும் பார்வையையும் பயன்படுத்தி ஏராளமான நியாயப்படுத்தல்களை செய்திருக்கிறார். 


பிரதானமாக ஒவ்வொரு கட்டுரையையும் சில அழகியல்சார் அடையாள வார்த்தைக்குள் உள்ளடக்கிய வித் நூலாசிரியரின் அழகியல் உணர்விற்கு சான்றாகிறது எனலாம். உதாரணமாக கட்டுரைகளின் தலைப்பென்பதாய்... 'பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்'  தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், வடமராட்சியின் வனப்பான வாழ்வியலிற்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் உறவுகள் சேர்ந்து'  போன்றதாய்  கட்டுரைத் தலைப்புகளில் தனது கற்பனைத்திறனை புகுத்திப் பார்த்திருக்கிறார்.


மேலும் புனைவு நூல்கள் தொடர்பாக தனது பார்வையினை விரிவு படுத்தும் போது தன்னுடைய பிரமாதமான மொழிநடையைக் கொண்டு தான் பேசும் புனைவெழுத்தின் அழகியல் பற்றி  எடுத்துரைத்திருக்கும் முறைமையானது சிறப்பான அவதானத்தை பெறுகிறது. 


மா.சிவசோதியின் சிறுகதைத் தொகுதிப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்.  'போர்காலத்திலும் அல்லது அதன் பின்பும் நிர்க்கதியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் எதிர்காலம் இப்படியாகத்தான் அமையப் போகிறதோ என்ற ஒரு பதகளிப்பினை ஏற்படுத்தும் இச்சிறுகதை, இத்தொகுதிக் கதைகளுள் மிக்க கவனிப்பிற்குரியதொன்றாகிறது....'  


மேலும் 

'தோட்டத்தில் விளையும் கீரை, அதைக் கொண்டு வருவதற்காக தனது திருக்கல் வண்டியை எடுத்து வார்களுக்கிடையில் காலைவிட்டு கெந்திகெந்தி உழக்கிச் செல்லும் சிறுவன், தோட்டகாரர் கீரையை பிடுங்கி பைக்குள் திணிக்கும் இலாவகம், அந்த துலாப்பட்டையை எடுத்து கட்டையில் போடும் விதம் எல்லாமே.... அந்த வடமராட்சியின் தோட்டச் சூழலிற்கே வாசகனை அழைத்துச் சென்று விடுகிறது' 


இவ்வாறான தனது விபரிப்புகளின் துல்லியத்தால் பேசவந்த படைப்பின் அழகியலை சிறப்பித்துக் காட்டும் முறைமை  கவனம் பெறுகிறது.


மதிப்பீட்டு அணுகுமுறை அல்லது ஒப்பீட்டு அணுகுமுறை:

ஒரு குறிப்பிட்டப் படைப்பிலக்கியத்தின் தரத்தையும் தகுதிபாடுகளையும் பலவகை இலக்கியங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஒரு தீர்மானத்தினை படைப்பின் மீது செலுத்தும் வகையிலான அணுமுறையென இதனை கூறலாம். அந்த வகையில் நூலாசிரியர் இம்முறையினை  செய்யாமல் செய்திருக்கிறார் அல்லது தவிர்த்திருக்கிறார்.  


இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள் எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 


'அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சொல்லும் கதைகள் இன்னும் கனதி பெற வேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டு நிற்பதாக நூலின் முன்னுரையில் நூலாசிரியரின் மற்றுமோர் ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவருமான எழுத்தாளர் இராஜேஸ்கண்ணன் அழுத்தி உரைத்திருப்பதை அஜந்தகுமார் கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அவரின் இத்தகு எழுத்துகள் இலக்கிய உலகில் நிச்சயம் கனதியான சுவட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என மிகத் தாராளமாகவே கூறலாம்' 


'சமூகச் செய்திகளை சீரோடு சித்தரித்திருக்கும் சிறீறங்கனின் 'சிவப்புக்கோடு' எனும் கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது: 

'ஆனாலும் ஈழத்து நவீன புனைகதை பற்றிய பரிச்சயமும், துறைசார்ந்த வீச்சும் சிறீறங்கனிடம் மேலும் வேண்டப்படுவதையும் தொகுதி உணர்த்த தவறவில்லை. மிகச்சிறந்த சமூக அவதானிப்பினூடும் தேர்ந்தெடுத்த ஒரு மொழிநடையினூடும் சிறீறங்கன் எதிர்காலத்தில் சிறுகதையுலகத்தில் பயணிப்பாராயின் இவரது முன்னைய தலைமுறையில் கோலோச்சி நிற்கும் வதிரி இ.இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி போன்றோருடன் இவர் பொருந்தத்தக்க ஒருவராக வல்லர் என்பதனையே சிவப்புக்கோடு எனும் நூல் உணர்த்தி நிற்கிறது எனலாம்'  


அதாவது குறிப்பிட்ட படைப்பாளர் எந்த இடத்தில் தம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் எனும் மதிப்பீட்டை படைப்பாளரை புண்படுத்தா வண்ணம் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் எனத்தோன்றுகிறது. எனினும் நூலாசிரியர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்கள் அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி எனும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வலியுறுத்தி சில விமர்சனங்களை கூற முற்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட படைப்பாளர் அதனை ஏற்றிருப்பார் என தாராளமாக எண்ண முடிகிறது. காரணம் எதிர்மறையான விடயங்களை மிக இலாவகமாக சொல்லத்தெரிந்த மொழிப்பக்குவத்தை கொண்டிருக்கக்கூடியவர்களால் மேலும் பல அசாத்தியங்களை இலகுவாக நிகழ்த்த முடியும். அத்தகைய விமர்சனங்களின் தேவைபாடு அதிகரித்திருக்கிறது என்பதுடன் புதிய படைப்பாளர்களின் ஆளுமையுடனான அடுத்தக்கட்ட நகர்விற்கு மதீப்பீட்டு ரீதியான அணுகுமுறையே பேருதவியாக அமையுமென்பது என்னுடைய கணிப்பு.       


அடுத்ததாக இந்த நூலின் சமகால முக்கியத்துவம் பற்றியதான தேடலில் மிக முக்கியமாக விமர்சனத்துறையின் காலத்தேவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.  திறனாய்வுத்துறைக்கான பங்களிப்புகளை வழங்குவோர் குறித்து தேடுகையில் மிக சில பெயர்களே நினைவிற்கு வருகின்றன. குறிப்பாக விமர்சகர் S.ரமேஸ், இ.சு முரளிதரன், செல்வ மனோகரன், இ.இராஜேஸ்கண்ணன், புலோலியூர் வேல்நந்தன், குணேஸ்வரன், ஜிப்ரிஹாசன், சப்னாஸ் ஹாசிம் போன்றோரையும் பெண் விமர்சகர்கள் வரிசையில் திருமதி வசந்தி தயாபரன், எம்.தேவகௌரி, திருமதி ரஞ்சனி சுப்ரமணியம் போன்றோரையும் நினைவுபடுத்த முடிகிறது. எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் நூல் விமர்சனத்தைத்தாண்டி வாசிப்பனுபவம் எனும் வகையில்  அனேகமானோர் வெறும் அழகியல் திறனாய்வாக மாத்திரம் தமது ஆய்வை வளர்த்து செல்கின்ற போக்கும் இன்றைய காலகட்டத்தில்  அதிகரித்துள்ளபடியால் இந்நூலின் காலத்தேவைப்பற்றி  வெகுவாக உணரக்கூடிய சூழ்நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.  


பல்வேறு வகை இலக்கியங்களின் தொகுப்பை ஒரே பார்வைக்குட்படுத்தி குறிப்பிட்ட படைப்பாளரது சகல படைப்பனுபவங்களையும் களஞ்சியப்படுத்தல் முதற்கொண்டு படைப்பாளர்களை ஊக்குவித்தல், புதிய படைப்பாளர்களுக்கு சரியான வழியினை அமைத்து கொடுத்தல், மேலும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் தனது கட்டுரைகளை பிரசுரிப்பதனூடாக புதிய படைப்பாளர்களுக்கு பெறுமதியான களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் காலத்தேவை மிகவும் இன்றியமையாததாகும். 


மேலும் எழுத்தினூடான படைப்பாளரின் வெளிப்பாடு என்ற வகையில், எழுத்தாளர் தனது படைப்பூடாக ஏற்படுத்த துணியும் சமூக விளைவையும் படைப்பின் சமூக பெறுமானத்தையுமே ஆராய விரும்புகிறேன். அதாவது கல்வி புலத்தில் கற்றலில் அதீத மேம்பாட்டை செய்யும்  மறைகலைத்திட்டத்தைப் போல வெளித்தெரியாத எத்தனையோ சமூக பெறுமானங்களை கொண்டதாய்  இவரது சுய ஆய்வுக்கட்டுரைகள் தொக்கியிருக்கின்றன. 

குறிப்பாக அக ஊக்கல் தேவையான படைப்பாளரை இனங்கண்டு அவர்களின் தேவையை தீர்ப்பதாய் சரியான சமயத்தில் வெளிவரும் கட்டுரைப்பிரசுரம்,  புதிய எழுத்தாளர்களின் சூழ்நிலையறியாமல் ஒரே கட்டுரையில் அவர்களின் தன்னம்பிக்கையை இல்லாதொழிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் முகப்புத்தக எழுத்து கலாசாரத்திற்கு மத்தியில் மிகுந்த பக்குவத்துடன் எதிர்மறைவிடயங்களை கையாளத்தெரிந்த மொழிப்பக்குவம், படைப்பாளர்களின் ஏனைய விபரங்களை தேடித்தொகுத்த நிதானம், நெறிப்படுத்துகை, படைப்பாளர்களை எழுத்தினூடாக தன்னம்பிக்கையூட்டும் திடம் இப்படி ஏராளாமான பண்புகளை சிதறவிட்ட பாங்கிகை உற்று அவதானிக்க முடிகிறது. 


ஆகவே தன் கட்டுரைகளில் நூலாசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் அதே வார்த்தைகளில் கூறினால்... இலக்கிய உலகின் கனதியான சுவடாகக்கூடிய ஒரு படைப்பினையே  நூலாசிரியர் ஆ.இரத்தினவேலோன் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

Monday, March 6, 2023

"விரும்பித்தொலையுமொரு காடு" (விமர்சனம்) - கருணாகரமூர்த்தி

By On March 06, 2023

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக  முகநூல் நண்பரொருவர் தான் வாங்கிய நூல்கள் என்று ஒரு 10 நூல்களைப்  அருகருகே வைத்துப் படமெடுத்துப்போட்டிருந்தார். அதில்த்தான் முதன்முதலாக ‘விரும்பித்தொலையுமொரு காடு’ நூலினைப்பார்த்தேன். தலைப்பின் கவித்துவத்தையும், அட்டை ஓவியத்தின் காந்தியையும் பார்த்து அந் நூலையும் ஒரு கவிதை நூலென்றே நினைத்தேன். அப்போது ‘நடு’ ஆசிரியர் கோமகன் இலங்கையில் இருந்ததால் அவரை ‘விரும்பித்தொலையுமொரு காடு’ பிரதியொன்றை வாங்கிவரும்படி கேட்டிருந்தேன். அவருக்கும் அங்கு  அதன் பிரதி கிடைக்கவுமில்லை, அவர் திரும்ப பாரிஸ் வந்து சேராததும் தனிக்கதை. பிறகும் ஒரு மாதங்கழித்து  ‘விரும்பித்தொலையுமொரு காட்டை” கிழக்குப்பதிப்பகம் மூலமாக எடுப்பித்தேன்.

என் வழக்கப்படி தலைப்புக்குரிய கதையைத்தான் முதலில் வாசித்தேன். அக்கதையே இவர் ஒரு வித்தியாசமான கதைசொல்லியென எனக்குப் பிரமீளா பிரதீபனை அடையாளங்காட்டியது.

நடு, ஜீவநதிகளில் வாசிக்கக்கிடைத்த பிரமீளாவின் இரண்டொரு கதைகளைத்தவிர நினைவில் இருத்திக்கொள்ளும்படியாக எனக்கு வேறொரு படைப்பையும் படிக்க நேர்ந்ததில்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றைப்படைப்பவர்களின் பௌதீக அடையாளங்களைவைத்து ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று வகைபிரிப்பதில் எனக்கும்  உடன்பாடில்லை. ஆனால் தமிலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பைவைத்து அதை எழுதியவர் ஆணோ பெண்ணோவென வாசகன் ஊகித்துக் கண்டுபிடிக்கும்படியாகவே இன்னமும் அவை இருக்கின்றன. காரணம் பெண்கள் சித்தரிக்க எடுத்துக்கொள்ளும் கருக்கள், அவர்களது மொழி, சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு. இதை மறுப்பவர்களுடன் கம்புசுற்றும் எண்ணம் எனக்கில்லை, பிரமிளா இந்த வகைமையிலிருந்து விலகியிருப்பது ஒரு இனியஆச்சரியம். 

அவர் நிறையவே உள்மனயாத்திரை செய்பவராக இருக்கிறார். அவர் சித்தரிக்கும் உலகங்கள் நடப்பிலிருந்து வித்தியாசமானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் செவ்வீதமும் அகவுலகச் சித்தரிப்புகளாக உள்ளன. இன்னும் மயாயதார்த்தம், மிகுயதார்த்த வகைகளிலும் அவர் தன் படைப்புகளைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

என் பதின்மவயதுகளில் ஒரு நண்பர்மூலம் தியானம்பற்றி அறியவிழைந்தேன். எனக்கு அப்போது பத்மாசனத்தில் அமர்ந்திப்ருப்பதே வல்லையாக இருந்தது. பின் மூச்சுப்பயிற்சி. ஆழமான உள்மூச்சு அதை நெஞ்சுக்குள் உள்ளடக்கி நிதானமான வெளியேற்றுதல் என்று பலவிதமான பயிற்சிகள் தந்தார். ” உனக்கு ஓரளவுக்கு தியானம் கைகூடிச் சிந்தையை ஒடுக்கிக் குவிக்கமுடிந்தால் LED மாதிரி நெற்றிப்பொட்டில் சின்னதாக ஒரு ஒளிப்பொட்டுத்தெரியும். அந்த ஒளிப்பொட்டை உன்னால் நினைத்தவிடத்துக்கெல்லாம் நகர்த்திச்செல்லமுடியும், அதை அப்படியே முள்ளந்தண்டினூடாக இடுப்பின் கீழாக இறக்கி ’குண்டலினி’ எழுப்பலாம்” என்றெல்லாம் சொன்னார். மாதக்கணக்கில் முயன்றும் எனக்கொரு ஒளிப்பொட்டும் தோன்றவே இல்லை, தியானம் எனக்கான விஷயமல்ல என்று புரிந்ததும்  அதை அத்துடன் விட்டுவிட்டேன். 

இத்தொகுதியிலுள்ள ’அது புத்தனின் சிசுவல்ல’கதையிலிருந்து பிரமிளா நிறைய வாசித்திருக்கிறார் என்பதுவும் , தியானம், யோகம்,  குண்டலினி. என்றும் பயிற்சிகள்செய்யவோ குறைந்தது அவைபற்றி அறிந்துகொள்ள நிறையவே வினைக்கெட்டிருப்பாரென்றும் தெரிகிறது.

ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ என்றொரு கதையை எழுதியிருப்பார். அதில் வரும் இளம் சித்தாளு ஒருத்திக்கு வாத்தியாரென்றால் உயிர். அவளூர் டாக்கீஸுக்கு வாத்தியார் படம் வந்தால் பையன்களைப்போலப் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தது பத்துத்தடவைகளாவது பார்த்துத் தீர்த்துவிடுவாள். விளைவு நாளாகவாக அவளுக்குத் தன் கணவனுடனான உறவுவின்போதும் வாத்தியாரே வந்து தன்கூட முயங்குவதைப்போலக் கற்பிதஞ்செய்துகொண்டு மகிழ்கிறாள். இவ்வேளையில் எதிர்வீட்டுக்கு சென்னையில் ரிக்ஷா வலிக்கும் இளைஞனொருவன்  வாத்தியார் படம்போட்ட டி- ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகிறான். சித்தாளுக்கு அவனது சுருள்சுருளான கிராப்புத்தலையும் தூக்கிக்கட்டிய லுங்கியினூடாக பாதி டிராயர்  தெரிவதும், அவன் ஸ்டைலாக பீடி வலிப்பது எல்லாமே அவனையுமொரு நவீனதோரணையுடனான வாத்தியாராக தோற்றங்காட்டவும் மனசை அடக்கமுடியாமல் அவன்மீதும் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறாள். சித்தாளின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அவ்விளைஞனும்  ‘ நீ என்னோடு சென்னைக்கு வந்திடு, உன்னை நான் வாத்தியார்கிட்டயே கூட்டிப்போறேன்’ என்று பசப்பி அவளை மெல்ல சென்னைக்கு நகர்த்திப்போய் சீரழிக்க முயல்வதாக அக்கதை நகரும்.

’அது புத்தனின் சிசுவல்ல’ கதையில் வரும் மாயாவுக்கும்  கிட்டமுட்ட இப்படியான சிக்கலொன்று வருகிறது. மாயாவுக்கு அகிலன்மீது ஆசை. 

மாயா தனக்கு வழிகாட்டும் சன்மார்க்ககுருவென நம்பிக்கொண்டிருக்கும் குருஜிஜே  நீலமேகத்தை அவள் மணக்கவேண்டுமென்று நிர்பந்திக்கிறார்.          (அப்படி நிர்ப்பந்திபதற்கான காரணம் கதைக்குள் காணோம், இதைப் புதுமைப்பித்தன் வகையிலான பாய்ச்சலெனக்கொள்ளலாம்.) அவரது விருப்பத்தின்பேரில் மறுவார்த்தையின்றி மாயா நீலமேகத்தைத் திருமணஞ்செய்துகொண்டுவிடுகிறாள்.

சித்தாள் பட்டிக்காட்டுப்பெண் படிப்பில்லாதவள் சமூகம் கற்பிக்கும் வாழ்வியல் நியதிகளென்ற கற்பு, ஒழுக்கக்கோட்பாடுகள், பண்பாட்டுத் தடைகள்., நிஜமங்கள், எதுவும் அவளுக்கில்லை / அல்லது அறியாதவள். 

மாயாவுக்கு அப்படியல்ல. தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் நீலமேகம் இருக்கும்போதே அகிலன்வந்து மாயாவுடன் குலவச்செய்கிறான். அதுவே மாயாவின் வார்த்தைகளில் // ஒவ்வொரு புணர்ச்சியின்போதும் என அனுமதி இல்லாமலே அகிலன் எனக்குள்  வந்துபோகின்றான்.// அதுவே அவளுக்கொரு அகச்சிக்கலாகிறது. அவளுக்கான அச்சிக்கலை  கிரியாயோகத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் அலச விசாரஞ்செய்ய முயல்கிறார் பிரமிளா.

தியானத்தின் வழியில் இரண்டு ஆன்மாக்கள் சந்தோஷிப்பதுவும் குலவுவதும் சாத்தியந்தானாவெனக் குழம்புகிறாள் மாயா. இதை யாரிடம் கேட்பது?

ஒரு ஆண் ஒரு பெண்ணை மோகிக்கிறான் என்றால் அவனது ஒரு, பார்வை, ஒரு உடலசைவில் பெண்ணானவள் புரிந்துகொண்டுவிடுவாள். ஆதலின் குருஜியின் உள்நோக்கத்தை மாயா புரிந்துகொண்டிவிட்டிருப்பாள், ஆனால் அதை வாசகனும் புரியும் விதமான காட்சிப்படுத்தல் கதைக்குள் எதுவும் வரவில்லை.

புத்தனின் சிசுவல்ல மாயாவுக்கு ஒவ்வொரு . தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் / பேரின்பநிலைகளிலும்  அவளது முன்நாட்காதலன் அகிலன் வந்துவந்து குலவுவதை மாயா அவளது கணவன் நீலமேகத்துக்குச்செய்யும் துரோகமாக உணர்கிறாள். 

அகிலன்வந்து குலவுவது நிஜமேயெனில் குருஜியும் அதை அறிந்திருப்பாரே? அவ்வாறு அறிந்தால் அவர் அகிலனையும் தண்டித்து…….. என்னையுமொரு  புனிதங்கெட்டவள் எனச்  சபித்துவிடுவாரேயென்று  மாயா கலங்குகிறாள். 

அவளது அகச்சிக்கலைக்  குருவுக்கு விளக்கி அந்த இம்சையிலிருந்து விடுபடலாமென்று  அவ் யோகக்குருவிடம் ஆலோசனை கேட்கவந்தால் 

”இந்த மாசம் பௌர்ணமிதினம் பிரம்மமூர்த்தப்பொழுதின் தருணம் கருவுக்கான நேரமாயிருக்கலாம் மாயா” என்று  மாயாவைக்கூட விழைகிறார். 

குருவின் சந்நிதியில் புத்தனின் துறவு,  யசோதாவின் தனிமை புனிதவாழ்வெனும் சம்வாதம் நிகழ்ந்த ஒரு பொழுதில்  குருவிடமே அகிலன் விவகாரத்தை மாயா தெரிவித்துவிடவும் கடுஞ்சினமடையும் சன்மார்க்க  குருஜி அவளை

”இழிகுலத்து நாயே….. கண்டநாயோடெல்லாம் புணர்கிறேனென்று என்னிடமே சொல்லுகிறாயா” என்று பழித்துரைப்பதுவும், உன்கர்மாவென்று கர்மாவை அழுத்துவதும் முரண்நகைக்குரிய இடங்கள்.

மேற்படி கதையானது ஒரு குறுநாவலுக்கான வெளியைக்கொண்டிருந்தும் அதையொரு சிறுகதையாகவே திடுப்பென பிரமிளா முடித்துவிட்டார்.

‘நீலி’ கதையும் பாத்திரங்களும் உரையாடல்களும் கற்பனையினூடான படிமங்களாகவே நகர்த்தப்பட்டிருப்பதுவும் ஆண்பெண் ஆணவம்/ தன்முனைப்பு (Ego) விளைவாகவரும் உரசல்கள் அவற்றின் விளைவுகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

ஒருமுறை மிகவும் படித்த ஒரு எழுத்தாளருடன் (பெண்) பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. “ எனக்குத் தலையை ’குறொப்’பண்ணிக்கொண்டு அல்லது விரித்துபோட்டுக்கொண்டு எப்போதும் கருப்பாக உடுத்திக்கொண்டுள்ள பெண்ணியவாதிகள் பேசும் எல்லாக் கருத்துக்களுடன் உடன்பாடில்லை. என்னைச்சரியாகப் புரிந்துகொண்ட என் கணவன் ’ஏன்டி என் ஷேர்ட்டின் பட்டனைத்தைத்துவைக்கல்லை” என்று அதிகாரம் பண்ணுவதைத்தான் நான் விரும்புகின்றேன்.” 

ஒருமுறை கிருபானந்தவாரியார் சொன்னதும்கூடவே ஞாபகம் வருகிறது,  “ நான்  பிம்பிளாஸை ஆலாபனை பண்ணப்போ அதை வயலின்காரர் ஆபேரின்னு புரிஞ்சிட்டு இழுத்திண்டுபோனால் நானும் ஆபேரிக்கே வந்துமேலே பாடறதில்லையா அதே மாதிரி பொம்பளை சொல்றதைக்கேட்கமாட்டேன்னு பிடிவாதமாயிராத,,,,,,,,, அவள் சொல்றது நியாயமாயிருந்தாக்க கேட்டிட்டுப்போ, வாழ்க்கையில உரசல்கள் இராது. மத்தவன் பொண்டாட்டித்தாசன்னு சொல்வானோங்கற சிந்தனை உனக்கு வேண்டாம், வாழ்க்கை நிம்மதியாய்ப்போகணும். அதுதான் முக்கியம்”

நீலி கதையில் பிரமீளா பிரதீபன் காட்டுற கோணம் வேறு மாதிரி.

//தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?// 

இன்னும்  அகோரிணி யட்சி நீலியென்று அசுரபலம் வாய்ந்த பெண்களையெல்லாம் படிமங்களாகக் காட்சிப்படுத்துகிறார் பிரமிளா.

இக்கதையில் ஒரு இலட்சிய ஆணாக உருவகப்படுத்தப்படும் தேவனின் கூற்றாக // நீலி இது ஒருவகையில் அவரவர்க்கான கர்மாவின் பயன் என்பதுதானே உண்மை// என்றியம்புதல் பிரமீளாவுக்கும் கர்மாமீதான பிரமிப்பென்று கொள்ள இடந்தருகிறது. ஆனால் பின் நவீனத்துவம் நம்பிக்கைகளைப் படைப்புக்குள் அனுமதிப்பதில்லை.

தலைப்புக்குரிய கதை விரும்பித்தொலையுமொரு காடு ஒரு பெண்ணின் பார்வையில் அவர்கள் புகுந்துகொள்ளும் திருமணவாழ்வு எனும் அவத்தை (Phase) எப்படி அவர்கள் விரும்புவதுமாதிரி / எதிர்பார்த்தமாதிரி இல்லாமல்ப்போகிறது என்பதைப் படிமங்களூடாகச் சொல்லிச்செல்கிறது. 

திருமணபந்தத்தில் நுழைவதைத் தவிர்க்கமுடியாது, விருப்பத்தையும் மீறி அதற்குட் செலுத்த ஆயத்தங்கள் நடைபெறும்போது மௌனமாயிருப்பதைத்தவிர வேறென்னசெய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  நடுவில் அந்த மரமும் அப்படித்தான் இந்தப்பூச்சியும் அப்படித்தான், என்றான பலவகை காட்சி விஸ்தரிப்புகளுக்குப் பின்னாலும் கதையின் இறுதிப்பகுதியில் மீளவும் யாருக்கேனும் இதுவொரு சம்பவமாகவோ அல்லது அடுத்துவரப்போகும் நிகழ்வின் (வாழ்வின்) பகுதியாகவோ இருப்பின் அதற்காக என்னால் என்ன்செய்யமுடியும், மௌனமாக இருப்பது மாத்திரந்தானே? என முடிக்கும்போது சித்திரத்தைப்படிக்கும் அலர் அகவையருக்கு திருமணம்மீதான ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது.

அம்பையின் கதைகளில் வருவதைப்போன்று பெண்களை அடக்குவதால் இன்பந்துய்க்கின்ற  ஆணாதிக்கத்தைச் அனுபவிப்பதாக எண்ணும் ஆண்கள் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் விதியேயென்று தம்மையே நொந்து பிலாக்கணம் வைத்துப்புலம்புவதுடன் நின்றுவிடுவதில்லை. அக்கிரமங்களுக்கெதிராகப் போராடவுஞ்செய்கிறார்கள். ஆனாலும் பிரமீளா இப்படியே தொடர்வாராகில் இவர் இந்தப்பிரச்சனைபற்றி இப்படித்தான் எழுதுவாரென்று வாசகர்களால்  முத்திரை குத்திவிடப்படும் அபாயமுமிருக்கிறது. எனக்கென்னவோ பிரமிளா புலம்பெயர்ந்து வந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது, அப்படி வந்திருப்பாரானால் அவரது பார்வைகள் இன்னும் விசாலித்திருக்க கதைகளின் பகைப்புலமும் கருக்களும் பாத்திரங்களும் மாறியிருந்திருக்க இன்னும் அசத்தலான படைப்புகள் பலவற்றைத்தந்திருப்பார்.

ஜில் ப்ராட்லி, கமிலே டொன்சியுக்ஸின் தோடுகள் போன்ற கதைகளைப் படிக்கையில் பிரமிளாவுக்கு பன்னாட்டு இலக்கியங்களுடனும் பரிச்சயமிருப்பதை உணரமுடிகிறது. உள்நாடாயிருந்தாலென்ன வெளிநாடாயிருந்தாலென்ன, வசதியானவளாயிருந்தாலென்ன, விளிம்புநிலைவாசியாயிருந்தாலென்ன பெண்களுக்கு  காதுத்தோட்டையும் அடகுவைக்கவேண்டிய நிலமைகள் வந்துவிடுகின்றன. அப்படி அடகாகும் தோடே பேசுவதும் அழகான கற்பனை..

உரப்புழுக்கள் கதையின் நாயகி சுரேகாவும்,  அது புத்தனின் சிசுவல்ல மாயாவுமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இவ்விரண்டு கதைகளிலும் ஒன்றாக இருப்பதைக்காணலாம். முதலாவதில் சுரேகா அவனது கண்காணிப்பாளர் இவளுக்கு உரம் அள்ளும் கிடங்கிலிருந்து பணியை வேற்றிடத்தில் மாற்றிப்போடுவதற்கு இவளிடம் பாலியல் லஞ்சம் கேட்கிறார். அவரைப்பற்றி முறைப்பாடு செய்யப் மேலிடத்துக்குப் பெரியதுரையிடம் போனால் அவரும் கதைவைச்சங்கிலி போட்டுப்பூட்டிவிட்டு அவளைக் ‘கட்டிலுக்கு……. வா’  என்றழைக்கிறார்.

வார்த்தைத் தேர்வுகளில் அங்கங்கே சிறு கவனயீனப்பிழைகள் உண்டு. உரப்புழுக்கள் கதையில் அந்த உரமென்கிற வார்த்தை பொருத்தமாக அமையவில்லை. பொதுவாக விவசாயத்தில்  உரம் என்பது  அசேதன உரங்களைத்தான். (inorganic fertilizers such as anhydrous ammonia, urea, urea-ammonium nitrate solutions,  ammonium phosphates, and muriate of potash). அவற்றுக்குள் எந்தப்பழுக்களும் உயிர்வாழமுடியாது, அவிந்தே இறந்துவிடும். செம்பனைகளின் பகுதிகளோடு அசேதன உரங்களைக்கலந்து பெறப்படுவதைக் கூட்டுப்பசளை (compost : decayed organic material used as a fertilizer for growing plants.) என்றுதான் சொல்லப்படும். அதற்குள் புழுக்கள் வாழச்சாத்தியம்.

இன்னும் சிங்கள உரையாடல்களைத் தமிழில் எழுதும்போது வாக்கியங்கள் சில. எ+காட்டாக: ‘அத்த கியப்பாங்’ என்பது  ’எத்த கியப்பாங்’ என்றும்,  ‘ ஊவ  மரலா நெவே’ என்பது ’ ஊவ  மரலா  நெமே’ என்றும்  தட்டப்பட்டுள்ளன.

அதேபோல் சிராம்புகள் > சிலாம்புகள் என்றும்,  விளாறு > மிலாறு என்றும் தட்டப்பட்டுள்ளன.  இச்சிறு தவறுகளால் படைப்புக்களின் தரத்துக்கோ கனதிக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை தவிர்ந்த தட்டுப்பிழைகள் அதிகமில்லாமல் இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.

கதையைக் காட்சிப்படுத்துவதில் புதுமைப்பித்தனையொத்தவொரு வேகமும், புதிய உத்திகளைத்தேர்ந்து சொல்லும் முறையில் புதுமையும், எந்தப் பிரச்சனையானாலும் நேரடியாக எடுத்துப்பரப்பிவைத்து அலசுவதில் துணிச்சலையும் கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் எனக்குத் தமிழிலக்கியவானில் புதிதாகத்தோன்றியுள்ள விடிவெள்ளியாகத் தெரிகின்றார். இவரால் ஈழத்து இலக்கியம் கடுகிப் புதிய உயரங்களை எட்டும்!

(விமர்சனம்:  அம்ருதா 183 - பெப்ரவரி 2023)

யாவரும் வெளியீடு, பக்கங்கள்: 124 விலை: 150.00 ₹

Sunday, October 23, 2022

கதைகளுக்குள் விரும்பித் தொலைதல் - சப்னாஸ் ஹாசிம்

By On October 23, 2022


ஈழத்தின் மலையக இலக்கியப் பரப்பு விசேடத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு மலையக வாழ்வியல் கூறுகளும் பண்பாட்டுவெளியும் மரபும் மரபார்ந்த தொடர்ச்சியும் காரணங்களெனச் சொல்லமுடியும். பூர்விக நிலத்தின் கலாசார ஊடறுப்பும் மறுக்கப்பட்ட நிலத்திலிருந்து மீண்டெழுந்த அல்லது மீண்டெழ எத்தனிக்கிற சமூகத்தினரிடமிருந்து ‘புதிய வகை ரத்தம்’ போல இலக்கிய வெளிப்பாடு இருந்திருப்பதிலும் தொடர்வதிலும் ஆச்சரியம் மேவ எதுவுமில்லை. புனைவு வெளிப்பாடுகளின் ஊக்கநிலை மாறாமலிருப்பது மலையக இலக்கியப்பரப்பைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நிலவரையியலையும் சமூக ஒழுங்கையும் தொழிலாளர் வர்க்க உணர்வையும் ஒட்டுமொத்த பிரதியின் வழியே பரவவிடுவதனாற் தானென்று தோன்றுகிறது. சி.வி வேலுப் பிள்ளை, நடேசய்யர், கே. கணேஷென்று ஒரு தலைமுறை உருவாகி தமிழக கதை சொல்லலையும் ஈழத்து மரபையும் இணைத்ததான புதிய போக்கோடு மலையகச் சிறுகதை வெளி தனக்கென மரபை உருவாக்கிக் கொண்டது என்று கருதலாம். அதற்குப் பிறகு வந்த தலைமுறை என்றுபார்த்தால் செந்தூரன், என் எஸ் எம் ராமைய்யா, மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மலரன்பன், சாரல்நாடன், நயீமா சித்திக், தெளிவத்தை ஜோசப்பென்று ஒரு வரிசை நினைவுக்கு வரலாம்.


இந்த இரண்டாம் தலைமுறையின் காலமே மலையகச் சிறுகதைவெளி வீறு கொண்டு எழுந்த காலப்பகுதியெனச் சொல்ல முடியும். தொடர்ச்சியாக எண்பதுகளின் பின்னர் தனித்தொகுதிகள் தலையெடுத்ததும் மலையக கதை உலகுதனித்த தன்மையோடு புறக்கணிப்புகளை மீறி குடியுரிமை பறிப்பு பற்றிய கோபவெளிப்பாடுடனும், பிரஜாவுரிமை கோசங்களுடனும் வெளிவந்தன. அதற்குப் பிறகு வந்த தீர்த்தக்கரை போன்ற இதழ் வெளிவந்த காலகட்டம் முக்கிய பாசனத்தை சிறுகதை நிலத்தில் பாயவிட்டது. அதற்கு பிறகு இன்றைய தலைமுறையில் சடகோபன், சிவானுமனோகரன், பிரமிளா பிரதீபன் போன்றவர்கள் புதிய கோணத்தில் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிரமிளா பிரதீபனுடைய விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்தேன்.


மலையக சிறுகதைக்கென்று இருக்கிற ஒரு செல்நெறியோ, மரபோ இவரது கதைகளில் மீறப்பட்டிருக்கிறது. இவரது புதிய கதை சொல்லல் மானுட அழகியல் அபத்தமென்கிற இருநிலைகளைத் தாங்கிய புதிய மனிதர்களோடும் வலுவான கதையோடும் கூறல் உத்திகளோடும் ஒரு கட்டுடைப்பை வியாபிப்பைச் செய்திருக்கின்றன. இன்றளவில் தமிழக புலம்பெயர் பரப்பில் அதிகம் வாசிக்கப்படக்கூடிய மலையகக் கதைகள், ஏன் ஈழக்கதைகளும் பிரமிளாவினுடையனவே. பிரமிளாவினுடைய கதையுலகம் தடித்த கதாபாத்திரச் சித்தரிப்போடு அகநிலை சார்ந்த ஊடாட்டங்களைப் பேசுபவன. பொதுவான மலையகக் கதைப் பின்னணியிலிருந்து வேறுபட்டு கழிவிறக்கம், ஆற்றாமை போன்ற சாயலை விடுத்து புதிய பார்வையோடு திமிறி எழுவன. பெண் நிலை சார்ந்த நுண் இழையோடு சமாந்தரத் தளத்தில் அகவிசாரணையோடு எழுதப்பட்ட கதைகளை இத்தொகுதி அதிகம் கொண்டிருக்கிறதெனலாம். அக்கதைகளில் வரும் பெண்கள், அவர்களது அன்றாடம் என்பனவெல்லாம் இயல்பிலிருந்து விலகாது இதுவரை சொல்லத்தயங்கிய புழங்குவெளியை ஞாபகப் படுத்துவன. பெண்ணியச் சிந்தனைகளோடு ஒன்றித்த கதைப்போக்கு தமிழ்க்கதைகளில் மிகைத்துவிட்ட இந்நாட்களில் ஈழத்து மலையக சிறுகதைகளில் அதை வேறுபட்ட தளங்களிலும் வடிவ நியதியிலும் முயன்று பார்த்தவரென்று பிரமிளாவைச் சொல்ல முடியும். ஆணாதிக்கம், சுரண்டல், பாலியல் லஞ்சம், இன முரண்பாடு, காமம், காதல், வன்புணர்வு என பெண்ணுலகம் சார்ந்து பிரமிளா முன்வைக்கிற கதையாடல்களும் கேள்விகளும் முடிபுகளும் வித்தியாசமானவை. பெண்ணியம் பற்றி பேசுகிற போது எதிர் நியதி பேசுவது, அதன் சாத்தியங்களை படைப்புகளின் மீது விரவ விடுவது திணிப்பது பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. பிரமிளாவின் பெண்கள் ஆதர்சமான நாயகத் தன்மை கொண்டவர்களல்ல. எங்கேயோ முயன்று வெளிவர முடியாத தடுப்புகளைத் தாண்ட எத்தனித்து மீண்டும் அதே பாழ்குழியினுள் விழுகிற சராசரியான பெண்களையே பிரமிளா தேர்ந்தெடுத்திருப்பார். சுரண்டலை எதிர்த்துத் திமிறுகிற சீற்றத்தோடு அச்சுரண்டலுக்குப்பழகிப் போகிற பெண்களையோ சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூக வேலியிலிருந்து அதன் மதிப்பீடுகளிலிருந்து தப்ப முடியாத பெண்களையோ அவருடைய கதைகள் முன்நிறுத்துகின்றன. பொதுவான மலையகக் கதை சொல்லலிருந்து பிரமிளா வேறு வேறு நிறங்களை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்திய படி தனித்தொத்த கூறுமுறையோடு முயற்சித்திருப்பார். அது மிகச் சவாலான உருவக/குறியீட்டு விபரிப்புகளோடு வளர்ந்து வந்து ஒரு கட்டத்தில் கதையை நிறுத்துவது எனச் சொல்ல முடியும். கதையில் மேலோட்டமாக சொல்லப் படும் கதைக்கு சமாந்தரமாக மெய்க்கதை பயணித்தபடி இருக்கும். இப்படி இத்தொகுப்பின் தலைப்புக்கதையான விரும்பித் தொலையுமொரு காடு கதை எழுதப்பட்டிருக்கும். பெண்ணொருத்தி காடொன்றை விரும்பி நுழைவது போல குடும்ப வாழ்வை மண வாழ்வைக் குறித்துக் கதை நீளும்.


இவ்வகை உத்திகளின் வாயிலாக வழக்கமான மலையகச் சிறுகதைகளிலிருந்து பிரமிளாவினால் புதிய கூறுமுறையை குறியீட்டு மொழிக்குள்ளேயான பூடகச் சொல்லாடலை செய்ய முடிந்திருக்கிறது. இவ்வகை பூடகக் கதையாடல் மற்றைய நேரடிக்கதைகளை விட  பிரமிளாவுக்கு கைகொடுத்திருப்பதாகவே இத்தொகுப்பிலிருந்து உய்த்தறிய முடிகிறது. நேரடிக்கதைகளில் உள்ள இடைவெளிகளை அயர்ச்சியை குறியீட்டுக்கதையாடல் நிரப்புகிறதென்ற அளவில் அவ்வுத்தியைப் பாராட்ட முடியும். கடுமையற்ற ( not rigorous) இலகு தன்மையான மொழியை இவ்வகைக் கதைகளுக்கு தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது எப்பொதும் நல்ல கதையொன்றை அளிக்கும் முயற்சிக்கு கை கொடுக்காதென்பதுவும் புலனாகிறது. அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சவாலெனப் புரிந்து கொள்ள முடியும். நாம் குறிப்புணர்த்தும் கதைக்காக எடுத்துக்கொண்ட குறியீட்டைச் சரிவரக் கையாள்வதில் தான் இக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கும். குறியீடாக நாம் சொல்ல வருவது அழுத்தமானதொன்றாக இருக்க வேண்டுமே ஒழிய வெறுமனே ஒத்திசைவான ஏதாவதொன்றை தொடர்பு படுத்துவதோடு நின்று விடக் கூடாது என்பது எனது கருத்து. விரும்பித் தொலையுமொரு காடு கதையும் ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கதையும் இவ் வுத்தியின் வழியே உருப் பெற்றாலும் அவை சில இடங்களில் சலிப்பைக் கொடுப்பன. ஒரு அரசமரமும் சில வௌவால்களும் என்ற கதையில் அரசமரத்தையும் வௌவால்களையும் புத்த மதத்தையும் அதன் தீவிரப் பற்றாளர்களையும் குறித்த பூடக விபரிப்பாகச் சொல்லியிருப்பார் பிரமிளா. நீண்ட விவரணையில் ஒரு தேர்ந்த வாசகருக்குப்புரிந்த விசயத்தை மீண்டும் அவர் திரும்ப எழுதியிருப்பார்.


“தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து இந்த வௌவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து விலகுவர். தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயெனக் கொண்டாடும் வௌவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போய் வைராக்கியம் கொண்டு மரத்தை வெட்டிவீழ்த்த முனைவர். “ என எழுதியிருப்பார்.


இதனை தூர இருந்து அரச மரத்தினழகினால் கவரப்பட்டு வருபவர் பின்னர் தன் கையாலே வெட்டிவிடுவாரென முடித்திருக்க முடியும். அந்தக் குறிப்பும் காரணமும் ஏற்கனவே முன்கதையின் நிகழ்வுகளினாலும்  விபரிப்புகளினாலும் வாசகனுக்கு உணர்த்த போதுமானவை.   


கதைகளுக்காக பிரமிளா பயன்படுத்துகிற மொழியும் நடையும் தற்காலச் சிறுகதைகளைவிட சில படிகள் செறிவற்று வருகின்றன. சம கால கதை சொல்லல் அடைந்திருக்கிற இடமும் செழுமையும் மொழி விசயத்தில் அபாரமானதென்பதால் அந்த இடத்திற்குரிய மெனக்கெடல் ஒட்டுமொத்த தொகுதியிலும் போதவில்லை என்றே தோன்றுகிறது. ஏற்கனவே குறித்துச் சொல்லியது போல மலையகக் கதைகள் தனித்துத் தெரிவதற்கும் தனிப்பெரும் இலக்கியப் போக்காக விரிவதற்கும் அவை சுமந்து வந்த நிலவரையியலேகாரணம். மலையகக்கதைகளென்றாலே மலைகளும் தோட்டங்களும் பீலிகளும் லயமும் அதைச் சுற்றிய காடும் வழுக்கும் தெருக்களும் வெற்றிலைக் கறை படிந்த மனிதர்களும் வட்டார மொழியுமென மனக் காட்சி விரியும். நிலத்தையும் இயற்கையையும் அதைச் சுற்றிவர நிகழும் எல்லாச் சங்கதிகளையும் பிரதியினுள் கொண்டு வந்த எத்தனையோ கதைகள் நமக்கு ஞாபகம் வரும். அப்படி இத்தொகுதியில் முழுத் திருப்தி தரக்கூடிய கதை என்றால் உரப்புழுக்கள் மட்டும் தான் என்று சொல்வேன்.


அது தாங்கி வருகிற நிலக்காட்சிகளும் உரமேடையும் காடும் கட்டுபொல் உறிஞ்சி வற்றிய கிணறும் பங்களாவும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதுவே மலையகக்கதை வழக்கின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட நல்ல கதையென்று படுகிறது. இந்தக் கதையில் சொல்லப்படுகிற உணர்வும் ஆணாதிக்க மேலீடும் அறச்சீற்றமும் இயல்பைக் குறித்து யதார்த்தத்தைக் குறித்து அச்சத்தை கடத்துவன. திருமண வாழ்வைக் குறித்தும் கற்பைக்குறித்தும் எழும் ஐயமான( ambiguous) கருத்துநிலையை அப்படியே சொல்லி விடுவதும் தொழிலாளர்களின் மீதான பாலியல் சுரண்டலை படம் போட்டுக் காட்டுவதுமாக இக்கதை, முக்கியமாக மலையகப் பண்பாட்டுத்தளத்தில் உள்ள துயர் நிகழ்வுகளின் சாட்சியமாக இருக்கிறது.


புனைக்கதை எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் எனக்கு பிரமிளாவிடம் சொல்ல ஒரு விசயமிருக்கிறது. அது கதைகளின் செம்மை பற்றிய விசயம் தான். எப்போதும் ஒரு கதையை எழுதியவுடன் அது முழுமுற்றானது, கடைசியானதென நாம் நம்புவதில்லை.  அந்தக் கதை பல படிகளிலெழுந்து முழுமையாகத் திரளுவதில் நமக்கு அடுத்தபடியாகவும் இறுதியாகவும் சஞ்சிகைகளின் பங்களிப்பிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு பிறகு வந்த கதைகளுக்கும் இதிலிருக்கிற கதைகளுக்குமிடையில் அந்தத் திரட்சியில் மொழி விசயத்திலும் கதையின் உள்ளடக்கத்திற்குத் தகுந்த உத்திகளின் தேர்வு விசயத்திலும் ஒரு போதாமை இருக்கிறது. ஆரம்பக்கதைகளில் அது எழுதிக் கண்டடையக் கூடிய ஒன்றுதான். என்றாலும் அவற்றின் மீதான இதழ்களின் பரிந்துரைகள், செம்மைப் படுத்தல்கள் அவற்றை இன்னொரு தளத்திற்கு கொண்டு போகுமென்பதை மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் அக்குறைபாட்டை வெகுவாகவே உணர முடிகிறது. இக்கதைகள் ஆரம்பத்தில் வெளிவந்த இதழ்கள் அப்பணியை பெருமளவு செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. தானாகவே பயின்று அரங்கேற்றம் வருகிற மாணவரிடம் இருக்கும் அதே வகை தடுமாற்றங்களைத் தான் சுட்டுகிறேன். விவரணைகளிலிருக்கிற பொத்தாம்பொதுவான சொல்லாடலும் தேய்வழக்கான சொற்றொடர்களையும் தவிர்த்திருக்க முடியும். அது புத்தனின் சிசுவல்ல கதையில் பிற்பாதி, முற்பாதி போன்ற மொழிச்செறிவிலன்றி ஐதாக வருவது, மாட்டியா கதையின் கூறுமொழி இன்னும் மேம்பட்டிருக்கலாமெனத் தோன்றுவதென சில சுட்டுகளைச் சொல்ல முடியும்.


கதைகளுக்குத் தேவையான தருக்கத்தை தேர்ந்தெடுப்பதில் பிரமிளா படுசாமர்த்தியமானவரென்பதை ஓரிரவு போன்ற கதைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிரமிளாவுக்கு, நானும் தான் அதே மலைகளில் ஏறி இறங்குகிறேன், நானும் தான் அதே பாதைகளில் வழிகளில் நடக்கிறேனென ‘ஓரிரவு’ போல கதையினுடைய ஒட்டுமொத்தத் தருக்கத்தைச் சொல்லத் தெரிந்திருக்கிறது. அத்தருக்கங்களின் வழியே கட்டுமானமாகிற கதையின் மனிதர்களையும் காட்சியனுபவத்தையும் உரிய இடங்களில் வைக்கத் தெரிந்திருக்கிறது. கமிலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள் போன்ற கதைகளில் தேக்கமாகும் மனநிலையை, கதை முடிவடையும் புள்ளியோடு இணைக்கவும் தகவமைக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக பிரமிளா, குறியீட்டுக்கதை மொழிதலாலும் வேறுபட்ட களத்தேர்வுகளாலும், கிளைமொழியின் பாண்டித்தியத்தினாலும், பெண் உலகின் இன்னுமொரு கரிய படித்தளத்தில் நின்று யதார்த்தத்தை நுண் வாசிப்புக்குரிய ஆழ்படிமங்களோடு ஆங்காங்கே ஊன்றி நிறுத்துவதாலும் கவனிக்க வேண்டிய தொகுப்பொன்றைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குத் தந்திருக்கிறார் எனச்சொல்லாம். 

நன்றி வனம் - ஒக்ரோபர்

Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

Saturday, April 20, 2019

"கட்டுபொல்" – நாவல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்

By On April 20, 2019

இந்த நாவலின் ஆசிரியர் திருமதி பிரமிளா பிரதீபன், எனக்கு ஞானம் சஞ்சிகையின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர். ஞானம் சஞ்சிகை ‘புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ என அறிமுகம் செய்த முதலாவது படைப்பாளி இவர். அப்போது இவர் பிரமிளா செல்வராஜா என அறியப்பட்டிருந்தார். பதுளை மாவட்டம் - ஊவா, கட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ’அறுபதுகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத்தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவர்’ என ஒரு வாசகனின் குறிப்புகள் பகுதியில் மு.சிவலிங்கம் பதிவுசெய்கின்றார். இவர் ‘பீலிக்கரை’, ‘பாக்குப்பட்டை’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்திருக்கின்றார்.

இதுவரை காலமும் பெருந்தோட்டப் பயிர்களாக தேயிலை கோப்பி ரப்பர் கறுவா போன்றவற்றை அறிந்து வைத்திருந்தோம். ஏறத்தாள இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் மலையகத்திலும், இலங்கையின் தென்கரையோரப் பிரதேசங்களிலும் இந்தப் பெருந்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றார்கள்.  அதனுடன் கடந்த அரைநூற்றாண்டு காலமாக இந்த கட்டுபொல் செய்கையும் சேர்ந்து கொள்கின்றது. ‘கட்டுபொல்’ என்பது ஒரு சிங்களச்சொல். அதன் நேரடி தமிழ் வடிவம் ‘முள் தேங்காய்’.

நான் 2010 ஆம் ஆண்டு மலேசியா சென்றிருந்தேன். மலேசியா விமானநிலையத்திலிருந்து, நான் தங்கவேண்டிய ஹோட்டல் இருக்குமிடமான பெற்ரலிங் ஜயா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஏராளமான இந்தவகை மரங்கள் வரிசை கோர்த்து நின்றதைக் கண்டேன். வாகனச்சாரதி அவற்றை செம்பனைகள் என்றும், ஃபாம் ஒயில் தயாரிப்பில் அவை நாட்டப்பட்டுள்ளனவாகவும் சொன்னார். இந்த நாவலின் தலைப்பும், கதை நெடுகலும் கட்டுபொல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளதால் அதையே நானும் இங்கு பாவிக்கின்றேன். ஒரு தமிழ் நாவலின் தலைப்பை -சிங்களச்சொல் மூலம் நாவல் ஆசிரியர் குறியீடாகப் போட முனைந்திருப்பது வாசகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதாகவே நான் கருதுகின்றேன். இந்தக் கட்டுபொல் இலங்கைக்கு Jeromy Wales  என்பவரால் மலேசியாவில் இருந்து அறிமுகப்படுத்தபட்டதாக ஒரு குறிப்பு புத்தகத்தில் வருகின்றது.

‘கட்டுப்பொல்’ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்நாவலை எஸ்.கொடகே சகோதரகள் பிரைவேட் லிமிடட் இந்த ஆண்டு (2018) வெளியிட்டுள்ளார்கள்.

சின்னச் சின்ன அத்தியாயங்களாக, மூன்று சமூகத்தவரையும் பின்னிக்கொண்டே காலி மாவட்டத்திலுள்ள ’இகல்கந்த’ என்ற பெருந்தோட்டதைச் சுற்றி வலம் வருகின்றது இந்த நாவல். வறுமைப்பட்ட உழைக்கும் வர்க்கத்தைப் பிரிதிபலிக்கும் இந் நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு சிறு செய்தியைச் சொல்லிச் செல்கின்றது.

முள்ளம்பன்றி போன்ற முட்கள் நிறைந்த கட்டுபொல் கொப்புகளில் பாக்குகள் போன்ற 300 – 400 காய்கள் இருக்கும். கொப்புகள் ஒவ்வொன்றும் 30 – 60 கிலோ பாரம் கொண்டவை. ஆண்கள் கட்டுபொல் கொப்புகளை வெட்டி வீழ்த்துவார்கள். இதற்காக மிகவும் பாரமான 30 – 40 அடி நீளமுள்ள தடிகளில் கத்தியை இணைத்திருப்பார்கள். இவர்கள் அறுத்து வீழ்த்தும் கொப்புகளை பெண்தொழிலாளர்கள் தலையில் சுமந்து வாகனப்பாதை வரைக்கும் கொண்டு செல்லவேண்டும். இங்கே வெட்டப்படும் கட்டுபொல் கொப்புகள் அனைத்தும் பதுரெலியா என்ற இடத்தில் இருக்கும் பார்ம் ஒயில் பக்டரிக்கு எடுத்துச் செல்லப்படும். கட்டுபொல் காய்களின் தோல்பகுதியில் இருந்து பார்ம் ஒயிலும், தேங்காய் வடிவ பகுதியில் இருந்து கர்னல் ஒயிலும் எடுக்கப்படுகின்றது. பார்ம் ஒயில் - சமையல் எண்ணெய் மற்றும் மாஜரீன் சொக்ளேற் செய்வதற்கும்; கர்னல் ஒயில் – சவர்க்காரம், கீறீம் செய்யவும் பாவிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் காதல் சோடிகளான அமுதா – மாரியப்பன்,  நஸ்ரினா ரீச்சர் என்பவர்களைச் சுற்றி கதை வந்தாலும், நாயகன் நாயகி எல்லாமே அந்தக் கட்டுப்பொல் காடுதான். கூடவே ஒரு பாடசாலை. எழுத்தாளர் ஒரு ஆசிரியையாக இருப்பதால் நாவலில் பாடசாலையும் முதன்மை பெறுகின்றது. சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

தரம் ஐந்து வரையுள்ள இந்தப்பாடசாலையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டுவதில்லை. மற்றய சிறுவர்கள் வயல்வேலைக்குச் செல்வதிலும் வீட்டில் சிறுபிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஈடுபடுவார்கள். நஸ்ரினா என்ற ஒரு ஆசிரியர் இருந்த இடத்தில் மேலும் மூன்று ஆசிரியர்கள் திடீரென்று வருவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வசந்தன், பத்மபிரியா, திலகா என்ற மூன்று ஆசிரியர்கள் புதிதாக வருகின்றார்கள். மிகைப்படுத்தப்பட்ட காட்சி என்றாலும் அதன்பின்னர் மாணவர்களின் வருகையும் ஐந்து ஆறிலிருந்து இருபத்தைந்தாக உயர்கின்றது. இருபத்தைந்து மாணவர்களுக்கும் நான்கு ஆசிரியர்கள் சற்று அதிகம் தான். பாடசாலை முன்னேறுகின்றது. மாணவர்களும் ஆர்வமாகப் படிக்கின்றார்கள். மிகவும் பொறுப்பு வாய்ந்த ஆசிரியை நஸ்ரினாவிற்கு பக்கபலமாகின்றார்கள்

தோட்டத்தில் வேலை செய்பவர்களாக மாரியப்பன், அமுதா, செல்லத்துரை, ஆறுமுகம், ரவி, ராசதுரை வருகின்றார்கள். மாரியப்பன் கட்டுபொல் வெட்டுவதில் கை தேர்ந்தவன். தோட்டத்தின் முதுகெலும்பே இவர்கள்தான். கண்டாக்கு புஞ்சிபண்டா, தோட்டத்தலைவர் முத்துக்குமார், கங்காணி இராமநாதன் தொழிலாளர்களை அடக்கியாண்டு வேலை வாங்கும் துரைமார்கள். கட்டுபொல் தொழிலாளர்களை, எவர் எவர் எங்கு வேலை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவன் கண்டாக்கு புஞ்சிபண்டா. தருமலிங்கம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குபவன். தோட்டத்து பிள்ளைமடுவத்தை கவனித்து வருபவர் பத்ராமிஸ். இவர்களுக்கிடையே நடைபெறும் போராட்டம் தான் நாவலின் உயிர்நாடி.

வசந்தன் ஆசிரியரின் பிரவேசத்தின் பின்னர் பாடசாலை களைகட்ட ஆரம்பிக்கின்றது. மேலும் திலகா, பத்மபிரியா ஆசிரியர்களும் வந்து சேர்கின்றார்கள். பாடசாலை விடுதி தூசி தட்டப்பட்டு அங்கேயே அவர்கள் இருவரும் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் கலகலப்பானவர்கள். இணைபிரியா நண்பிகளாகின்றனர்.

பாம்புகள் பூச்சிகள் உடும்புகள் - கட்டுபொல் காட்டிற்குள் ஓடித்திரிகின்றன, கதை நெடுகலும் உடும்புகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. உடும்புக்கறி இகல்கந்தை வாசிகளின் பிரிய உணவு. உடும்புகளை கதையில் வரும் சில மாந்தர்களின் குறியீடாகவே பார்க்க முடிகின்றது. தேயிலைத் தோட்டத்திற்குள் அட்டைகளின் அட்டகாசம் பற்றி அறிந்திருக்கின்றேன். கட்டுப்பொல் காட்டிற்குள் அட்டைகள் இருக்கின்றதா என்ற கேள்வி பாதிவரை வாசித்துக் கொண்டிருக்கும்போதுதான் எழுந்தது. அப்புறம் அட்டைக்கடியும் வந்துவிடுகின்றது.

இவைகளின் மத்தியில், அந்தி சாய்ந்துவிட்டால் போதும். அச்சம் தரும் அந்தக் காட்டுக்குள் ஒளித்திருந்து சில்மிஷம் செய்யும் சோடிகள். காமத்திற்கு ஏது பயம்? பணம் கொடுக்க தேவையில்லாத பாதுகாப்பான ஹோட்டல்தான் இந்தக் கட்டுபொல் காடு என்கின்றார் ஆசிரியர்.

கதையில் சாரதா என்றொரு விதவைப் பாத்திரம். தோட்டத்தில் ஆண்கள் விட்டுவைப்பார்களா? தோட்டத்தலைவர் முத்துக்குமாருடன் தொடர்பு வைத்திருந்தால், காமவெறியர்கள் பயப்படுவார்கள் என நினைத்து அவனுடன் பழகுகின்றாள். ஒருநாள் கங்காணிக்குப் பயந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு வர, அவன் வேறொரு பெண்ணைத்தேடிப் போய்விட்டமை தெரிய வருகின்றது. அவள் வசந்தனின் வீட்டிற்குள் அடைக்கலம் புகுகின்றாள். தன் கதை சொல்கின்றாள். வசந்தனுக்கு அவளின்பால் ஈர்ப்பு வருகின்றது. இறுதியில் சாரதாவை வசந்தன் திருமணம் செய்து கொள்கின்றான்.

கங்காணி இராமநாதனிற்கு இளம்பெண்கள் என்றால் போதும். சேஷ்டைகளை ஆரம்பித்துவிடுவான். ஆரம்பம் முதல் அமுதாமீது ஒரு கண். அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி. அமுதாவைப் பின் தொடரும் நிழலான மாரியப்பனிடம் ஒருதடவை வாங்கிக் கட்டிக்கொள்கின்றான் இராமநாதன். சாரதாவிடம் சேஷ்டை செய்து சாக்கடைக்குள் வைத்துப் பெண்களே விளாசித்தள்ளுவது அருமை.

இப்படி கதையின் ஓட்டத்தில் பல சங்கதிகள் வந்து போகின்றன.

கட்டுபொல் தோட்டத்தில் பெயரைப் பதிந்துவிட்டு, இகல்கந்த சந்தியில் கடை வைத்திருக்கும் இனவாதியான பியதாசவின் தோட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் புஞ்சிபண்டா உடந்தையாகின்றான்;

கோயில் கொடியேறினால் எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். இங்கு நடைபெறும் கோயில் திருவிழாவில் ‘குறிப்பெடுத்தல்’ என்றொரு பாரம்பரிய நிகழ்வு நடைபெறுகின்றது. அதைப்பற்றியும் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றது;

இடையே புஸ்பராணி என்கின்ற பெண்ணிற்கு பேயோட்டும் குட்டியான். குளிக்கும் பெண்களை ஒழிந்து நின்று பார்க்கும் கிச்சினன் என்பவன் அவனுக்கு உடுக்கடிப்பவன். குட்டியான் சாட்டையால் புஸ்பராணியை அடித்து ‘காட்டேரித்தாயே வா’ என தமிழில் பலமுறை கத்துகின்றான். பாட்டும் உடுக்குச் சத்தமும் எதிரொலிக்க அவள் ‘மம சஞ்சீவ… மம சஞ்சீவ எவில்லா இன்னே’ என சிங்களத்தில் சொல்கின்றாள். உச்சியில் அடித்தால் போல் இருக்கின்றது இது. எவ்வளவு தூரம் ஒருவரின் பேசும்மொழி மெதுமெதுவாக மாற்றம் அடைந்து வருகின்றது என்பதற்கு இது ஒன்றே போதும்.

விடுதியைச்சுற்றிவரும் மர்மமனிதன், பெண்களின் உள்ளாடை திருடும் கள்ளர்கள் என கதை மர்மக்கதை போல் ஆகிவிடுமோ என த்ரில் வேகமெடுக்கின்றது. மர்மமனிதன் என முதலில் ஒருவனைப் பிடித்துப் பொலிசில் குடுக்கின்றார்கள். அதன்பின்னரும் மர்மமனிதனின் விளையாட்டுத் தொடர்வதில் கிச்சினன் அகப்பட்டுக் கொள்கின்றான். மர்மமனிதர்கள் யார் எனத் தெரிந்தபோதும், அதற்கு ஒரு தீர்வு தரப்படாமை கதையின் போக்கை திசை திருப்புவது போலவே தென்படுகின்றது.

ஆரம்பம் முதல் இனமுறுகல் இருந்தாலும், அடுத்த கிராமத்து சிங்கள இளைஞர்கள் வேண்டுமென்றே பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாட ஆரம்பிப்பதும், கோயில் திருவிழாவில் இளைஞர்களைத் தாக்குவதும் திட்டமிட்டே நடக்கின்றது.

நாவலில் வரும் சிங்களச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அதனால் நாவலின் ஓட்டத்திற்குத் தடையேதும் இல்லை. இந்த நாவலின் மூலம் – தவறணை (கட்டுபொல் கன்றுகள் உற்பத்தி சேய்யுமிடம்), பிரட்டு (வேலை செய்யுமிடம்), கொட்டுவம் (விவசாய நிலப்பகுதி), புட்டுவம் (நாற்காலி / சிங்களச்சொல்), பிதிலி தட்டு (தென்னை ஓலையால் ஒரு தட்டைப்போல் பின்னப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தட்டு), கரட்டான் (ஓணான் வகை), பிள்ளைமடுவம், இன்னல கிழங்கு (வற்றாளங்கிழங்கு), சுங்கா போன்ற - பல புதிய சொற்களை நான் கண்டுகொண்டேன்.

இந்த நாவலானது கட்டுப்பொல் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் துயர வாழ்க்கையையும், ஒரு பாடசாலையின் வளர்ச்சியையும் சொல்வதுடன் விதவையின் மறுவாழ்வையையும் பேசி நிற்கின்றது. காலம் காலமாக ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் வாழ்ந்துவரும் மலையகத்தமிழர்களின் இறைமை காப்பாற்றப்பட்டுக்கொண்டு வரும் அதே வேளை, நாட்டின் தென்பகுதியான காலி, மாத்தறை போன்ற இடங்களில் வாழும் மலையகத்தமிழர்கள் சிங்களமொழிக்கு அடிமையாக மாறுவதைக் காட்டுகின்றது. இறுதியில் தொழிலாள வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாக – கண்டாக்கு, கங்காணி, தோட்டத்தலைவர் எல்லாம் மாற்றப்படுகின்றார்கள். புதிய தோட்டத் தலைவராக மாரியப்பனின் தெரிவு அமைகின்றது. அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் பத்ரா மிஸ் “சாபாவென் அவசரய்…” எனச் சிங்களத்தில் பேச்சை ஆரம்பிக்கின்றாள். அது ‘மம சஞ்சீவ… மம சஞ்சீவ எவில்லா இன்னே’ என்பதற்கு ஈடானதுதான்.

நாவலில் கட்டுப்பொல் பயிர்ச்செய்கையினால் ஏற்படும் நன்மை தீமைகள், சுற்றுப்புறச்சூழல், பாம் ஒயிலின் பாவனை உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பனபற்றி அலசவில்லை. எவ்வளவோ கதைகள் சொல்லப்படவேண்டிய பிள்ளைமடுவம் மொட்டையாக வந்து போகின்றது.

இருப்பினும் ஆசிரியரின் தொடச்சியான அவதானிப்பினூடாக வந்திருக்கும் இந்நாவல் வீண்போகவில்லை. படைப்புக்குள் பிரச்சாரம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தபோதும் அவற்றைத் தவிர்த்து எழுதிய பிரமிளா பாராட்டுக்குரியவர், ஒவ்வொரு பாத்திரங்களையும் நாவலிற்குள் அறிமுகம் செய்யும் விதம், சிறுசிறு சொற்களால் அமைக்கப்பட்ட வாய்க்கிய அமைப்பு, குழப்பமில்லாத நடை என்பவை சிறப்புக்கள். கொடகே நாவல் கையெழுத்துப் போட்டி 2017 இல் பரிசு பெறுவதோடு, நமக்கொரு புதிய விடயத்தைப் பேசும் நாவலும் கிடைத்துவிடுகின்றது.

Saturday, July 7, 2018

லண்டனில் "கட்டுபொல்": பிரதிகள் மீதான வாசிப்பும் கருத்துக்களும், கலந்துரையாடல்களும்

By On July 07, 2018

எதிர்வரும் 21ம் திகதி ( சனி மாலை) நடைபெறவுள்ள, பிரதிகள் மீதான வாசிப்பும் –கலந்துரையாடலும் நிகழ்வில் உரையாட எடுக்கப்பட்டுள்ள இலங்கை –மலையகத்தினை சேர்ந்த பெண் எழுத்தாளரான பிரமிளா பிரதீபனின் “கட்டுபொல்” நாவல், வெளிவந்த பின் பலரது கவனத்தினைப் பெற்றது.இதன் உள்ளடக்கத்தில் மலையக மக்களின் துயர வாழ்வின் இன்னுமொரு பக்கத்தினை பதிவு செய்திருப்பது முக்கியமானதுடன் மலையக இலக்கியத்தில் நான்கு தசாப்தத்திற்குப்பின் ஒரு பெண் நாவலாசிரியரை கொண்டு வந்து சேர்த்திருப்பதுமாகும். இந்த நாவல் பற்றி மு. நித்தியானந்தன் அவர்கள் பேச உள்ளார்.

இந்தப் பிரதி பற்றி மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் பின்வருமாறு சொல்கிறார் .
“பெருந்தோட்டத் தொழிலின் ஈர வாழ்க்கையை நெடுங்கதைத் தகவலாக இலக்கியத்தில் பதித்திருக்கும் முதல் மலையகப் பெண் படைப்பாளர் திருமதி பிரமிளா பிரதீபன், தென் மாகாணத்தில் ஆர்ப்பிக்கோ கம்பெனிகாரர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் தாவர எண்ணெய் தயாரிக்கும் கட்டுபொல் பெருந்தோட்டத் தொழில் கொடிதிலும் கொடிதாக எப்படி இந்த ஏழை மக்களை வருத்துகிறது என்பதை சித்தரிக்கிறது.
கோப்பி...கரும்பு...பருத்தி...தேயிலை...தென்னை.... றப்பர்...இன்று 'கட்டு பொல்" என்னும் 'முள்ளுத்தேங்காய்" ... ...மலேசியாவில் 'செம்பனை" என்ற பெயரிலும் அழைக்கப்படும் புதியதொரு பெருந்தோட்டத் தொழிலில் கடைசியாக மாட்டிக்கொண்டு சீரழியும் மலையகத் தொழிலாளர்களின் மீண்டும்...மீண்டும்...துயரத்தில் தோய்ந்து..ஈரமாகிக் கிடக்கும் இன்னொரு பக்க வாழ்க்கையை இந்த நெடுங்கதை மூலம் அறிந்து ஆச்சரியப்படலாம் என்கிறார் மு. சிவலிங்கம்.
நாவலாசிரியர் பிரமிளா பிரதீபன் தனது குறிப்பில்,

“தேயிலை, தென்னை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திகளினூடாக மாத்திரமே பரவலாக பேசப்படும் மலையக மக்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதென காட்டுவதே எனதிந்த முயற்சியின் பிரதான நோக்கம். கட்டுபொல் (முள்தேங்காய்) எனும் மரச்செய்கை இலங்கையின் தென்பகுதியில் பல தோட்டப் பகுதிகளில் நடைமுறையில் காணப்பட்டாலும், அவை பேசப்படுவது மிகவும் குறைவென்றே எனக்குத் தோன்றியது. எம்மவர்கள் இங்கே தம் உயிர்ப்பயம் மறந்து தமது உழைப்பை உச்சளவில் அர்ப்பணிக்கின்றனர் என்பதுவும், அது யோசிக்கப்படாத ஒன்றாக புறக்கணிக்கப் பட்டிருக்கின்றமையும் என்னை உறுத்தத் தொடங்கியதன் விளைவே இந்நாவல்.
இந்நாவலை பொருத்தவரை நான் நேரடியாக பார்த்துணர்ந்த எம்மக்களது இன்னல்களை தெளிவாக சுட்டாமல் தொக்கு வைத்த நிலையிலேயே இக்கதை கருவை நகர்த்தியிருக்கிறேன். என்னதான் அழகியலினூடாக இக்கதைக் களத்தை நான் நகர்த்தியிருந்தாலும், இக்கருவின் பின் எங்கோ ஒரு மூலையில் எப்போதுமே உலராத ஈரப்பசையாய் தாங்கொணா வலியொன்று ஊடுருவிக் கிடப்பதை என்னால் உணர முடிகின்றது.
'தன்னை சிலிர்த்துக்கொண்டிருக்கும் ஒரு முள்ளம்பன்றியை போல...' என நாவலில் ஓரிடத்தில் கட்டுபொல் கொப்பை விபரித்திருக்கின்றேன். அது வெறும் அழகியல் விபரிப்பல்ல. நிஜமாகவே கூரான முட்கள் இடைக்கிடை நீண்டு துருத்திக் கொண்டிருக்கின்றன. கூடவே ஒத்த விஷத்தன்மையையும் கொண்டிருக்கின்றன.முப்பது தொடக்கம் அறுபது கிலோவரை பாரம் காணும் கட்டுபொல் கொப்புக்கள் ஒவ்வொன்றையும் பெண்கள் தம் தலையில் சுமந்து பாதையில் சேகரிப்பதென்பது எத்தனை கொடூரமான விஷயம்..........! பெண்மையின் மென்மையினை தொலைத்த இக்கதைக்கருவில் அழகியல் புனைவை நான் புகுத்தியதும் பெருந்தவறுதானோ என்றொரு குற்றவுணர்வும் என்னை உறுத்திக்கொண்டேயிருக்கிறது. பெண்களது மாதவிலக்கு காலப்பகுதியில் பாரம் சுமத்தல் அறவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று எனும் பட்சத்தில், இங்கே கட்டுபொல் கொப்புக்களை தூக்கும் பெண்கள் அத்தகைய நாட்களை எப்படி கடந்து செல்கின்றார்கள்....? அவர்களது உடல் உபாதையையும், மன உளைச்சளையும் எங்கேனும்...... எப்போதேனும் வெளிப்படுத்தியிருப்பார்களா என்ன....? என்பவை இன்னுமே என்னை குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள்......... “ என்கிறார் இந்த நாவலாசிரியர் பிரமிளா பிரதீபன் .

பெருமளவு மலையக மக்களை கூலிகளாக வைத்து நடாத்தப்படும் ......... “பாம் ஒயிலுக்கான “முள்ளுத் தேங்காய் உற்பத்தி தொடர்பாக ஊடகவியளாளர் என்.சரவணன் பின்வருமாறு இதன் பின்புலம் பற்றி தெரிவிக்கிறார்....
..... “முள்ளுத்தேங்காய் உற்பத்தியின் மூலம் பல்வேறு சுற்றுப்புறச்சூழல், சமூக பொருளாதார பின் விளைவுகள் ஏற்படுவதுடன் தொழிலாளர் உரிமைகளும் மீறப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை கடந்த வருட இறுதியில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துல ஹென்போல்ட் தோட்டத்தில் இப்பயிர்செய்கையை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தியதுடன், பாராளுமன்றம் வரை பேசப்பட்டமையானது இங்கு சுட்டிகாட்ட தக்கது.
இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கம்பெனிகளால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை நாம் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயமானதாகும். என்கிறார்.
இந்தப் பிரதி பற்றி மூத்த எழுத்தாளர் மேமன்கவி பின்வருமாறு சொல்கிறார்.... 
“கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது என்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை தோழமையுடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

Sunday, April 15, 2018

பிரமிளா பிரதீபனின் ‘கட்டுபொல்’ நாவல் அறிமுக விழாவில் - மேமன் கவி

By On April 15, 2018

2017 கொடகே கையெழுத்துப் பிரதிப் போட்டியில் பரிசு பெற்ற கொடகே வெளியீடான பிரமிளா பிரதீபனின் கட்டுபொல நாவல் அறிமுக விழா எதிர்வரும் 13.05.2018 ஞாயிறு பி.ப. 4.30. கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் அவர்களிடமிருந்து மலையகக்கல்வி. அபிவிருத்தி மன்ற செயலாளர் பி.தவகுமாரன் பெற்றுக் கொண்டார். கொடகே நிறுவனர் சிறிசுமன கொடகே சிறப்புப் பிரதிகளை வழங்கினார்.

நிகழ்ச்சித் தொகுப்புரையும்-வரவேற்புரையையும் சிவனு மனோகரன் நிகழ்த்தினார். கருத்துரைகனை பேராசிரியர் துரை மனோகரன், எழுத்தாளர் மு.சிவலிங்கம் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். மற்றும் ‘ஞானம்’ டாக்டர் தி. ஞானசேகரனும் வாழ்த்துரையை . கே.பொன்னுத்துரை முன் வைத்தார். சிறப்புரையை மேமன்கவி நிகழ்த்தினார்..

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக குறிப்பிடுவது என்றால் பிரமீளா பிரதூபன் எழுதிய கட்டுபொல் நாவலில் கட்உபொல் பயிர் செய்கை மேற்கொள்ள்ப்படும் பகுதி பாடசாலை மாணவிகளான எஸ்.அனுஜா, டி.தர்ஷினி உரையாற்றியதையும், அவர்தம் உரைகளில் தம் பெற்றோர் மற்றும் தாம் பகுதி மக்கள் கட்டுபொல் பயிர் செய்கையால் படும் துயரங்களை இன்னல்களையும் கண்ணீர் மல்க கூறியது அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் சகலரதும் மனங்களை கலங்க வைத்தது.ஏற்புரையையும் நன்றியுரையும் நூலாசிரியை பிரமிளா பிரதீபன் முன் வைத்தார்.

நன்றி - http://malayagam.lk/

Saturday, April 14, 2018

பிரமிளா பிரதீபனின் கட்டு பொல்; ஏழாவது பெருந்தோட்டத் தொழிலின் ஈர வாழ்க்கை - மு.சிவலிங்கம்

By On April 14, 2018

மலையக இலக்கிய உலகில் பெண் படைப்பாளிகளின் நிலை அரை நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிடத்தையே கொண்டுள்ளதெனலாம். அரு மருந்துகளாக இலங்கையின் முதல் பெண் கவிஞர் என்ற பெயர் எடுத்த திருமதி மீனாட்சி அம்மை நடேச ஐயர் அவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளின் பின்னர் தூரத்துப் பச்சை என்ற நெடுங்கதை மூலம் திருமதி கோகிலம் சுப்பையா பெரிதாகப் பேசப்பட்டார். இவரது நெடுங் கதையே மலையக நெடுங் கதை இலக்கியத்துக்கு முத்தாய்ப்பு வைத்த படைப்பெனலாம்.

இவர்களைத் தொடர்ந்து 60 களில் உருவாகிய பெண் படைப்பாளர்களான நயிமா பஸீர், இன்று நயிமா சித்திக் பூரணி போன்றவர்களுக்குப் பின்னர் பெண் படைப்பாளர்கள் எவரும் தோற்றம் பெறவில்லை! 50 ஆண்டுகள் கடந்த பின்னரே திடு திப்பென்று பிரமீளா செல்வராஜா, ஞானம் சஞ்சிகையில் பீலிக் கரை கதை மூலம் அறிமுகமாகினார். 60 களிலிருந்து 50 ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத் தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவரேயாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. திருமணத்துக்குப் பின்னர் திருமதி பிரமிளா பிரதீபன் என அடையாளமாகியுள்ளவர்.
ஆரம்பத்திலேயே மிக மிகப் பக்குவப்பட்ட படைப்பாளராக சிறுகதை பண்பியல் வழுவாது.. சொல்ல எடுத்துக் கொண்ட விசயத்தை சுவைப்பட எழுதித் தரமான வாசகர்களைப் பெற்றவராகினார்.

பிரமிளாவின் கதைகள் யாவும் மலையகச் சமூகத்தினரின் உள்ளக வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.

படைப்புக்குள் பிரசாரமோ கோட்பாட்டு ஆதங்கமோ கருத்து நிலைப்பாடுகளை வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதலோயின்றி கதைப் போக்கிலேயே அரசியலை, சமூகக் குறைபாடுகளை, சமூக அநீதிகளை, பண்பாட்டுத் தாழ்வுகளைக் காட்டுவதில் வேறெந்த சிறுகதை எழுத்தாளர்களை விடவும், பிரமிளா வித்தியாசமான யுக்தியைக் கையாண்டு செல்பவராகின்றார்.

இவரது சிறு கதைகளுள் பீலிக் கரை பேசும் கதையாக இவரது படைப்பில் உச்ச நிலையைக் காட்டியது.. அக் கதையின் தலைப்பிலேயே ஒரு சிறு கதைத் தொகுப்பும், பாக்குப்பட்டை என்ற தலைப்பில் இன்னுமொரு சிறு கதைத் தொகுப்பும் வெளிவந்தமை இவரது அதீத வளர்ச்சியை எடுத்துக் காட்டியது.

மலையகத் தமிழர்களின் வாழ்விடப் பிரதேசங்கள் என்றால் அவை ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களைக் காட்டுவதேயாகும் என்ற நிலை இன்றுவரை இருந்து வருகின்றது. நாட்டின் தென் பகுதியான காலி, மாத்தறை, தெனியாய போன்ற பிரதேசங்களில் அமைந்த பெருந் தோட்டங்களில் வாழும் மலையக மக்கள், சமூக ரீதியில் கண்டு கொள்ளப்படாதவர்களாக இன்று வரை இருந்து வருகின்றனர். மலையக சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இம் மக்களை கைவிட்ட நிலையிலேயே, தேர்தலில் பதவிகள் கிடைக்கும் பிரதேசங்களிலேயே தங்கி விட்டனர்.

பண்பாடு, கலாசாரம், மொழி, இன அடையாளம் எனும் வாழ்வியல் அம்சங்களைத் தொலைத்து, சிங்கள சமூகத்தின் அனுதாபத்துடனும். பச்சாதாபத்துடனும், இனரீதியிலான ஆதிக்கத்துக்குள்ளும், சிங்கள அரசியல் தலைமைகளுக்கு உட்பட்டும் சுயத்துவம் இழந்து, தாழ்ந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களே இவைகளாகும்.

பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தப் படைப்பாளர், ஆசிரியர் தொழில் நிமித்தம் காலிப் பிரதேசத்தில் பணியில் இறங்கியதன் காரணமாக, இப் பிரதேசத்தின் மலையக மக்களின் கலை, இலக்கிய சமூக விழிப்புக் குரல் ஒலி விடத் தொடங்கியுள்ளது என்று மனந் திறந்து உரத்துக் கூறலாம். இவரது வருகைக்குப் பின்னரே இப் பிரதேசத்தில் வாழும் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இலக்கிய ஊடகத்தின் மூலம் பதிவாகி வருகின்றன. இதன் முதல் முயற்சியே கட்டுப் பொல் எனும் நெடுங்கதையின் பிரசவமாகும்.

18 ஆம் நூற்றாண்டிலிருந்து பெருந்தோட்ட விவசாயமான கோப்பி, தேயிலை, கரும்பு, பருத்தி ரப்பர், தென்னை எனும் பெருந்தோட்டத் தொழிலை பாரம்பரியத் தொழிலாகவே ஏற்று உழைத்து மாய்ந்து வரும் இம் மக்கள் கூட்டம், இன்னுமொரு புதிய பெருந்தோட்டத் தொழிலாக அறிமுகப் படுத்தப்பட்ட எண்ணெய் வடிக்கும் தாவர விவசாயத்தில் மீண்டும் கூலிகளாக மாட்டிக் கொண்டு, துயரத்தில் நனைந்து கொண்டிருக்கும் ஈர வாழ்க்கையை புதிய தகவலாக இந்த நெடுங் கதை மூலம் பிரமிளா தந்துள்ளார்.! இது மலையக மக்கள் வாழ்க்கையில் புத்தம் புதியத் தகவல் தரும் கதையாகும்.

கட்டு பொல் என்னும் முள்ளுத் தேங்காய்த் தொழிலில் வேலை செய்வதென்பது தேயிலை, றப்பர் தொழிலை விட மிக மிக கஷ்டம் நிறைந்த தொழில் என்பதை கதையோட்டத்தின் மூலம் அறிந்து வேதனைப்படுகின்றோம். மலேசியாவில் றப்பருக்கு மாற்றுத் தொழிலாக செம்பனை என்னும் பாம் ஒயில் பயிர் செய்கையை ஆரம்பித்தார்கள். இலங்கையில் றப்பர் உற்பத்திப் பொருள் செய்து வரும் ஆர்ப்பிக்கோ கம்பெனிக்காரர்கள் இத்தொழிலை ஆரம்பித்துள்ளார்கள்.

முள்ளம் பன்றி போல் முட்கள் நிறைந்த கட்டு பொல் கொப்புகள் பாக்குகளைப் போன்று 300 400 காய்களைக் கொண்டதாகும். 4050 கிலோ பாரம் கொண்ட கொப்புகளை பெண் தொழிலாளர்கள் வாகனப் பாதைக்குச் சுமந்துச் செல்ல வேண்டும். தலையில், கைகளில், உடலில் முட் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டேயிருக்கும். ஆண் தொழிலாளிகள் முப்பது நாற்பது அடி நீளமுள்ள தடிகளில் கத்தியைக் கட்டி கொக்கிகள் செய்திருப்பார்கள். மரம் மரமாக அண்ணாந்து பார்த்தபடி கொப்புகளைத் தேடி அறுத்துத் தள்ளுவார்கள். இந்தத் தொழில் முறையை வாசித்தறியும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. பெருந்தோட்டத் தொழிலையே தங்கள் பாரம்பரியத் தொழிலாகக் கொண்டு போராடி மாயும் இம்மக்கள் சபிக்கப்பட்டவர்களோ என்று ஐதிகச் சிந்தனைக்கு இக்கதை என்னைத் தள்ளியுள்ளது!

இவர்களது உள்ளக வாழ்க்கைக்குள் பூத்து மணம் பரப்பும் காதலும், சமூக மாறுதலுக்கான சவாலாக முன்னேற்றம் காணும் கல்வி நிலை பற்றியும், முற்போக்கு சிந்தனையுள்ள ஆசிரியர் வசந்தன், கடமையுணர்வுள்ள நஸ்ரினா ஆசிரியை, சிறுவர் நிலையத்து பத்ரா மிஸ், தொழிலாள நண்பர்களான மாரியப்பன், ஆறுமுகம், ரவி, செல்லத்துரை போன்றோர் மனதில் நிலைக்கின்றனர். புஞ்சிபண்டா கண்டாக்கு, கடை வியாபாரி பியதாச போன்ற இனவாதிகளின் நடவடிக்கைகளும் மனதைக் கீறுகின்றன.

காலி மாவட்டத்தில் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில், இனவாதிகள் மத்தியில், தமிழர்கள் நகைப்புக்குரியவர்களாகக் கணிக்கப்படுவதையும் பாத்திரங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இதுவரை பேசாப் பொருளாகவிருந்த இப் புதிய பெருந்தோட்டப் பயிர் முறை பற்றியும், அதன் மூலப் பொருள் மூலமாக செய்யப்படும் உற்பத்திகள் பற்றியும், தொழிலாளர்களின் தொழில் துயரங்கள் பற்றியும், அவர்களின் போராடும் வாழ்க்கையிலிருந்து புதிய மாறுதலைத் தேடுவதற்கு எத்தனிக்கும் எழுச்சி பற்றியும், பிரமிளா சமூக ஆய்வினைப் போன்றதொரு தேடலை இந்த நெடுங்கதை மூலம் ஓர் ஆவணப் படைப்பாக நமக்குத் தந்துள்ளார். இந்தப் படைப்பின் மூலம் பிரமிளா மலையக இலக்கியத்தில் உயர்த்திப் பேசக்கூடிய படைப்பாளராக உயர்ந்து நிற்கின்றார்.! இவரது இந்தப் படைப்புக்கு 2017 ஆம் ஆண்டுக்கான கொடகே தேசிய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி தினக்குரல்  - April 8, 2018