Enter your keyword

Wednesday, December 18, 2024

கொலைச்சொல் - பிரமிளா பிரதீபன்

By On December 18, 2024

சூரி சடலமாக கிடத்தப்பட்டிருந்த திசை பார்த்து முக்குச்சுவரில் தலையழுத்தி சாய்ந்திருந்தேன். முழங்காலுக்குள் முகத்தை புதைத்துக்கொள்ள விரும்பினாலும் கூட நான் அப்படிச் செய்யவில்லை. கட்டவிழ்ந்த எண்ணங்கள் உடலை நடுங்கப் பண்ணியது. அடிநெஞ்சில் எழும்பிய தேம்பல் தலைக்குள் மோதித் தாக்கி உஷ்ண அலைகளாக வெளிறேத் தொடங்கியிருந்தது.  

என்னை பலவந்தமாக யாரோ கொன்று விட்டதாக முடிந்த வரை நம்பினேன். அப்படி நம்புவது மட்டுமே அப்போதைக்கு அதிக ஆறுதல் தருவதாயிருந்தது. என் மகளை சிலர் பெயர் சொல்லி கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். முழுவதுமாக கண்திறக்காமல் அவள் யாரிடம் இருக்கிறாளெனப் பார்க்க விரும்பினேன்.    

சேது மாமா வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

 ‘ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல இனிதான் நீ சந்தோசமா இருக்கனும். எல்லா சனியனும் தொலஞ்சிருக்கு.. இங்கப்பாரு… மாமாவ பாரு எதுக்கும் பயப்புட கூடாது. மாமா இருக்கேன்ல…’ 

மாமாவின் கைகளை விடாமல் பற்றியிருந்தேன். என்னிடமிருந்த பெரும் வெறுமையுணர்வை பார்வையால் கடத்தி இறுக்கமாக கண்களை மூடித்திறக்கையில் ஓரிரு கண்ணீர் துளிகள் வெளியேறின. அவை சூரிக்கான கண்ணீர்த்துளிகள் அல்ல எனக்கு மட்டுமேயானவை.  

இனியென்னை எப்படி நம்பப் போகிறார்கள்?  

 ‘இப்பிடி செஞ்சிட்டு போயிட்டானே மாமா…? நான் என்ன செய்யனும் இப்ப?’ 

வெடிக்க ஆரம்பித்துவிட்ட தலையை சிதறவிடாமல் இறுக்கிப் பிடித்து, தலையை நிமிர்த்தி சூரியைப் பார்த்தேன். வழமையாக இரவுகளில் அவன் என்னிடம் சொல்லிக்காட்டுகின்ற மரண அறிவித்தல் செவிகளுக்குள் கேட்டுக்கொண்டேயிருந்தது.   

‘இரத்தினப்புரி கஹவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி சிவராசா தம்பதிகளின் தவப்புதல்வனும் காவ்யதர்ஷனியின் அன்புக் கணவரும் விஷாலினியின் அன்புத்தந்தையுமான திரு சூரியக்குமார் அவர்கள் 01.03.2024 அன்று அகால மரணமடைந்தார். அன்னாரின் பூதவுடல் இரத்தினபுரி பொது மயானத்தில் பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.’  

திகதியை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொள்வானே தவிர இதே அறிவித்தலை ஒவ்வொரு நாளும் அவனது வாயாலேயே சொல்லிச்சொல்லி என்னைக் கேட்க வைத்திருக்கிறான். தவறி தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பியமர்த்தி சொல்லிக்கொண்டிருப்பான்.  தொடர்ச்சியாகக் காரணமேயின்றி சிரிப்பான்.  மறுநிமிடமே ‘கோவிச்சுக்காத காவ்யாம்மா… நீன்னா எனக்கு உசுரு. ஓம்மேல தூசி பட்டாக்கூட தாங்க முடியாதுடி. வா..வா எங்கிட்ட… கட்டிப்பிடிச்சிட்டே தூங்கு. தனியா தூங்கிப்போனா இப்டிதான் செய்வேன்’ என்பான். 

தப்பிக்கவே முடியாத ஒரு கட்டத்தில் என்னை நிறுத்திவிட்டு இப்படி கிடக்கிறானே! கடுமையான குழப்பத்துடன் அவ்வளவு தத்தளித்தேன். அடுத்த நொடியை சந்திக்கும் திராணி அறவும் இல்லாதிருந்தது. இப்போதைக்கு என் மனநிலையறிந்த ஒரேயொருவர் சேது மாமா மட்டுமேதான். சூரியின் இறப்பு என் குடும்பத்தினருக்கே கூட சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கும். அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து தள்ளியே நின்றிருந்தார்கள். வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

மாமா என்னை கையோடு இழுத்து ஓர் அறைக்குள் தள்ளி அறையை மூடினார். ‘இதுக்குள்ளயே இரு. யாருக்கும் நீ பதில் சொல்ல வேணாம். நாம்பாத்துக்குறேன். இந்தா இத குடி’ உள்ளிருக்கும் திரவம் வெளித்தெரியாமல் துணியால் சுத்தப்பட்டிருந்த போத்தலை நீட்டினார். அதற்குள் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். வழமையாக மாமா விளையாட்டாகத் தரும் போதெல்லாம் மறுத்துப்பேசி ஓடிவிடும் நான் அப்போது பட்டென்று அதனைப் பறித்து வாயில் கவிழ்த்துக் கொண்டேன்.  

‘மெதுவாக் குடி’ என்றார்.  

ஓரிரு முறைகள் இடைவெளிவிட்டு அவ்வளவையும் குடித்து முடித்து போத்தலை நீட்டினேன்.  

‘படுத்து நல்லாத் தூங்கு’

 அவர் கதவை தாழிட்டுவிட்டு வெளியேறினார்.  

திடீரென வீடு கலவரமடைந்தது. மாரிக்கிழவி சத்தமாக ஒப்பாரி வைத்துக்கொண்டே உள் நுழைந்திருந்தாள்.  

ஒப்பாரிச் சத்தத்தில் பல குரல்கள் கலப்புற்றன. மாரிக்கிழவியின் சப்தம் மட்டும் தனித்து ஒலித்தது.   

‘களனி மல உச்சியில

கலசனத்த கையமத்தி

கைலாசம் போனியளோ…. 

பழனி மல வாசலில…..’

இடைக்கிடை சூரியப்பா சூரி என்று அலறிக்கொண்டாள். மூக்கை சத்தமாக சீறித்துடைத்தாள். 

‘பரதேசம் போனியோ என்ராசா - நீ

பரதேசம் போனியோ

என்னத்த பாத்தியோ 

என்னத்த நெனச்சியோ  

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

யார நா வைவேன்

தொங்கும் போது துடிச்சியோ

இல்ல நெனைக்கும் போது துடிச்சியோடா சாமி…’

அழுகை சப்தம் பலமாக ஒலித்தது. 

‘செத்துப்போன்னு சொன்னா சாவியோ 

எஞ்சாமி- 

செத்துப்போன்னு யாரும் சொன்னா நீ சாவியோ…’ 

அடுத்த கணம் மிக நிசப்தமாகிப் போனது. யாரேனும் கிழவியின் வாiயைப்பொத்தி இழுத்துப் போயிருக்க வேண்டும்.

 கண்கள் சுழன்று ஏதோ தலைக்குள் பாரமாக அழுத்தியது. களைப்பு மறைந்து மெல்லியதொரு மயக்கநிலை விரவி நான் ஆசுவாசமாக உணர்ந்தேன். அடிவயிற்றில் பனித்துளிகள் அப்பிய சுகம். வெகுநேரமாக சிந்தனையற்று வெறுமனே கிடந்தேன். தூங்கிவிழித்தேனா இல்லை அதே மயக்க நிலையில் இப்படியே கிடக்கிறேனா?  முகத்தின் மீதும் வயிற்றின் மீதும் ஏதோ வேகமாக ஊர்ந்துசெல்லும் உணர்வு. என் கைகளைத் தேடினேன். இடதுகையை இழுத்து தூக்கிப் பார்த்தேன். கனமாக இருந்தது. நேராக நிமிர்த்த முயற்சித்தேன். அப்படியே ஒரு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சூரி கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருந்தான். ‘சூரி…’ பல்லைக்கடித்துக்கொண்டு கத்தினேன். 

‘பாசம் பாசம்னு சிதைச்சிட்டியேடா பாவி. மொத்தமா வேசி பட்டம் கட்டி முடிச்சிட்டியே. அபாண்டமா ஒரு பொய்ய பரப்பி…. இதுக்கு என்னய கொன்னு போட்டிருக்கலாமே!’  

பூனையொன்றின் மெல்லிய ஊளையொலியோடு அழுதேன். வலியோடு தெறித்த அவ்வழுகை எனது அயர்ச்சியை சற்றே இலகுபடுத்துமென்று தோன்றியது. மல்லாந்து கைகள் விரித்துக் கிடந்தேன். உடல் கனமற்று பறக்க தாயாராகிக்கொண்டிருந்தது. மின்விசிறி விசித்திரமான சப்தத்துடன் சுழன்றது. அவ்வப்போது விட்டத்தில் ஒன்றுமே இல்லாதது போலானது. கண்களைக் கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தேன். விசிறி கழன்று விழுந்து அப்படியே என் தலையை நசுக்கி விடுமோவென அஞ்சினேன். பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தேன். உடல் சற்று வியர்த்துக் குளிர்ந்திருந்தது. மீண்டும் படுக்க பயம் வேறு. வெளியே போய்வர இயலாத தடுமாற்றம். இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் அவசரத்தை அடக்கச் சிரமப்பட்டேன். இப்போது நேரம் என்ன? நடுசாமமோ… என்னவோ? ஏன் சத்தமேயில்லாமல் இப்படி வெறுமை பரவியிருக்கிறது? தொடைகளை இறுக்கி அடிவயிற்றை எக்கி சிறுநீர் உந்தலை அடக்கிக்கொண்டு எழுந்தேன். காதை உன்னிப்பாக வைத்து வெளியே பேசிக்கொள்ளும் சப்தத்தை கேட்டேன்.  

வீட்டுக்கு பொலிஸார் வந்திருந்தனர்.  

சூரியின் அம்மா தெய்வமாகத் தெரிந்தாள். அவள் தந்த வாக்குமூலம் மொத்த சந்தேகத்தையும் தீர்த்திருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு விம்மினேன்.

 ‘இனியாவது கொஞ்சம் நிம்மதியா இரும்மா.’  

மகனை இழந்த எந்தவொரு தாயும் சொல்லாத அந்த வார்த்தையை அவள் என்னிடத்தே இரகசியமாகக் கூறியபடி அழுதாள். வாஞ்சையோடு எனது இடதுதோளில் கை வைத்து பற்றியழுத்தினாள்.  மனப்படபடப்பு பல மடங்காகவுயர்ந்து அடங்கியது. அதனெச்சம் பேரிரைச்சலுடனான சுவாசமாக மாறுவது கண்டு, முகத்தசைகளை இறுக்கி எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.  

இறுதி விசாரணை என்னிடமாம்.  

ஒரு பெண் போலீஸ் என்னை அறையொன்றிற்குள் அழைத்துச் சென்றாள்.  கதிரையொன்றில் அமரச்செய்து சிங்களம் தெரியுமாவெனக் கேட்டாள்.  தெரியுமென்றேன். தொடர்ச்சியாக அழுதபடியிருந்தேன். நான் சூரியை நினைத்து அழுவதாக அவள் எண்ணியிருக்க வேண்டும். 

‘அப்போ ஏன் அவனை செத்துப்போ என்று ஏசினாய்?’ என்று கேட்டாள். மிருதுவாக என் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளுக்கு ஓரளவுக்கு விடயங்கள் தெரிந்திருந்தன.  

‘நீ அப்படி சொன்னதால்தான் அவன் தூக்குப்போட்டான் என்று நம்புகிறாயா? உனக்கு ஒன்று தெரியுமா? உன் மாமி என்ன சொன்னாள் தெரியுமா காவ்யதர்சனி? 

நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். 

 ‘அதுதானே உன் பெயர்?   

சூரியின் அம்மா என்ன சொல்லியிருக்கக்கூடுமென யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை சரியாக அறிந்தவள் போல் அவள் அதே கதையை மீண்டும் ஆரம்பித்தாள்.  

‘உன் மாமி அப்படியொரு  வாக்குமூலத்தை தராதிருந்தால் இந்நேரத்தில் உன்னை வேறுவிதமாகத்தான் விசாரித்திருப்போம். ஒரு தாய் தன் மகனை அவ்வளவு சொல்கிறாளென்றால்…. அவனைப் பற்றி தெரியாமலா நீ கல்யாணம் செய்தாய்?’  

‘என்ன சொன்னாங்க ?’  

‘அவன் சகோதரர்கள் கூட ஒரேவிதமாக தான் சொன்னார்கள். ஒரு நாளில் குறைந்தது மூன்று தடவைகளாவது தற்கொலை பண்ணப்போவதாக மிரட்டுவானாமே! கையில் கழுத்திலென்று கிழித்து கொள்வானாம். தண்ணியில் குதிப்பானாம். ஒரு தடவை நஞ்சும் குடித்திருக்கிறானாம்.’  

நான் என் வலதுகால் பெருவிரலை நிலத்தில் குத்தித் தேய்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.  

‘விடு… அவன் சாக வேண்டியவன். உன் நேரம் நீ ‘செத்துப்போ’ என்று ஒரு வார்த்தையை சொல்லியிருக்கிறாய்.’  

அவளுக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது. என்னை காத்திருக்கும்படி கையால் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தாள். வேறு சில பொலிஸாரும் அந்த அறைக்குள் வந்துபோனார்கள். 

உடைந்து தேம்பும் அநாதையாய்  நான் அவ்விடத்தில் அமர்த்தப்பட்டிருந்தேன்.  அனிச்சையாய் உடல் நடுக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. என் தொலைபேசிப் பதிவிலிருந்த அத்தனை இலக்கத்திற்கும் அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை மீண்டும் ஒருதடவை நினைத்துக்கொண்டேன். சிலர் அதற்கு பதில் அனுப்பியிருப்பார்கள். ஒருத்தர் விடாமல் அந்த செய்தியை நம்பியுமிருப்பார்களோ! 

  

சகிக்கவே முடியவில்லை. ஒருவன் தற்கொலை செய்யுமளவிற்கு நான் என்ன செய்தேன்? 

மெல்லிய கனைப்புடன் மீண்டும் அவள் என்னிடத்தே வந்தமர்ந்தாள்.  

‘சொல்லு உன் தொலைபேசியை ஏன் அவனுக்கு கொடுத்தாய்? அவன் ஏதோ செய்தி அனுப்பியதாக உன் மாமி சொன்னாள்.  என்ன அனுப்பினான்?’  

‘நான் சாகப்போகிறேன் என் பொண்டாட்டி காவ்யா கட்டையன் சிவக்குமாருடன் ஓடிபோய்விட்டாள். என்னையும் என் குழந்தையையும் அநாதையாக்கி விட்டாள்.’ என்று அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கூறும்போது தொண்டை அடைத்திருந்தது.  

அவள் தண்ணீர் போத்தலை என் பக்கமாக தள்ளி வைத்தாள்.  

‘யார் சிவக்குமார்? உன்னோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவனா.?’  

‘இல்லை. இதற்கு முதல் நான் வேலை செய்த அலுவலகம்.’   

‘யாருக்கெல்லாம் அனுப்பியிருக்கிறான்?’ 

‘என் பதிவிலுள்ள அத்தனை பேருக்கும்.’  

அவள் எனது தொலைபேசியை காட்டச் சொன்னாள். உடைந்து விட்டதென்றேன். நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தாள். தொடர்ந்தும் நானாகவே பேசத் தொடங்கினேன்.    

‘சூரியை முடித்த பிறகு நான் என் எல்லா நண்பர்களிடமிருந்தும் விலகினேன். பெண்களிடம் கூட நான் அதிகம் பேசுவதை சூரி விரும்பவில்லை. ஒரு தடவை ஒரு கோயில் திருவிழாவிற்கு போயிருந்தோம். கூட்டத்தில் ஒரு நண்பன் காவ்யா என்று கத்தியழைத்தான். எனக்கு கேட்டிருக்கவில்லை. அருகே வந்து என் தலையில் தட்டினான். அவ்வளவேதான். சூரிக்கு நெருப்புக் கோபம். அவனையும் என்னையும் பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு அங்கிருந்து போய்விட்டான். பின்னிரவுப் பொழுதில் வந்து சட்டென கதவைத் திறந்து வீட்டுக்குள் எதையோ தேடினான்.  

‘யார்டி அது? என்றபடி என் முடியை பிடித்து இழுத்து கத்தியெடுத்து அறுக்க முயற்சித்தான். நான் திமிறி அவனிடமிருந்து விடுபட்டு ‘யார்னு தெரியலப்பா… கூட படிச்சவனா இருக்கும். வௌயாட்டுக்குஅப்பிடி செஞ்சுட்டான் எதுக்கு இவ்ளோ கோவப்படுறீங்க? என்றேன்.  

‘அடியே வேச… நீ கண்டவன்ட படுப்ப நான் கேட்டா கோவப்படுறீங்களாவா?’  

சூரிக்கு எதையும் சொல்லி தெளிவுபடுத்தலில் நம்பிக்கையிழந்தவள் நான். பதிலேதும் சொல்லாமல் அவனைப் புறக்கணித்தேன். முகம் இறுகி ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினான்.  பதிலுக்கு நான் சண்டை போடவேண்டுமென விரும்பினான். மேலதிக விளக்கம் தந்து அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். சம்பந்தமே இல்லாமல் எத்தனை தடவைகள்தான் மன்னிப்பு கேட்பது? நான் பேசாதிருந்தேன்.  

அப்போதுதான்… கையிலிருந்த கத்தியை அவனது கழுத்திற்கு திருப்பிப் பிடித்து அழுத்திக்கொண்டே கேட்டான். ‘சொல்லுடி இல்லன்னா அறுத்துக்குவேன்… சொல்லிரு… சொல்லிரு...’ பெருங்குரலெழுப்பி என்னை எச்சரித்தான். கத்தி ஆழமாகப் பதிந்திருந்தது. கைகள் நடுக்கம் கொண்டிருந்தன.  கொஞ்சம் இழுத்தால் கூட அறுபட்டு விடலாம்.  ஸ்தம்பித்துப் போனேன்.. அந்த நள்ளிரவில் யாரையென்று அழைக்க முடியும். ‘வேணாம் சூரி… கத்திய எடு… ஒன்ன கும்புட்றேன் கத்திய எடு’ பதறினேன். குரல் நடுங்கி அலறலாக மாறியது.  அவன் பின்னால் தள்ளிப் போய்கொண்டே கத்தியை மேலும் அழுத்தினான். இரத்தம் இலேசாக கசிந்து பரவுவதை என்னால் காண முடிந்தது. நான் மயங்கவில்லை ஆனால் கடுமையான அயர்ச்சியுடன் மிரண்டு போயிருந்தேன்.  

‘சொல்லுடி வேச… அவன வச்சிருக்கியா? தொட்டுப் பேசுறானே?’ இரத்தம் மேலும் அதிகமாக கசிந்திருந்தது. நடுங்கும் கரங்களுடன் அவனருகே சென்றேன். பேச்சற்றவளானேன்.  

‘யார்னு சொல்லு… யார்னு சொல்லு…’

  

‘அவன்தான் என்ன விரும்புறான்… அவன்தான் என்ன விரும்புறான்.. அவன்தான் விரும்புறான்’ பித்தேறியவளாய் உளறிக்கொட்டினேன். தலையில் அடித்துக்கொண்டேன். 

சட்டென கத்தியை அகற்றி நிதானித்து சிரித்தான். தடாலென விழுவது போலமர்ந்து கதிரைக் கைப்பிடியை குத்திக்கொண்டே கேட்டான்.  

‘நீ விரும்புறியா குட்டி? சொல்லும்மா நீயும் அவன விரும்புறியா?’ 

மறுத்து பலமாக தலையாட்டினேன். அவன் பெயர்கூட எனக்கு தெரியவில்லையென்பதை நம்பவா போகிறான். சுவரோடு சரிந்து நிலத்தைப் பற்றிக்கொண்டு தளர்ந்திருந்தேன். 

அவனது இரத்தக்கசிவை துடைத்து மருந்திட்டேன். திடீரென என்னை அணைத்துக்கொண்டு கொஞ்சத் துவங்கினான். என்னை நம்புவதாக சத்தியம் செய்தான். ‘எனக்குத் தெரியும்டா செல்லம்.’ என் கால்களை நீவி விட்டான். தடவித் தடவி முத்தங்களாய் கொடுத்தான். அப்படியே என்னைப் புணர்ந்தான்.   

 

வெட்டியகற்றிய மரக்குற்றியாய் அசையாமல் கிடந்தேன். தெற்குச்சுவரின் மேல்மூலையில் தூசி படிந்து கிடந்ததை பார்த்து தேம்பினேன்.    

   

மேலதிகமாக ஏதும் கேட்க விரும்பவில்லையோ என்னவோ! அந்த போலீஸ்காரி சட்டென எழுந்து நின்றாள். தலைமுடியை சரிசெய்து கொண்டாள். 

 

நிஜத்தில் அபூர்வமான பெண்ணவள். நானாக ஏதோவெல்லாம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். தெரிந்த நண்பர்களைக் கண்டால் தலைகுனிந்து மறைவதையும் ஓடி ஒளிவதையும் சொன்னேன். முடிந்தவரை சூரிக்கு பிடித்தாற் போல வாழ முயற்சித்ததாய் சொன்னேன். இறுதியில் ‘சூரி பாவம் அவன் என்னை அதிகமா நேசிச்சான். ரொம்ப நேசிச்சிட்டான்’ என்றேன்.  

அவள் சிரித்தாள்.  

‘பைத்தியக்காரி ஒரு பைத்தியத்தோடு வாழ்ந்திருக்கிறாயே அறிவற்றவளா நீ? அழாதே. பெண்கள் அழக்கூடாது.’ என்றாள். 

தொடர்ச்சியாக ‘ஏன் அவனை செத்துப்போகச் சொன்னாய்?’ என்று கேட்டவாறே மேசையிலிருந்த புத்தகத்தை விரித்து  எழுத ஆரம்பித்தாள். 

  

விபரமாகச் சொல்லிவிட வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. நிதானமான குரலில் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.   

‘எனது அலுவலகத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் சிவக்குமாரின் விபரத்தை கொடுத்து பேச சொன்னேன். பேசியிருப்பார்கள் போல. அந்த மடையன் எனக்கு அழைப்பெடுத்து நன்றி சொன்னான். நான் பெண் பார்த்து கொடுத்ததை சொல்லி நெகிழ்ந்தவனாய் பேசினான். திருமணம் நிச்சயமானதும் என்னையும் சூரியையும் வரச்சொல்லி  சூரியிடமும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.  

 அன்று ஆரம்பித்த சண்டையிது. தொடர்ச்சியாக விடிய விடிய  சண்டை போட்டு வீட்டை இரண்டாக்கினான். எவ்வளவோ விளக்கினேன். ஒரு கட்டத்தில் நான் கோபப்பட ஆரம்பித்தேன். ‘அப்படித்தான் செய்வேன் உன் வேலையைப் பார்’ என்றேன்’ அதை சூரியால் ஏற்கவே முடியவில்லை. என்னை அடித்தான். தன் பலம் முழுவதையும் திரட்டி சுவரில் குத்தினான். என் கைப்பேசியை பறித்தெடுத்து என்னவோ செய்துவிட்டு கர்வத்துடன் சிரித்தான்.  

எனக்கு பயமாக இருந்தது. அந்தப் பொழுதுகளை நான் முற்றாக வெறுத்திருந்தேன். சிறு நிமிடத்தையும் தாமதிக்க விரும்பாமல் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். அக்கா வீடு பாதுகாப்பானது எனத் தோன்றினாலும் மச்சானோடு என்னை இணைத்து அடிக்கடி பேசும் சூரியின் இயல்பு என்னைத் தடுத்தது. அண்ணா வீட்டிற்கு போனேன். குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்து தனித்திருந்தேன். சூரி தேடி வருவானென்று எனக்கு தெரிந்திருந்தது.  

சிறிது நேரத்திற்குள் ஏராளமானோர் அழைப்பெடுத்திருந்தனர். என் நண்பி குறுஞ்செய்தியை பார்க்கச் சொன்னாள். ‘சிவக்குமார் வீட்டிலும் பிரச்சனை’ என்றாள். நான் வைத்திருந்த எல்லா வட்ஸ்எப் குழுக்களிலும் கூட அது பகிரப்பட்டதாய் சொல்லி அவளே அழுதாள். எனக்கு தலை வெடித்தது. கைபேசியை ஓங்கித் தரையில் அடித்தேன். சரியாக அந்த நேரத்தில் சூரி வாசலில் நின்று அழைத்துக்கொண்டிருந்தான். பாதி மிருகமாயிருந்த நான் அதே வேகத்தில் உடைந்து கிடந்த கைப்பேசியை பொறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தேன். அவனது முகத்திற்கே அவற்றை வீசி வெறிபிடித்தாற் போல கத்தத் தொடங்கினேன்.  

‘காவ்யா வீட்டுக்கு வா... இல்லன்னா செத்துருவேன்’ என்றான்.  

‘நெஜமாவே செத்துருவேண்டி’  

கோபம் தலைக்கேறிக்கொண்டிருந்தது. அப்படியே அடங்கி மெதுவாக கேட்டேன்.  

‘என்ன சொன்ன?... செத்துருவியா? சொல்லு…. சாகப்போறியா? எத்தன தடவதான்டா செத்துபோவ?’ அவனுக்கு மிக அருகே சென்று அடித்தொண்டையில் அழுத்திச் சொன்னேன்.  ‘செத்து தொலடா பரதேசி... செத்துப்போ… செத்துப்போ….’ என் சத்தம் அக்கம் பக்கம் வரை நீண்டிருக்கும்.  

அண்ணா என்னை கட்டிப்பிடித்து வாயை பொத்தினான்.

 

பதில் பேசாது சூரி வெளியேறினான். நான் அமைதியற்றிருந்தேன். சூரியை எனக்குத் தெரியும். முதற்தடவையாக இப்படி நடந்திருக்கிறேன். சற்று நேரத்திற்குள்ளேயே என் இதயத்துடிப்பு பன்மடங்காகியது. படபடப்பில் மயக்கமே வருவது போல… 

‘அண்ணா வா வீட்டுக்கு போலாம்’ என்றேன்.  

‘லூசா நீ. கொஞ்சம் அடங்கட்டும் விடு.’ 

‘ஏதோ பண்ணுது. பயமா இருக்கு’ 

 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அதிபயங்கரமாக நகர்ந்தது. ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. எல்லோருக்குமான பயம் அது. சூரியை எல்லோருமே அறிந்துதானிருந்தோம்.  

அண்ணா பைக்கை எடுத்ததும் ஏறிக்கொண்டேன். நான் பறந்து சூரியிடம் செல்ல அலைந்தேன். ஏதும் நடந்துவிடக் கூடாதென தவித்தேன்.  

வண்டியை நிறுத்தும் முன்னமே பாய்ந்து ஓடினேன். வீடு திறந்தே கிடந்தது.  வாசலுக்குள் நுழையும் போதே சூரி தொங்கிக் கொண்டிருப்பதைத்தான் நாங்கள் கண்டோம்.’  

நான் உடல் குலுங்க விம்மினேன். அவள் எனது கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.  

‘சூரி பாவம்... நான் அவன கொன்னுட்டேன்’  சீவனேயற்ற குரலில் பிதற்றினேன்.  

‘வாய மூடு. இனியாவது உன் வாழ்க்கையை வாழப்பார். முட்டாள் போல யோசிக்காதே.’  

அவளது மனவோட்டத்தை என்னால் அனுமானிக்க இயலாமல் இருந்தது. அவசரமாக இயங்கினாள். சில பதிவுகளில் கையெழுத்திடச் சொன்னாள். பதட்டமாகப் பேசினாள். என்னை வெளியே அழைத்து வந்து ‘இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.    

வெளியே நின்ற சூரியின் தம்பி ‘வாங்கண்ணி’என்றான்.  

3

         

குழப்பங்களின் ஆக்கிரமிப்பு விட்டகல்வதாகத் தெரியவில்லை. ஒவ்வாரு பகலும் மிக நீண்டதாய் ஊர்ந்தது. யன்னல்வழி வெளிச்ச ரேகைகளின் மாறுதலன்றி வேறேதுமில்லை. இரவும் பகலுமென ஒரேயறைக்குள்ளேயே கிடந்தேன்.  என் மகள் பற்றிய சிந்தனையைத் தவிர்த்தேன். என் உயிரைப் பிடித்து நிறுத்துகிற துரோகியவள்.   

அனேகமாக மாமாதான் உதவினார். ஆனாலும் அவர் பயந்து போயிருந்தார். எனது குடிப்பழக்கம் அதிகமாகியிருந்தது. சிறுநேர அந்த விடுதலையை மிக விரும்பினேன். போதையில் கொஞ்சமாவது வாழ முடிந்தது. எதைக் கொண்டும் நிரப்ப முடியாத என் வெறுமையை நான் தேர்ந்தெடுக்கும் போதைப் பொழுதுகள் அலங்கரித்தன. என்றாலுமே இறுதியில் சகலமும் அனர்த்தமாகி திணறடித்தன.  

‘தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று…’ 

சிவபுராணம், வேதப்புத்தகம், சலவாத்து எதையும் விட்டுவைக்கவில்லை.  விடாமல் துரத்தி சிறுபுள்ளியளவு கிடைத்தாலும் பெறுவதற்கு ஏதேனும் கிட்டுமாவென தேடித் துரத்தினேன்.  

தலை முழுவதுமாய் சூரி தொங்கிய அதே காட்சி. தீப்பற்றிய கோபத்தில் அவனை நான் கத்திய இறுதித் தொனி. 

பசியில்லாமல் சாப்பிட்டேன். தண்ணீரை கடித்து மென்றேன். கிழிந்த வாழையிலைகளைப் கண்களால் தைத்தேன். அறையை சுற்றிச்சுற்றி நடந்தேன். பின்வாசல் திட்டில் அமர்ந்து எறும்புகளை விரட்டினேன். புதிதாய் நடப்பதுபோல் கிணற்றடிவரை நடந்து கண்கள் அகலத் திறந்தபடி குளித்தேன். கற்பூரத்தை உள்ளங்கைகளுக்குள் பொடித்து ஆழ்ந்து நுகர்ந்தேன். தொண்டைக்குள் இறங்கிய அதன் வாசனையை அனுபவித்துக் குடித்தேன்.  

எப்படிப் பார்த்தாலும் சூரி தொங்கிக்கொண்டிருப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. 

‘புருசன் செத்ததும் ஓடிப்போனவள் வந்துட்டாள்’ என்ற கதை ஒளிந்து கிடந்த என் காதிற்கும் வந்தது. சிவக்குமாரது திருமணமும் நின்றுபோனதாம். என்னவோவெல்லாம் நடந்துகொண்டிருக்க நான் அடர்ந்த இருளையும் அதை மீறிய சாம்பல் வண்ண சிறுபொழுதுகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருந்தேன். 

அப்போதைக்கப்பான குழந்தையின் அழுகையொலி மட்டுமே என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.  

எத்தனை நாட்களாய் இப்படிக் கிடக்கிறேன்?  அறையில் ஈரவாடை நிரம்பியிருக்கிறது. கை வைக்குமிடமெல்லாம் ஏதோ பிசுபிசுக்கிறது. அருகிருந்த கண்ணாடியைப் பார்க்கிறேன். ஒரே தூசியும் கரும்புள்ளிகளுமாய்… ச்சே! அவற்றை கைகளால் வழித்துத் துடைத்தெடுத்து சட்டையில் அப்பிக்கொண்டே நீண்ட நாட்களுக்குப்பின்  என் பிம்பத்தை உற்றுப் பார்க்கிறேன். 

வேறு யாரோ ஒருத்தியைப் போல, கண்கள் சோர்ந்து முகம் விகாரமாகித் தெரிகிறது. அப்படியே பின்னால் இருந்து கழுத்தை இறுக்கி என்னை விடாது பற்றியிருக்கும் சூரியின் கைகளையும் கூட என்னால் இப்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது.