Enter your keyword

Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

No comments:

Post a Comment