Enter your keyword

Monday, June 15, 2020

என் நாயகனுக்கு...


என் நாயகனுக்கு,

எல்லையற்று  விரியும்  என்  கனவுகளின்  நீட்சி  தணிப்பதற்காய்  எழுதப்படும் கடிதமிது.

பதின்மவயது  கடந்து  பல  ஆண்டுகளுக்கு  பின்னொரு  பரவச உணர்வு. சாத்தியமா  என்ற  உணர்விற்கு  இடமேயில்லை.  என்னையொத்த  எல்லோரது வாழ்விலும்  இப்படியொரு  தருணம்  வந்திருக்க  வேண்டும்  அல்லது வரக்கூடும்.

குறைந்தது  நாற்பதிலாவது  உன்னை  சந்தித்திருக்க  கூடாதாவென்று  மனது வெம்புகிறது.  எல்லாம்  கடந்த  முதிர்ச்சியின்  உச்சத்திலா  உன்  மீதான  என் காதல்  வெளிப்பட வேண்டும் !

நிஜமாகவே  இது  காதல்தானா  என்றொரு சந்தேகம்  எனக்கும் இல்லாமலில்லை.  ஐம்பதை  கடந்த  பின்னான  எனதிந்த  உணர்வு,  கிட்டத்தட்ட அறுபதை  கடந்த  உன்னிடம்  ஏற்பட்டிருப்பது  உசிதமானதல்லவென  நானும் அறிவேன்.  இருந்தும்  இத்தனைக்  காலம்  உணரா  இப்பரவசத்தை  உன்னிடம்  பேசும்  போது  நான்  உணர்கிறேன்  என்பதை  உன்னிடம்  மட்டுமாவது சொல்லிவிட்டே  என்  வாழ்வு  முடிய  வேண்டும்  என்பதால்  வெட்கம்  விட்டு  என்  மனதை  பகிர்கிறேன்.
அறிவும்  மனதும்  மாறிமாறி  யுத்தம்  செய்து  மனது  ஜெயிக்கிறது.  உணர்ச்சிக்கு மதிப்பளித்து  திக்கித்  திணறிக்  கிடக்கிறேன்.
நிஜம்  சொல்லவா ?

நகரும்  நொடிகள்...  ஏன்  மாத்திரை பொழுதுகளிலும்  உன்  நினைவுகளின்  பிம்பம்  தெறித்து  சிதறி  என்னை  முழுவதுமாய்  வியாபித்திருக்கிறது.
சிரிக்கிறாய்  நடக்கிறாய்  கரம்  கோர்த்து  திரிகிறாய்  சமயத்தில்  தலை கோதுகிறாய்  கட்டியணைக்கிறாய்...  கீழுதடு மொத்தமாய்  கவ்வி   சில நொடிகள்  சிறைப்பிடித்து  பின்  விடுவிக்கிறாய்.   இருளின்  அடர்த்தியில்  பரவும்  சிறுதுளி ஒளியிலும்  வளியாய்  மேவியென்  மேனி படர்கிறாய்.
என்ன  உணர்வுகள்  இவை !  வயதிற்கு  ஒவ்வாத  இவ்வுணர்வுகளால்  நான் எங்கனம்  சிக்குண்டேன் ?  ஒருவேளை  என்  திருமணக்  கனாக்களை  சூழலாலும் காலத்தாலும்  தவிர்த்து...  உள்ளுக்குள்  அமத்தி  அமத்தி  நனவிலி  மனதிற்குள்  போட்டுக்கொண்டதால்,  என்னை மீறி  அவை  எழப்பார்க்கின்றனவோ !

யார் நீ ?  என்ன  செய்கிறாய் ?  எப்படி  தினமும்  இங்கே  வருகிறாய் ?   ஒ ன்றுமே தெரியவில்லை.

சில  பொழுதுகள்  மட்டுமேயான  உன்னுடனான  பார்வை,  ஒரு சில  வார்த்தைகள்  எப்படி  இத்தகையதொரு  உணர்வை  தூண்டக்கூடுமென  புரியாமல்   தவிக்கிறேன்.

பதில்  சொல்  நாயகா ?

இது  என்  இலக்கியக்காதல்.  அன்றேல்  முதுமையின்  ஏகாந்தம்  தந்த  ஒவ்வா தண்டணை.

நீ  நாயகன்  நான்  நாயகி.

நினைவுகளுக்கு  மட்டுமேயான  இலக்கிய  காதலிது.  என்  உணர்வுகளிற்கு அதியுச்ச  போதை  தரும்  அழகான  நொடிகளிவை.

கல்கியின்  வந்தியத்தேவனாய்  அல்லது  ஒரு  பொன்னியின்  செல்வனாய்...
இல்லையில்லை  எப்போதுமே  கல்கியின்  பூங்குழலி  நான்.  என்  அகத்தில் மட்டுமே  வாழும்  பொன்னியின்  செல்வனாய்  இருந்துவிட்டு  போ !
நான்  காலம்  கடந்து  தேடும்  என்  துணை  நீதானா   என்றறியேன்.  ஆனால்  உன்னில்  அதனை  அதிகமாக  உணர்கிறேன்.

அடிக்கடி  நாம்  சந்திக்கும்  எதார்த்த  பொழுதுகளெல்லாம்  வலிந்து  நீ  ஏற்படுத்தி  தந்ததாக  மட்டுமே  எண்ணத்  தோன்றுகிறது.  வெள்ளிக்கிழமைகள்  தோறும்  நான்  வரும்  அதே  கோயிலுக்கு  வருகிறாய்.  நான்  அமர்ந்து  ஆசுவாசப்படும்  இடத்திற்கு  அருகாமையிலேயே  அமர்ந்தும்  கொள்கிறாய்.

அவ்வப்போது  எதிர்பாராமல்  சந்தித்து  மீளும்  நம்  பார்வைகளில் சொல்லத் தெரியாத  ஏதோ  ஒன்று  தொக்கு  நிற்பதை  முழுமையாய்  உணர்கிறேன்.  நீயும் என்னை  போலவே  உணர்கிறாயோ  என்று  சந்தேகித்தே  இம்மடலையும்  எழுதத்துணிகிறேன்.

ஆனாலும்  இக்கடிதம்  தந்து  உன்னுடனான  பரஸ்பர  உறவை  நாடுவதல்ல  என்நோக்கம்.

எஞ்சியுள்ள  சிலகால  நம்  தனிமை  வாழ்வை  அர்ததப்படுத்திடவும்  அனாதைகள்  எனும்  அடையாளத்தை  தவிர்த்துக்  கொள்ளவும்  எனக்கு  நீயும்  உனக்கு  நானுமாய்  அர்த்தப்பட்டுபோகலாமெனும்  சிறு  ஆசை  ஓரமாய்  உந்தியபடியே  இருந்தாலும்,  எனக்கு  நன்றாகத்தெரியும்...  என்  அகத்தினதான  இவ்வுணர்வு  வெளித்தெரிந்திடும்  பட்சத்தில்  நான்  விசித்திரமாய்  நோக்கப்படக்கூடும்.  சந்திக்கு சந்தி  என்  காதல்  பேசுபொருளாக  மாறிவிடக்கூடும்.   நான்  கேலிக்குரியவளாக்கப்பட்டு  அவமானப்படுத்தபடல்  கூட  சாத்தியம்தான்.  கூடிப்போனால்  காறியுமிழ்ந்தென்னை  வெறிக்கும்  விழிகளுக்கு  மிகுதிவாழ்  எல்லாத்தருணங்களும்  வழிசமைக்கக்கூடும்.

இதையெல்லாமும்  தாண்டி  நான்  உன்னோடு  சேர  முனைவேனா ?  அல்லது  இச்சமூகத்தில்  அதுதான்  சாத்தியமாகி  விடுமா ?
இல்லை.

இம்மடல்கூட  உன்  பார்வைக்கு  படாமல்  கிழிபடத்தான்  போகிறதென்று  நன்கறிவேன்.  நான்காய்  எட்டாய்   கிழித்து  குப்பைத்தொட்டியில்  போட்டாலுமே யாரேனும்  சந்தேகித்து  கண்டுபிடிக்க  வாய்ப்புண்டு  என்பதால்  பலநூறு  பகுதிகளாக  கிழித்து  துகள்களாக்கி...  முடிந்தால்  கடித்து  சக்கையாய் மென்று,  ஓடும்  அருவியொன்றில்  துப்பிவிடவே  எண்ணுகிறேன்.

இம்மடலை  மட்டுமல்ல,  இனி  எழுதப்போகும்  பல  மடல்களையும்...

இவள்                                                                                                                                                                                 
 உன் பூங்குழலி

நன்றி - ஜீவநதி செப்டெம்பர்  2018

No comments:

Post a Comment