Enter your keyword

Wednesday, October 7, 2020

உரப்புழுக்கள் - பிரமிளா பிரதீபன்

 ‘வாங்க… சட்டுன்னு மிச்சமீதாரிய அள்ளி வச்சுட்டு போயிருவம்’ என்று அவசரப்படுத்தியபடி உரக்குவியலிற்கருகில் நின்று கொண்டிருந்தாள் சுரேகா. மீண்டும் அவர்கள் மண்வெட்டியால் உரத்தைக் கிளறி யூரியா பேக்குகளுக்குள் அள்ளித் திணிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு கிளறலின் போதும் குபுக்கென வந்துமோதிய மணம் அவர்களை மூச்சடக்கி முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தது.


சுரேகா மண்வெட்டியால் உரத்தைக் கிளறக்கிளற கைகளால் மற்றயவர்கள் அதனை அள்ளிப்போட்டனர். ஒவ்வொரு தடவையிலான பிடியிலும் கைகள் நிரம்ப வெள்ளைப் புழுக்களும் சுருண்டுக்;கொள்ளும் இயல்புடைய மண்நிற புழுக்களும் தாராளமாக அகப்பட்டன. 


வானிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த வெயில் அப்போதுதான் ஒரு பக்கமாய் சரிந்து தொங்க ஆரம்பித்தது. அதன் ஒளிக்கீற்றுகள் அடர்ந்து திரண்ட கடும்பச்சை வண்ண செம்பனை வாதுகளுக்கூடாக ஊடுருவி அவர்களது மேனியில் பட்டும் படாமலுமாய் வாதுகளின் நிழலசைவிற்கொப்ப தெறித்துக்கொண்டிருந்தன. 


காற்றுடன் கலந்துவந்த உரக்குவியலின் துர்வாடை நாசியை விட்டகலாமல் அவர்களையே சூழ்ந்து மீண்டும் மீண்டுமாய் சுழன்றபடியேயிருந்தது. கைகளிரண்டையும் ஒருங்கே சேர்த்து மணந்து பார்த்தாள் சுரேகா.  குடலை புரட்டி வெளியே இழுத்துவிடுமாப்போல் கோழி எச்சத்தின்  நாட்பட்டதொரு வாடை முகத்திலறைந்து மீண்டது. 


தசைகளின் மிக மெல்லிய கலங்களுக்குள் கசிந்து உள்நுழைந்து உறைந்து போயிருந்த அவ்வாடையை உடலிலிருந்தோ அல்லது நினைவிலிருந்தோ அகற்றி விடுதல் அத்தனை சுலபமில்லையென்றே அவளுக்குத் தோன்றியது. “வ்வேக்” என்று தோள்களைக்குலுக்கி தனக்குத்தானே முகம் சுளித்தவளாய் குனிந்து புற்தரையில் ஒருதடவை கைகளை அழுந்த தேய்த்தெடுத்து பச்சைப்புல் வாசனையை உள்ளங்கைகளுக்குள் ஏற்றிக்கொள்ள முயற்சித்தாள்.


இந்த உரவேலை தனக்குத் துளிதானும் பிடிக்கவில்லை என்பதை அறிந்த பின்னரே அனுர தன்னை இதற்கு பணிக்கிறானென சுரேகாவால்  ஊகிக்க முடிந்ததென்றாலும் தன் விருப்பத்திற்கு மாறாக அவனுடன் உறவு வைத்துக்கொள்ள அவளுக்குக் கொஞ்சமும் நாட்டமிருக்கவில்லை. என்றாலுமே ஒவ்வொரு நொடிப்பொழுதினையும் கடத்த முடியாமல் இந்த புழுக்குவியலுக்குள் பிணைந்து சாகும் நிலையை காட்டிலும் ‘பேசாமல் அவனுக்கு ஒத்து போயிருக்கலாமோ…!’ 


நினைக்கும் போதே அடிவயிற்றிலிருந்து பிரட்டிக்கொண்டு வந்த ஒன்றை வலிந்து வாந்தியாக வெளியே கக்கினாள். தண்ணீர்ப் போத்தலை சாய்த்து தொண்டையை சிறிதளவு நனைத்துக் கொண்டாள். 


பசியுணர்வு மெல்ல மெல்ல அதிகரித்து உடலைக் களைப்படையச் செய்து, உடலெங்கிலும் புழுக்கள் ஊர்ந்து தன்னை மொய்த்துக் கொண்டிருக்கும் உணர்வை மேலோங்க வைத்தது.  எதிர்பாராமல் வியர்வை வெளியேறி உடலை பிரட்டி… கசக்கி… கண்களை அப்படியே இருட்ட வைத்துக்கொண்டு… அவள் புற்தரையில் சடாரென விழுந்துக் கிடந்தாள். 


‘ஐயயோ சுரேகாவுக்கு கலந்(த்)த”


‘சாப்புடு சாப்புடுன்னு அடிச்சுக்கிட்டேன் கேடட்டாளா பாவி…”


‘இப்ப என்னடி பண்றது வெரசுனா தண்ணிய கொண்டாங்க”


அவர்கள்; பதறியடித்து தண்ணீர் தெளித்து கைகளால் விசிறத் தொடங்கினர். 


 ‘சுரேகா.. சுரேகா …’ என்று மெதுவாக அழைத்தாள் மயிலி. எதுவித அசைவும் இருக்கவில்லை. ‘மூச்சிருக்கான்னு பாருடி’ என்றபடி வயிற்று மேற்பரப்பில் கையை வைத்துப் பார்த்தாள் முகுந்தினி. 


அவர்கள் என்ன செய்வதென்றறியாமல் ‘யாராவது இருக்கீங்களா’ என சத்தமாக கத்த தொடங்கினர். 


தூரமாய் கேட்டுக்கொண்டிருந்த பைக் சத்தம் தங்களை நோக்கி வருவதையொத்த பிரமையை தோற்றுவித்தது. முகுந்தினி அவசரமாக பாதையோரத்திற்;கு சென்று மீண்டுமொருமுறை சத்தமிட்டாள். 


அனுர மாத்தியா நிதானமாக வண்டியை நிறுத்திவிட்டு உரக்;குவியலருகிற்கு ஓடிவந்தான். கிளறப்பட்ட உரத்திலிருந்து மேலெழுந்திருந்த வாடையை ஒருகையால் வாயை பொத்தியவாறு தவிர்த்துக் கொண்டு என்ன நடக்கிறதென்று பார்வையால் தலையசைத்து வினவினான். 


‘தவால் கேமைக்கு போகலங்கைய்யா.. திடுதிப்னு இப்டி விழுந்துட்டா’ 


‘இந்த நாத்தம் புடிக்கலன்னு சொல்லிகிட்டிருந்தா’


‘அவளுக்கு  உன மாதிரின்னும் சொன்னா சேர்’  


அவர்கள் சிங்களம் கலந்த தமிழில் விளக்கமளித்தார்கள்;. அனுர உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமென்;று அவன் கொஞ்சமும் எண்ணியிருக்கவில்லை. 


சற்றும் யோசிக்காமல் சுரேகாவை கைகளிரண்டால் ஏந்தித் தூக்கிக் கொண்டபடி வேகமாக நடக்கத் தொடங்கினான். அவர்கள் மூவரும் பின்னாலேயே ஓட எத்தனித்தாலும் அனுர மாத்தியாவின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்றே தாமதித்து பின் ஏதோ யோசித்தவர்களாய் உரக்குவியலருகிற்கே சென்று தங்கள் வேலையை தொடர்ந்தனர். 


செம்பனை கொத்தின் பாரத்தை சதா சுமந்ததில் திடப்பட்டிருந்த சுரேகாவின் வாக்கான உடலை தன் கைகளால் சுமந்து செல்ல அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மயங்கிய அவளின் முகத்தை உற்று நோக்கியவாறு அவளை அதிகம் அசைக்காமல்  நடந்தான். காதருகிலிருந்த சுருள் முடிக்குள் மறைந்திருந்த சிறு மச்சமொன்று அருகே பார்க்கும் போது பளிச்சென்று மிகத்துல்லியமாகத் தெரிந்தது. அது அவளுக்கு அழகாயிருப்பதாயும் தோன்றியது. அவளது மேனியின் வியர்வை கலந்த பெண்மணத்தை அனுபவித்து நுகர்ந்தபடியே அவன் உல்லாசமாய் நடந்துக்கொண்டிருந்தான்.  


அவளது மயக்கம் மெல்லமாய் தெளியத் தொடங்கி, தலை மிகக்கணமாய் வலியெடுத்தவண்ணமிருக்க தன்னை யாரோ ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதையொத்து… அவள் ஒருநொடி சுதாகரித்து கண்விழித்து அக்கம் பக்கம் பார்த்தாள். தானொரு ஆடவனின் ஸ்பரிசத்திற்குள் அடங்கியிருப்பதையுணர்ந்து உடனே தரைக்கு பாய்ந்து ஒதுங்கிக் கொண்டாள்.


‘எப்டியிது… நான்…’ வார்த்தைகள் வராமல் தடுமாறி உளறினாள். 


‘நீ மயங்கிட்ட சுரேகா’ 


இவன் எவ்வளவு தூரம் தன்னை சுமந்துகொண்டு நடந்திருக்கக்கூடுமென்று எண்ணியபடியே கைகளிரண்டையும் உதறித் துடைத்துக்கொண்டாள். 


‘எனக்கு சரியாகிடுச்சி…  நா போகனும்’ 


‘அந்த காண் தண்ணில கைகால் கழுவிட்டு வா. கொஞ்சம் பேசணும்.’ 


நேரே வயலுக்கு நடுவில் ஓடிய சிறிதளவு நீர் பரப்பிற்குள் கால்களையும் கைகளையும் தேய்த்து கழுவிக்கொண்டாள்.  அனுர தன்னை ஸ்பரிசித்திருக்கக்கூடிய பகுதிகளை விரல்களால் தேய்த்து கழுவி ஒதுக்கினாள். 


‘நா யார் பின்னாடியும் இப்படி அலைஞ்சதில்ல சுரேகா…’


அவள் எதுவுமே பேசவில்லை. 


‘ஒனக்கு சும்மாவே பேர் போடுறேன்… ஒம்புருசனுக்கும் கட்டுபொல் லொறில வேல போட்டுதாறேன். இன்னும் வேறென்ன வேனுமின்னு கேளு…”


அவள் தலை நிமிர்ந்து ஒரு தடவை அவனை பார்த்து பின் குனிந்துக்கொண்டாள்.


‘என்னயபத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். என்னய பகச்சிகிட்டு இந்த தோட்டத்துல வேல செஞ்சிற முடியும்னு மட்டும் நெனச்சிறாத… நீயா விரும்பி ஏங்கிட்ட வருவன்னு எவ்வளவு நாள்தான் காத்திருக்க முடியும் சொல்லு ?’ 



மீண்டும் அவனே கெஞ்சும் குரலில் சற்றே குனிந்து ‘யாருக்கும் சொல்ல மாட்டேன் சுரேகா’ என்றான்.


சிறிதுநேர மௌனத்திற்குப்பின்  ‘எனக்கு புடிக்கல’ என்றாள்.


‘ஏனாம்! ஓம் புருசன புடிச்சிருக்கோ. இல்லாட்டி முந்தியிருந்த கயான் மாத்தியாவதான் இன்னமும் புடிச்சிருக்கோ…’ குரலை சற்றே உயர்த்தி கோபப்பட்டான். 


‘ச்சே…!’ அவள் அவ்விடத்தில் நிற்க பிடிக்காமல் திரும்பி நடக்கத் தொடங்கினாள். அழுகை வெடித்து வெளியே சிதறியது. வழிந்த கண்ணிரை துடைத்துக்கொள்ளாமல் தேம்பியபடியே திரும்பிப் பார்க்காமல் அவசரமாக நடந்தாள். 


‘நாளைக்கும் ஒனக்கு கோழியொரத்துல தான் வேல போடுவேன் சொல்லிட்டேன்’ 


அவன் ஆத்திரம் மேலிட சத்தமாக கத்தினான். 


‘விட மாட்டேன்டி… நீயா வார வரைக்கும் விடவேமாட்டேன்’


சுரேகா முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். 


‘ஊருக்கே இந்த விஷயம் பத்தி ஏதோ ஒரு துளியாவது தெரிஞ்சிருக்கும் போது என் புருசனுக்கு மட்டும் தெரிஞ்சிருக்காதா பின்னே…! என்னனு ஒருவார்த்த கேட்டுக்காத அந்த நாயெல்லாம் எதுக்காக கல்யாணம் செஞ்சுக்கனும் ? நாங்க யாருயாரோடவோ ஒத்து போகையில அவனுங்க வலிக்காம பேர் போட்டு சம்பளம் எடுக்குறதுமில்லாம சரியான சமயத்துல வேசி பட்டமும் கட்டத் தயங்காத இந்த முதுகெலும்பில்லாத புருசனுங்களதானே மொதல்ல கொன்னு பொதைக்கனும்’


தன் கணவனின் உறுதியற்ற நிலையின் விபரீதமே இதுவென்றெண்ணி தன்னைத்தானே நொந்துக்கொண்டாள். 


லயத்தில் நடப்பதான எல்லா சண்டைகளிலுமே நடத்தை குறித்ததான ஏதோ ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தே ஒவ்வொரு பெண்ணும் வார்த்தைகளால் தாக்கப்படுகிறாள். எதிர்த்துப் பேச தகுதியற்றவளாய் அவ்வப்போது புறக்கணிக்கப்படுகிறாள்.


;ஒந் தலையில உள்ள முடிய எண்ணினாலும் புருசன்மார எண்ண முடியாது…’


‘நீ பேசாதடி அந்த மாத்தியாவோட படுத்தவ தானே நீ…’ 


சமயங்களில் தன் கணவனின் வார்த்தைகளாலேயே அவமானப்படும் ஒருத்தி ஏன் அவனுக்காக இன்னொருவனிடம் மண்டியிட வேண்டும்…? 


உயிரே போனாலும் தன்னால் அனுரவை அனுசரித்து போக முடியாதென்றே அவள் தீர்மானித்திருந்தாள். ஆனால் அவனை எதிர்த்துக் கொள்ளவும் முடியாத நிலையில் என்னதான் செய்து சமாளிப்பது..? கணவனிடமே சொல்லி பார்க்கலாமா…? ம்ஹீம்… வேலைக்காகாது. பின் பெரிய துரையிடம் சொல்லலாமா..? இல்லை அவர் தனக்கு சாதகமாக ஒருபோதும் பேசுவதற்கான வாய்ப்பு அறவும் இல்லை. 


 எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருவனை எதிர்த்துக்கொண்டு எப்படி அவனிடமே வேலை செய்வது…! 


சுரேகா குழப்பத்தில் இருந்தாள். கணவன் கோபமாக வீட்டுக்குள் வந்தது தெரிந்தும் காரணம் கேட்கத் தோன்றாமல் டீவி பார்த்தபடியே சமைத்துக் கொண்டிருந்தாள். 


 குடித்து மூழ்கி சுயநினைவில்லாமல் இருப்பவனுக்கு கோபம் ஒரு கேடு” வாயில் வந்த கெட்ட வார்த்தைளையெல்லாம் கோர்வையாக்கி அவனை ஆசைத்தீர திட்ட வேண்டும் போலிருந்தது. வாய்குள்ளாகவே சத்தம் வெளிவராமல் சொல்லிக் கொண்டாள். 


அவன் குசினிக்கும் இஸ்தோப்புக்குமாய் நடந்தபடி அடிக்கடி அவளை வெறித்துப் பார்த்தான். 


குடி போதையில் தடுமாறுகிறானாயிருக்குமென எண்ணினாள். அவன் நிஜமாகவே பயங்கர கோபத்தில் இருந்திருக்க வேண்டும். எதிர்பாராத தருணமொன்றில் திடீரென டிவியை எத்தி விழுத்தினான். விழுந்து சிதறிய அதன் பாகங்கள் குசினுக்குள்ளுமாய் பரவிக் கிடந்தன. அதிர்ந்து போனவளாய் அவனை அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள.


‘என்னடி புதுசா பத்தினியாட்டம் பேசுறியாமே..?’ 


அனுர ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். அல்லது குடிக்க வாங்கி கொடுத்து ஒரு தொகை கணக்கு பேசியிருக்க வேண்டும். 


யோசித்தவாறே விழுந்து கிடந்த டிவி துண்டுகளை சேர்த்துப் பொறுக்கினாள். 


‘போற போக்குல ஏதோ பதில சொல்லிட்டு போனா அவனென்ன தொரத்திட்டு வரவா போறான் ? கொஞ்சம் விட்டு பிடிச்சு தானே வாழனும். என்னமோ பெரிய கோடீஸ்வரியாட்டம் !’  


‘ஓஹோ ! எல்லாமே தெரிஞ்சு தான் பேசுறீங்களோ ? அப்ப எவன் கூப்டாலும் நா போயிடனும் அப்டிதானே!’


‘போயிட்டுவந்தாதான் என்னங்குறேன் ?”  


பட்டென கூறியவன் அவளது முகம் பார்க்க விரும்பாமல் அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.  


அதற்கு பிறகாய் இருவரும் எதனையுமே பேசிக்கொள்ளத் துணியவில்லை.  


நடு வீட்டில் கால் நீட்டியமர்ந்து ஏதேதோ சொல்லி புலம்பத் தொடங்கினாள். தன் வாழ்வை கேள்விகுறியாக்கும் ஒரு போத்தல் சாராயத்தையும் அப்படியே தன் தாயையும் நினைத்து கொஞ்சம் அழுதுகொண்டாள். 


லயத்து மத்தியில் உள்ள வீடு சுரேகாவினுடையதென்பதால் சத்தம் கேட்ட மறுகணம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுரேகா அழுது கொண்டிருப்பதை வந்து பார்த்துவிட்டு சத்தமே இல்லாமல் அகன்றார்கள். தவறியேனும் யாராவது அவளுக்கு சார்பாகப் பேசினால் பேசினவனை அவளுடன் சேர்த்து வைத்து கொச்சையாகத் திட்டத் தொடங்குவான். கேட்டது பெண்னென்றால் அவள் கணவனையோ தகப்பனையோ இழுத்து ஆன மட்டும் கதை பேசி முடிப்பான். நமக்கேன் வம்பென்று கண்டும் காணாமல் போக அவர்கள் அனேகமாக பழகி விட்டிருந்தார்கள்.   


பாவாடையை சற்றே உயர்த்தி மூக்கை சிந்தி துடைத்துக் கொண்டாள் சுரேகா. ‘இந்த மானங்கெட்ட மூதேசிக்காக நா எதுக்கு அழுவனும்’   சத்தமாகவே சொல்லிவிட்டு எழுந்து பரபரவென ஆடைகளை கலைத்தொதுக்கி உள்பாவாடையை மார்பளவிற்கு உயர்த்திக் கட்டியபடி கிணற்றடிக்குச் சென்றாள். அது வெயில் காலம் என்பதால் கிணறு வரண்டு அடியோடு சிறிதளவு நீரள் ஒட்டிக்கொண்டிருந்தது. 


‘இவனுங்க மனசுமாதிரியே தண்ணியும் வத்தி போய் கெடக்கு… கட்டுபொல் மசுறுபொல்லுன்னு என்ன எலவையோ நாட்டு வச்சி தண்ணி பூரா உறிய வக்கிறதும் இல்லாம நம்ம உசுரையும் வாங்கி தொலைக்குதுக… சனியனுங்க சனியனுங்க….’ முணுமுணுத்தப்படியே வாசற்படியருகில் வைத்திருந்த குடத்துத் தண்ணீரை கழுத்தோடு ஊற்றி உடலை நனைத்துக் கொண்டாள். உடலில் ஒட்டியிருந்த பிசுபிசுப்புடன் அவளது ஆத்திரத்தையும் சேர்த்தெடுத்துக் கொண்டே நீர் வழிந்தோடி கல் வாசலில் தேங்கி நின்றது. நீர் தேங்கத்தொடங்கியதைக் கண்ட மாத்திரத்தே இரண்டு லயத்து நாய்கள் விரைந்து வந்து அந்தத் தண்ணீரை நக்கி அருந்தத் தொடங்கின.   


ஏதாவதொரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டுமென்று எண்ணியபடியே நிமிடங்களை கடத்திக்கொண்டிருந்தாள். மனது  யோசிக்கத் திராணியற்று அந்த ஊரின் மண்ணை போலவே வரண்டு போயிருந்தது. மீண்டும் மீண்டுமாய் ‘போயிட்டுவந்தாதான் என்னங்குறேன்…?” என்ற வார்த்தையின் எதிரொலிப்பிற்குள்ளாக நினைவு சஞ்சரித்தது. 


எண்ணவோட்டங்கள் விசித்திர வேகத்தில் தடுமாறிக்கொண்டேயிருக்க, ஏதோ ஒரு வேகத்தில் விறுவிறென நடந்து அவளுடைய சிறிய கறுப்பு நிற கைபேசியை எடுத்து அனுர மாத்தியாவின் இலக்கத்தைத் தேடினாள்.  எதையெதையோ அமத்தி தேடி எப்படியோ அவனுடைய இலக்கத்தை அடையாளங் கண்டு கொண்டவளாய் அவனுக்கு போன் பண்ணி காதில் வைத்தபடியே என்ன பேச வேண்டுமென தனக்குத்தானே  தயார் படுத்திக் கொண்டாள். .


‘ஹெலோ…’


‘ஹெலோ… ஹேய்….! நம்பவே முடியல சுரேகா’


‘சரி… எனக்கு கெமத்தி’


 படடென பதிலளித்தாள். 


‘கெமத்தின்னா… கோவமா இருக்கியா சுரேகா..?


‘இல்ல எங்க வரனும்னு சொல்லுங்க’


‘சரி இன்னுங் கொஞ்சத்தில கோல் எடுத்து சொல்லுறேன்” 


அவன் படாரென  துண்டித்தான். ஓரிரு நிமிடங்களுக்குள் அவனே தொடர்பு கொண்டான். எல்லாவற்றிற்கும் துணிந்த மனநிலையில் அவள் தயாராய் இருந்தாள்.


‘ஹெலோ…’


‘நா சொல்றத கவனமா கேளு… நாளைக்கு தவறணை வேலைக்கு ஒன்னய போடுறேன். நீ ஒரு பத்து மணி வரைக்கும் அங்குண நின்டுட்டு மலைக்கு போட்டுருக்குறதா சொல்லிட்டு என் பங்களாவுக்கு போயிரு…’


அவள் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். மீண்டும் அவனே தொடர்ந்தான்.


‘வெளங்குதா சுரேகா…?’


‘ம்ம்… எனக்கு சும்மா பேர் போடுறேன்னு சொன்னீங்களே…?”


‘கட்டாயமா… நம்பலயா நீ. மாசத்துல ஒரு பத்து நாளைக்கு பேர்; போட்டுக்க அது போதும் மிச்சத்த நா போட்டு முழு மாச சம்பளத்தயும் கெடைக்க பண்ணுறேன்.’


‘அப்ப  பொன்னிக்கும் கலாவுக்கும் இப்புடி தான் பேரு விழுகுதா..?’


‘அவளுக எல்லாம் உன்னளவுக்கு வர முடியுமா..? சும்மா ஏதோ அவளுகளா வலியறப்ப நான் மறுக்குறது இல்ல..’


‘ம்ம்..’


‘அதுக்கெல்லாம் கவலபடாத…. நீ மட்டும் இருந்தா எவளையும் தேட மாட்டேன் புரியுதா ஒனக்கு..’


அவனது குரலில் கொஞ்சலும் குழைவும் மிகுந்திருந்தது. நினைத்ததை சாதித்து அடைந்து விட்ட மகா திருப்தியும் திமிரும் இருப்பதாகத் தோன்றியது.    


சுரேகா நிதானமாக யோசித்து முடிவெடுத்திருந்தாள். இஸ்தோப்பிலேயே ஒருக்கணித்தப்படி படுத்துக்கொண்டாள். அன்றைய இரவு முழுவதிலுமாய் யோசித்தாள். அடக்கமாட்டாமல் மனது வெம்பித் தவித்தது. 


கோழியுரத்தில் மிதந்து வழிந்த புழுக்கள் திடீரென வீட்டுச்சுரரெங்குமாய் மொய்த்துக் கொண்டிருப்பது போலவும் அவை தன்னுருவை விசாலமாக்கிக்கொண்டு தன்னை தீண்டும் எண்ணத்துடன் வர முயற்சிப்பது போலவும் இருந்தது.   திடுக்கிட்டெழுந்து சுவரை உற்று கவனித்தாள். மங்கிய வெளிச்சத்தில் திகதி கலண்டரும் அதன் நிழலுமாய் ஒருமித்துத் தெரிந்தன. மிருகத்தின் ஓசையையொத்ததொரு குறட்டையொலி சாரய நெடியுடன் கலந்தாற் போல உள்ளிருந்து இடைவிடாமல் வந்து கொண்டிருந்தது. 


அவளது கனவுகளெல்லாம் கண்முன்னே சிதறி துகள்களாகி ஊர்ந்தோடும் அந்த உரப்புழுக்களாய் மேனியை துளைத்தெடுத்து வேகமாய் உள்நுழைந்து கொண்டிருந்தன. அப்படியே தன்னை எரித்துக்கொண்டு பஸ்மமாகிவிட முயாதாவென்றுகூட அவளது ஆழ்மனது ஏங்கியது.  


நீண்ட நேரமாய் தூக்கமின்றி யோசித்துக்கொண்டேயிருந்தாள். உரக்குவியலும், மொய்க்கும் அந்த புழுக்களும், அனுர மாத்தியாவின் ஆசை வார்த்தைகளும்… தன் கணவனின் கோப கட்டளைகளுமென்று தொடர்ச்சியாக ஏதோவெல்லாம் வந்து வந்துப் போகத் தொடங்கின. 


இந்த ஒரு விடியலுக்காகவே காத்திருந்தவள் போல அதிகாலையிலேயே எழுந்து கொண்டாள்.  வழமைக்கு மாறாக நல்ல பாவாடை சட்டையொன்றை தெரிவு செய்து பிரட்டுக்கென கட்டிக்கொள்ளும் சீத்தையையும் நல்ல பூ போட்ட சீத்தையாய் தெரிந்தெடுத்து பாவாடைக்கு மேலாக உடுத்தியபடி பிரட்டுகளத்திற்கு நடந்தாள்.


பிரட்டுகளம் நிறையத் தொடங்கியது. அனுர மிக பூரிப்புடன் வந்திறங்கினான். எல்லோருமாய் அவனுக்கு வணக்கம் வைத்தனர். பதிலுக்கு வணக்கம் வைத்தபடியே அவன் சுரேகாவை தேடினான். அவள் புத்தாடையுடன் இருப்பதை பார்த்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். ‘ரெண்டு எலும்புத்துண்டை வீசிட்டு கூப்டா நாய் தானா வந்து சாப்பிட போகுது… இது தெரியாம இத்தன நாள வேஸ்ட் பண்ணிட்டமே…!’ 


அனுர ஒவ்வொருவரது பெயராக வாசித்து வேலைப்பிரித்தான். 


‘சின்னு கட்டுபொல்… குமார கட்டுபொல்… மயிலா உரம்…  சுரேகா தவறணை…’ என்றபடி அவளை மீண்டும் ஒருதடவை பார்த்துக்கொண்டான். முகுந்தினிக்கு தாங்க முடியாத ஆச்சரியம.; மயிலாவின் உள்ளங்கையை தட்டி உதட்டை பிதுக்கி சுரேகாவை காட்டினாள். இருவரும் ஏதோ உணர்ந்தவர்களாய் தலையசைத்துக் கொண்டனர். 


பிரட்டுகளம் கலைந்தது. எல்லோருமாய் சலசலத்தபடியே அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்கள்.    


சுரேகா சீத்தையை அவிழ்த்து மடித்து பைக்குள் போட்டுக்கொண்டாள்.  எத்தனை முயன்றும் மனது ஒப்புக்கொள்ள மறுத்தது. இறுதியாய் ஒரு தடவை முயற்சிக்கலாமெனும் திடீர்முடிவுடன் தவறணையையையும் தாண்டி வேகமாக நடக்கத் தொடங்கினாள். இலேசான பதட்டம் ஒன்று அவளை தொற்றிக்கொண்டிருந்தது. மனது வழமைக்கு மாறாக படபடத்தது.


நேராக பெரிய துரையின் பங்களாவிற்கருகில் போய் நின்றாள். அதிகாலையில் பெரியதுரையை தவிர அங்கே யாரும் இருப்பதில்லையென அவளுக்குத் தெரியும். கேட்டிற்கருகில் நின்று ‘மாத்தியா… மாத்தியா…’ என்று  அழைத்துக்கொண்டேயிருந்தாள். கட்டிப்போடப்;பட்டிருந்த நாய் அவளை கண்டதும் பாய்ந்து திமிறி குரைக்கத் தொடங்கியது. வராண்டாவில் நின்று கொண்டிருந்த பெரியதுரை அவளை உள்ளே வரும்படி கைகளால் சைகை செய்தார்.


பெரியதுரை அப்போதுதான் குளித்து முடித்திருக்க வேண்டும். வெள்ளை நிற துவாயொன்றால் தலையை துவட்டியபடியே ‘மொக்கத’ என்றார். 


சுரேகா அழுதுகொண்டே தான் சொல்லிவிட வேண்டுமென்று எண்ணியதையெல்லாம் சிங்களத்தில் தெளிவாக சொல்லி முடித்தாள். 


சிறிது நேரம் யோசித்தபடியே நின்றவர் சுரேகாவை கண்களால் ஒருதடவை மேலும் கீழுமாய்  அளந்தபடி,  ‘நீ என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்?’ என்று கேட்டார். சுரேகா எதனையும் சொல்ல முடியாமல் தடுமாறினாள். . பெரியதுரை நிச்சயமாய் அனுரவை தண்டிக்க கூடுமென்ற நம்பிக்கை அவளுக்கு இருந்த போதிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று அவளால்  ஊகிக்க முடியாமலிருந்தது. கைகால்கள் முதற்கொண்டு நடுக்கம் கொள்ளத்; தொடங்கியிருந்தன. 


சுரேகா பெரியதுரையின் பதிலை அறியும் தவிப்புடனும் ஒருவித பயத்துடனும் நின்றாள். அவர் மெதுவாக நடந்து சென்று திறந்து கிடந்த கேட்டை பூட்டி பொக்கட்டிற்குள் சாவியை போட்டுக் கொண்டார். கத்தி ஆரவாரித்த நாயை அமைதிபடுத்த அருகே வைக்கப்பட்டிருந்த இறைச்சித்துண்டுகளை கூட்டுக்குள் விசிறி வீசியெறிந்தார். மாமிச வாசனையுணர்ந்த அந்த நாய் பாய்ந்தடித்து ஒரு துண்டு இறைச்சியைக் கவ்விக் கடித்துக் குதறத் தொடங்கியது. பெரியதுரை அக்கம் பக்கம் பார்த்தபடி வீட்டினுள்ளே நுழைந்து டிவி; சத்தத்தை சற்று கூட்டி வைத்தபடியே  சுரேகாவை எதற்கும் பயப்பட வேண்டாமென்றும் தான் இதனைப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்குக் கொடுத்தார். 


‘இன்றிலிருந்து இங்கேயே வீட்டுவேலை செய்ய விரும்புகிறாயா’  என்று கேட்டுக்கொண்டே பற்கள் தெரிய சினேகமாய் சிரித்தார்.  


விளையாட்டுப் புத்தி கொண்ட பூனையிடம் சிக்கிக்கொண்டு சதா அந்தரித்து திரியும் எலியாய் இருப்பதை விட தன் கூறிய பற்களால் சிங்கம் சிக்கிய வலையை கடித்து, சிங்கத்திற்கு சில நிமிடங்கள் ஒத்தாசையாய் இருந்துவிட்டு ஓடித் தப்பிக்கும் எலியாயிருந்துவிடுதல் ஒருவகையில் சரியாய் இருக்கக்கூடுமோ…!  


ஆனாலும் இது சரியான முடிவாயிருக்குமென்று அவளால் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள முடியாமலிருந்தது. 


மீண்டும் மீண்டுமாய் யோசித்தாள். 


பூனையோ சிங்கமோ தெரிவு செய்வதில்தான் வித்தியாசமேயன்றி எலி எலியாய்தானே இருக்க வேண்டும். எலியால் சிங்கத்தையோ பூனையையோ எதிர்த்து வாழ்ந்து சாதித்து காட்டுதலென்பது எவ்வகையிலுமே சாத்தியமில்லை எனும் போது.


தொடர்ச்சியாக தான் துரத்தப்படுகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்தாலும்; தன்னை காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை சளைக்காமல் போராடும் ஒரு சிறிய எலியினளவிற்காவது தன்னிடம் தன்னம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா என்ன ? 


இதுவே இயலாமையின் உச்சம் என்றிருந்தது. 


சுரேகா இன்னும் தீவிரமாக யோசித்தாள். மனது அதியுயர் விரக்தி நிலைக்குள் தாவிக்கொண்டது.   


இத்தனை நேரமும் தன்னில் ஊர்ந்ததாய் உணர்த்திய உரப்புழுக்கள் யாவும் ஒருமித்து பெரியதொரு வடிவம்கொண்டெழுந்து… தன்னை அது எந்த வகையிலும் தப்பிக்கவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத் தொடங்கியிருப்பதாய் முழுமையாக நம்பத்தொடங்கினாள். 


பதிலுக்கு அவளும் பெரியதுரையை பார்த்து தயக்கத்துடன் சிரித்தாள். 

……………………………………………………………………………………………………..

  • கட்டுபொல் - செம்பனை
  • கலந்(த்)த - மயக்கம்
  • தவால் கேம - பகலுணவு
  • உன - காய்ச்சல்
  • கெமத்தி - விருப்பம்


நன்றி - ஞானம் - ஒக்டோபர் - 2020

No comments:

Post a Comment