Enter your keyword

Thursday, July 1, 2021

ஒரு சினேகிதனாய் ஜீவா ஐயா… (அனுபவப்பகிர்வு) - பிரமிளா பிரதீபன்

மிகப்பெரும் ஆளுமைகள் என வியக்கப்படும் ஒருசிலரால் மாத்திரமே தம்முள் மறைந்திருக்கும் சினேக உணர்வையும் குழந்தைத்தனத்தையும் வெகு இயல்பாக வெளிப்படுத்திடல் சாத்தியப்படுகிறது. சொல்லப்போனால் பிரமாண்டமான சக்தி கொண்ட ஒருவரின் முற்றிலும் வேறுபட்ட பக்கமொன்றாகவே இதனை எண்ணிக்கொள்ளவும் முடியும். 

எனது ஆரம்ப அனுபவம் கூட அத்தகையதொரு முரண்பாடான குழப்பத்துடனேயேதான் எனக்குள் பதிவாகியிருந்தது.  நான் ஜீவா ஐயாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாளை அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. நான் இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலமது. மிகச்சரியாக கணித்துச்சொன்னால் 25.06.2006. 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள். 

ஒரே கதையை பிரதியெடுத்து இருவேறு பத்திரிகைகளுக்கும் கூடவே மல்லிகை இதழுக்கும் தபாலிட்ட நம்பிக்கையில் ஜீவா ஐயாவை சந்திக்கவென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது அலுவலகத்தைத் தேடிக்  கண்டுப்பிடித்திருந்தேன். 

புத்தகங்கள் குவிந்த அறையொன்றிற்குள் கொஞ்சமாய் தெரிந்த இடைவெளியில் ஒரு சாய்கதிரையை போட்டு உறங்கினாற் போல சாய்ந்திருந்தார். என் வருகையை காலடி சப்தம் உணர்த்தியிருக்க வேண்டும். மெல்ல அசைந்தெழுந்து கூர்ந்து பார்த்தார். ‘யார் நீ..?’ என்பது போன்றதான அந்தப் பார்வையில் இன்னும் பல வினாக்களையும் வினவியதாய் தோன்றியது. உடனே நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.  

எனது பெயரைக்கேட்ட மறுநொடி அவரது முகம் மிகக்கடுமையாக மாற்றமடைந்தது. முதலில் என்னை அமரச்சொல்லி ஒரு கதிரையை காட்டினார். ‘இலக்கியத் துரோகி’ எனும் முதல் வார்த்தையை என்மீது வீசினார்.

நான் பதறி நிலைகுலைந்து தடுமாற்றத்துடன் அவரை எதிர்கொண்டேன். மொத்த வெறுப்பையும் தன் பார்வைக்குள் வைத்தபடி புத்தகமாக்கப்படாத ஒரு தொகை தாள்கட்டுகளை எடுத்து இருபத்துமூன்றாம் பக்கம் திருப்பினார். அங்கே ‘கண்ணாடிப்பிம்பம்’ எனும் எனது சிறுகதை பிரதியெடுக்கப்பட்டிருந்தது. 

எனது சிறுகதையை அச்சுத்தாளில் கண்ட பிறகான அப்போதைய என் மனநிலையை துல்லியமாக என்னால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவரது கோபத்திற்கான காரணம் கம்பீரமான தொனியுடன் என்னை சுழற்ற ஆரம்பித்தது.    

ஒரே கதையை இருவேறு இடங்களுக்கு அனுப்பியதை தன்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாதென்றும் தான் அதனை தெரிவு செய்து அம்மாதத்திற்கான புத்தக வடிவமைப்பையெல்லாம் செய்தான பின் அதே கதை அதே தலைப்புடன் அன்றைய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதாகவும் சொன்னார். தினக்குரல் பத்திரிகையை எடுத்துக் காட்டினார். இது தனது நம்பிக்கைக்கு செய்த துரோகமென்பதையும் தனது சிரமத்தையும் திரும்பத் திரும்ப கூறி ஆத்திரம் தீர திட்டினார். 

நான் ஸ்தம்பித்து நின்றிருந்தேன். ஏறக்குறைய அழுகையை அடக்கிக் கொண்டிருந்தேன். நம்பிக்கையிழந்து அவரை பார்த்தவளாய் அடிக்கடி எச்சில் விழுங்கிக் கொண்டேன். ஏதோ கதைக்கவும் முயற்சித்தேன். பின் ‘அப்படி அனுப்பக் கூடாதென்பது எனக்குத்தெரியாது’ என தயக்கத்துடன் கூறியபடி அடுத்த வார்த்தை பேச வராமல் தடுமாறினேன். 


சிறிது நேரம் இருவரும் பேசாமல் மௌனித்துக்கொண்டிருந்தோம். வெளிறிய என் முகம் அப்பட்டமாக எனது மனவுணர்வுகளை காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். 

சிறிது நேரத்திற்குப்பின்  ‘சரி போகட்டும் விடு. இனி அப்படி செய்யக்கூடாது’ என்றார். அவரது குரலில் கோபம் தணிந்திருந்தது. மீண்டும் அமரச்சொன்னார். தண்ணீர் போத்தலை எடுத்துத்தந்தார்.  

எனைப்பற்றிய எல்லாம் விசாரித்தறிந்தார். இடைக்கிடை ஒரு குழந்தைச்சிரிப்பை விசிறியபடி நிறைய பேசினார். சிறிது நேரத்திற்குள் இறுக்கம் தளர்ந்த வித்தியாசமான ஒரு சூழலை நாங்கள் உருவாக்கிக் கொண்டதாய் தோன்றியது.  எங்களது ஸ்னேகம் மெல்லமாய் அங்கே அத்திவாரமிட்டுக்கொள்ளவும் ஆரம்பித்திருந்தது. 

தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்தித்தேன். இலக்கியம், உலகம், அரசியல், நட்பு அனுபவம் இன்னபிறவென மனம்விட்டு பரஸ்பரம் தயக்கமேயின்றி பேசிக்கொண்டோம். இனிப்பு வாங்கி சாப்பிட்டோம். பகலுணவை பகிர்ந்து உண்டோம். மொத்தத்தில் ஜீவா ஐயா நம்பிக்கையானதொரு இலக்கிய நண்பனாக மாத்திரமே எனக்குள் பதிவாக தொடங்கியிருந்தார். 

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் இன்றுவரை நான் நினைத்து வியக்கும் ஒரு  அழகான காதல் கதையை என்னிடமவர் பகிர்ந்துக் கொள்ள தொடங்கினார். அதனை எனையொத்த இன்னும் பல நண்பர்களிடமும் அவர் பகிர்ந்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டுதான். ஆனால் என்னை மிகவும் பாதித்த சம்பவமாகவே அது அமைந்துவிட்டிருந்தது. 

அக்கதையை அவர் இரசித்து சொன்ன விதமும் தன் காதலை நிகழ்காலத்திற்குள் புகுத்திய முறையும் அத்தனை அற்புதமாக இருந்தது. 

‘நான் ஒருத்திய காதலிச்சனான்;’ என்றவாறு மிகச்சாதாரணமாகத்தான் அக்கதையை ஆரம்பித்தார். எனினும் கதைக்கூறலினூடே அவர் காட்டிய அந்த உணர்வுக்கொந்தளிப்புகளை அப்போது நான் உணர்ந்து கொண்டதாலேயே இன்றும் என்னால் அதனை நினைவுப்படுத்திட முடிவதாய் தோன்றுகிறது. அவர் காதல் எனும் சொல்லை உச்சரித்த போதில் ‘கா’ எனும் எழுத்திற்கு பின் மெல்லிய அதிர்வொலி காற்றுடன் ஊடுருவி… ஓரிரு மாத்திரைகள் தாமதித்தே ‘தல்’ எனும் எழுத்துக்கள் ஒட்டிக்கொண்டன. 

அத்தனை தீவிரமாய் அனுபவித்து அவர் கதை சொல்லிய அவ்விதமானது அதன் ஆழத்தையும் தீவிரத்தையும் எனக்கு உணர்த்தியிருந்தன. 

அவள் பெயர் லில்லி. தன் பக்கத்து வீட்டுப்பெண். தங்கள் வீடுளுக்கிடையில் ஒரு மதில். அம்மதிலைச் சூழவும் படர்ந்த அழகான மல்லிகைப்பந்தல். 

தாங்கள் அறிமுகமாகியது… பேசிக்கொண்டது… புரிந்துக்கொண்டது எல்லாமே அந்த மல்லிகை பந்தலுக்கு அடியிலான மதிலுக்கு இரு புறங்களிலேயே. 

ஒரு நாள் வழமைபோல அவர் லில்லி என அழைக்க பதிலாய் ‘தம்பி’ என ஒரு குரல் கேட்கிறது. அவளது தாய் அங்கே நிற்கிறாள். தனது நிலையினை புரிய வைத்து தன் மகளை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். இதனை லில்லியிடம் சொல்ல கூடாதெனவும் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

ஒரு பெண்ணைப்பெற்ற தாயின் பரிதவிப்பு இது.  ஒரு எழுத்தாளன். இலக்கியவாதி சக உயிர்களை மதிக்கத்தெரிந்த ஒரு மானிடன் வேறென்ன செய்துவிட முடியும்? அதையேதான் அவரும் செய்திருக்கிறார். அக்கதையை அதற்கு மேல் அவர் தொடர விரும்பவில்லை. ஆனால் என்னால் அவ்விடத்திலேயே அக்கதையை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. 

 ‘அப்போ இந்த மல்லிகைப்பந்தல் என்ற பெயர் அந்த ஞாபகமாகத்தானா?’ என்ற என் வினாவிற்கான பதிலாக பலமாக அவர் தந்த சிரிப்பில் என்னால் ஊகிப்புகள் எதனையும் செய்ய முடியவில்லை. எனினும் அம்மல்லலிகைப் பந்தலை ஜீவிக்க வைக்கவே தொடர்ச்சியாக உரமும் வாசனையும் தந்து மாதமொரு இதழை மலர்விப்பதாக எனக்கு நானே நம்பிக்கொண்டேன். மிகுந்த ஆச்சரியப்பட்டேன். 

பல்லாண்டுகாலமாய் நிறைவேறா ஒரு ஆசையை சுமந்தபடியே வாழ்தல் என்பதுவும் அதன் நினைவாக அந்த மல்லிகை பந்தலையே தனது அடையாளமாக்கிக்கொள்ளல் என்பதுவும் பேசிக்கடந்துப்போகும் ஒரு சாதாரண விடயமா என்ன? ஆனால் அவர் அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. தனது அனுபவங்களுள் ஒன்றென அதனை கருதியதை  போலவே காட்டிக்கொண்டார்.

ஜீவா ஐயா மலையக எழுத்தாளர்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அடுத்த மலையக தலைமுறையினரின் தேவை பற்றியும் அர்களிடத்தே காணப்படக்கூடியதான குறைபாடுகள் பற்றியும் இடையறாமல் பேசிக்கொண்டே இருப்பார். என் மீதான நம்பிக்கையை அதிகமாக கொண்டிருந்ததுடன் எனக்கான அடித்தளத்தை உறுதிபடுத்திட வேண்டுமென வழிநடத்தவும் தொடங்கினார். என் எழுத்துக்கள் மீதான நம்பிக்கையை எனக்குள் விதைக்க வேண்டுமென நிறையவே முயற்சித்தார். எனது சிறுகதை தொகுப்பொன்றை மல்லிகைப்பந்தலினூடாக வெளியிடுவதில் பெரும் பங்களிப்பை செய்திருந்தார். மலையகத்திற்கான ஒரு பெண் எழுத்தாளரின் தேவைப்பற்றி நான் உணர வேண்டுமென விரும்பினார். 

ஏராளமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி அவற்றிறையெல்லாம் வாசிக்கும்படி அள்ளித்தந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். அவருடன் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட அனுபவத்தை சுவைத்துச் சுவைத்து நினைவுப்படுத்துவார். அதனையொத்ததாய் ஐயா தெரிவு செய்து வைத்திருந்த இலக்கிய நண்பர்கள் சிலருடன்  KFC யில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட வேண்டுமென திட்டமிட்டார். அந்த திட்டமிடலில் எனது பங்களிப்பும் வெகுவாக இருந்தது. ஆனால் கடைசிவரை அந்த ஆசையை எங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமலேயே போனது.   

இப்படியே எங்களது நட்பு இலக்கியம் தொடர்பாகவும் சமயங்களில் இலக்கியம் தாண்டிய உள்ளன்புடனுமாய் விரிவடைந்தபடியே இருந்தது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  என் மூத்த இலக்கிய நண்பனை பார்க்கச்செல்வதில் எனக்கும் அலாதி விருப்பமிருந்தது. 

ஐயா ஓய்வுபெற எண்ணி மல்லிகை அலுவலகத்தை விட்டு வெளியேற ஆயத்தமாகிய கடைசி சில நாட்கள் துயர்மிகு நாட்களாக மாறின. அவரது மனநிலையை எனதாக்கி நான் துயருற்றேன். அதன் பிறகாய் எங்கள் சந்திப்பும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. கால ஓட்டத்துடன் ஓடத்தொடங்கிய நான் ஐயாவின் பிறந்ததினத்தன்று மாத்திரமே அவரை சந்திக்கச் செல்வதென்பதாய் சூழ்நிலை மாறத்தொடங்கியது. 

அப்படியான ஒரு பிறந்ததினத்திற்கு அவரை சந்திக்க மகனுடன் சென்றிருந்தேன். இன்னும் சில எழுத்தாளர்களும் அவரது வீட்டில் அமர்ந்திருந்தனர். ஐயாவின் தோற்றத்தில் பெரிய மாற்றம் தெரிந்தது. உள்ளம் குழைய அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன். 

‘நீ யார்’ என கேட்டபடி யோசிக்கத் தடுமாறினார். அவருக்கு என்னை கொஞ்சமும் நினைவில்லையென்பது அதிர்ச்சியாகவிருந்தது. பக்கத்திலிருந்த எழுத்தாளர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த நொடிகளை என்னால் ஏற்கவே முடியவில்லை. அழுகை பீறிட்டு வெடித்துவிடுமாப் போல் இருந்தது. என்னால் அதற்கு மேல் ஒரு நிமிடந்தானும் அங்கே நிற்க இயலவில்லை. ஞாபகத்திற்காக ஐயாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். 

அதுவே எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக அமைந்தது. 

டொமினிக் ஜீவா எனும் பெரும் ஆளுமைக்குள் ஒரு மெல்லிய பூவையொத்த சினேகிதன் மறைந்திருந்தமை பற்றி பெரிதாய் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதனை பகிர்ந்துக்கொள்ள விரும்பினேன்.  அந்த மிடுக்கு, கம்பீரம். திமிர், தூய்மையான நேசம் எல்லாம் கலந்த என் மூத்த நண்பனை நினைவுகளில் எப்போதுமாய் வைத்திருக்க எனையொத்தவர்களால் நிச்சயமாய் முடியுமெனவும் நம்புகிறேன். 

நன்றி. 

நெடுவாழ்வின் எழுதித்தீரா நினைவு: டொமினிக் ஜீவா

No comments:

Post a Comment