அடர்ந்த எனது புருவத்தை வலதுகையின் சுட்டுவிரலால் நீவி நீவி ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஒற்றை முடியை பற்றிக்கொள்வேன். பின் அதனை பட்டென்று பிய்த்தெடுத்து நாவால் சிறிதுரேம் வருடியுணர்ந்து, சிறுசிறு துண்டுகளாக கடித்துத் துப்புவேன். அப்படியே, நாகலிங்கத்தைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம் இன்னும் எதையெல்லாமோ கூட இப்படி விசித்திரமாகச் செய்ய ஆரம்பித்திருந்தேன்.
பச்சை இலைகளுக்குள் அரிசி மணிகளை சுருட்டித் தின்பது, நடுசாமத்தில் எழும்பி மகளின் தலையில் பேனெடுத்து கொல்வது, கண்களைத் திறந்தபடி மணிக்கணக்கில் குளிப்பது என்று யாருக்கும் தெரியாமல் நான் செய்த அத்தனையும் ஏதோ ஒருவகையில் எனக்கு ஆறுதல் தருபவையாக இருந்த போதிலும் அதற்கிடையிலான நாகலிங்கத்தின் குறுக்கீட்டில் ஒருவிதமான ஒவ்வாமையும் வளர்ந்தது.
குறிப்பாக அவனோடு சேர்ந்து மதுவருந்தும் போது நான் இனிப்பாக ஏதாவது கடித்துக்கொள்ளவே விரும்புகிறேன் என்பதும் பலாச்சுளைகளை சுவைத்துக்கொண்டே என்னால் மதுவருந்த முடிகிறதென்பதும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. பிறகு சூரியகுமாரை சூரி என்று நான் அழைத்ததுபோல நாகலிங்கத்தை நாகுவென கூப்பிடவில்லையென அவ்வளவு கோபம் அவனுக்கு. அந்தக் கோபத்தை காட்டுவதற்காகவே மதுவோடு நான் கேக் சாப்பிடுவதையும் பலாச்சுளைகளை கடித்துக்கொள்வதையும் சொல்லிச் சொல்லி சிரிக்க ஆரம்பித்திருந்தான்.
எனது முதல் திருமணம் அல்லது சூரியின் துர்மரணம் பற்றிய எந்த ஞாபத்தையும் மீளெழுப்ப கூடாதென்ற சத்தியத்துடனேயே நான் நாகலிங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தேன். போலவே அவனது மனைவி மாதினி ஓடிப்போனதை பற்றியும் நானொன்றுமே கேட்பதில்லை. போதை மிகுந்து இருவருமாக உளறிக்கொட்டுகையில் கூட தவறியும்; முந்தைய வாழ்க்கையைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
சூரியுடனான அந்த நாட்களையும் தொடர்ந்து இந்த நாகலிங்கத்தினதும்…. என்று மீட்டுகையில் எனக்குத்தான் வாழத் தெரியவில்லையோவெனும் சந்தேகமும் சமயங்களில் வலுக்கத்தான் செய்கிறது. ஏனோ அவனை நாகுவென அழைப்பதில் அவ்வளவாக எனக்கு நாட்டமில்லையென அவன் அறிந்திருக்கிறான். அதுமட்டுமல்லாத எல்லாவற்றிலுமாய் நான் அந்நியப்பட்டுதான் இருக்கிறேனென்பதையும் அவனால் உணரமுடிந்திருக்கும். நான் செய்வதைப் போலவே மாதினியோடு சேர்த்தென்னை ஒப்பீடு செய்யவும்தான்.
துளி பிடிப்புமில்லாது நான் போர்த்திக்கொண்ட இந்த கருமையான போர்வையோடு என் தூய்மையான காதலை பகிர்வதென்பதை நகைச்சுவையெனவே எண்ணிக்கொள்ள முடிந்தாலும் காமத்தை அப்படி இலகுவாக எங்களால் கடக்க முடியவில்லை. அவன் பெரும் பிசாசென என்னை தின்பதில் குறியாயிருந்தான். நானும் வெறும் மாமிசமென உணர்ந்தே அவனை புசித்தேன். மாதினி மீதான பழியுணர்வை அவனும் சூரி மீதான தீரா ஏக்கத்தை நானும் பரஸ்பரம் உடல்கள் மீது காட்டிக் கொண்டோம். அதற்குகந்த பொழுதுகளாய் போதை நிரம்பிய சில இரவுகளையும் தெரிந்தெடுத்தோம்.
போதையென்பது சுதந்திரம். போதையென்பது அப்போதைக்கான விடுதலை. சொல்லப்போனால் உணர்வுகள் கடந்து நான் சுயமிழக்க உதவும் இரகசியமான மூலிகை அல்லது நாகலிங்கத்தைத் திட்டித்தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.
‘ஒரு பொண்டாட்டிக்கு இவ்ளோ குடிக்க வாங்கித் தாறியே! முட்டாளாடா நீ?’
அவன் நக்கலாகச் சிரித்தான். என்னை தன்மீது சாய்த்துக்கொண்டு விரல்களால் அளைந்தான். ஆயிரம் அட்டைகளை ஆடைக்குள் விட்டதாய் அவ்வளவு அருவருப்பிருந்தது எனக்கு.
‘சனியனே ஏதாச்சும் கதைக்க விடுறியா?’ அவனை தள்ளினேன். என் வார்த்தைகள் அத்துமீறி போய்க்கொண்டிருந்தன.
‘என்னடி இருக்கு கதைக்கிறத்துக்கு?’
‘இருக்கு நெறயவே இருக்கு… கொஞ்சத்துக்கு என்னய விட்டுத்தொலயிறியா?
‘இப்ப என்னா? ஒன்னய கட்டிப்போட்டா வச்சிருக்காங்க?’
‘கட்டிப்போட்டாதானா? எப்பவாச்சும் நிம்மதியா தூங்க விட்ருக்கியா? அப்படி என்னடா மயிரு ஒனக்கு எப்பபாத்தாலும் தேவப்படுது?
‘ஏய்… பாத்து பேசு அப்றம் வேறமாதிரியாகிரும்’
‘என்னடா மயிரு வேறமாதிரி … சொல்லு என்ன வேறமாதிரி”
நான் வேண்டுமென்றே சண்டைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அவனுக்கு கோபம் வந்திருக்கவில்லை. மாறாக என்னோடு பின்னிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்திருந்தான். அவனுக்கானதை பறித்துண்ணும் பாங்கில் கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறினான்.
காதலோடு குழைத்தெடுத்த காமம் பற்றிய பிரக்ஞை துளியேனும் அவனுக்கிருக்கவில்லை. எனக்குள் நிரம்பிய மெல்லுணர்வையும் அடங்கா காதலையும் கொட்டித்தீர்க்கும் பாத்திரத்தை அவன் ஏந்தியிருக்கவில்லை. பெண்ணுடலின் வசீகரத்தை மதுவோடு சேர்த்து வெறித்தனமாக பருக மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது. எவ்வளவு பருகினாலும் தணியாத அவன் தாகத்தை தீர்க்கும் திரவத்தின் அளவை கூட்டிக்கொள்வதை பற்றியே எப்போதுமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாளுமில்லாமல் திடீரென நான் மாதினியை நினைத்து அழ ஆரம்பித்தேன். அவள் ஏன் ஓடிப்போனாள் என்று மேசையில் கையை தட்டிக்கொண்டே அழுதேன்.
‘ஏன்’ என்றான். பதிலை எதிர்பாராமல் என்னை மேலும் இறுக்கமாக தழுவ ஆரம்பித்தான். மறுக்கத் துணிவற்ற மயக்க நிலையில் வேறொரு நபராக தள்ளியிருந்து அவனை அவதானித்தேன்.
ஆத்திரமும் அவசரமும் நடுக்கமும் மிஞ்சிய ஒரு பதட்டமான வேடடைக்காரனாய்… சிறு தடங்கல்களையும் ஏற்கமறுப்பவனாய் அவன் மாறியிருந்தான் அப்படியே என்னை தனதாக்கி இடைவெளியற்று மொத்தமாய் விழுங்கிவிடும் ஆவலுடன்… கர்ஜ்ஜிக்கும் பாவனையில் என்மீது படரத் தொடங்கியபோதுதான் எனக்குள் நுழைந்து நான் சுயம்பெற ஆரம்பித்தேன்.
முழுப்பலத்தையும் தந்து அவனை மறுபுறம் கிடத்த முயன்றேன். அவனோ ஒரு காட்டுயானையின் பலத்தோடு மூர்க்கமாக இயங்கினான். கழுத்தில் தோளில் காதுமடலிலென பற்கள் பதிய கடித்தான். வலிமிகுதியால் கத்திக்கொண்டே அவனது தோள்களை நெம்பித்தள்ளினேன். என் கைகளிரண்டையும் அவனது ஒருகையால் அழுத்தியவாறே காதிற்குள் ஏதோ கெட்டவார்த்தையை கிசுகிசுத்தான். உடலை எச்சில்படுத்திக்கொண்டே சப்தமாக சிரித்தான். அவனது பலத்திற்கு முன்னே சிறு பூவென கசங்கிபோயிருந்தேன். சுவாசிக்கத் திணறினேன். அவனாக என்னில் அகன்று விடுவிக்கும்வரை அப்படியே மயங்கிக் கிடந்தேன்.
மூர்ச்சையாகி பின் விழிப்பது போல சற்றுநேரத்தில் அசைந்துப்பார்த்தேன். சீரான மூச்சு வெளிவர முதலையொன்றின் மெல்லசைவுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். அழுகையாக வந்தது. பிள்ளைகள் இருவரும் நல்ல நித்திரையிலிருந்தார்கள். மூத்தவள் சூரியின் சாயலுடன் அப்படியே கிடந்தாள். ‘சூரி…’ எனச் சத்தமின்றி உச்சரித்தபடி ஒரு மூச்சு அழுதோய்ந்தேன். சின்னவனின் முகத்தில் நாகலிங்கத்தின் சாயல் தென்படுகிறதாவெனத் தேடினேன். இருக்கககூடாதெனும் அவாவுடனேயே பிள்ளையை அணைத்து முத்தமிட்டேன்.
ஓர் ஆணுடனான அனுபவத்தை பொதுமையாக்க முடியாமல் இருக்கலாம் இரண்டு ஆண்களை அந்தரங்கமாக்கிய பிறகுமா? ஆண்டவன் படைப்பில் ஆண்கள் ஒரு விசித்திரமான ஜந்துவென்பதை சந்தேகிக்கத் தேவையேயில்லை. அவன் மல்லாந்து படுத்து குறட்டைவிடத் தொடங்கினான். அவனது அசைவுகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டுமாய் அவன் பொல்லாத காட்டுமிருகங்களையே நினைவுப்படுத்தினான்.
எப்போதும் போலவே அடர்மழைத்துளிகள் நீர்நிறைந்த குழிக்குள் விழுந்து தளும்புவதாய் ஆர்ப்பரித்த உள்ளத்தை அமைதிப்படுத்த போராடினேன். ஓர் ஆணின் உடல் பலத்துடன் போராடித் தோற்றத் அவமானத்தை மறைக்க உறக்கத்தை வலிந்திழுத்து போர்த்திக்கொண்டேன்.
……………….
தீராக்காதலின் அந்தத்தில் காமத்தை அவிழ்க்கும் பெண்ணுடலின் ஜ்வாலிப்பை… வசீகரத்தை அல்லது நீளும் அவளது கருணையை எதிர்கொள்ள தகுதியற்ற ஒருவனாலேயே அவள் யட்சியாகி மூர்க்கம் கொண்டவளாய் மாறுகிறாள். தான் கொடுப்பவளெனும் பெரும் உண்மையை மறைத்து பெறுபவள் எனும் நிலையைத்தானும் தக்கவைக்கத் தயங்குகிறாள்.
இரகசியமாகக் கசியும் அவளது உடல் நளினங்களைக் காண வாய்க்காத ஆண்கள் மிகுந்த அபாக்கியசாலிகள். காதல் முற்றிய அவளைச் சுற்றி எரியும் அனலில் தானும் கலந்தெரிந்து காமத்தின் கண்கொண்டு அவளது காதலை ஏற்கத் தெரியாத அவர்கள் தங்களை அறியாத மகா முட்டாள்கள்.
சூரியாவது பரவாயில்லை. நாகலிங்கம் ஓர் அடிமுட்டாள். என்னை ஆக்கிரமித்து தனக்குரியவளாக்கும் உக்திகளை தவறவிட்டவன். எனதன்பின் தேவையிழந்தவன். நாசூக்கற்ற முரட்டுத்தனத்தால் தன் ஆண்மையை நிரூபிக்கும் அவனது பிரயத்தனம் அர்த்தமற்றதென அறியாதவன். தினந்தோறும் ஒரு பெண்ணுடலை அள்ளிவிழுங்க முடிவதென்பதே பெரும் ஆண்மையெனும் மிதப்பில் திரியும் பைத்தியக்காரன்.
வேறெப்படி கோபத்தை தணிப்பது? என் அலுவலக நண்பியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழமைபோலவே அவளும் ஆரம்பித்திருந்தாள்.
‘ரெண்டு வீட்ட வாடகைக்கு விட்டும், இன்சூரன்சும் என்று வெட்டியா உழைக்கிறவன் உன் புருசன். வேறென்னதான் செய்வான் சொல்லு?’
‘அதுக்காக ஒருநாளைக்கு ரெண்டு தடவைன்னா?
‘வேறென்ன செய்ய முடியும்? மாதினி மாதிரியே நீயும் ஓடிப்போறியா?
அவள் விளையாட்டாகத்தான் கேட்டாளென்றாலும். முடியாமல்தான் மாதினியும் ஓடியிருப்பாளென்று தோன்றியது.
‘பீரியட்ஸ் டைம்ல கூட விடறானில்லடி’
‘இவனுக்கு ஏதும் நோயா இருக்குமோ!’
இதைப் பற்றி கதைப்பதே இருவருக்கும் களைப்பாய் இருந்தது.
‘அதான் சொல்றேனே பேசாம போலிசில சொல்லிறலாம்’ என்றாள்.
‘முதல் புருசன கொன்னுட்டா இவனையும் தெருவுக்கு இழுத்துட்டான்னு ஊரே பேசுறத்துக்கா? என் குடும்பம் கூட நம்பப் போறதில்ல பாத்துக்க’
‘இதுக்கு பயந்து எவ்ளோதான் தாங்கிப்ப சொல்லு?
‘புள்ளைங்க கொஞ்சம் பெருசாகட்டும் விடு. ஏதோ புலம்புறேன் நீ வேலையப்பாரு’ என்றேன். ‘இவனையும் விட்டுட்டு புள்ளைங்ளோட என்னத்ததாண்டி செய்ய முடியும்? நடுரோட்டுல நிக்கவா?’
அவள் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.
‘அவன என் கையிலயே கொன்னுப் போடத் தோணுது. இப்டிதான் சாம்பிராணியா இருப்பியன்னா எங்கிட்ட இதுபத்தி ஏன் பேசுற?’ கோபமாக கத்தினாள்.
நான் எனது புருவ முடியொன்றை பிடுங்கியெடுத்து நாவில் உருட்டிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு துண்டாக அதனைக் கடித்துத் துப்பத் தொடங்கினேன்.
அவன் புவியிலும் நான் புதனிலுமாய் நாங்கள் இருவேறு கிரகங்களில் அடைப்பட்டு கிடக்கிறோம். பொருந்திப்போகா இரு முரண்களை பிணைத்ததன் அசிங்கமான விளைவாகவே எங்களது பொழுதுகள் நீட்சி காண்கின்றன.
என்னை முழுதாய் விழுங்கிடத் தவிக்கும் மலைப்பாம்பாய் அன்றாடம் அவன் புரண்டெழுகிறான். அச்சத்தின் பிடிக்குள் மருண்ட ஊனென நான் அசையாது கிடக்கிறேன். இரவுகளில் என் தசையை அரித்துத் தின்னும் அவனை புறக்கணிப்பெனும் ஆயுதத்தால் நான் பகற்பொழுதுகளில் தண்டிக்க முயற்சிக்கிறேன். இருவரும் படுமோசமாக ஒருவரையொருவர் காயப்படுத்தி விடவே துடிக்கிறோம். இந்தத் துடிப்பு இரகசிய நாளத்தின் பிளவுகளாய் உடலெங்கிலும் ஓடி பரவிக் கிடப்பதை இருவராலும் தடுக்க முடியாதிருக்கிறது.
இங்கே நினைக்கும் போதே அவனுக்கு மூக்கில் வியர்த்திருக்கிறது.! தொலைப்பேசி மின்னி மின்னி மறைகிறது. அவனது குறுஞ்செய்தியும். தொடர்ச்சியாக சில அழைப்புகளும்.
ஒருமுறையாவது அவனைத் தோற்கடிக்க வேண்டுமே.! நிதானமாக அவனது அழைப்பைத் தவிர்க்கிறேன். இப்போது அவனுக்கு கோபம் கொப்பளிக்க வேண்டும். இருக்கட்டும் இன்னும் கொஞ்சம் கோபிக்கட்டும்.
மீண்டும் அழைக்கிறான். தவிர்க்கிறேன். மீண்டும் மீண்டுமாய். நானும் தொடர்ச்சியாகத் தவிர்க்கிறேன். சளைக்காமல் அழைக்கிறான். இப்போது துண்டித்துவிட்டு சிரித்துக்கொள்கிறேன். இன்னுமிரு அழைப்புகளையும் சேர்த்து தாமதிக்காமல் துண்டிக்கிறேன். சிறுநேர இடைவெளி. படப்படப்பாகவிருக்கிறது. அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இதுவரையில் அவனது அழைப்பை நான் துண்டித்ததில்லை. இப்போது மாதினியை கட்டாயம் எண்ணியிருப்பான். கொஞ்சம் பயப்படுவான். சிலவேளை அதிகமாகவே பயந்திருப்பான். வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் குருதிவாசனை நாசிக்குள் கசிவது போலிருந்தது. நான் குதூகலித்தேன். கைகள் நீட்டி சோம்பல் முறித்தேன். புருவங்களை நீவி ஒழுங்குப்படுத்திக் கொண்டேன். அகோர பசிகொண்ட சிங்கத்தை ஏமாற்றி கிணற்றுக்குள் தள்ளிய முயல்குட்டியின் சிறுநேர உவகையிது.
என்னை நான் கொண்டாட வேண்டுமென்று தோன்றியது.
‘ஒரு டீ?’
நண்பியை அழைத்தேன். பார்வையாலேயே மறுத்தாள். அதே பரபரப்புடன் கெண்டீனில் ஒரு டீ சொன்னேன். டீயோடு இனிப்பாக ஹெலப்பவை சுவைத்தேன். எண்ணிக்கையற்ற குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் நிறைந்துக் கொண்டிருந்தன.
‘அண்ணா ஒரு ஐஸ்கறீம்’
சந்தேகமாகப் பார்த்தான். ‘டீயோட ஐஸ்கிறீமா?
‘கொண்டுவாங்க சாப்டலாம்’ உற்சாகமாக கத்தினேன்.
நேரம் நான்கைத் தாண்ட இன்னும் பத்தே நிமிடங்கள். அடுத்ததாய் சந்திக்கப்போகும் வார்த்தை யுத்தத்திற்கான கேள்விகளை ஓரளவாய் ஊகித்தேன். ஐஸ்கிறீமால் என்னை குளிர்வித்தபடி பொருத்தமான பதில்களைத் தெரிந்து ஒவ்வொன்றாய் சரிபார்த்துக் கொண்டேன்.
…………………………………
ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிக்க முன்னிருப்பதான பயம் போட்டியிடும் போது ஏற்படுவதில்லை. என் ஓட்டம் பாதியில் நிற்குமென்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும் ஓடத் துணிந்தேனே! முகத்தில் பரவியிருந்த ஏளனத்தின் எச்சம் அப்படியே ஒட்டியிருந்தது. எதற்கும் தயாரானவளாய் உள்நுழைந்தேன்.
மின்விளக்குகளைப் போடாமல் அமர்ந்திருந்தான். குழந்தைகளையும் அம்மா வீட்டிலிருந்து எடுத்திருக்கவில்லை. வேறேதோ ஆயத்தத்துடன் புதியதொரு போர்வாளை தயார்நிலையில் வைத்திருப்பவனாய் தோன்றினான். இத்தனை நேரம் உள்ளிருந்த திமிர் மெல்ல வடியத்தொடங்கியது. அவனை தனியே எதிர்கொள்வதற்கான சின்னஞ்சிறு திட்டங்களைக் கூட பிரமாண்டமான சூழ்ச்சியின் வடிவங்களாய் உணர ஆரம்பித்தேன்.
வழமைமைக்கு மாறான அவனது அமைதி என்னை உலுக்கியது. கடக்கப்போகும் இரவை அஞ்சினேன். எப்படி பேசுவது … எங்கிருந்து தொடங்குவது? இந்த மௌனம் மிகக்கனமாயிருந்தது. இங்குமங்குமாக நடந்து அவனது முகக்குறிப்புகளை அடையாளங்காணவிழைந்தேன். ஒருமுறை நிமிர்ந்தான். அவன் பாவனையில் தொனித்த உணர்வை சத்தியமாக கணிக்க முடியவில்லை. மீண்டும் பதட்டமானேன். எனது முடிவுகள் இவ்வளவு பலவீனமாக இருப்பதையெண்ணி மோசமான தாழ்வுணர்வுடன் அலைக்கழிந்தேன்.. உடைப்பட்ட கண்ணாடித்துண்டொன்று வளைத்து வளைத்து குத்திக்கழிப்பது போல அவனது பார்வை இரகசியமாய் என்னை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தது.
‘அவ்வளவு திமிரா போச்சாடி…?’
குரலில் தீப்பற்றி தகித்தது. தயாரித்து வைத்திருந்த பதில்களெல்லாம் ஆவியாகி கண்முன்னே மறைய, இறுக்கிப் பிடித்திருந்த தைரியத்தை கண்களுக்குள் பாய்ச்சி கண்ணீரைத் தடுத்தேன். பீதியடைந்திருந்த உள்ளம் அவனை நழுவி விலகிச்செல்ல சொன்னது. பதிலின்றி கடந்தேன். பிறகு சில நிமிட இடைவெளிக்குப்பின் என்னைப் பார்த்தான்.
‘ஒனக்கு அவ்ளோ ஆகிறிச்சாடி வேச..? தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் பாத்துக்க… பொம்பளன்னு பாக்குறேன். இல்லாட்டி இதே எடத்துலயே கொன்னு பொதச்சுருவேன்.’
சுட்டுவிரலை நீட்டி நீட்டி பேசினான். பற்களை கடித்துக் கொண்டான். குனிந்து கால்களிரண்டையும் நீவித் தடவியவாறே இன்னும்கூட ஏதோவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். ‘இடைக்கிடையே ‘வேச.. வேச…’ என்று உச்சரித்தான். எழுந்து சென்று தண்ணீர் குடித்தான். சிறிது நேரம் தாமதிக்கவிட்டு அமைதியாக ‘ஏன் போன் எடுக்கல?’ என்றுக் கேட்டான். அவனது குரலின் தொனி சற்றே தணிந்திருந்தது.
‘மீட்டிங்’ என்றேன்.
‘மெசேஜ் போட்டிருக்கலாமே?’ யோசித்து வைத்திருந்த பதில்களை மறந்திருந்தேன். வெகு இயல்பாக கதையை திசைத்திருப்ப முயன்றேன்.
‘புள்ளைங்கள எடுக்கலயா?’
‘அம்மாட்ட இருக்கட்டும். ஒன்னோட கொஞ்சம் தனியா இருக்கணும்’
என்ன செய்ய உத்தேசிக்கிறான்? எதுவென்றாலும் ஆகட்டும். தளராதே…தளராதே… சுயமாயிரு. அதிகம் போனால் ‘அவளைப்போல ஓடிப்போவேன்’ என்றாவது சொல். புதிதாய் தீட்டப்பட்ட கூர்வாளின் முனையென அது அவனை குத்திக்கிழிக்கட்டும்.
பின்னால் வந்தென்னை இறுக்கும்வரை தெரியவேயில்லை. திருப்பிப்பார்க்கும் அவகாசத்தையேனும் தராமல் சுவரோடுசாய்த்து உடலோடு ஒட்டியுரசி நுனிப்புல்மேயும் காளையின் அவசரத்தில் என்னை முகர்ந்தான்.
தள்ளிவிடுவதா? அடங்குவதா? மாதினியைப்போல ஓடிப்போவேனென்பதா? ‘வெட்கங்கெட்ட நாயே’ என கத்துவதா?
‘விடுங்க… குளிக்கனும்’ திமிறி பிடியிலிருந்து வெளியேறப்பார்த்தேன்.
‘இல்ல…இப்பவே…இப்டியே…’
பேசும் வாய்ப்பை தராது. முகத்தை ஒரு கையால் அழுத்திப்பிடித்து அடிவயிற்றில் இன்னொரு கையால் குழைந்தபடி சேலையை இழுத்து பிய்த்தெறிந்தான். நிலத்தில் சரித்து அவனது மொத்த கனத்தாலும் என்னை ஆக்கிரமித்தான். புணர்ச்சி வேகத்திலான உடற் கீறல்களையும் கடி காயங்களையும் நான் இலகுவாக ஏற்பேனென நம்புவதாய் காட்டிக்கொண்டான்.
அவசரமான ஒரு கூடல். என் தவறுக்கான தண்டனையாகவும்…
கைகளை மல்லாந்து விரித்து தரையிலேயே கிடந்தான். கண்களில் வெற்றியின் மிதப்பு ததும்பியது. வாகனத்தில் அடிப்பட்டுக் கிடக்கும் தெருநாயைப்போல அசையாதிருந்த நான் சட்டென ஒருகணத்தில் ஆடைகளை திரட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து தாழிட்டேன். ஷவரைத்திருகி உச்சந்தலை குளிர கண்கள் திறந்தபடி நின்றேன். நீர்மோதும் உடற்காயங்களை மிருதுவாக தடவிக்கொண்டே நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கும் என் அறியாமையின் மீதும் காமத்தின் மீதும் காறித்துப்பினேன். அவன் மீதான ஆத்திரத்தை எந்த புள்ளிக்கூடாக திசைப்திருப்பலாமெனும் யோசனை அறவுமாய் இல்லாமலிருந்தது. ஆவென அலறியபடி என் நகங்களால் கழுத்துத் தசையை கீறியிழுத்தேன்.
‘வேச.. வேச… என்று அடிக்கடி உச்சரிக்கும் அவனது வாயை கிழிக்க வேண்டும்போல் இருந்தது. அந்தச் சொல்லுக்கான எதிர்பாற்சொல் என்னவாக இருக்குமென்று யோசித்தேன். வேசியோடு கூடுபவர்கள் காகமாகவும் செந்நாயாகவும் பன்றியாகவும் இல்லையேல் இலவம்பஞ்சு மரமாகவும் மறுபிறவியெடுப்பர்களாமே!
நாகலிங்கம் காகமாக அல்லது செந்நாயாக பிறப்பதாய் கற்பனை செய்தேன். அக்கற்பனை நிஜமாக வேண்டுமெனில் மூன்றாவதாக ஓர் உருவம் தேவையென்றுணர்ந்தேன். அவ்வுருவத்துடனான என் ஒருமித்த கூடலையும் நிர்ணயித்தேன். சட்டென அவ்வுருவமாகவும் நானேயாகி… எனதுடல் வனப்பை பார்த்து இரசித்தேன். அக்கணத்திலேயே நான் தொலைத்த என்னை கண்டடையும் அவா பீறிட்டது.
அப்படியே எனக்கெதிர்ப் பக்கமாக அவ்வுருவத்தை நிறுத்தி வைத்து போதம் தெளியா என் கண்கள் மூடி ஆசையோடு அதனை… இல்லை அவனை… அணுகினேன். நீறுபூத்த நெருப்பைத் தூண்டிச் சுவாலையாக்கி அந்த பெருநெருப்பு தரும் வெம்மையால் நான் சிலிர்ப்படைவதாய் இருந்தது. கண்கள் திறக்கப் பயந்தேன். இந்நொடியின் நீட்சியும் இன்னும் கொஞ்சம் இருளும் தேவையென்பதாய் நம்பினேன்.. தொடர்ச்சியாக எனைத்தீண்டும் நீர்த்திவலைகள் மொத்தமும் ஆயிரம் விரல்களாய் நீண்டு ஸ்பரிசம் செய்யச்செய்ய, குவிந்த தொட்டாச்சிணுங்கி இலைகள் மெல்ல மெல்ல விரிவது பேலாய் என் காதலின் எல்லா பாகங்களும் ஒவ்வொன்றாய் உயிர்த்தெழ ஆரம்பித்தன.
வெற்றுடலாகப் பார்க்கும் ஆணிய உலகத்துக்கு விடப்பட்ட ஒரு அறைகூவல். இறுதியில் தன்னையே ஆணாக்கித் தனக்கான உடலும் உயிரும் நேசிக்கும் ஓர் உயிரைப் படைத்துக்கொண்டது, இந்தச் சமூகத்தின் நேசிப்பற்ற கொடும்புத்தியின்மீது உமிழ்ந்ததாகவே கருதுகிறேன். நல்ல கதை சொல்லல். உணர்வும் மனமும் கவித்துவமாக வெளிப்பட்ட கதைசொல்லல். நன்றி
ReplyDelete