இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.08.26
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களது பூர்வீகம், ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
தாய், மனைவி, ஆசிரியை எனும் மூன்று கதாபாத்திரங்களுடன் எழுத்தாளர் எனும் பாத்திரத்தையும் சேர்த்துக் கொண்டவள் நான். பதுளை ஊவாகட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டு எனது ஆரம்ப கல்வியினை ஊவாகட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் பயின்றேன். தொடர்ந்து இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் பயின்ற நான் அதற்கு பின்னரான மேற்படிப்பிற்கு கொழும்பில் வசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
தொழில் எனும் வகையில் தனியார் றிறுவனமொன்றில் தொழினுட்பப் பிரிவில் வேலை செய்து கொண்டே மேற்படிப்பைத் தொடர்ந்த நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், நான் மிகவும் நேசிக்கும் ஆசிரியத் தொழிலுக்கு விண்ணப்பித்து ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றேன். எனது வாழ்வின் பல்வேறு திருப்பங்களுக்கு எனது தொழிலனுபவங்களின்; பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?
கவிதைத் துறையே எனது இலக்கியப் பயணத்தின் ஆரம்பம் எனலாம். 'சலனம்' எனும் கவிதை 2005 ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகையில் வெளியாகி என்னை உற்சாகப்படுத்தியது. ஆனால் 'பீலிக்கரை' எனும் சிறுகதையினூடாகவே ஞானம் சஞ்சிகையில் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி எனது துறையினைத் தீர்மானித்துக் கொண்டு என் இலக்கியப் பயணத்தை இற்றைவரை தொடர்கிறேன்.
எழுத்தாளர்கள் என்போர் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் என்பார்கள். உங்களை எழுதத் தூண்டியது எது?
நிச்சயமாக சமூகத்தின் மீதான ஒரு பிடிப்புதான். சிறுவயது முதலே மலையக மக்கள் மீதான பற்றுணர்வு என்னை தூண்டியபடியே இருந்ததென்பதை நான் நன்கு அவதானித்திருக்கிறேன். ஆனால் எழுத்துத் துறையை வலிந்து தெரிவு செய்து அதனை வெளிப்படுத்த வேண்டுமென நான் ஒருபோதும் முனைந்ததில்லை. என்னையறியாமல் நான் இனங்காட்டப்பட்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்த பின் என் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கின்றேன். கூடவே சமூகம் மீதான என் அகப்பார்வை எனக்கு பல்வேறு கருப்பொருள்களை தேடித் தருகின்றது.
உங்கள் எழுத்துக்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?
முதலாவதாக நான் குறிப்பிட்டுக் கூற வேண்டியவர் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள். எனக்கான களத்தை அமைத்து தந்து, என் அத்திவாரத்தை பலப்படுத்தியர் அவர். அடுத்ததாக என் பெற்றோர், கணவன் ஆகியோரை கூற முடிவதுடன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் என்னை எழுதத் தூண்டுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தமையை குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.
சமகாலக் எழுத்தாளர்கள் மீதான உங்கள் பார்வை எப்படியுள்ளது?
சமகால எழுத்தாளர்கள் சிந்திக்கும் எல்லை மிக விரிவடைந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட ஒரு மரபுக்குள் இருந்து கட்டுடைப்பட்டு தற்போதைய இளைஞர்கள் மாற்று விடயங்கள் குறித்து எழுதுவதில் அவதானம் செலுத்துகின்றமையை அவதானிக்க முடிகிறது. (குறிப்பாக கவிதைகள்) புறச்சூழல் குறித்த படைப்புகளின் நிலைமைகள் மாறி தற்போது மனிதர்களின் உறவுகள், மனநிலை போன்ற அகச் சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மேலும் தற்போதைய இளைஞர்கள் உலக இலக்கிய வாசிப்புகளிலும், அதுசார் கலந்துரையாடல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றமையையும் காண முடிகிறது. கூறப்போனால் அவலங்கள் முதலான இருண்ட பக்கங்களது பார்வை விஸ்தாரமாகி வாழ்வின் அழகான பக்கங்களும் உணர்வுகளும் படைப்புகளாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
நீங்கள் சிறுகதைகள் பலவற்றை எழுதியிருக்கிறீர்கள். அதுபற்றிக் கூறுங்கள்?
சிறுகதை எனும் துறையினையே எனக்குரிய துறையாக நான் தீர்மானித்து வைத்திருந்தமையால் சிறுகதைகளை எழுதுவதில் என்னால் அதிகளவு கவனம் செலுத்த முடியுமாகவிருந்தது. 2007 ஆம் ஆண்டு ஷபீலிக்கரை| எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தக பூங்காவின் ஊடாகவும், 2010 ஆம் ஆண்டு 'பாக்குபட்டை' எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாகவும் வெளீயீடு செய்துள்ளளேன். 'பாக்குபட்டை' சிறுகதைத் தொகுப்பானது திரு. உபாலி லீலாரத்ன அவர்களால் சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு கொடகே வெளியீடாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் சிறுகதைகளின் பேசுபொருள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னால் என் மண்ணை வேறு கண் கொண்டு பார்க்கும் திடமிருந்தது. அதன் அழகியலை விஸ்தரிக்கும் உணர்விருந்தது. எங்களுக்குள் மறைந்து கிடந்த அழகு, எளிமை, என்பவற்றை எனது அனுபவ பகிர்வினூடாக வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். அநேகமாக என்னுடைய சிறுகதைகளிலெல்லாம் ஓரமாய் ஒரு சிறு வலி ஒட்டிக் கிடந்தாலும் கதையெங்கும் மலையகத்தின் அழகும் சந்தோஷச் சாரல்களும் அப்பிக்கிடக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகவிருந்தது. இப்படியும் பார்க்கலாம் என்று எண்ணினேன். எழுதினேன். இதற்குள் என்னால் இயலுமான அளவு யதார்த்தங்களை உள்ளடக்கினேன்.
அநேகமாக நான் கூறவிரும்பும் கருப்பொருளை வெளித்தெரியாமல் தொக்கு வைத்த நிலையில், நேர்மறையான உத்தியைப் பயன்படுத்தி சிறுகதையின் உள்ளிருக்கும் கருத்தை வாசகனை சிந்திக்கத் தூண்ட வேண்டுமென்பதே என்னுடைய நோக்கு. இவற்றின் பேசுபொருளாக மலையக வாழ்வியல் பிரச்சனைகள், பெண்களின் வெளித்தெரியா அகவுணர்வு, சிறுவர்களின் ஏக்கம், மாணவர்களின் பிச்சனைகள் போன்றவையே பேசப்பட்டன.
''கட்டுபொல்'' நாவல் குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்ததற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?
தேயிலை, தென்னை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திகளினூடாக மாத்திரமே பரவலாகப் பேசப்படும் மலையக மக்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதென காட்டுவதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. கட்டுபொல் (செம்பனை) எனும் மரச்செய்கை இலங்கையின் தென் பகுதியில் பல தோட்டப் பகுதிகளில் நடைமுறையில் காணப்பட்டாலும், அவை பேசப்படுவது மிகவும் குறைவென்றே எனக்குத் தோன்றியது. எம்மவர்கள் இங்கே தம் உயிர்ப்பயம் மறந்து தமது உழைப்பை உச்சளவில் அர்ப்பணிக்கின்றனர் என்பதுவும், அது யோசிக்கப்படாத ஒன்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றமையும் என்னை உறுத்தத் தொடங்கியதன் விளைவே இந்நாவல்.
இந்நாவலானது இலங்கையின் தென் பகுதியில் உள்ள 'கல்கந்த' எனும் தோட்டப் பகுதி மக்களின் வாழ்வியல் அனுபவங்களினூடாகவே நகர்த்தப்படுகின்றது. 'கட்டுபொல்' எனும் சிங்கள மொழிச் சொல்லை நாவலின் பெயராக நான் தெரிவு செய்தமைக்கு இரண்டு காரணங்களை என்னால் குறிப்பிட்டுக் கூற முடியும்.
ஓன்று, மக்களிடத்தே நாளாந்த பேச்சு வழக்கில் இருந்த ஷகட்டுபொல்| எனும் சொல்லை வலிந்து தமிழ் மொழிக்கு மாற்றி எழுதுதலானது படைப்பின் உயிர்த்தன்மையை சிதைத்துவிடக் கூடுமென்பது என்னுடைய நிலைப்பாடாகவிருந்தது. இரண்டாவது காரணம், இப்பெயரானது இன நல்லிணத்திற்கு வழிவகுக்கக் கூடுமென்றும் நான் கருதியிருந்தமை.
சிங்களப் பெயருடனான தமிழ் நாவலொன்று இதுவரை இருக்கவில்லையென்றே அறிந்திருந்தேன். எனவே, வைத்துத்தான் பார்க்கலாமே எனும் உந்துதலில் பலரது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டியே இப்பெயரைத் தெரிவு செய்தேன்.
சமகால நாவல் இலக்கியங்களின் வரவு கனிசமாகக் குறைந்து வருகின்றதே. அந்த வகையில் உங்களது நாவலின் தனித்துவம் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்?
கவிதை இலக்கியத்துடனும் சிறுகதை இலக்கியத்துடனும் ஒப்பீட்டு நோக்கின் நாவல் இலக்கியத்தின் வருகையானது மிகக்குறைவென்பது கண்கூடு. இதற்கான காரணங்களாக படைப்பாளிகளின் காலம், மனநிலை என்பவை பங்களிப்புச் செய்திடினும் கூட, இலக்கியத்தின் செழிப்பிற்கு நாவலின் பங்களிப்பும் மிக அவசியமென்பேன்.
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று கூறுவீர்கள்?
நாகரீகம் எனும் பெயரிலான மனநிலை மாற்றமும் மிகத் தீவிரமான இணையப் பாவனையும் இதற்குரிய பிரதான காரணங்களாக இருக்கக்கூடுமென எண்ண முடிகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப கட்டம் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நினைத்த மாத்திரத்தில் எல்லா வன்முறைகளையும் குறைத்து இல்லாதொழித்தல் சாத்தியமில்லை. சில குறிப்பிட்ட செயற்பாடுகளினூடாக எதிர்கால நேர்விளைவை உறுதிப்படுத்திக்கொள்ள இயலும். உதாரணம் கல்வி கலைத் திட்டத்திற்குள் சில விடய பரப்புகள் கட்டாயப்படுத்தப்படலாம். பாலியல் தொடர்பான தெளிவான அறிவு புகட்டப்படல், கற்பித்தல் செயற்பாடுகளில் மனப்பாங்கு விருத்திக்கு அதிக முக்கியத்துவமளிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தப்படல், ஆண் - பெண் கலப்பு பாடசாலை முறைமை அதிகரிக்கப்படல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
கல்வித் துறையில் குறிப்பாக ஆசிரியப் பணியில் தாங்கள் ஈடுபடுவதற்கு ஏதேனும் முக்கிய காரணங்கள் இருக்கின்றனவா?
நிச்சயமாக ஆம் என்பதே பதில். நான் மிகவும் நேசிக்கும் தொழில் இது. இதைவிடுத்து உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டிய போதிலும் கூட, ஏதேதோ காரணங்களை முன்வைத்து இத்தொழிலை தக்கவைத்துக் கொண்டேன். இதற்கான காரணங்கள் பல:- தொழிலை அனுபவித்து உணரல், நாளாந்தம் பல உயிர்களுடனான உறவாடல், சதா இளமையான மனது, விசித்திரமான அனுபவங்கள் ஆகியனவாகும்.
ஒரு ஆசிரியர் என்பவர் எத்தனை தூரம் முக்கியத்துவமானவர் என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறேன். ஆராய்ந்து பார்த்தால் வகுப்பறையின் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி உலகமாய்த் தோன்றும். நாற்பது விதமான தனி நபர்களுக்கு நாற்பது நிமிடத்தில் ஒரே பாடத்தை நாற்பது கண்கள் கொண்டு கற்பிக்கும் சவால் நிறைந்த ஆசிரியத் தொழிலைவிட உயர்வாய் வேறேதும் இருக்க முடியுமா என்ன?
சிறுகதை, நாவல் தவிர்த்து வேறு எத்துறைகளில் உங்களுக்கு ஆர்வமுள்ளது?
கவிதை, கட்டுரைகள். 2008 ஆம் ஆண்டு கம்பன் கழகத்தினூடான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் 'மகரந்தச் சிறகு' விருது எனக்கு கிடைக்கப் பெற்றமையைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
படைப்பிலக்கியத் துறைக்குள் வந்ததை இப்பொழுது எவ்வாறு கருதுகின்றீர்கள்?
என்னவென்று சொல்வேன். மிகச் சரியான பாதைக்குள் நடந்துக்கொண்டிருக்கிறேன். ஆத்ம திருப்தியை அனுபவிக்கிறேன். சமுதாயத்திற்கு என்னூடான எதையாவதொன்றைச் செய்யும் வாய்ப்பைத் தந்த எழுத்துலகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். எழுத்து என்னை பல இடங்களில் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. அளவற்ற தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றது. சவால்களுக்கு முகம் கொடுக்கும் உயரிய பண்பைக் கூட எழுத்துதுறைதான் எனக்கு மிகச்சரியாக கற்பித்தது என்பேன். இத்துறைக்குள் வந்ததை பெரும் பேறென கருதுகின்றேன்.
உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் ஒரு தடவை (2011) தன் அநேக சொந்த அனுபவங்களை மனம் விட்டு என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் பால்நிலை மறந்து, வயது மறந்து நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் சிறுவர்களாய் மாறி, நீண்ட நேரம் பேசினோம். சத்தமாகச் சிரித்தோம். அந்த சில மணி நேர பேச்சு என் மனதில் இன்னுமே ஆழப்பதிந்து போயிருக்கிறது.
இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்களுக்கு, இலக்கியப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எவை?
கொடகே கையெழுத்து போட்டி 2017 சிறந்த நாவலுக்கான விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைக்கான மகரந்தச் சிறகு விருது 2008, உழைககும் மக்கள் கலை விழா - சிறந்த சிறுகதைக்கான விருது 2007 ஆகியனவாகும்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நன்றி - பூங்காவனம் http://poongavanam100.blogspot.com/2018/10/35.html
No comments:
Post a Comment