மலையக இலக்கிய உலகில் பெண் படைப்பாளிகளின் நிலை அரை நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிடத்தையே கொண்டுள்ளதெனலாம். அரு மருந்துகளாக இலங்கையின் முதல் பெண் கவிஞர் என்ற பெயர் எடுத்த திருமதி மீனாட்சி அம்மை நடேச ஐயர் அவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளின் பின்னர் தூரத்துப் பச்சை என்ற நெடுங்கதை மூலம் திருமதி கோகிலம் சுப்பையா பெரிதாகப் பேசப்பட்டார். இவரது நெடுங் கதையே மலையக நெடுங் கதை இலக்கியத்துக்கு முத்தாய்ப்பு வைத்த படைப்பெனலாம்.
இவர்களைத் தொடர்ந்து 60 களில் உருவாகிய பெண் படைப்பாளர்களான நயிமா பஸீர், இன்று நயிமா சித்திக் பூரணி போன்றவர்களுக்குப் பின்னர் பெண் படைப்பாளர்கள் எவரும் தோற்றம் பெறவில்லை! 50 ஆண்டுகள் கடந்த பின்னரே திடு திப்பென்று பிரமீளா செல்வராஜா, ஞானம் சஞ்சிகையில் பீலிக் கரை கதை மூலம் அறிமுகமாகினார். 60 களிலிருந்து 50 ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத் தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவரேயாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. திருமணத்துக்குப் பின்னர் திருமதி பிரமிளா பிரதீபன் என அடையாளமாகியுள்ளவர்.
ஆரம்பத்திலேயே மிக மிகப் பக்குவப்பட்ட படைப்பாளராக சிறுகதை பண்பியல் வழுவாது.. சொல்ல எடுத்துக் கொண்ட விசயத்தை சுவைப்பட எழுதித் தரமான வாசகர்களைப் பெற்றவராகினார்.
பிரமிளாவின் கதைகள் யாவும் மலையகச் சமூகத்தினரின் உள்ளக வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.
படைப்புக்குள் பிரசாரமோ கோட்பாட்டு ஆதங்கமோ கருத்து நிலைப்பாடுகளை வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதலோயின்றி கதைப் போக்கிலேயே அரசியலை, சமூகக் குறைபாடுகளை, சமூக அநீதிகளை, பண்பாட்டுத் தாழ்வுகளைக் காட்டுவதில் வேறெந்த சிறுகதை எழுத்தாளர்களை விடவும், பிரமிளா வித்தியாசமான யுக்தியைக் கையாண்டு செல்பவராகின்றார்.
இவரது சிறு கதைகளுள் பீலிக் கரை பேசும் கதையாக இவரது படைப்பில் உச்ச நிலையைக் காட்டியது.. அக் கதையின் தலைப்பிலேயே ஒரு சிறு கதைத் தொகுப்பும், பாக்குப்பட்டை என்ற தலைப்பில் இன்னுமொரு சிறு கதைத் தொகுப்பும் வெளிவந்தமை இவரது அதீத வளர்ச்சியை எடுத்துக் காட்டியது.
மலையகத் தமிழர்களின் வாழ்விடப் பிரதேசங்கள் என்றால் அவை ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களைக் காட்டுவதேயாகும் என்ற நிலை இன்றுவரை இருந்து வருகின்றது. நாட்டின் தென் பகுதியான காலி, மாத்தறை, தெனியாய போன்ற பிரதேசங்களில் அமைந்த பெருந் தோட்டங்களில் வாழும் மலையக மக்கள், சமூக ரீதியில் கண்டு கொள்ளப்படாதவர்களாக இன்று வரை இருந்து வருகின்றனர். மலையக சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இம் மக்களை கைவிட்ட நிலையிலேயே, தேர்தலில் பதவிகள் கிடைக்கும் பிரதேசங்களிலேயே தங்கி விட்டனர்.
பண்பாடு, கலாசாரம், மொழி, இன அடையாளம் எனும் வாழ்வியல் அம்சங்களைத் தொலைத்து, சிங்கள சமூகத்தின் அனுதாபத்துடனும். பச்சாதாபத்துடனும், இனரீதியிலான ஆதிக்கத்துக்குள்ளும், சிங்கள அரசியல் தலைமைகளுக்கு உட்பட்டும் சுயத்துவம் இழந்து, தாழ்ந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களே இவைகளாகும்.
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தப் படைப்பாளர், ஆசிரியர் தொழில் நிமித்தம் காலிப் பிரதேசத்தில் பணியில் இறங்கியதன் காரணமாக, இப் பிரதேசத்தின் மலையக மக்களின் கலை, இலக்கிய சமூக விழிப்புக் குரல் ஒலி விடத் தொடங்கியுள்ளது என்று மனந் திறந்து உரத்துக் கூறலாம். இவரது வருகைக்குப் பின்னரே இப் பிரதேசத்தில் வாழும் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இலக்கிய ஊடகத்தின் மூலம் பதிவாகி வருகின்றன. இதன் முதல் முயற்சியே கட்டுப் பொல் எனும் நெடுங்கதையின் பிரசவமாகும்.
18 ஆம் நூற்றாண்டிலிருந்து பெருந்தோட்ட விவசாயமான கோப்பி, தேயிலை, கரும்பு, பருத்தி ரப்பர், தென்னை எனும் பெருந்தோட்டத் தொழிலை பாரம்பரியத் தொழிலாகவே ஏற்று உழைத்து மாய்ந்து வரும் இம் மக்கள் கூட்டம், இன்னுமொரு புதிய பெருந்தோட்டத் தொழிலாக அறிமுகப் படுத்தப்பட்ட எண்ணெய் வடிக்கும் தாவர விவசாயத்தில் மீண்டும் கூலிகளாக மாட்டிக் கொண்டு, துயரத்தில் நனைந்து கொண்டிருக்கும் ஈர வாழ்க்கையை புதிய தகவலாக இந்த நெடுங் கதை மூலம் பிரமிளா தந்துள்ளார்.! இது மலையக மக்கள் வாழ்க்கையில் புத்தம் புதியத் தகவல் தரும் கதையாகும்.
கட்டு பொல் என்னும் முள்ளுத் தேங்காய்த் தொழிலில் வேலை செய்வதென்பது தேயிலை, றப்பர் தொழிலை விட மிக மிக கஷ்டம் நிறைந்த தொழில் என்பதை கதையோட்டத்தின் மூலம் அறிந்து வேதனைப்படுகின்றோம். மலேசியாவில் றப்பருக்கு மாற்றுத் தொழிலாக செம்பனை என்னும் பாம் ஒயில் பயிர் செய்கையை ஆரம்பித்தார்கள். இலங்கையில் றப்பர் உற்பத்திப் பொருள் செய்து வரும் ஆர்ப்பிக்கோ கம்பெனிக்காரர்கள் இத்தொழிலை ஆரம்பித்துள்ளார்கள்.
முள்ளம் பன்றி போல் முட்கள் நிறைந்த கட்டு பொல் கொப்புகள் பாக்குகளைப் போன்று 300 400 காய்களைக் கொண்டதாகும். 4050 கிலோ பாரம் கொண்ட கொப்புகளை பெண் தொழிலாளர்கள் வாகனப் பாதைக்குச் சுமந்துச் செல்ல வேண்டும். தலையில், கைகளில், உடலில் முட் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டேயிருக்கும். ஆண் தொழிலாளிகள் முப்பது நாற்பது அடி நீளமுள்ள தடிகளில் கத்தியைக் கட்டி கொக்கிகள் செய்திருப்பார்கள். மரம் மரமாக அண்ணாந்து பார்த்தபடி கொப்புகளைத் தேடி அறுத்துத் தள்ளுவார்கள். இந்தத் தொழில் முறையை வாசித்தறியும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. பெருந்தோட்டத் தொழிலையே தங்கள் பாரம்பரியத் தொழிலாகக் கொண்டு போராடி மாயும் இம்மக்கள் சபிக்கப்பட்டவர்களோ என்று ஐதிகச் சிந்தனைக்கு இக்கதை என்னைத் தள்ளியுள்ளது!
இவர்களது உள்ளக வாழ்க்கைக்குள் பூத்து மணம் பரப்பும் காதலும், சமூக மாறுதலுக்கான சவாலாக முன்னேற்றம் காணும் கல்வி நிலை பற்றியும், முற்போக்கு சிந்தனையுள்ள ஆசிரியர் வசந்தன், கடமையுணர்வுள்ள நஸ்ரினா ஆசிரியை, சிறுவர் நிலையத்து பத்ரா மிஸ், தொழிலாள நண்பர்களான மாரியப்பன், ஆறுமுகம், ரவி, செல்லத்துரை போன்றோர் மனதில் நிலைக்கின்றனர். புஞ்சிபண்டா கண்டாக்கு, கடை வியாபாரி பியதாச போன்ற இனவாதிகளின் நடவடிக்கைகளும் மனதைக் கீறுகின்றன.
காலி மாவட்டத்தில் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில், இனவாதிகள் மத்தியில், தமிழர்கள் நகைப்புக்குரியவர்களாகக் கணிக்கப்படுவதையும் பாத்திரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
இதுவரை பேசாப் பொருளாகவிருந்த இப் புதிய பெருந்தோட்டப் பயிர் முறை பற்றியும், அதன் மூலப் பொருள் மூலமாக செய்யப்படும் உற்பத்திகள் பற்றியும், தொழிலாளர்களின் தொழில் துயரங்கள் பற்றியும், அவர்களின் போராடும் வாழ்க்கையிலிருந்து புதிய மாறுதலைத் தேடுவதற்கு எத்தனிக்கும் எழுச்சி பற்றியும், பிரமிளா சமூக ஆய்வினைப் போன்றதொரு தேடலை இந்த நெடுங்கதை மூலம் ஓர் ஆவணப் படைப்பாக நமக்குத் தந்துள்ளார். இந்தப் படைப்பின் மூலம் பிரமிளா மலையக இலக்கியத்தில் உயர்த்திப் பேசக்கூடிய படைப்பாளராக உயர்ந்து நிற்கின்றார்.! இவரது இந்தப் படைப்புக்கு 2017 ஆம் ஆண்டுக்கான கொடகே தேசிய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி தினக்குரல் - April 8, 2018
No comments:
Post a Comment