Enter your keyword

Tuesday, April 14, 2020

நட்ட மரம் | பிரமிளா பிரதீபன்


எப்போதும் இல்லையென்றாலும் எப்போதாவது தன் வலக்கையின் நான்கு விரல்கள் கொண்டு மெதுவாய் ஸ்பரிசித்து தலையை வருடி விடுவான். அப்படியே சுவர்க்கத்திற்குள் நுழைந்தாற் போல் உடலெங்கும் மின்சாரம் பரவி அரைமயக்க நிலையில் கண்கள் சொக்கும். 

ஓரிரு நிமிடங்கள்தான். சடாரென வருடலின் வேகம் தணிந்து விரல்கள் சிறிதுசிறிதாய் செயலற்றவைகளாகி ஓய்ந்து போய் தலையில் சரிந்து கிடக்க அவன் தூங்கி போயிருப்பான். 

சுகபோதையாய் திரண்டு தழுவிய தூக்கத்தின் அரைகுறை ஆரம்பம் எட்ட ஓடிப்போகும். மீண்டும் அந்த வருடலுக்காய் ஏங்கி அவன் கைகள் பிடித்து அசைத்துப்பார்ப்பாள். மெல்லமாய் உலுக்கிப்பார்ப்பாள். அவன் முழுவதுமாய் தூங்கி முடித்திருப்பான்.

************* 

முன் வாசலில் செழிப்பமாய் வளர்ந்திருந்த கறிவேப்பிலை செடியை வேருடன் அப்படியே பிடுங்கியெடுத்திருந்தாள் பாட்டி.

'நல்ல நாளும் அதுவுமா முன்னுக்கே கறுவப்பிள்ள செடி ஆகாது'

படபடத்தபடி ஆணிவேருடன் ஒட்டியிருந்த சிறிதளவு மண்ணை கீழே சிந்தி விடாமல் கைகளால் அமத்தி பிடித்துக்கொண்டபடி வீட்டின் தெற்கு மூலையில் வெட்டி வைத்திருந்த குழிக்குள் அந்த கன்றை அப்படியே பொருத்தினாள். புதிய மண் சிறிதளவையும் வாரி குழியை நிரப்பி தட்டித்தட்டி இறுக்கினாள். இறுதியாய் 'உசுறுத்தண்ணி' என்று கூறியபடியே ஒருகைப்பிடி நீரை சூழவும் தெளித்து. கண்மூடி கும்பிட்டுக்கொண்டாள். 

'கன்னுக்கு மண்ணு புடிக்கனும் பொண்ணுக்கு மனசு புடிக்கனும்' 

முணுமுணுத்த படியே கற்கள் சிலதை பொறுக்கி அணையாக வைத்தாள். 

குறித்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெரும் ஆரவாரத்துடன் கூட்டமாக வந்து சேர்ந்திருந்தனர். 

முதன் முதலாய் அவனுடன் தனித்து பேசிய அன்றைய சந்தர்ப்பமொன்றில், நீண்ட நேர தயக்கத்திற்கு பின் ஒரு கட்டளையுடனேயே அவனை மணக்க சம்மதித்திருந்தாள். அவனும் அக்கட்டளைக்கு இணங்கியிருந்தான். ஆனால் அவனுக்கு ஒரே சிரிப்பு. கொஞ்சமும் எதிர்பாரா விண்ணப்பமது. 

'நான் தூங்கும் வரை தலைவருடிவிட முடியுமா...?' என்றாள்.

'என்ன?'

அவனுக்கு சரியாக புரியவில்லை.

'தூங்கும் வரை தலை வருடிவிட முடியும்னா எனக்கு சம்மதம்' 

'என்ன இது?' என்றான்.

'அப்டி பழகிட்டேன். பாட்டி அம்மா சமயத்துல அப்பா கூட... இப்டி யாராவது தலை வருடினாதான் தூக்கம் வருது'

அவன் கண்ணடித்தபடி சிரித்தான். அவளும். வீட்டில் எல்லோருமாய் சந்தோசமாய் பேசி சிரித்துக் கொண்டார்கள். 

வீடெங்கும் அவளது புகைப்படங்கள் வயது வித்தியாசங்களுடன் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன. 

***********************

கொடுத்த வாக்கை மீறவில்லையவன். சில சந்தர்ப்பங்களில் சிரித்துக்கொண்டே சொல்லியும் காட்டுவான். 

'தூங்குற வரைக்கும் தலை வருடுறேன்னு தானே சொன்னேன். நான் தூங்குற வரைக்கும்'

பழக்கமற்ற முடியாததொன்றை செய்ய அவனுக்கும் இயலவில்லை. அவளுக்கும் இயலவில்லை. 

மாற்றங்களால் தானே வாழ்வு நகர்கின்றது! 

தலை வருடலில்லா தூங்கும் முறைகளை பல வழிகளில் தேடினாள். இலக்கங்கள் எண்ணுதல், டீவி பார்த்தல், கண்மூடி அசையாமல் கிடத்தல், ஆழ்ந்து யோசித்தல், தலை மாற்றிப் படுத்தல்... 

தினமொரு புதுமுறையில் எப்படியோ தூங்கிக்கொண்டாள். இதுதான் முறையென்று எதுவொன்றிற்கும் பழகி அடிமையாதல் பெருந்தவறு தானோ !

முழுவதுமாய் விளக்குகள் அணைத்து கடும் இருளின் துணைக்கொண்டு தூங்கிப்போதல் ஒரு வகையில் எளிதாகவிருந்தது. ஆனாலும் நேரம் செல்ல செல்ல இருள் சற்றே பரிச்சயமாகி காட்சிகள் புலப்பட்டு அந்த கருமைக்குள்ளும் விசித்திரமான உலகொன்று விரியத் தொடங்கும். 

எதுவித இடர்களுமற்று விடியும் வரை நித்திரை கொள்ளுதலும் ஒரு வகையான வரம்தான். விடிந்ததும் தாய்வீட்டிற்கு போகும் பதைபதைப்பு தூக்கத்தை அண்மிக்க முடியாமல் தடுத்தது. சில மாதங்களுக்கு பிறகான பிரயாணம் இது.

************************

பலத்த வரவேற்பும், விருந்தும், நிறைவான மகிழ்வும். இதுவென்று சொல்லவியலா வெறுமையொன்று வீடெங்கும் வியாபித்திருந்தது. 

தெற்கு மூலையில் வளர்ந்து நின்ற கறிவேப்பிலைச்செடி சற்றே உயரம் கூடியும், புதிய பல கிளைத்தோன்றல்களுடனுமாய் தளதளத்த புதியதொரு செழிப்பத்துடன் இருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.

'பட்டு போயிரும்னு பயந்துட்டே புடுங்கி வேற எடத்துல நாட்டினேன். பாத்தியாடி... கிடுகிடுன்னு வளந்து செழிப்பமா நிக்கிறத...! ' 

பாட்டி வாஞ்சையுடன் இலைகளை வருடிக்கொடுத்தாள். 
குறிப்பு : இச்சிறுகதை 22.08.2018 திகதி யாழில் இருந்து வெளிவரும் எதிரொலி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. சிகரத்தில் சிறுகதையை வெளியிட அனுமதி தந்த எழுத்தாளருக்கும் சிறுகதையை வெளியிட்ட பத்திரிகைக்கும் நன்றிகள்.  

No comments:

Post a Comment