Enter your keyword

Monday, April 13, 2020

அட்டைகள் - பிரமிளா பிரதீபன்


திடீரென பெய்த மழையால் கட்டுபொல் காடெங்கும் ஈரம் சொட்டத் தொடங்கியது. கட்டுபொல்கொப்பு தூக்கிக் கொண்டிருந்த பெண்கள் எல்லோருமே ஸ்தம்பித்துப் போனவர்களாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

அது நடுப்பகுதி கட்டுபொல் துண்டென்பதால் அட்டைகள் ஆங்காங்கே மொய்த்தெழும்பிக் கொண்டிருந்தன. தரையிலும்..... செடிகளுக்கிடையிலும்... ஏன்...! விழுந்து காய்ந்து கிடக்கும் கட்டுபொல் வாதுகளைதானும் மிச்சம் வையாமல் அவை ஊர்ந்து திரிந்தன

என்னதான் அட்டைகளிடமிருந்து பயந்தொதுங்கி விலகியிருந்தாலும்.... அவை எங்களையே குறிவைத்து தாக்கிக்கொண்டிருந்தன.

அட்டை எனும் சொல்லிலேயே என்னவொரு அருவருப்பு.....? உடலில் ஒருவித ஈரபசையுடன் கறுப்பும் கபிலமும் கலந்தாற் போலொரு நிறத்தில்........ சில அட்டைகளின் முதுகில் நீள்வாக்கான கோடுகள் கூடத்தெரியும்.

அட்டையின் அடிப்பகுதி உடல் பருத்து உருண்டையாய் நிலத்தில் அல்லது யாதேனுமொரு செத்தையில் ஒட்டிக் கொண்டிருக்க, தன் முன்னுடல் பகுதியை நேரே நிமிர்த்தி அல்லாடி.... அடுத்த அடி வைக்க ஒரு நொடி தயங்கி.... பின் உடலின் நுனிப் பகுதியை  நிலம் பதித்து.... பின்னுடலை படக்கென்று இழுத்தபடி.......

ச்சீய்..... பார்க்கும் போதே வாயில் தொகையாய் உமிழ்நீர் சேர்ந்து குமட்டத்தொடங்கும்.

வெயில் காலங்களை விட மழைக்காலங்களில்தான் இந்த அட்டைகளின் அட்டகாசம் அதிகமாகவிருக்கிறது. மழையோ வெயிலோ.... ஆளுக்கு நாற்பது கட்டுபொல் கொப்புகளை சேகரித்தால் மட்டுமே ஒரு நாள் பேர் விழும். ஆண்கள் நாற்பது கொப்புகளை சரக் சரக் கென்று வெட்டி வீழ்த்திவிட்டு போய்கொண்டே இருப்பார்கள்...... அவற்றை தூக்கி சேகரிக்கும் எங்கள் பாடு..........?

மழையையும் பொருட்படுத்தாது இதோ நான்காவது முறையாகவும் கண்டாக்கின் பைசிக்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

 'தூக்குங்கடி வெரசுனா...... நாய்மாதிரி சுத்தி சுத்தி மோப்பம் புடிக்கிறான்'

ஒருத்தி அவசரப்படுத்தினாள்.

'இந்த மழையில கட்டுபொல் தூக்கி சாக சொல்றியா......'

'செத்த பொறுங்கடி மழ ஓஞ்சதும் தூக்குவோம்....'

எல்லோருமாய் ஒரு முடிவிற்கு வந்து ஒவ்வொரு கட்டுபொல் மரத்தடியிலுமாய் ஒதுங்கிக் கொண்டோம்

'ஒனக்கெல்லாம் காத்து வாங்கிட்டு நிக்கிறத்துக்கா சம்பளம் குடுக்குது....?'

கண்டாக்கு கத்திக்கொண்டு அருகிலேயே வந்து நின்றான். நிஜமான மோப்ப நாய் போலவே எல்லோரையும் கண்களால் ஒருதடவை அளந்தான்.

'மூதேசி..... கள்ளத்தனமா வேவு பாக்குது.....'

கோபம் தலைக்கேறி நான் முணுமுணுத்தது அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கினான். வேலைக்கே வர முடியாதபடி செய்துவிடுவதாய் எச்சரித்தான்.

வழமை போலவே கேட்டும் கேளாத பாவனையில் ஆயிரம் குமைச்சல்களுடன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

மழையுடன் ஐம்பது அறுபது கிலோ கணக்கும் கட்டுபொல் கொப்பை தூக்குவதென்பது........ லேசா பின்னே...!  கொஞ்சம் வழுக்கினாலும் போதும் கொப்பில் இடைக்கிடை துருத்திக்கொண்டிருக்கும் முட்கள் குத்திக்கிழித்து தசையை துண்டாக்கி பிய்த்தெடுத்துவிடும்.

இதற்கிடையில் இந்த அட்டைகள் வேறு அங்கும் இங்குமாய் மொய்த்து தாவி விரலிடுக்குகளில் பதுங்கிக் கொண்டு முடிந்த மட்டும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கின்றன.

ஒவ்வொரு கட்டுபொல் மரத்தின் தண்டுப் பகுதியிலும் புல் பூண்டுகள் அடர்ந்து வளர்ந்து மரத்தை நிறைத்திருந்தன. ஏதோ ஒரு வகையான இளம்பச்சை நிற செடிகள் அடர்ந்து மரத்தை சூழ்ந்து கிடந்தன. அச்செடிகளுக்கிடையிலும் அட்டைகள் ஊரலாமெனும் அச்சம் உடலெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

கால்களிலும் கைகளிலும் சன்லைட் துண்டுகளை தேய்த்து கொண்டபடி பாதுகாப்பாய் இருந்தாலும், மரத்தில் ஊர்ந்து செல்லும் அட்டைகள் படக்கென்று உடலுடன் தாவி        பற்றிக்கொள்ள பார்க்கும். உடையுடன் ஊர்ந்தூர்ந்து கழுத்து நெஞ்சு வயிறு இப்படி எங்கேனும் ஓரிடத்தில் இயலுமானளவு இரத்தம் உறிஞ்சி திருப்திகண்ட பின் அதுவே தானாக விழுந்துவிடும்.

சிவந்து தடித்து, இரத்த உறைதலுடன்  இருக்கும் காயங்களை பார்க்கும் வரை சிலருக்கு அட்டை கடித்த உணர்வே இருப்பதில்லை.

சாதாரண அட்டைகளையும் அவற்றின் கடிகாயங்களையும் பெரிதாய் எவரும் அலட்டிக்கொள்வதில்லையெனினும் கட்டுபொல் காட்டின் நடுப்பகுதியில் ஊர்ந்து திரியும் அட்டைகள் விஷத்தன்மையுடயவையென்று எல்லோருக்குமே தெரியும். இந்த அட்டைகளிடம் கடிபடும்போது மட்டும் காயத்தை சுற்றி சிவந்து வீங்கி கருஞ்சிவப்பு அடையாளத்துடன் அரித்தபடியே இருக்கும். குறைந்தது மூன்று நாட்களுக்கேனும் சுர்ர்ரென்ற கடுப்பு விட்டுவிட்டு தெறிக்கும். அந்த காயம் ஆறப்போகும் சமயத்தில் இன்னும் இரண்டு அட்டைகளாவது எங்கேனும் கடித்து தொலைத்திருக்கும். சில காயங்கள் மாதகணக்கில் ஆறாமல் வதைப்பதுமுண்டு.

உடலின் மறைவிடங்களில் அட்டை கடிப்பதும், ஒட்டிக்கொண்டு வரமறுப்பதும்..... யாரும் பார்க்கா வண்ணம் அட்டையை பிடுங்கி எடுப்பதுவும் கட்டுபொல் தூக்கும் பெண்களின் தினசரி நிகழ்வாகிப் போயிருந்தது. அப்படி வலிந்து அட்டையை பிடுங்கியெடுக்கும் போது காயத்தின் வலி இரட்டிப்பாகி நீண்ட நேர அவஸ்த்தையை அனுபவிக்க வேண்டி வரும்.

நினைக்கும் போதே அட்டைகள் மீதான கோபம் அதிகரிக்குமாப்போல் இருந்தது.

அட்டைகளை இல்லாதொழிக்க என்ன செய்ய வேண்டும்...? அட்டைகள் ஏன் இரத்தத்தை விரும்பி உறிஞ்சுகின்றன....?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அட்டையொன்று என் கால் பெருவிரல் மீதேறி விரைவாக தன்னுடலை குவித்து சுருக்கி கனுக்காலுக்கு தாவப் பார்க்கிறது. அதனை பிடுங்கியெடுத்து வீசுகிறேன். அது விழ மறுத்து சுட்டுவிரலில் ஒட்டிக்கொண்டு மீண்டும் தாவி முன்னேறுகிறது. கையை பலமாய் உதறுகிறேன். அட்டை விழுவதாய் இல்லை.

கீழே கிடந்த கட்டுபொல் கொட்டையொன்றால் அட்டையை வழித்தெடுத்து வீசுகிறேன். கைகளில் பட்ட கட்டுபொல் கொட்டையின் எண்ணெய் பிசுபிசுப்பை அட்டை ஊர்ந்த இடத்தில் தேய்த்துக் கொள்கிறேன். 

சளைக்காமல் அவ்வட்டை மீண்டும் என்னிடமே வருகிறது..... என்ன திமிர் இந்த அற்பபூச்சிக்கு.....!

தொக்கு வைத்த ஏதோ ஒரு கோபம் அட்டை மேல் திரும்புகிறது. ஒரு கல்லை எடுத்து தரையில் கிடக்கும் அவ்வட்டையை நசித்து தேய்த்து கொல்லப்பார்க்கிறேன். அந்த அட்டை உடலை சுருக்கி சிறிதாய் தன்னை ஒடுக்கிக் கொண்டு இறந்தாற் போல் கிடக்கின்றது.

மண்தரையில் வைத்து  அட்டையை கல்லால் அடித்து கொல்லுதல் முட்டாள்தனமென்று எனக்கு தெரிந்திருந்தாலும் கோபம் தாளாமல் இன்னொரு முறையும் அட்டையை நசிக்கிறேன். அது குடித்த இரத்தத்தை கக்கியிருக்கிறதா அல்லது நய்ந்து பீச்சப்பட்டிருக்கிறதாவென தெரியவில்லை. தரையில் சிறிதளவு குருதி சிதறிப் பரவியிருக்கிறது. மெதுவாக உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.

சிறிதுநேரத்திற்குள் மிகமெதுவாய் தன் உடலை நகர்த்தி அந்த அட்டை ஊரத்தொடங்குகிறது. ஒரு பிராணியை அநியாயமாய் வதைக்கிறோமோ என்று மனது என்னை சாடுகிறது.

அட்டைகடி சிறந்த மருத்துவமாமே....! சிலர் காசு கொடுத்து அட்டை கடியை அனுபவிப்பதாய் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருதடவை கோயில் பூசையின் போது ஐயர் கதைகதையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்வந்திரி முனிவரது சிலைகளில் அதனை அவதானிக்கலாமாம். அவரது ஒரு கையில் அட்டை வைத்திருப்பாராம். அட்டைகள் மனிதனின் அசுத்த இரத்தத்தையே உறிஞ்சுகிறதென்றும் ஒவ்வொரு மனிதனும் அட்டைக்கடியை கட்;டாயம் அனுபவிக்க வேண்டுமென்றும் அதனைதான் தன்வந்திரி முனிவரது சிலையின் அடையாளம் உணர்த்துகிறதென்றும் ஐயர் சொன்னபோது எல்லோருக்கும் ஒரே சிரிப்பு...... 

எங்கே கடிக்கிறது..... எப்படி விழுகிறதென்று தெரியாமலேயே எங்கள் இரத்தத்தை சதா தானம் கொடுக்கும் எங்களுக்கெல்லாம் மருத்துவமாவது மண்ணாவது.........  போதாகுறைக்கு தன்வந்திரி முனிவரின் சிலைவேறு...!

ஒருவேளை, சுத்த இரத்தமும் சேர்த்தேதான் உறிஞ்சப்படுகிறதென்று தன்வந்திரி முனிவருக்கு தெரியாதிருந்திருக்குமோ............!

No comments:

Post a Comment