Enter your keyword

Tuesday, June 16, 2020

ஜில் பிராட்லி | பிரமிளா பிரதீபன்

By On June 16, 2020

‘என் பெயர் ஜில் ப்ராட்லி என்பதை நீ நம்புவதற்கு என்னுடைய கபிலநிற கண்களும் பளீர் வெள்ளை நிறமுமே காரணமாய் இருப்பதை நீ ஒத்துக்கொள்கிறாயா?’

சிவநேசனை வீடியோ தொடர்பில் அவளாகவே அழைத்த முதலாவது முறை இது. ஏறக்குறைய அவளை படங்களிலேயல்லாமல் நேரில் பார்க்கும் முதற் சந்தர்ப்பமும் இதுதான்.

ஜில் ப்ராட்லி இளஞ்சிவப்பு நிறத்தினாலான சட்டையொன்றை அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலியொன்று கிடந்தது. தலைமுடி விரித்து விடப்பட்டிருந்தது. மெலிதாய் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். முகப்புத்தக படங்களில் பார்ப்பதை விடவும் அழகாய் தெரிந்தாள். தன் வயதை அவள் ஒருபோதும் சொல்லியதில்லையென்றாலும் முப்பத்தைந்தை தாண்டியிருக்க முடியாத தோற்றமாயிருந்தது.

தொடர்ந்தும் அவள் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தாள்.

‘உன்னை என் நெருங்கிய நண்பனாக்கி கொண்டதற்கான காரணம் எதுவென்று தெரியுமா?’

அவன் இல்லையென்பதாய் தலையாட்டினான். 

‘நீ இப்போது விபாகரன் இருக்கும் அதே கண்டத்தில் வசித்துக்கொண்டிருக்கிறாய். தவிர அவன் பேசும் அதே மொழியை அதே தொனியில் பேசுகிறாய்’

சிறிது மௌனத்திற்குப்பின் அவளே தொடர்ந்தாள்.

‘இப்போது விபாகரன் யார் என்பதை நீ யோசிப்பாய். அல்லது ஊகித்திருப்பாய். அப்படி ஊகித்திருந்தாயானால் அது சரிதான். அவன் என் முன்நாள் காதலன்.’

அவளது நா குலறியது.

‘நீ குடித்திருக்கிறாயா ?’ என்றான்.

அவள் சிரித்தாள்

‘ஆமாம் இது இரண்டாவது முறை’

‘முதலாவதாக எப்போது குடித்தாய்?’

‘என் விபாகரனை பிரிந்தபோது. ஆனால் அப்போது குடிப்பதற்கு விஸ்கியோ பியரோ எதுவும் கிடைக்கவில்லை. பண்டார மாமாவிடம் கசிப்பு வாங்கி குடித்தேன்.’

சிவநேசனுக்கு அந்த விபாகரனை பிடிக்கவில்லை. அவன் ஏன் பிரிந்தான் எனும் கதையை கேட்கும் விருப்பம் துளிதானும் இருக்கவில்லை.

‘நீ ஓய்வெடு. நாளை பேசிக்கொள்ளலாம்’ என்றான்.

‘இல்லை இன்னும் பேசவேண்டி இருக்கிறது. நீயும் அடிக்கடி என்னை பற்றி சொல்ல கேட்டிருக்கிறாய் இப்போதுதான் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.’

சிவநேசனுக்கு ஜில் ப்ராட்லி மீது அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவள் மிகச்சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவளாக இருந்தாள். அவளது எண்ணிக்கையற்ற இரசிகர்களில் சிவநேசனும் ஒருவனாக இருந்தானெனினும் அதைத்தாண்டி அவள் அவனிடம் நட்பை பேணுமளவிற்கு சில அதிகபட்ச தகுதிகளும் அவனுக்கு இருந்தன.

சிவநேசன் ஒரு கவிஞனாயிருந்தானென்பதை விட ஆங்கிலம் தெரிந்த தமிழ் கவிஞனாக இருந்தானென்பதையே அவள் அதிகமாய் விரும்பினாள்.

இருவருமாய் பரஸ்பரம் தங்களது படைப்புகளை விமர்சித்துக் கொள்வார்கள். நீண்ட நேரமாய் கலை, இலக்கியம், ஓவியம் பற்றியெல்லாம் குறுஞ்செய்தியூடாக விவாதிப்பாரர்கள். என்றாலும் இலக்கியம் தாண்டியதொரு வெளியை ஒருபோதும் அவர்கள் தொட முயற்சித்ததில்லை.

‘நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என ஒரே ஒரு தடவை ஜில் ப்ராட்லி அவனிடம் கேட்டிருக்கிறாள்.

திருமண வாழ்வு எனக்கு உடன்பாடான ஒன்றல்ல என்பதுடன் உச்சளவிலான ஒரு சுதந்திர வாழ்வையே நான் விரும்புகிறேன் என்று சிவநேசன் கூறியிருந்தான்.

அவன் யாழ்பாணத்தை சேர்ந்தவன் என்பதை அவ்வப்போது அவன் தமிழில் பேசும் போது அறிந்துக்கொண்டாளேவொழிய அவனது சொந்த விபரங்களை தேடியறிய வேண்டுமென அவள் நினைத்ததேயில்லை.

ஆனால் சிவநேசனுக்கு அவளை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் அதிக ஆர்வமிருந்தது.

‘நீ ஒரு சிங்களத்தியாய் இருந்துகொண்டு இப்படி வடிவாய் தமிழ் கதைக்கிறாயே’ என்று ஆச்சரியப்பட்டான். ‘எனக்கும் சிங்களம் சொல்லித்தருகிறாயா’ எனக் கேட்டான்.

ஓவ்வொரு முறை பேசும் போதும் சிங்களவர்கள் மீதான தனது அதீத வெறுப்பை கொஞ்சம் அதிகமாகவே கக்கிவிட்டு பின் அது பிழையோ என யோசிப்பான்.

சிங்களம் என்ற ஒற்றைச்சொல்லே மிகக்கசப்பானதாய் இருந்த போதிலும் ஜில் ப்ராட்லியை அவனுக்கு அதிகமாய் பிடித்திருந்தது. அவள் தனது பரம்பரைப் பெயரான அனோமா முணவீர என்பதை ஜில் ப்ராட்லி என மாற்றி கொண்டதற்கான காரணம் எதுவென சரியாக தெரிந்திருக்காத போதிலும், அது அவனை மிக மகிழ்ச்சிப் படுத்துவதாயிருந்தது.

ஜில் ப்ராட்லி பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அவளது தெளிவான ஆங்கில உச்சரிப்பும், அரைக்குறையான தமிழ் உச்சரிப்பும் அவளை அதிகபட்ச அழகியாக காட்டும். 

அவள் ஓவியங்கள் பற்றியும் பல்வேறு ஓவியர்கள் பற்றியும் அதிகம் அறிந்தவளாய் இருந்தாள். சல்வடோர் டாலியின் ஓவியங்களைப் பற்றி அடிக்கடி பேசத் தொடங்கியிருந்தாள்.

அவரது ஓவியங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையிலுமாயும் தான் அதிசயித்து போவதாய் கூறுவாள். டாலியின் ஓவியங்கள் கனவு நிலைப்பட்ட உலகை உருவாக்குவதாயும் யதார்த்த உலகில் கண்டறியாத மிகைப்படுத்தப்பட்ட உருவங்கள் போன்று தோற்றமளிப்பதாகவும் எண்ணிக் கொண்டிருந்தாள். அவை கனவில் தோன்றுவதையொத்த மாயத்தன்மை உடையதென்றாள்.

மேலும் சர்ரியலிச வகையான ஓவியங்களே அவளை அதிகம் கவர்ந்திருப்பதாகவும் அத்தகையதொரு யுக்தியையே தானும் பின்பற்ற விரும்பவதாகவும் சொல்வாள். கனவு வசப்பட்ட நிலையை வெளிப்படுத்தும்  அத்தகைய கவிதைகளை எழுதும்படி சிவநேசனையும் கேட்பாள்.

அவனும் மறுக்காமல் சரியென்பதாய் அப்போதிலெல்லாம் தலையாட்டி வைப்பான்.

அவளது எல்லா விளக்கங்களுக்கும் பின்னுமாய் வெளித்தெரியாமல் தொக்கு நிற்குமொரு ஏக்கம் நிரம்பி வழிவதாகவே அவனுக்குத் தோன்றும். ஆனாலும் ‘நீ என்னை விரும்புகிறாயா?’ என்று சிவநேசன் அவளிடம் இதுவரையிலும் கேட்டதில்லை.

வெறுமனே விரும்பி பின் விலகுதலில் அவளுக்கு பிடிப்பில்லாமல் இருக்கலாம். அதையும் மீறி கேட்டுவிடலாமென்று எண்ணிக்கொண்டாலும், திருமணம் செய்து கொள்கிறாயா என அவள் பதிலுக்கு கேட்டுத் தொலைத்தால்…! அந்த பயமும்தான்.

அவள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவளாக இருந்ததுடன் அதனை சிவநேசனிடம் மட்டுமே வெளிப்படுத்த விரும்பினாளென்பதையும் சில பொழுதுகளில் அவன் புரிந்திருந்தான்.

தான் ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநலவிடுதியில் தீவிர நோயாளியாக சேர்க்கப்பபட்டிருப்பேன் என்று பிரைடா காலோ தன்னுடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறாளாம். சொல்லப்போனால் நானும் அவளையொத்தவள்தான் என்று ஜில் ப்ராட்லி பெருமை வழிய பலதடவைகள் அந்த ஓவியருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வாள்.

வேறொரு சந்தர்ப்பத்தில்,

‘அநேகமான ஓவியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாகவே இருப்பதை போல நானும் என்றாவது ஒருநாளில் அப்படியொரு முடிவை எடுப்பேனோ தெரியவில்iலை’ என்றாள்.

இதையெல்லாமும் தாண்டி தமிழ்மொழி மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த  வாஞ்சையுடன் இருக்கிறாளென்பதையும், அளவு கடந்ததொரு விதத்தில் சிவநேசனை அவள் நேசிப்பதையும் தன் செயல்களினூடாக வெளிப்படுத்த விரும்புபவளாகவே அவள் தெரிந்தாள்.

இப்போதும் ஜில் ப்ராட்லி அதே போன்றதான ஒரு குழப்ப நிலையிலேயே தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொள்ள முடியுமாயிருந்தாலும் குடித்துவிட்டு பேசுமளவிற்கான தற்போதைய தேவையென்ன என்பதனை அவனால் யோசிக்க முடியாமலிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதலளிக்க, அவள் பேசிக்கொண்டிருப்பதை கேட்பதொன்றே போதுமானதென நினைத்தான்.

‘சரி நீ விரும்பிய எதுவானாலும் என்னிடம் பேசலாம்’ என்றான்.

எதை குடித்திருக்கிறாள்  என கேட்க வேண்டும் போலவும் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஊர்ந்து பரவும் அந்த போதை அவளது கண்களை தொட்டு சொருக வைக்குமொரு தோற்றத்தை அளித்தது.

அவள் இடைக்கிடை சத்தமாக சிரித்துக்கொண்டாள். அப்படி சிரிக்கும் போது கையில் வைத்திருந்த அவளது ஐபேட் அதிர்ந்து, அறையில் கொழுவப்பட்டிருந்த விசித்திரமான ஓவியங்கள் சிலவும் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியும் தென்பட்டன. அந்த ஓவியங்களில் சில வரைந்து  முடிக்கப்படாமல் அரைக்குறையாக மாட்டி வைத்திருப்பதாய் இருந்தது.

‘நான் அழகாய் இருப்பதால்தான் என்னை உனக்கு பிடித்திருக்கிறதா சிவநேசன்?’

‘முழுதாய் அப்படியென்று சொல்லிவிட முடியாது. உன் ஓவியங்களையும் நான் இரசிக்கிறேன்’

‘என்னுடைய படங்களை நீ இரசித்ததே இல்லையா?’

அவன் சிறிது தயங்கி பின் மெதுவாக கூறினான். ‘உன் கண்களையும் உதடுகளையும் இரசித்திருக்கிறேன்’

அப்படி அவன் கூறும்போது அவளை பார்க்கத் துணிவற்று தலையை திருப்பிக் கொண்டான்.

அவள் இப்போது, தான் கனவிலும் நினைக்காத ஒரு அடியை எடுத்து வைப்பதில் தனக்கு திறமை உள்ளதென நம்பியவளாய் அதீத பீடிகையற்று சடாரென்று கேட்டாள்.

‘என்னை முழு நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’

சிவநேசன் ஒருகணம் அதிர்ந்து மீண்டான். அளந்து… நிதானித்து… ஒவ்வொரு சொல்லாய் உதிர்த்து பேசும் இவளிடமிருந்தா இக்கேள்வி வந்தது..!

‘ஜில் நீ நிதானமாக இல்லை. நாளைக்கு…’

அவன் முடிக்க முன்பேயே ‘சரியாக யோசித்து சொல் வேண்டுமா…? வேண்டாமா…?’ என்றாள்.

சிறுநேர தாமதத்தையும் விரும்பாதவனாய் உடனே ‘வேண்டாம்’ என்றான்.

‘காரணம் கேட்க நான் விரும்பவில்லை ஆனால் நீ என்னை காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன்’

‘சரி விபாகரனை ஏன் பிரிந்தாய்?’ சிவநேசன் அந்த கதையை மாற்றிட முயற்சித்தான்.

ஒரு தடவை ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டுக்கொண்டாள்.

‘அவன் தமிழன் என்பதால்… அப்படியில்லையென்றால் அவன் யாழ்பாணத்தான் என்பதால்’

‘என்றாலும் நீ ஓடி போயிருக்கலாமே?’

‘என் தந்தை தேடிப்பிடித்து எங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பார். இல்லையேல் என் குடும்பத்துடன் சேர்த்து வீட்டையே எரித்திருப்பார்.’

‘தொடர்ந்தும் அவனை காதலித்தபடியே இருந்தாயா?’

‘அவன் அப்போது உயிரோடு இல்லையென்று நினைக்கிறேன்’

‘நினைக்கிறேனென்றால்…!’ சிவநேசனுக்கு புரியவில்லை.

‘என் திருமணத்திற்கு பின் அவன் புலிகளின் இயக்கத்திற்கு போகப் போவதாய் தகவல் அனுப்பியிருந்தான்’

ஓரளவிற்காய் அவள் சொல்லவிழைவதை சிவநேசனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘அப்போது இறுதி யுத்த காலமென நம்பப்பட்டது. அநேகமாக மொத்த ஈழமும் தம்வசப்பட்டுவிட்டதென எங்கள் இனமே கொண்டாடி மகிழ்ந்து ஊர் மக்களுக்கெல்லலாம் பாற்சோறு விநியோகிக்கத் தொடங்கியிருந்தோம்’

சிவநேசனால் அச்சூழ்நிலையை அப்படியே உணர முடிந்தது. அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என் தந்தை அந்நிகழ்வுகளுக்கெல்லாம் தீவிரமாக தலைமை தாங்கியவர். உங்கள் தலைவனின் உருவத்தை பொம்மையாக செய்து எங்கள் வீட்டு முற்றத்ததில்தான் எல்லோருமாய் ஒருமித்து எரித்து பஸ்மமாக்கினார்கள். அந்த உருபொம்மை எரிந்து முடியும் வரை சுற்றி சுற்றி ஆடி களித்திருந்தார்கள்.’

‘நீயும் சந்தோஷப்பட்டாயா?’

‘அதுபற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் விபாகரன் அந்த யுத்தகளத்தில் இருந்திருப்பான் என்பதை தெரிந்து வைத்திருந்தேன்… வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் வெம்பித் தவித்தேன்’.

ஏறக்குறைய அவள் பேசிக்கொண்டே அழத் தொடங்கியிருந்தாள். கண்களை ஒரு துவாயால் மென்மையாய் ஒற்றியெடுத்தபடி மீண்டும் தொடர்ந்தாள். அவளது கண் மை இலேசாக கலைந்திருந்தது. 

‘எங்கள் கிராமமே பட்டாசு சத்தம் அதிர கும்மாளமிட்டது. தெமலு பராதாய்… தெமலு பராதாய்… என்று கோஷமிட்டபடி கொண்டாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயங்கிய ஒருசில அயலவர்களை நீ புலியா? என்று கேட்டுக் கேட்டு அடித்து நொறுக்கினார்கள்.’

‘உன் சூழ்நிலை தெரிந்திருந்தும் நீ ஏன் விபாகரனை தெரிவு செய்தாய்?’

சிவநேசன் அவளது பதிலை ஆர்வமாய் எதிர்பார்த்தான். அவள் அதற்கான பதிலை தவிர்த்தவளாய் தன்பாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.

‘அப்போது முழு நாட்டையும் தாமே உரிமையாக்கி கொண்டுவிட்டதாக அறிவித்திருந்தார்கள். என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. என் கொந்தளிப்புகள் துளியேனும் வெளியே தெரிந்துவிடக் கூடதென அத்தனை கவனமாய் நடந்துக்கொண்டேன். அன்றைய தின கொண்டாட்டம் எங்கள் வீட்டில் என் கணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. என் கைகளாலேயே இறைச்சி துண்டுகளை மசாலா தடவி பொறித்தெடுத்து மகிழ்ச்சியாய் பறிமாறுவதை போல் பாவனை செய்தேன். வீதியெங்குமாய் தெருவுக்குத் தெரு கொடிகள் பறக்கவிடப்பட்டு உற்சாக உத்வேகம் மக்களது உறக்கத்தை மறக்கச் செய்திருந்தது.’

திடீரென யாரோ சத்தமாய் கூப்பிடுவது போலாய் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் எடுப்பதாய் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

சிவநேசன் கட்டிலில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டான். விபாகரனின் உருவை நினைவிற்குள் கொண்டுவர முயற்சித்தான். கிட்டத்தட்ட அவன் தன்னை போலவேதான் இருந்திருக்க வேண்டுமென தோன்றியது. ஒரு கட்டத்தில் தனது உருவே நிழலாய் தெரியத் தொடங்கியதாய் உணர்ந்தான். தான் ஒரு தேர்ந்த காதலனாக மாறி அவளை அப்படியே ஏந்திக்கொண்டாலென்ன என்பதாய் நினைத்தான்.

பாரமான உணர்வொன்று அழுந்த உறுத்திக் கொண்டிருப்பதாய் பட்டது. பின் ஏதேதோ யோசித்தவனாய், குவளையிலிருந்த சிறிதளவு தண்ணீரை ஒரே மடக்கில் பருகினான். கழுத்தை சாய்த்து நீவி விட்டுக் கொண்டான். ஒரே குழப்பமாய் இருந்தது. கொஞ்சம் தலை வலிப்பது போலவுமாய். அவள் மறுபடியும் அழைக்கும் வரை தொலைபேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக ஒரு பத்து நிமிட நேரத்தில் அவள் மறுபடியும் தொடர்பிற்கு வந்தாள்.

‘மன்னித்துவிடு’ என்றாள்.

அவள் ஆங்கிலேயர்களுடன் அதிகம் பழகுவதால் அவர்களது பழக்கவழக்கங்கள் அதிகமாய் அவளுக்குள் தொற்றியிருந்தன.

சிவநேசன் மிகுதி கதையை கேட்க அவசரப்படுவதை காட்டிக் கொண்டான்.

‘நீ ஓவியர் வான்கோ பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா? என்றாள்.

வேண்டுமென்றே அவள் கதையை மாற்றி பேச முனைவதாய் தெரிந்தது.

‘உன் கணவனை ஏன் பிரிந்தாய் என்று சொல்’

‘அவனுக்கு என் காதல் பற்றி ஒரு கட்டத்தில் தெரியவந்தது. ஒரு தமிழனையா காதலித்தாயென மிக அநாகரீகமாக வார்த்தைகளால் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டே இருந்தான். தமிழர்களுக்கு எதிரான எல்லா சதி வேலைகளையும் ஆர்வமாக செயயத் தொடங்கினான். கிழமை தவறாமல் அது பற்றி கதைப்பதற்கென்றே நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்தான். மேலும் ஒரு தமிழனை காதலித்தலென்பது மகா முட்டாள்தனமென்றும் அடிக்கடி கேலிசெய்து சிரித்தான்’ 

சிவநேசன் அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தான். 

‘எல்லா சிங்களவர்களும் கெட்டவர்களென்று நீ நினைக்கிறாயா?’

‘இல்லை… நீ கூட சிங்களத்தி தானே!’

‘நிஜமாகவே அதனை நீ நம்ப வேண்டும். தமிழர்களை புரிந்து கொண்ட ஏராளமான சிங்கள மக்கள் இல்லாமலில்லை. அவர்களை நீங்கள் பார்க்கத் தவறியிருக்கிறீர்கள். கூடவே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறீர்கள்.’

‘ம்ம்… சிலவேளைகளில் நீ சொல்வது சரியாகலாம்’ என்றான்.

‘ஆனால் என் தந்தையை போலவே என் கணவனும் மிகக் கெட்டவன். தமிழர்களை மொத்தமாக துவேசித்தான். என்னால் அவனது கருத்துக்களுக்கு உடன்பட முடியா ஒரு தருணத்தில் விலகிவிட்டேன். நான் எற்கனவே சொன்னது போல ஒரு பிரைடா காலோ  வாக மாறி வாழ்தலையே விரும்பத் தொடங்கினேன்.

‘மறுமணம் பற்றி நீ யோசிக்கவில்லையா?’

‘இல்லை நான் விபாகரனுடன் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு இயல்பாக சாத்தியப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக… அவனால் என்னுடன் பேச முடிகிறது. எனக்குத் துணையாயிருந்து ஓவியம் வரைய முடிகிறது… சமயங்களில்; என்னை புணர்ந்தும் மகிழ்விக்க முடிகிறது’

சிவநேசன் எதுவுமே பேசாமல் இருந்தான்.

‘நீ பயப்படுகிறாயா?’

‘இல்லை…  ஆனால்  ஏன் உன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்வில்லையே?’

‘விபாகரன் செல்லமாய் என்னை ஜில் என்றுதான் அழைத்து பழகியிருந்தான். அதுவுமில்லாமல் யதார்த்த உலகிற்கு அப்பால் உள்ளவற்றை காண்;பதே சர்ரியலிசம் என்று கூறியிருக்கிறேன் அல்லவா. அந்த கோட்பாட்டின் சான்றாக டாலியின் ஓவியங்கள் மட்டுமே இருப்பதாக நம்பத்தொடங்கியிருந்தேன். தொடர்ந்தும் டாலியின் வழியையே பின்பற்றி எனக்கான ஒரு அக உலகையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன். இவையிரண்டுமே என் வாழ்வுடன் இரண்டறக்கலந்து போயிருந்தமையால்  அவரது பெயரின் ஒரு பகுதியையும் என் பெயருடன் பொருத்திக் கொள்ள வேண்டுமென்பதை விரும்பினேன். அதனை கொஞ்சம் மாற்றியோசித்து ஜில் ப்ராட்லி என ஆக்கிக் கொண்டேன்.’

மறுபடியும் அவள் ‘பயமாக இருக்கிறதா’ என கேட்டால் ‘ஆம்’ என்று சொல்;ல வேண்டும் போல் இருந்ததவனுக்கு. ஆனால் அவள் அப்படி கேட்காமல் தனது இயல்பு நிலையை தாண்டி பேசிக்கொண்டேயிருந்தாள். இடைக்கிடை அவளது கண்கள் அனிச்சையாய் மூடித்திறப்பதாய் தெரிந்தது. விசித்திரமாய் மூச்சுவிட்டபடியும், கொஞ்சம் வேகமாயும் பேசத் தொடங்கியிருந்தாள். 

திடீரென சற்று குனிந்து கண்களை அகல விரித்தபடி ‘விபாகரன் நேற்று என்னுடன் நிஜமாகவே பேசினான் தெரியுமா…!’ என்றாள்.

அவன் இப்போதும் மௌனித்தான். கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.

‘அவன் உயிரோடு இருக்கிறானென்பது ஏற்கனவே உனக்கு தெரிந்திருந்ததா?’

இல்லையென்பதாய் தலையசைத்தாள்.

‘அவனும் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறான். இன்னும் இரு தினங்களில் இலங்கை வருகிறானாம்.’

‘ஹ்ஹ்ஹா… பிறகென்ன…? உன் விருப்பமான வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறதென்று சொல்’

‘அதுதானில்லை’

‘ஏனில்லை’ சிவநேசனுக்கு கொஞ்சம் எரிச்சலாகவுமிருந்தது. 

‘அதைவிடு நீ வான்கோ எனும் ஒரு ஓவியன் அற்புதமான இரசணையுடன் தற்கொலை செய்து கொண்ட கதையை அறிவாயா?’

சிவநேசன் ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அதிகளவில் முயற்சித்தான். இவள் ஏன் இடையில் தேவையற்று வான்கோவை இழுத்துக் கொள்கிறாள்?’

வான்கோவை பற்றி ஏதேதோவெல்லாம் பேசத் தொடங்கினாள். அவனுக்கு அதில் கொஞ்சமும் பிடிப்பில்லாமல் இருந்தது. கேட்டும் கேளாதவன் போல ‘விபாகரன் வந்தால் ஏன் அவனோடு வாழ முடியாது?’ என்று கேட்டான்.

‘மிக நீண்ட நாட்களாக என் ஓவியங்களுடனும் விபாகரனின் மாய பிம்பத்துடனும் வாழ்ந்து பழகி விட்டேன். அடுத்து வரபோகிறதென தோன்றும் ஒரு திடீர் மாற்றத்தை… அல்லது ஒரு நிஜத்தை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிவநேசன். அது உனக்கு புரியாது விடு’ என்றாள்.

அவன் மீண்டும் மீண்டுமாய் அதையே விவாதித்தான்.

‘நீ விரும்பிய அவனை மனதார ஏற்பது தானே நியாயம்…!’

‘இல்லை. கற்பனையை எல்லா தடைகளிலிருந்தும் விடுவித்து தன் இஷ்டம் போலான வெளிப்பாட்டினை அனுபவித்து… தமது அடையாளங்களை அழித்து… மனதின் கட்டுபாடற்ற எண்ண வெளிப்பாட்டிற்கு உகந்ததான  ஒரு மாய வாழ்க்கை வாழ்ந்து பழகிய ஒருவனுக்கு அதிலிருந்து மீளுதல் சுலபமில்லை. மேலும் எனக்கு இப்போது மயக்கமாக இருப்பதாய் உணர்கிறேன்.’

‘நீ இப்போது ஓய்வெடுக்க வேண்டும். படுத்துக் கொள்’ என்றான்.

‘இன்னும் கொஞ்சம் பேச இருக்கிறது பொறு.’

அவள் தன் இரு கைகளாலும் முகத்தை வழித்துத் துடைத்துக் கொண்டாள். மிகவும் களைப்படைந்தவளாய் தெரிந்தாள்.

‘எனக்கு மிகப்பிடித்தமான ஓவியம் வரைதலை தாண்டிய அடுத்த விடயம், அதிகம் விரும்பும் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதுதான். எண்ணிய நொடியிலெல்லாம் விபாகரனுடன் என்னால் பேச முடிந்திருந்தாலும் அவனது பொய்விம்பம் எனக்கான பதில்களை ஒருபோதும் தரவில்லை. அத்துடன் அது உன்னால் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக உனக்கு நன்றியுடையவளாக என்னை நினைத்துக் கொள்கிறேன்.’

‘சாப்பிட்டாயா’ என்றான்.

‘இல்லை எனக்கு பசிக்கவில்லை. உனக்கு ஒன்று காட்ட விரும்புகிறேன் பார்…’

அருகில் வைத்திருந்த பாதியளவு வரையப்பட்ட ஒரு ஓவியத்தை காட்டினாள். அது வெறுமனே ஒரு கறுப்பு வெள்ளை படமாக இருந்தது. அந்தரத்திலிருந்து நீர் சிதறிக்கொண்டிருந்தது. ஒரு கதிரை ஆகாயத்தில் பறப்பது போலவும்… சந்திரன் துகள்களாகி பறந்து ஒருசிறு தூரத்திற்குப்பின் அவை பறவைகளாய் மாறிவிடுவதாயும் இருந்தது.. மிகுதி பாதி வரையப்படாமல் விடப்பட்டிருந்தது.

‘இப்போது இவ்வோவியத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்’

‘வேண்டாம் ஜில் நீ ஒய்வெடுக்க வேண்டும்’ என்றான்.

அவள் சத்தமாக உடல் குலுங்க ஒருமுறை சிரித்தாள். மறுபடியும் ஜில் என அழைக்கும்படி கேட்டாள்.

‘ஜில்….’

‘இன்னுமொருமுறை’

அவன் உணர்ச்சிவசப்பட்டவனாய் ‘ஜில்….’ என்றான்.

அவள் கண்கள் மூடி அதனை அனுபவித்துக் கேட்டாள்.

‘கடைசியாக ஒருமுறை சொல்’

‘ஜில்….’

அவள் அழுதுக்கொண்டிருந்தாள்.  ‘நன்றி’ என மீண்டுமொருமுறை கூறி தொடர்பை துண்டித்துக் கொண்டாள். 

தான் இப்போது  என்னவிதமான மனநிலையில் இருக்கிறோம் என்பதே சிவநேசனுக்கு புரியாமலிருந்தது. தொலைபேசியை ஒருபக்கம் வீசியவனாய் தொப்பென கட்டிலில் விழுந்தான். விரித்து கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தஸ்த்தயேவ்ஸ்க்கியின் நாவலை மேசையில் தூக்கிப் போட்டான்.  அறையை மொத்தமாய் நிரப்பிக்  கொண்டிருந்த ஜில் ப்ராட்லியின் உருவை காண முடிகிறதா என சூழவும் ஒருமுறை தேட முயற்சித்து பின் அவளை அணைத்துக்கொண்டு உற்ங்குவதாய் எண்ணியபடியே தூங்கிப் போனான்.

மூன்று மணித்தியாலங்களுக்கு பிறகொரு நொடியில் வியர்வை மற்றும் பசி மயக்கத்துடன் மோசமான ஒரு மனநிலையுடன் விழித்துக் கொண்டிருந்தான். உடலெங்கிலுமாய் வியர்வை அரும்பியிருந்தது. ஜில் ப்ராட்லி பேசிய வார்த்தைகளெல்லாம் மறுபடியும் நினைவிற்கு வரத் தொடங்கின. அவள் வான்கோவின் தற்கொலை பற்றி ஏதோ பேசினாளே…! தலையை பிடித்து கசக்கிக்கொண்டு யோசித்தான். 

‘வான்கோ பேராசையுடன் ஓவியம் வரையத் தொடங்கிய சற்று நேரத்தில் தன்னை அறியாமலேயே சாவின் நிழல்கள் தன்மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்தாராம். அப்போது அங்கே தன்னைத்தவிர யாருமில்லை என அறிந்த மறுநிமிஷம் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு பெருமூச்சிட்டபடியே சில அடிகள் நடந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாராம். வான்கோவின் வடியும் இரத்தம் நிற்காத போதும்  அவர் மிகுந்த ஆசையுடன் தள்ளாடியபடியே மீண்டும் ஓவியம் வரையும் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்தாராம்… இப்படி வான்கோவை போல மரணத்தை இரசணையுடன் அனுபவித்து பெறுவது கடினமில்லையா’  எனக்கேட்டாள்.

அதற்கு அவன் ‘ஏன்’ என கேட்டதாய் ஞாபகம்.

‘யாருமில்லாத ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளுதல் என்பதும் தன்னை தனக்கே தெரியாமல் ஒருவன் சுட்டுக் கொள்ளுதல் என்பதுவும் ஆச்சரியம் தானே தவிர அவ்வாறானதொரு அனுபவத்தை பெற்றிட என்னிடமும் துப்பாக்கி இல்லையே’ என்றாள். மேலும் ‘துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தை தர முடியுமா என்ன’ எனச்சொல்லி சத்தமாய் சிரித்தாள்.

சிவநேசனுக்கு மனது படபடத்தது. இதயம் பலமடங்கு வேகமாய் துடிப்பது போலிருந்தது. பதறியெழும்பி தொலைபேசியை தேடியெடுத்தான். அவளது இலக்கத்தை வேகமாய் அழுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவனது கைகள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தன.

நன்றி - http://www.yaavarum.com/

Monday, June 15, 2020

என் நாயகனுக்கு...

By On June 15, 2020

என் நாயகனுக்கு,

எல்லையற்று  விரியும்  என்  கனவுகளின்  நீட்சி  தணிப்பதற்காய்  எழுதப்படும் கடிதமிது.

பதின்மவயது  கடந்து  பல  ஆண்டுகளுக்கு  பின்னொரு  பரவச உணர்வு. சாத்தியமா  என்ற  உணர்விற்கு  இடமேயில்லை.  என்னையொத்த  எல்லோரது வாழ்விலும்  இப்படியொரு  தருணம்  வந்திருக்க  வேண்டும்  அல்லது வரக்கூடும்.

குறைந்தது  நாற்பதிலாவது  உன்னை  சந்தித்திருக்க  கூடாதாவென்று  மனது வெம்புகிறது.  எல்லாம்  கடந்த  முதிர்ச்சியின்  உச்சத்திலா  உன்  மீதான  என் காதல்  வெளிப்பட வேண்டும் !

நிஜமாகவே  இது  காதல்தானா  என்றொரு சந்தேகம்  எனக்கும் இல்லாமலில்லை.  ஐம்பதை  கடந்த  பின்னான  எனதிந்த  உணர்வு,  கிட்டத்தட்ட அறுபதை  கடந்த  உன்னிடம்  ஏற்பட்டிருப்பது  உசிதமானதல்லவென  நானும் அறிவேன்.  இருந்தும்  இத்தனைக்  காலம்  உணரா  இப்பரவசத்தை  உன்னிடம்  பேசும்  போது  நான்  உணர்கிறேன்  என்பதை  உன்னிடம்  மட்டுமாவது சொல்லிவிட்டே  என்  வாழ்வு  முடிய  வேண்டும்  என்பதால்  வெட்கம்  விட்டு  என்  மனதை  பகிர்கிறேன்.
அறிவும்  மனதும்  மாறிமாறி  யுத்தம்  செய்து  மனது  ஜெயிக்கிறது.  உணர்ச்சிக்கு மதிப்பளித்து  திக்கித்  திணறிக்  கிடக்கிறேன்.
நிஜம்  சொல்லவா ?

நகரும்  நொடிகள்...  ஏன்  மாத்திரை பொழுதுகளிலும்  உன்  நினைவுகளின்  பிம்பம்  தெறித்து  சிதறி  என்னை  முழுவதுமாய்  வியாபித்திருக்கிறது.
சிரிக்கிறாய்  நடக்கிறாய்  கரம்  கோர்த்து  திரிகிறாய்  சமயத்தில்  தலை கோதுகிறாய்  கட்டியணைக்கிறாய்...  கீழுதடு மொத்தமாய்  கவ்வி   சில நொடிகள்  சிறைப்பிடித்து  பின்  விடுவிக்கிறாய்.   இருளின்  அடர்த்தியில்  பரவும்  சிறுதுளி ஒளியிலும்  வளியாய்  மேவியென்  மேனி படர்கிறாய்.
என்ன  உணர்வுகள்  இவை !  வயதிற்கு  ஒவ்வாத  இவ்வுணர்வுகளால்  நான் எங்கனம்  சிக்குண்டேன் ?  ஒருவேளை  என்  திருமணக்  கனாக்களை  சூழலாலும் காலத்தாலும்  தவிர்த்து...  உள்ளுக்குள்  அமத்தி  அமத்தி  நனவிலி  மனதிற்குள்  போட்டுக்கொண்டதால்,  என்னை மீறி  அவை  எழப்பார்க்கின்றனவோ !

யார் நீ ?  என்ன  செய்கிறாய் ?  எப்படி  தினமும்  இங்கே  வருகிறாய் ?   ஒ ன்றுமே தெரியவில்லை.

சில  பொழுதுகள்  மட்டுமேயான  உன்னுடனான  பார்வை,  ஒரு சில  வார்த்தைகள்  எப்படி  இத்தகையதொரு  உணர்வை  தூண்டக்கூடுமென  புரியாமல்   தவிக்கிறேன்.

பதில்  சொல்  நாயகா ?

இது  என்  இலக்கியக்காதல்.  அன்றேல்  முதுமையின்  ஏகாந்தம்  தந்த  ஒவ்வா தண்டணை.

நீ  நாயகன்  நான்  நாயகி.

நினைவுகளுக்கு  மட்டுமேயான  இலக்கிய  காதலிது.  என்  உணர்வுகளிற்கு அதியுச்ச  போதை  தரும்  அழகான  நொடிகளிவை.

கல்கியின்  வந்தியத்தேவனாய்  அல்லது  ஒரு  பொன்னியின்  செல்வனாய்...
இல்லையில்லை  எப்போதுமே  கல்கியின்  பூங்குழலி  நான்.  என்  அகத்தில் மட்டுமே  வாழும்  பொன்னியின்  செல்வனாய்  இருந்துவிட்டு  போ !
நான்  காலம்  கடந்து  தேடும்  என்  துணை  நீதானா   என்றறியேன்.  ஆனால்  உன்னில்  அதனை  அதிகமாக  உணர்கிறேன்.

அடிக்கடி  நாம்  சந்திக்கும்  எதார்த்த  பொழுதுகளெல்லாம்  வலிந்து  நீ  ஏற்படுத்தி  தந்ததாக  மட்டுமே  எண்ணத்  தோன்றுகிறது.  வெள்ளிக்கிழமைகள்  தோறும்  நான்  வரும்  அதே  கோயிலுக்கு  வருகிறாய்.  நான்  அமர்ந்து  ஆசுவாசப்படும்  இடத்திற்கு  அருகாமையிலேயே  அமர்ந்தும்  கொள்கிறாய்.

அவ்வப்போது  எதிர்பாராமல்  சந்தித்து  மீளும்  நம்  பார்வைகளில் சொல்லத் தெரியாத  ஏதோ  ஒன்று  தொக்கு  நிற்பதை  முழுமையாய்  உணர்கிறேன்.  நீயும் என்னை  போலவே  உணர்கிறாயோ  என்று  சந்தேகித்தே  இம்மடலையும்  எழுதத்துணிகிறேன்.

ஆனாலும்  இக்கடிதம்  தந்து  உன்னுடனான  பரஸ்பர  உறவை  நாடுவதல்ல  என்நோக்கம்.

எஞ்சியுள்ள  சிலகால  நம்  தனிமை  வாழ்வை  அர்ததப்படுத்திடவும்  அனாதைகள்  எனும்  அடையாளத்தை  தவிர்த்துக்  கொள்ளவும்  எனக்கு  நீயும்  உனக்கு  நானுமாய்  அர்த்தப்பட்டுபோகலாமெனும்  சிறு  ஆசை  ஓரமாய்  உந்தியபடியே  இருந்தாலும்,  எனக்கு  நன்றாகத்தெரியும்...  என்  அகத்தினதான  இவ்வுணர்வு  வெளித்தெரிந்திடும்  பட்சத்தில்  நான்  விசித்திரமாய்  நோக்கப்படக்கூடும்.  சந்திக்கு சந்தி  என்  காதல்  பேசுபொருளாக  மாறிவிடக்கூடும்.   நான்  கேலிக்குரியவளாக்கப்பட்டு  அவமானப்படுத்தபடல்  கூட  சாத்தியம்தான்.  கூடிப்போனால்  காறியுமிழ்ந்தென்னை  வெறிக்கும்  விழிகளுக்கு  மிகுதிவாழ்  எல்லாத்தருணங்களும்  வழிசமைக்கக்கூடும்.

இதையெல்லாமும்  தாண்டி  நான்  உன்னோடு  சேர  முனைவேனா ?  அல்லது  இச்சமூகத்தில்  அதுதான்  சாத்தியமாகி  விடுமா ?
இல்லை.

இம்மடல்கூட  உன்  பார்வைக்கு  படாமல்  கிழிபடத்தான்  போகிறதென்று  நன்கறிவேன்.  நான்காய்  எட்டாய்   கிழித்து  குப்பைத்தொட்டியில்  போட்டாலுமே யாரேனும்  சந்தேகித்து  கண்டுபிடிக்க  வாய்ப்புண்டு  என்பதால்  பலநூறு  பகுதிகளாக  கிழித்து  துகள்களாக்கி...  முடிந்தால்  கடித்து  சக்கையாய் மென்று,  ஓடும்  அருவியொன்றில்  துப்பிவிடவே  எண்ணுகிறேன்.

இம்மடலை  மட்டுமல்ல,  இனி  எழுதப்போகும்  பல  மடல்களையும்...

இவள்                                                                                                                                                                                 
 உன் பூங்குழலி

நன்றி - ஜீவநதி செப்டெம்பர்  2018

Sunday, June 14, 2020

விரும்பித் தொலையுமொரு காடு

By On June 14, 2020

யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரமேதான். முடிந்தால் நேரமொதுக்கி என்னிடம் கேளுங்கள் தயக்கமின்றி சொல்கிறேன். இதுவொரு வரலாற்றுத் திருப்பம் என்று… ஒட்டுமொத்த கற்பனைகளதும் நம்பமுடியா சாத்தியபாடென்று… அன்றேல் வேறொரு விதத்தில் கூறமுனையின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெறும் அமையச்செலவென்று… ஆம். அப்படிச் சொல்வதில் நிச்சயமாய் தவறேதும் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். மிகச்சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்வதற்காய் சிறந்த ஒன்றை இழக்க நேரிடின் அது அமையச்செலவு தானே!

நிறைவேறத் துடிக்கும் ஆழ்மன வெளிப்பாடுகளுள் ஒன்றாய், உயரிய பாதுகாப்பாய் இன்னும்…  ஆத்ம திருப்தி தருவதாய், எல்லையில்லா பூரணத்துவத்தை உணர்த்துவதாய்…  நிஜமாகவே நான் தொலைவேனென எண்ணிக்கொண்டிருக்கும் அந்த காட்டுப்பயணம் இப்படியானதாய்; அமையப் போகிறதென்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். 

நான் மட்டுமல்ல எனையொத்த அனேக பெண்களதும் நம்பிக்கை இதுவாக மட்டுமேதான் இருக்கிறது. நம்பிக்கை என்று சொல்வதை விட எங்களது பிரார்த்தனைகளையும் இச்சம்பவமே முழுதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

அத்தகைய ஆக்கிரமிப்புகள் காட்சிப்படுத்திடும் ஆசைகளின் விரிவை தனித்திருத்தலால் மாத்திரமே  காண முடிகிறது. அவை விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாய் சொற்களுக்குள் அடங்கிக் கொள்ள மறுப்பது.  

‘அடியேய் எரும… எத்தன தடவ கூப்டுறேன். என்னன்னு கேக்குறாளான்னு பாரு’

இப்படியான அம்மாவின் திட்டுதல்கள் என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதாயில்லை. இதனையொத்த கனவுகளையே தாமும் ஒருநாள் கண்டிருந்தோம் என்பது இந்த அம்மாக்களுக்கு ஞாபகமிருப்பதில்லையோ என்னவோ… இடக்கிடை குறுக்கிட்டு நீண்டு கொண்டிருக்கும் சில அற்புதமான நினைவுகளை பிடுங்கிக் கொள்கின்றனர்.  

‘எபப்பபாரு பார்த்த இடத்தையே பார்த்து… அப்டி என்னத்த யோசிச்சு தொலைக்கிறாளோ என்ன கருமமோ..

ஏண்டி இந்த ஒலகத்துலதான் இருக்கியா என்ன?’

அம்மா நினைப்பது சரிதான். அது சற்றே வித்தியாசமான உலகம். அதே மக்கள், அதே வாழ்வு, அதே சடங்குகள், அப்படியேயான சம்பிரதாயங்கள் ஆனால்  சில தருணங்களில் அது நிஜமல்ல என்பது போலவும் இன்னும் சில பொழுதுகளில் உலகை தாண்டியதொரு வேற்றுக்கிரகம் என்பது போலவுமாய் இரண்டுமற்ற நிலையினதாய் அவ்வுலகம் தோற்றமளித்துக் கொண்டிருக்கும். 

‘நீயெல்லாம் இன்னொரு வீட்டுக்கு போய் பட்டாத்தாண்டி தெரியும்’

‘காலா காலத்துல இவளுக்கு ஒரு வழிய தேடியிருந்திருக்கனும். இப்டியே போனா பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தோட போக வருமோ என்னமோ’ 

என் பிரதிபலிப்பு வெறும் மௌனமாகவே இருந்ததால் அம்மா தொடர்ச்சியாக திட்டிக் கொண்டேயிருந்தாள். அம்மாவின் இந்த சந்தேகம் எனக்குமே பெரியதொரு நெருடலாய் இருந்துக் கொண்டுதானிருந்தது. இந்த நினைவுகளெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனங்களாய் இருந்துவிடுவதற்கான  வாய்ப்புகளும்  இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கனவிற்கும் நனவிற்கும் இடைபட்டதான ஒரு திண்மத்தை ஸ்பரிசித்தலோ அல்லது அவதானித்துணர்தலோ சாத்தியமில்லையாக இருக்கும் போது அவ்வுலகம் வெறுமனே கற்பனையினாலானது என்று விலகுதலும் சுலபமாயிருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதன்; உறுதி நம்;பும்படியாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவுமே இருக்கின்றது. மனித குரலோசைகள் பரிகாசங்களும், ஏவல்களும் நிரம்பியதாய் அவ்வப்போது ஒலித்து மறைகின்றன. ஏலவே காட்டுக்குள் தொலைந்து போனவர்களது பிரகாசமான பிம்பங்கள் தூரத்தில் காட்சிகளாக தெரிகின்றன. அவர்கள் மிக பூரிப்புடன் உலா வருவதை போலான வெளிப்படுத்தல்களையும் காணகிடைக்கின்றன.  

அந்த விசித்திர உலகை பொருத்தவரை காட்டிற்குள் காhணாமல் போதல் எனும் சம்பவத்தை மக்கள் பெரும் சம்பிரதாயமாகவே கொண்டாடினார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையுமாய் பெண்குழந்தைகளின் பிறப்பின் போதே தீர்மானித்துக் கொண்டார்கள். பருவ வயதினுள் நுழைய நுழைய தொலைந்து போதல் பற்றியதான தேடலையும் அதன் சுவாரசியங்களையும் இளம் பெண்கள் தங்களுக்குள்ளாகவே பேசி மகிழ்வது கண்டு வெகுவாக உற்சாகமடைந்தார்;கள். 

நானும், காடுகளை சார்ந்தேயல்லாமல் வாழ்தல் சாத்தியமேயில்லை என்று எண்ணி நீண்டநாட்களாக காத்திருக்கத் தொடங்கியிருந்தேன். தொலைதலினதான இதம் என் பரவசத்தை யாருக்கும் தெரியாமல் பதுக்கியே வைத்திருந்ததை இரகசியமாய் அனுபவித்து சிலிர்த்தேன். 

நான் சுயநினைவின்றி பிதற்றித் திரிவதாகவும் சிலர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். அம்மா மிகவுமாய் பயந்து போய் அவசர அவசரமாக என் திருமணம் பற்றி யோசித்தாள், விவாதித்தாள்,  என்னிடம் சம்மதமும் கேட்டாள். 

‘ஏண்டி மாப்புள கை நெறய சம்பாதிக்குறாரு…”

‘ம்ம்…’

‘பார்க்க லட்சணமா வேற இருக்காரு’

‘ம்ம்’

‘ஒன்னய அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம்’

இது எப்படி ஒரே பார்வையில் சாத்தியமானதென்று தெரியவில்லை. உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். மறுப்பதற்கான காரணங்கள் எதுவுமே இருக்கவில்லையென்பதால் சரியென்பதாய் தலையாட்டினேன்.

வழமை போலான என் மௌனத்தையும் சொற்களற்ற சம்மதத்தையும்  சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தக்கட்ட வேலைகளை அம்மா ஆரம்பித்;தாள். தன் மிகப்பெரிய கடமை முடிந்ததாய் என் திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தாள். 

‘வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் கால்கள் இருக்கும்.. நாம தான் திச மாறாம நடக்க பழகிக்கனும்மா’  என்றபடி வழமைக்கு மாறாக அம்மா கண் கலங்கிய போது, சொல்லிவிட நினைக்கும் எதையோ ஒன்றை அவள் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்றே தோன்றியது. 

அம்மா எதையெண்ணி அப்படி கூறினாளோ தெரியவில்லை. ஆனால் என் கற்பனைகளும் நனவுலக நடைமுறைகளும் ஒரு கட்டத்த்pல் சங்கமித்தன. நான் ஆனந்தமாய் இருப்பதாய் எண்ணிக்கொண்டேன். அப்படியே வெளிர்நீலம் படிந்த பின்னொருநாளில் எல்லோரையும் போலவே நானும் காட்டிற்குள் தொலைவதற்காய் விருப்பத்துடன் பிரவேசித்தேன்.  

அடர்பச்சை இலைகள், கிளைகளுக்கிடையேயான கீற்றொளிகள், ஊதா நிறப்பழங்கள், பெயர்த்தெரியா பட்சிகளின் முணுமுணுப்புகள், எங்கோ விழுந்து தெறிக்கும் நீர்வீழ்ச்சியின் மிதமான சாரல்…

அடுத்ததென்ன…? 

காடு என்;னை பத்திரமாய் அழைத்துச்சென்றது. வழிக்காட்டியது. சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. நான் தொலைய வேண்டிய இடத்தையும், திசையினையும் கச்சிதமாய் திட்டமிட்டு காட்டித்தந்தது.  தொலைதலுக்கான என் முற்படலை ஆர்வத்துடன் வரவேற்று அவதானித்துக்கொண்டிருந்தது. எல்லாமே என் விருப்பதின் பேரில் நடப்பது போன்றதான பிரமையினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. 

ஆங்காங்கேயான காட்டின் துர்மணங்களையும் அருவருக்கத்தக்கதான பிசுபசுப்புக்களையும் எதிர்பட்ட சிறு புதர்களையும் உதாசீனப்படுத்திக்கொண்டு குறைவற்ற மகிழ்ச்சியுடனேயே நான் காட்டை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

இடைக்கிடையே வந்துபோன அம்மாவின் நினைவுகளையும், கடந்த தடங்களையும் தவிர்க்க விரும்பினேன். காடு என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தது.   

விசித்திரமான சப்தங்களும் இதுவென அடையாளப்படுத்திடவியலா வாசனையும் என்னைச் சூழத்தொடங்கின. என் அடியோசையுடன் உலர்ந்த சறுகுகளும் குச்சிகளும் சேர்ந்தே நொறுங்கி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. நான் விடுபடா வண்ணம் காடு என் விரல்களை தன்னுடன் மிக இறுக்கமாய் பிணைத்திருந்தது. பரஸ்பர நேசிப்பின் மேன்மையினை தேவையேற்படும் போதிலெல்லாம் உணர்த்தியது… இல்லை போதித்தது. 

வாழ்வின் போதையில் திளைத்து சில பொழுதுகளில் மயங்கி முழுக்காடுமே என்வசப்பட்டு போனது போலொரு அதிசயத்தை பார்த்து திகைத்திருந்தேன். காலத்தோடு சேர்ந்து அதே நம்பிக்கையில் நடந்தேன் அவ்வப்போது ஓடியும் போனேன்.  

முதலில் நுகர்ந்தேனா அல்லது உணர்ந்தேனா? சரியாக சொல்லத் தெரியவில்லை. காடெங்குமான வாசனையையும் அதிகாரத் தொனிகளையும் சில காலங்களின் பிறகே உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். அதன் விசைக்கொப்ப அனிச்சையாய் பயணித்தபடி கணக்கிலற்ற இரவுகளையும் மூடியிருந்த பகற்பொழுதுகளையும் எண்ணத் தொடங்கியிருந்தேன்.  

காட்டின் மையப்பகுதி வரையிலான நகர்தலின் பின் இலேசாய் மூச்சுமுட்டும் ஒரு தன்மையினை அனுபவித்தேன்.  என் முச்சிறைப்பு வெளியே கேட்டுவிடக்கூடாதென்பதால் மிகக்கவனமாய் மறைத்தும் வைத்திருந்தேன். பகற்பொழுதுகளை விடவும் இரவுகள் மிக நீட்சியுடையதென  அதன் பிறகே கண்டுப்பிடிக்க முடிந்திருந்தது. பாதிசாமத்திற்கு பிறகான இரவுகளில் நான் தனித்து விடப்பட்டதால் எனக்கே தெரியாமல் என்னுள் இருந்து வெளிவரத்துடித்த கூக்குரல்களை அனுமதித்து செவிசாய்த்தேன்.

என் குரலுக்கு ஒப்பான பல்லாயிரம் விதமான பெண் குரலொலிகள் உச்சஸ்த்தாயில் உரத்துக் கத்தும் ஓசை சிறுகச்சிறுக பெருத்து அப்படியே ஒற்றை அலையாய் காட்டைச்சுற்றியும் அலைமோதித் திரிவதை நிதானமாக அவதானித்தேன். வலிந்து அடைப்பட்டிருந்த அக்குரலொலிகள் செவியொன்று திறந்திருப்பதை கண்டுகொண்டனவாய் திமிறித் தெறித்து எதிரொலிக்கத் தொடங்கியிருந்தன.   

‘நான் எங்கேயிருக்கிறேன்?’  

‘ஏன் என்னால் மனம் திறந்து சிரிக்க முடியவில்லை…?’

‘என்னை விட்டுவிடு… எனக்கு எதுவும் வேண்டாம். என்னை மீண்டும் அனுப்பிவிடு”

‘கர்த்தாவே என் வாழ்க்கையை ஏன் நரகமாக்கினாய்?’

‘ஆண்டவா நான் மௌனமாகவே இருந்துவிட்டு சாகும் வரம் தா. என்னால் யாரும் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்’ 

‘கதவுகள் தென்படவில்லையே எப்படி நான் தப்பிப்பேன் ?”

‘எப்போதேனும் அவ்வதிசயம் நடந்துவிடாதா? நான் இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிடமாட்டேனா?’

எல்லா ஓலங்களுமே தங்களை சாந்தப் படுத்திக் கொள்ள முட்டாள்தனமாக எதையெதையோ உளறி தமக்குள் துன்பங்களை அமத்தி வைத்துக் கொண்டதாகவே தோன்றியது. அதிகாரமும் அடக்குமுறைகளுமாய்; உலாவிய ஒருசில குரலொலிகளும் இடைக்கிடையே வந்து மோதுண்டன.  

அம்மா பேச முனைந்த பொழுதிலெல்லாம் மௌனத்தை பதிலாய் தந்த என் முட்டாள்தனம் ஆழமான குற்றவுணர்ச்சியாய் மாறியிருந்தது. நினைக்கும் போதெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்திட யாரேனும் வானிலிருந்தேனும் குதித்து வந்துவிட மாட்டார்களாவெனவும், அம்மாவிடம் ஓடிப்போய்விட வேண்டுமென்றும்  மனது இறைஞ்சியது. 

பழைய ஞாபகங்கள் தந்த அசாத்திய தைரியத்தில் கொஞ்சம் அதிகாரமாய் பேசலாம் என்றெண்ணி முதற்தடவையாய் எனக்காக வாய் திறந்தேன். மையப்பகுதியை தாண்டிய காட்டின் திசைகள் அடர்த்தியானதாயும் அகோரமானதாயும் தென்பட்டதால் பயங்கரமான நிசப்தம் என் குரலொலியை கட்டுப்படுத்தி பயவுணர்வை அதிகமாய் பரப்பியது. என்னை முழுவதுமாய் தன்வசப்படுத்தியிருந்தது. தனக்கேற்றாற் போலவே வழிநடத்தவும் செய்தது. 

மந்திரித்து விட்டாற் போல் மறுப்பின்றி செயற்பட்ட நான், வளைந்த மரச்சந்துகளுக்கிடையே குனிந்தும் தேவையேற்படின் தவழ்ந்துமாய் என் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தேன். உடலின் சிராய்;ப்புகளையும் சிறு சிறு கீPறல்களையும் கணக்கிலெடுக்காமல் துடைத்தெறிந்துவிட்டு நடந்துக் கொண்டேயிருந்தேன். 

ஆழமாக குத்திக் கிழித்த விஷமுட்களின் ஓரிரு காயங்கள் ஊமைவலியை குடைந்தெடுத்து தந்துக்கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்க நேரமற்றவளாய் காட்டிற்குள் விடாமல் நடப்பதையே இலக்காக கொண்டு, திரும்பிப் பார்க்கத் தோன்றாமல் கால்கள் காட்டிய, காடு விரும்பிடும் பாதையில் விரைந்தேன். 

பெண்களின் இந்த பயணம் மிக பாதுகாப்பானதாய் தென்பட்டாலும் உள்ளுக்குள்ளேயான தழும்புகளையும் சீழ்வடியும் புண்களையும் பற்றி யாருமே பேசத் துணியவில்லை. அவர்களின் இலக்கு நோக்கிய நடை பற்றியதான புகழ்தலை காற்றினூடு பரப்பி பெண்களுக்கு மரியாதை செய்யவே எல்லோரும் விரும்பினார்கள். 

சுவாரசியங்களுக்கோ சுய எழுச்சிக்கோ இத்தொடர் பயணத்தின்போது இடமில்லை என்பதனை ஓய்வற்ற அந்த நடை எனக்கு உணர்த்தி களைப்பையும் சலிப்பையும் ஒருங்கே காட்டத் தொடங்;கியது. அடிக்கடி வியர்த்ததால் உள்ளாடைகளில் வழிந்த வியர்வைத்துளிகள்; நசநசத்து உடலைப் பிடித்துக்கொண்டு  குமட்டுவதாயும் இருந்தது. ஆனாலும் என்னிடம் அனுமதி கேட்காமல் காட்டின் தட்பவெப்பத்திற்கமைவாக எனக்குள் உருவாகும் வியர்வைத்துளிகளை மேனியெங்கும் சார விட மெதுவாகப் பழகிக் கொண்டேன். அதன் மணம் அழகானதென எல்லோருக்கும் சொல்லி நம்ப வைத்தேன். அதிகம் ஏன்! சமயத்தில் நானே கூட நம்பினேன். வியர்வை வழிய வழிய அதனை சகிக்க பழகியவளாய் வெளியில் சிரித்தபடி நடந்தேன். நான் என்னை காணாமல் ஆக்கிக்கொண்டது எனக்கே தெரியக்கூடாது என்பதற்காய் நானறியாமல் விரைந்தேன். 

வந்து மோதும் சிறு பூச்சிகளிடமும் எட்டத்தெரியும் காட்டுப் பூக்களிடமும் சத்தம் வராமல் என் ஆதங்கங்களை பகிர்ந்துக் கொண்டபடியே நடையைத் தொடர்ந்தேன். 

‘உன்னை பார்த்தால் பரிதாபமாக மட்டுமேயிருக்கிறது. நீயும் எனையொத்து மென்மையாய் இருக்கிறாய். அற்புத படைப்புகளுள் ஒன்றென்று விதந்துரைக்கப் படுகிறாய். என்றேனும் ஒருதினத்தில் நீயும் வலிமையான கரங்களால் பறிக்கப்படக்கூடும். சிலவேளை கசக்கி எறியப்படவும் கூடும். அல்லது உன் விருப்பத்திற்கு மாறாக யார் தலையிலோ இல்லையேல் கழுத்திலோ மாலையாகக்கூடும்’

பூக்கள் பதில் பேசுவதில்லையென்பது எனக்குத்தெரியும். நான் பதிலொன்றை எதிர்பார்க்கவுமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் குலுங்கிக் கொண்டிருந்த அம்மலர்களை பறித்து இரசிக்க நான் விரும்பவில்லை. எனக்குத்தெரியும். உரிமை கொண்டாடுவோரற்ற மலர்களாயினும் அவை தம் அனுமதியின்றி பிறர் தீண்;டுவதை விரும்புவதில்லையென்று. 

எதிர்திசையில் இதோ என்னை பறந்து கடக்கும் இச்சிறுவண்டுகளுக்கு என் பாஷை புரியுமென நான் நினைக்கவேயில்லை. ஆனால் கேட்கத் தோன்றுகிறது. 

‘உன் சிறகுகளை துண்டிக்கும் சடங்குகளேதும் உன் வம்சத்தில் இல்லையா என்ன..? ஓ…! நீ பெண்தானென்று எங்ஙனம் நானறிவேன்? திக்குத்தெரியாமல் பறந்து திரியும் நீ பெண்ணாய் இருந்திட வாய்ப்;;பில்லைதான். போ போ எங்காவது போய்த்தொலை’   

பதில்களற்ற கேள்விகள் எனக்கு பழக்கமானவைதான். கால்களில் இடறும் காய்ந்த குச்சிகளிடம் மட்டுமல்ல எப்போதாவது மென்மையாய் பறந்துவந்து மேனி தொடும் இலவம்பஞ்சிடம் கூட பேசுதல் ஆறுதலாய்தான் இருக்கிறது. என்றாலும் அம்மா கோபப்பட்டதில் தவறிருக்க முடியாது. அப்போதெல்லாம் நான் பதில் பேசியிருந்திருக்க வேண்டும்.  

ஒரு முறை… ஒரே ஒரு முறை பின்னால் திரும்பி நான் நடந்து  வந்த தடம் தெரிகிறதாவென்று பார்த்துவிட தோன்றுகிறது. மீண்டும் அர்த்தமற்ற கற்பனைகளில் மிதப்பதிலிருந்து மீண்டு, வாழ்ந்துப் பார்த்துவிடத் தோன்றுகிறது. என்றாலும் அத்தடத்தின் வழியே மீண்டும் ஆரம்ப இடத்திற்கே போய் சேர தோன்றினால்…? போய் சேருவதென்று முடிவும் செய்து விட்டால்..? இல்லையில்லை. அது என் வர்க்கத்திற்கே முரண்பாடான செயலாயிற்றே! நிச்சயமாய் அம்மாவும் அதை விரும்பியேற்கப் போவதில்லை. 

திரும்பி பார்த்தலை நான் வெறுக்கிறேன். வெறுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்;கிறேன். அதனால்தான் நடந்து போதலை விரும்புபவளாய் பாவனை செய்வதையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு வகையில் சற்றே ஆழ்ந்து யோசித்தால், இவையெல்லாமும் வெறும் பிரமை என்பது போலவும் சில போலி பிரசாரங்கள் தந்த உந்துதலால் தொலைந்து போனது போலொரு மாயைக்குள் சிக்குண்டு வெறுமனே வேறொரு கனாக் கண்டு கொண்டிருப்பதாயும் படுகிறது.

பிறகென்ன தடை..! பிடிக்காதவை வெறும் கனவென்றே ஆகிப் போகட்டுமே. 

திடீர் திருப்பமாய் காட்டிலிருந்து வெளியேறும் வழிகள் பற்றி தேடியறிய முற்படுகிறேன். 

காடு சிலிர்த்துக் கொள்கிறது. என்னை சுற்றிலும் நச்சுத் தாவரங்களும் பெரிய மரங்களின் ஆணிவேர்களுமாய் பின்னிக்கொள்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பல்லாயிரம் மனித கைகளும் அவர்தம் சூடான மூச்சுக்காற்றும் வெளித்தெரியா பெருந்தடைகளாய் என் முன்னால் விரியத்தொடங்குகிறன. போக வேண்டிய வழியெங்கிலுமாய் தம்மை நிரப்பிக் கிடக்கின்றன. 

அவை பல நூற்றாண்டுகால உடைத்தெறிய முடியா தடைசுவர்கள்  என இனங்கண்டு ஸ்தம்பித்து போகிறேன். மறுநொடி, நான் மிக ஆபத்தான காடொன்றினுள்ளேயே மாட்டிக்கொண்டிருப்பதாகவும் விரும்பினாலும் என்னால் வெளியே வர முடியாதெனவும் தவிர இது நிச்சயமாய் கனவு அல்ல என்றும் எல்லோருக்கும் கேட்குமாறு சத்தமாய் கத்தத் தொடங்குகிறேன். தொடர்ச்சியாக கத்திக்கொண்டேயிருக்கிறேன்.   

எனதந்த ஓலம் காடெங்குமாய் எதிரொலித்ததால்; பலர் அதனை செவிமடுத்திருக்கக் கூடுமென்றுதான் சொல்ல முடியும். ஏனெனில் அதன்பிறகாய் யாருடையதென்று தெரியாத பல குரல்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையொன்று ஏற்பட்டிருந்தது. 

அக்குரல்கள் எனைச் சுற்றிலுமாய் மிதந்து தன் ஸ்திரத்தன்மையை கெட்டியாக பாதுகாத்துக் கொண்டிருந்தன. 

‘காட்டின் பாதைகள் அடர்த்தியானதென தெரிந்தும் விரும்பியே ஏன் தொலைய முற்பட வேண்டும்?’

‘கிளைப்பாதைகள் பலதை கொண்ட காட்டில் முட்கள் நிறைந்த பாதையை முட்டாள்கள் மட்டுமே தெரிவு செய்திருப்பார்கள்!’

‘பிதற்றும் சில பைத்தியங்களை தாண்டி காட்டையே ஆளக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இல்லையா என்ன?’

தொடர்ச்சியாய் சுழன்றடித்த அக்கேள்விகளுக்கு பதிலற்றவளாய் நான் நின்றுக் கொண்டிருந்தேன்.  என் எல்லா வாதாடல்களும் பூச்சியமாகி பெறுமதியற்றுப் போயிருந்தன. எதிர்பாராமல் விசிறியடித்த பலத்த காற்றின் மோதலில் நிலைத்தடுமாறி நின்று… பின் நிதானித்து வலிய கொடியொன்றினை இறுகப்பற்றி என்னை பாதுகாத்துக் கொள்கிறேன்.

தொடர்ச்சியாகவும் நடந்தால் மாத்திரமே பயணித்தல் சாத்தியம் என்றாகிப்போன தவிர்க்க முடியா இக்கட்டத்தில் தேவைக்கு மிஞ்சிய புத்திசாலித்தனம் தேவைப் படுகிறதென்பதை நிஜமாகவே என்னால் உணர முடிகிறது. அதனால்தான் காடு சிறந்ததொரு மேடையாகவும் இருக்கிறது எனும் மிகப்பெரிய உண்மையை நான் மெதுவாய்தானும் சொல்லிக்கொள்ளாமலேயே சிரித்த முகத்துடன் நகர்ந்து விடுகிறேன். 

வேறென்ன செய்துவிட முடியும்?

யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரம் தானே!

நன்றி "நடு" சஞ்சிகை

Monday, June 8, 2020

பகற்கனவு - பிரமிளா

By On June 08, 2020
மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம்.

அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து நடந்துபோதல் சாத்தியமே இல்லை. கால்கள் தன்பாட்டில் அடுத்த அடி வைப்பதற்கான நீளத்தை தீர்மானித்துக் கொள்ள, கண்டபடி தாண்டி சில நேரங்களில் நிதானித்து ஓரிரு இடங்களில் குதித்துத் தாவியென விரையும்படியாக அப்பாதை மாறியிருந்தது. ஆங்காங்கே நிலத்திலிருந்த பெரிய கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு எதிர்பாரா இடங்களிலெல்லலாம் குழிகள் முளைத்திருந்தன.

நாரங்கல தோட்டத்திலிருந்து பனாகன்னிய கிராமத்திற்கு போகவென்று ஒருசிலரால் அமைத்துக்கொள்ளப்பட்ட நடைபாதையது. பனாக்கன்னியவுக்கு பஸ் போக்குவரத்து சாத்தியமாகிய பிறகு அப்பாதைக்குரியதான நடமாடல்கள் அடியோடு நின்றுபோய் முட்செடிகளும் காட்டு மரங்களுமாய் அந்த வழி காணாமல் போகத்தொடங்கியிருந்தது. எப்போதாவது பஸ்சை தவறவிடும் ஓரிருவரின் உதவியால் திடீரென உருவாகி பின் மறையும் இயல்பையும் அப்பாதை ரகசியமாக பேணிக்கொண்டிருந்தது.

தோட்டத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்டு இரண்டிற்கும் பொதுவாக இருந்த ஊற்றுபீலியில் குளிப்பதற்காகவே அப்பாதையூடாக அவள் விரைந்துக்கொண்டிருந்தாள்.

சுற்றிவளைத்த சீரான வழியொன்று அப்பீலிக்கென்றே அமைந்திருந்த போதிலும் இந்த குறுக்குப்பாதையை அவள் தெரிவு செய்தமைக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஓரமெங்கும் கண்டபடி வளர்ந்தோங்கியிருந்த அக்காட்டுச் செடிகளின் இடைக்கிடையில் தம்மை திணித்து வளர்ந்திருந்த மூலிகைச்செடிகள் அவளுக்கு தேவைப்பட்டிருந்தன. அச்செடிகளுக்கூடாக வீசிய விசித்திரமான கசப்பு வாசனையை வலிந்து தவிர்த்தபடி மிக நிதானமாக அவதானித்து தேவையானளவு ஆடாதொடை இலைகளையும் நொச்சி தளிர்களையும் ஆய்ந்தெடுத்துக் கொண்டாள். ஏற்கனவே பேசிக்கொண்டாற்போல பானுமதி அருவதாம்பச்சை இலைகளுடன் பீலிக்காணுக்கு வந்திருக்கக்கூடுமென்பதால் இன்னும் வேகமாய் அகலக்கால் வைத்து பாய்ந்து நடந்தாள்.

தண்ணீர் சத்தம் மிக அருகாமையில் கேட்கத்தொடங்கியது. இதோ… எப்படியோ தப்பித்து வந்து சேர்ந்துவிட்டோம் என்றெண்ணிய அடுத்த நொடியிலேயே அடி வயிற்றிலிருந்து திரண்டெழுந்து நெஞ்சுப்பகுதியை எக்கித்தாவி தொண்டைக்குழியை இறுக்கிப்பிடித்தபடி வெளியே வர துடித்தந்த இராட்சத இருமல்.

பரிமளத்திற்கு லேசாக உடல் நடுங்க ஆரம்பித்தது. அதிகளவில் வயிறு குலுங்காமல் வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டாள். இன்னொரு கையால் ஓரத்தில் நின்ற மரக்கிளையை அமத்தி தள்ளிக்கொண்டே தன் உடல் பாரத்தை சரித்தபடி இருமுவதற்கு தயாரானாள்.

கரல் பிடித்த பழைய டின்னொன்றை டமார் டமாரென தட்டியெழுப்பும் ஓசையையொத்ததொரு சத்தம் ஆழக் குழிக்குள் இருந்து மேலெந்து தொகையாய் மறித்திருக்கும் புகைக்கூட்டத்தை தாண்டி கேட்குமாப் போலொரு அதிசய ஒலியை அவளது இருமல் வெளியிட்டுக்கொண்டிருந்தது. இருமுமதிர்வில் கையிலிருந்த பை தவறி விழுந்து மூலிகை இலைகளெல்லாம் அங்கொன்றும் இங்கொங்கொன்றுமாய் விழுந்தன. உடல் குலுங்கி தலை பாரமாகினாற் போலிருந்தது. நெஞ்சினுள்ளே பரவி ஒட்டியுலர்ந்து போனதாய் அவள் எண்ணிக்கொண்டிருக்கும் சளித்தொகையை இருமலுடன் சேர்த்து தொண்டையதிரக் காறி வெளியிழுத்தாள். உடைந்து சிதறிய சளித் துண்டுகள் உப்புச்சுவை கலந்த சதை துண்டங்களாய் எச்சிலுடன் கலந்து வெளிவரத் தொடங்கின. அவை ஒருவித பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் எச்சிலின் ஈரலிப்புடன் சேர்ந்து நிலத்தை பற்றிப் பிடித்துக் கொண்டன.

பரிமளம் வியர்த்து களைத்து சோர்ந்திருந்தாள். இன்னும் கொஞ்சமும் இரும மேண்டுமெனவும் வரப்போகும் அந்த இருமல் படுபயங்கரமாக குடலையும் சேர்த்து பிடுங்கியெடுத்துக் கொண்டு வெளிவர போகிறதென்றும் அவளால் உணரமுடிந்தது.

குலுங்கும் உடலால் கட்டுபடுத்த முடியாத சிறுநீர் வழமை போல காலுடன் வடிந்து தொலைத்தால், மிச்ச தூரத்தை நடந்து கடப்பது மிகவும் அசௌகரியமாகி விடுமென்பதால் இருமலுக்கூடாகவே இரண்டு கால்களையும் ஒன்றுடனொன்று பின்னி இறுக்கமாக்கிக் கொண்டாள். வித்தியாசமான அந்த இருமலொலி சூழ நின்ற மரக்கிளைகளில் மோதித்தெறித்து மெல்ல மெல்ல ஒயத் தொடங்கியது. அப்படியே அதே இடத்தில் அமர்ந்து தரையில் கைகள் ஊன்றி ஆழ்ந்து சுவாசித்தாள். உடல் நடுக்கத்தை கைகளுடாக தரைக்கு கடத்தி மெல்லமாய் கண்கள் மூடி அடுத்தகட்ட நகர்விற்காய் உடலை ஆயத்தப்படுத்திக்கொண்டு எழுந்தாள். விழுந்து கிடந்த மூலிகை இலைகளை சேர்த்தெடுத்தபடி நடக்கத் தொடங்கினாள்.

தண்ணீர் ஒரு காண் வழியே ஓடிவந்து சடாரென ஒரு பள்ளத்தில் குவிந்து விழுந்தது. விழுமந்த நீரின் சரிபாதி சிறியதொரு கருங்கல்லில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. அதிக கூட்டம் குளிப்பதற்கு வந்திருக்கவில்லை. சிங்கள கிராமத்து பியதாசவின் மனுசி மட்டும் பிடுங்கியெடுத்த முள்ளங்கி கிழங்குகளை கீரை நசிபடாமல் மிக பவ்வியமாய் காணுக்குள் போட்டு கழுவிக்கொண்டிருந்தாள்.

பிள்ளைப் பெற்ற பெண்களும் வயதான நோயாளிகளும் சுடுதண்ணீர் குளியல் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக ஓரிடம் அப்பீலியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அடுப்புக்கரி படிந்து ஒருபக்கமாய் வாயுடைந்த பானையொன்று எப்போதும் ஒதுங்கி கிடக்கும்.

பரிமளம் பானை நிறைய தண்ணீர் அள்ளி அதற்குள் மூலிகை இலைகளை அமிழ்த்திக் கொண்டாள். யாரோ எரித்துவிட்டு மீதம் வைத்து போயிருந்த விறகுகட்டைகளை மீண்டும் ஒன்றுசேர்த்து அடுப்பு கற்களையும் அசைத்தசைத்து ஒழுங்குபடுத்தி அடுப்பை பற்ற வைத்தாள்.

“மொக்கத பரிமளம் அசனீபத?”1 என்ற பியதாசவின் மனைவியிடம் “ஒவ் அக்கே இவறயக் நெ(த்)தி கெஸ்சக்” 2 என்று கூறிக்கொண்டே குபுக்கென பாய்ந்து வரப்பார்த்த இருமலை தொண்டைக்குழிக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். இருமலை பற்றிய எண்ணம் துளியளவு இருந்தால் போதும் எங்கிருந்துதான் உடைத்துக்கொண்டு வருகிறதென்றே தெரியவில்லை. ஆறேழுநிமிடங்களுக்கு வதைத்துவிட்டுதான் நின்று தொலைக்கிறது.

நீருடன் நீராக தனதிந்த பிணியை கரைத்துவிடும் அதிசயம் எப்படியாவது நடந்தேறி விடாதாவென்று ஏங்கினாள். கையுடன் கொண்டுவந்திருந்த நாகலிங்கத்தின் சாரத்தை குறுக்கக் கட்டிக் கொண்டவளாய் மெல்லமாய் கால் விரல்களை நீருடன் பின்னி கண்மூடி ஒருகணம் சிலிர்த்தாள்.

ஊற்றினூடாக வந்துவிழும் நீர், அருவியொன்றின் சலசலப்பையும் மயிர்கூச்செரியும் சில்லுணர்வையும் தரத் தொடங்கியிருந்தது. பானுமதி வரும் வரை இந்நீர் பரவலுக்குள் தன் உடலை மொத்தமாய் புதைத்துக்கொள்ள அவாவிய அவளது மனது ‘வேணாம்டி’ என்ற அறிவின் எச்சரிக்கையை வேகமாய் முந்திக்கொண்டு நீரிற்குள் அவளை விழுத்தியது.

முழுவதுமாய் நீரை குடித்துக்கொண்ட நாகலிங்கத்தின் சாரம் அவளை சூழவும் உப்பிக்கொள்ள, அதனை அழுத்தி ஈரப்படுத்தி உடலுடன் ஒட்ட வைத்துக் கொண்டாள். சட்டென நாசியில் ஊர்ந்த அவனது வாசனையை வாய்திறந்து உள் மூச்சொன்றால் அப்படியே குடித்தாள். ஓரிரு மாதங்களுக்கு பிறகான நாகலிங்கத்தின் ஸ்பரிசம்… மனதுள் பதிந்து போயிருந்த அவனது மணம்…

தன்னையும் மீறி உதிர்ந்த கண்ணீரை நீரள்ளி முகத்திலறைந்து கழுவிக் கொண்டாள்.

தேயிலை மலையின் பகல் வெயிலை அன்றாடம் உறிஞ்சியும் நிறம் மாறா தன் மஞ்சள் மேனியின் மீதான ஈடுபாடே நாகலிங்கத்தின் தீரா காதலுக்கு அடித்தளமாகி இருந்ததென்பதை அவள் அறிந்தே இருந்திருந்தாள். என்றாலும் கொஞ்சிக் குலாவி தன்னை கொண்டாடி தீர்த்த அவன் இப்படி திடீரென தன்னில் இருந்து விலகியமைக்கு புதிதாக ஒரு காரணம் இருக்கக்கூடுமென்றும் அவளுக்கு நம்பத் தோன்றவில்லை.

ஒத்த அன்பினனாய் கூடியிருந்த ஒருவனது காதல் ஓரிரு வார இருமலின்பால் இல்லாமல் ஆகக்கூடுமென்றால் யார்தான் நம்பிவிட போகிறார்கள்…?

இருமலின் உக்கிரம் தந்த அசூசையை தாண்டி அவனது கடுஞ்சொற்கள் அவளை அறைந்துக் கொண்டேயிருந்தன.

“மனுசன் களைச்சு போய் வீடு வந்தா, ஒரு அர மணித்தியாலம் நிம்மதியா இருக்க விடுறியா? ச்சே எங்க இருந்துதா கொண்டு வந்து தொலஞ்சியோ இந்த சனியன…”

“வேணுமின்னேவா இருமுறாங்க?” அவளது இடைமறித்த பதில் அவன் காதில் விழுவதாயில்லை.

“எப்ப பாத்தாலும் லொக்கு லொக்குன்னு… அப்பப்பப்பா என்ன வாழ்க்கடா சாமி! ஒங்கப்பன் இதையெல்லாம் மறச்சுதானே எந்தலையில கட்டியிருக்கான்”

அவள் கண்மூடி மௌனித்து தன் கோபத்தை தணிக்க முயற்சித்தாள்.

“என்னய எதுக்குடி நடுவுல மாட்டி அவஸ்த்த படுத்தனும்…? வீட்டுலயே கெடந்து அப்பிடியே குடும்பமா இருமி தொலைக்க வேண்டியது தானே.”

ஆதங்கம் தாங்கமாட்டாதவளாய் “இதுவொன்னும் பரம்பர நோயில்ல சொல்லிட்டேன்” என்றாள். அவளது கோபமான பதில் அவனை அதிகமாக ஆத்திரத்திற்குள்ளாக்கியது. அடிக்க எத்தனிப்பதை போல் பாய்ந்து வந்து கேட்டான் “அப்பறம் நா பரப்பி விட்டுட்டேனா?”

“நீங்களும் கூடதானே இருந்தீங்க. டொக்டர் சாதாரணமான இருமல்னு தானே சொன்னாரு?”
“குறுக்க குறுக்க பேசாதடி… சாதாரண இருமல்தான் மாசக்கணக்குல இழுக்குதோ…! ஒன்ன சொல்லி குத்தமில்ல எல்லாம் எந் தலையெழுத்து”

எண்ணங்கள் உந்தியிழுக்கும் கண்ணீருக்குள் வலியின் திணிவும் சேர்ந்தேதான் கணக்கிறதாயிருக்கும். தலை சாய்த்து குனிந்து அத்துளிகளை ஓடும் நீருக்குள் விழ விட்டாள். சாதாரணமான பொழுதுகளில் உதாசீனங்களை அலட்சியப்படுத்தும் மனத்திடம், உடல் நலிவுற்றிருக்கும் போது மட்டும் அன்பானதொரு அருகாமையை தீவிரமாக தேடியலைவதை அடிக்கடி உணரத்தொடங்கினாள்.

பானுமதி அருவதாம்பச்சை இலைகளுடன் வேகமாக வந்து, பரிமளத்தை முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். பானைக்குள் அவ்விலைகளை போட்டு குச்சியொன்றால் உள்ளே தள்ளியபடியே “எதுக்குடி இப்ப பச்ச தண்ணிக்கு போன…?” என்றாள்.

பானையிலிருந்து வெளியேறும் நீராவியிலிருந்து இலைகுலைகளின் அவிந்த மணம் அவ்விடத்தை நிரப்ப ஆரம்பித்திருந்தது.

“தண்ணி சுட்ருச்சா பானு?”

“சுட்ருச்சி சுட்ருச்சி”

பானு கோபமாக இருக்கிறாளென புரிந்தது. பரிமளம் எழுந்து வந்து அடுப்பிற்கருகில் இருந்த கல்லொன்றில் அமர்ந்துக்கொண்டாள்.

“பேசாம ஒம் புருசன் மாதிரி நானும் விட்ருக்கனும்… மெனக்கட்டு வந்திருக்கக்கூடாது. பழகுன பாவத்துக்கு ஒதவி செய்ய நெனச்சது எந் தப்புடி”

“ரொம்ப தொந்தரவா இருக்கேனா பானு?”

பானு பதில் பேசவில்லை. பானையிலிருந்து வெளிவந்த சூடான ஆவியை வெறித்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேர இடைவெளிக்குப்பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “ஏய்… அழுகுறியா நீ ? சச்சே என்னடி …, இந்த வருத்தத்துல பச்சதண்ணில குளிப்பாங்களா யாராவது ! அதான் கேந்தியில ஏதோ சொல்லிட்டேன்”
“இல்ல பானு நாளைக்கப்பறம் இங்கெல்லாம் வர முடியுமான்னு தெரியல. அதான் கடைசியா ஒரு தடவ தண்ணிக்குள்ள முக்கியெழும்ப தோணுச்சு”

“ஆமா அப்புடியே வெளிநாட்டுக்கு போகப்போறோம் பாரு… நாளைக்கு போயிட்டு மறுநாளே வந்துட போறோம். அதுகெதுக்குடி இவ்வளவு யோசிக்கனும்?”

“வேறெதுவும் வருத்தம்னு ஆஸ்பத்திரியிலயே நிப்பாட்டிட்டா என்னடி பண்றது?”

பானுவிற்கும் அந்த சந்தேகம் இருந்தது. அவள் இருமும் சத்தமும் அந்நேரத்தில் படும் அவஸ்த்தையும் வேறேதோ பெரிய நோயின் அறிகுறிதான் இதுவோவென எண்ணுமளவில் இருந்ததென்றாலும்; பரிமளத்திடம் அதனை காட்டிக்கொள்வது அழகில்லையென்று எண்ணினாள்.

“யோசிக்காத பரி. போய் பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம்”

அவிந்து பழுப்பு நிறமாக மாறியிருந்த இலைகுலைகளை சூட்டுடன் எடுத்து பரிமளத்தின் நெஞ்சுப்பகுதியிலும் நடு முதுகிலுமாய் மாற்றி மாற்றி வைத்தெடுத்தாள். இலைகளுக்கூடாக மேலெழுந்த ஆவியின் மணம் கசப்பானதாய் இருந்தது. மிதமான சூட்டுனான அத்தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றும் போது வடிந்து வாயினுள் கசிந்த சில துளிகளில் ஒட்டியிருந்த கசப்பு, ஆவியிலும் இருக்கக்கூடுமென எண்ணி இடைக்கிடை சுவாசத்தையும் அடக்கிக்கொண்டாள் பரிமளம்.

இடுப்பு, தொடைகள், கெண்டைக்கால் என்று பகுதிப் பகுதியாக அவ்விலைகளால் ஒத்தடம் கொடுத்துவிட்டாள் பானுமதி. வெதுவெதுப்பான நீர் திவலைகள் உடுத்தியிருந்த சாரத்திற்குள்ளாக நுழைய முற்பட்டு தோற்றுப் போய் மார்புடன் இறுக்கிக் கட்டியிருந்த சாரத்தின் விளிம்பில் ததும்பி குப்புற விழுந்தன. நெஞ்சுப் பகுதிக்கூடான இடைவெளிக்குள் மாத்திரம் சிறு அளவில் துளிகள்; நுழைந்து மேனியை தழுவியதாய் அவளின் பிட்டத்தினிருக்கையில் பரவிக்கொண்டன.

இந்த வெதுவெதுப்பிலாவது நுரையீரலில் படிந்த என் இறுக்கமான சளி துடைப்பட்டு வந்துவிடாதாவெனும் ஏக்கம் பரிமளத்தின் கண்களில் பிரகாசித்தது. எத்தனை வகையான கைமருத்துவம் செய்து பார்த்தாயிற்று. அதில் ஏதேனும் ஒன்றிற்கு கூடாவா தன்னை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இருமலாகி இப்படி சித்திரவதை செய்கிறது. தொடர்ச்சியாக இது தரும் நரக அனுபவத்தை ஏற்பதை விட திரண்டு வரும் சளி உருண்டையாகி அப்படியே அடைத்து மாய்ந்து போய்விட மாட்டோமாவென்று கூட உள்ளம் தவித்தவளுக்கு.

வறட்டு இருமலென்பது உலகின் அசிங்கமான பக்கத்தை மட்டுமே காட்டும் தெளிவான கண்ணாடியாய் தோன்றியது. உந்துமந்த இருமலுணர்வு தன் கைவிரல்களை விரித்து நகங்களால் அழுந்தப் பறுகி உள் அங்கங்கள் மொத்தத்தையும் புண்ணாக்கி… பின், தொண்டையில் தேங்கி ஒலியாக மாறிடும் கொடிய பேயாய் நிழலாடத் தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு தடவையின் நீணட நேர இருமலுடனும் ஒவ்வொரு பிரசவத்திற்கு ஒப்பானதாய் ஓராயிரம் சிசுகளை ஈன்றெடுத்த அனுபவத்தை பெற்றாயிற்று. இதையெல்லாமும் தாண்டி வாழ்ந்துவிட முடியுமென காத்திருப்பதை காட்டிலும் தாமே செத்து தொலைதலே இனி உசிதமானதாயிருக்கும்.
பரிமளம் குளியலூடாக அழுகிறாளென பானுவிற்குத் தெரியும். இந்த எல்லா தொல்லையும் நாளையுடன் இல்லாமல் ஆகி போகுமென்ற நம்பிக்கை பானுவிற்கு சற்று அதிகமாகவே இருந்தது. வெலிசரையில் உள்ள சுவாச நோய் ஆஸ்பத்திரியை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் அங்கு போய் பார்க்குமளவிற்கு நிலமை மோசமாகி விடாதென்றே பானு எண்ணியிருந்தாள். சுமனதாச டொக்டரின் இரண்டு தடவைகளிலான மருந்துகளும், ஊரே வந்து ஒப்பித்துவிட்டுப் போன கைமருந்துகளும்… இந்த எதுவொன்றாலும் அந்த இருமல் சரியாகவில்லை என்ற போது கொஞ்சம் சந்தேகமாகவேதான் இருந்தது.

குளித்து முடிவதோடு இருமல் ஆரம்பித்திருந்தது.. ஈரம் சொட்டச் சொட்ட அமர்ந்த நிலையில் தலையை இரு கைகளாலும் ஏந்தியபடி இருமத்தொடங்கினாள் பரிமளம். அவளது இருமலொலி நீரின் சலசலப்பை ஊடறுத்து காற்றுடன் மிதந்து கொண்டிருந்தது.

2

பதுளை – கொழும்பு சீ.டி.பீ பஸ் பலாங்கொடையை அண்மித்திருந்தது. பாதை வளைவுகளில் தடுமாறும் பஸ்சினது வேகம், கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த பரிமளத்தின் தலையை மோத வைத்து அவளை எழுப்பியது. பின்னால் திரும்பி நாகலிங்கத்தைப் பார்த்தாள். அவன் இரண்டு சீட் தள்ளி அமர்ந்து யன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

பானுமதிக்கு வரமுடியாமல் போகுமென்றும் தான் நாகலிங்கத்தின் துணையுடன் போக வேண்டி வருமெனவும் பரிமளம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் அவன் தன்னுடன் அமர விரும்பாது வேறு யாரையோ போல பயணிப்பது அதிகமான வேதனையை தந்திருந்தது. அவனுடனான இந்த பயணம் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தாலும், பஸ்சிற்குள் அந்த இருமல் தவறியும் வந்துவிட கூடாதேயென்ற பயமும்; அப்படியே வந்தாலும் நாகலிங்கம் திட்டுவானோ என்ற அவஸ்த்தையும் சேர்ந்து தத்தளித்ததொரு மனநிலையிலேயே பயணித்துக்கொண்டிருந்தாள்.

பஸ்சில் அதிகமாய் கூட்டமிருக்கவில்லை. பின் இருக்கை முழுவதையுமாய் ஒத்த வயதுடைய இளைஞர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் சத்தமாக பாடியபடியும் கிண்டலடித்து சிரித்தபடியுமாய் மொத்த சத்தத்தையும் பஸ்சிற்கள் பரவவிட்டிருந்தனர். அந்த சிரிப்பொலியும் குதூகல உரையாடல்களும் சிலரை முகம் சுளிக்க வைத்திருந்தாலும் பெரும்பாலானோர் அந்த உரையாடல்களில் தங்களுக்கும் பங்கிருப்பதாய் எண்ணிக் கொண்டு தமக்குத்தானே சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.

பின்னேயிருந்த யாரோ ஓரிரு தடவைகள் இருமும் சத்தமும் கேட்டது. பரிமளம் சட்டென திரும்பி அது யாரென்று தேடினாள். இருமலொலி ஓய்ந்து இருமியவரின் அடையாளம் மறைந்து போயிருந்தது. இவர்களெல்லாமே ஒரு வகையில் வரம் பெற்று வாழ்பவர்களாய் இருக்க வேண்டும். பத்தோடு ஒன்று பதினொன்றாய் ஏதோ ஒரு வகையான நோயை எளிதில் கடந்து வெளியே வந்து விடுகிறார்கள். சந்தோசமாக அடுத்த நொடியை எதிர் கொள்கிறார்கள்.

இப்போதெல்லாம் பரிமளம் இருமுவதை பற்றியே அதிகம் யோசிக்கத் தொடங்கியிருந்தாள். யார் இருமினாலும்; அவர்களை கூர்ந்து அவதானித்தாள். தனது நெருங்கிய சினேகிதர்களாகவே அவர்களை உணர்ந்தாள். தேயிலை மலையிலோ வீட்டிலோ தன்னால் ஆன மட்டும் இருமியடங்குவது பழகிப்போயிருந்தாலும் இது போன்ற பொது இடங்களில் தான் அவமானப்பட்டுவிடக் கூடாதேயென்ற பயத்தில் உள்ளெடுக்கும் சுவாசத்தை கூட நிதானமாக அளந்து உள்ளிழுத்தாள்.

கட்டாயப்படுத்தி அடக்கி தொண்டைக்குக்குள் இறுக்கி வைத்திருந்த அந்த இருமல் திடீரென ஒருகணத்தில் வெளியேறத் தொடங்கியது.. கையில் வைத்திருந்த துவாயில் வாயை பொத்தி அடைத்தபடி குலுங்கி இருமத்தொடங்கினாள். பெருக்கெடுத்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொள்ளவும் திராணியற்று, விடாது இருமிக்கொண்டேயிருந்தாள். அருகிலிருந்தவர்கள். தண்ணீரை நீட்டினார்கள். பரிதாபமாக பார்த்தார்கள். ஏதோ சிங்களத்தில் பேசியும் கொண்டார்கள். அந்த இருமலொலி பஸ்சிற்குள் பெருஞ்சத்தத்துடன் எதிரொலிக்கத் தொடங்கியது. பின்னால் கத்தி ஆரவாரித்த இளைஞர்கள் தமது சத்தத்தை குறைத்திருந்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தனக்கும் இது தொற்றிக்கொள்ளக் கூடாதேயென்ற பயத்தில் ஒதுங்கி விசித்திரமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஒயா தனியெந்த ஆவே3… தனியெந்த ஆவே… ஒயாத்தெக்க கவுருத் ஆவே நெ(த்)ந்த..?”4 ஆளாளுக்கு மாறிமாறி நீ தனியாகவா பயணிக்கிறாயென்று கேட்கத் தொடங்கியிருந்தார்கள்.

நாகலிங்கம் சற்று தாமதித்து அருகில் வந்தான். ‘தண்ணி குடிக்கிறியா?’ என்றான். இருமல் அடங்கும் வரை அவ்விடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தான். தண்ணீர் போத்தலை அவனாகவே திறந்து குடிக்கச்சொல்லி தந்தான். நாகலிங்கத்தை அவளது உறவினனென கண்டுக்கொண்டவராய் பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் இதுதான் சமயமென்று தனது இடத்தை நாகலிங்கத்திற்கு கொடுத்துவிட்டு; நாகலிங்கத்தின் இருக்கைக்கு சென்று கேட்காமலேயே அமர்ந்துக் கொண்டார். நாகலிங்கம் அவளுக்கு பக்கத்தில் அமர விரும்பாமல் நின்றபடியே பயணித்தான். தனது இருக்கையை பலவந்தமாக கைப்பற்றிய அந்த நபரை எரிச்சலுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பஸ் நிறுத்தத்தில் யாரேனும் தனக்கு பக்கத்தில் அமர்ந்துவிட முன் நாகலிங்கம் அமர்ந்துக்கொள்ள வேண்டுமேயென்று அவளது மனம் இறைஞ்சியது. கண்களை மூடியபடி சீட் கம்பியில் சாய்ந்துக்கொண்டாள். முன்னிருக்கை யன்னல் வழி வந்துமோதிய காற்று இதமாகவிருந்தது. உடலெடை மொத்தமுமாய் காற்றுடன் பறந்து மிக இலேசாகி போய்க் கொண்டிருப்பதாய் உணரத் தொடங்கினாள்.

பஸ் வேகமாக சென்றது. முன்னால் செல்லும் வாகனங்களை விலத்தி தள்ளியபடி… அவற்றை மோதி தூக்கியொரு பக்கமாய் எறிந்தபடி இன்னும் பள்ளங்களையும் மேடுகளையும் தாவி விரைந்து ஒரு கட்டத்தில் அந்த பஸ் பறக்கத் தொடங்கியிருந்தது. வேகமாய் மிக வேகமாய் எதிரே வந்த மேகக்கூட்டங்களை உடைத்து சிதறடித்துக்கொண்டு பறந்தது. தான் அமர்ந்திருக்கும் இருக்கை ஒரு ஊஞ்சலாய் மாறியதையும் அருகிருப்பவர்கள் எல்லோரும் தனக்கு பணிவிடை செய்ய காத்திருந்ததையும் பரிமளத்தால் நம்பவே முடியவில்லை. தனக்கு இருமல் வராதிருக்க வேண்டி யன்னல்கள் எல்லாம் திடீரென மூடப்பட்டிருந்தன.

நாகலிங்கம் அருகிலேயே அமர்ந்திருந்து அவளது தலையை வருடியபடி சிரித்தான். தனக்கு இருமல் வருமுணர்வு துளிதானும் இல்லையென்று கூறியபடி அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள். மனது ஆனந்தக்கூத்தாடியது. இத்தகையதொரு தருணத்தில் கிடைக்கும் அருகாமைக்காகவே பலநாட்களாக அவள் ஏங்கிக்கொண்டிருந்தால் முழுதுமாய் அந்நிமிடங்களை தனதாக்கிக்கொள்ள முயன்றாள்.

சட்டென்று மாறிப்போன இந்த சூழ்நிலை சுவர்க்கமாகி வெளிகளுக்கிடையிலான மிதப்பை இடையறாது உணர்த்திக்கொண்டிருந்தது. பறக்குமாப்போல அல்லது மிதப்பது போல் பயணிக்கும் அந்த பஸ்சினது ஹோன் சத்தம் மட்டும் எதுவித மாற்றங்களுமின்றி நச்சரிப்பானதொரு ஒலியை அடிக்கடி எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் பரிமளம் கண்களை திறக்க முனையவில்லை.

யாரோ சிலர் தமிழ் பாடலொன்றை பிழையான உச்சரிப்புடன் சத்தமாக பாடிக்கொண்டிருந்தனர். இடைக்கிடை சிங்கள பாடல்களையும் கலந்து வேறொரு விதமான இசைக்கலவையை தோற்றுவித்தனர். நாகலிங்கம் தானும்; பாடலொன்றை பாடத்தொடங்கியிருந்தான். அவளை காதலிக்கத் தொடங்கிய போது அடிக்கடி அவன் பாடிய அதே பாடல். மிக மென்மையாக… அவளுக்கு மட்டுமே கேட்கும் படியாக…

அவள் அவனது கரங்களை இழுத்துப் பற்றிக் கொண்டாள். அவனது மோதிர விரலில் இதுவரை அவன் அணிந்திராத அவள் கண்டேயிராத கல் பதித்த மோதிரத்தின் பகுதி தட்டுப்பட்டது. இதனை அவன் எப்போது வாங்கி அணிந்திருப்பானென்று யோசித்தாள். அவனிடம் அதுபற்றி கேட்க வேண்டுமென்றும் தோன்றவில்லை. விரல்களை மிருதுவாக வருடினாள். அவன் எதுவித பிரதிபலிப்புமின்றி பேசாதிருந்ததான் சட்டென தன் கைகளை அவள் விடுவித்துக் கொண்டதும் அவன் பாடுவதை நிறுத்தியிருந்தான்.

பஸ் கொழும்பை அண்மித்து ஓரிரு நொடிகளுக்குள் சரியாக வெலிசர ஆஸ்பத்திரிக்கருகிலேயே தரையிறங்கியது. அங்கே நின்ற பெரியதொரு நிழல் தரும் தருவொன்று குளிர்ச்சியை தரையெங்கும் தூவியிருந்தது. வெள்ளை நிற உடையில் தாதிகளும் வைத்தியர்களுமாய் உலாவித்திரிந்தனர். அதில் இருவர் மாத்திரம் சிரித்த முகத்துடன் அவளருகில் வந்து ஒரு சக்கரக்கதிரையில் அவளை அமரவைத்து ஒரு அறைக்குள் தள்ளிக்கொண்டு போயினர். அப்போது நாகலிங்கம் திடீரென காணாமல் போயிருந்தான். தன்னை அவர்களே தூக்கி படுக்கவும்செய்தார்கள். வேறு யாரோ சிலர் வாயில் மாஸ்க் கட்டியபடி அறைக்குள் நுழைந்து அவளது நெஞ்சுப்பகுதியை சரி நேராக வெட்டிக்கிழித்தனர். ஏதோ ஒரு புதுவித கருவிக்கொண்டு அடைப்பட்டிருந்த சளி முழுவதையும் தனியே பிரித்து எடுத்து அகற்றிக் கொண்டிருப்பதாய் தெரிந்தது. நேரே விட்டத்தை பார்த்து படுத்திருந்த அவளுக்கு மெதுவாய் தலைத்தூக்கி தன்னை இத்தனைநாள் சித்திரவதை படுத்திய சளிமொத்தத்தையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் போல தோன்றவே; வாயை திறந்து ஏதோ பேச எத்தனித்தாள். வார்த்தைகள் சத்தமின்றி வாயிலிருந்து வெளியேறி மிதக்கத்தொடங்கின. இடைக்கிடையே அந்த பஸ்சினது ஹோன் சத்தம் மட்டும் எப்படி கேட்கிறதென்று அவள் யோசித்தபடியே பேசினாள்.

“டொக்டர் இனிமே எனக்கு இருமலே வராதா?”

“அந்த கருமம் புடிச்ச சளி மொத்தத்தையும் கொஞ்சம் பார்க்க விடுறீங்களா?”

அவளுக்கு யாருமே பதில் கூறுவதாயில்லை.

“என் புருசன பாத்தீங்களா?”

“நா எப்புடி வீட்டுக்கு போறது?”

“பானு வந்திருக்காளா?”

யாருமே பதில் கூறாததால் பேச்சை நிறுத்திக்கொண்டாள். சிறிது நேரத்திற்குள்ளாகவே முழுவதுமாய் சளியகற்றப்பட்ட சுவாசத்தை உணரத்தொடங்கினாள். எப்படியென்று தெரியாமலேயே திடீரென நாகலிங்கமும் அவளுக்கு மிக அருகே வந்து அமர்ந்திருப்பதை கண்டு அதிசயித்தாள்.

நாகலிங்கத்தின் கைகளை இறுக்கமாகப் பிடித்தப்படி. அவனது தோளில் மெதுவாய் சாய்ந்துப்படுத்தாள். அவனிடமிருந்து எதுவித மறுப்பும் இல்லாதிருக்கவே அவன் மறுபடி தன்னை நேசிக்கத்தொடங்கியிருப்பதாய் தோன்றியது. கண்களை திறக்க விரும்பாமல் அவனை அணைத்துப்பிடித்தபடி வசதியாய் சாய்ந்துக்கொண்டாள்.

அவனது அரவணைப்பு தந்த உந்துதலில் மிக மெல்லிய குரலில் இரகசியமாய் கேட்டாள். “இப்போ என்னய உங்களுக்கு பிடிச்சிருக்கா”

அவன் ‘ம்ம்..’ என்றான்.

“இனி கவனமா பார்துப்பீங்களா?”

“ம்ம்”

“என்னய வெறுத்துடுவிங்களா?”

“ம்ஹீம்..”

“என்னய திட்டுவீங்களா?”

“ம்ஹீம்..”

“அப்போ அன்பா இருப்பிங்களா?”

“ம்ம்”

“நா இருமுனா கூட திட்ட மாட்டிங்களா?”

“ம்ம்”

நிறைந்து போன மனதுடன் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டாள். சடாரென தான் அமர்ந்திருந்த இருக்கை குலுங்கியதிர்ந்து ஓய்ந்ததில் விழித்தெழுந்தவளாய் நாகலிங்கத்தின் கைகளை இன்னும் கொஞ்சமாய் இறுக பற்றியப்படியே நிமிர்ந்து அவனது முகத்தை காதலுடன் பார்க்களானாள். அவளுக்கு ஒரே குழப்பமாகவிருந்தது. நாகலிங்கத்தின் முகம் வேறு யாருடையதையோ போல மாறியிருந்தது. அந்த புதிய மனிதனும் தன்னை மிக விசித்திரமாய் பார்க்கத் தொடங்கியிருந்தான். எப்படி இதுவெல்லாம் நடக்கக்கூடுமெனும் சந்தேகத்துடன் சூழவும் ஒருமுறை பார்வையை சுழல விட்டாள். பக்கத்திலேயே நாகலிங்கத்தைப் போலவே இருந்த ஒருவன் அவளை முறைத்துப் பார்த்தபடியே நின்றுக்கொண்டிருந்தான்.

அடிக்குறிப்புகள்
“மொக்கத பரிமளம் அசனீபத?” – சுகமில்லையா பரிமளம்1
“ஒவ் அக்கே இவறயக் நெ(த்)தி கெஸ்சக்” ; – ஆமாம் அக்கா முடிவில்லாத இருமலாய் இருக்கு2
“ஒயா தனியெந்த ஆவே… – நீ தனியாகவா வந்தாய் ?3
ஒயாத்தெக்க கவுருத் ஆவே நெ(த்)ந்த..?” – உன்னுடன் யாரும் வரவில்லையா?4
-பிரமிளா பிரதீபன்

நன்றி - கனலி