Enter your keyword

Monday, April 13, 2020

இருள் - பிரமிளா பிரதீபன்


இருளிற்கும் காமத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன...?

இருளுடனான பிரயாணங்கள் இப்பொழுதெல்லாம் சாத்தியப்படுவதேயில்லை. முகத்தில் தொடங்கும் பார்வை படர்ந்து பரவி எங்கெல்லாமோ நிலைக்குத்தி நிற்கின்றது. உடலை மறைக்கத்திமிறும் உடையை ஊடுருவி அதிவேகமாய் பிரயாணிக்கும் விரச பார்வைகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கின்றது.

இந்த ஆண்கள் நிஜமாகவே போதையுடன்தான் பிரயாணிக்கிறார்களோ...! பின் எப்படி இத்தனை அருவருப்பை அவள் பிரதிபலித்த பின்னும் இடைவிடாமல் பார்வைகளால் அவளை ஸ்பரிசிக்க முடிகிறது ?
எத்தனை முறைதான் முறைப்பது... எத்தனை முறைதான் சேலையை சரிசெய்வது ? அவளோடு சேர்த்து இன்னும் இரண்டு பெண்கள் பேருந்திற்குள் இருக்கிறார்கள். அவர்களும் கூட இதே அவஸ்த்தையுடன் தலை குனிந்தபடி நின்றுகொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது.

பெண்கள் மூவருமாய் தனித்து தெரிவதால் அந்த பார்வை மொய்ப்புகளா அல்லது இருளின் அடர்த்தி இவர்களுக்குள் காம உணர்வை அள்ளி அப்பியுள்ளதா...?
பேருந்து விரைந்து கொண்டிருக்கிறது. ஒருவன் அவளது கழுத்துடன் கீழிறங்கி மார்பு பகுதிக்குள் தன் பார்வையை நிறுத்திக்கொண்டான். அவள் நின்றபடி பிரயாணிப்பதால், அருகில் அமர்ந்திருந்த ஒரு கிழவன் இடையில் தெரியும் சிறு இடைவெளியை விடாமல் அவதானிக்கிறான். பக்கம் நிற்கும் தடித்த ஒருவன் காற்றில் பறக்கும் அவளது கேச ஸ்பரிசத்தை கண்மூடி அனுபவிக்கிறான்.

அவள் பார்வைகளால் தொடர்ச்சியாக தீண்டப்படுகிறாள். தனது அனுமதியின்றியே பலரது விரச பார்வைகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாள்.
எத்தனையோ பகற் பொழுதுகளை பேருந்து பிரயாணத்தில் அவள் கழித்திருந்தாலும் இத்தகையதொரு அவஸ்த்தையை வெளிச்சம் அவளுக்கு உணர்த்தியதேயில்லை.
இப்போதைய அவளது சந்தேகமெல்லாம் இந்த இருளின் மீதானது அல்லது இருளுக்குள் கசியும் நிலவினதும், மின்விளக்கினதும் ஒளியின் மீதானது.

பலரின் அந்தரங்கங்கள் இருளுக்குள்தான் வெளிப்படுகிறது. உலகின் பாதி அசிங்கங்கள் இருளுக்குள்தான் அரங்கேறுகின்றன. இருள் ஒரு கறுப்பு அரக்கன். ஆண்களுக்கு சாதகமானவன். காம உணர்ச்சியை அதிகரிக்கத் துடிப்பவன். போதையுடனான மானிடர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு குதூகலிப்பவன். 

இருளுடன் காமம், போதை என்று இந்த மூன்றுமாய் ஒருமித்து சிற்றின்ப உலகின் உச்சத்தை தொட ஒவ்வொருவனையும் உந்துமாப் போலொரு பிம்பத்தையே பிரமாண்டமாக்கி காட்டிக் கொண்டிருக்கிறது.  இதில் பிரதான நுகர்வோன் ஆணாய் இருத்தலும், நுகர்விற்கு மிகத்தகுதியான அதிகூடிய போதைத்தரும் போகப்பொருளாய் பெண் உணரப்படுவதுமே ஆபத்தின் விளிம்பென்று எண்ணிடத்தோன்றுகிறது.

இருளும் போதையும் சந்திக்குமொரு உச்சப் புள்ளியிலேயே பெரும்பாலான ஆண்கள் தங்கள் நிரந்தரமாக அணிந்துக்கொண்டிருக்கும் அல்லது யதார்த்த உலகினால் தமக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடியினை தயக்கமின்றி பிய்த்தெறிந்துவிட்டு சுயத்தை வெளிப்படுத்த துணிகின்றனர்.
அதனை எப்பொழுதாவது மட்டுமல்ல எப்பொழுதுமே... அவனுக்குத் துணையாயிருக்கும் ஒரு பெண்ணினால் மாத்திரமே அவதானிக்க முடிகிறது. அனேக பொழுதுகளில் அந்த பெண் மனைவியாகிப் போகிறாள். இல்லையேல் காதலியாகின்றாள். இந்த இரு பிரிவினருமே தன் துணையென ஏற்றுக்கொண்ட ஆடவனை அனுசரிக்க கற்றுக்கொண்டவர்களாக இருப்பதால் அவனது எதிர்மறை குணவியல்பை வெளியே கொண்டு செல்லவோ, பிய்த்தெறிந்த அவனது முகமூடியை முற்றாக அழித்து அவனை சுயத்துடன் உலகில் அலையவிடவோ துணிச்சலற்றவர்களாகின்றனர்.

தன்னை போகத்திற்கென அழைக்கும் கணவனை தொடர்ச்சியாக மறுக்கும் எந்தவொரு மனைவிக்கும் முகமூடியற்ற ஒரு ஆணை சந்தித்து மீண்ட அனுபவம் நிச்சயமாய் இருக்க வேண்டும். ஆனால் அதனை வெளி உலகுடன் பகிர்ந்து கொள்ளும் திடம்தான் எவருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை.

'(ட்)டீ.'

'வச்சிட்டுப் போ..' என அதட்டுவான்.

'தண்ணி நின்னு போச்சி மோட்டர போடுறிங்களா...?'

'இந்த அயன் பொக்ஸ ஒன் பண்ணி வச்சிட்டேன் போல கொஞ்சம் பாக்குறீங்களா...?'

'தண்ணி வருதில்ல மோட்டர போட்டுதான் விடுங்களே...'

'ஐயோ.... காதுல விழுதா இல்லயா...?

என்னதான்  சத்தமாக அவள் கத்திக்கொண்டிருந்தாலும் எதிர்திசையிலிருந்து எந்த பிரதிபலிப்புமே வராத காலைப் பொழுதுகள் அவனது இறுக்கமான முகத்துடனும் அலட்சியமான பதில்களுடனும் கழிந்த அனுபவம் அவளுக்கு பல தடவைகள் ஏற்பட்டதுண்டு.
அத்தகைய நாட்கள் அடுத்த கூடல் வரையிலுமே நீண்டுக்கொண்டிருக்கக் கூடியன.
'ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்'  என்று வள்ளுவர் கடைசிக் குறளில் எதையோ சொல்லிவைத்துவிட்டு சென்றதாய் ஞாபகம். 
தானொரு ஆண் என்பதால் ஒருவேளை திருவள்ளுவரால் அப்படி சிந்தித்திருக்க முடியும். இதனையே வாசுகியின் ஆலோசனையுடன்  அவர் எழுதியிருப்பாராயின் 'கூடுதல் காதலுக்கின்பம்' என்றவாறாகத்தான் இக்குறள் மாற்றியமைக்கப் பட்டிருக்கக்கூடும்.

பக்கச்சார்புடன், அப்படியாக எழுதிவிட்டு சென்ற திருவள்ளுவர் மீதும் ஒரு கட்டத்தில் அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. 
ஏதோ ஒரு அசதி... தவிர்க்கவியலாமல் முரண்டு பிடித்து உணர்வுகளை முந்திக்கொள்ளும் தூக்கம்... மறுநாளைய அத்தனை சந்தோசங்களையும் கௌவிக்கொள்கிறதே...!
சிந்தனைகளை திரட்டி ஒருமுகப்படுத்தி கூடலுக்கான தயார்நிலையில் தன்னை வெளிப்படுத்தும் திறன் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்திய படாமைக்கு, எண்ணிக்கையற்ற வேலைகளும் சுமைகளும் அடுத்த நாளிற்கான ஆயத்தங்களுமே காரணமாகித் தொலைகின்றன. அன்றேல் அன்றைய முழு நாளிலுமான தொடர்ச்சியான உடலுழைப்பு படுக்கையில் சாய்ந்த மறுநொடியே கைகால்களை நீட்டி உடலை தளர்த்தி ஆசுவாசப்பட மாட்டோமாவென ஏங்கித்தவிக்க வைக்கிறது.

இதனையெல்லாம் விளக்கி விடுபடுதலோ அல்லது தாம்பத்தியத்திற்கென்று குறிப்பிட்ட இரவுகளை தெரிவு செய்து கொள்ளுதலோ யதார்த்தமாகிவிடுமா என்ன...?

இவையெல்லாமே அடிக்கடி என்றில்லையானாலும் இல்லையென்பதற்கில்லை என்றே அவளால் நம்ப முடிந்தது. 
ஆக ஒரு சராசரி நல்ல ஆண்மகனை எதிர்மறையாக திசைத்திருப்பும் துஷ்டச்செயலை வீடு முதற்கொண்டு பொது இடங்கள் வரையான எல்லா இடங்களிலுமே இந்த இருள்தான் செய்துக்கொண்டிருக்கிறது.
அதிகம் ஏன்...! நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணத்தையே இடையில் நிறுத்தும் வல்லமை இந்த இருளுக்கு மட்டுமேதான் இருக்க முடியும்.

தூரத்து உறவில் அம்மாவின் சகோதரி முறையாகும் கனகமணி சித்தியின் மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை, ஏதோ வேலையாய் வந்திருக்கிறான். அன்றைய இரவு பொழுது அங்கேயே தங்கவும் நேர்ந்திருக்கிறது.
மொத்தமாய் இருள் கௌவிய  நடுநிசியில் இளையவளின் படுக்கையில் ஊர்ந்து வந்த கையொன்று அவளை விரல்களால் கோலமிட... அவள் கத்தியலறி, பதறி லைட்டை போட்டிருக்கிறாள்.
'(ச்)சாஜர்..... போன் (ச்)சாஜர தேடினேன்' என்று தட்டுத்தடுமாறி சொன்னானாம்.
அவனது கெட்டநேரம் மூத்தவள் அன்று வீட்டில் இல்லை. இருந்திருந்தால் அறைமாற்றி வந்துவிட்டதாய் புதிதாய் ஒரு முகமூடியை அக்கணமே தயார் செய்து அணிந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அத்தகையதொரு நாளிலும் அவனை தடுக்காது வேகமாய் உந்திய கொடுமைக்கார இருள் அந்த திருமணத்திற்கே யமனாகிப்போயிற்று.

கனகமணி சித்திதான்;, 'நல்லதுன்னு சொல்லுவனா.... கெட்டதுன்னு சொல்லுவனா நாசமத்து போனவன் ராவோடு ராவா இப்புடி புத்திய காட்டிட்டானே....' என்று மாரில் அடித்தடித்து மாதக்கணக்கில் புலம்பிக்கொண்டிருந்தாள்.   அவனோடு சேர்த்து அன்றைய இரவு பொழுதையும் கெட்டவார்த்தைக் கொண்டு அசிங்க அசிங்கமாக திட்டித்தீர்த்தாள்.

அவன் ஏன் தங்கைக்காரியின் அறையை நாட வேண்டும்? அசாத்திய தைரியத்துடன் அவளை ஸ்பரிசிக்கும் அளவிற்கு ஏன்  துணிய வேண்டும்...?
இருளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆண்திமிரின் வெளிபாடுதான் ஒரு பெண்ணின் உணர்வை இருளுடன் இணைத்து மெதுவாய் தன்வசப்படுத்திக்கொள்ள அவனை தூண்டியிருக்குமோ...!

எப்படியோ நாள் பொழுதொன்றின் முற்றிலும் மாறுபட்ட... எதிர்மறையான பக்கத்தை காட்டி நிற்பதான இருள்...  ஒரு மனிதனின் மொத்த இருண்ட பக்கத்தினையும் அறிந்திருக்க கூடியதொரு  அதிசயமாகவே தெரிகின்றது. மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான சதிகளுக்கு உடன்படும்; ஒரு சூத்திரதாரியாகவே இருள் தன்னை அடிக்கடி காட்டிக்கொள்கின்றது. 
 
இன்னும் சிறிது தூரத்தில் அவள் இறங்க வேண்டும். பேருந்தின் சரிமத்தியில் நின்று கொண்டிருப்பதால், ஏதோ ஒரு பக்கம் நடந்தே நகர வேண்டிய கட்டாயம். அது பின் கதவு வழியாகவெனின் இத்தனை நேரம் ஒரு பக்கவாட்டில் அவளை மொய்த்த கண்களுக்கு அவளது மொத்த உருவத்தையும் பார்வையால் அள்ளி விழுங்கும் வாய்ப்பை தந்ததாகிவிடும். முன் கதவெனின் அவளது பின்புற அசைவு வெறித்து நோக்கப்படும். 
இரண்டிலுமே அவளுக்கு உடன்பாடில்லை. யன்னல்வழி தாவிக் குதித்திட இயலுமென்றால் இந்நேரம் குதித்து ஓடியிருக்கலாம்.

அவளுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது. இரண்டு பக்கமுமாக மாற்றி மாற்றி பார்த்தபடி முடிவெடுக்க தயங்குகிறாள். இந்த ஒவ்வொரு பார்வையினதும் உள்ளக கற்பனை எந்த எல்லையைத் தொட்டு மீள்கிறதென்று எங்கனம் அவளால் அறிந்துக்கொள்ள முடியும்...?
சற்றே தள்ளி ஒரு பக்கமாய் சரிந்து பேருந்தின் பின் வாசருக்கருகில் நின்று கொண்டிருந்த அந்த இன்னொரு பெண்ணும் அங்கும் இங்குமாய் அசைந்ததைந்து கம்பியில் கையை வைத்து பிடிப்பதுவும் பின் எடுப்பதுவுமாய் தடுமாறிக்கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதை கடந்திருக்க கூடிய தோற்றம் அவளுக்கு.  நீலமும் கறுப்பும் கலந்ததொரு ஹேண்லூம் புடவையொன்றினை ஒசரி வடிவில் அணிந்திருக்கிறாள். குதியுயர பாதணியுடன் அவள் கால்களை மாற்றி மாற்றி சரித்துக் கொள்வதால் ஒரு பக்கமாய் சாய்ந்து அயர்ச்சியுடன் நிற்பதாய் தெரிகின்றாள்.  தனக்கு நின்றபடி பிரயாணிக்க முடியவில்லையென்பதை பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு எப்படியாவது உணர்த்திவிட நீணட நேரமாய் போராடி போராடி பாதி தூரத்தை கடந்து விட்டிருந்தவளாய், அவ்வப்போது தனது உடல் பாரம் முழுவதையும் இருக்கை கைப்பிடியின் விளிம்பிற்கு சுமத்தி, காற்பாதங்கள் வழியே இறங்கும் அவளது உடல் பாரத்தை தளர்த்திக் கொள்கிறாள்.

இருள் முழுவதுமாய் பேருந்திற்குள் சூழ்ந்து மின்விளக்கின் மங்கிய ஒளியை மறைத்து கொண்டிருக்கிறது. பேருந்திற்குள் இருந்த அந்த பெண்கள் இருவரும் எதனையுமே பெரிதாய் அலட்டிக் கொள்ளாதவர்களாய்... தினசரி இவற்றை அனுபவித்து பழக்கப்பட்டவர்களாய்... இதுவும் கடந்து போகுமெனும் மனநிலையில் நின்று கொண்டிருப்பதாகவே படுகிறது.

மனதால் புழுங்கி சபித்து நொந்துக்கொள்வதை விட, கண்டும் காணாத பாவனையிலான அத்தகைய மனத்திடமும் ஒரு வகையான மோட்ச நிலைதானோ...!
இதோ தான் இறங்கும் தருணமும் வந்தாயிற்று. எந்த சண்டாளன் முகத்திலும் விழிக்கும் திராணி அவளிடத்தில் இல்லை. முன் கதவுவழி இறங்குவதற்காய் மெதுவாய் நடக்கின்றாள்.
சடாரென்ற பஸ்நிறுத்தம் ஒரு தடவை அவளை குலுக்கி எடுக்கிறது. தடுமாறிப் போனவளாய் பதட்டத்துடன் இறங்கிக் கொள்கிறாள். இத்தனை நேரம் பலரது பார்வைகளை சுமந்து கொண்டிருந்த அவளுடல் சற்றே ஆசுவாசிக்கிறது. துணித்துண்டொன்றோ தும்போ கொண்டு தேய்த்துதேய்த்து.... துடைத்து ... அத்தனை பார்வையெச்சங்களையும் கழுவிக்கொள்ள அவள் துடிக்கிறாள்.
என்னதான் கழுவி துடைத்து தூய்மையாக்கிக்கொண்டாலும் ஒவ்வொரு இருள் பொழுதுடனான சங்கமத்துடனும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள திமிற வேண்டும் என்பது நிஜம்தானே...!

நினைக்க நினைக்க கோபத்தின் பரவல் அவளை முழுதாய் ஆட்கொள்கின்றது. கோபத்தின் மொத்த பங்கும் சடாரென இருளின் மீது திரும்புகிறது.
நின்ற நிலையில் இருளையே உற்று நோக்குகின்றாள். பாதையில் கிடந்த ஒரு கல்லை பொறுக்கி ஆவேசத்துடன் முன்னால் தெரியும் இருளின் மீது ஓங்கி வீசுகின்றாள். இருளின் கறுத்த உடலை கிழித்துக்கொண்டு அந்தக்கல் வேகமாக உட்செல்கின்றது.                       
 
............................................................................


No comments:

Post a Comment